Sunday 14 December 2014

நான்தான் இல்லை!




காரிருள் நெஞ்சில் வந்த

    பேரொளிப் பெண்ணே! அன்பு

சேரிடம் உன்னில் தானோ?

     யாரிதைச் சொல்வார், நானோ

பாரினைக் கிழிக்கும் அந்த

      ஏரினைப் போலே நெஞ்சம்

கீறிட உன்றன் ஊற்றே

      பீறிடும் நிலமாய் ஆனேன்!



கண்களைக் கண்டே உன்னில்

       காதலில் வீழ்ந்தேன்! என்றன்

எண்ணமும் எல்லாம் ஆகி

       எழுதினாய் உன்னை என்னுள்!

கண்டிடாய் நீயோ அய்யோ,

       கருகினேன் உன்தீ மூள

உண்டிடும் காலம் என்னை

       உருக்கிடும் உன்னில் சாய்க்கும்!


வெட்டிடாக் குழியில் உள்ளம்

      வீழ்த்தினாய், விழியின் வீச்சில்

கட்டினாய், என்னைக் காதல்

     கயிறினால், உன்றன் எண்ணம்

தொட்டிடும் போதோ என்னுள்

     துளிர்க்குமோர் கவிதை, என்னைப்

பட்டிடா தாக்கும், வந்து

      பார்த்திடின் உன்னை ஆக்கும்!



நினைவுகள்  காய வில்லை!

      நெருப்பிலோ வெம்மை இல்லை!

எனையினும் காட்ட வில்லை!

       ஏக்கமோ சாக வில்லை!

கனவினும் தீர வில்லை!

       கற்பனை மாற வில்லை!

உனைமறந் தினியும் வாழ

       உறுதியென் உயிர்க்கு மில்லை!



நீரென வடிவம் அற்றும்

      நிழலென உருவம் அற்றும்,

காரெனக் கண்ணீர் எல்லாம்

      கவிதையாய் மாற்றிக் கொண்டும்

யாரென என்னைத் தேடும்

      அறிவெலாம் அணைய உன்னைப்

பார்‘என ஏற்றி வைத்தாய்!

      பார்க்கிறேன்! நானங் கில்லை!

( அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் சில மாதிரிக்காக 

மாயனூர்ப் பதிவுகளிலிருந்து.......)

படம்- நன்றி: www.hotwallpaperz.com


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

51 comments:

  1. மேலும் துளிர்க்கட்டும் கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி டி டி சார்!

      Delete
  2. #உனைமறந் தினியும் வாழ உறுதியென் உயிர்க்கு மில்லை!#
    அப்படி சொல்லப் படாது ,அப்புறம் கவிதை எப்படி துளிர்க்கும் ?
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. மறக்காமல் இருப்பதால் பகவானே!!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  3. ஓ! ஆசானே! வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது. சென்ற வகுப்பில் தாங்கள் எடுத்த பாடத்தின் எடுத்துக்காட்டு விளக்கம் என்பது! எங்களின் அனுமானம் சரியென இறுதியில் தாங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்ததும் ....ஹப்பா..சரியாத்தான் வகுப்பைக் கவனிச்சுருக்கோம்...ம்ம்ம்ம் அரைக் கிழம் ஆனாலும்....வகுப்பில் கவனம் சிதறவில்லை..ஹஹஹஹ் ...நாங்களும் முயன்று தங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம் ஆசானே! அது சரி ஆசானே வீட்டுப்பாடம் எதுவும் இல்லையா? ! அவ்வப்போது கொடுங்கள். அப்பதான் இங்க க்ளாஸ்ல பிள்ளைங்க எல்லாம் ஒழுங்கா கத்துக்குவாங்க.....ஹஹஹ..நிஜமாகவே மிக நல்ல கற்றல்.....எங்களுக்கு...மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அல்லவோ தலைமாணாக்கன்!!
      அரைகிழமா....???
      அறிவிற்கு அஃதன்றோ அழகு ஆசானே!!!
      ““ உரைமுடிவு காணான் இளமையோன் ““
      என்று வயதிற் சிறிய சோழனை “ போப்பா..! போய் வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா முதல்ல வரச் சொல்லு “ என அனுப்பிய கதை தெரியும் தானே?
      உங்களுக்கு வீட்டுப்பாடம் வேண்டுமா! நோ ஹோம் ஒர்க்.
      உங்கள் மரபின் வருகையை எதிர்பார்க்கிறேன் ஆசானே!!!

      Delete
  4. படத்திலும் , கவிதையிலும் வலி தெரிகிறது.
    இதைப் படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது
    " நீ எனக்கு அருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ
    அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கிறாய் என்பது".
    அருமையான கவிதை சகோ.
    தொடரட்டும் உங்கள் தேடல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கவிதைப் பகிர்விற்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ!!

      Delete
  5. பார் எற்றி வைத்தாய்.....எந்த பார்...????

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பார்க்கவில்லையா?
      ஹ ஹ ஹா!!!!

      Delete


  6. ம்ம்ம்... வேண்டாம் ! நான் ஏதாவது எழத தொடங்கி... நீங்கள்.... :-)

    கவிதைகளை...

    " படி‘என விரித்து வைத்தாய்!

    படிக்கிறேன் ! நானங் கில்லை! "

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. அட ஆரம்பித்து விட்டீர்களே அண்ணா!!
      என்னவோ போங்கள்!!
      நீங்களுமா.................?!
      என்னால் நம்ப முடியவில்லை!!

      Delete
  7. கடைசி வரிகளில் நானும் தொலைந்துதான் போனேன்

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே!!
      தங்களின் வருகை காணும் போதே மகிழ்ச்சிதான்!
      வாழ்த்துகளில் வளர்கிறேன்.
      நன்றி!

      Delete
  8. "பார்‘என ஏற்றி வைத்தாய்!
    பார்க்கிறேன்! நானங் கில்லை!"

    படி என இயற்றி வைத்தாய்
    படித்தேன் நானிங் கில்லை
    எங்கே தேடுவேன் என்னை?
    அருமை அய்யா!
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  9. "பார்‘என ஏற்றி வைத்தாய்!
    பார்க்கிறேன்! நானங் கில்லை!"

    படி என இயற்றி வைத்தாய்
    படித்தேன் நானிங் கில்லை
    எங்கே தேடுவேன் என்னை?
    அருமை அய்யா!
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. அய்யோ தொலைந்து போனீர்களா அய்யா?
      நீங்களுமா?
      கவலைப்படாதீர்கள்..
      கண்டுபிடித்துவிடலாம்!
      நன்றி!

      Delete
  10. வணக்கம்!

    ஏரினைப் போலே நெஞ்சைக்
       கீறிடும் பாடல் கண்டேன்!
    சீரினை எல்லாம் சேர்த்துத்
       திகைப்புறக் கவிதை தந்தீா்!
    ஊரினைப் பசுமைக் காடாய்
       உயா்த்திடும் செயலைப் போன்று
    பேரினைப் பெற்றீா்! ஈடில்
       பெருமையைப் பெற்றீா்! வாழ்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. போற்றிடும் அன்பும் நெஞ்சம்
      பொழுதெலாம் தமிழை வாழ்த்தி
      ஏற்றிடும் எண்ணம் கொண்டீர்!
      எளியனை ஊக்கி யாப்பின்
      ஊற்றினைக் காட்டித் தாகம்
      உற்றிடும் நேரம் தீர்க்கும்
      அற்றலைக் கண்டேன் உங்கள்
      அருந்தமிழ்ப் பணிகள் வாழி!!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!

      Delete
  11. வணக்கம் ஐயா!

    ஊனை உருக்கி உயிர்கசிய
       உள்ளே நோயும் உருப்பெருக்கும்!
    வானைக் கிழித்துப் பொழியுமழை
       வார்த்த கவியோ வாய்பிளந்தேன்!
    தேனைக் குழைத்துத் தரும்விரல்கள்
       தீயை அள்ளித் தெளித்ததுவோ?
    யானைப் பலமும் ஓர்நொடியில்
       இல்லா தழிந்த நிலையென்னே!

    மனத்தை உலுக்கிவிட்டது உங்கள் விருத்தப்பாக்கள்!
    வலிமிகுந்த சீர்கள் கண்டு மலைத்தாலும்
    மடையுடைத்த வெள்ளமாகக் கண்கள் உகுத்தன!

    ஆக்கம் அருமை ஐயா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கூனை நிமிர்த்தும் தமிழ்ப்புலமை
      கொண்டீர் நன்றே குன்றலிலா
      வானின் மதியும் இறங்கிதமிழ்
      வடித்தே எடுத்து இங்குவந்து,
      நானோ சிறுவன் நாக்குழறி
      நடுங்கும் பிதற்றல் கேட்டுகவி
      பானம் பருகத் தந்தீரோ?
      பார்த்தேன்! சுவைத்தேன்!! எனைமறந்தேன்!!

      நன்றி சகோ!!

      Delete
  12. ///உனைமறந் தினியும் வாழ

    உறுதியென் உயிர்க்கு மில்லை!///
    அருமை நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி அய்யா!

      Delete

  13. வெட்டிடாக் குழியில் உள்ளம்

    வீழ்த்தினாய், விழியின் வீச்சில்

    கட்டினாய், என்னைக் காதல்

    கயிறினால்,** செம!!
    மாயனூர் பதிவும் போட்டாச்சு, விருத்தத்திற்கு எடுத்துக்காட்டும் கொடுத்தாச்சு!! ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் என்றால் இதுதானா அண்ணா?? முகப்பில் இருக்கும் படமே, கவிதைக்கு மனதை தயார் செய்துவிடுகிறது. எதிர்பார்த்ததை போலவே ஈரமாகிறது கவிதை குத்தி, குருதி துளிர்த்த இதயம் !!

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாங்காய்க் கூட இல்லை.
      கல்லையும் காணோம்!
      ஹ ஹ ஹா!!
      நன்றி சகோ!!!

      Delete
  14. உன்றன் எண்ணம் தொட்டிடும் போதோ என்னுள் துளிர்க்குமோர் கவிதை...(இது உங்களுக்கு).ஆனால் உங்களது கவிதையைப் பார்த்த எங்களுக்கு உடன் கவிதை துளிர்க்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. அந்தக் கவிதையைக் கொஞ்சம் நானும் அறியத் தாருங்கள் முனைவர் அய்யா!
      நன்றி

      Delete
  15. அய்யா, அமைதி செழித்திட விலகி இருந்த என்னை "உன்தீ மூள உண்டிடும் காலம் என்னை உருக்கிடும் உன்னில் சாய்க்கும்" என்ற அற்புதமான வரிகள் ஈர்த்திட்டனவே.
    என்றும் ஒளிர்வாய் எழுமனதில் காதலாய்
    ஒன்றும் பலவாகும் காண்
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  16. பொன்னென மின்னும் எண்ணம்
    பொருத்தமாய் கொள்ளும் தொழிலும்
    விண்ணிலே தோன்றும் மழையாய்
    வார்த்தைகள் சொரியும் முறையும்
    கண்ணிலே காதல் சொட்டும்
    கருத்துகள் காணும் கவியும்
    பெண்ணிலே உயிரும் வைத்துப்
    பண்ணுடன் புனையும் சிறப்பும்! அற்புதம் அழகு.....!


    பாட்டுக்குள் நீஇருந்து பண்ணையே தேடலாமோ
    கோட்டுக்குள் ளேயிருந்து குன்றையே தாண்டலாமோ
    வாட்டும்கா தல்தே டிவருந்தி நீதொலைந்தால்
    மீட்டிடவே நல்வழி காட்டு !

    சாரிதானா ஆசானே சிரிப்பு சிரிப்பாக வருகிறதா ம்ம்ம் ....சரி பாவம் பிழைச்சு போகட்டும் விடுங்கள்.... ok வா ....

    ReplyDelete
    Replies
    1. மீட்டும் வழியிதுதான்! மோனத்தின் உள்ளமர்ந்து
      பாட்டில் பரவசமாய்ப் போவதுதான்! - ஏட்டில்
      எழுதுவது! என்றும் இருப்பதது எங்கும்
      அழுவதது நானெங் கதில்?!

      கவிஞரே சிரிப்பு வரவில்லை!
      வெண்பா வந்து விட்டது!
      விருத்தமும் கூட!
      நன்றி

      Delete
  17. வரிகள் ஒவ்வொன்றும் அசத்தல்! சென்ற வகுப்பு பாடத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நானும் நினைத்தேன்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  18. வரிகள் ஒவ்வொன்றும் அசத்தல்! சென்ற வகுப்பு பாடத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று நானும் நினைத்தேன்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கணிப்புப் பொய்க்குமோ அய்யா!
      இன்னும் தங்களின் பாடல் காணும் வரம் கிடைக்க வில்லையே!
      காண்பிப்பீர்கள் தானே?
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!!

      Delete
  19. ஆஹா, தமிழ் என்னமா உங்களிடம் விளையாடுகிறது ஆசானே.
    "//கண்களைக் கண்டே உன்னில்
    காதலில் வீழ்ந்தேன்! //"
    - இன்று எத்தனை பேர் கண்ணை பார்த்து காதலிக்கிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. தமிழ் விளையாட்டு..
      நல்ல தலைப்பாக இருக்கிறதே அய்யா!
      கண்ணைப் பார்க்கா விட்டாலும் கண்ணால் பார்க்கிறார்கள்.. அவ்வளவுதானே..!
      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி அய்யா!

      Delete
  20. வெட்டிடாக் குழியில் உள்ளம்
    வீழ்த்தினாய், விழியின் வீச்சில்
    கட்டினாய்,

    அருமை கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. வலைப்பணிக்கிடையிலும் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  21. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  22. அன்புள்ள அய்யா,

    மாயனூர்ப் பதிவில் காதல்
       மருந்தையே வைத்தே அன்று
    ஆயனாய்க் கண்ணன் ஆகி
       அன்பிலே சிறந்த தாயின்
    தூயனாய்த் தமிழால் வென்றே
       துணையென ஆக்கி வெற்றிச்
    சேயென விளங்கும் நீயே
       சீருடன் சிறப்பாய் ஆனாய்!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த விருத்தக் கவிதைப் பதிவு எப்பொழுது அய்யா!
      வெண்பாப் பதிவும் வரிசையில் இருக்கிறதே?!!!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  23. நானெல்லாம் எந்தத் தமிழசிரியர் கையில் மாட்டி உதை வாங்கப் போகிறோனோ தெரியவில்லை. .. உங்கள் கவிதைகளைப் படிக்கும் போதே ... பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. . எப்போது இப்படியொரு கவிதையை நாமும் எழுதப் போகிறோம் என்று.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      இதெல்லாம் விளையாட்டுப் பிள்ளைகள் கட்டும் மணற்கோபுரம்.

      மாளிகை சமைப்போர் வியந்தாலும் கூட ஒரு உதையில் உதிர்ந்துவிடக் கூடியவைதான்!
      நீங்கள் ஏன் இப்படிப்பட்ட கவிதைகளைப்போய் எழுத வேண்டும்?!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete
  24. வெட்டிடாக் குழி... விழி தந்தது ...
    ஜோர் ...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி தோழர்!

      Delete
  25. ஒன்பது... மக்கள் முதல்வருக்கு பிடித்த என்.. த.ம

    ReplyDelete
    Replies
    1. நவக்கிரகத்தில் ஏதோ எனக்கும் சரியில்லையோ? :))
      நன்றி தோழர்!!

      Delete
  26. ஆசான் கவிக்காசான்,
    காரெனக் கண்ணீர் எல்லாம்
    கவிதையாய் மாற்றிக் கொண்டு
    பார் எனப் பார்த்தேன் அங்கு
    பார்வையில் நீ இல்லை.
    நன்றி.

    ReplyDelete