Friday 15 May 2015

கிழட்டுப்பசுவும் இளம்புல்லும்: காமத்தின் வரைவிலக்கணம் (2)



மாடு நமது மொழியில் நல்ல மாணவர்களுக்கு உதாரணமாகக் காட்டப்படுவது. முதல் மாணவன் என்பதற்கு இலக்கணம் சொல்லும் போது இந்த மாட்டினையும் ஒன்றாகச் சொல்வார்கள்.

மாடு புல்லை நன்றாக மேய்ந்து பின் ஓரிடத்தில் இருந்து அசையிடுவதைப் போல  ஆசிரியர் சொல்வதை நன்றாக உள்வாங்கிப் பின் அதனை அசையிட்டுப் பார்ப்பவன் நன்மாணாக்கன் என இலக்கண நூல்கள் சொல்லும்.


( அப்ப….நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது……? :) )

இங்கு, தனது காதல் உணர்வின் மேன்மையைப் பற்றிச் சொன்னவனைப் பார்த்தபோது தோழனுக்குத் தோன்றியதும் இந்த மாடுதான். ஆனால் அது ஒரு கிழட்டு மாடு.

அவன் சொல்கிறான்,

“ காதல் காதல் என்று அதனைப் பற்றி அறியாத என்னைப் போன்றோர் இகழந்து கூறுகிறார்கள் என்கிறாயே….!

விரும்பியதை எல்லாம் தன் தோளின் வலிமை கொண்டு பெறும் காளை நீ..!

ஆனால் பல் தேய்ந்து போன கிழட்டுப்பசு, மேட்டுநிலத்தில் விளைந்துள்ள இளம்புல்லை உண்ண முடியாமல் மெல்ல அதைத் தன் நாவால் தடவிப் புல்லின் சுவையை நினைத்துக் கொண்டே இன்புறுவது போல இன்று உன் நிலைமை ஆகிவிட்டதே அப்பனே…!

இப்படி உன்னை ஆக்கிய இந்தக் காதல் புதுமையானதுதான்.” 

என்கிறான் அவன்.

காதல் மிகவும் வலிமை உள்ள காளையைக் கிழட்டுப் பசுவாக மாற்றிவிட்டது.

மேட்டுநிலத்தை ஒரே மூச்சில் கடந்து ஏறி, இளம்புல்லை ஒரு கை பார்க்க அக்காளையால் முடியும்.

ஆனால், அதனால் அதனைச் செய்ய முடியவில்லை.

அது அப்புல்லை நாவால் தடவி இன்புறுகிறது.

இங்கு அக்கிழப்பசு இன்பம் அடைவது புல்லினைக் கடித்து அசையிட்டு அச்சுவையினை அறிந்ததால் அன்று.

உண்ண முடியாதபோதும்,  புல்லின் மேல் இருக்கும் ஆர்வமே பசுவிற்கு அந்த இன்பத்தினைக் கொடுக்கிறது. இளம்புல் மேல் எவ்வளவு ஆர்வம் இருக்குமோ அந்த அளவிற்கு அதற்கு அந்நினைவு தரும் இன்பம் அதிகமாகிறது.

அது ஒரு மனோபாவம் மட்டுமே.

இதைத்தான் நண்பன் சொல்லவருகிறான்.

“வெறும் நினைவினால் மட்டுமே உனக்குள் நிகழும் உணர்வு இது.
இதை அறிவினைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், இந்த இன்பம் உன் மனதினால் விளைவது என்பது தெரியும். அதனால் போலியான, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளும் இந்தப் போதையை விட்டுவிட்டு வெளியே வா” என்பதுதான் அவன் சொல்ல வருவதன் உட்பொதிந்திருப்பது.

அவளைப் பார்த்தபோதே அவன் நினைத்திருந்தால் தான் விரும்பிய அந்தப் பெண்ணைக் கையோடு கூட்டிவந்திருக்கலாம். அல்லது தூக்கி வந்திருக்கலாம்.

ஆனால் அவனால் அது முடியவில்லை.

அவனது வலிமை அவள்முன் செல்லுபடியாகவில்லை.

காதல் காதல் என்று சொல்லித் தன் வலிமையெல்லாம் அவள் நினைவால் இழந்து போய்ப் புலம்பும் ஒருவனைக் கிழப்பசு இளம்புல்லை மேய்வதனோடு ஒப்பிட்ட நண்பன் புத்திசாலிதான்.

சென்ற பாடலைப் பாடிய அதே மிளைப்பெருங்கந்தர் என்பவர் பாடிய பாடல்தான் இதுவும்,


காமம்  காமம் என்ப காமம்
   
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
   
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
   
மூதா தைவந் தாங்கு
               
விருந்தே காமம் பெருந்தோ ளோயே

                                       -மிளைப்பெருங் கந்தன்.             
                                       -குறுந்தொகை - 204


தோழன்  காதல் வயப்பட்ட தலைவனைப் பார்த்துச் சொல்கிறான்...


 பெரும் தோளோயே!யாரையும் வெல்லும் வலிமையான தோள்களை                         உடையவனே!

காமம் காமம் என்பகாதல் என்பதை அறியாமல் நான் இகழந்து                             கூறுவதாகக்    கூறுகிறாயே.!

 காமம் – ( நீ சொல்வது போல்) உன் காதல்,

அணங்கும் பிணியும் அன்று – ( மனதை) வருத்துவதும் நோய்செய்வதும்                                           இல்லைதான்.

முதை சுவல் கலித்தபழைய மேட்டுநிலத்தில் துளிர்த்த,

முற்றா இளம் புல்வளராத சிறு புல்லை,

முது – ( பல்தேய்ந்து போன ) கிழப் பசு,

தைவந்தாங்கு – (நாவால்) தடவி மகிழ்ச்சி அடைவதைப்போல,

நினைப்பின் -  நினைவில் இன்பத்தைத் தரும்,

காமம் விருந்துஇந்தக் காதல் புதுமையானதுதான்.

இப்படிச் சொன்னாலும் தலைவனின் நோய் அவளன்றித் தணிவதில்லை என்பது தோழனுக்குத் தெரியும்.

என்ன  சொன்னாலும் கேட்காத தலைவனுக்கு, அவன்தானே உதவ வேண்டும்?

பார்ப்போம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn3.gstatic.com/

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

41 comments:

  1. தொடர்கிறேன் சகோ...தம 3

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் சகோ.

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    ‘கிழட்டுப்பசுவும் இளம்புல்லும்’ காதல் மிகவும் வலிமை உள்ள காளையைக் கிழட்டுப் பசுவாக மாற்றிவிட்டது.

    காதல் காதல் என்றவாறு காலத்தைக் கழித்து தன் வலிமையெல்லாம் கிழப்பசு இளம்புல்லை மேய்வது போல இன்னும் அலைந்து கொண்டுதானே இருக்கிறார்கள். பருவம் அப்படி!

    என்ன சொன்னாலும் தலைவன் கேட்கப் போறது இல்லை...தோழன் ஊதுற சங்கை ஊதி வைக்க வேண்டும் தானே!

    நன்றி.
    த.ம. 3.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      Delete
  3. பழகிய பகையும் பிரிவு இன்னாதே முகை ஏர் இலங்கு எயிற்ற இன் நகை மடந்தை சுடர் புரை திரு நுதல் பசப்ப தொடர்பு யாங்கு விட்டனை
    எனம் நற்றினை அறியிரோ,,,,,,,,,,,
    தலைவன்நன்மை நாடும் தோழன்,
    காதல் காதல் என்று சொல்லித் தன் வலிமையெல்லாம் அவள் நினைவால் இழந்து போய்ப் புலம்பும் ஒருவனைக் கிழப்பசு இளம்புல்லை மேய்வதனோடு ஒப்பிட்ட நண்பன் புத்திசாலிதான்.
    ஆனால் பாருங்கள் ஊமையாரே,,,,,,,,,,,,,,,
    தை வந்து ஆங்கு நினைப்பின் காமம் விருந்து,
    இவ் வரிகள் உண்மைதானே,,,,,,,,,,,
    நினைவில் இன்பத்தைத் தரும் இந்த காதல் புதுமைதானே,,,,,,,,,,,,,,,,
    அவன் பாருங்கள் பெண்மையை விட மேன்மையாக தன் காதல் போற்றும் நிலை, அவனால் எல்லாம் முடியும், இருப்பினும் தன் காதலி நலன் நாடும் அவன் செயல் நன்று என்றே கூறலாம்.
    “வெறும் நினைவினால் மட்டுமே உனக்குள் நிகழும் உணர்வு இது.
    இதை அறிவினைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால், இந்த இன்பம் உன் மனதினால் விளைவது என்பது தெரியும். அதனால் போலியான, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளும் இந்த போதையை விட்டுவிட்டு வெளியே வா” என்பதுதான் அவன் சொல்ல வருவதன் உட்பொதிந்திருப்பது. இது போதையா? அவனின் அடக்கம் இல்லையா?
    ............. இடைச்சுரத்து எழிலி உறைத்தென, மார்பின்
    குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு
    நறுந் தண்ணியன் கொல் நோகோ யானே
    அவன் வரவு கண்டு மகிழ்வாள்
    என்ன சொன்னாலும் கேட்காத தலைவனுக்கு, அவன்தானே உதவ வேண்டும்?

    பார்ப்போம். தலைவன் சொல்லும் பதிலை தாங்கள் சொல்ல வரும்பதிவுக்காய் காத்திருக்கிறோம். நன்றி.


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பேராசிரியரே..!

      தனிப்பதிவாகும் அளவிற்குப் பின்னூட்டம்....!

      இங்கும் பாருங்கள்.

      அவன் மார்பு சுரம்.

      அவள் காதல் எழிலியும், சாந்தும் ஆயிற்று...!

      தாங்கள் தொடர்வதற்கு நன்றி!

      Delete
  4. உதாரணம் கூறுவது போல ஆரம்பித்து, கவிதையை உட்கொணர்ந்து அத்துடன் செய்தியையும் பகிர்ந்தவிதம் நன்று. படிக்கப் படிக்கத்தான் மென்மேலும் விளங்கும் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  5. வணக்கம் அண்ணா..
    பல நாட்கள் வலைத்தளம் வரவில்லை. விட்டுப்போனப் பதிவுகளையும் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா!

      நீங்கள் ஓய்வில் இருப்பதால் உங்களின் வேலையில் பாதியை நான் செய்து கொண்டிருக்கிறேன். :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  6. இந்தப்புதுமையான காதலின் நாயகி கவிதாவாக இருக்கும் போல தெரிகிறது கவிஞரே
    தமிழ் மணம் ஆறு மனமே ஆறு
    இன்று இரண்டு ஓட்டுகள் அளித்துள்ளேன் கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. கவி தந்ததால் கவிதாவாக இருக்கும் என்கிறீர்களோ:))

      நன்றி.

      Delete
  7. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!

      Delete
  8. நண்பன் நிச்சயம் உதவுவான் ,ஏழாவது வாக்கு போட்டு நான் உதவுற மாதிரி :)

    ReplyDelete
  9. அழகான விளக்கவுரை .தொடர்கின்றேன்

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா.. அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. பண்படுத்தப்படாத நெஞ்சம் மேட்டு நிலத்திற்கு ஒப்பாகும் என்பதை அறியத் தந்தமைக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா

      உங்களின் பார்வையும் அருமை..!

      நான் இப்படிச் சிந்திக்காமல் போய்விட்டேனே :)

      நன்றி ஐயா!

      Delete
  12. கிழட்டுப் பசுவை அந்த தோள் வலிமையுடைய இளம் காளைக்கு ஒப்பிடுதல் நியாயமா? ரொம்ப பரிதாபமாக இருக்கிறது ம்..ம்.ம்..ம் பார்ப்போம் தலைவன் என்ன தான் சொல்கிறான். என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன். தங்கள் அடுத்த பதிவிற்காக. பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  13. தானாக தணிந்தால் தான் உண்டு... அதுவும் சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் டிடி சார்.

      நன்றி

      Delete
  14. எனக்கு கவிதையின் உட்பொருள் விளங்கிற்று. இருந்தாலும் ஏனோ ஒரு பழைய திரைப்படக் காட்சி நினைவில் ஓடியது’ படம் நாம் இருவர். அந்தக் காலத்தையது. சாரங்கபாணி அறுபது வயதானவர். ஒரு 18 வயதுக் குமரியை இரண்டாம் தாரமாக்க விரும்புகிறார். பந்துலு அவர் மகன் இது அடுக்காது என்பார். அதற்கு சாரங்கபாணி எனக்கு அறுபது வயதானால் நான் நாற்பது கிழவியையா மணம் முடிக்க வேண்டும் என்று கேட்பார். கிழப்பசு துளிரும் புல். இவை ஏற்படுத்திய எண்ண ஓட்டம் ....!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நீங்கள் சொல்வது சரிதான்.

      இந்தத் தலைப்பு இப்பாடலைவிட நீங்கள் சொன்ன இக்கருத்திற்குத்தான் அதிகப் பொருத்தமுடையதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

      தங்களின் எண்ணவோட்டத்தை அறியத் தந்தமைக்கு நன்றி.

      Delete
  15. பழந்தமிழ் இலக்கியங்களை சுவைப்பதும் அதனை விளக்கி எழுதும் தங்களின் அருமையான நயமும் கண்டு கரைகாண களிப்பினை , பதிவுதோறும் அடைக்கிடறேன் என்றால் அது மிகை யல்ல! தங்கள் பணி தொய்வின்றி தொடர வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  16. மிக அருமையான பாடல்! சிறப்பான விளக்கம்! உதாரணத்திற்கு சொன்ன கிழட்டுபசுவின் புல் தின்னும் ஆசை மிகப் பொறுத்தமானது! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. தளிர் . சுரேஷ்

      Delete
  17. விளக்கவுரை நன்றாக இருக்கிறது.......

    ReplyDelete
  18. தெளிவான விளக்கங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி...தொடர வாழ்த்துக்கள்...

    வாழ்க வளமுடன்....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  19. நேற்றே வந்திருக்க வேண்டும் ...
    தாமதம் ஆகிவிட்டது..
    தம +

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன தோழர்.

      வருகையே மகிழச்சிதான்.


      எப்போதானாலும்.

      நன்றி

      Delete
  20. ஆசிரியர்களிடம் பாடம் கேட்பதற்கும், நண்பர்களிடம் கேட்பதற்கும் இதுதான் வித்தியாசம் என நினைக்கிறன் அண்ணா:) மொழியில் ஒரு இலகு தன்மை கூடுதலாய் ரசனையான விளக்கம். இதுக்குத்தானே group study பண்ணுறது:) பசியை தணிக்காது, மேலும் தூண்டும் அந்த இளம்புல் என்பதறியாத அந்த காளை பாவம் தான்:)

    ReplyDelete

  21. வணக்கம்!

    இன்பக் குறுந்தொகை ஈந்த கவிதைகள்
    என்றும் இனிக்கும் எனக்கு!

    ReplyDelete
  22. முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் - அழகான சொல்லாட்சி! முது ஆ என்பது முதா என்று தானே இருக்கவேண்டும்? மூதா என்று வருவதற்கான காரணம் அறிய ஆவல். தமிழிலக்கியத்தைச் சுவையாக அறிமுகம் செய்வதற்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete