Thursday, 12 November 2015

படைப்புகளுக்குத் தலைப்பிடுதல்; உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்-16


நாம் எழுதும் பதிவுகள் அல்லது படைப்புகளுக்குத் தலைப்பிடுவது என்பது நம் பதிவுகளைவிட முக்கியமானதாய் இருக்கிறது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதுவே வாசகரை நம் பதிவுகளின் உள்நுழைய வரவேற்கும் தோரணவாயில்.

பள்ளிகளில்  மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் கட்டுரைத்தலைப்புகளைப் போல “ ஒற்றுமையே உயர்வு“, “ கூடித்தொழில் செய்” என்பது போன்று நம் பதிவுகளுக்குத் தலைப்பு வைத்தோமானால் அதை நாம் மட்டுமே படித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். ( மிகச்சிறந்த எழுத்தாளுமைகள் எப்படித் தலைப்பு வைத்தாலும் அவர்களது படைப்புகளைப் படிப்பதற்கு ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும் என்பது வேறு. ) என்னைப் பொருத்தவரையில், ஏதோ எழுதத்தொடங்கிவிட்ட நிலையில், பதிவுலகில் தலைப்பின் முக்கியத்துவத்துவம் பற்றிப் பதிவர்கள் பலரைப் பார்த்து  நான் கற்றிருக்கிறேன் என்பதே உண்மை.

சரி…. நம் தமிழில் இது பற்றியெல்லாம் சிந்தித்திருக்கிறார்களா ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா என்பது பற்றித்தான் இந்தப் பதிவு.

பாடல்களில் இலக்கணம் பற்றிக் கூறும் வெண்பாப்பாட்டியல் எனும் நூல், தலைப்பு வைப்பதற்கான சில பரிந்துரைகளை நமக்குத் தருகிறது.

1) படைப்பில் வரும் ஏதேனும் தொடரினால் தலைப்பு அமைக்கலாம்.

2) படைப்பு ஏதேனும் தொழில் பற்றிப் பேசுகிறதென்றால் அதனால் தலைப்பு அமைக்கலாம்.

3) படைப்பின் அளவின் அடிப்டையில் தலைப்பு அமையலாம்.

4) படைப்பு நிகழும் காலத்தின் அடிப்டையில் தலைப்பு அமையலாம்.

5) படைப்பில் சித்தரிக்கப்படும் இடத்தின் அடிப்படையில் தலைப்பு அமையலாம்.

6) படைப்பின் பொருண்மை சார்ந்து தலைப்பு அமையலாம்.

7) படைப்பின் வடிவம் சார்ந்து தலைப்பு அமையலாம்.

8) படைப்பில் வரும் உறுப்புகள்/பெயர்கள் அடிப்படையில் தலைப்பு அமையலாம்.

9) படைப்பிற்கு என்று உள்ள எல்லையின் அடிப்படையில் தலைப்பு அமையலாம்.

10) படைப்பவன் பெயரோடு தலைப்பு அமையலாம்.

11) படைக்கச் சொன்னவன் பெயரோடு தலைப்பு அமையலாம்.

12) படைக்கும் பொருளைக் கொண்டே தலைப்பு அமையலாம்.

‘ அவ்வளவுதானே.....முடிந்ததா பட்டியல்?’ எனக் கேட்டால் இல்லை இறுதியாக ஒன்று இருக்கிறது,

எதற்குமே சம்பந்தம் இல்லாமல் படைப்பவன், ‘இதற்கு இதுதான் தலைப்பு அது எனது உரிமை’ என்று தனது விருப்பம் போலவும் தலைப்பை அமைத்துக் கொள்ளலாம்.

பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும், வெண்பாப் பாட்டியல் என்னும் இலக்கண நூலின் நூற்பாவொன்று, இவை அனைத்தையும்  உள்ளடக்கி இப்படிச் சொல்கிறது.

தொடர்ந்த பெயர்கள் தொழிலளவு காலம்
இடம்பொருள் பாவுறுப்போ டெல்லை – நுடங்கிடையாய்
பாடினான் பாடுவித்தான் பாடப்படு பொருளால்
நீடும் பிறவு நிறைந்து” (45)

எனது விளக்கத்தில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் அதனைத் தீர்ப்பதற்காக இதன் உரை கீழே தரப்படுகிறது.

அவற்றுள்,யானைத் தொழில் என்னும் பெயர் தொழிலான் வந்தது;
பன்னிருபடலம், நூற்றந்தாதி, குறுந்தொகை, நெடுந்தொகை என்பன அளவு பற்றி வந்தன; 
கார்நாற்பது முதலியன காலம் பற்றி வந்தன; 
களவழியும் ஐந்திணையும் இடம்பற்றி வந்தன; 
அகம் புறம் என்பன பொருள்பற்றி வந்தன; 
கலித்தொகை, வெண்பாமலை என்பன பாப் பற்றி வந்தன; 
அங்கமாலை, நயனப்பத்து, பயோதரப் பத்து என்பன உறுப்புப் பற்றி வந்தன; 
பாதாதிகேசம், கேசாதிபாதம் என்பன எல்லை பற்றி வந்தன; 
தொல்காப்பியம், கல்லாடம், அவிநயம் என்பன பாடினானைப் பற்றி வந்தன; 
பாண்டிக்கோவை முதலாயின பாடுவித்தானைப் பற்றி வந்தன; 
கந்தபுராணம், இராமாயணம் என்பன பாடப்படும் பொருள் பற்றி வந்தன; 
‘பிறவும்’ என்றதனால் இடுகுறியால் பெயர்பெற்றனவும் உள. அவை ‘கலைக்கோட்டுத்தண்டு’ முதலியன. (பாட்டியற்கொத்து, பக்-43,44. )

 தொடரால் தலைப்பு வைப்பது குறித்து உரை ஒன்றும் கூறவில்லை. 

அதனால், பதிற்றுப்பத்து எனும் சங்க இலக்கிய நூலின் ஒவ்வொரு பத்திற்கும் தலைப்பு, அதன் பாடலில் சிறந்து விளங்கும் தொடரால் அமைந்தது என்ற என் கைச்சரக்கையும்  இங்கு சேர்த்துவிடுகிறேன்.

( வேறு பாட்டியல் நூல்களும், இலக்கண நூல்களும் இதனுள் அடங்கும் பட்டியல் சிலவற்றை எடுத்துத் தனித்துக் கூறும். )

பண்டையோர்  சொன்னதுதான். இன்றும் பொருந்துகிறது.

எப்படியானாலும் வைக்கப்படும் தலைப்பு படிப்பவரை வாசிக்க உள்ளிழுப்பதாக இருக்க வேண்டும்.

அப்படி ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் ஏமாறாத வகையில் நம் படைப்பும் இருக்க வேண்டும் என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லையே!

வாருங்கள் நம்தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.


( முந்தைய,
உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்!’ என்னும் பதிவுகளின் தொடர்ச்சி. )

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images




                                                                                                                                    
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

63 comments:

  1. வலைப்பதிவர்களுக்கு, அதிலும் முக்கியமாக எழுத்தாளர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. தலைப்பு வைப்பதில் கில்லாடி நம்ம பாரதியும், ஜெயகாந்தனும். புதுமைப்பித்தன், கந்தர்வன் வெற்றிக்குப் பின்னால் இந்தப் படைப்புத் தலைப்புகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இதை நானும் பின்பற்ற விரும்புவதால், நன்றியோடு பாராட்டுகிறேன். தொடர்க.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நீண்ட நாட்களுக்குப்பின் என் பதிவில் உங்களின் முதல் வருகை பெரிதும் மகிழ்வூட்டுகிறது.

      ஆம் .....! நீங்கள் கூறிய நமது இலக்கிய ஆளுமைகளிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. தலைப்பு வைப்பது உட்பட.

      தங்களின் பாராட்டிற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. தமிழ் இலக்கணம் மிகவும் நுட்பமானது என்பதை அறிவேன் ஆனால், ஒரு படைப்புக்குத் தலைப்பு வைப்பதற்குக் கூட இவ்வளவு விரிவான விளக்க இலக்கணத்தை அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பதை அறியும்பொழுது வியக்காமல் இருக்க முடியவில்லை.

    நான் இணையத்தில் எவ்வளவோ பதிவுகள் படிக்கிறேன். தலைப்பு வைப்பதில் உங்களுக்கு நிகராக இதுவரை நான் யாரையும் கண்டதில்லை. ரகசியம் இப்பொழுது பிடிபடுகிறது!

    "படைப்பில் வரும் ஏதேனும் தொடரினால் தலைப்பு அமைக்கலாம்" என்ற முதல் குறிப்பே புருவம் உயர்த்த வைத்தது. காரணம், இன்றைய பாணி அது. அதை அந்தக் காலத்திலேயே பட்டியலிட்டிருக்கிறார்கள் என்பதை அறியும்பொழுது 'வானறிந்ததனைத்தும் தானறிந்த தமிழ்' எனும் வரி எவ்வளவு மெய்யானது என்பதை உணர முடிகிறது.

    ஒரே ஒரு குறை! பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு பத்துக்கும் அதன் பாடலில் சிறந்து விளங்கும் தொடரால் தலைப்பிட்டிருக்கிறார்கள் என்று கூறிய நீங்கள் ஓர் எடுத்துக்காட்டையும் எடுத்து விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    இப்படி ஒரு பாடலை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      மீண்டும் உங்கள் அன்பினுக்கு நன்றி.

      வெண்பாப்பாட்டியல் ஏறக்குறைய பன்னிரண்டாம் நூற்றாண்டின் இலக்கியம்தான். ஆனாலும் அதன் உரையில் மேற்கோளாக ஆளப்படும் நூற்கள் அதன் காலத்திற்கு முந்தியன. இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலக்கணமாய் தலைப்புகள் எவ்வண்ணம் அதுவரை தமிழில் அமைக்கப்பட்டதோ அதைத் தொகுத்துக் கூறிவிட்டது இந்நூற்பா.

      சத்தியமாய், இந்நூற்பா படித்தெல்லாம் நான் தலைப்பிடுவதில்லை. அதிலும் தலைப்பினை இடுவதென்பதில் அதிக சிரத்தையும் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நான் மதிக்கும் பல பதிவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.

      பதிற்றுப் பத்தை நான் இங்கு உரை மேற்கோள் பாணியிலே எடுத்துக்காட்டினேன். ஆகையால் சான்று காட்டவில்லை.

      அதனால் என்ன பின்னூட்டம் எதற்கு இருக்கிறது..?!!!!

      ““““““““““““““““இந்நூலிலுள்ள பாடல்களின் தலைப்பாக விளங்குவன அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களேயாவன. இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு புண்ணுமிழ் குருதியாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு மறம் வீங்கு பல்புகழ் என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு பூத்த நெய்தல் ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14ம் பாட்டின் தலைப்பு சான்றோர் மெய்ம்மறை. இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு நிரைய வெள்ளம். இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன.““““““““““““““““““““““

      சோம்பேறித்தனத்தினால் தமிழ்விக்கியில் இருந்து எடுத்தாண்டிருக்கிறேன்.

      நன்றி. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81#.E0.AE.AA.E0.AE.BE.E0.AE.9F.E0.AE.B2.E0.AF.8D_.E0.AE.A4.E0.AE.B2.E0.AF.88.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D.

      தங்களின் தொடர்வருகைக்கும் ஊக்கமூட்டுதலுக்கும் நன்றி ஐயா.

      Delete
  3. வணக்கம் பாவலரே !

    அடடே இதுதான் நமது கவிதைகளுக்கு வாசகர் வருவது குறைவாக இருக்குதா ம்ம் புரிந்து போச்சு இனி தலைப்பு சும்மா அதிருமில்ல !

    அறியாதவற்றை அறிந்துகொண்டேன் பாவலரே மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்
    தொடர்கிறேன் நன்றி !
    தமிழ்மணம் +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சீராளரே!

      பொதுவாகவே கவிதைகளுக்கு வாசகரின் வருகை குறைவுதான்.

      தமிழ்ப்பெருநிலத்தில் தமிழ்பேசுவோரைவிட அதிகமாகத் தமிழ்க்கவிஞர்கள் உருவாகிவிட்டது அதன் காரணமாகலாம்.

      நீங்கள் எப்படித் தலைப்பு வைத்தாலும் கவிதை என்னும்போது வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

      அதனால் என்ன.....?

      சிரங்கு பிடித்தவன் கை சும்மா இருப்பதில்லையே...!!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  4. தலைப்பு வைப்பதற்கும் நம் தமிழில் பாட்டு இருக்கிறது - எனக்கு புதிய தகவல்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. பயனுள்ள பதிவு...நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே!

      கடவுளைக் கண்டேன்.

      ஆனால்,

      நான் அவனில்லை. :)

      நன்றி.

      Delete
  6. அந்த காலத்திலே பல விஷயங்களை சொல்லி சென்று இருக்கின்றனர். ஆனால் அந்த கால தமிழை பல பேருக்கு படித்து புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதால் பலரும் பல விஷயங்களை அறியாமல் இருக்கின்றனர். அதை மிக தெளிவாக இந்த கால தமிழில் மிக அருமையாக பதிந்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. முதலில் உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      உங்களைப் போன்றவர்கள் என் தளத்திற்கு வந்து கருத்திடும்போதெல்லாம் நான் தங்கள் தளத்தினில் வந்து கருத்திடுவதில்லையே என்ற உறுத்தல் மேலிடும். தற்பொழுதெல்லாம் பெரும்பாலும் பதிவுகளை அலைபேசியிலேயே படிக்கிறேன். கணினியில் அமரும் நேரம் வெகுவாகக் குறைந்துவருகிறது. இருப்பினும் தங்களைப் போன்ற பலரின் பதிவுகளைத் தவறவிடுவதில்லை. ஆனால் அதிலிருந்து பின்னூட்டம் இடுதல் மிகச் சிரமமாக இருக்கிறது. எனவே படித்துக் கடந்து போக நேரிடுகிறது. மன்னியுங்கள்.
      இனி வருகையைப் பதியவேனும் ஓரிரு வரிகள் எழுதிப் போக வேண்டும் என நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

      Delete

    2. நண்பரே உறுத்தலே வேண்டாம்.... ஆரம்ப கால கட்டங்களில் என்னடா பல பேர் படிக்கிறாங்க ஆனால் கருத்துகளை பதியவில்லையே என நினைப்பேன். ஆனால் இப்போது அப்படி நினைப்பதில்லை காரணம் நானும் உங்களை மாதிரிதான் பல தளங்களுக்கு சென்று பதிவுகளை எனது போனிலே வேலை நேரத்தில் படித்துவிடுவேன் ஆனால் போன் மூலம் கருத்து பதிவது கடினம் என்பதால் பதியாமல் இருந்துவிடுவேன். எப்பொழுது வீட்டில் இருந்து பதிவுகளை படிக்கிறேனோ அப்போது எல்லாம் கண்டிப்பாக கருத்துகளை இடுவேன் அந்த கருத்துக்கள் எல்லாம் கலாய்ப்பதாகவே இருக்கும் அந்த கலாய்ப்பை இவர்கள் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என நான் எவர்களை எல்லாம் நினைக்கிறேனோ அவர்கள் தளங்களில் கண்டிப்பாக எனது கருத்துக்கள் இருக்கும். எனது பதிவுகள் எல்லாம் பொழுது போக்கவே எதுவும் ஆழ்ந்து சிந்தித்து உங்களை போல எல்லாம் எழுதுவதில்லை அதனால் யாரிடம் இருந்தும் இப்போழுது எல்லாம் கருத்துகளை எதிர்ப்பார்ப்பதில்லை

      Delete
  7. அடடே இது தெரியாமல் இவ்வளவு நாள் இருந்துட்டேன் உங்கள் பதிவால் ஏன் எனது தளத்திற்கு அதிக மக்கள் வருவதில்லை என்று புரிந்து போச்சு இனிமேல் நீங்க சொன்னபடி செய்து வாசகர் கூட்டத்தை நம்ம பக்கம் இழுத்திட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் உங்களுக்கே too much ஆ இல்ல! கொன்னுபுடுவேன் சொல்லிட்டேன்.

      Delete
    2. சரியாச் கொன்னீங்க சகோ, இல்ல இல்ல சொன்னீங்க,,,,,,,,,

      Delete
    3. ஹலோ உங்க ரெண்டு பேரை தவிர வேறு யாரும் என் பதிவு பக்கம் வரதில்லை அதனாலதான் சொன்னேன். ஆனா நீங்க ரெண்டு பேர் வரது ஆயிரம் பேரு வருவதற்கு சமம்

      Delete
    4. ஹச்சு!! அச்சு! (இது தும்மல்)

      Delete
    5. “““““““““““““உங்கள் பதிவால் ஏன் எனது தளத்திற்கு அதிக மக்கள் வருவதில்லை என்று புரிந்து போச்சு இனிமேல் நீங்க சொன்னபடி செய்து வாசகர் கூட்டத்தை நம்ம பக்கம் இழுத்திட வேண்டியதுதான்.““““““““““““

      எங்கள் பக்கம் ஒரு பழமொழி உண்டு,
      “பத்து பிள்ளை பெத்தவ பிரசவத்துக்கு, தலைப் பிரசவத்தில் பிள்ள பெத்தவ
      வைத்தியம் சொன்னாளாம்“ ன்னு.

      அது போலத்தான் இருக்கிறது, இந்தப் பதிவின் ஆலோசனையை நீங்கள் புரிந்து வைத்திருப்பது!!!!!!

      ஹ ஹ ஹா

      நன்றி.

      Delete
    6. “““““““““““““கொன்னுபுடுவேன் சொல்லிட்டேன்““““““““““““““““““““““““““““““

      கொன் என்னும் சொல்லுக்கு நான்கு பொருள்கள் உண்டு என்னும் தொல்காப்பியம்.

      அதில் ஒன்று பெருமை என்பது.

      இப்படிஅதிக தன்னடக்கத்துடன் கூறும் உங்களைப் பெருமைப் படுத்தக் கூறிய கூற்றாகவே எனக்கு இது படுகிறது. ;)

      நன்றி சகோ.

      Delete
    7. விஜூ அண்ணா செம !!! கொன்னு!! கொன்னு!! அட பெருமை படுத்துறேன் ப்பா உங்களை;)

      Delete
  8. தலைப்பே படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாய்...படிக்கும் ஆவலைத்தூண்டுவதாய் அமைதல் இன்றியமையாதது...தேவையான பதிவிற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே!

      Delete
  9. அந்த கால இலக்கியங்களில் உள்ள பல விஷயங்களை மிக அழகாக தருகின்றீர்கள். குட் ஒரு சிறு வேண்டுகோள் அந்த கால இலக்கியங்களில் என்னைப் போல பூரிக்கட்டையால் அடிவாங்கியவர்கள் உண்டா ? இருந்தால் அதை ஒரு பதிவாக போடுங்களேன். ஒரு வேளை பூரிக்கட்டைக்கு பதிலாக வேறு ஏதும் உபயோகத்தில் இருந்ததா?

    ReplyDelete
    Replies
    1. விஜூ அண்ணா

      தயவு செய்து புலியை முறத்தால் அடித்த கதையை மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்!

      Delete
    2. என்னை போல உள்ள எலியைப் போட்டு தாக்கிய கதைதான் நம்ம சகோவிற்கு வேண்டும் போல

      Delete
    3. உலக்கையால் மண்டையைப் பிளந்த காட்சியே உண்டு.
      நீங்கள் அந்தக் காலத்தில் இல்லாததால் தப்பித்தீர்கள்....!;)
      பதிவாக்கப் பார்க்கலாம்.

      நன்றி.

      Delete
  10. நல்லதொரு வழிகாட்டல் ,இனிமே தலைப்பிலேயே கலக்கி விடுகிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. இனிமேல்தான் கலக்க வேண்டுமா பகவானே..?!!!!!!!!!!!!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  11. தலைப்பு வைப்பது பற்றி வெண்பா பாட்டியல் சொல்லியிருப்பது பற்றியறிந்தேன். எழுதுபவர் அனைவருக்குமே மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் படித்துக் கருத்தினைப் பதிகின்றமைக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  12. அட! தலைப்பு வைப்பது பற்றிக் கூட வெண்பா பாட்டியல்! ம்ம்ம் வியப்பாகத்தான் இருக்கின்றது. அதில் சொல்லப்பட்டிருக்கும் பல வழிகாட்டல்களில் ஓரிரண்டு இப்போதும் பலரும் கையாள்கின்றார்கள். ம்ம்ம் நாங்கள் வைக்கும் தலைப்பு பற்றி இனி நிறைய யோசிக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. சிந்திக்க வேண்டும். நிறைய தமிழ் இலக்கியங்கள் சொல்லுவதை அப்போதெல்லாம் இப்ப்டிச் சொல்லித் தர யார் இருந்தார்கள் ? இப்போது நீங்கள் இவ்வளவு எளிமையாகச் சொல்லுவது எவ்வளவு உதவியாகவும், நிறைய கற்கவும் உதவுகின்றதே!

    அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் என்று ஆழ்வார் பாடியது போல் இப்போதைக்கு அப்போதே சொல்லிவைத்திருக்கின்றார்கள் என்பது வியப்புதான்...அப்படி என்றால் என்னதான் இல்லை நம் தமிழ் இலக்கிய, இலக்கணத்தில்..!!!

    மிக்க ந்னறி சகோ! அழகான பதிவிற்கு...

    ReplyDelete
    Replies
    1. இல்லாமைகளும் போதாமைகளும் நம் இலக்கிய இலக்கணங்களில் இருக்கவே செய்கின்றன சகோ.
      நம் பங்கிற்கு நம்மால் ஆனவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது என்ன இல்லை என்கிற அ றிவு அவசியம்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  13. பல சமயங்களில் ஆக்கமோ கவிதையோ சட்டென்று எழுதிவிடுவோம். பொருத்தமானத் தலைப்பை இடுவதற்குதான் தலையைச் சொறிந்துகொண்டு நிற்கநேரிடும். தலைப்பு எத்தன்மையதாய் இருக்கவேண்டும் என்பதைத் திறம்பட விளக்கி வழிகாட்டிய பதிவு. நன்றி விஜி சார்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      வாருங்கள் சகோ.

      ஆம் பொதுவாக தலைப்பை வைத்துக் கொண்டு அதற்காய்ப் பதிவு எழுதுவதில்லை.
      நான் பதிவை முடித்ததும் சட்டெனத் தோன்றுவதை தலைப்பாய் இட்டுவிடுகிறேன்
      பெரிதாய் யோசிப்பதெல்லாம் இல்லை.

      தங்களின் வருகைக்கும் தங்கள் கருத்தினை அறியத் தந்தமைக்கும் நன்றிகள்.

      Delete
  14. Sir this is a wonderfull message and will be a great guide to all those writers.
    Thanks and do write more like this creative one.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      இது எனது படைப்பன்று. படித்ததினின்று ஒரு பகிர்வு அவ்வளவே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  15. தலைப்பு வைப்பதில் நான் பலநேரம் சொதப்பி விடுகிறேன். நிலவன் அண்ணா, முரளி அண்ணா கூட சில நேரம் என்னை குட்டியது உண்டு. இனி இந்த டெக்னிக் ஒன்றை பயன்படுத்தி ஒழுங்கா தலைப்பு வைக்க முயல்கிறேன். மற்றபடி ஆழ்ந்த படிப்பு அட்டகாச தொகுப்பு என மீண்டும் மீண்டும் உங்கள் பதிவை பாராட்ட வேண்டி இருக்கிறது. இதற்கு ஏதேனும் சிறப்பு சொற்பட்டியல் உண்டென்றால் உடனடியாக அதை பதிவக்கவும்:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      பார்த்து நெடுநாளாயிற்று. தங்களின் வருகைக்கு முதலில் நன்றி.
      இது டெக்னிக் ஒன்றும் இல்லையே. ஒரு வகைப்படுத்தல் அவ்வளவுதான்.
      ஒவ்வொருவகையிலும் ஈர்க்குமாறு தலைப்பை எப்படி வைப்பது என்பதில்தானே சாமர்த்தியம் இருக்கிறது.

      அது உங்களிடம் இருக்கிறது என்பது எனது வலுவான கருத்து.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  16. தலைப்பு வைப்பதில் "எது சரி" என்பதில் குழப்பம் வந்ததுண்டு... முடிவில் ஏதேனும் ஒரு புதிய தலைப்பு வந்து மன நிறைவையும் தரும்...

    அழகான விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கேவா வலைச்சித்தரே..???!!!!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  17. வணக்கம்
    ஐயா
    நல்ல பதிவு.. அதுவும் கொடுத்த விளக்கம் சிறப்பு ஐயா.. தாங்கள் சொல்வது போல.. தலைப்புத்தான் மற்ற வாசகரை நிச்சயம் இழுத்தெடுக்கும்.. பாடலும் விளக்கமும் நன்று படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.

      Delete
  18. தலைப்பு வைப்பதற்கு இது போன்று ஒரு பரிந்துரை 12 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லி இருப்பது வியப்பை அளிக்கிறது. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று சொன்னது அதனால்தானோ? பதிவுலகில் அநேக பதிவர்கள் (என்னையும் சேர்த்து) தலைப்பின் முக்கியத்துவம் கருதி பதிர்வர்களை ஈர்க்க எடுப்பான தலைப்புகள் வைப்பதுண்டு. ஆனால் நீங்கள் சொன்னதுபோல் நமது தலைப்பால் ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் ஏமாறாத வகையில் நம் படைப்பும் இருக்க வேண்டும் இருக்கவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்கமுடியாது. ஆனால் சில பதிவுகள் அவ்வாறு இல்லை என்பது உண்மைதான். வெண்பாவை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்.
      ஈர்க்கும் படியான தலைப்புகள் முதலில் வாசகரை நம் பக்கம் திருப்பலாம். ஆனால் அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதென்பது அவரவரின் எழுத்தாளுமையில்தான் உள்ளது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  19. வணக்கம் ஐயா,
    இதையெல்லாம் எழுதனுமா என்று சில நாட்களுக்கு முன்பு தான் நினைத்தேன். எனக்கு வித்தியாசமான தலைப்பிடுதல் அதனைத் தேர்ந்தெடுத்தல் பிடிக்கும். ஆனால் தாங்கள் எதையும் அழகான பொருள்படும் படியான பதிவாக்க முடியும். வாழ்த்துக்கள் ஐயா,,, தொடருங்கள், நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      அருள்கூர்ந்து தாங்கள் நினைப்பதை எழுதுங்கள். அதற்காகத்தான் தங்கள் தளம் உள்ளது. தயவு செய்து தள்ளிப்போடாதீர்கள். பிறகு நீங்கள் நினைப்பதை என்னைப் போன்றவர்கள் எடுத்துக் காமா சோமா என்று எழுதிப்போய்விடுவோம்.

      பிறகு இவனெழுதியதை நாம் எழுதுவதா என எண்ணி, நீங்கள் எழுத முடியாமல் போய்விடும்.

      எனவே நினைக்கும் விடயங்களை உடனடியாகப் பதிந்திடுங்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  20. மொதல்ல நல்ல தலைப்பா வையுங்க.
    கீழ என்னத்தை வேண்டுமானாலும் எழுதுங்க. இதுதான் என் கொள்கை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      முதலில் தங்களின் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.

      தமிழிலும் ஏழுவிதமான கொள்கைகளைச் சொல்கிறார்கள்.

      அதில் எந்தப் பிரச்சனையும் சிக்கலும் வராதபடி இருக்க வேண்டுமானால் நாம் பின்பற்ற வேண்டிய கொள்கைதான் அதில் முதலாவதாகச் சொல்லப்படுகிறது.
      அது,

      உடன் படல்.

      தங்களது பின்னூட்டத்திற்கு அக்கொள்கையைப் பின்பற்றிப் போகிறேன்.

      நன்றி.

      Delete
  21. அழகிய பதிவு. எல்லாவற்றைப் பற்றியும் தமிழில் ஆதியிலேயே விண்டுரைத்து விட்டனர் போல!

    மதுரைத் தமிழன் பதிலையும், அதற்கு சகோதரிகளின் இடைவெட்டல்களையும் ரசிக்க முடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

      Delete
  22. வலைப்பதிவர்களுக்காக மட்டுமல்லாது, ஒரு கட்டுரையை, ஒரு கவிதையை – எதுவாயினும் படைக்க நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  23. உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது போல நல்ல தலைப்பு இல்லாத பதிவுவும் குப்பைதான் போலிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆம்,

      “ கரும்புக் காட்டுக்கு எறும்பு தானே வரும்“ என்பார்களே......

      நல்ல தலைப்பு உள்ள பதிவுகளுக்கும் அப்படித்தானே?!!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  24. பலருக்கும் பயனளிக்கும் சிறப்பான பதிவு! தலைப்புக்கள் பதிவுகளை பலரிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை! இலக்கண விஷயத்தில் உங்களை யாரும் தட்ட முடியாது! தொடர் கட்டுரைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      ““““““இலக்கண விஷயத்தில் உங்களை யாரும் தட்ட முடியாது“““““““““ என்பதெல்லாம் உங்கள் அன்பின் மிகை.

      பல இடங்களில் குட்டுப் பட்டுக் கற்கிறேன்.

      கற்றலின் மகிழ்வின்முன் எப்போதும் அந்த வலிகள் சுகமே!

      தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.

      Delete
  25. தலைப்பு வைப்பது தொடர்பான பதிவு அனைவருக்கும் பயனுள்ளது. இவ்வாறும் வைக்கலாம் அல்லது வேறுவிதத்திலும் வைக்கலாம் என்று கூறியவிதம் நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  26. அன்புள்ள அய்யா,

    படைப்புகளுக்குத் தலைப்பிடுதல் பற்றி இலக்கணம் இலக்கியம் கூறுவதைக் கூறி வலைப்பதிவுக்கு தலைப்பிடுவதில் கவனம் செலுத்துதலின் அவசியத்தை நன்கு உணர்த்தினீர்கள். ‘தலைப்பு’ என்றவுடன் பேரறிஞர் அண்ணாத்துரை நினைவிற்கு வந்தார்.

    சென்னை கிருஸ்துவக் கல்லூரி மாணவர்கள் அறிஞர் அண்ணா அவர்களை மேடையில் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.
    “எந்த தலைப்பில் பேச வேண்டும்? என்று அறிஞர் அண்ணா அவர்கள் வினவ,
    அதற்கு மாணவர்கள், “தலைப்பு எதுவும் இல்லை. உங்கள் விருப்பமான தலைப்பில் நீங்கள் பேசலாம் என்றார்கள்.
    மேடை ஏறிய அண்ணா அவர்கள் தலைப்பு இல்லை என்பதால் “தலைப்பு இல்லை” என்பதையே தலைப்பாக வைத்து பேசுகிறேன்” என்று கூறி ஒரு அருமையான உரையை நிகழ்த்தினார்கள்.

    தலை(ப்)பூ வைப்பதில் பூவையர் அக்கறை காட்டுவதுபோல தலைப்பு பற்றியும் அக்கறை காட்டவேண்டுமோ?

    நன்றி.
    த.ம.11

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைப் பதிவிற்குப் பொருத்தமான விதத்தில் எடுத்தாண்டு கருத்திட்டமைக்கு நன்றி

      “““““““தலை(ப்)பூ வைப்பதில் பூவையர் அக்கறை காட்டுவதுபோல தலைப்பு பற்றியும் அக்கறை காட்டவேண்டுமோ“““““““““““

      அக்கறை காட்டினால் அதிகம் பேர் நம் பதிவுகளைப் பார்ப்பதில்லையே என நம் மனதில் இருக்கும் அக் ‘‘கறை’’ நீங்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மீண்டும் நன்றி.

      Delete

  27. வணக்கம்!

    கலையின் எழிலாகக் கண்களை ஈர்த்தீர்!
    தலைப்பின் வகைகளைத் தந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தந்து குறட்பாவின் தங்களின் பின்னூட்டம்
      சிந்தை நிறையும் சிறந்து

      மிக்க நன்றி ஐயா.

      Delete