Wednesday, 30 September 2015

எங்கள் தமிழென்று சொல்!


வித்தின் அகத்துறை வீரியமே! – சிறை
     விட்டுப் புறம்வருக! – தடை
எத்திப் புறப்படும் ஏறெனவே – புகழ்
    ஏட்டில் இடம்பெறுக! – வெறும்
சொத்தைக் கதையினில் சோம்புதலை – விதி
    சொல்லி முடங்குதலை – தலை
கொத்திச் சிதைத்துக் குழியிற் புதைத்துக்
    கொள்கைக் கொடிநடுக!

அஞ்சு பகையழி ஆயுதமே! – அறம்
    ஆண்ட எழில்மரபே! – மது
கெஞ்சிக் குடித்துக் கிடப்பதுவோ – இடர்
    கேட்டுக் கழிவறையுள்? – சுவை
நஞ்சு வளர்முக மூடிகளின் – கால்
    நக்கிடு பேடிகளின் - அரண்
எஞ்சல் இலாமல் இடித்துத் தகர்க்க
    எண்ணும் படைதிரள்க!

சங்க மொழிக்குள சாளரமே! – உன்
    சாபத் தளைகளைப்பார்! – தினம்
மங்கு புகழ்வளர் மாமருந்தே! – உனில்
    மண்டு களைகளைத்தீர்! – முடக்
கங்கு லறுத்திடுங் காவியமே! – உயர்
    கல்வித் திறப்பெருக்கால் - நீ
எங்குந் திரி!பொருள் ஈட்டு! வளம்படை!
   எங்கள் தமிழென்று சொல்!

பாவகை - சிந்து.

உறுதி மொழி.

 1.“எங்கள்தமிழென்றுசொல் ” என்னுந் தலைப்பில்மரபுக்கவிதை வகைமையின் கீழ் எழுதப்பெற்றஇப்படைப்புஎனது சொந்தப்படைப்பே என உறுதி அளிக்கிறேன்.

2. இப்படைப்பு,“வலைப்பதிவர் திருவிழா2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம்நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்2015“ க்காகவே எழுதப்பட்டது  என உறுதிஅளிக்கிறேன்.

(3) இதற்கு முன் வெளியான படைப்பன்று எனவும் முடிவு வெளிவரும் வரை  வேறு இதழ்எதிலும் வெளிவராது  எனவும் உறுதி அளிக்கிறேன்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

35 comments:

 1. அன்புள்ள அய்யா,

  சத்தின் சரித்திரக் காவியமே -தமிழ்ப்

  பாட்டில் வடித்துவைத் தாயே ஓவியமே!

  போட்டியில் வெல்க! போர்ப்படைத் தமிழால்!

  த.ம.2

  ReplyDelete
 2. உந்தும் உணர்வுடன் ஓர்கவி பாடினையே!
  சிந்தெனத் தந்தனை தேன்!

  ஆஹா..! அருமையோ அருமை ஐயா!
  வெற்றி கிட்டாமலா போகும் உங்களுக்கு!
  வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 3. ஆஹா... எங்கெங்கு சென்றாலும் போட்டிப் படைப்புக்கள்...
  அண்ணா கவிதை அருமை... வெற்றிக்கனி தங்களுக்கே...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 5. எத்தனை உணர்வுகளோடு தன்மானம் தழைக்க பிறந்த இக்கவிதை
  சொல்கிறது பிழைக்க வழி ஆக்ரோஷம் வரும்படியாய்.
  இதுவும் வெற்றிக்கே நன்றி ! வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. ஆஹா! இளைஞர்கள் வீறு கொண்டு எழுவது திண்ணம்..
  வெற்றி பெற (சொல்லணுமா என்ன, வெற்றி உங்களுக்குத்தான்) வாழ்த்துகள் அண்ணா.

  ReplyDelete
 8. அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அருமை
  அருமை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
 10. வணக்கம் ஐயா,
  எழுச்சிமிகு பா வரிகள்,
  வாழ்த்துக்கள், இன்னும் எழுதுங்கள் ஐயா,
  நன்றி.

  ReplyDelete
 11. எங்கள் தமிழென்று சங்கே முழங்கு! என்று பாடத்தோன்றிய வரிகள்.
  எங்கும் திரி பொருள் ஈட்டு
  எங்கள் தமிழென்று சொல்...சூப்பர்.
  வாழ்த்துக்கள் ஆசிரியரே.

  ReplyDelete
 12. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. பின்னியெடுக்கிறீர்கள் ஐயா! நம் மைதிலி சகா அவர்கள் கூறுவது போல இணையத் தமிழுலகும் முதன்மை அச்சு ஊடகங்களுக்கு நிகரான இடத்தைப் பெற்றால் தங்களுடைய இத்தகைய எழுச்சியூட்டும் பாடல்கள், அந்தக் காலத்தில் பாரதியார் பாடல்கள் இந்திய விடுதலை உணர்வை இளைஞர்களிடம் வளர்த்தது போல இன்றைய இளைஞர்களிடத்தில் தமிழ் விடுதலை உணர்வை ஊட்டும்! அந்தக் காலம் விரைவில் வர விரும்புகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் என்மேல் கொண்ட மிகுமதிப்பிற்கு நன்றி ஐயா.

   Delete
 14. அழகான வரிகளில் தமிழின் இனிமையை சொல்லியிருக்கிறீர்கள்.
  வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
  த ம 12

  ReplyDelete
 15. அஞ்சு பகையழி ஆயுதமே! – அறம்
  ஆண்ட எழில்மரபே! – மது
  கெஞ்சிக் குடித்துக் கிடப்பதுவோ – இடர்
  கேட்டுக் கழிவறையுள்? அருமை அருமை! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 16. அட்டகாசச் சிந்து!

  ReplyDelete
 17. "மது
  கெஞ்சிக் குடித்துக் கிடப்பதுவோ – இடர்
  கேட்டுக் கழிவறையுள்?"ஆகா செறிவான,அடர்த்தியான வரிகள்..!

  " முடக்
  கங்கு லறுத்திடுங் காவியமே! – உயர்
  கல்வித் திறப்பெருக்கால் - நீ
  எங்குந் திரி!பொருள் ஈட்டு! வளம்படை!
  எங்கள் தமிழென்று சொல்!".....நெருப்பு வரிகள் அய்யா!
  அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்..! பரிசு நிச்சயம்.! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி ஐயா

   Delete

 18. வணக்கம்!

  சிந்துக் கவிபாடிச் செந்தேன் குடமளித்தீர்
  சிந்தை குளிரும் செழித்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. செழிக்க உரம்பாய்ச்சும் செந்தேன் குறளென்
   விழிக்குள் செலுத்தும் வியப்பு

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

   Delete