Wednesday 22 April 2015

உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் – ( 2 )


அது திண்ணைப் பள்ளிக் கூடங்களில் இருந்து தமிழ் மெல்ல மெல்ல நவீனக் கல்வி மரபிற்குள் நுழைந்த காலம். பதினெட்டாம் நூற்றாண்டு. சுவடிகளில் இருந்து தமிழ்க்கல்வி, பாடப்புத்தகங்களுக்கு நகர்ந்த காலகட்டம். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் அப்பொழுது என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ அதன் தாக்கத்தினைப் பாடப்புத்தகம் என்று ஒன்று முதன் முதலில் தமிழுக்கு உருவானபோது காண முடிந்தது என்பதற்கு உதாரணம் தமிழ் எழுத்துகள் 247 என்ற வழக்குதான்.


இதை முதன்முதலில் பதிவுசெய்த இலக்கண நூல் முத்து வீரியம்.

இதன் ஆசிரியர், தமிழில் அறியப்படுகின்ற ஆளுமைகளாய் இருக்கின்ற மறைமலையடிகள், ந.மு.வேங்கடசாமி நாட்டார், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இவர்களுடைய ஆசிரியர்களின் ஆசிரியர்.

பெயர் முத்துவீர உபாத்தியார் .

அவர்தான் தான் எழுதிய இலக்கண நூலில், முதன்முதலாகத் தமிழின் மொத்த எழுத்துகள் 247 என்று பதிவு செய்தவர்.

முத்துவீர உபாத்தியார் திருச்சி உறையூரைச் சேர்ந்தவர். காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. பழைய இலக்கண மரபின் கடைசி எச்சம் என இவரைச் சொல்லலாம்.

இவர் கொல்லர் பிரிவைச் சார்ந்தவர்.

அதனால் கம்மாள வாத்தியார் என்று அழைக்கப்பட்டார்.

இந்தச்சாதி அடையை இங்குச் சொல்லக் காரணம், மரபு வழிப்பட்ட தமிழ்க்கல்வி ஆங்கிலேயர் வருகைக்கு முன், குறிப்பிட்ட சாதி சார்ந்து இயங்கவில்லை  என்ற எனது ஐயத்தினால்தான். இதை இன்னும் ஆழமாகச் சென்று பார்க்க வேண்டும்.

எந்தத் தமிழ் இலக்கணநூல் இந்தத் தொகையைச் சொல்கிறது, இப்படி நாம் கொள்ளும் வழக்கிற்கு மரபிலக்கணத்தில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கவலைப்படாமல்,  தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என இன்றும் இதனை நம் வகுப்பறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் சொல்லி வருகிறோம்.

இப்படி ஓர் இலக்கணநூல் இருக்கிறது என்பதையே அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

இந்நூலில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன.

இந்தத் தொடர்பதிவின் இடையே அவ்வப்போது அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்!

உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள் (1) என்னும் பதிவின் தொடர்ச்சி.

படம் - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

51 comments:

  1. முத்து வீரியம் என்ற நூலா ...

    ஆசிரியர் குறிப்பைத் தந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. மின்னல் வேக வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ.

      Delete

  2. முத்து வீரியம் என்ற இலக்கண நூல் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தங்களின் இந்த தொடர், தமிழ் பற்றி அறியாத தகவல்களை தரும் களஞ்சியமாக இருக்கப்போவது உண்மை. வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா!
      தொடர்கின்றமைக்கு நன்றியுண்டு.

      Delete
  3. பிற குறிப்புகளையும் காண காத்திருக்கிறேன் கவிஞரே...
    தமிழுக்காக 3

    ReplyDelete
  4. தலைப்பே ,முத்து வீரியமா ?#இந்நூலில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன.#
    வீரியம் குறையாத நல்ல தகவலுக்கு காத்திருக்கிறேன் :)

    ReplyDelete
  5. முத்துவீரியம் என்ற நூலைப் பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் இப்போது தான் முதன்முதலாகக் கேள்விப்படுகிறேன். அறியாத செய்திகளைத் தரும் இத்தொடர் மிகவும் பயனுள்ளதாயிருக்கபோகிறது என்பதில் சந்தேகமில்லை.

    திண்ணைப் பள்ளிக்கூடத்தின் தாக்கம், பள்ளி நூலில் இருப்பதறிந்தேன். அக்காலத்தில் வெவ்வேறு ஊர்களில் நடந்த திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஒரேமாதிரியான பாடத்திட்டம் இருந்திருக்காது அல்லவா? ஆசிரியர் ஒவ்வொருவரும், வெவ்வேறு விதமாக அவர்களுக்குத் தெரிந்ததைப் போதித்திருப்பார்கள்.

    எனவே பள்ளி நூல் பாடத்திட்டம் வகுக்கும் போது, ஏற்கெனவே எல்லோருக்கும் தெரிந்த பழமையான தொல்காப்பியம், நன்னூலை அடிப்படையாகக் கொள்ளாமல் பலருக்குத் தெரியாத முத்துவீரியம் சொல்லும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதற்கு ஏதேனும் விசேட காரணமிருக்கிறதா?
    தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      திண்ணைப் பள்ளிக் கூடங்கள், அவற்றின் கற்பித்தல் முறைகள் இவைபற்றிக் கற்றோர் வாய் கேட்டறிதல் சுவையானது.

      உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம் மற்றும் அக்காலமொத்த தன்வரலாற்றுச் சித்தரிப்புகள் மிகச் சுவையாக இத் திண்ணைப் பள்ளிகளின் வழக்காறுகள் குறித்துப் பேசுவன.

      திண்ணைப் பள்ளிக் கூடங்களில் பாடத்திட்டம் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது என நினைக்கிறேன்.
      அரிச்சுவடி, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை எண்கணிதம் இவையே போதிக்கப்பட்டு வந்தன.
      உயர்கல்வி என்பதும் இன்று போன்றதல்ல.

      நன்னூலில் வல்லுநராக ஒருவர் பெயர் பெற்றிருப்பார்.
      அவரிடம் சென்று நன்னூலைக் கற்க வேண்டும்.
      தொல்காப்பியத்தில் ஒருவர் துறைபோகியவராக இருப்பார்.
      அவரிடம் போய்த் தொல்காப்பியத்தைப் பாடம் கேட்க வேண்டும்.
      இலக்கியத்திற்கு வேறு ஆசிரியர்கள் இருப்பார்கள்.
      பல்துறை அறிவினைப் பெற்ற ஆசிரியர்கள் குறைவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

      அப்படி ஒரே பாடத்தைத் தொடர்ந்து கற்பிப்பதனால் அப்பாடத்தில் அவர்கள் மிகுந்த நுட்பத்தினைப் பெறமுடியும் என்கிற நன்மை உண்டு.

      இன்னொன்றை அறிய வியப்பாய் இருக்கும்.

      உதாரணமாக நன்னூலைப் பாடமாகக் கற்க அதைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியரிடத்தில் போய் நின்றால அவர் முதலில் கேட்பது, “ எங்கே நன்னூல் முழுவதையும் சொல் ” என்றுதான்.

      நன்னூலைப் பாடம் கேட்பதன் முன் அம்மாணவனுக்கு அதன் மூலபாடம் மனத்தில் இருக்க வேண்டும்.

      அதுதான் மனப்பாடம்.

      பின் ஆசிரியர் அதற்கு விளக்கம் அளிக்கத் தொடங்குவார்.

      ஏட்டுச் சுவடிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் மாணவர்கள் பாடங்களைத் தங்கள் மனதில் சுமந்தலைய வேண்டிய சூழல் இருந்தது.

      இன்று பல ஆயிரம் படிகள் உள்ள புத்தகங்களும், கைச் சொடுக்கில் தேவையானதைத் தருகின்ற கணினியும் வந்துவிட்ட போதும், ஆசிரியர்கள் பாடல்களை மனப்பாடம் செய்ய வற்புறுத்துவது கூட இந்தப் பழம் மரபின் தொடர்ச்சிதான்.

      மாணவன் ஒன்றை ரசித்து அதைத் தன் மனதில் பதித்துக் கொள்கிறான் என்றால் அது நல்லது.
      திரைப்படப்பாடல்கள் இது போன்று எந்த முயற்சியும் இல்லாமல் அவனால் மனனம் செய்யப்படுகின்றன.
      வலிந்து திணிக்கும் போது தேர்விற்காய்ச் செய்யப்படும் மனனம், அது முடிந்து அவன் அடுத்தடுத்த வகுப்பிற்குச் செல்லும் போது மறக்கப்பட்டுவிடுவதற்கு அதன் தேவை இன்மையும், அதில் அவன் எச்சுவையையும் காணாமையும் தான் காரணம்.

      அடுத்ததாக முத்துவீரியம் சொல்லும் கருத்தென்பது, அதன் காலத்திற்குமுன் ஆசிரியர்களிடையே பொதுவாக எடுக்கப்பட்டிருந்த நிலைபாடாக இருக்கும் என நினைக்கிறேன்.
      மொழியைப் புழங்கிட அடிப்டையில்தேவையான எழுத்துருக்கள் என்ற வகையில் கற்பிக்கப்பட்டதைக் கொண்டு அவர் தமிழுக்குத் தேவையான எழுத்துருக்கள் என்று இலக்கணம் அமைத்திருக்கலாம்.

      அது நிச்சயம் அவருக்கு முன்பே இருந்த மரபாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

      நாம் முத்துவீரியத்திற்கு முன், தமிழ் எழுத்துகள் 247 என்று ஆவணப்படுத்திய வேறு நூல்கள் இல்லாமையால், அதையே இது பற்றிப் பதிந்த முதல் நூலாகக் கொள்கிறோம்.
      அவ்வளவே.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  6. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி யாழ்ப்பாவாணன் அவர்களே!

      Delete
  7. அறியாச் செய்திகளை அள்ளி அள்ளி வழங்குகிறீர்கள் நண்பரே
    நன்றி
    காத்திருக்கிறேன் அடுத்தப் பதிவிற்காக
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கரந்தையாரே!

      Delete
  8. அன்புள்ள அய்யா,

    நறுக்குத் தெரித்தாற் போல ‘நச்’ சென்று வீரியமுடன் சொல்லிச் செல்லும் பதிவு. ‘ தமிழ் எழுத்துகள் 247 என்ற வழக்குதான்.’- இதை முதன்முதலில் பதிவுசெய்த இலக்கண நூல் முத்து வீரியம். முத்துவீர உபாத்தியார் அவர்கள்தான் பதிவு செய்தவர் என்ற தகவலைப் பதிவு செய்துச் சென்றது பாராட்டுக்குரியது.

    நன்றி.
    த.ம. 7.


    இதை முதன்முதலில் பதிவுசெய்த இலக்கண நூல் முத்து வீரியம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாரட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  9. முத்து வீரியமா? நன்றி அண்ணா..
    எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்ன சகோ?
      தொடர்வதற்கு நன்றிகள்.

      Delete
  10. ஆஹா நிறைய சுவாரஸ்யமான விடயங்கள் இருக்கும் போல் இருக்கிறதே கற்றுக் கொள்ள. ம்..ம்.ம். நல்லது. முத்துவீரியமா அந்த நூல் நல்லது இனிவருங் காலம். தங்கள் நூலைக் கையாளட்டும். இவை எல்லாம் எனக்கு புதிய விடயங்களே. மேலும் 247 ல் இருந்து 399 எழுத்துக்கள் மிகுதி என்ன ஆயிற்று அறிய ஆவலோடு காத்திருக்கிறேன். தொடருங்கள் ....தங்கள் ஆராய்ச்சி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. அதை விளக்கினால் பதிவு மிகச் சலிப்பூட்டுமாறு அமையும்.
      இடையிடையே பார்க்கலாம்.
      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. தமிழ் அறிதலுக்கு நல்லதொரு தொடக்கம். முத்து வீரியம் இது வரை கேள்வி படாத புது தகவல். தொடரட்டும் உங்கள் பணி.
    த ம +1

    ReplyDelete
  12. எனக்கு தெரியாத செய்தி.....நன்றி!

    ReplyDelete
  13. ஆம் ஆசானே! அறிந்திருக்க வில்லைதான்! இப்படி ஒரு இலக்கண நூல் இருக்கிறது என்று....சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது...அறியவௌம் ஆவலுடன் இருக்கின்றோம்....இப்படி ஒரு இணையா ஆசிரியர் கிடைத்தமைக்கு நாங்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ந்து நன்றி சொல்ல வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா
      ஆசானே............ வாருங்கள்.
      விடைத்தாள் திருத்தும் பணியின் இடையிலும் வருகை புரிந்திருக்கிறீர்களே....

      மிக்க மகிழச்சி!

      இது கற்பித்தல் ஒன்றும் இல்லை ஆசானே.

      நாம் படித்த போது அறிந்த சுவாரசியமான விடயங்களைப் பகிர்தல் அவ்வளவுதான்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. முத்துவீரியம் பற்றி தற்போதுதான் தெரிந்துகொண்டேன். தங்களது இந்த தொடர் பதிவினைத் தொடர்கிறேன். பயனுள்ள செய்திகள் உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  15. அறியாத தகவல்... நன்றி... தொடர்கிறேன்...

    ReplyDelete
  16. தமிழைக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் முத்து வீரியம் எனும் இலக்கண நூல் பற்றி தெரிந்து கொண்டேன். இந்த வேகத்தில்போனால் நான் எப்போது தமிழைக் கற்றுக் கொள்வது தமிழ் தெரியும் என்று சொல்வது. என் சிறு பிராயத்தில் அரக்கோணத்தில் எங்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் இயங்கி வந்தது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தமிழைக் கற்றுக் கொள்வதற்கும் அது பற்றிய சில கூடுதல் செய்திகளை அறிந்து கொள்வதற்கும் வேறுபாடு உண்டுதானே..!
      நம் எல்லாருக்கும் தமிழ் தெரியும்.
      இங்குள்ளவை அது பற்றிய கூடுதல் சில தகவல்கள் மட்டுமே!
      இதை அறியாததால் தமிழ் கற்கவில்லையென்றோ தமிழ் தெரியாது என்றோ சொல்வது சரியில்லை அல்லவா!
      திண்ணைப் பள்ளி இருந்தது என்றால் அது பற்றித் தங்கள் நினைவில் உள்ள செய்திகளைப் பதிவாக இடலாமே..!

      எம்போன்றோர்க்குப் பயனுள்ளதாக இருக்கும்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  17. முத்துவீர உபாத்தியார் என்று அழைக்கப்படுபவர்,
    திண்ணைப் பள்ளிகளின் வாத்தியார்கள் உபாத்தியார்கள் என்று சொல்வார்கள்,
    இவர் 19 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்.
    இவர் எழுதிய ஐந்திலக்கண நூல் தான் முத்துவீரியம்.
    ஆசிரியப்பாவால் அமைந்தது.
    ஐந்து இலக்கணம் பெரும் பகுதிக்குள் முன்று முன்று உட்பிரிவுகள் உண்டு.
    ஏதோ கொஞ்சம் தெரியும்,
    மற்றவை தங்கள் பதிவின் வழி அறிய உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.
      நீங்கள் சொல்வது சரிதான்.
      இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
      பதிவில் நேர்ந்த தகவல் பிழையைச் சரிசெய்து விட்டேன்.
      சுட்டியமைகக்கு நன்றி.

      Delete
  18. பாருங்கள் நான் சொல்ல வந்ததை மறந்துவிட்டேன்,
    இந்த சாதி பிரிவு எப்ப வந்து ஒட்டி இருக்கு,,,,,,,,,,,,,,,
    குறிப்பிட்ட சாதி சார்ந்து இயங்கவில்லை என்ற அய்யம் தங்களுக்கு தேவையில்லை
    சாதி என்பது இப்பொழுதுதான் ஆங்கலேயர் வருகைக்கு பின், அது தெரியல,
    உட்கார்ந்து சாப்பிடும் எண்ணம் உடையோர் சாதி பெயரால் திண்னது,,,,,,,,,,,,,
    சரி,,,,,,,,,
    குறிப்பட்ட சாதி சார்ந்து கல்வி இயங்கவில்லை என்பது உண்மையே,,,,,,,,,,,,,
    அதை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும்.



    ReplyDelete
  19. பாருங்கள் நான் சொல்ல வந்ததை மறந்துவிட்டேன்,
    இந்த சாதி பிரிவு எப்ப வந்து ஒட்டி இருக்கு,,,,,,,,,,,,,,,
    குறிப்பிட்ட சாதி சார்ந்து இயங்கவில்லை என்ற அய்யம் தங்களுக்கு தேவையில்லை
    சாதி என்பது இப்பொழுதுதான் ஆங்கலேயர் வருகைக்கு பின், அது தெரியல,
    உட்கார்ந்து சாப்பிடும் எண்ணம் உடையோர் சாதி பெயரால் திண்னது,,,,,,,,,,,,,
    சரி,,,,,,,,,
    குறிப்பட்ட சாதி சார்ந்து கல்வி இயங்கவில்லை என்பது உண்மையே,,,,,,,,,,,,,
    அதை ஏற்றுக்கொள்ள மனம் வேண்டும்.



    ReplyDelete
    Replies
    1. தக்க ஆதாரங்கள் இல்லாமல் அப்படி அறுதியிட்டுக் கூற முடியாது சகோ.

      பக்தி இலக்கிய காலக்கட்டத்திலேயே இன்னார்க்கு இதுதான் என்று வரையறுக்கப்பட்டுவிட்டது.
      சோழப்பேரரசின் ஆட்சி, அதை இன்னும் வரைமுறைப் படுத்தி இருக்கிறது.

      ஆனாலும் தமிழ்க்கல்வி மரபினை முன்னெடுத்துச் செல்வதில் சாதியம் கடந்த ஒரு மரபுத் தொடர்ச்சி இருந்து வந்திருக்கிறது.

      மொழியைப் பயன்படுத்துவதில் சகலர்க்கும் இருந்த உரிமை...

      இது பற்றி மேலும் ஆராய வேண்டும். எனவேதான் அவ்விடத்தில் ஐயத்தோடு குறிப்பிட்டிருந்தேன்.

      தாங்கள் தொடர்வதற்கு நன்றி.

      Delete
    2. சாதியை நம் மேல் திணித்தது ஆங்கிலேயர் என்பது "வீண் பழி". நம்மிடம் உள்ள குறைகளுக்கெல்லாம் காரணம், நம் எதிரிகளும், நம்மைப் பிடிக்காதவர்களும்தான் என்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது. ஒரு பொய்யை உலகம் முழுவதும் "மெய்" என்று ஏற்றுக்கொண்டாலும் பொய் பொய்தான்!

      Delete
  20. தமிழ் தமிழ் என்று பேசுகிறோமே தவிர தமிழ் பற்றிய அறிவும் தெளிவும் இல்லாமல்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தங்களது இம்முயற்சி பல புதிய தகவல்களைத் தந்து தமிழின் சிறப்பை மென்மேலும் உணரச்செய்கிறது. மிக்க நன்றி. திண்ணைப்பள்ளிக்கூடத்தில் படித்ததாக என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆற்றுமணலைக் கொட்டி அதில் விரல் தேய்ந்துபோகுமளவுக்கு அ, ஆ எழுதிப் பழகியதை சொல்லியிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்..சகோ.
      ஹரி ஓம் என்றும் ஹரி ஸ்ரீ கணபதயே நமஹ என்றும் முதலில் அரிசியிலும் மணலிலும் ஓலையிலும் இந்த முறையில் எழுத வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
      தமிழ்பற்றிய அறிவும் தெளிவும் குறித்து
      அடுத்த இடுகை ஒன்றை முடித்து விட்டேன்.
      அவசியம் உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  21. தெரியாத தகவல் அறிந்து கொண்டேன்! தொடருங்கள்! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  22. என் தமிழை, உங்கள் தமிழறிவு மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி விஜு ஐயா!

    ---------------
    என் தமிழில் இன்னொரு சந்தேகம்,

    அதற்கு முன்..

    வாழ்த்துகளா? வாழ்த்துக்களா???

    வாழ்த்துக்கள் என்பது தவறு பலர் பலமுறை சொல்லியும் புரிந்துகொள்ள மறுத்து, கடைசியாக என் தர்க்கப்படி புரிந்து கொண்டேன். வாழ்த்து என்பது ஒருமை. வாழ்த்து பன்மையகாகும்போது அதில் "க்" தேவை இல்லை என்று.

    அப்போ, புறாக்கள் என்பது தவறு, புறாகள் என்பதே சரி என்றாகிறது. இருந்தாலும் புறாக்களே சரி என்றே என் மரமண்டக்கு தோனுது. மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுகிறது..
    -------------

    என்னுடைய இப்போதைய சந்தேகம்,

    நான் பொதுவாக "ஐயா" என்றுதான் எழுதுவேன். நீங்களும் மற்றும் பல தமிழறிஞர்களும் "அய்யா" என்று எழுதுறீங்க.

    வழக்கம்போல இதிலும் அனேகமாக நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

    அது ஏன்."அய்யா"தான் சரி, ஐயா?! சற்று விளக்க முடியுமா, ஐயா? :)

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. // என் தமிழை, உங்கள் தமிழறிவு மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி விஜு ஐயா!//
      // வழக்கம்போல இதிலும் அனேகமாக நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும். //

      இந்த வரிகள் எனக்கு மிகவும் அச்சமூட்டுகின்றன.

      நீங்கள் நினைப்பது போல் இல்லை.

      எனக்குத் தெரிந்ததில் பல நூறு மடங்கு தமிழ் பற்றிய அறிவுடன் பல்துறை அறிவு பெற்றுப் பதிவர்கள் இணையத்தில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

      படித்தல் என்பது எங்கள் பணிக்கு இருக்க வேண்டிய மூலதனம்.

      வாழ்நாள் முழுக்க அதை நாங்கள் சேர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

      அது பணத்தைச் சேர்ப்பதைப் போல் ஒரு சுகமான அனுபவமாக மாறிவிடும் போது, மற்ற துறையினரைக் காட்டிலும் எங்களுக்கு வாசிப்பு அனுபவம் சற்று அதிகம் இருக்கலாம்.

      இன்னும் உங்கள் கேள்விக்குள் நான் வரவில்லை.

      உங்கள் இரண்டு கேள்விகளுக்கான என்னுடைய கருத்தை,

      உங்களின் இந்தக் கேள்வியைக் குறிப்பிடாமல் இதே பதிவின் தொடர்ச்சியாக இரண்டு பதிவுகளாய் இடலாம் என நினைக்கிறேன்.


      ஒருவேளைப் பின்னூட்டத்தைத் தொடராத பதிவர்களுக்கு அது பயனுடையதாய் இருக்கலாம்.

      அனுமதிப்பீர்களா?

      காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
    2. ***இதே பதிவின் தொடர்ச்சியாக இரண்டு பதிவுகளாய் இடலாம் என நினைக்கிறேன்.***

      கட்டாயம் எழுதுங்க, விஜூ. நன்றி. :)

      Delete
  23. வணக்கம்
    ஐயா

    நல்ல விளக்கம் ஐயா அறியாத சில விடயங்களை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல... பகிர்வுக்கு நன்றி த.ம 14
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் அளிக்கும் தொடர் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி திரு ரூபன்.

      Delete

  24. வணக்கம்!!

    நன்முத்து வீாியா் நல்கிய சீருரைத்தீர்
    இன்கொத்து நன்மை எனக்கு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  25. இதுவரை அறியாத தகவல்! நன்றி ஐயா!

    ஆனால், "எந்தத் தமிழ் இலக்கணநூல் இந்தத் தொகையைச் சொல்கிறது, இப்படி நாம் கொள்ளும் வழக்கிற்கு மரபிலக்கணத்தில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று கவலைப்படாமல், தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என இன்றும் இதனை நம் வகுப்பறையில் மாணவர்களும் ஆசிரியர்களும் சொல்லி வருகிறோம்" என்ற உங்கள் கருத்தில் சிறியேன் மாறுபடுகிறேன். இப்படிப்பட்ட அடிப்படை விதயங்களில் யாருக்கும் ஐயம் தோன்றாமல் இருப்பது இயல்புதான் இல்லையா? மேலும், 'நம் முன்னோர் அடிப்படை இலக்கணத்தை நம் மொழிக்குத் தெளிவாக வரையறுத்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இனி, மேற்கொண்டு மொழியை முன்னேற்றத் தேவையானவற்றை நாம் பார்க்க வேண்டும்' என்பதுதானே ஒரு நல்ல சமூகத்தின் இயல்பாக இருக்க முடியும்? மாறாக, அடிப்படை எழுத்து, எண்ணிக்கை, இலக்கணம் முதற்கொண்டு ஆணிவேரிலிருந்தே குறித்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஐயம் கொள்ள, ஆராய்ச்சி செய்ய, கவலைப்பட வேண்டும் என நாம் எதிர்பார்த்தால் அந்த அளவுக்கு நம் மொழி இன்னும் அடிப்படை வரையறுக்கப்படாமல் இருப்பதாகப் பொருளாகாதா? தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! தோன்றியதால் கேட்டேன், அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.

      உங்களின் இது போன்ற கருத்துகள் பெரிதும் வேண்டப்படுகின்றன.

      இதில் தவறாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது.

      அடுத்த இடுகையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      அது அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட கருத்தேற்றத்தின் பாதிப்பாய் இருக்கும் என்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.

      என்னைப் பொருத்தவரை, அச்சிடப்பட்டவையெல்லாம் உண்மையாக இருக்க வேண்டி அவசியம் இல்லை

      கற்பிக்கப் படுவதெல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டிதில்லை என்கிற அறிவைப் பெற்றபின்புதான் நான் நம்பி இருந்த பல விடயங்கள் பொய்யானவை எனத் தெரியவந்தது.

      அடிப்படை விடயங்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும் இல்லையா அய்யா? குறைந்த பட்சம் ஆசிரியருக்காவது... தான் கற்பிக்கும் பகுதி எதில் இருக்கிறது.... அதற்கு ஆதாரமான நூல் எது என்று தெரிந்திருக்க வேண்டாமா?

      நம் மொழியின் அடிப்படை நமக்குக் கிடைக்கும் முதல் இலக்கணச் சான்றான தொல்காப்பியத்தில் இருந்து மாறவில்லை அய்யா.

      எழுத்துகள் முப்பதுதான்.

      அவ்வெழுத்துகளைக் கொண்டு அல்லது அவ்வெழுத்துகளின் உதவியால் உருவாக்கப்படும் எல்லாம் துணைமை எழுத்துகள்தான்.

      247 எழுத்துகளை எப்படிப் படிப்பது, மனனம் செய்வது என்கிற குழந்தைக்கு த் தமிழ் எழுத்துகள் முப்பதுதான் என்றும் அதிலிருந்து எப்படி எப்படியெல்லாம் கூடுதல் எழுத்துகளை உருவாக்கலாம் என்றும் கற்பிப்பது இலகுவாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
      ஆய்தம் தன் பயன்பாட்டைப் பெரிதும் இழந்து போனது.
      இன்றுள்ள பயன்பாடு அன்று அதற்கு அன்று.

      தொடக்கப்பள்ளிக் குழந்தையிடமோ, பாடசாலை மாணவனிடமோ நாம் இதைச் சொல்லிக் கொண்டிருப்பதும், மூலபாட ஆய்வை மேற்கொள்வதும் தேவையில்லைதான்.

      தமிழ் ஆர்வம் இருப்பவர்கள், தமிழைக் கற்பிப்பவர்கள் எது உண்மை என்று அறிந்து கொள்வதிலும், போலிக் கருத்துகளைப் ( சான்று நன்னூல் கூறும் எழுத்துகள் 247 ) புறந்தள்ளுவதிலும், எல்லாவற்றையும் அப்படியே ஏற்காமல், சரியா என்று சொல்லப்படுவனவற்றை ஆராய்வதிலும் ஈடுபடுவது என்பது , தம் மொழிபற்றிய சரியான புரிதலையும், அதனடிப்படையில் தேவையான மற்றும் உண்மையான வளர்ச்சியையும் முன்னெடுக்கும் அல்லவா?

      இது நினைந்தே சில கருத்துகளை இத் தொடர் பதிவில் முன் வைத்துப் போகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் என்றும் வரவேற்பு.

      நன்றி.

      Delete