Tuesday 7 July 2015

சமணம் (4) – கடவுளின் துகள்.


உயிர்கள் எப்படி உருவாயின? உலகத்தைப் படைத்தவர் யார்.. என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கடவுள் என்று ஒருவன் இருக்கிறான். அவன் நம்மையும் இந்த உலகத்தையும் படைத்தான் என்று சொல்வது  எவ்வளவு எளிதானது...!

இந்த உலகம் எப்படித் தோன்றியது?

கடவுள் படைத்தார்.

உயிர்கள் எப்படித் தோன்றின?

கடவுள் படைத்தார்.


நான் பாதிரியார்களால் நடத்தப்படும் பள்ளி ஒன்றில் படித்தவன். அங்கிருந்த பாதிரியார் ஒருவரிடம் எனது ஒன்பதாம் வகுப்பில் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

கடவுளைப் படைத்தவர் யார்?

‘இப்படி எல்லாம் உன்னைக் கேட்கும்படித் தூண்டுவது பிசாசு’ என்று கூறிய அவர் தன் கையில் இருந்த பேனாவை எனக்குக் காட்டி, “இந்தப் பேனா,  இதன் உலோக முனை அதன் அடிக்கட்டை, மை, இதெல்லாம் தானாக வந்து சேர்ந்து பேனாவாக உருவாயிற்று என்றால் நீ நம்புவாயா?” எனக்கேட்டார். இந்தக் கேள்விக்கு முதலில் பதில்சொல்லட்டும். அடுத்து பிசாசைப் படைத்தவர் யார் எனக்கேட்போம் என்று எண்ணிக் கொண்டே,

“ அதெப்படி? நான் நம்பமாட்டேன் ” என்றேன்.

அப்படி இந்தச் சாதாரண பேனாவையே உருவாக்க ஒருவர் வேண்டியிருக்கும் போது இப்படி அதிபுத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கேட்கிறாயே உன்னைப் படைத்த ஒருவன் இருக்கவேண்டாமா” என்றார்.

“என்னைப் படைத்தவர் எங்க அப்பா! பேனாவையே உருவாக்கும் அளவிற்குப் புத்திசாலிகளைப் படைத்த கடவுளைப் படைத்தவர் யார் ?” என்றேன்.

மறுநாள், என் தந்தையார் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, “உங்க பையனோட சேர்க்கை சரியில்லை. கவனமாக இருங்கள்!” என்று எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டார்.

அப்பாவுக்கு “அவன் யாரோடயாவது சேர்றானா?” என்பதுதான் முதலில் ஆச்சரியமாகப்போய் இருக்க வேண்டும். “என்னடா தேவையில்லாத கேள்வியெல்லாம் சாமியார்கிட்ட கேட்டுகிட்டு....” என்று சொல்லிச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

சொல்லப்போனால் இந்தக் கேள்வி அதிபுத்திசாலித்தனமான கேள்வியொன்றும் இல்லை.

உலகத் தோற்றம், உயிரின் தோற்றம், கடவுளின் தோற்றம் இவை குறித்தெல்லாம் கேட்பது என்பது சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனும் தனக்குள்ளாகவேனும் ஒருமுறையாவது மெல்ல கேட்டிருக்க வேண்டிய அடிப்படைக் கேள்விதான்.

இதற்கான தீர்வுகளை அவரவர்கள் அவரவர்க்குரிய விதத்தில் கண்டிருக்கலாம்.

கடவுள் இல்லை என்பவன், அதுவும் அந்தக் காலத்தில் இந்த மாதிரியான கேள்விகளுக்குப் பதில் சொல்வது சாதாரண காரியமல்ல.

அவன்,  பகுத்தறிவின் பாதைகளை அகலத் திறந்து இவை அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

இப்படிக் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலுக்கான தேடலைத் தொடங்கவேண்டும்.

இருண்மையில் ஒளிபாய்ச்ச வேண்டும்.

புதிர்களின் சிக்கலை அவிழ்க்கவேண்டும்.

முக்கியமான தர்க நியாயங்களால் அவர்கள் காட்டுகின்ற தீர்வு மறுக்கப்படாததாக தன் தரப்பை நிலைநிறுத்த  வேண்டும்.

கடவுளை ஏற்காத இச்சமயங்களின் உலகத் தோற்ற ஒடுக்கம் பற்றிய ஆராய்ச்சி நான் அறிய நேர்ந்த காலத்தில் எனக்கு மிக வியப்பூட்டியது. அதுவரை நான் அறிந்திருந்த உலகம் கடவுளின் உள்ளங்கையிலிருந்து உருவாக்கப்பட்டதாய் இருந்தது.

இவற்றிற்குப் பின் எழுந்த செல்வாக்குற்ற, வைதிக சமயங்கள் கூட இவற்றின் பல கருத்துகளை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொள்ளவும், சற்று மாறுதல் செய்து தம் கொள்கைகளுக்கு முலாம் பூசவும் இவர்களின் ஆராய்ச்சி பயன்பட்டிருக்கிறது என்பது இனிய நகைமுரண்.

பொதுவாகக் கடவுளை நம்புபவர்களால் கடவுள் மறுப்பாளர்களைக் குறித்து முன்வைக்கப்படும் ஒரு கருத்து உண்டு.

கடவுளை நம்பாவிட்டால்  அவன் அயோக்கியனாக, எதற்கும் பயப்படாமல் எதைப் பற்றியும் கவலைப்படாதவனாக, மனித குலத்திற்கே அழிவு சக்தியாக மாறிவிடுவானே!’ என்பதே அது.

வரலாற்றைப் பார்க்கப்போனால், கடவுளைக் கற்பித்த சமயங்கள் தம் கடவுளை இவ்வுலகில் நிலைநிறுத்தப் பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.

எனவே இறைமறுப்பு என்னும் கொள்கையுடைமை என்பது உலகை அநீதிக்கும் பாவ வழிக்கும் படுகொலைகளுக்கும் இட்டுச் செல்லும் என்னும் கற்பிதம் அபத்தமானது. கடவுளை மறுத்தாலும் மற்ற சமயங்களைப் போன்றே உயிர்களிடத்து அன்பையும், அறத்தையும் வலியுறுத்தியே இவையும் அமைகின்றன..

சமணம் பற்றிய சென்ற பதிவில் ஒருபொருளின் அடிப்படைத்துகள் அணு என்னும்  அவர்தம் கொள்கை பற்றிப் பார்த்திருந்தோம்.

அணுக்கள் குறித்த சமணர்களின் மேலும் சில கருத்துக்களாவன,

அணு என்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாது.

அதற்கு மேலென்றோ கீழென்றொ நடுவென்றோ எந்தப் பரிமாணமும் இல்லை.

ஆகவே அதற்கு வடிவமும் இல்லை.

எனவே அது சாதாரணக் கண்களின் காட்சிக்குப் புலனாவதில்லை. ( பிறகெப்படி சமணர் அதைப் பார்த்தனராம்..? அதைப் பார்க்கும் கண்களும் இருந்தன. அவை பரிபூரண ஞானம் எய்தியவரின் கண்கள். அவர்கள் உரைத்தனவே இதுபோன்ற கொள்கைகளும்  என்பர் சமணர்.)

வடிவம் இல்லாத அந்த ஒன்றுதான் எல்லா வடிவங்களும் தோன்றக் காரணமாக அமைகிறது.

எது மேலும் பிரிவு படாததோ அது அழிவில்லாதது.

எனவே அணுவிற்கு அழிவில்லை.

எதை அழிக்க முடியாதோ அது என்றும் இருப்பதாகும்.

எனவே அணு என்றும் இருக்கிறது.

அழிக்க முடியாத ஒன்றை யாரும் உருவாக்கவும் முடியாது.

எனவே அணு உருவாகக் கடவுளின் துணை வேண்டியதில்லை.

உலகத்தின் தோற்றத்திற்குக் காரணமாகத் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள்தான் உலகைப் படைத்தார் என, சமணர் அது அணு என்னும் துகளினால் உருவாகிறது என்கின்றர்.

உலகை அதில் உள்ள எந்தப்  பொருளையும்  பகுத்துப் பகுத்து நாம் உள்ளே செல்லுவோமானால் இறுதியாக மேலும் பகுக்க முடியாமல் எஞ்சுவதுதான் இந்த அணு.

இறுதியாக மிஞ்சும் அந்த அணுவில் மற்ற அணுக்கள் சேர்வதன் மூலமாகவே ஒரு பொருளின் தோற்றம் நிகழ்கிறது.

காணப்படுவன மட்டும் அல்ல.

நம் எண்ணம், பேச்சு, போன்றவையும் அணுக்களால் ஆனவையே என்கின்றனர் சமணர்.

இவ்வணுக்களுக்குத் தமக்கெனத் தனித்தன்மையோ  குணமோ ஒன்றுமில்லை.

அது சேரும் விகிதங்களைப் பொறுத்தே அதன் தன்மையும் குணமும் அமைகின்றது.

சரி.. இப்படி ஒரு சடப்பொருளை ( அசீவனை ) ஒரு அணு மற்ற அணுக்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே உருவாக்கிவிட முடியுமா என்றால் அப்படி அணுவால்  மட்டும் தனித்து ஒரு பொருளை உருவாக்கிட முடியாது என்கிறது சமணம்.

அப்படி ஒரு பொருள் உருவாகிட அணுவுடன், ஆகாயமும் காலமும் சேர வேண்டும்.

ஆகாயமும் காலமும் நாம் இதுவரை பார்த்த அணுக்களால் உருவாக்கப்பட்டவை அல்ல.

அதே நேரம் இவையும் அணுக்களைப் போலவே என்றும் இருப்பதும், அழிக்கமுடியாததும் ஆக இருப்பவை.

இவை அழிக்கமுடியாத பொருளாக இருப்பதால் அணுவைப் போன்றே இவற்றை ஒருவர் தோற்றுவிக்கவும் அவசியம் இல்லாமற் போகிறது.

சரி! நாம் இதுவரை பார்த்ததில் இருந்து இந்த உலகில் காணப்படும் பொருள்களின் தோற்றத்திற்கு,

அணுக்களும்,
ஆகாயமும்,
காலமும்  

என இம்மூன்று மட்டும் இருந்தால் போதுமா என்று கேட்டால், இல்லை போதாது என்கின்றனர் சமணர்.

வேறென்னவெல்லாம்  வேண்டுமாம்..?

தொடர்வோம்.



பட உதவி - https://encrypted-tbn3.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

41 comments:

  1. வரலாற்றைப் பார்க்கும் போது கடவுளைக் கற்பித்த சமயங்கள் தம் கடவுளை இவ்வுலகில் நிலைநிறுத்தப் பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்று மிகச்சரியாகச் சொன்னீர்கள். கடவுளை மறுத்தாலும் அன்பையும் அறத்தையும் சமணம் வலியுறுத்துகிறது என்பது உண்மை. எதை உருவாக்க முடியாதோ அதை அழிக்க முடியாது; ஒரு பொருளின் தோற்றத்துக்கு அணு, ஆகாயம், காலம் மூன்றும் தேவை என்ற இவர்கள் சொல்லும் கருத்துக்களை அறிந்தேன். இன்னும் என்னென்ன தேவையென்று சமணர் சொல்கிறார்கள்? அறிய ஆவல். தொடருங்கள். த ம வாக்கு 2

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      உங்களின் முதல் பின்னூட்டம் அதுவும் இந்தப் பதிவிற்கு...,

      உவப்பு.

      நன்றி.

      Delete
  2. தொடரட்டும் ஆய்வுகள் ...
    தம +

    ReplyDelete
    Replies
    1. இவை ஆய்வொன்றும் இல்லை தோழர்.

      பிறன் கோட்கூறல்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. முத்து நிலவன் சொன்ன போது எனக்குப் புரியவில்லை... பிறது தான் புரிந்து ஆச்சரியப்பட்டேன்... சந்திக்கும் போது நிறைய பேசுவோம்...

    பரிபூரண ஞானம் எய்தவர்களின் கருத்துகளை அறிய ஆவலுடன் உள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. ஐயா என்ன சொன்னார் என்பதும் நீங்கள் என்ன புரிந்து ஆச்சரியப்பட்டீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லையே.....?!

      தங்களின் தொடர்ச்சிக்கு நன்றிகள்.

      Delete
  4. மதம் என்றால் இப்படி அல்லவா விஞ்ஞான பூர்வமாக மக்களை சிந்திக்க வைக்க வேண்டும் .என்ன கொடுமை என்றால் சிந்திப்பதற்குப் பதில் மத நம்பிக்கையை ஒரு சடங்காக்கி விட்டார்கள் !

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சமணக் கருத்துக்களைப் பார்க்கும் ஒருவேளை உங்களின் இந்த நம்பிக்கை மாறவும் கூடும்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பகவானே!

      Delete
  5. பாடங்கள் கற்றுக் கொடுக்கும் உங்கள் திறனை மெச்சுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. பொதுவாசிப்பிற்குத் தகுந்ததாக இவை இருந்தாலே அது பேரதிசயம்.:)

      இதில் நான் கற்றுக்கொடுக்க என்ன இருக்கிறது நண்பரே?

      நன்றி.

      Delete
  6. மிக நேர்த்தியாய் எல்லோரும் அறியும் வண்ணம் சொல்லிச் செல்வது என்பது தனித்திறன்...
    அருமையாக புரிய வைக்கிறீர்கள்...
    தொடருங்கள்.. தொடர்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. பரிவை. சே. குமார்.

      Delete
  7. வணக்கம்
    ஐயா

    சொல்லிய ஒவ்வொரு விளக்கமும் நன்று தொடருகிறேன் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றி திரு. ரூபன்.

      Delete
  8. அன்புள்ள அய்யா,
    கடவுளின் துகள் - அதுவரை நான் அறிந்திருந்த உலகம் கடவுளின் உள்ளங்கையிலிருந்து உருவாக்கப்பட்டதாய் இருந்தது.

    உள்ளங்கை நெல்லிக்கனி போல... !

    நன்றி.
    த.ம. 9.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      இயலா நிலையிலும் தாங்கள் என் தளத்தைத் தொடர்வதும் கருத்திடுவதும் கண்டு நெகிழ்கிறேன்.

      மிக்க நன்றி.

      Delete
  9. கடவுளைக் கற்பித்த சமயங்கள் தம் கடவுளை இவ்வுலகில் நிலைநிறுத்தப் பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.
    உண்மை நண்பரே
    அடுத்தப் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  10. பதில் கிடைக்காத கேள்விகள் சிறுவயதில் அதிகம். ஒரு கட்டத்தில் பதில்கிடைக்காது என்று தெரிந்து போய்விடுவதால் கேள்வி கேட்பதே மறக்கப் படுகிறது.
    நான்காவதை அறிய ஆவல்

    ReplyDelete
    Replies
    1. நான்காவது மட்டுமல்ல ஐந்தாவதும் இருக்கிறது.

      அதுவும் ஆச்சரியம் தருவதுதான்.

      தொடர்கிறேன் ஐயா.

      தொடர்கின்றமைக்கு நன்றி.

      Delete
  11. ஒரு சிறந்த பதிவு அணுவின் தோற்றம் பற்றிய கோட்பாடுகள் ...மெய்மங்கள் ... இன்னும் வானியலையும் தமிழர்தம் உயரிய கலைகளையும் எளிமையாக்கி அனைவருக்கும் புரியவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் .....இடுகைக்கு பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது பாராட்டிற்கு நன்றி சகோ.

      Delete
  12. ஒவ்வொருவருடைய எந்த செயலுக்கும் இப்பிறவியிலோ அல்லது முன்பிறவியிலோ அவர்களோடு இணைந்த நுண்ணிய அணுக்கள் உயிருடன் ஒட்டியிருப்பதன் காரணம் இருக்கும் என்று சமண வினைக்கோட்பாட்டில் படித்த நினைவு.. சரியா என ஆசிரியர் தான் விளக்க வேண்டும். தங்களின் ஒவ்வொரு வாசிப்பு அனுபவமும் எங்களுக்கு பாடமாகிறது. நன்றி ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அறிவினா சரிதான்.

      வினைக்கோட்பாடு சமணருடையது.

      எளிதாகச் சொல்ல வேண்டுமானால்,

      ஒருவன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு உண்டென்றும் பரிகாரம் உண்டென்றும் வைதிக சமயங்கள் சொல்லும்.

      ஆனால் ஒருவன் தான் செய்த செயலுக்கான விளைவை அவன் அனுபவித்தே தீரவேண்டும் என்கிறது சமணம்.

      இதுவே வினைக்கோட்பாட்டின் ஒற்றை வரி விளக்கம்.

      தாங்கள் அறிந்திருக்கும் கருத்தினை எனக்கும் அறியத் தருகின்றமைக்கு நன்றி கவிஞரே!!


      Delete
  13. அருமையான தொடர் .... விரைந்து வர விழைகிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      Delete
  14. வணக்கம் என் ஆசானே,

    உலகை அதில் உள்ள எந்தப் பொருளையும் பகுத்துப் பகுத்து நாம் உள்ளே செல்லுவோமானால் இறுதியாக மேலும் பகுக்க முடியாமல் எஞ்சுவதுதான் இந்த அணு.

    அணுவையும் பிளக்க முடியும் என்கீறார்களே,

    சரி சொல்லூங்கள்,

    வேறென்னவெல்லாம் வேண்டுமாம்..?
    காத்திருக்கிறோம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிளக்க முடிந்தால் அது அணு ஆகாதே :)

      நீங்கள் இன்று நாம் அறிவியிலில் சொல்லும் கலைச்சொல்லான அணு என்பதை இதன் பொருளாக எடுத்துக் கொண்டீர்கள் போல் இருக்கிறது.

      ஒன்றைப் பிளக்க முடிந்தால் அதன் பெயர் அணுவல்ல.

      பிளக்க முடியாதபடி எஞ்சி நிற்பதுதான் அணு.

      நேற்றைய அறிவியல் பிளக்கமுடியாத நுண்கூறினை அணு என்றது.

      இன்றைய அறிவியல் அதைப்பிளக்க முடியும் என்கிறது.

      சமணரின் கொள்கை இங்கு மாறவில்லை.

      பிளக்கமுடியாமல் எஞ்சுவது எதுவே அதுவே அணுவாகும்.


      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
    2. வணக்கம் ஆசானே,
      அவ்வாறு அல்ல
      தாங்கள் சொல்வதும் அது தானே,
      நன்றி.

      Delete
  15. மிக எளிமையாக விளக்கி விட்டீர்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  16. தொடர்ந்து படித்து வருகிறேன். ஆழமாக தாங்கள் விவாதிக்கும் முறை அருமையாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி முனைவர் ஐயா.

      Delete
  17. சிறு வயதிலேயே ஆய்வு தொடங்கி விட்டது ம்..ம் வெகு நேரமாக சிரித்துக் கொண்டிருந்தேன் அவ்வுரையாடல்களை எண்ணி, விளையும் பயிரை முளையிலேயே தெரியுமாமே. அது தான் போலு ம் ..ம்..ம். நல்லது..

    \\\\\வரலாற்றைப் பார்க்கப்போனால், கடவுளைக் கற்பித்த சமயங்கள் தம் கடவுளை இவ்வுலகில் நிலைநிறுத்தப் பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கையே மிக அதிகம்.
    எனவே இறைமறுப்பு என்னும் கொள்கையுடைமை என்பது உலகை அநீதிக்கும் பாவ வழிக்கும் படுகொலைகளுக்கும் இட்டுச் செல்லும் என்னும் கற்பிதம் அபத்தமானது. கடவுளை மறுத்தாலும் மற்ற சமயங்களைப் போன்றே உயிர்களிடத்து அன்பையும், அறத்தையும் வலியுறுத்தியே இவையும் அமைகின்றன../////

    சமணர்கள் நற் கருத்துக்களை தான் வலியுறுத்தி உள்ளார்கள் என்பதை உணரும் போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது. பொதுவாக மதங்கள் எல்லாமே நல்லவற்றை தான் சொல்கிறது. ஆனால் நாம் தான் துஷ்பிரயோகம் செய்கிறோம்.
    தன்னைப் போல் பிறரை நேசி என்கிறார்கள். யார் கேட்கிறா. சுயநலமாகவே வாழ்கிறோம்.
    என்தாயரின் மீது அன்பும் மரியாதையும் வைத்திருப்பது நியாயமே. ஆனால் பிறருடைய அன்னையர்களை நாம் எவ்வாறு அவமதிக்கலாம். அதே போன்று என் தாய் எவ்வாறு மற்றவர்களுக்கு தாயாக முடியும். அவ்வாறு தான் மதங்களையும் எண்ணி மறுக்காது வெறுக்காது வாழப் பழகினால். நிச்சயம் அமைதி காணும் உலகு.
    சமணர்கள் பற்றிய விடயங்கள் கருத்துக்கள் சுவாரஸ்யமகாவே உள்ளன .அணுவையும் ம் அதன் சக்திகளையும் பற்றி மேலும் அறிய அவா...நன்றி !
    முற்றத்தில் சம்மணம் கட்டி ஆற அமர இருந்து கொண்டு ஒரு குழந்தைக்கு வானில் நிலவைக் காட்டி உணவை பக்குவமாக ஒவ்வொரு பருக்கையாக நிதானமாக எடுத்து ஊட்டுவது போல் இருக்கிறது. தங்கள் கற்றுத் தரும் முறை. தங்கள் திறமைகள் எமக்கு பயன்படட்டும்.
    .நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் ..!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா.

      சிறுவயதில் இருந்த பல அறியாமைகள் நீங்கின.

      உங்களது பின்னூட்டத்தில் ஒரு தத்துவக் கருத்திருக்கிறது. இன்னொன்று சொல்லாய்வுக்குரியது.

      எனது வரும்பதிவுகளுக்குப் பயன்படும்.

      தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.

      Delete
  18. வரலாற்றைப் பார்க்கும் போது கடவுளைக் கற்பித்த சமயங்கள் தம் கடவுளை இவ்வுலகில் நிலைநிறுத்தப் பலிவாங்கிய உயிர்களின் எண்ணிக்கையே மிக அதிகம் கடவுளை மறுத்தாலும் மற்ற சமயங்களைப் போன்றே உயிர்களிடத்து அன்பையும், அறத்தையும் வலியுறுத்தியே இவையும் அமைகின்றன..என்பது உண்மை.// இந்தக் கருத்து மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கின்றது..

    //முக்கியமான தர்க நியாயங்களால் அவர்கள் காட்டுகின்ற தீர்வு மறுக்கப்படாததாக தன் தரப்பை நிலைநிறுத்த வேண்டும்.

    உலகத்தின் தோற்றத்திற்குக் காரணமாகத் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் கடவுள்தான் உலகைப் படைத்தார் என, சமணர் அது அணு என்னும் துகளினால் உருவாகிறது என்கின்றர்.
    உலகை அதில் உள்ள எந்தப் பொருளையும் பகுத்துப் பகுத்து நாம் உள்ளே செல்லுவோமானால் இறுதியாக மேலும் பகுக்க முடியாமல் எஞ்சுவதுதான் இந்த அணு.//

    இது ஆழ்வார்களின் பாசுரத்தில் வரும் "அணுவிலும் அணுவாய்" என்று பாடியிருப்பது ஒத்து வருகின்றதோ...ஆசானே! அது போல சைவ சித்தாந்தத்திலும் ஒரு சில சொல்லப்படுவதுண்டு...அதனால் தான் சமயக் கொள்கைகளில் ஒரு கால கட்டத்தில் சமண, சைவ, வைணவ சித்தாந்தங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்து அது வெறியாகவும் மாறியதோ...

    ஆக மொத்தத்தில் அறிவது....கடவுள் இருக்கிறார், இல்லை என்பதை விட " நம்பிக்கை" என்பதுதான் முக்கியமாகின்றதோ...அதுதான் ஒவ்வொருவரையும் வழி நடத்திச் செல்லுகின்றது அது வெறியாக மாறாத வரை....புரிந்து கொளல் இருக்கும் வரை...

    பிற சமயங்களின் கருத்துக்களையும் அறிய முடிகின்றது தங்களது பதிவுகளால். ஆர்வமாக இருக்கின்றோம் ...மிக்க நன்றி ஆசானே!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே வணக்கம்.

      பொதுவாக இந்தச் சமய இடுகையினைத் தொடங்கியபோதே நான் சொன்ன கருத்துத்தான்.

      இங்கு நான் பகிர்ந்து கொள்ளும் கருத்துகள் குறித்த எனது நிலைப்பாட்டை நான் கவனமாகத் தவிர்க்கிறேன்.

      இவை சமணரின் கருத்துகள். என் கருத்துகள் அல்ல.


      கடவுள் இல்லை என்று சொல்வதோ இனி தொடரும் பதிவுகளில் கடவுளைப் பற்றிச் சொல்ல இருப்பதோ அவரவர் கருத்துக்களே.

      எனக்குத் தனிப்பட்ட சில கருத்துகள் உண்டு. அதைச் சொல்வது இப்பதிவின் நோக்கமில்லை.

      அதைச் சொல்லவும் நான் விரும்பவில்லை.

      சைவமும் வைணமும் பௌத்த சமணக் கோயில்களையும், அவர்களின் கருத்துக்கள் பலவற்றையும், அவர்களால் வழிபடப்பட்டோரையும் தமதாக்கிக் கொண்டன.

      சைவம் வைணவம் என்றெல்ல, புதிதாகக் கிளைக்கும் எந்த ஒரு மதத்திற்குமான வேர்கள் பழமையில் இருந்தே புறப்படுகின்றன.

      அதனால்தான் சமணத்தில் விடைகூற முடியாத பல தடைகளுக்குச் சைவம் விடை கூற முடிந்தது.

      அதே நேரம், சமணத்தின் ஏற்கத்தக்க பல கருத்துக்களையும் வைதிக சமயங்கள் ஏற்றுக் கொண்டன.

      நீங்கள் சொல்வதுபோல் உண்டென்பதும் இல்லையென்பதும் தனிநபர் சார்ந்த விடயங்கள் என்பதே என் நம்பிக்கையும்.


      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  19. சமணக் கொள்கைகள்ள் குறித்துப் பல தகவல்கள் அறிந்துகோண்டேன் . பகிர்வுக்க்கு மிக்க நன்றி . சிறு வயதிலேயே சிந்திக்கத் தெரிந்திருக்கிறதே! வியப்பாக உள்ளது . பாராட்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கு முதலில் நன்றி ஐயா.

      சிறுவயதில் துணையானது வாசிப்பு மட்டுமே... அதுவும் பாடப்புத்தகங்களைக் கவனமாகத் தவிர்த்த வாசிப்பு.

      ஏதோ அன்று கேள்வி கேட்டது அதன் காரணமாய் இருக்கலாம்.

      தங்களைப் போன்றோரின் பாராட்டுகள் இன்னும் என்னை எழுத ஊக்கப்படுத்துவதாகும்.

      அதற்காய் மறுபடியும் நன்றி.

      Delete
  20. தெளிவாக விளங்க வைக்கும் பதிவு.
    த.ம.17

    ReplyDelete

  21. வணக்கம்!

    நல்ல சமணரின் நன்னெறியை ஆய்ந்துரைத்த
    வல்ல பதிவினை வாழ்த்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete