Saturday 16 August 2014

நீ என்னை ஆள்க!


ஓங்கும் மலையாகி
     உன்னை நான்மறக்கத்
தூங்கும் வானாய்நீ
     தோன்றமனம் தோற்குதடி!

 தோற்றேன் நான்‘என்று
     துடிக்கின்ற போதுமனம்
தேற்றும்‘உன் நினைவுத்
      தேரேறிப் போகுமடி!

அன்பால் நீஎன்னில்
     அகலா திருக்கையிலும்
உன்பால் உயிர்விட்டிவ்
     (உ)டலுன்னைத் தேடுதடி!

என்னை விட்டொதுங்கி
     எங்கோநீ போகையிலும்
உன்னை என்மனது
     உள்ளளவும் பேணுமடி!

நீயும் அறியாது
     நானுன்னை எண்ணிடவே
மாயும் தவமிங்கு
      மீண்டும் தொடங்குதடி!

இருந்தும் இல்லாத
     இதயம் உனைச்சேரப்
பொருந்தும் வழியின்றிப்
     பொழுதும் போகுதடி!

மார்பில் தலைசாய்த்து
     மெல்ல அழுதெந்தன்
தேர்வில் வென்றிடநீ
     தலைகோத வேண்டுமடி!

சுட்டு மனம்புதைத்துச்
     சொல்லாமல் போகையிலும்
விட்டுவிடா நெஞ்சுன்
      விடைகேட்க விழையுதடி!

தோள்கள் அணைந்துன்னில்
     துவண்டு ‘நீஎன்னை
ஆள்க‘ எனச்சொல்லும்
     ஆவலெனில் மேவுதடி!

தேன்வீழ் இதழருந்தித்
     தேடியுனை அறிகையிலே
வான்வாழ் அமுதமெலாம்
     வீணெனக்கு ஆகுமடி!

எல்லா உறவுகளும்
     எனக்கெதிராய்ப் போனாலும்
இல்லா உனக்காக
     இதயமதை ஏற்குமடி!

விலக்கி எனைநீயே
     விரும்பாத போதுமனம்
கலங்கி உன்காதல்
      கானல்பெற ஏங்குமடி!
(எரியும் நினைவுகள் என்னும் பதிவின் நிறைவு)
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

16 comments:

 1. எல்லா உறவுகளும்
  எனக்கெதிராய்ப் போனாலும்
  இல்லா உனக்காக
  இதயமதை ஏற்குமடி!

  நான் மிகவும் ரசித்த அற்புதமானவரிகள் நண்பரே,,,

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசனைக்கும் நன்றி நண்பரே!

   Delete
 2. எரியும் நினைவுகள்
  எம்மைக் குளிர்வித்தனவே!
  நீ என்னை ஆள்க - ஆயின்
  உமது கவிதை
  எம்மை ஆண்டது!
  (ஏதோ எங்களுக்குத்தெரிந்த தமிழில் எழுதியிருக்கோம்)

  ReplyDelete
  Replies
  1. அய்யா
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
   நமக்குத் தெரிந்த தமிழ் அப்படி வைத்துக்கொள்ளலாம்!
   நன்றி!

   Delete
 3. விலக்கி எனைநீயே
  விரும்பாத போதுமனம்
  கலங்கி உன்காதல்
  கானல்பெற ஏங்குமடி!
  ஏக்கம் நிறைந்த வேதனையான வரிகள்.உணர்ந்து உருக்கமாக எழுதி யுள்ளீர்கள் இல்லையா....... சகோ ஹா ஹா .தங்கள் கவிதைகளை காண ஆவல் பெருகுகிறது. சகோ தொடர்ந்து வடியுங்கள் வாழ்த்துக்கள் ....!

  இலக்கணத்தையும் தமிழையும் உயிராக நினைக்கும் தங்களுக்கு யாப்பறுத்து எழுதுவது வருத்தமாக இருக்குமோ என்று கவலையாக இருக்கிறது சகோ. நான் கற்றுகொள்ள முயற்சி செய்கிறேன். ஹா ஹா....... இனி முடியுமா உன்னால் என்று கேட்பது போல் அல்லவா இருக்கிறது உண்மைதான் சகோ தங்கள் தயவில் கற்றுக் கொள்கிறேன். சரி தானே ஸ்மைல் ப்ளீஸ் ...!

  இது எனது இன்னொரு நிலவுப் பாட்டு முடிந்தால் பாருங்கள் சகோ !
  இரவினில் வரும் நிலவே
  http://kaviyakavi.blogspot.com/2013/09/blog-post_7.html

  ReplyDelete
  Replies
  1. இலக்கணத்தையும் தமிழையும் உயிராக நினைக்கின்ற அளவிற்கு நான் போய்விடவில்லை. அப்படி எல்லாம் நினைத்துவிடாதீர்கள்!
   யாப்பறுத்து எழுதுவதும் ஒரு கலைதானே?
   உணர்வுகள் பெருக.... சொற்கள் நிரம்ப...... எழுதவும் முடியா வேகத்தில்..... வடிவம் தன்னைத்தானே அமைத்துக்கொள்ளுமே.......!
   அதுவே உங்கள் பாடலில் நான் கண்டது.
   அதுதானே கவிதை?
   சந்தோஷப்படத்தானே வேண்டும் அதற்கு.....?!
   என் தயவில் கற்றுக்கொள்வதா.........?
   Now I m really Smiling.................!

   Delete
 4. வணக்கம் ஐயா!

  மெல்ல விலக்கினும் மேவிடும் ஆசைதான்
  வெல்ல வழிதேடி விம்முமே! - சொல்லில்
  முளைத்துச் சொரிந்தகவி மோத மனதில்
  விளையுமே விந்தை விரைந்து!

  வசீகரிக்கும் வார்த்தைகளால்
  வரைந்த கவிதை சிறப்பு!!
  வேறென்ன நான் மேலும் விபரிக்க…

  வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. விந்தை விளைந்து விரைமனதால் இங்கெழுந்த
   கந்தல் கவிகண்டும் வாழ்த்துகிறீர் - நொந்தமனக்
   கூக்குரலைக் கேட்கும் செவியற்றுப் போனயிவை
   தூக்கிலிட்ட யாக்கையுறும் தீ
   நன்றி சகோதரி!

   Delete
 5. வணக்கம்
  ஐயா.
  சிந்தையில் ஊற்றெடுத்த வார்த்தைகளை
  சீராக வரிவடிவம் கொடுத்து
  நன்றி நல்கும் உறவுகளின் சிந்தை குளிர்ந்தது.
  சொல்வதற்கு ஏது குறை....

  நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

   Delete
 6. //எல்லா உறவுகளும்
  எனக்கெதிராய்ப் போனாலும்
  இல்லா உனக்காக
  இதயமதை ஏற்குமடி!///
  அற்புதம் நண்பரே

  ReplyDelete

 7. வணக்கம்!

  வஞ்சி இளங்கொடியைக் கெஞ்சி மனம்பாடி
  விஞ்சு சுவைதந்தீர்! விண்ணமுதை - மிஞ்சுகிறீர்!
  கொஞ்சும் குளிர்தமிழில் கூடும் நினைவலைகள்
  நெஞ்சுள் இருக்கும் நிலைத்து!

  எல்லா அடிகளும் என்னுள் பதிந்தனவே!
  சொல்லா? சுரக்கும் சுகத்தேனா? - அல்லாடி
  நிற்கின்றேன்! சொக்கி நெகிழ்கின்றேன்! இங்குநான்
  கற்கின்றேன் பாடும் கலை!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சுள் இருக்கின்ற நீங்கா நினைவலையைக்
   கொஞ்சு தமிழினில் கூறிடவும் - அஞ்சியதால்
   எஞ்சிய ஏதோ எழுத்திங்கு வாழட்டும் !
   மிஞ்சுமே காதல் மணம்!
   நன்றி!

   Delete

 8. வணக்கம்!

  ஈற்றடியில் சொக்கிப் போனேன்!

  ஈற்றடில் மோனை அமையவில்லை என்று மனம் எண்ணினாலும்
  மிஞ்சுமே என்பதில் உள்ள "மே" அதனை நிறைவு செய்கிறது.

  மிஞ்சுமே காதல் மணமென்று மீட்டியதில்
  தஞ்சமே ஆகித் தமிழ்தழைக்கும்! - மஞ்சமே
  என்றென் மனமிரங்கும்! இப்படிப் பா..படைக்க
  என்றெனக் கெய்தும் இயம்பு?

  ReplyDelete
 9. படிக்கப் படிக்க இனிக்கும்
  பாவடிகள்

  ReplyDelete