Sunday 31 August 2014

கண்ணோடு நின்ற கனவு.




............................ கலிவெண்பா
...............................

நெஞ்சள்ளும் பேரழகால் நித்தம் எனைவென்று
அஞ்சி நடந்தென்னை ஆள்கின்றாய்! கொஞ்சிடச்செய்
கிள்ளை மொழியாய்க் குயிலொலியாய் ஏழிசையாய்ப்
பிள்ளை மழலையெனப் பேசுகிறாய்! நெஞ்சம்
நினைந்துரும் வண்ணம் நிழல்போல வந்தாய் !
எனைமறக்கும் மாயம்‘ஏன் செய்தாய்? உனையெண்ணிக்
காலைக் கதிர்முகத்துக் கட்டழகைக் கண்விரும்பும்
சோலைப் பனிபோலச் சோர்கின்றேன்! எட்டஉள
கானல் நெருங்கிடவே கண்விலகிப் போவதுபோல்
ஏனோ எனைவிட்டுப் போகின்றாய் ! வானத்தில்
கொட்டிக் கிடக்கும் கணக்கில்லா விண்மீனை
விட்டு நிலவை விரும்பியதால் தொட்டுப்
பிடிக்க நினைத்தாலும் பின்தொடர்ந்தென் அன்பைத்
தொடுக்க நினைத்தாலும் தோற்றேன்! துடிக்கும்
இதயச் சிமிழுக்குள் எங்கிருந்தோ வந்து
பதியனிட்டுப் போனாயுன் அன்பை ! விதியென்று
வளர விடுவேனோ? வாடாமல் காத்துத்
தளர உயிர்தோயத் தாளா இளமனதின்
பூக்கள் எழுகிறதுன் புன்னகையால் நீர்வார்த்துக்
காக்கும் மனமற்றாய் காணாமல் ! தீ்க்குள்‘என்
சிந்தை தடுமாறும்! செல்லரித்துப் போனமரம்
அந்தி - பகலாக்க அங்கெரியும்  நொந்துருகிப்
பள்ளப் படுகுழியில் போவோம் எனஅறிந்தும்
உள்ளம் உனக்காய் உருகிடுதே! துள்ளும்
நதியாய்ப் பெருக்கெடுத்து நானாகி, வீழும்
விதியை உடன்மாற்ற  வாராய்! பதிவாக
எல்லார்க்கும் கிட்டா எழில்சேரும் நின்னழகைக்
கல்மேல் எழுத்தேபோல் கண்பொறித்தாய்! இல்லாத
இன்ப ஒளியென்னில் ஏற்றி அணைத்தாயே
துன்ப இருள்மூடத் தூங்கேன்நான்! அன்பால்
அலையும் உயிர்ப்பறவை ஆகாயம் விட்டுக்
கலையும் மனம்சொட்டும் கண்ணீர் ! வலைவீசும்
காந்தம் உனதிரண்டு கண்மணியோ? நான்காணும்
சாந்த முகம்‘இறைவன் சன்னதியோ? பூந்தேரின்
சின்ன அசைவுகளும் என்றன் மனத்திரையில்
மின்னி நிலைத்திடவே மீளேன்நான்! கன்னமிட்டுப்
பார்க்கும் உனதிரண்டு பாழும் விழிவலையில்
போர்க்கும் வழியற்றுப் போனேனே ! வேர்விட்டு
வாழும் செடியாக வீழும் உயிருன்னில்
ஆழும் மனம்கொண்டேன் ஆற்றாமல் வீழும்என்
சோக வளர்பிறையின் சோர்ந்த கனவுகளின்
தாகத் தவிப்பின்னும் தாளாமல் மோகத்தின்
மூச்சில் உயிர்வாழ்ந்து முட்டும் நினைவலையின்
வீச்சில் எழுந்ததுபோல் வீழ்கின்றேன்! பேச்சின்றி
ஓடி நடக்கையிலும் ஓய்ந்து கிடக்கையிலும்
நாடித் துடிப்பாக நீயிருக்கப் பாடியதை
என்றோ ஒருநாளில் என்னோடு நீஉயிர்க்க
நன்றோ இவையென்றே நான்காட்டக் கண்டே‘உன்
செக்கச் சிவந்திட்ட செவ்வான் ஒளிமுகத்தைப்
பக்கத்தில் நின்றே படித்திட்டு வெட்கத்தில்
நின்கண் நிலம்பார்க்க நான்‘உன் முகம்தூக்கி
அன்பின் நெருக்கத் தமிழ்ந்திடவே.... என்றோநான்
கண்ட கனவெல்லாம் கண்ணோடு நின்றுவிடக்
கண்டும் விழிமூடும் கண்ணீரால் துண்டாகிப்
போன இதயத்தின் பொய்க்கணக்கை நீயறியா
தான கவிதைகளில் ஆக்குகிறேன் ! மோனத்தில்
காதல் கருவறையே கல்லறையாய்ப் போனதினால்
பாதம் இழந்த பயணத்தின் வேதனையில்
வென்ற உனதோங்கும் வீரத்தைப் போற்றிமனம்
சென்றகா லத்துச் சிதையமிழ , என்றென்றும்
நீயின்றி வேறு நினைவறியா என்கவிதை
வாயின்றிப்  பேசும் வலி.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

45 comments:

  1. காதல் வலி கவிதை வழியாய்...
    கற்பனை சொட்டுக்கள் கலி வெண்பாவாய்....

    // வாயின்றிப் பேசும் வலி // முடித்த விதம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. அப்பப்பா .. என்னவென்று சொல்வேன் !

    பேச்சிழந்தேன் மூச்சிழந்தேன் நீ
    பேசும் தமிழ் மொழியால் !இங்கு
    காய்த்த கனி அத்தனையும்
    கரும்பாக இனிக்கிறதே கவிமனமே !

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே
    இன்பத் தமிழால் இனியும் எங்கள் இதயங்களைக் குளிர
    வைப்பாய் !

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கவிதைப் பின்னூட்டத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  3. உங்களது கவியை பாராட்ட தகுதியுண்டோ ? விக்கித்து நிற்கின்றேன் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. தகுதி....
      தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லார்க்கும் உண்டு நண்பரே!
      படித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள் பல!

      Delete
  4. எனது ''மௌனமொழி'' கேட்பீர்.....

    ReplyDelete
    Replies
    1. மௌனத்தின் அலறல் பாதித்துத்தான் விட்டது!
      உங்கள் மொழியில் விழி நிறைந்தது கவிஞரே!

      Delete
    2. ''மௌனத்தின் அலறல்'' தங்களை மனதை காயப்படுத்தியிருக்கலாம் ? ? ? ஒத்துக்கொள்கிறேன் ஆனால் ? தங்களின் (கவிஞரே என்ற) பொய்யுரையை ஏற்றுக்கொள்வதற்கில்லை கவிஞரே...

      இன்றைய 02.09.2014 வலைச்சர அறிமுத்திற்க்கு எமது வாழ்த்துக்கள் நண்பரே....

      Delete
    3. பொய்யுரை அல்ல புகழுரை யும்அல்ல
      மெய்யுரைதான் கவிஞரே!
      தங்களின் தகவலுக்கு நன்றி!

      Delete
  5. வணக்கம்
    ஐயா.

    படிக்கும் போது மூச்சு தினறுகிறது ஐயா சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தமிழ்ப்பணி உலகம் போற்றும் !
      நன்றி ரூபன்!

      Delete
  6. ** செக்கச் சிவந்திட்ட செவ்வான் ஒளிமுகத்தைப்
    பக்கத்தில் நின்றே படித்திட்டு வெட்கத்தில்
    நின்கண் நிலம்பார்க்க நான்‘உன் முகம்தூக்கி
    அன்பின் நெருக்கத் தமிழ்ந்திடவே.... என்றோநான்
    கண்ட கனவெல்லாம் கண்ணோடு நின்றுவிடக்
    கண்டும் விழிமூடும் கண்ணீரால் துண்டாகிப்
    போன இதயத்தின் பொய்க்கணக்கை நீயறியா**
    காட்சியை விரிகிறது கவிதை!!!
    கனக்கிறது இதயம் !! இளையராஜா பின்னணியில் மோகன் சோக கீதங்கள் கேட்கும் அனுபவம்:(((((
    வலியின் மொழி அருமை அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. வலியின் மொழி.....
      இறக்கி வைத்துவிட்டு
      படிக்கும் மனங்களில் கண்ணீரைத் தேடுவான் படைப்பாளி!
      உண்மைதானோ...?
      உணர்ந்த உங்கள் மனதிற்குத் தலைவணங்குகிறேன் சகோதரி!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  7. வணக்கம் ஐயா!

    வாயின்றிப் பேசும் வலிமொழிப் பாடலின்
    நோயினை நோக்கினேன் நொந்து!

    பாவில் வரும் உருவங்களைக் காண வைக்கும்
    உணர்வினைக் கொட்டிய கவியடிகள்!
    உணர்ந்து படிக்க உள்ளத்தில் காட்சிகளாய் விரிகின்றது.

    மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
      பரிந்து இப் பாவியேனுடைய“
      நோயுணுர்ந்தாற்றும் உங்கள் மனநுண்மை
      எல்லார்க்கும் வராது.
      நன்றி சகோதரி!

      Delete
  8. இப்போது மரபு எழுதுவது பெரிய விசயம்
    நீங்கள் அசாத்தியமான ஒரு செயலை செய்துகொண்டிருகிறீர்
    வாழ்த்துக்கள்
    முகநூலில் பகிர்ந்தோம்

    ReplyDelete
    Replies
    1. மரபு எவரும் நுழைய முடியாத
      கோட்டை எனமிரட்டிச் சொல்லித் திரிந்தவர்கள்.........
      தேமா புளிமா தளைகள் வராதுனக்குத் தூரப்போ
      என்றுசொன்ன யாப்புப் படித்த தமிழ்க்காவலர்கள் ....
      நான்மரபு கற்றிடக் காரணம் ஆனவர்கள்!
      உள்ளுயிர்ப் பற்ற வெறும்கூட்டைக் காவல்
      புரிந்து மரபைப் புதைத்த கதைகண்டு
      நொந்தேன்! உயிரற்றுப் போன பலவும்
      எழுதி இருக்கிறேன் நானும்.
      மரபதன் ஓசை நயத்தால் ரசிக்கும் படி‘இருக்கக் கூடும்.
      அதுபாடல். ஆனால் கவிதை அதன்இனிய
      ஓசையை ஏற்றுத் துடிக்கும் உயிராய்
      இருந்திட வேண்டாமா?.வெண்பாவைப் பாடுவது
      எந்த அளவு சுலபம் எனக்காட்ட
      வைரமுத்து நண்பரோடு சாப்பிடச் சென்று ,
      அவர்கள் கேட்ட வடைவராத போது
      அதைக்குறித்து வெண்பா இயற்றி உணவு
      தருபவனை வேறு பலகாரம் கேட்குமாறு
      நண்பர்கள் சொன்னபோது, பாடியதாய்ச் சொல்வார்கள்,

      “ ஏண்டா இதற்குப்போய் இவ்வளவு நேரமா
      போண்டா கொண்டுவா போ ”

      இதனை இலக்கணம் தப்பாத வெண்பா
      என்றுதான் சொல்லலாம்.ஆனால் கவிதை...........................?
      அதற்கு இதுபோல் வரும்யாப்புச் சட்டகத்தில்
      உள்ளிட எப்போதும் ஓருயிர் தேவை.
      அவையின்றிப் போகும் வெறும்பாடல் கொண்டதால்
      இந்த மரபு வலுவிழந்து போனது.

      ( வித்தியாசமான பின்னூட்டமிது தோழர்.
      இந்தப் பின்னூட்டம் முழுதுமே வெண்பா யாப்புதான்.
      இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் அன்றிப் பிற தளைகள் இப்பின்னூட்டத்தில் இல்லை.
      எங்கே எதுகை மோனை என்று கேட்பவர்களுக்கு அவை வேண்டப்பெறா “ செந்தொடை “ இது என்று கூறிவிடலாம்.
      மரபு அசாத்தியமானது இல்லை என்பதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.)
      உங்களின் அன்பினுக்கு நன்றி!

      Delete
  9. காந்தம் உனதிரண்டு கண்மணியோ? நான்காணும்
    சாந்த முகம்‘இறைவன் சன்னதியோ? //

    காந்தம் உங்கள் கவி மொழியே எங்களுக்கு


    கலிவெண்பா எழுதி எங்களைக்
    கிலி கொள்ள வைத்து
    எலி போன்ற எமது தமிழை
    புலி போல் பாய்ந்திட உதவும் ஆசிரியரே!

    ஐயகோ இதற்கு மேல் வேண்டாம்....நாங்கல் என்னதான் கற்றுக் கொண்டாலும்...இது போல எழுதுவது அரிது! அரிது எமக்கு அரிது....

    ReplyDelete
    Replies
    1. அட அட அட என்னமா எழுதிறீங்க சகோ எதுகை மோனை எல்லாம் வருது போல அப்புறம் என்ன பயம் கலக்கப் போறீங்க சகோ keep it up.

      Delete
    2. அதானே...!
      அரியது எது எனச் சொல்லும் அவ்வையார் பாடல்
      “ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது“
      என்று சொல்ல அவை இரண்டும் வாய்த்த அய்யா நீங்கள் இப்படிக் கூறலாமா?
      தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி அய்யா!

      Delete
  10. ஆஹா அருமையன கலிவெண்பாவில் குளித்து சிலிர்த்து, ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. கலி வெண்பாவை குளி வெண்பா ஆக்கி விட்டீர்களே!
      ஹ ஹ ஹா...
      நன்றி அய்யா!

      Delete
  11. அருமை
    அருமை
    ரசித்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. காதல் கருவறையே கல்லறையாய்ப் போனதினால்
    பாதம் இழந்த பயணத்தின் வேதனையில்
    வென்ற உனதோங்கும் வீரத்தைப் போற்றிமனம்
    சென்றகா லத்துச் சிதையமிழ , என்றென்றும்
    நீயின்றி வேறு நினைவறியா என்கவிதை
    வாயின்றிப் பேசும் வலி.
    அருமை அருமை சகோ !

    வலிகளை வடிக்க
    வரிகள் எத்தனை
    சலிக்காமல் வருமா
    வார்த்தைகள் அத்தனை!
    அம்மாடியோவ் எப்படி எல்லாம் அசத்திறீங்க சகோ ம்..ம்...ம். வாழ்த்துக்கள் சகோ ....!

    ReplyDelete
    Replies
    1. போன பதிவில் உங்களின் கேள்விக்கான பதில் தானே இந்தப் பதிவு சகோதரி!
      உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      Delete
  13. இங்கு தமிழறிஞர்கள் சிலர், வெண்பாக்களில் பாடல் எழுதி வருபவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள் என்று கூறுவதை கேள்விப்பாட்டிருக்கிறேன்.

    இப்பொழுது தங்களின் இந்த கவிதையை (ஒரு முறைக்கு இரு முறை) படித்து பார்த்த பிறகு. அந்த அறிஞர்கள் கூறுவது உண்மை தான் என்று தோன்றுகிறது. இந்தமாதிரி எழுதுபவர்களை நான் இப்பொழுது தான் பார்க்கிறேன்.

    தொடரட்டும் தங்களது சீரிய பணி.

    ReplyDelete
    Replies
    1. அறிஞர்கள் கூறுவதில் உண்மை இல்லை அய்யா!
      அருள் கூர்ந்து தோழர் மது வின் கருத்திற்கான எனது பின்னூட்டத்தைக் காண வேண்டுகிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      உடல் நலம் தேறி விட்டீர்கள் தானே...?

      Delete
    2. தோழர் மதுவின் கருத்துரைக்கான பதிலும் வெண்பாவிலேயே எழுதிவிட்டீர்கள்.

      உடல் நலம் தேறியிருக்கிறது. தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete

  14. வணக்கம்!

    வாயின்றிப் பேசும் வலிக்கவிதை, என்மனத்தை
    நோயின்றி வாட்டி நொறுக்கியதே! - நீயின்றி
    வேறு நினைவேது? கூறும் அடிபடித்தே
    ஏறும் எனக்கிங் கினிப்பு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. காயுண்டு என்றாலும் ”உண்டு” கவியென்னும்
      தாயுள்ளம் உண்டு தமிழாலே !- சேயுள்ளம்
      பட்ட உமையின்னும் பாடு பலசெய்தும்
      தொட்டென்றும் வேண்டும் துணை!

      Delete

  15. தங்கள் பார்வைக்கு மட்டும்

    எனைவென்று அஞ்சி என்ற சீா்கள்
    எனைவென் றஞ்சி எனப் புணா்ந்து தளை கெடும்

    கல்மேல் என்ற சீா் புணா்ந்தல் கன்மேல் என வந்து எதுகை மாறும்

    கலிவெண்பாவைக் குறித்து என் ஆசிாியா்கள் உரைத்த அனுபவ நுட்பங்களை மின் அஞ்சலில் எழுதுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ப்பெருந்தகையீர்,
      வணக்கம். மரபில் பட்டு அதைவிட்டு விலகாமல் தவறினைச் சுட்டும் தங்களின் பின்னூட்டம் உண்மையில் மகிழ்கிறேன்.
      குற்றியலுகரம் பற்றி ஒரு கட்டுரையில் கூட இது போன்ற ( எனைவென்று அஞ்சி ) கருத்துக்களை விவாதித்திருக்கிறேன்.
      புணர்ச்சியைப் பொருத்தவரைப் புணர்ச்சிக்குட்படும் சொற்கள் கூடப் புணர்ச்சிக்குட்படுத்த வேண்டாத இடங்களில் “ விட்டிசைத்தல்“ எனும் இலக்க அமைதி கொள்ளலாம் என நினைக்கிறேன். குற்றியலுகரப் புணர்ச்சி இன்றைய கவிதை வழக்கில் கட்டாயமில்லா விட்டாலும் புணராமல் இது போல் நிற்கும் போது அங்குப் புணர்ச்சியற்ற ஓசை நிறுத்தம் வேண்டப்படுவதாகக் கருதுகிறேன். ஏறக்குறைய இருபதாம் நூற்றாண்டின் பெருங்கவிஞர்களான பாரதி பாரதிதாசன் இவர்கள் பாடல்களிலேயே பெரிதும் வழக்கிறந்த உடம்படு மெய் கூட இந்த ஓசை நிறுத்தம் மற்றும் எளிய புரிதல் வேண்டி அவர்கள் அமைத்துக் கொண்டது என்பதாக நான் நினைக்கிறேன்
      அதைப் போலவே ஓசை நிறுத்தம் வேண்டும் போதும் பொருள் விளக்கம் பெறவும் குற்றியலுகரத்தைப் புணர்ச்சிக்குட்படுத்தாது அமைக்கலாம் எனக் கருதுகிறேன். இயல்பாகப் புணர வேண்டிய “ மெய் + உயிர் “ புணர்ச்சியைக் கூடப் புணர்ச்சிக்கு உட்படுத்தாமல் அமைப்பதும் இது போலத்தான்.
      சான்றாக,
      யாது மாகி நின்றாய்-- காளி
      எங்கும் நீ நிறைந்தாய்
      தீது நன்மை யெல்லாம்-- காளி
      தெய்வ லீலை யன்றோ?
      பூதம் ஐந்தும் ஆனாய் -- காளி
      பொறிகள் ஐந்தும் ஆனாய்
      போத மாகி நின்றாய்-காளி
      பொறியை விஞ்சி நின்றாய்
      என்ற பாரதியின் காளி பாட்டில் பூத மைந்தும் ஆனாய் என்ற இயல்புப் புணர்ச்சியை விட ( இதனை பூதத்தின் மக்கள் ( மைந்து ) எனக் கொள்ளவும் இடமுளதால் ) பூதம் ஐந்தும் எனப் பிரித்தமைத்தால் பொருள் தெளிவு படுமென்றும் பொறி களைந்தும் ( பொறிகளை நீக்கியும் எனப் பொருள் படும் என்பதால் ) பொறிகள் ஐந்தும் எனப் பிரித்தும் அமைப்பது பொருள் தெளிவு சார்ந்தது சரியாக அமையும்.
      தாங்கள் காட்டிய “கல் மேல்“ என்பது எதுகை கருதி என்பது ஒருபுறமிருக்கக் கூடக் “கன்மேல்“ என்றால் எத்தனை பேருக்குப் புரியும்? “கல் தடுக்கி விழுந்தேன்“ என்று சொல்வது இலக்கணப்படித் தவறாக இருக்கலாம்.
      ஆனால் கற்றடுக்கி விழுந்தேன் என்னும் வழக்கு இன்று இல்லை தானே!
      பழைய மரபுகள் இருக்கின்றன. அதைக் கண்டிப்பாய் அறிந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு மரபு சார் இலக்கியங்களைப் படிக்கின்ற ஒரு சிலரேனும் சிரமப்படாமல் இருக்க புரிந்த வழக்கில், ஏற்கின்ற தமிழில் எழுதிச் செல்வது நல்லது என நினைக்கிறேன்.
      தவறாயின் நிச்சயமாய் மாற்றுக் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்
      நன்றி!

      Delete
    2. அய்யா,
      வணக்கம். நீண்ட பின்னூட்டத்தின் இடையில் கூற நினைத்திருந்த இரு முக்கியக் கருத்துகளைக் கூறாது விட்டுவிட்டேன்.
      1) நான் புணர்ச்சிக்குட்படுத்தாது எழுதியிருந்தாலும் மரபிலக்கணப்படி “ எனைவென்று அஞ்சி “ என்ற சீர்கள் “ எனைவென் றஞ்சி “ என்றே புணரும். தளை தட்டாமல் இருக்க, “எனைவென்றே யஞ்சி “ என இது மாற்றப்பட வேண்டும்.
      2) கலிவெண்பா குறித்துத் தங்கள் பட்டறிவின் நுட்பங்களை அறிந்திட ஆவலாய் உள்ளேன்.
      நன்றி!

      Delete

    3. வணக்கம்!

      பொருந்தும் இடங்களில் விட்டிசைத்தல் என்ற விதியை ஏற்கலாம்.
      (எனைவென்று அஞ்சி) இவ்விடத்தில் விட்டிசைத்தல் விதியை எற்பதற்கில்லை. இதுபோன்ற இடங்களில் சான்றோர் ஏகாரம் அல்லது உம் சோ்த்து (எனைவென்றே அஞ்சி) ( எனைவென்றும் அஞ்சி) எனச் சீர் கெடாமல் காத்துக்கொள்வார்.

      குற்றியலுகரப் புணர்ச்சி இன்றைய கவிதை வழக்கிற்குக் கட்டாயம் இல்லை என்னும் கருத்தை நான் எப்படி ஏற்பேன்?

      பூச மைந்து என்பதைப் பொருள் தெளிவுற பூசம் ஐந்து எனச் எழுதுவது ஏற்புடையது. கன்மேல் என்ற சீரைக் கல்மேல் என்று விளக்கமுற எழுதலாம். ஆனால் எல்லார்க்கும் என்ற எதுகைக்குக் கல்மேல் என்ற சீர் எதுகை அன்று.

      கல்மேல் எழுத்தாகக் கன்னல் கவிதீட்ட
      என்மேல் இரக்கம் புரிந்திடுக! - இன்றமிழே!
      உன்மேல் உயிருடையேன்! ஓங்கிடும் பற்றுடையேன்!
      பொன்மேல் பதிப்பாய் புகழ்!

      மேலுள்ள என் வெண்பாவில் கன்மேல் என்று எழுத வேண்டியதைக் கல்மேல் என்று எழுதலாம்.

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete

    4. ஐயா வணக்கம்!

      தங்கள் பார்வைக்கு மட்டும்

      கலிவெண்பாவைக் குறித்து என் ஆசிாியா்கள் சொன்ன இரண்டு குறிப்புகள்

      1. நேரசையில் அடிகள் தொடங்க வேண்டும்!
      நிரையசையில் தொடங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

      2. நிரையசையில் தொடங்கும் அடிகளைப் புளிமாங்காயாக, கருவிளங்காயாக வருமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

      இவ்வகையில் அமையும் கலிவெண்பா ஓசையில் சிறந்திருக்கும்.

      ஒரு நுாலில் நற்பது வெண்பாக்கள் உள்ளன என்றால் முப்பது வெண்பாக்கள் நேரசையில் தொடங்கப்பட்டிருக்கும்

      Delete
    5. அய்யா,
      வணக்கம். தங்களின் மீள்வருகையும், இலக்கணச் செறிவு மிகுந்த பின்னூட்டமும் கண்டு பல கற்கிறேன்.
      கன் மேல் என்பதைத் தாங்கள் கல் மேல் என விளக்கமுற எழுதலாம் என ஏற்றமைக்கு நன்றியுடையேன்.
      அடுத்து,
      கல்மேல் என்பதற்கு எதுகையாக “ எல்லார்க்கும்“ என்பது வராது எனத் தாங்கள் குறிப்பிடுவதைப் பற்றிய விளக்கம் வேண்டுகிறேன்.
      முதலெழுத்து அளவொத்து இரண்டாமெழுத்து ஒன்றத் தொடுப்பது எதுகை என்றே நான் அறிந்திருக்கிறேன். அதனை அடுத்து வரும் எழுத்துகள் பற்றிய பார்வையை இலக்கண நூல்களில் நான் கண்டதில்லை.
      ஓசையை உளங்கொண்டு தேமாவிற்கு எதுகையாக தேமா வருதல் நன்று எனக் கூறுவீர்களாயின் அதை ஏற்கலாம். சிறந்த ஓசையூட்டத் துணைபுரிவதாகும் அது.
      ஆனால் கல்மேல் என்பதற்கு எல்லார்க்கும் என்பது எதுகை அன்று எனத் தாங்கள் கூறுதல் பற்றிய கூடுதல் விளக்கம் வேண்டுகிறேன்
      “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
      ஏங்கொலி ஞாலத் திருளகற்றும் “
      என்பதில் ஓங்கலுக்கு - ஏங்கொலி என்பதை எதுகையாகக் கொள்ளலாகாதா?

      “கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
      வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்......“

      என்னுந் திருவாசகத்தில் கல்லா என்பதற்கு வல்லசுரர் என்பதை எதுகையாய்க் கொள்ள முடியாதா?

      இதை யொட்டி,

      ---எல்லார்க்கும் என்ற எதுகைக்குக் கல்மேல் என்ற சீர் எதுகை அன்று.---


      என்ற தங்களின் கருத்திற்குக் கூடுதல் விளக்கம் வேண்டி நிற்கிறேன்.

      விட்டிசைத்தல் என்பதை ஓசை நிறுத்தம் வேண்டும் இடங்களில் புலவன் அமைக்கலாம் என்பது நான் கண்டது.
      “கற்று, அடங்கி நின்றான் “ என்பதில் இன்று நாம் கையாளும் அரைப்புள்ளியைக் கொண்டு இந்த விட்டிசைத்தலைப் பெற முடியும். இதை கற்றடங்கி நின்றான் என்று சொல்லுவதுமொன்று. இன்றைய கவிமரபில் ஏராளமான சான்றுகளை இந்தக் குற்றியலுகரத்தைப் புணராமல் கவிஞர்கள் பயன்படுத்தி இருப்பதைக் காட்ட முடியும் அய்யா!
      மரபின் படி இக்குற்றியலுகரம் மட்டுமன்று, உடம்படுமெய்ப்புணர்ச்சியும், உடல்மேல் உயிர்வந்தொன்றும் இயல்புப் புணர்ச்சியும் கட்டாயமே!
      அவற்றை விட்டு எழுதும் கவிஞர்கள் என்ன அமைதி கூற முடியும்?
      புரியும் படிச் சொல்கிறேன் என்றல்லாமல்!
      நன்றி!

      Delete
    6. தமிழ்ப்பெருந்தகையீர்,
      வணக்கம்.தங்கள் ஆசிரியர்கள் கூறியது சரிதான்.
      நேரசையில் சீர்கள் தொடங்கினால் எதுகை கருதி அடுத்த அடியும் நேரசையில் தொடங்குதல் பாடல் மரபு.
      வெண்பா யாப்பினைப் பொருத்தவரை, நேரசைச்சீரை அமைப்பதனால் அதற்கு முன்னுள்ள சொல்லைக் கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், என்னும் ஆறு வாய்பாடுகளுள் ஒன்றாக அமைக்கலாம்.
      ஆக நேரசையில் தொடங்கும் சொல்லுக்கு முன்புள்ள சொல் தெரிவுக்கு ஆறு வாய்ப்புகள் உள்ளன.

      நிரையசையில் தொடங்கும் சொல்லுக்கு முன்,
      தேமா, புளிமா, என்னும் இரு வாய்பாடுளில் அமைந்த சொற்களை மட்டுமே அமைக்க முடியும். எனவே, நிரையசையில் தொடங்கும் சொற்களுக்கு முன்வரும் சொல்லை வெண்பா யாப்பில் அமைக்க வேண்டுமானால் இரு வாய்ப்புகளே உள்ளன.

      எனவே தங்கள் ஆசிரியர் இந்நுட்பத்தைத் தான்
      ------------நேரசையில் அடிகள் தொடங்க வேண்டும்!
      நிரையசையில் தொடங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.------------------------
      என்று சொல்லியிருப்பார்கள் என்று கருதுகிறேன். கலிவெண்பா யாப்பிலமைந்த சிவபுராணத்துள் மூன்றிலொரு பங்கிற்கு மேல் ( தொண்ணூற்றைந்து அடிகளுள் முப்பந்தைந்து அடிகளுக்கு மேல்) நிரையசையில் தொடங்கும் சீர்கள் வந்துள்ளன.
      அதனால் ஓசை குறைந்தது என்பதை ஏற்கத் தயங்குகிறேன். கலிவெண்பா யாப்பில் ஆகச் சிறந்த ஓசை நயத்திற்கு யார்கேட்டாலும் தயங்காமல் நான் எடுத்துக் காட்டும் பகுதி அது.

      எழுதுவோர்க்குக் கிட்டும் அதிக சொல் தெரிவு வாய்ப்பிற்காகவே நேரசைச் சீர்கள் வெண்பாவில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன என்பது என் கருத்து.
      தவறெனில் சுட்ட வேண்டுகிறேன்.


      “நினையும் படிப்பெல்லா நின்னைப் படிப்பார்
      ..உனையும் படிப்பிப்பா ருண்டோ? “

      என்னும் தமிழ்விடு தூது!
      நானும் சொல்கிறேன்.

      நன்றி அய்யா!

      Delete

    7. ஐயா வணக்கம்!

      "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
      ஏங்கொலி ஞாலத் திருளகற்றும்"
      என்பதில் ஓங்கலுக்கு - ஏங்கொலி என்பன சிறந்த எதுகையாகும்.

      "கல்லா மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
      வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்....."

      என்னுந் திருவாசகத்தில் கல்லா என்பதற்கு வல்லசுரர் என்பதும் சிறந்த எதுகையாகும்.

      இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை என்றாலும் சிறந்த புலமையுடையோர் சீர் முழுவதும் ஓசை ஒன்றிவரப் பாடுவார். கவிதைத்திறன் வளர வளர முதற்சீருடன் இரண்டாம் சீரும் ஓசை ஒன்றிவரப் பாடலாம்.

      "எல்லார்க்கும் என்ற எதுகைக்குக் கல்மேல் என்ற சீர் எதுகை அன்று"
      கவிதை புனைவோர் கவனக்குறைவால் ஏமாறும் இடங்களில் இதுவும் ஒன்று.

      சொற்கள் புணர்ந்த பின் என்ன எழுத்து வருகிறதோ அந்த எழுத்தைத்தான் எதுகையாகக் கொள்ள வேண்டும்.

      கன்னியர் அல்குல் தடம்என யார்க்கும்
      படிவுஅரும் காப்பினது ஆகி
      நல்நெறி விலக்கும் பொறிஎன எறியும்
      கராத்தது நவிலலுற்றது நாம் [கம்ப.பால. 106]

      மேல் உள்ள கம்பராமாயணப் பாடலில் கன்னியர் என்ற சொல்லுக்கு நல்நெறி என்ற சொல் எதுகையாக வந்துள்ளது. நல்+நெறி என்பது நன்நெறி என்று புணரும். புணர்ந்து வந்த எழுத்தையை எதுகையாகக் கொள்ள வேண்டும். இதுதான் மரபு. கவிதை எழுதுகின்ற பொழுது புணர்ந்தே எழுத வேண்டும். அச்சிடும் பொழுது பிரித்து எழுதலாம். அல்லது அருஞ்சொல் விளக்கம் அளிக்கலாம்.

      கல்+மேல் = கன்மேல் என்று புணரும். "ன்" என்ற எழுத்து "ல்"க்கு எப்படி எதுகையாகும். எல்லாக்கும் என்ற சொல்லுக்கு நல்லார்க்கம் பொல்லார்க்கும் வல்லார்க்கம் போன்ற சொல்களே எதுகையாகும். கன்மேல் என்று வரும் சொல்லைக் கல்மேல் என்று எண்ணி "ல்"க்கு எதுகையாகக் கொள்வது தவறாகும். இன்னும் விளக்கமாகச் செல்கிறேன்.

      நல்லலை, என்ற சொல்லுக்குச் கல்சிலை எதுகையாகுமா? ஆகாது! கல்+சிலை = கற்சிலை என்று புணரும். "ல்" என்ற எழுத்துக்கு "ற்" எப்படி எதுகையாகும்? நல்லலை என்ற சொல்லுக்குக் கற்சிலை எதுகைதான் என்பதுபோல் இருக்கிறது எல்லார்க்கும் என்ற சொல்லுக்குக் கன்மேல் என்ற சொல்!

      புணர்ந்தபின் நிற்கும் எழுத்தையை எதுகையாகக் கொள்ளவேண்டும்.

      அடுத்து

      கலிவெண்பாவில் நேரசைச்சீர் வந்தால் ஓசை சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். சிறந்த புலமை உடையோர் எப்படிப் பாடினாலும் சிறப்பாகவே பாடுவார். அனுபவ நுட்பங்கள் எளிதில் கிடைப்பன அல்ல. பல ஆண்டுகளின் பயிற்சியால் வருவன. 30 ஆண்டுகளுக்கு முன் என் ஆசிரியார் சொன்ன அனுபவ நுட்பங்களை நான் இப்போதுதான் ஆகா என்று வியந்து உணருகிறேன். காதல் ஆயிரம் என்ற தலைப்பில் ஆயிரம் வெண்பாக்களை நான் பாடும் பொழுது அவ் நுட்பத்தை உணர்ந்தேன்.

      Delete
    8. கற்றடுக்கி வீழ்ந்தோனைக் கைதூக்கி விட்டதல்லால்
      சொற்றிறத்தால் வென்றவும் சீர்மையெலாம் - நற்றமிழே
      பெற்றதிருப் பேறு! பிழையெனக் குற்றெதென
      உற்றறியச் செய்த உரை!

      அறிவூட்டிய ஆசிரியர்க்கு நன்றி!

      Delete
  16. நீயின்றி வேறு நினைவறியா என்கவிதை
    வாயின்றிப் பேசும் வலி.// சொ(கொ)ல்லாமல் சொல்லும் வரிகள் ரசித்தேன்! அன்புடன் எம்ஜிஆர்

    ReplyDelete
    Replies
    1. அய்யா
      வணக்கம். தங்களின் வருகைக்கும் முதல் பின்னுட்டத்திற்கும் நன்றிகள்

      Delete
  17. முத்துப்போல் பாவுள்ளே மூண்டவலி கண்டழுதேன்
    சித்தமெல் லாமுள் சிதைந்து !

    வணக்கம் கவிஞரே !

    கவிகண்டேன் நல்ல கருத்துக்கள் உண்டேன்
    என்னுள்ளம் தேடும் தமிழ் அறிவும் கண்டேன்
    இதுபோல எந்நாளும் வேண்டும் தொடர்ந்து வருவேன்

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே!
      வணக்கம். தங்களின் வருகையும் பின்னூட்டமும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றன.
      வெறும் உபச்சாரத்திற்காக ஒரு வெண்பாவில் பதிலளித்துப் போக விரும்பவில்லை.
      என் வயதோ படிப்போ அனுபவமோ குறைவுதான்.
      தங்களைப் போன்றோரின் படைப்புகளை ரசிக்கும் நிலையில் இருக்கும் என்னை.
      நீங்களே வந்து என் எழுத்தைப் பாராட்டுவதை விட நான் பெற்ற பேறு வேறொன்றும் இல்லை.
      நன்றி என்பதை விடக் கனமான வார்த்தை எதும் இருந்தால்
      அதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

      Delete