Monday 30 November 2015

காதல் நிறைவேறுமா என்பதை அறியப் பழந்தமிழ்ப்பெண்கள் செய்த சோதனை!


பெண்கள் தங்கள் மனதில் உள்ள காதலை முதலில் வெளிப்படுத்தி ஓர் ஆண் தன்னை விரும்புகிறானா இல்லையா என்பதை அறிவதற்கான வாய்ப்புகள் இன்றும் கூட, நம் சமூகத்தில் குறைவுதான். ஓர் ஆண் என்றால் தன் காதலை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ புலப்படுத்தித் தான் காதலிக்கும் பெண்ணின் நிலைப்பாட்டை அறிய அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

அறிவியலும், பெண் சமத்துவம் குறித்த சிந்தனைகளும் வளர்ந்த இந்தக் காலத்தில் இந்நிலை என்றால்,   பழங்காலத்தில் ஒரு பெண் தன் மனதில் இருக்கும் காதல் நிறைவேறுமா…., தான் விரும்புபவன் தன்னை விரும்புவானா என்பதை எல்லாம் எப்படி அறிந்திருப்பாள்?

யாரிடமும் இதுபற்றிப் பகிரவோ, நேரடியாகக் கேட்கவோ வாய்ப்பில்லாத அந்தச் சூழலில், நம்பிக்கையின் அடிப்படையில் தன் மனம் கவர்ந்த ஒருவனுக்குத் தன்மேல் காதல் இருக்கிறதா இல்லையா என்பதை அறியப் பழந்தமிழகத்தில் பெண்கள் கையாண்ட வழிமுறை குறித்து நம் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்து வைத்திருக்கின்றன.

அந்தப் பரிசோதனைக்குப் பெயர்…., கூடல் இழைத்தல்.

அது என்ன கூடல் இழைத்தல்?

ஒருவன் மேல் ஒருதலையாய்க் காதல் கொண்ட பெண், அவனும் தன்னை விரும்புகிறானா என அறிய, தன் முன் வெண்மணலைப் பரப்பி, தான் விரும்புபவனை எண்ணியபடி, கண்களை மூடி, “ அவரை நான் சேர்வேனாயின் நீங்களும் சேருங்கள்“ என்று மனதில் சொல்லியபடி, ஆள் காட்டி விரலால் சிறுசிறு வட்டங்களை வரைவாள். பின், கண்களைத் திறந்து பார்க்கும் போது வட்டம் வரையத் தொடங்கிய இடத்திலேயே அது முடிந்து ( சிறு வட்டங்கள் சேர்ந்து முழுமை பெற்ற ஒரு வட்டம் உருவாகி ) இருந்தால் அவனும் அவளை விரும்புகிறான் என்று முடிவு செய்து கொள்வாள். அப்படி ஒன்று சேராவிட்டால் அது ஒரு தலைக்காதலாகவே போய்விடும்.

இதற்கு அறிவியல் அடிப்படை உண்டா.., வட்டங்கள் இணைந்த போது, காதலர்கள் இணைந்தார்களா…., என்ற ஆராய்ச்சியைக் காட்டிலும், வேறெவரிடமும் சொல்லமுடியாத தங்கள் மனத்தவிப்பைப் பெண்கள் பிறர் அறியாமல், தம் எண்ணம் ஈடேறுமா என்று அறிய, நம்பிக்கையின் அடிப்படையில் சோதனை செய்து பார்த்த ஒருவழியாகத்தான் இதனை நாம் பார்க்க வேண்டும்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எத்தனை எத்தனை பெண்களின் கனவுகளை, பரப்பப்பட்ட வெண்மணலில் சுழிந்தோடிய ஆள்காட்டி விரல்கள் அளந்தும் ஆக்கியும் அழித்தும் இருக்கும்?

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இந்தக் கூடல் இழைத்தல் பற்றிய குறிப்புகள் சில காணப்படுகின்றன.

சான்றிற்கு ஒன்று.

இங்கு ஒரு பெண் அம்முயற்சியில் ஈடுபடுகிறாள்.

தன்முன் மணலைப் பரப்பிவிட்டாள்.

கண்களை மூடிவிட்டாள்.

‘அவனை நான் சேர்வேனாயின் வட்டங்களே நீங்கள் ஒன்று சேர வேண்டும்’ என்ற எண்ணியபடி தன் ஆள்காட்டிவிரலால் மணலைத் தொட்டும் விட்டாள்.

ஆனால்,

அவள் விரல் மணலைத் தொட்டதே தவிர அவ்விரல் அசையவே இல்லை.
மூடிய கண்கள் மூடியபடி இருக்கின்றன.

அவள் விரல் அப்படியே உறைந்துவிட்டது.

ஏன் தன் காதல் கைகூடுமா கூடாதா என அவள் சோதித்துப் பார்க்கவில்லை?!
.
அதற்கான காரணத்தை முத்தொள்ளாயிரத்தின் இந்தப்பாடல் அறியத் தருகிறது.

கூடற் பெருமானைக் கூடலார்  கோமானைக்
கூடப் பெறுவேனேல் கூடென்று – கூடல்
இழைப்பாள்போல் காட்டி இழையா திருக்கும்
பிழைப்பில் பிழைபாக் கறிந்து“

‘கூடலாகிய மதுரையின் பெருமகனை, கூடல் நகரத்தில் உள்ள மக்களால் அரசனென்று கொண்டாடப்படும் பாண்டியனை, என் வாழ்வில் சேர்வேன் என்று இருந்தால் நான் இடும் வட்டங்களே நீங்கள் ஒன்று சேருங்கள் !’ என்று சொல்லியபடி, கூடல் இழைத்தல் எனப்படும் அந்த வட்டங்களை இடப்போனவள்,

“ ஒருவேளை அவை தம்முள் ஒன்று சேராவிட்டால் அதன்பின் உயிர் பிழைத்து இருப்பவர் யார்?” என்னும் நினைவு வரக் கூடல் இழைக்காதவளாய் இருக்கிறாள்.

பாடலின், கடைசி வரி “ பிழைப்பின் பிழைபாக்கு அறிந்து

பிழைப்பின் என்றால் தான் இடும் வட்டங்கள், தவறாகி (பிழையாகி) ஒன்று சேராமல் போனால்…..

அதென்ன அடுத்துவரும் பிழைபாக்கு…?

இங்கு வரும் பிழை என்பதற்கு பிழை(த்தல்) அதாவது உயிரோடு இரு என்பது பொருள்.

பாக்கு என்பது பண்டைய தமிழில் இருந்து, இன்று நம்கால வழக்கில் இல்லாத எதிர்காலம் குறித்து வரும் ஓர் வினையெச்ச வாய்பாடு.

பிழைபாக்கு என்பதற்கு “பிழைத்திருந்தால்“ என்று பொருள்.

அவள் இடும் வட்டங்கள் தம்முள் சேர்ந்தால் சரி…!

வட்டங்கள் பிழைத்து(தவறாகி)ப் போனால் அதன் பின்னர் உயிர்பிழைத்து இருக்கின்றவள் யார் என்ற எண்ணம்தான் அவளது விரல்களை உறையச் செய்திருக்க வேண்டும்.

தன் நம்பிக்கையைத் தகர்க்கின்ற சிறு வாய்ப்பையும் காதலில் ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத அப்பெண்ணின் நிலையை நான்குவரிகளில் உயிரோவியமாய்த் தீட்டி, காலம் கடந்தும், காண விரும்பும் கண்களுக்குக் காட்சிப் பொருளாய்த் தந்து மறைந்தான் பெயர் தெரியாத இத்தமிழ்க் கவிஞன்.

இதுபோன்ற பாடல்களால்தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.

தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

49 comments:

 1. புதிய செய்தி...ஒரு பெண்ணின் மனநிலையை அழகாக எடுத்துக்காட்டுகிறது..

  ReplyDelete
  Replies
  1. வருக கவிஞரே!

   தங்களின் வருகையும் முதல் கருத்தும் காண மகிழ்வு.

   நன்றி.

   Delete
 2. // இதுபோன்ற பதிவுகளால் தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது // என்றும் கூட சொல்லலாம்...

  பாராட்டுக்கள் ஐயா....

  ReplyDelete
  Replies
  1. ‘இது போன்ற பாடல்களால்தான் என் பதிவுகளை ஏதோ எழுதிக் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறேன்’ என்பதே இன்னும் சரியாக இருக்கும் ஐயா.

   தங்கள் வருகைக்கும் என்மேல் கொண்ட அன்பிற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 3. அழகான பாடல் வரிகள்,
  தங்கள் விளக்கம் அருமை, காலம் காட்டும் இடைநிலைகள், இன்று வழக்கில் இல்லை,,,,,

  பகிர்வுக்கு நன்றி ஐயா,

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பேராசிரியரே!

   முதலில் தங்களின் பாராட்டிற்கு நன்றி.

   “““““காலம் காட்டும் இடைநிலைகள், இன்று வழக்கில் இல்லை,,,,“““““????

   புரியவில்லை.

   காலம்காட்டும் இடைநிலை இல்லாமல் வினைமுற்றுகள் தமிழில் உண்டா என்ன?

   இருக்கின்றன என்பதிலேயே இருக்கின்றதே..!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
  2. வணக்கம் ஐயா,

   வான், பான் அல்ல,
   பாக்கு மட்டும் என்று சொன்னேன்.

   நன்றி ஐயா

   Delete
  3. பேராசிரியர்க்கு வணக்கம்.

   வான், பான், பாக்கு எனும் வினையெச்ச வாய்பாடுகளை இடைச்சொல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

   இஃதெவ்வாறு இடைநிலை ஆகும்?

   நன்றி

   Delete
 4. அருமையானதோர் பாடல், அதன் சிறப்பான விளக்கம்....

  பதிவினை மிகவும் ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 5. ஐயா..பண்டைய மகளிரின் நுண்ணுணர்வுகளை விளக்கும் அறிய பதிவு!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 6. வணக்கம்
  ஐயா
  இன்றை நிலையோடு பண்டைய நிலையை ஒப்பிட்டு அழகிய பாடல் மூலம் சொல்லிய விதம் சிறப்பு... ஐயா படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 7. அன்புள்ள அய்யா,

  ‘கூடல் இழைத்தல்’ குறித்துக் காதல் நிறைவேறுமா என்பதை அறியப் பழந்தமிழ்ப்பெண்கள் வட்டத்திற்குள் வட்டம் வரவேண்டும் என்ற ஆவலுடன் வரைந்து பார்த்துக் கண்டு கொண்டதைக் கூடற் பெருமானைப் பாடிய பாடல் மூலம் காட்டியது தோழி மூலம் தூது விடாமலும் மனதிற்குள் பூட்டிவைத்து யாருக்கும் தெரியாமல் காதலைக் காத்து வந்துள்ளனர் பண்டையத் தமிழச்சிகள்... காதல் வாழ்க...!

  இதைவைத்துத்தான் ஆண் காதலைச் சொல்லாமல் வைத்தார்களோ ‘இதயம்’ திரைப்படத்தில்!

  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   தங்களின் வருகைக்கும் இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

   Delete
 8. கூடல் இழைத்தல் ...இதுவரை அறியாத ஒன்று...இந்தக் காதல் உணர்வு எப்படிப்பட்ட ஒன்றாக இருந்திருக்கின்றது...இருக்கின்றது! இப்படித்தான் பெண்கள் பலரும் தங்கள் காதலைச் சொல்லாமல் தங்கள் மனதிற்குள்ளேயே வைத்து...ம்ம்ம்ம்

  அருமையான பாடல்வரிகள்...விளக்கம் என்று சகோ நீங்கள் நாங்கள் இதுவரை அறியாத பலவற்றைப் பதிந்து எங்களுக்குக் கற்றுத் தருகின்றீர்கள்...மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 9. Great ! Even today such things does happen.I know friends boy and a girl who are few amongst group of friends who are scared of expressing their love because of a negative answer from the other and live for a longer period as single and keep waiting one of them to break the ice.but most of the time because of pressure from parents burry their love deep and deeper and accept different path.
  good one sir.

  ReplyDelete
 10. கூடல் இழைத்தல் என்ற புதிய சொல்லையும் அதன் பொருளையும் தெரிந்துகொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

  //இதுபோன்ற பாடல்களால்தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.//

  இது போன்ற அனேகருக்கு தெரியாத பாடல்களை உங்களைப் போன்றோர் எடுத்து சொல்வதால் தான் தமிழ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று நான் சொல்வேன்.

  ReplyDelete
 11. அருமையான பாடல். அதற்கு தங்களின் விளக்கமும் அருமை. இப்போதும் கூட இப்படிப்பட்ட பழக்கங்கள் இருக்கின்றன. என் நண்பன் ஒருவன் தாவணி கட்டிய பெண்களை இலக்காக வைப்பான். தாவணி கட்டிய பெண்களை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. தனது வீட்டில் இருந்து அலுவலகம் 2 கி.மீ. தூரம். அதற்குள் பாதையில் தாவணி கட்டிய பெண்ணை பார்த்துவிட்டால் மனதில் நினைத்த காரியம் நடந்து விடும் என்பது அவனது நம்பிக்கை. இந்த நம்பிக்கை பலமுறை சரியான முடிவையே தந்திருக்கிறது.
  த ம 8

  ReplyDelete
 12. முதல்முறையாக அறிகிறேன். எவ்வளவு சுவாரஸ்யமான விஷயம்? அழகான உதாரணப் பாடல். முதலில் தந்திருக்கும் விளக்கத்தைப் படித்துக் கொண்டு வரும்போது என் மனதில் இதே விஷயம்தான் தோன்றியது. அருமை.

  ReplyDelete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. கூடல் இழைத்தல் ...பல வார்த்தைகள்...பல அர்த்தங்கள் ..பலே பலே

  ReplyDelete
 15. கூடல் இழைத்தல்....அன்றைய காலத்தில் மூடநம்மிக்கை இருந்தது என்பதை அன்றைய பெண்கள் மத்தியில் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது..நண்பரே...இன்றைக்கு.....

  ReplyDelete
  Replies
  1. வலிப்போக்கரே, இது மூட நம்பிக்கை அல்ல,

   காதல் வலி, எங்கே கைகூடாமல் போய்விடுமோ என்ற பயம், அது தன்னாலே ,,,,,

   இது போல் நிறைய உண்டு,,,,,

   Delete
 16. கூடல் இழைத்தல்....அன்றைய காலத்தில் மூடநம்மிக்கை இருந்தது என்பதை அன்றைய பெண்கள் மத்தியில் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது..நண்பரே...இன்றைக்கு.....

  ReplyDelete
  Replies
  1. மூடிய மனங்களுக்கு இதுபோன்ற நம்பிக்கைகள் செய்யும் உதவி பெரிது வலிப்போக்கரே!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 17. எப்போதே படித்தது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் தாங்கள் படித்ததை நினைவு கூர்ந்ததற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete

 18. வணக்கம்!

  கூடற் பெருமானைக் கூடல் இழைத்திட்ட
  பாடல் படித்துப் பயனுற்றேன்! - ஆடல்
  பலகாட்டி அள்ளுமெழில் பைந்தமிழை, இன்பப்
  பலங்கூட்டித் தந்தீர் பதிவு!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   பதிவின் வழிவந்த பாசத்தின் அன்பின்
   நிதியை நினைக்குமென் நெஞ்சில் - உதிக்கின்ற
   பின்னப் பதிவுமும் பின்னூட்ட வெண்பாவால்
   கன்னலெனச் செய்தீர் கவி!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 19. "...இன்றும் கூட, நம் சமூகத்தில் குறைவுதான்... "

  தனக்காக எவ்ளோ நேரம் நடுரோட்ல காதிருப்பான் என்ற டெஸ்ட் தொடங்கி, பையனை " பாடிகாட் முனீஸ்வரனா " பின் தொடர வைக்கிறது... தன்னோட செல்போனுக்கு " பையன் " காசுல டாப் அப் தொடங்கி, பீட்ஸா, ஐஸ்க்ரீம் பில் வரைக்கும் பொண்ணுங்க பையன்களோட " பல்ஸ் " பார்க்க இப்பவெல்லாம் நிறைய வழி இருக்கு... !!! :-))

  சும்மா ஜோக் !!!

  " இதற்கு அறிவியல் அடிப்படை உண்டா... "

  அனைத்து அறிவியல் கற்பிதங்களும் மழுங்கும் தருணம் அல்லவா காதல்வயப்படும் தருணம் ?!...

  " தன் நம்பிக்கையைத் தகர்க்கின்ற சிறு வாய்ப்பையும் காதலில் ஏற்படுத்திக் கொள்ள விரும்பாத... "

  உண்மைதான் ஜோசப் ! தன் காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற ஆர்வத்தைவிட ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ? என்ற பயத்தினாலேயே தாமதப்பட்ட அல்லது ஒரு தலையாய் முடிந்துவிட்ட காதல்கள் நம் சமூகத்தின் சங்க காலம் தொடங்கி இன்றுவரை பல உண்டு !

  எந்த மொழி இலக்கியத்திலும் அம்மொழி சார்ந்த மக்களின் வரலாறு விரவியிருக்கும் என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகள் முந்தைய பெண்ணின் மன ஓட்டத்தை துல்லியமாய், அழகாய் விளக்கும் படைப்புகளை கொண்ட பண்டைய தமிழ் இலக்கியம் பெருமையான பொக்கிஷம். நமக்குத்தான் அதன் அருமை இன்னும் புரியவில்லை !

  தொடரட்டும் உங்கள் பணி !

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. அண்ணா வணக்கம்.

   முதலில் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியும் நன்றியும்.

   ““““““““““தன் காதல் ஏற்றுக்கொள்ளப்படுமா என்ற ஆர்வத்தைவிட ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் ? என்ற பயத்தினாலேயே தாமதப்பட்ட அல்லது ஒரு தலையாய் முடிந்துவிட்ட காதல்கள் நம் சமூகத்தின் சங்க காலம் தொடங்கி இன்றுவரை பல உண்டு ! ““““““““““““““““““““““

   அனுபவித்தவரை உள்ளே சுழற்றி விழுங்கிவிடும் அற்புத வரிகள் இவை.

   வழக்கம்போலவே எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிபோல என் மனதைப் பிரதிபலித்துப் போயிருக்கிறது உங்கள் பின்னூட்டம்!

   அதற்காய் என்றும் நன்றியுண்டு.

   நீங்கள் தொடர்ந்து எழுதாமல் இருக்கிறீர்களே என்ற வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு.

   தொடருங்கள் அண்ணா.

   நன்றி

   Delete
 20. Replies
  1. வணக்கம்!

   கதைக்கேற்ற நற்படம் கண்டு களித்தேன்!
   இதைபோற்ற இல்லை எழிற்சொல்! - இதமேற்ற
   என்னெஞ்ச வாழ்த்துகள்! ஏற்றிடுவீர் பல்லாண்டு!
   பொன்னெஞ்சம் பொங்கப் பொலிந்து!

   பாட்டரசர் கி. பாரதிதாசன்
   தலைவர்:
   கம்பன் கழகம் பிரான்சு
   உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

   Delete
  2. ஐயா வணக்கம்.

   பொலிந்த கருத்திற்குள் பொங்குதமிழ் சேர்த்து
   நலிந்த மரபென்னும் நாற்றும் - வலிமையுறப்
   பெய்தமழை செய்தபணி! நெய்தகவி எய்துபுகழ்
   மெய்யுவகை கொள்ளவெழு மே!

   தங்களின் வருகைக்கும் வெண்பாப் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 21. அமிழ்தளித்தீர் ! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

   Delete
 22. காதலில் இதைப்போல மூடநம்பிக்கைகள் ஏராளம்.
  அழகான பாடல், அருமையான விளக்கம்.

  ReplyDelete
  Replies
  1. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருப்பவர்களின் கைக்குக் கிடைப்பது எதுவானாலும் கொழுக்கொம்புதான்.

   தங்களின் வருகைக்கும் முதற்கருத்திற்கும் நன்றிகள்.

   தொடர வேண்டுகிறேன்.

   நன்றி.

   Delete
 23. இது போன்ற பாடல்களால் இனிமையான தமிழ் உங்கள் பதிவுகளால் உயிர் பெறுகிறது அண்ணா..
  இன்றும் காதல் உண்டா இல்லையா என்று அறிய பல அறிவியல் ஆதாரமற்ற செயல்களைச் செய்து பார்ப்பது வழக்கில் இருக்கிறதே...மனிதன் உள்ள வரை இவ்வழக்கங்களும் இருக்கும். :)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

   பிரச்சினை நாம் நம்புகிறோமா இல்லையா என்பதைப் பொருத்ததுதான்.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 24. ஆஹா.. அற்புதமான பாடலும் விளக்கமும். கூடல் இழைத்தல், பிழைபாக்கு போன்ற புதிய சொற்கள் அறிந்தேன். மிகவும் நன்றி விஜி சார். அகிலன் அவர்கள் எழுதிய கயல்விழி நாவலில் இதுபோல் ஒரு நிகழ்வு வரும். பல வருடங்களுக்கு முன் படித்தபோது இவ்வளவு விரிவாகப் புரியவில்லை.. வெறுமனே ஒரு வட்டம் என்றே நினைத்திருந்தேன். காதலில்லா அப்பருவத்தில் நம்மாலும் அப்படியெல்லாம் செய்யமுடிகிறதா என்று விளையாட்டாய் கண்களை மூடி மணலில் வட்டமிட்டுப் பார்த்த நினைவுகள்.. இப்போது முறுவல் வரவழைக்கின்றன. பின்னாளில் அந்நாவல் திரைப்படமானபோது (மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்) இக்காட்சியும் அதில் இடம்பெற்றது என்று நினைவு.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.

   அகிலன் மரபிலக்கியம் படித்தவர். மரபுக் கவிதைகளை எழுதும் ஆற்றல் பெற்ற நாவலாசிரியர். அங்கிருந்துதான் இதற்கான சரடை எடுத்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

   விளையாட்டு நம்பிக்கையாவதும் நம்பிக்கை விளையாட்டாவதும் காலத்தின் கைகளில் இருக்கின்றன.

   தங்களின் வருகைக்கும் தொடர்புடைய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி.

   Delete
 25. வணக்கம் பாவலரே !

  அழகான கதையோடு ஒரு பாடலை விளக்கிய விதம் அருமை ஆனால் அந்தக்கால ஆணும் பெண்ணும் பட்ட வேதனைகள் இப்போ காணமுடியாதே உடன் பதில் ஆம் என்றால் தொடரும் இல்லையேல் இடறும் ...நவீனம் மலிந்துவிட்டதே !

  மிக அருமை பாவலரே தொடர வாழ்த்துக்கள் நானும் தொடர்கிறேன் நன்றி
  வாழ்கவளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாவலரே!

   நீங்கள் சொல்வது உண்மைதான்.

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.

   Delete
 26. அப்பப்பா இந்தக் காதல் எந்தக் காலத்திலும் பாடாய்ப் படுத்தி தான் இருக்கிறது ம்..ம் பாவம் எத்தனை காதலர்கள் அல்லலுற்றிருப்பர்கள் வாழ்நாளில் நினைக்கவே ரோம்ப வேதனையாக உள்ளது. நான் அறிய மருதாணி இட்டு யாருக்கு நன்றாக சிவக்கிறதோ அவர் மீது கணவருக்கு அதிக காதல் இருக்கும் என்று சொல்வார்கள். ஆண்பிள்ளையா பெண் பிள்ளையா பிறக்கும் என்று பார்க்க மோதிரத்தை நூலில் கட்டி உள்ளங்கையில் பிடிப்பார்கள் அது மெல்ல ஆடத் தொடங்கும் அது எப்படி ஆடுகிறது என்பதை வைத்துச் சொல்வார்கள். வட்டமாக ஆடினால் பெண் என்றும் நீள் பக்கமாக ஆடினால் ஆண் என்றும் சொல்லி விளையாடுவார்கள். சிறுவர்களாக இருக்கும் போதே ஏதோ சிறு ஞாபகம். சரியாகச் சொல்கிறேனோ தெரியலை. இன்றைய நவீன காலத்தில் எல்லாமே மாறித் தான் விட்டது.
  கூடல் இழைத்தல், பிழைப்பாக்கு புதிய சொற்கள் அறிந்தேன்.

  பாடலும் விளக்கமும் அருமை வழமை போலவே.

  பதிவுக்கு நன்றி ! தொடர்கிறேன் ....!

  ReplyDelete
 27. என்ன அழகான பாடல்? பிழைப்பின் பிழைபாக்கு அறிந்து அழகான சொற்றொடர்! கூடல் இழைத்தல் இதுவரை தெரியாத செய்தி. அருமையான, அழகான பாடலை நயம்பட எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

  ReplyDelete
 28. சுவையான பதிவு! இதைப் படிக்கும்பொழுது இயக்குநர் மணிரத்னம் அவர்களின் 'ரோஜா' திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதில் மறுநாள் தன் அக்காவைப் பெண் பார்க்க வரும் அரவிந்த்சாமி அவளை மணக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பிள்ளையார் முன் வட்டம் போட்டுப் பார்ப்பார் மதுபாலா. இது போல் சிறு சிறு வட்டங்கள் கொண்ட வட்டமில்லை. ஒரே வட்டம். ஆக, அண்மைக்காலம் வரையிலும் கூட இப்படிப்பட்ட பழக்கங்கள் இருந்தின்றனவோ?

  ReplyDelete