Sunday 12 April 2015

புற்றைவிட வேகமாகப் பரவுவதா இந்நோய்?



அறிவைப் பெருக்கும் வழிகள் என்னும் பதிவில் என்னடா திடீரென்று தத்துவக் காற்று அடித்தது என்று அதைப்படித்தவர்கள்  ஐயுற்றிருக்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. மனதில் தோன்றும் உணர்வுகள் இப்படி என்றும் இன்ன தன்மையை உடையது என்றும் காட்டமுடியாதை அகம் என்று கூறுகிறார்கள். அப்புறம் எப்படி அதைக் காட்டமுடியும்? சவாலான விஷயம்தானே அது?

ஆனால், சங்ககால அகப்பொருள் பற்றிய பாடல்களில் அப்படிக் காட்ட முடியாத உணர்வுகளைக் காட்ட முற்பட்டிருக்கிறார்கள். அதற்குத் துணை செய்வதாய் அமைந்தனவே முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் என அவர்கள் திட்டமிட்டுக் கொண்டவை.

பொதுவாக இந்த உலகில் இருப்பனவற்றைக் காட்சி சார்ந்தது என்றும் கருத்துச் சார்ந்தது என்றும் பிரிக்க முடியும். சங்கப் புலமை காட்சியைத் துணை கொண்டு கருதலை உணர்விக்கும் வழியைக் காட்டுகிறது.
காட்சி சார்ந்தனவற்றை காட்டமுடியும். அல்லது அதன் தன்மையை மொழியைக் கொண்டு விவரிக்க முடியும்.

ஆனால் கருத்துச் சார்ந்தவற்றை எப்படிப் புலப்படுத்துவது?

மனதில் உள் நிகழும் அடுக்கடுக்கான மாற்றங்களை, விவரிப்பிற்கு அப்பாற்பட்டவற்றை, மொழியின் சாவிகள் கொண்டு திறக்க முடியாக் கதவுகளை, வெளிப்படுத்த முடியாக் காட்சியை எப்படிக் காட்டுவது?
ஒரு கவிதையை நாம் படிக்கலாம். படிக்கின்ற எல்லோருக்கும் அது கவிதைக்குரிய உணர்வினைத் தோற்றுவித்துவிடுவதில்லை. சிலர் ‘ஆஹா’ என்று சிலாகிப்பதைச் சிலர் ‘அதில் என்ன இருக்கிறது’ என்று கேட்கலாம்.

தொல்காப்பியம் இதை எளிதாகச் சொல்லும்,

உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே! ”

புலன்சார் அனுபவங்களை எப்படி விளக்கிச் சொல்ல முடியும்?

இசையை, தனக்குப் பிடித்த பாடலைக் கேட்டு மெய்மறந்து இருக்கின்றவனிடம் “இதில் உன்னை மறப்பதற்கு என்ன இருக்கிறது… நானும் கேட்கிறேன்… நான் என்னை மறக்கவில்லையே” என்று அவ்வனுபவத்தை அடையாதவனைக் கேட்டால்..உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே…என்பதுதான் அதற்கான விடை.

சங்ககாலப் புலவர்கள் பாடலின் பின்புலத்தில் வரும் நிலத்தையும், பொழுதையும், கருப்பொருட்களையும் வைத்துக் கொண்டு இந்த உணர்வுகளைச் சொல்ல முற்பட்டார்கள். நாம் சென்ற பதிவில் பார்த்த அளவைகளில் இவை காட்சி அளவை. அதைக்கொண்டு புலவன் உணர்த்த வருவது கருதல் அளவை.

மனதில் காதல் தோன்றியதுமே அதை பிறர் அறியாமல் மறைக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

மனதில் அந்த மாயப்பந்து  எறியப்பட்டதும் உள்ளே அது மாறி மாறி மோதிக்கொண்டே இருக்கிறது.

எப்படியாவது பிடித்துக் கட்டுக்குள் வைக்கப் போராடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

எப்படியாவது அவளிடம் தன் அன்பைச் சொல்லியாக வேண்டும்.

நினைக்கவும் மறக்கவும், மறைக்கவும், வெளிப்படுத்தவும் முடியாத ஒரு நிலை.

அவளின் நினைவுகள் அவனுக்குள் தகிக்கின்றன.

மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமாய்ப் போய் அவன் அவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறான்.

இதற்கு மேல் தாங்கமுடியாது.

இனி என்னதான் செய்வது..?

நண்பனிடம் சொல்கிறான் அவன்.


அப்பா…நண்பனே..!
இனி என்னால் முடியாது…!
நான் கொண்ட இந்நோயை என்னால் மறைக்க முடியாது..!
வெயில்காலத்தில் நண்பகலில் 
வெட்டவெளியில் கிடக்கும் பாறைமீது
வெண்ணை உருண்டையை வைத்து,
கவனமாகப் பார்த்துக்கொள் என்று,
கையில்லாத வாயில்லாத
ஒரு முட ஊமையிடம் சொல்லிச்சென்றால்,
அவனால்
என்ன செய்ய முடியும்…?
பாறையின் மருங்குகளில்
கண்முன் கரைகின்ற
அந்த வெண்ணை உருண்டையைக்
காக்கும் வழியற்றுப் பார்ப்பதன்றி…!!!


என்று தன் நிலையைச் சொல்கிறான் அவன்.

கையில்லாத வாயில்லாத ஒருவன் உருகும் வெண்ணையைச் சுடுபாறை மீது வைத்துக் காவல் காத்தால் எப்படி இருக்கும்..? கண்முன்னே உருகுகின்ற காக்கவேண்டிய ஒன்றைக் காக்கும் வழியற்றுக் கண்முன் கரையும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவனது இயலாமைகள் எப்படி இருக்கும்..?

காதலின் வெளிப்படுத்த இயலாத் தகிப்பைத் தன்னுள் கொண்ட அவன் நிலை அப்படி இருக்கிறதாம்.


இனிப் பாடல்,

இடிக்குங் கேளிர் நுங்குறை யாக

நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன் தில்ல

ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்

கையில் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரிதே.

                                                                                                                           58, குறுந்தொகை
வெள்ளிவீதியார்.


தொடர்பொருள்.

இடிக்கும் கேளிர் – (நான் சொன்னால்) நீ திட்டத்தான் போகிறாய்
நும் குறையாக – நீ சொல்லப்போவது போல்,
நிறுக்கல் ஆற்றின் – அவள்மேல் ஆன காதலை என்னால் நிறுத்த முடிந்தால்
 நன்று மன் – (அது) எனக்கும் மிக நல்லதுதான்.
தில்ல – (ஏன் நானே கூட) விரும்புவதும் அதைத்தான்!
ஞாயிறு காயும் – ( ஆனால் ) சூரியன் சுட்டெரிக்கும்,
வெ அறை மருங்கில் – சுடுகின்ற பாறையின் மேல்
கைஇல் ஊமன் - கையில்லாத ஊமை ஒருவன்
கண்ணின் காக்கும் –கண்ணினாலே காக்கக் கூடிய,
வெண்ணெய் உணங்கல் போல – காய்கின்ற ( அதனால் அவன் கண் முன் கரைகின்ற ) வெண்ணையைப் போல
இ நோய் – (எனக்கு அவளால் நேர்ந்த) இந்த நோய்,
பரந்தன்று – என்னில் முழுக்கப் பரவிவிட்டது.
நோன்று கொளற்கு அரிது - அதை என்னால் தாங்க முடியவில்லை.
   
காதல் பாறையாய் இருப்பவர்களையும் வெண்ணையாய் மாற்றிவிடுகிறது.

தன்னுள் அதை வைத்துப் பாதுகாக்கவும் அவன் கைகள் அவனுக்கு உதவவில்லை.

பிறரிடமிருந்து உதவி கோரவும் அவன் நா எழவில்லை.


சுடுபாறைமேல், கையில்லாத ஊமை கண்ணினால் காக்கும் வெண்ணை இன்றும் காக்கும் வழியற்றுக் கரைந்துகொண்டுதான் இருக்கிறது.

உறைந்த பாறைகளும் உருகும் வெண்ணையும் காதலும் உயிரும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. 



படம் உதவி - நன்றி https://encrypted-tbn0.gstatic.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

45 comments:

  1. தமிழ் மணம் இரண்டு

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மின்னல்வேக வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. பேச முடியாத முடமான ஊனத்துடன் உவமைக்காக ஒப்பிட்ட வெண்ணை உருண்டை அற்புதம் கவிஞரே...
    இன்றை கால காதலனின் நிலையை எண்ணிப்பார்த்தேன் ? ? ?

    ReplyDelete
    Replies
    1. உவமையைக் கொண்டு உணர்ச்சிகளைக் காட்டுதல் இதுதான் இந்தப் பாடல்களின் ரகசியம்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. "புற்றைவிட வேகமாகப் பரவுவதா இந்நோய்?
    காம நோயின் பிணிக்கு
    இனிக்கும் மருந்தாய் அமையும் வகையில்
    வெள்ளி வீதியாரின் பாடலை தங்களுக்கே உரிய வகையில்
    முப்பொருள் பற்றிய சிறப்போடு விளக்கி சொன்ன விதம்
    உருகிய வெண்ணெய் உருகி ஊற்றாய் பெருக்கெடுத்துமுடவனுக்கும் முகர்ந்து அளித்தது போல் இருந்தது அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு
    wwww.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    தங்களின் வலைத்தளம் பற்றியவர்கள் அரை இலட்தத்தைத் தாண்டியதற்கும் விரைவில் ஓர் இலட்சத்தைத் தொடுவதற்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    ‘ஊமைக்கனவுகள்’ ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரி -என்ற குறுந்தொகை வெள்ளிவீதியார் பாடலுக்கு “ உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே! ” என்ற தொல்காப்பியர் சொன்னதற்கு... தாங்கள் உணர்ந்ததை அனைவரும் உணர்கின்ற வகையிலே அருமையாக விளக்கி இருந்தீர்கள்!

    காதல் பாறையாய் இருப்பவர்களையும் வெண்ணையாய் மாற்றிவிடுகிறது- என்று மனசு மத்துக்குள் கிடந்த தயிராய் தத்தளிக்கிறது என்பதை அழகாய்ச் சொல்லி அசத்தி இருந்தீர்கள்.

    நன்றி.
    த.ம. 4.




    ReplyDelete
    Replies
    1. அரைலட்சமா......!!!!!

      உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...!

      தமிழ் பற்றி மட்டும் பதிவிடும் எனக்கு ஊக்கமளிக்கும் பார்வையாளர்களுக்குத்தான் அய்யா வாழ்த்துகள் எல்லாம்...!

      இது அதிகமாய் இருந்தாலும் குறைவாய் இருந்தாலும் உங்களைப் போன்றவர்களின் வருகையும் அறிவுரைகளும் எனக்கு என்றும் வேண்டப்பெறுவது.

      ஏதேனும் இதனால் பெருமை எனில் அது என்னை இத்தளத்தில் கொண்டுவந்தவர்க்கே..!

      சிறுமை எனில் அது என்னால் ஆனதாய் இருக்கும்.

      நீங்கள் ரசிக்கும் உவமைதான் சங்க இலக்கியத்தின் உயிராய் இருப்பது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  5. தகிக்கும் நினைவுகள் தானாக அடங்கினால் தான் உண்டு... அதுவும் ரொம்பவே சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. இது தொடர்பான திருக்குறள் ஒன்றுடன் வருவீர்கள் என்று நினைத்தேன் தனபாலன் சார் :))

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!!

      Delete
  6. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!

      Delete
  7. காதல்
    (இலைச்) சோற்றில் முழுப்பூசணிக்காய்
    (கையில்லாத வாயில்லாதவான் அருகில்) பாறையில் வெண்ணெய்
    :))
    எப்படி அழகாக உவமை பயன்படுத்தி இருக்கிறார்கள்..சிலிர்க்க வைக்கிறது. சங்கப்பாடல்கள் 'உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே', அனைவரும் அதன் இனிமையை உணர உங்கள் பதிவுகள் உதவுகின்றன அண்ணா. நன்றி.

    ReplyDelete
    Replies

    1. சங்க இலக்கியங்ளை மொழிபெயர்த்தும் எளிமைப்படுத்தியும் வழங்கும் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும மிக்க நன்றி சகோ.
      இவை என்னை இன்னும் ஊக்கப்படுத்த உதவும்.

      நன்றி.

      Delete
  8. வெண்ணெய் உருகுவதைக் காதலாய் கருதியே
    வண்ணத் தமிழில் வடித்த கவிதேனாய் பாகாய்
    நினைவிலே நின்றது சுவைசொல்லில் அடங்கா
    சுனைபோல் மிளிர்ந்து சுரந்தது !
    அருமையான பதிவு விளக்கமான விளக்கவுரை உணர்வுகளை அப்படியே கொண்டு வந்து கொட்டி யுள்ளீர்கள் உங்களுக்கே உரிய பாணியில் என்ன சொல்ல மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இவற்றை கற்றுக் கொள்ள மேலும் தாருங்கள். தமிழின் இனிமைகளையும் உங்கள் ஆற்றல் அறிவையும் கண்டு மலைக்கிறேன்.viju ....வாழ்த்துக்கள் மேலும் தொடர
    வாழ்க வளமுடன் .....!

    ReplyDelete
    Replies
    1. வெண்பா உடன்வருகை வெல்லும் தமிழெடுத்(து)
      அன்பால் அளிக்கும் அமுதினிமை - என்பாலும்
      வந்து கருத்திட்டு வாழ்த்தும் உமதன்பு
      தந்ததமிழ் என்றும் சுவை.

      நன்றிம்மா!

      Delete
  9. வெள்ளைப் பனிமலை உருகுவதைப் போல் ,வெள்ளி வீதியாரின் உவமை என்னையும் உருக வைக்கிறதே :)எப்படி ,எப்படி ,அதுவும் அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு உவமை ?

    ReplyDelete
    Replies
    1. வெள்ளிப்பனிமலையின் மீதுலவு வோம் என்னும் பாரதியின் பாடல் தோன்ற வில்லையா.. :))
      இன்னும் நிறைய உவமை இருக்கின்றன ஜி..!

      எனக்கென்னமோ நீங்கள் தமிழிலக்கயம் நன்கு படித்தவர் என்று தோன்றுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. தமிழின் இனிமையும் தங்களின் மொழி வளமையும் போற்றுதலுக்கு உரியது நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  11. 'உருகுதே...மருகுதே ' என்ற இந்த காலப் பாடலும். வெள்ளி வீதியாரின் சங்க காலப் பாடலுக்கும் எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன பாருங்கள் . அதே தமிழில் எழுதப்பட்ட பாடல்கள் தான் ஆனால் ?
    இன்றைய வளரும் தலைமுறைகளுக்கு இது போன்று சங்கப்பாடல்களை விளக்கி மரபின் பெருமையை உணர்த்த வேண்டும். அதற்கு தங்களின் இதுபோன்ற பகிர்வுகள் பெரிதும் உதவும் தொடருங்கள். பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் சகோ.
      பண்டைய பாடல்களுக்கு உள்ளே இருந்தது இன்றைய பாடல்களில் வெளியே இருக்கிறது.

      சங்கப்பாடல்களைப் பொருளினை எளிமைப்படுத்தி அதனை எளிய விதத்தில் அணுகும் முறையைக் காட்ட வேண்டும்.

      சொற்களின் விளக்கங்களை அகராதிகள் தரலாம்

      ஆனால் அதன் சேர்க்கையில் நிகழும் பொருட்புலப்பாடு, வாசிப்பவனின் அனுபவம் சார்ந்தது.

      இது ஒருவரின் அனுபவம்.

      அதை உள்வாங்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அனுபவங்களை வாசிப்பு தரலாம். தரவேண்டும்.

      அதற்கு முதலில் வாசிக்கும் அளவிற்குச் சங்கப் பாடல்கள் எளிமைப் படுத்தப்படுத்தவும், இதன் பால் கவனத்தை ஈர்க்கவும் என் சிறு முயற்சி இது அவ்வளவே..!

      தங்களைப் போன்றோரின் வருகைக்கும் நல்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

      Delete
  12. அய்யா, வணக்கம்.
    தீரா உளக்காதல் திண்தலைவன் வெண்ணையொக்க
    பாராத் தலைவி கனல்மூட்ட – வாராத
    வாயும் மிருகைகளும் யாதுசெய்யு மக்காதல்
    நோயும் மறையா னிடத்து.

    வருந்தினும் இறுதியில் தலைவன் தலைவியை மணம் கொள்வான். எனினும், கன்னித்தமிழில் உவமைகளைக் காணும் போதெல்லாம் அதனை எண்ணி உள்ளம் உவப்படைவதில் வியப்பில்லைதானே அய்யா. தங்களின் உரையும் நயம்பட சிறந்து உள்ளது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோ வெண்பாவில் மிகத்தேர்ந்து விட்டீர்கள்....!
      இவ்வளவு பெரிய பதிவினை நான்கு வரி வெண்பாவிற்குள் அடக்குதல் சாதாரணமானதன்று.
      வாழத்துகள்.
      இதற்கு நான் எப்படிப் பதில் வெண்பா தருவது எனத் திகைத்து நிற்கிறேன்.

      ஆல விதையடக்கும் ஆல்போல் குறுவெண்பா
      கோல மடக்கியுள் கொள்பொருளில் - நீலக்
      கடல்விரிந்த காட்சிக் கதைவிரியும் உம்பா
      உடல்சுருக்கிக் காட்டும் உயிர்.

      அருமை கவிஞரே..!

      மரபுலகில் உயரிய இடம் உங்கட்குக் காத்திருக்கிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. ஆஹா! என்ன ஒரு உவமை! எப்படித்தான் இப்படியெல்லாம் மனதில் தோன்ருகின்றதோ இந்தக் கவிஞர்களுக்கு! ம்ம் ஆனால் உண்மை...காதல் பாறையாக இருப்பவர்களையும் வெண்ணையாய் உருக வைக்கும்தான்....

    அருமை! அக்காலம்....இக்காலம்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆசானே..
      பாறை வெண்ணையாகும் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  14. புற்றைவிட வேகமாகப் பரவும் நோய் இந்தக் காதல் நோய்தான்....ஆனால் இன்பமான நோய் இல்லையா? ஆசானே?!!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஆசானே.

      இன்பமான துன்பம் அல்லவா :))

      Delete
  15. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி!
      தங்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் உரித்தாகட்டும் திரு. யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!!

      Delete
  16. வெள்ளிப்பனிமலை என்பது இதுதானோ....!!!

    ReplyDelete
    Replies
    1. ஆனால் உலவ முற்பட்டால் சுட்டுவிடுமோ வலிப்போக்கரே :)

      Delete
  17. பதிவை மின்னூலாக படித்தால் நன்றாக இருக்கும் விரைவில் வெளியிடவும்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி தோழர்.

      Delete
  18. தங்களின் வாழ்த்திற்கும் அருந்தமிழ்க் கவிக்கும் நன்றி அய்யா!

    ReplyDelete
  19. அந்தப் பதிவுக்கு பின்னூட்டமாக கருத்துப்பிழையும் காட்சிப்பிழையும் என்றொரு சுட்டி கொடுத்திருந்தேனே.!
    /
    கையில்லாத வாயில்லாத ஒருவன் உருகும் வெண்ணையைச் சுடுபாறை மீது வைத்துக் காவல் காத்தால் எப்படி இருக்கும்..? கண்முன்னே உருகுகின்ற காக்கவேண்டிய ஒன்றைக் காக்கும் வழியற்றுக் கண்முன் கரையும் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் அவனது இயலாமைகள் எப்படி இருக்கும்..?/
    அமாவாசை இருளில் இருட்டறையில் இல்லாத கருப்புப் பூனையைக் கணில்லாதவன் தேடுவது போல் இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சார்.
      அந்தப் பதிவைப் படித்துவிட்டேன்.
      பின்னூட்டம் இட்டு வெளியிடும் தருணம் எல்லாம் போய்விட்டது.
      மீண்டும் அவ்வளவையும் அடிக்க வேண்டும் என்று மலைத்து வந்துவிட்டேன்.

      நீங்கள் சொல்லும் உவமை....

      குருடனுக்கு அமாவாசையானால் என்ன பூனை கருப்பாக இருந்தால் என்ன :))
      தங்கள் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  20. “ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
    கையில் ஊமன் கண்ணின் காக்கும்
    வெண்ணெய் உணங்கல் போல”
    இதுவரைக் கேள்விப்படாத அருமையான உவமை.
    மனதினுள் தகிக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாத ஊமை,, கண் முன்னே கரைந்தோடும் வெண்ணெயைக் காப்பாற்ற இயலாத கையில்லாதவன் எனக் கருத்தை உள் வாங்கிக் கொள்ள இந்த எளிய உவமை உதவுகிறது.
    காதல் கருங்கல் பாறையாய் இருப்பவர்களையும் வெண்ணெயாய்க் கரையச் செய்து விடுகிறது என்று அதிகப்படியாய் நீங்கள் கொடுக்கும் விளக்கமும் வாசிப்பின்பத்தை அதிகப்படுத்த உதவுகிறது.
    அருமையான பாடல்களை எங்களுக்கு எளிதில் புரியும்படியாக அறிமுகப்படுத்தும் உங்கள் நற்பணிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் நாங்கள்! உங்கள் பணி தொடர வேண்டும். மிகவும் நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றிக் கடன்..........என்று பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீர்கள் சகோ.

      தமிழை இத்தனைபேர் ரசிக்க இருக்கிறார்கள் என்கிறபோது படித்ததைப் பகர்வதில் எனக்கல்லவா மகிழ்ச்சி....!

      நானல்லவா உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      நன்றி.

      Delete
  21. Replies

    1. வணக்கம்!

      பாறைபோல் நெஞ்சன்! பனிபோல் உருகுகிறான்
      சூறைபோல் காதல் சுழன்று

      Delete
  22. காதல் பாறையாய் இருப்பவர்களையும் வெண்ணையாய் மாற்றிவிடுகிறது.

    தன்னுள் அதை வைத்துப் பாதுகாக்கவும் அவன் கைகள் அவனுக்கு உதவவில்லை.

    பிறரிடமிருந்து உதவி கோரவும் அவன் நா எழவில்லை.

    வார்த்தைக்கள் மட்டும் கரைந்தென்ன லாபம்,,,,,,,,,,,,,,,,,
    கல்லும் கரையுமா? காதலில் ஆச்சிரியம், எனக்கு புரியல.
    தாங்கள் பாடல் விளக்கி விதம் அருமை.
    தாமத வருகை என்னுடையது. நன்றி.

    ReplyDelete
  23. கையில்லாத ஊமை ஒருவன்,கண்ணினாலே காக்கக் கூடிய..., காய்கின்ற வெண்ணையைப் போல...காதலின் நிலையை எப்படியாக உவமை மூலம் சொல்லி இருக்கிறார்கள். அதை தாங்கள் எங்களுக்கு புரிந்து கொள்ள அழகாய் பதிவு செய்து உள்ளீர்கள். சகோ. காலம் கடந்து வந்து இருக்கிறேன் மன்னிக்க.தம +1

    ReplyDelete