Monday 6 October 2014

ஏங்கும் ஒரு கூடு



நினைவாலே நீ‘என்னில் நானாகி எனில்வாழும்
           நனைவுகள் காய வில்லை!
     நெருக்கத்தில் உனைக்கண்டும் நீடிக்கும் மௌனத்தில்
           நிற்கின்ற வலிமை இல்லை!
அணையாலே என்‘ஆவல் அடைத்திட்டும் தடுத்திட்டும்
           அதுமீறி வெள்ளம் வருமோ?
     அகலாத உன்னெண்ணம் அதையேற்றே உயிர்பூக்க
           அணைக்கின்ற உள்ளம் தருமோ?
துணையாக நீஎன்னில் துவள்கின்ற என்வேரின்
            துன்பங்கள் போக்க வேண்டும்!
      தோய்கின்ற என்நெஞ்சின் துடிப்பாக நீநின்று
            துயர்தன்னில் காக்க வேண்டும்!
கணையாக உன்வாளின் முனையாலே நான்பட்ட
            காயங்கள் மெல்லத் தெரியும்!
       கதறாமல் அதையேற்றுக் காதலெனும் மருந்திட்ட
            கற்பனைகள் சொல்லப் புரியும்!


விருப்போடு நான்நட்ட விதையென்னில் மரமாகி
           வேர்விட்டு விளைவும் காய்க்க
     வெட்டென்ற குரல்கேட்க வேதனையில் மனம்வாட
            வெளிச்சத்தை இருளும் மாய்க்க
வெறுப்போடும் என்‘அன்பை விலைபேசும் உளம்கண்டு
             வருத்தத்தில் உயிரும் வாடும்!
       வளர்கின்ற நினைவால்நீ வசந்தத்தைத் தந்தென்றும்
             வாழ்வதையென் உள்ளம் பாடும்!
கருப்பென்ன? வெளுப்பென்ன? கண்மூடி நின்றால்பின்
              கற்பனையின் வண்ணம் என்ன?
        கரைக்கின்ற கனவுக்கும் கரையில்லாக் கடலுக்கும்
              கவியெழுதும் எண்ண  மென்ன?
மறுத்தாலும் நீஎன்னை மறந்தாலும் முள்விட்டு
             மலர்மட்டும் கண்கள் காணும்!
     மறையாத நிலவென்று மங்கும்‘என் நினைவுன்னை
             மனமெங்கும் கொண்டு பேணும்!

நெருப்போடு விளையாட நெஞ்சத்தை விட்டென்றன்
            நிலைகண்டு வாடு கின்றேன்!
      நீங்கா‘என் நினைவோடு நீசெய்த மாயத்தென்
           நிழல்தன்னைத் தேடு கின்றேன்!
இருப்பாக்கி என்நெஞ்சின் இருள்நீக்கும் ஒளியாய்நீ
           இதமாக்க வந்து நின்றாய்!
     இடர்கூடச் சுடர்வீசும் இதழோர நகைசிந்தி
           இனிதாக்கித் தந்து வென்றாய்!
பொறுப்பாக எனில்‘உன்னைப் புதைக்கப்போய் உனில்‘இன்று
           புதைந்தென்றன் துன்பம் தீரும்!
    பொருளில்லாச் சிறு‘அசைவும் பொருளாக்கி நான்காணப்             
           புலனெல்லாம் இன்பம் சேரும்!
ஒருகூடு நின்றேங்கும்! உயிர்வந்து குடியேற
           உனையெண்ணிச் சிந்து பாடும்!
     உதறாமல் நீவந்தென் உலகோடு கலப்பாயென்(று)
          உணர்வெல்லாம் வந்து தேடும்!

தடுத்தாலும் உலகத்தின் தடையாவும் எனைத்தாக்கித்
          தரைவீழ்த்தத் துணிந்திட் டாலும்
     தண்ணீர்மேல் எழுத்தாக்கித் தள்ளாடும் என்நெஞ்சம்
          தாளாது பணிந்திட் டாலும்,
படுத்தாலும் உறக்கத்தைப் பகைத்தாலும் உன்‘எண்ணம்
          பகலாக இரவை மாற்றும்!
     படந்தென்னில் எனைச்சாய்க்கும் பழக்கத்தில் நீசற்றும்
          பாராத உறவைத் தேற்றும்!
தொடுத்தாலும் கிட்டாத தேன்பூவே!  வண்டாகத்
          துள்ளும்நின் கண்கள் எங்கே?
     துயரெல்லாம் உடன்மாய்த்துத் துணைநீயே எனவீழ்ந்து
          துடிக்கும் என்நெஞ்சம் அங்கே!
கொடுத்தாலும் என்றென்றும் குறையாத அன்புன்னில்
          கொடுத்திடவே உள்ளம் ஏங்கும்!
     குறையென்று நீசொல்லிக் கலைத்தால்என் செயவென்று
         கள்ளமனம் மெல்லத் தேங்கும்!


தறிகெட்டுத் தடம்மாறித் தனியேனாய் நான்வீழத்
         தரையாகத் தாங்கி நின்றாய்!
    தடுக்கின்ற மனம்மாற்றித் தவறல்ல எனக்கூறித்
         தடைமாய்க்கத் தேங்கு கின்றாய்!
பறிக்கத்தான் கதிரெட்டும் நிலவெட்டும் உனையெட்டிப்
         பார்க்கத்தான் அஞ்சி நின்றேன்!
    பெயர்விட்டுத் தவிக்கின்ற பித்தத்தில் நீயற்றுப்
         பிணமாக மிஞ்சு கின்றேன்!
மறிக்கின்ற உறவெல்லாம் மதியாதும் மிதியாதும்
         முறிக்கின்ற நெஞ்சம் உண்டு!
    மனம்பட்ட காலத்தும் மயக்கத்தின் இடைப்பட்டும்
         மாறாதுன் எண்ண முண்டு!
தெறிக்கின்ற சுடர்போலும் தேங்காத நீர்போலும்
         திரள்கின்ற உன்னைக் கண்டு
     தவிக்கின்ற என்நெஞ்சில் தகர்கின்ற இன்பத்தில்
              தாளாத காதல் உண்டு!

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

39 comments:

  1. தொடுத்தாலும் கிட்டாத தேன்பூவே! வண்டாகத்
    துள்ளும்நின் கண்கள் எங்கே?** ஆஹா!
    பறிக்கத்தான் கதிரெட்டும் நிலவெட்டும் உனையெட்டிப்
    பார்க்கத்தான் அஞ்சி நின்றேன்!** அண்ணா! பட்டை தீட்டப்பட்ட வைரமாய் மின்னுகிறது இந்தவரிகள்!!!
    மனம்கொண்டபுரம் இப்போது தான் தொடங்கியிருக்கிறேன் அண்ணா! மூழ்கினால் முத்தெடுக்க நிறைய வாய்ப்பிருப்பதாக பற்றிகொள்கிறது தொடக்கம். உங்கள் புதுக்கவிதைகளின் வீச்சு மிக கூர்மையாக இருக்கிறது அண்ணா! உங்களின் மரபுக்கவிதைகள் படிக்கையில் ஒரு மாணவியாகவும், மனகொண்டபுரம் வலைபூ கவிதைகளை படிக்கையில் ஒரு நண்பனின் பதிவை போலவும் உணரவைக்கிறீர்கள். ஆஹா! என்ன நேரம் போறதே தெரியாம பேசிகிட்டிருக்கிற மாதிரி தெரியுதே!!! இங்க வந்த நேரம் போறதே தெரியலை:))

    ReplyDelete
  2. அதிவேகப் பாய்ச்சல்.
    பதிவேற்றிவிட்டு சாமானியன் அண்ணாவின் பதிவிற்குப் பின்னூட்டமிட்டுவரும் நேரத்திற்குள் கருத்திட்டுவிட்டீர்கள்.
    நீங்கள் பட்டை தீட்டினால் கற்களும் வைரமாகக்
    கூடும்.
    மனம்கொண்ட புரம். அந்த வலைப்பூவின் தொடக்கத்திற்கும் தோழர் மதுவிற்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.
    மரபுக்கவிதைகள் எளிமையானவைதான். புதுக்கவிதைகளில்தான் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருப்பதாக நினைக்கிறேன்.
    நீங்களெல்லாம் இருக்கிறீர்களே பிறகென்ன..?!
    மாணவியா...?
    நீங்களா...!!
    உங்கள் பதிவுகளைப் பார்ப்பவர்களுக்கு யார்யாரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது தெரியும்.
    சரிதானே!
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு அண்ணா.. இதுக்கு கருத்து சொல்ற அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை ..ஆனால் கற்றுக்கொள்கிறேன் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் தோழி ! நீங்களே இப்படி சொன்னால் நான் எம்மாத்திரம். நானும் அவ்வழியே.

      Delete
    2. சங்கக் கவிதைகளையே புரிந்துகொண்டு மீளாக்கம் செய்து கருத்துரைத்து வரும் சகோ இப்படிச் சொல்வதை,
      “நீங்கள் விமர்சிக்கும் அளவு தகுதியுடன் நான் இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை“ என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்.
      அதில் எனக்குச் சந்தேகமொன்றுமில்லை.
      இவை பழைய பதிவுகள்தான்.
      நிச்சயமாய் நீங்கள் கருத்து சொல்லுமளவிற்குப் பதிவுகளை இடுவேன் என்கிற நம்பிக்கை மட்டும் இன்னும் எனக்கு இருக்கிறது.

      Delete
    3. சகோதரி இனியாஅவர்களுக்கு,
      சந்தடிசாக்கில் சேந்துக்கிறதுன்னா இதுதானா...?
      அந்த வழியை எனக்கும் சொல்லுங்கள்.
      நானும் வருகிறேன்.

      Delete
    4. அச்சோ..அப்படியெல்லாம் இல்லை..
      உங்க கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு..உங்கள் எண்ணமும் ஆக்கமும்..உயரத்தில்!

      இனியா...நீங்க வேறயா? :)

      Delete
  4. "தெறிக்கின்ற சுடர்போலும் தேங்காத நீர்போலும்
    திரள்கின்ற உன்னைக் கண்டு"அருமையான வரிகள்...வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே!
      வெகு இயல்பாக வந்து விழுகிறது உங்கள் பின்னூட்டம்.
      புதுகையில் தங்களோடு பேச முடியாமைக்கு வருந்துகிறேன்.

      Delete
  5. ....................................... !

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. “ ஏங்கும் ஒரு கூடு “ என்ற தலைப்பைப் பார்த்ததும் சரி

      எப்போதும் போல ஊமைக்கனவுகள் உளறிக்கொட்டும் சகிக்க

      முடியாத காதல் புலம்பலாகத்தான் இருக்கப்போகிறது என்ற

      முடிவுக்கு வந்துவிட்டேன்.


      கடைசியில் ஆண்டும் மாதமும் போட்டு....... பதிவு என்று

      சொல்லித் தப்பித்திருப்பார் என்றும் நினைத்தேன். நல்ல

      வேளை இப்பக் கொஞ்ச நாளாக அதைக் காணாம்
      .
      எனக்கு இதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன சகோதரரே!

      “நினைவாலே“ என்பதற்கும் அணையாக , துணையாக,

      கணையாக , என்பதற்கும் எதுகை இடிக்கிறதே!

      சும்மா , காரிகை, காப்பியம் என்றெல்லாம் கதை

      விட்டுக்கொண்டிருக்கக் கூடாது. இரண்டாவது எழுத்து

      ஒன்றாக வர வேண்டுமா இல்லையா? ஒன்றாக

      வரவில்லையே ...?

      இங்கே எங்கே எதுகை...? அடுத்த இரண்டு stanza லயும் இந்தக்

      கதைதானே...?

      அப்புறம் நனைவுகள்,ன்னு ஒரு வார்த்தை… அது என்ன

      நனைவு, ஈரம்ன்னு சொல்ல வர்றிங்களோ?

      சரி . நீங்க சொல்ற அர்த்தமே வைச்சுக்குவோம். அப்படின்னா

      நனைவு சரி… அதென்ன தம்பி நனைவுகள்… நனைவுக்கு

      இப்படி ஒரு Plural form தமிழில எந்த நிகண்டுலப்பா இருக்கு…!

      இல்ல.. எவனாவது எங்கயாவது இப்படிச்

      சொல்லியிருக்கானா?

      சும்மா poetic license ன்னெல்லாம் சொல்லி escape ஆகக்

      கூடாது.!

      துமி ங்கிற ஒரு வார்த்தை இல்லங்கிறதுக்காக அவ்வளவு

      பெரிய கம்பனையே தெருத்தெருவா ஓடவுட்டு ஆதாரம்

      காட்டச் சொன்ன மரபு நம்மோடதுன்னு நீதானே பீத்திகிட்ட…!
      இப்ப பதில் சொல்.

      அப்பறம் அணை ங்கிற வார்த்த முதல்ல வந்திட்டா அடுத்த

      வரி… கணை , துணை ,

      விருப்புன்னா வெறுப்பு, கருப்பு, மறுப்பு, ( நல்லவேளை

      இன்னம் கூட ரெண்டு வரி வரலை..வந்திருந்தா பருப்பு……

      செருப்பு… எல்லாம் போட்டாக வேண்டிய கட்டாயம்

      வந்திருக்கும்.)

      அப்பறம் ஒவ்வொரு வரியோட கடைசில வேற,

      என்ன…சொன்ன…

      காணும்….பேணும்…

      உண்டு…கண்டு….

      இப்படியெல்லாம் போட்டிருக்க ……

      இதுக்காக டி. ராஜேந்தர் கிட்ட எவ்வளவு நான் டியூஷன்

      போனேங்கிறத கடைசிவரை சொல்லவே இல்ல.

      கற்பனையின் வண்ணம் என்ன?

      கவி எழுதுற எண்ணம் என்ன அப்படியெல்லாம் கேள்வி

      கேட்டிருக்கியே …

      அதுக்கெல்லாம் பதில் எங்கப்பா?

      இதுவொண்ணும் question paper இல்லையே..?

      இந்தமாதிரி அபத்தக் களஞ்சியங்களா சொல்லிப் புலம்புறத

      விட்டுட்டு எப்ப தம்பி கவிதை எழுதப்போற……………………?!!

      ( சாமானியன் அண்ணாவின் புள்ளிகளுக்கான பொருள் இங்கே

      அனைவருக்கும் புரியும் படி தரப்படுகிறது. )

      Delete
    2. இத்தனை விரிவான ஸெல்ப் எஸ்டிமேஷன்!!!! மறுபடி விஜூ அண்ணா ராக்ஸ்!!!!

      Delete
  6. அன்பு நண்பருக்கு,

    ‘ஏங்கும் ஒரு கூடு ’
    காதலெனும் மருந்திட்ட... கற்பனைகள் சொல்லப் புரியும்!...
    மறுத்தாலும் நீஎன்னை மறந்தாலும் முள்விட்டு
    மலர்மட்டும் கண்கள் காணும்!...
    பொறுப்பாக எனில்‘உன்னைப் புதைக்கப்போய் உனில்‘இன்று
    புதைந்தென்றன் துன்பம் தீரும்!...
    ‘என்நெஞ்சில் தகர்கின்ற இன்பத்தில்
    தாளாத காதல் உண்டு!

    -தங்களின் தமிழ்க் கவிதை மீது தளாத காதல் எனக்கு(ம்) உண்டு.
    அருமை...வாழ்த்துகள்.


    ReplyDelete
    Replies
    1. மணவையாருக்கு வணக்கம்,
      தங்களைப் போல, கவிதை, சிறுகதை, மேடைநாடகங்கள் , இசைப்பாடல்கள் எனப் பலதளங்களில் இயங்கத் தெரியாதவன் நான்.
      நீங்களெல்லாம் திரைத்துறைக்குப் போயிருந்தால் எங்கேயோ சென்றிருப்பீர்கள் என்ற எண்ணம் உங்கள் நாடகங்களைப் பார்க்குந்தருணங்களில் பலமுறை எனக்கு ஏற்பட்டதுண்டு.
      வலைத்தளத்தில் நான் அறிந்தவரை, இத்துறையில் திறம்பட விளங்குபவர் துளசிதரன் தில்லையகத்து அய்யா அவர்கள்.( இத்துறை மட்டுமல்ல்...தங்களைப் போலவே பல்துறைகளிலும்)
      அவருடைய தொடர்பு உங்களை இன்னும் செம்மைப்படுத்தும் என்று நம்புகிறேன்.
      இணைய வெளிச்சம் தமிழுக்கு உங்களை இனங்காட்டட்டும் என வாழ்த்த வயதில்லாவிட்டாலும் வலைப்பதிவை உங்களுக்கு முன் ஆரம்பித்து விட்டேன் என்ற மூப்பில் வாழ்த்துகிறேன்.
      நன்றி.

      Delete
  7. கரைக்கின்ற கனவுக்கும் கரையில்லாக் கடலுக்கும்
    கவியெழுதும் எண்ண மென்ன?
    மறுத்தாலும் நீஎன்னை மறந்தாலும் முள்விட்டு
    மலர்மட்டும் கண்கள் காணும்! ஆகா அருமை அருமை சகோ !
    ஆமா இத்தனை கற்பனை கவிதை கொண்டு எழுதுகிறீர்கள் அதென்ன அங்கு மட்டும் நாலே நாலு வார்த்தை பேசினீர்கள். அம்மு தான் பேசிக் கொண்டு இருந்தாராமே நம்ம அம்மு கூடவே பேசமுடியலைன்னா வேறு யார் கூட பேசமுடியும் சொல்லுங்க.. அல்லது அவர் பேசவிடாமல் அவரே பேசினாரா ?சந்தோஷத்தில் ....சந்தர்ப்பமே தராமல் ஹா ஹா .... இருக்கும் இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சகோதரி மைதிலி அவர்கள் சற்று அதிகப்படுத்திக் கூறிவிட்டார்.
      பேசும்சூழல் வாய்த்த அந்த குறுகிய நேரத்தில் மௌனமாய் இராமல் பேசிக்கொண்டுதான் இருந்தோம்.
      கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்ப் பேசுபவர்கள் இருந்தால்
      செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்பவை கேட்பவை விடாதுளத்து அமைக்கும் படி நம் இலக்கணங்கள் கூறுவது நீங்கள் அறியாததா சகோதரி,
      அதைக் கொஞ்சம் செய்து கொண்டிருந்தேன்.
      மற்றபடி நானும் பேசினேன் என்பதே உண்மை.

      Delete
    2. ரெண்டு பேரும் கூட்டணி அமைத்து என்னை கலாய்கிறீங்க தானே:)) சரி பிழைத்து போங்க இனிய பிசாசுகளே:))))

      Delete
    3. அவங்க இனியா,
      நான் பிசாசா...?!!
      ஆஹா ..ஞாபகம் வந்திருச்சு
      நான் கேட்ட கேள்வி..
      தமிழ்ப்பிசாசப் பத்தி..
      அதானே இப்படிக் குத்திக்காமிக்கிறீங்க..!
      ம்ம்,
      நான் தமிழ்ப்பிசாசுன்னு சொன்னது, வடமொழி- தமிழ் இரண்டிலுமே புலமைபெற்று, தன்னோட ஞாபகத்திறனாலயும், பாடம் சொல்லும் விதத்தாலயும், இவன் மனுசனா இல்ல பிசாசா என்று பிரமிப்போடு பேசப்பட்ட பி.சா. சுப்ரமணிய சாஸ்திரி.
      இவர் பேரோட Short form மும் பி.சா.சு. தான்.

      Delete
  8. தமிழ்வார்த்தைகளில் ஜாலம் காட்டி எளிமையாகப் புரியும் வண்ணம் இயற்றியிருக்கும் உங்கள் மரபுக்கவிதை செம,,,,

    ReplyDelete
  9. ரசிக்க வைக்கும் வரிகள்! இலக்கண நயத்தோடு மிளிர்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா.

      Delete
  10. வணக்கம் ஐயா!

    எண்ணங்கள் ஓங்கி எதிரொலிக்கக் காட்சியாக
    வண்ணக் குளமான வார்ப்பு!

    என்னவெனச் சொல்ல உங்கள் வரைதலின்
    வார்த்தை விளையாட்டுக்களை!.. மிகச் சிறப்பு ஐயா!
    ஆழ்ந்து இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. ரசித்தேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  12. வெறுப்போடும் என்‘அன்பை விலைபேசும் உளம்கண்டு
    வருத்தத்தில் உயிரும் வாடும்!

    தொடுத்தாலும் கிட்டாத தேன்பூவே! வண்டாகத்
    துள்ளும்நின் கண்கள் எங்கே?
    துயரெல்லாம் உடன்மாய்த்துத் துணைநீயே எனவீழ்ந்து
    துடிக்கும் என்நெஞ்சம் அங்கே!

    பறிக்கத்தான் கதிரெட்டும் நிலவெட்டும் உனையெட்டிப்
    பார்க்கத்தான் அஞ்சி நின்றேன்!//

    மிகவும் ஈர்த்த வரிகள்! ஆசானே! மைதிலி சகோதரி சொல்லியிருந்தது போல் தாங்கள் பேசுவது குறைவின் காரணம் நன்றாகப் புரிகின்றது! பின்னே இப்படி அருவியாகக் கொட்ட வேண்டும் என்றால் தங்களின் மூளை இப்படிச் சிந்திப்பதால்தானே!

    ம்ம் நாங்கள் தங்களின் படைப்பை விமர்சிப்பதற்கு இல்லை! ரசிப்பதற்கு மட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ச்சி..
      பேச்சு.. வகுப்பறைகளில் பேசுவதுபோல வெளியிலோ மேடையிலோ பேச முடியவில்லை என்பதே உண்மை.
      அது என் பலவீனமே.
      மாற்றிட முயல்கிறேன் இப்பொழுதெல்லாம்.
      தாங்கள் விமர்சிப்பதற்கு இல்லை என்றால் பின் நானெல்லாம் எழுதிப்போவதெதற்கு...?
      தாராளமாய்க்
      குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. படுத்தாலும் உறக்கத்தைப் பகைத்தாலும் உன்‘எண்ணம்

    பகலாக இரவை மாற்றும்!
    கரைக்கின்ற கனவுக்கும் கரையில்லாக் கடலுக்கும்

    கவியெழுதும் எண்ண மென்ன?
    நெருப்போடு விளையாட நெஞ்சத்தை விட்டென்றன்

    நிலைகண்டு வாடு கின்றேன்!
    ஒருகூடு நின்றேங்கும்! உயிர்வந்து குடியேற


    உனையெண்ணிச் சிந்து பாடும்!
    இத்தகைய வரிகளை கண்ணுறும்பொழுது
    அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள்.அத்தகைய புலமையை பெற்றவர் நண்பர் ஜோசப் விஜுவும் ஒருவரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இது வெறும் புகழ்ச்சி அல்ல! கவிதையை கண்டதால் வந்த மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் வசந்தமுடன்
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அகநானூற்றுப் புலவர்களோடெல்லாம் என்னை ஒப்பிடுவது தாங்கள் என்மேல் கொண்ட அன்பைக் காட்டுகிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  15. சிறு விளக்கம் மற்றும் சுயவிளக்கம் !

    சிறுவிளக்கம் : தம்பி ஜோசப்விஜு யாரோ தமிழாசிரியருக்கு எழுதிய விளக்கவுரையை எனது பதிவுக்கான பதிலாக கொடுத்துவிட்டார் ! தடங்கலுக்கு வருந்துகிறோம் !! ல, ள குழப்பமே இன்னும் தீராத இந்த சாமானியனின் மெளனத்துக்கு இத்தனை விளக்கம் கொடுத்து என்னை நக்கீரனாக்கி விட்டீர்களே... சபித்துவிடாதீர்கள் தம்பி ! பிரான்சில் குளிர் ஆரம்பிக்கும் காலம்... பொற்றாமரைக்குளங்களில் கூட ஒளிய முடியாது !!!

    சுயவிளக்கம் : ஒவ்வொரு வாசிப்பும் ஒரு அனுபவம் ! சிலவற்றை பார்த்தாலே போதும், வாசிக்க இயலாது ! காரணம்.. தூங்கிவிடுவோமே ! சில வாசித்தோம் என்பதான ரகம் ! சிலவற்றை உடனடியாக விவாதிக்க, பாராட்ட, சிலாகிக்க தோன்றும் ! படைப்பும் வாசிப்பும் ஒன்றாகி, வாசித்து முடித்ததும் தியானத்தின் வெறுமை மனதை தழுவும். இந்த கவிதையை படித்ததும் அந்த அனுபவமே கிட்டியது ! வலிந்து வார்த்தைகளை தேடுவது வீண் என புள்ளிகளிட்டேன்... ஆனால் இந்த கோலத்தை எதிர்பார்க்கவில்லை நான் !!!

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. சும்மாதான் அண்ணா...
      என்னடா ஏதாவது ரசிக்கும் படி எழுதுபவர் நம்மை இட்டு நிரப்பும் படி வெற்றிடத்தை விட்டுவிட்டுப்போய் விட்டாரே....என்பதால் நானே நிரப்பிவிட்டேன்.
      வேறு யாருடைய பாடல்களையும் இப்படி எல்லாம் விமர்சிக்க முடியாதுதானே...!
      ஆகவே நமது பாடலை நாமே ஒருவழி பண்ணிவிடுவோம் என்று களம் புகுந்ததன் விளைவுதான் இது!
      கோலம் தெரியாதவனிடத்தில் புள்ளிவைத்துக் காட்டினால் அலங்கோலப்படுத்திவிடுவான் என்பதைப் புரிந்து கொண்டீர்களோ...??
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி .

      Delete
  16. நீங்கா‘என் நினைவோடு நீசெய்த மாயத்தென்
    நிழல்தன்னைத் தேடு கின்றேன்-----மரபுக்கவிதை நமக்கு வெகு தூரம் இருந்தாலும் கடந்துதான்( படித்துதான்) ஆக வேண்டும்.நன்றி!

    ReplyDelete
  17. கொஞ்சமேனும் எஞ்சியிருந்த என் அகந்தை அழிந்தது. இந்தக் கவிதையைப் படித்ததும்.
    அருமை . அருமை.
    என் மரபுக்கவிதைகளைக் காண எனது இன்னொரு வலைத்தளமான www.arutkavi.blogspot.com வலைத்தளத்துக்கும் வாருங்கள்

    ReplyDelete
  18. என்‘அன்பை விலைபேசும் உளம்கண்டு
    வருத்தத்தில் உயிரும் வாடும்!-----காதலில் தோற்றவர்களுக்குத்தான் இதன் உண்மை தெரியவரும்

    ReplyDelete

  19. வணக்கம்!

    ஏங்கும் மனத்தின் எழுத்தைப் படித்தவுடன்
    நீங்கும் துயரம்! நெடுந்தமிழ் - ஓங்குகின்ற
    சந்த விருத்தங்கள் தந்த தமிழ்ச்சோசப்
    கந்தம் கமழும் கவி!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete