Monday 11 August 2014

சொல் வேட்டை!



பழைய இலக்கியங்களைப் பனையோலையில் இருந்து பிரதி எடுக்கும் போது சில சொற்கள் அழிந்திருக்கும். சில எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருக்கும்.
சில நேரங்களில் இடையே இருக்க வேண்டிய ஓலைச்சுவடிகள் சில இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியங்களுக்கு வேறு பிரதி இருந்தால் ஒப்பு நோக்கித் திருத்தம் செய்யலாம். அந்தப் பாடல்கள் எங்காவது யாராவது மேற்கோளாக எடுத்துக் காட்டி இருந்தால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்!


உ.வே.சா. குறிஞ்சிப்பாட்டில் சில பூக்களின் பெயர்கள் ஓலைச்சுவடியில் இல்லாமல்போய் அதைத் தேடித்திரிந்து கண்டறிந்து வெளியிட்ட போது அடைந்த மகிழ்ச்சி அவர் வாழ்நாளில் குறிப்பிடத்தக்கதாய் இருந்திருக்கும்.

ஒரே கால அளவிலான சுவடிகள் பலவற்றிலும் தவறுகளும் ஒரே மாதிரி அமைந்து விடுவது உண்டு. படித்தவர்களைக் கேலிசெய்ய இன்று வழங்கப்படும் “ படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்! எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான் “ என்னும் பழமொழி உண்மையானதாகும். இதன் பொருள் தெரியாமல் படித்த அறிஞர் பலரும் “படித்தவன் பாட்டைக் கொடுத்தான்! எழுதியவன் ஏட்டைக் கொடுத்தான்“, என்று இருக்க வேண்டிய பழமொழி கிண்டலுக்காக இப்படி மாற்றி வழங்கப்படுகிறது எனத் தங்களின் மேன்மையைக் காப்பாற்றக் களமிறங்குகின்றனர்.
வேண்டியதில்லை!
இப்பழமொழியின் பொருள் தெரிய வேண்டுமானால் நாம் சமணமரபிற்குள் சற்றுச் சென்றாக வேண்டும். மக்களை விட்டு விலகி மலைமேல்  துறவு வாழ்க்கையை மேற்கொண்ட சமணர்கள் தாங்கள் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடவில்லை. கல்வி மருத்துவம் என அவர்கள் செய்த சேவை மிகப் பெரிது.
சமணமரபில் “ஓலைச் சுவடிகளைப் படியெடுத்தல்“ என்பது அவர்களது வாழ்வியல் மரபோடு ஒன்றிணைந்திருந்தது. ஒரு நூலுக்குப் பல ஆயிரம் பிரதிகள் கிடைக்கும் இந்தக் காலம் போல் அல்லாமல், குறிப்பிட்ட காலமே, குறிப்பிட்ட பிரதியே இருக்கும் ஓலைச்சுவடிகளைத் தலைமுறை கடந்தும் வாழ்விக்க வேண்டியதன் அவசியத்தைச் சமணர்கள் உணர்ந்திருந்தனர். இப்படி ஓலைச் சுவடிகளைப் படியெடுப்பது ‘வித்யாதானம்‘ எனப்பட்டது.
ஒருவர் மூல ஓலைச்சுவடியைப் படிக்கப் பலரும் அவர்முன் அமர்ந்து தங்களிடம் உள்ள சுவடியில் அதை எழுதிக்கொள்வர். ஒரே நேரத்தில் பல பிரதிகளை ஒரு நூலுக்கு இப்படி உருவாக்கிட முடியும்.
இப்படிப் படியெடுக்கும் போது, படிப்பவர் தவறாகப் படித்தார் என்றால் , ( படிப்பவர் பாட்டைக் கெடுத்தால் ) எழுதுபவர் தவறாகப் பதிந்துவிடுவார். ( எழுதியவர் ஏட்டைக் கெடுப்பார் )
இப்பொழுது பழமொழி “ படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்! எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான் “ என்றிருப்பது சரிதானே!
கம்பன் இராமாயணத்தை அரங்கேற்றியபோது “ துமி  “ என்ற சொல் வரக்கண்ட பண்டிதர்கள் “ அச்சொல்லுக்கான ஆட்சி எங்கே இருக்கிறது ? “ எனக் கேட்கக் கம்பர் அலைந்து திரிந்து கடைசியில் தயிர் கடையும் இடையர் மகள் ஒருவள், “ துமி தெறிக்கும்! தூரமாய் நில் “ எனச்சொல்லுவதைச் சான்றாகக் காட்டினார். உலக வழக்காய் அது வழங்கப்படுவதை நோக்கிப் புலவர்கள் அச்சொல்லை இலக்கியத்தில் ஆள அனுமதித்தனர் என்று மரபாய் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு.

ஒரு காலத்தில் இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லையோ அல்லது தொடரையோ  புரிந்து கொள்ளச் சிக்கல் ஏற்படும் போது, அன்றாட வழக்கிற்குத்தான் செல்லவேண்டியிருக்கிறது. நாம் என்றல்ல. உ. வே. சா. அவர்களும் அப்படித்தான் ஒரு தொடரின் பொருளை நன்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்.

பழமொழி நானூறில் ஒரு பாடல் வருகிறது.

அடையப்  பயின்றார்சொல்  ஆற்றுவராக் கேட்டால்
உடைய தொன்றில்லாமை யொட்டின்படைபெற்(று)
அடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்
இடைய     னெறிந்த      மரம்."
 
இதன் பொருளை இப்படி எளிமையாகச் சொல்லலாம்.
நம்மோடு நன்கு பழகியவர் நம்மிடம் ஒரு உதவியைக் கேட்கிறார்.  அப்பொழுது நாமும் அதைச் செய்வதாக வாக்களித்து விடுகிறோம். ஆனால் அவர் வந்து கேட்கும் பொழுது நம் சூழல் வேறுமாதிரி உள்ளது. அந்த உதவியை நம்மால் செய்ய முடியவில்லை.வாக்குக் கொடுத்துவிட்டதால் மறுக்கவும் முடியாத சூழ்நிலை. அப்படிப் பட்ட ஒருவனின் நிலைமையை விளக்கப் பழமொழி கூறும் உவமை தான்

 “ இடையன் எறிந்த மரம் “ 

அது என்ன இடையன் எறிந்த மரம்?
உ.வே.சா விற்குப் புரியவில்லை. இது அவர் மனதில் அழுந்திக் கிடந்திருக்கிறது. சில ஆண்டுகள் கழித்துத் திருப்பனந்தாளில் நிகழ்ச்சி ஒன்றிற்காகச் செல்லும் அவர் அங்கு மாடுகளைப் பராமரிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்ட இடையன் ஒருவனிடம் மாடுகளைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த முதியவர் தம் கால்நடைகள் பற்றிய  அனுபவங்களை, தங்கள் குல வழக்காறுகளை, அவற்றைப் பராமரித்தலைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டே வருகிறார்.  மேய்ச்சல் களத்திற்கு மாறுகிறது அவர் பேச்சு.
 “மரக்கிளைகளை மரத்திலிருந்து முழுவதும் துண்டிக்காமல் வெட்டி வீழ்த்திக் கால்நடைகளுக்கு உண்ணக் கொடுப்போம்“ என்று அந்த முதியவர் சொல்கிறார் . உ.வே.சா வின் மனது பழமொழி நானூறை நினைக்கிறது. நீங்கள் வெட்டும் போது கிளைகள் மரத்திலிருந்து முறிந்து விட்டால் என்ன ? என்று கேட்கிறார். "அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமல் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால்  மறுபடியும்  தழைக்கும்."  என்று சொல்லும் அந்தப் பெரியவர். ‘இடையன் வெட்டு அறா வெட்டு‘ என்று ஒரு பழமொழி தங்கள் மத்தியில் உண்டு என்கிறார்.
உ.வே.சா வின் மனம்  பாடலோடு இதைப் பொருத்திப் பார்க்கிறது.
இடையனால் துண்டிக்கப்பட்ட மரக்கிளையானது அந்தக் கணம் வீழவும் முடியாமல் வாழவும் முடியாமல்  அரைகுறையாகத் தன் உயிரை வைத்துக் கொண்டிருக்கும்.
வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாமல் தவிப்பவன் தவிக்கின்ற அக்கணம், “ இடையன் எறிந்த மரம் “
எவ்வளவு அற்புதமான உவமை! சாகவும் முடியாமல் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத  இந்த உயிரை வைத்துக்கொண்டு வாழவும் முடியாமல், தலைகுனிந்து...... முன்னுள்ள நிலை கெட்டு.....
இடையனால் வெட்டுண்ட மரக்கிளை போல..................!
உ.வே.சா. வின்  மனம் நிலையில் இல்லை. சீவக சிந்தாமணிக்குத் தாவுகிறது.
"இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்" (1914), என்ற அடியையும் அதற்கான நச்சினார்க்கினியர் உரையையும் அவர் மனக்கணினி கண்முன் கொண்டு வருகிறது.

சீவகன் தன்னுடைய தாயைப் பார்த்துத் தன் நிலையைக் கூறுகிறான். "நான் என் தந்தை மரணமடையுமாறு பிறந்தேன். என் பிறவியோ நீ துன்புறும் படியாகவும், என் நண்பர்கள் மனம் வருந்தும் படியாகவும் அமையஇடைமகன் கொன்ற இன்னா மரம் போல்‘ இருக்கிறேன்“ என்கிறான். நச்சினார்க்கினியர் அந்த உவமையை விளக்கும் வகையில், உயிருடன் இருந்து பகையை வெல்லவும் செய்யாமல், இன்னும் வெல்ல முடியாத பகையை எண்ணி உயிர் போகவும் மாட்டாமல் இடையன் எறிந்த மரத்தைப் போலச் சீவகன் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

நம் புலவர்களின் பாடல்மரபு அன்றாட வாழ்க்கையைச் சார்ந்தே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் பொருள் படித்த பண்டிதனை விட சாதாரணப் பாமரனின் வாழ்வியலோடு பிணைந்திருக்கிறது.
நாட்டுப்புறத்தான் என்று இகழ்ந்து ஒதுக்கும் நாகரிகக் கல்வியால் நாம் இழந்து கொண்டிருப்பது என்றோ எழுதிவைத்து விட்டுப் போன ஏதோ ஒரு பாடலின் பொருளை மட்டுமல்ல!
மரபார்ந்த நம் வாழ்க்கையையும் சேர்த்துத்தான்!
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

46 comments:

  1. இடையன் எறிந்த மரம்
    படிக்கப் படிக்கப்
    பொருள் விளங்க விளங்க
    நமக்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறதே
    உ.வே.சா எவ்வளவு ஆனந்தப் பட்டிருப்பார்
    அருமையான பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். தங்களின் முதல் பின்னூட்டத்திற்கும் உ.வே.சா பற்றிய கருத்துக்களுக்கும் நன்றி!
      அவருடைய தேடல்தான் அவர் பேசப்படுகின்றமைக்குக் காரணம்.
      அவரது உழைப்பை அவர் நமக்கு மீட்டுத்தந்த இலக்கியங்களும் அவற்றின் செம்மையான பதிப்புகளும் பேசிக்கொண்டிருக்கின்றன.
      நன்றி!

      Delete
  2. இடையன் எறிந்த மரத்தால் இப்போது தமிழ்க் கனி சுவைத்தேன். சொல் வேட்டையால் சமணரின் சுவடியாக்கப் பணி, உ.வே.சா. அவர்களின் சுவடிப் பயணம், இடையன் எறிந்த மரத்தின் வேர் யாவும் விருந்தாயின. நல்ல விருந்து உண்ட களிப்பு. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. புலவர்க்கு வணக்கம்.
      தங்களின் வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றியுடையேன்.

      Delete
  3. சொல் வேட்டை தொடரட்டும் ,புதுபுது அர்த்தங்கள் புரிகிறது !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பகவான்ஜி!
      மெய்ப்பாட்டியல் நகை பற்றிய பதிவினை விரைவில் பதிவிடுவேன்.
      தங்களின் கருத்திற்கு நன்றி!

      Delete
  4. எனக்கு புதிய விசயங்கள் தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. சொல்வேட்டை அருமையான பதிவு! பல கருத்துக்கள், விளக்கங்கள். பனை ஓலை பிரதி என்றவுடன் எப்படி என்ற யோசனை வந்தது....இன்று பிரதி எடுப்பது எவ்வளவு எளிதாகிவிட்டது. பின்னர் தாங்கள் சொல்லியிருந்த விளக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது ஓலைகள் எப்படிப் பிரதி எடுக்கப்பட்டன என்று.

    எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட இடையன் மரமும், பாடலும் விளக்கமும் அருமை அப்பப்பா.....நிறைய கற்றோம்! செவிக்கு உணவில்லாத போது....இல்லை இல்லை....மூளைக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றிற்கும் ஈயப்படும்....இங்கு மூளைக்கு வேலை இருக்கும் போது வயிற்றிற்கு ...அது நிரம்பியே உள்ளது போலத்தான் உள்ளது..

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. என் சரக்கு எதுவுமில்லை அய்யா!
      படித்ததை நான் புரிந்து கொண்டபடி பகிர்கிறேன்.
      அவ்வளவுதான்!

      தங்களது ரசனைக்கு உகந்ததாக இருக்கின்றமைக்கு நன்றி!

      Delete
  6. வரேவா ! எவ்வளவு தகவல்கள். இடையன் எறிந்த மரம் என்ற சொல்லும் அதன் பின்னாலான சங்கதிகளும் மிக அருமை. அதே போல சமணர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளும், ஓலைச் சுவடிகளை படி எடுத்த தகவல்களும் அருமை. :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாநகரன்!
      தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

      Delete
  7. வணக்கம் ஐயா!

    சொல் வேட்டையாய் வந்த இடையன் எறிந்த மரம்
    உங்களால் அறிந்து கொண்டேன் ஐயா!

    ” பாடியவன் பாட்டைக் கெடுத்தான்
    எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் “ ஏற்கனவே இத்தொடர் மொழியை அறிந்திருந்தும் சரியான விளக்கம் இங்கு இப்போதுதான் அறிகிறேன்!
    உண்மையில் எனது வலைப்பூவில் எழுதுவதற்கு எனக்குத் தற்போது
    நேர நெருக்கடி அதிகமாகி வேண்டாம் வலை இனி என நினைக்க வேண்டிய தருணத்தில் இருந்தும், கிடைக்கின்ற நேரத்தில் யாரேனும் எழுதினார்களா என எட்டிப் பார்த்த எனக்கு, ஐயோ வராமல் பார்க்காமல் விட்டிருந்தால், இங்கு அரியதொரு என் அறிவுப் பசிக்குத் தேவையான உணவு கிட்டாமற் போயிருக்குமே என எண்ண வைத்துவிட்டீர்கள்.

    அருமையான தேடற் பதிவு! தொடர்ந்து தாருங்கள்!...
    மிக்க நன்றியுடன் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      வணக்கம்.
      உங்களின் நேரநெருக்கடிக்கிடையிலும் இந்தப் பதிவை வாசித்ததோடு நில்லாமல் கருத்தும் பகிர்ந்திருக்கிறீர்கள்!
      தேடலுடன் இருக்கும் உங்களைப் போன்றுதான் நானும்!
      கால நெருக்கடிக்கிடையிலும் இங்கு வந்த உங்களின் வருகையையும் கருத்தினையும் மிகப்பெரிதாய் எண்ணுகிறேன்.
      மிக்க நன்றி!

      Delete

  8. வணக்கம்!

    சொல்வேட்டை யாடத் துணிவுடன் வந்தவர்க்கு
    நல்வேட்டை என்பேன்! நறுந்தமிழில் - வெல்வேட்டை
    யாடும் புலவன்யான் ஆழ்ந்து வியக்கின்றேன்
    சூடும் உரையைச் சுவைத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. சூடும் உரைசுவைத்தும் சூட்டக் கவிபடைத்தும்
      தேடும் மனம்கொண்ட தேன்தமிழ்‘ஈ! - நாடிவரத்
      தேன்கூடாய் நின்றாய்! திருவருளே உன்துணையாம்!
      நான்கூற என்ன இனி?
      நன்றி

      Delete
  9. சொல்வேட்டை தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று எண்ணினேன். பதிவை படிக்க படிக்க வித்தியாசமாகவும் நிறைய கற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  10. "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்! எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான்" - உண்மையான அர்த்தம் இன்று தங்களால் தேர்ரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  11. "//இடையன் எறிந்த மரம்//" - விளக்கிய விதம் அருமை. எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது.

    அந்த கடைசிப்பத்தியில் நீங்கள் சொல்லியிருப்பது, சிந்திக்கவைப்பதாகும். இதனால் தான் யாரையும் தோற்றத்தைப் பார்த்து எடை போடக்கூடாது என்று சொல்கிறார்கள் போல.

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர்,
      வணக்கம்.முதலில் தங்களின் வருகைக்கும் தொடர் கருத்திடல்களுக்கும் நன்றிகள்!
      ஒவ்வொருவரிடமும் நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறது.
      “உருவு கண்டு எள்ளாமை“ என்று நீங்கள் சொல்வதைத் திருக்குறளில் பரிமேலழகர் அமைச்சர்களின் உருவத்தைக் கொண்டு அவர்களின் மதிப்பை அறியாமல் இகழக்கூடாது.
      பொிய தேருக்கு அச்சாணி போன்றவர்கள் அவர்கள் எனப் பொருளுரைத்திருப்பார்.
      ( உருவுகண்(டு) எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்(கு)
      அச்சாணி அன்னார் உடைத்து)
      ஆனால் அதிகம் பயிலப்படாத, அறநெறிச்சாரம் என்னும் நீதிநூல் சொல்லும்
      “சிலகற்றார்க் கண்ணும் உளவாம் உருள்பெருந்தேர்க்(கு) அச்சாணி அன்னதோர் சொல்“
      எனும் அடிகளின் பொதுமையாக்கம் துல்லியப்படுத்தல் திருக்குறளின் பொருளுரையில் அடிபட்டுப் போகிறது.
      பெரிய தேரினைத் தாங்கி ஓடச்செய்யும் அச்சாணி போன்ற சொல் மெத்தப் படிக்காதவர்களிடத்தும் இருக்கக் கூடும் என்ற வரிகள் இப்பதிவிற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் பொருந்தும்தானே?
      கருத்துக்களுக்கு நன்றி!

      Delete
  12. வணக்கம்
    ஐயா.

    பழமொழியை அறிந்திருக்கேன் ஆனால் அதற்கான விளக்கத்தை தங்களின் பதிவு வழி அறிந்தேன் உவமைக்கான விளக்கமும் நன்றாக உள்ளது படிக்க படிக்க படிக்கத்தான் சொல்லுகிறது. மேலும் தொடருங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா!
      தங்களின் தொடர் வருகையும் பின்னூட்டங்களும் இன்னும் பல பதியத் தூண்டுகோலாவன.
      எனக்கு மட்டுமல்ல.
      என் போன்ற பலர்க்கும்....!
      நன்றிகள்!

      Delete
  13. இடையன் எறிந்த மரம்..ஆஹா நன்கு புரியுமாறு விளக்கிவிட்டீர்கள். வாழ்வில் நடப்பதைத் தான் படி வைத்துள்ளனர், நாம் அவ்வாழ்வில் இருந்து வெகுதூரம் ஒதுங்கி புரியாமல் தவிக்கிறோம்..
    பகிர்விற்கு நன்றி சகோதரரே

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா!
      புரியும் படி விளக்கிவிட்டேன்!!!!
      நன்றிகள் சகோதரி!

      Delete
  14. அருமையான விளக்கம்.
    வாழ்வியலால் தெளிவு.
    அற்புதம். வியப்பு!
    வேட்டை தொடரட்டும் .
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  15. ஆகா! ஆகா! ஆகா! என்னவெனச் சொல்ல! உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு கருவூலமையா!

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்க்கு வணக்கம்!
      தங்களின் பாராட்டுகள் நெஞ்சு தொடுகின்றன!
      நன்றிகள்!

      Delete
  16. அருமையான வேட்டை ஐயா.

    தொடருங்கள்.... படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி கவிஞரே!

      Delete
  17. மிகவும் அருமையான விரிவான பதிவு.நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  18. என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! என்றே எண்ணுகிறது என் மனம், ஆண்டவனின் அழைப்பில்லை எனில் தங்களையும் ஏனையோரையும் தமிழின் இனிமையையும் அறியாமல் போயிருப்பேனே. எத்துணை அழகாக அனைத்தையும் படைக்கிறீர்கள். உரிய விளக்கங்களுடன் எமக்கும் புகட்டுகிறீர்கள். எப்படி பாராட்டுவேன்.
    "படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்! எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான்" “ இடையன் எறிந்த மரம் “ இவைகள் நான் அறியாதவை கவிஞரே. மேலும் அறிய ஆவலாகவே உள்ளேன். தாங்கள் நேரம் எடுத்து இவற்றை பதிவிடுவதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை சகோ! வாழ்த்துக்கள் ....! வாழ்க வளர்க ....! அடடா இந்த மரமண்டைக்கு புரிந்து விட்டதே என்று திருப்தியாக இருக்கிறதா? அல்லது ஆச்சரியமாக இருக்கிறதா சகோ ..ஹா ஹா ....என்ன இல்லையா அப்ப சரி thanks......

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கும்
      புரிதலுக்கும் மகிழ்ச்சி!
      மர மண்டை, வளரும் நிழல்தரும், ஆயிரம் விருட்சங்களுக்கான விதை தந்து வாழும்!
      மற மண்டையாய் இருந்துவிடக் கூடாதல்லவா?
      உதவியவரை ..... உறவுகளை...... உலகத்தை....மறக்கின்ற மண்டையாய்!
      ஹ ஹ ஹா...
      நன்றி

      Delete
  19. அன்றைய வாழ்வியலை அற்புத இலக்கியமாக்கினர் ஆன்றோர். அந்த இலக்கியத்தின் அரும்பொருள் தேட வாழ்வியலை மறுபடி நாடிவருகிறோம் நாம். எவ்வளவு நுட்பமாக உலகை, மக்களை, அவர்களது வாழ்க்கை முறையைக் கூர்ந்து கவனித்திருந்தால் இவ்வளவு அற்புதமாக உவமைகளைக் கையாண்டிருக்க இயலும்! அறியாதனவற்றை அறியத் தரும் தங்கள் முயற்சிக்குப் பெரும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களோடு உடன்படுகிறேன்.
      சங்க கால உவமைகள் இன்றைய
      புகைப்படக் கருவி போலும் எடுக்க முடியாத பிம்பங்களைக் காட்சிப் படுத்தி அதனைப் பொருளோடு ஒன்றிணைக்கும்.
      அதை அனுபவித்துப் புரிந்து கொள்ளும் ஆச்சரிய தருணங்களின் அருமை, வாய்த்தவருக்குத் தான் தெரியும்.
      தங்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றிகள்!

      Delete
  20. விளக்கம் அருமை நண்பரே. இவற்றைப்போலவே, ஏனைய --தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள-- சில பழமொழிகளையும் விளக்கி எழுத வேண்டுகிறேன் -
    (1)களவும் கற்று மற
    (2)வக்கத்தவன் வாத்தியார், போக்கத்தவன் போலீசு.'
    (3)ஆறிலும் சாவு, நூறிலும் சாவு
    “அடியையும் அதற்கான நச்சினார்க்கினியர் உரையையும் அவர் மனக்கணினி கண்முன் கொண்டு வருகிறது“ அருமையான நடைமுறை உவமை... தொடர்க..தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். பின்னூட்டம் நீண்டுவிடும்.
      இதில் ஆறிலும் சாவு,நூறிலும் சாவு இதே போன்று வரும்
      பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்னும் பழமொழிகள் நேர் பொருளிலேயே கொள்ளப்படவேண்டும் என்பது எனது எண்ணம். அதுவே இயல்பானதும் சுவையானதும்.
      அன்றி அவற்றைக் பாண்டவ கௌரவக் கர்ணனோடு தொடர்பு படுத்திப் புராண அர்த்தப் படுத்துவதையோ அதுபோல் “படைக்குப் பிந்து“ என்பதில்போர்க்களத்தில் வில்லெடுக்கக் கை முதுகில் உள்ள அம்புக் கூட்டிற்காகப் பின்செல்லும் , “பந்திக்கு முந்து“ என்பதில் பந்தியில் சோறுண்ணக் கை முன்னால் செல்லும் என தமிழ்ப் போர்மறம் கெட்டுவிடும் , சாப்பாட்டிற்கு அலைபவன் எனப் பழிவந்துவிடும் என வலிந்து பொருள் சொல்வதிலோ எனக்கு உடன்பாடில்லை.

      களவும் கற்று மற என்பதற்குக் களவும் கத்தும் ( பொய் ) மற என்றும், களவு அகற்று மற என்றும் கற்புக்காலத்திற்கு முன் ( திருமணமாகும் முன் ) கற்ற களவை ( யாருமறியாமல் ஒன்று கூடக் கற்றதை ) கற்பின் பின் தொடரக்கூடாதென்னும் பொருள் கொள்வதானால் மூன்றாவது பொருளை ஏற்கலாம்!
      வாக்குக் கத்தவன் வாத்தியார் வேலைக்கும் போக்குக் கத்தவன் போலீஸ் வேலைக்கும் என வாத்தியார்களும் போலீஸ்காரர்களும் சொல்லாம்.
      மக்களின் வழக்கில் “வக்கத்தவன் வாத்தியார், போக்கத்தவன் போலீசு.' என்பது மறுக்க முடியாத நிறைய ஆதாரங்களுடன் ஆழப்பதிந்து விட்டது!
      நன்றி!

      Delete
  21. முதலில் உங்கள் எழுத்தின் வசீகரம்...

    அன்றைய நிகழ்வுகளை நீங்கள் விவரிக்கும் பாங்கு, சமணர் குகைகளிலிருந்து உ.வே.சாவின் உரையாடல்வரை அனைத்தையும் நாங்களே சாட்சியாய் நின்று பார்ப்பது போல மனத்திரை காட்சிகளாய் விரிகிறது !

    படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்! எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான்...

    மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

    சமணர்கள் மூலம் பல பண்டைய நூல்கள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டன என படித்திருக்கிறேன். அதை பற்றிய விபரங்களை, " வித்யாதானம் " என்ற பெயரை உங்கள் பதிவின் மூலமே அறிந்தேன்.

    இந்த பதிவை படித்தபோது நீங்கள் எனது வலைப்பூவில் இட்டிருந்த ஒரு பின்னூட்டத்தின் வரிகள் ஞாபகம் வந்தன !

    " ...அன்றெல்லாம் படித்தவர்கள் எனக்கருதப்பட்டவருள் பெரும்பாலோர், தம் நலனுக்காக வந்தேறி மொழிகளுக்கு வால் பிடித்துத்தான் வந்திருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பட்டிக்காடுகள், பாமரமக்கள், இழிசனர் எனக்கருதப்பட்ட பெரும்பான்மை படிப்பறிவில்லா மக்களின் நாவிலிருந்துதான் தமிழ் மீண்டெழுந்தது... "

    இந்த வரிகளுக்கான ஆதாரம் இந்த பதிவில் உள்ளது. அன்று முதல் இன்றுவரை எக்காலத்திலும் மொழியையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்பது பாமரமக்களே !

    சுதந்திர போராட்டத்தின் போது தலைவர்கள் மணிக்கணக்கில் மேடையில் பேசியவற்றை,

    " ஊரான் ஊரான் தோட்டத்திலே
    ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய்
    அதை காசுக்கு ரெண்டாய் விக்கச்சொல்லி
    காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன் ! "

    என நாட்டுப்பாடலாய் பாடி, சுதந்திர வேட்கையை நாட்டின் கடைகோடிக்கும் கொண்டுசென்றவர்களல்லவா ?!

    படிப்பதுடன் பாதுககாக்கப்படவும் வேண்டிய பதிவு.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      உங்களின் அன்பினுக்கு நன்றிகள்!
      அந்தப் பின்னூட்டத்தின் போது எனக்கும் உ.வே.சா. வின் நினைவு வந்தது. அதை நினைத்துக் கொண்டுதான் எழுதினேன்.
      ஒன்றாகச் சிந்திக்கிறோம்.
      தலைவர்கள் பெரும் பாலும் பேசுகிறவர்கள் தான்.
      செயல் படுகின்றவர்கள் குறைவு.
      தொண்டர்கள் பெரும்பாலும் செயல் படுகின்றவர்கள் தான்.
      பேசுகிறவர்கள் குறைவு.
      நீங்கள் காட்டிய பாடலைப் போலவே அடிமை இந்தியாவில்
      எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் நாடக மேடைகளில் பாடிய
      கொக்குப் பறக்குதடி பாப்பா!- வெள்ளைக்
      கொக்குப் பறக்குதடி பாப்பா!
      கொக்கென்றால் கொக்கு நம்மைக்
      கொல்ல வந்த கொக்கு
      எக்காளம் போட்டு நாளும் இங்கே
      ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா

      வர்த்தகம் செய்ய வந்த கொக்கு நமது
      வாழ்வைக் கெடுக்க வந்த கொக்கு
      அக்கரைச் சீமை விட்டு வந்து கொள்ளை
      அடித்துக் கொழுக்குதடி பாப்பா
      என்ற பாட்டும் மிகப் பிரபலம் அண்ணா!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete

  22. இடையன் எறிந்த மரத்தால்
    சொல் வேட்டையா?
    ....................................................
    சிறந்த இலக்கணத் தெளிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இலக்கியத் தெளிவு அப்படித்தானே அய்யா?!
      வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்!

      Delete
  23. வேட்டையாட புறப்பட்டதோ சொல்லை
    ஆனால் எங்கே வீழ்ந்துகிடக்கின்றன
    பல இதயங்கள்!!
    பாருங்க இப்படி பதிவு போட்ட நானும் கொலைவெறியா ஒரு கவிதை எழுதிவிட்டேன்:) இடையன் எறிந்த மரம்!!! இன்றைய நாளுக்கு அழகான தொடக்கம்:) நன்றி அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. கவிதைப் பின்னூட்டக்காரர்களின் சங்கத்தில் நீங்களும் அங்கத்தினராகி விட்டீர்கள் போல...........?!
      கொலைவெறி என்மேல் இல்லையே?!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
    2. **கவிதைப் பின்னூட்டக்காரர்களின் சங்கத்தில் நீங்களும் அங்கத்தினராகி விட்டீர்கள் போல...........?!**
      ரொம்ப பார்மலா பதில் சொல்லிக்கிட்டு இருந்தீங்க அண்ணா!
      இப்போ full பார்மில் இருக்கீங்க:))
      (அதாவது நம்ம சங்கத்தில் அங்கமாகிவிட்டீர்கள் னு சொல்லவந்தேன் :)

      Delete
  24. சொல்வேட்டை கண்டென்றன் சொந்த அறிவறிந்து
    நல்வேட்டை உண்டேன் நயந்து

    இடையன் எறிந்தமரம் இன்னமும் அசைபோடுது நாவில்
    கற்கவேண்டியவை இன்னும் நிறைய உண்டு தங்களிடத்தில்
    வாழ்த்துக்கள் புலவரே வாழ்க வளமுடன்

    ReplyDelete