Wednesday 28 January 2015

எதுகை மோனை தேவையில்லாத் தமிழ் மரபுக்கவிதைகள்.

நன்றி-www.heavyquestions.com

மரபுக்கவிதைகள் என்றாலே எதுகைக்கும் மோனைக்கும் அலைதல் ஒரு புறம் என்றால், பெரும்பாலான கவிதைகளில் கவிதாசிரியர் அப்படித்  தேடிப்பிடித்து இடுகின்ற எதுகை மோனைகள் அடைக்க முடியாத பெட்டியில் துருத்தித் தெரியும் அழுக்குத் துணி போலக் காட்சியளிப்பதைச் சாதாரண வாசகரால் கூட உணர முடியும்.

உதாரணமாக,

கொட்டு என்று ஒரு பாட்டை ஆரம்பித்திருந்தாரானால், அடுத்தவரியை, பொட்டு, சொட்டு, வெட்டு, தட்டு, கட்டு, மொட்டு, விட்டு, பட்டு, எட்டு, ஒட்டு, ……………..என்றெல்லாம் வார்த்தைகளைத் தேடிப்பிடித்து, அடுத்தடுத்த வரிகளைத் தொடரவேண்டிய நெருக்கடி அனுபவித்துப் பார்த்தவனுக்குத்தான் தெரியும்.

இட்டு நிரப்பும் வார்த்தைகளும், ஓசையின் பின்னே ஓடித்திரிதலுமாய்ப் பெரும்பாலும் மரபுக்கவிதை என எழுதப்படுவன பல கலப்படக் கடைச்சரக்காய்ப் போகின்ற போது படிக்கும் வாசகனோடு படைப்பாளிக்கும் அலுப்பு வந்துவிடுகிறது. யாருக்கு வந்திருக்கிறதோ இல்லையோ எனக்கு வந்திருக்கிறது.

பொதுவாக எதுகையும் மோனையும், இன்னபிற தொடைகளும், இருந்தாக வேண்டும் என்றெல்லாம்  தமிழ் யாப்பு மரபு எங்கும் வலியுறுத்தியதாக நான் படிக்கவில்லை.

அப்படி இருப்பது அழகென்றும், அதுவே மரபென்றும் நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். புதிதாக மரபில் எழுத முயல்பவர்களையும் இப்படிச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போகிறோம். அப்படி எழுதினால் பாடலின் ஓசை சிறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கவிதையின் உள்ளீடு, அதன் ஒவ்வொரு எழுத்தும் அதிமுக்கியமில்லையா?

சென்ற பதிவில் வின்ஸோனுடைய வெண்பாவில், அவர் இந்த  நெருக்கடிகளுக்கெல்லாம் ஆளாகாமல் வெண்பாவை அடித்துத் தள்ளி எழுதிப் போயிருந்ததைப் பார்த்தபோது எனக்குக் கொஞ்சம் பொறாமையாகவும், யாப்பின் தனிப்பெரும் ஆதார நூலான விருத்தியில்  இதுபற்றிப் படித்த ஒரு பகுதி நினைவுக்கும் வந்தது. அந்தப் பதிவோடு தொடர்பு இல்லாததால் சரி, தனியாகச் சொல்லுவோம் என்றிருந்தேன்.

முதலில் அந்தச் செய்யுளையும் அதன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உரை நடையையும் பார்த்து விடுவோம்.

யாப்பருங்கலம் என்னும் நூல் இன்றிருக்கும் தமிழ் யாப்பு மரபிற்கு ஆதார நூல்.
தொல்காப்பியத்தில் யாப்பு பற்றிச் சொல்லியிருந்தாலும் அது நாம் இன்று பின்பற்றும் யாப்புமரபோடு வேறுபாடுள்ளது. நாம் இன்று யாப்பு எனப்படிப்பதற்கு ஆதாரமாய் அமைவதெல்லாம் யாப்பருங்கலமும், அதற்குத் துணை நூலான யாப்பருங்கலக்காரிகையும் தான்.

யாப்பருங்கலத்தின், 37 ஆம் சூத்திரத்தின் உரையில் இப்பாடல் எடுத்துக்காட்டப்பட்டுப் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

   ‘ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை.’ ( முது மொழிக்காஞ்சி 1 )


     இது முதலெழுத்து ஒன்றாமையின், மோனையும் அன்று;

    இரண்டாம் எழுத்து ஒன்றுதலும், இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர்        ஒன்றுதலும், மூன்றாம் எழுத்து ஒன்றுதலும் இன்மையால் எதுகையும் அன்று;

சொல்லும் பொருளும் பகைத்து வாராமையின், முரணும் அன்று;

இறுவாய் ஒத்து வாராமையின், இயைபும் அன்று;

அளபெடுத்து ஒன்றி வாராமையின், அளபெடையும் அன்று;

ஒவ்வாமைத் தொடுத்ததின்மையால், செந்தொடையும் அன்று;

அடி முழுதும் ஒரு சொல்லே வரத் தொடுத்ததின்மையான், இரட்டை தொடையும் அன்று;

ஈறு முதலாகத் தொடுத்ததின்மையின், அந்தாதித் தொடையும் அன்று.“

என்று கூறுகிறார். அதாவது மரபில் இருக்கும், இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்படும் எந்த அழகும் இப்பாடலில் இல்லை.

பாடலைப் படைத்தவன் இதைப்பற்றி எல்லாம் சிந்திக்கவில்லை.
அவன் தன் மனதில் தோன்றியதை அது திரளும் வடிவிற்கேற்றாற்போல் எழுதிப் போய்விடுகிறான்.

ஆனால் பாடல் அழகாய் இருக்கிறது.
பின்வரும் இலக்கணக்காரன் பார்க்கிறான்.
என்னடா இது, நாம் சொல்லும் அழகு எதுவுமே இந்தப்பாட்டில் இல்லை.
ஆனால் பாட்டு என்னமோ செய்கிறதே…………….???!!!

சரி முதல் அடியின் முதல் எழுத்தும், இரண்டாம் அடியின் முதல் எழுத்தும் நெடில் என்பதிலாவது  ஒன்றாக இருக்கிறதா இல்லையா?

அப்படியானால் இதில் வருவதை நெடில் மோனை என்று சொல்லிவிடுவோம் என்று நெடில் மோனை என்று இலக்கணம் அமைத்துவிடுகிறான்.

இதைத்தானோ சொல்கிறார்கள், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் படைத்தல் என்று?

துணை நூல்.
இளங்குமரன். இரா. ( ப. ஆ ), 1973.
யாப்பருங்கலம்.
திருநெல்வேலி , தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்.
1/40. பிரகாசம் சாலை, சென்னை-1. 


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

47 comments:

 1. ஆஹா இலக்கணமின்றி கவிதை ...நல்ல செய்தி...சகோ...உண்மைதான் எதுகை மோனைக்காக பாடல் தெளிவின்றி அமைவதும் உண்டுதான்..

  ReplyDelete
  Replies
  1. கவிஞரே!
   வணக்கம்.
   இலக்கணமின்றி கவிதை என்றா நான் சொல்லிஇருக்கிறேன்.
   நாம் எழுதும் கவிதைக்கும் மரபில் இலக்கணம் இருக்கிறது என்பதே நான் சொல்ல வந்தது.
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 2. அன்புள்ள அய்யா,

  மரபுக்கவிதைகளில் எதுகை மோனை என்பது இட்டு நிரப்பவேண்டி... ஓசைக்காக தேடியலைதல் என்பது உண்மையே! அப்படி எழுதினால் ஓசை சிறந்திருக்கும்... படிப்பதற்கு நல்ல நயத்துடன் இருக்கும்!

  கவிதையின் உள்ளீடும் முக்கியம்தானே...! எதுமை மோனை இல்லாமல் எழுதும் கவிதையைப் புதுக்கவிதை என்று ஏற்றுக்கொள்கிறோமே?! இலக்கணங்கள் இதற்கு இல்லை!
  ‘நெடில் மோனை’ என்று இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுத்ததைப்போல புதுக்கவிதைக்கும் அல்லது இக்காலக்கவிதைக்கும் இலக்கணத்தை வகுத்துவிடவேண்டியதுதானே!
  தமிழ்ப்புலவர்கள் இதை ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள்...! எதுகை மோனை இல்லையென்றால் அது கவிதையென்று எப்படிச் சொல்லலாம் எனலாம்...! வசனத்தைக் கவிதை என்று எப்படிச் சொல்லலாம் எனலாம்! மகாகவி பாரதிகூட வசன கவிதை எழுதியிருக்கின்றார் என்பதை நாமறிவோம்.

  மாற்றமே மானிடத் தத்துவம்!
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அய்யா வணக்கம்
   எதுகை மோனை என்பது எல்லா இடங்களிலும் இட்டு நிரப்ப வேண்டி இருக்காது அய்யா. கவிதையின் ஓட்டத்தில் வந்துவிழும் வார்த்தைகளை நாம் இப்பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை.
   “ அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
   உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் “
   என்கிறவரிகளில் வருகின்ற எதுகை இயல்பாகவே உள்ளது.
   இங்கு எதுவும் துருத்தித் தெரிவதில்லை.
   நான் பதிவில் சுட்ட விரும்பியது, வேறு வழியில்லாமல் எதுகைக்காகவும் மோனைக்காகவும் கவிதையில் அர்த்தமிற்று நிற்கும் செத்த சொற்களையே!
   பாரதியிலும் இதை நாம் காண முடியும்.
   எல்லா மரபுக் கவிஞர்களும் இதை தம் படைப்பின் எக்கணத்திலாவது உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
   அடுத்து
   ““““இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் வகுத்ததைப்போல புதுக்கவிதைக்கும் அல்லது இக்காலக்கவிதைக்கும் இலக்கணத்தை வகுத்துவிடவேண்டியதுதானே“““““
   என்ற உங்களின் கருத்திற்கான எனது பதில், புதுக்கவிதைக்கு என்றலல்ல இனிவரும் எந்தக் கவிதை வடிவமானாலும் அதற்கான இலக்கணம் மரபிலக்கணத்தில் சொல்லப்பட்டுவிட்டது என்பதே!
   ஒரு வேளை ஆச்சரியமாக இருக்கலாம்.
   அது பற்றிய ஒரு பதிவை விரைவில் எழுத எண்ணுகிறேன்.
   எல்லாம் தமிழில் சொல்லப்பட்டுவிட்டன என்னும் பண்டிதத்தனம் இல்லாமல், இருப்பதை முதலில் இனம்காணும் முயற்சியாகவே அப்பதிவு இருக்கும்.
   வசனம் கவிதையாகும் இடங்களை நீங்கள் பல கதைகளிலும் கட்டுரைகளிலும் கூடக் கண்டிருக்கலாம்.
   கவிதை சொல்லையும் பொருளையும் கடந்து நம் மனதில் பண்பட்ட ஓருணர்வைத் தொட்டெழுப்புவது. அப்படி எழுப்பும் தொடர் எதுவானாலும், எங்கிருந்தாலும் அது கவிதையாகிறது என்றே நினைக்கிறேன்.
   விரிவாக இது பற்றிப் பேசுவோம் அய்யா!
   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 3. வணக்கம்
  ஐயா.

  இதை விட விளக்கம் நான் அறிந்ததில்லை... புரியக்கூடிய வகையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி திரு ரூபன்.

   Delete
 4. ஐயா:

  எதுகை போனை எல்லாம் தேடிப் பிடிச்சு கவிதை எழுதத் தெரியாத என்னைப்போல் கையாளாகாத ஆட்களெல்ல்லாம அந்த இயலாமையை ஏதோதோ சொல்லி சமாளிப்பதை நீங்க கண்டதில்லையா?? :)


  *** கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு?


  சொல்லவந்த ஒரு விசயத்தை
  தெளிவாக சொல்வதை தவிர்த்து
  கவிதை வடிவாக்க வேண்டுமென்பதால்
  மடக்கி மடக்கி எழுதி
  பத்தி பத்தியாக எழுதி
  அர்த்தமற்ற கற்பனையை
  வலுக்கட்டாயமாகக் கலந்து
  தேவையேயில்லா வர்ணனையை
  அங்கங்கே அதில் பூசி மொழுகி
  பிறரையும் குழப்பி தானும்
  குழம்புவதுதான் கவிதையா? ****

  http://timeforsomelove.blogspot.com/2012/05/blog-post_4866.html

  ReplyDelete
  Replies
  1. அய்யா வணக்கம்.
   அதையெல்லாம் தேடிப்பிடிக்க வேண்டியதில்லை என்பதற்காகத்தான் இந்தப் பதிவே!
   நான் மரபை என்றால் நீங்கள் புதுக்கவிதையை ஒரு “பிடி“ பிடித்துவிட்டீர்களே :))
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   Delete
 5. அவ்வளவாக நான் தமிழ் இலக்கணம் அறிந்தவன் அல்ல. இருந்தாலும் தங்களுடைய பதிவைப் பார்த்தபின் இலக்கணத்தின்மீது ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. நடைக்காக செயற்கை திணிக்கப்படுவது தவிர்க்கப்படலாம் என்பதைத் தாங்கள் விவாதித்துள்ளவிதம் நன்று.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அய்யா!
   உங்கள் ஆய்வும் தேடுதலும் கண்டு வியப்பவர்களுள் நானும் ஒருவன்.
   நானும் அவ்வளவாகத் தமிழிலக்கணம் அறிந்தவனில்லைதான்.
   அதுநான் விரும்பி வாசிக்கும் புத்தகம் எனச் சொல்ல அது நாவலோ கதையோ இல்லையே......!!
   என்னுடைய பதிவைக் கண்டு உங்களுக்கு இலக்கணத்தின் பால் ஆர்வம் வந்தது என்றால் எனக்கு அதைவிட பெரிய மகிழ்ச்சி என்ன?
   ஆர்வமும் முயற்சியும் இருந்தால் நாம் தேடுவது கிடைக்கும் என்பதற்கு நீங்கள் சென்றவாரம் உலகிற்குக் கண்டிறிந்து சொன்ன புத்தர் சிலை சான்றல்லவா?
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 6. Replies
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி டி டி சார்.

   Delete
 7. உஷ்..! அப்பாடா. பல இடங்களில் நான் வெளியிட்டு வந்த கருத்தை ஒரு பண்டிதரும் கூறக் கேட்க மகிழ்ச்சி. பல மரபுக் கவிதைகளுக்கு பின்னூட்டம் இடத் தயக்கம் ஏற்படுகிறது. வார்த்தைகளுக்காக எழுதுபவர் எத்தனைக் கஷ்டப்பட்டு தேடுகிறாரோ, அதை மிக எளிதில் வாசிக்கும் போது இனம் கண்டு கொள்ள முடிகிறது. ஒரு முறை நான் எழுதுவது கவிதை அல்ல என்று எழுதி இருந்தேன். நீங்கள் சொல்லும் கருத்தை ஒட்டி புலவர் இராமானுசம் என்னை உற்சாகப் படுத்தி இருந்தார் “நான் புலவன் சொல்கிறேன். நீங்கள் எழுதியது கவிதைதான்” எண்ணங்களைப் பகிர இது ஒரு வாய்ப்பாக இருந்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அய்யா!
   என்னைப் பண்டிதர் என்றீர்களானால் உண்மைப் பண்டிதர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.
   //வார்த்தைகளுக்காக எழுதுபவர் எத்தனைக் கஷ்டப்பட்டு தேடுகிறாரோ, அதை மிக எளிதில் வாசிக்கும் போது இனம் கண்டு கொள்ள முடிகிறது. //
   உண்மைதான் உங்களின் வாசிப்புப் பழக்கத்தை இவ்வரிகள் இனம் காட்டிவிட்டன.
   கவிதை, பாடல், செய்யுள் என்பன தமிழில் வெவ்வேறு பொருளுடையன.
   எல்லாவற்றையும் கவிதை எனும் இடத்தில்தான் பிரச்சனை வருகிறது.
   தங்களின் வருகையும் கருத்தும் கண்டு மனம் நிறைகிறேன் அய்யா!
   மிக்க நன்றி!

   Delete
 8. //யாருக்கு வந்திருக்கிறதோ இல்லையோ, எனக்கு வந்திருக்கிறது// - ஐயா! நானும் இதோ கை தூக்கி விட்டேன். எனக்கும் வந்திருக்கிறது. :-)

  எதுகை, மோனையோடு எழுத வேண்டும் என்று தமிழ் யாப்பு மரபு எங்குமே கூறியதில்லை என்று தாங்கள் இங்கே கூறியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவு. எத்தனை பேருக்கு இது தெரிந்திருக்கும்?!!!!!

  "சமூகத் தளைகளை விடத் தமிழின் தளைகளுக்குக் கவலைப்படவே கவிஞனுக்கு நேரம் சரியாக இருக்கிறது" என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கூறியதாக ஒருமுறை மேடையில் ஒருவர் சொன்னார். (என் மங்கலான நினைவுப்படி அப்படிச் சொன்னவர் கருணாநிதி!). ஆனால், வைரமுத்துக் கூடப் புதுக்கவிதையின் இன்றியமையாமையை வலியுறுத்தத்தான் அப்படிக் கூறினாரே தவிர, தமிழ் இலக்கணமே அப்படித்தான் கூறுகிறது என்று சொல்லவில்லை. தாங்கள் கூறியிருப்பது மிக மிக முதன்மையான தகவல்! நன்றி ஐயா! இது பல பேர் வயிற்றில் பாலை வார்க்கும்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா ,
   வணக்கம்.
   எதுகை மோனையோடு தான் எழுத வேண்டும் என்று தமிழ்யாப்பு மரபு எங்கும் கூறியதில்லை என்பது எனது கருத்தே.
   என் இலக்கண வாசிப்பில் அப்படி யாப்பியல் நூல்கள் சொல்லி நான் கண்டதில்லை. அப்படி இருப்பதாகக் கண்டறிந்தவர்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்கிறேன்.
   எதுகை மோனை அவசியமா என்றால் அது கவிதையின் வடிவம் சார்ந்து அழகுபடுத்தும் ஒரு வழிமுறை அவ்வளவுதான். ஆனால் உயிர்ப்பற்ற சொற்களைக் கொண்டு அது அத்தியாவசியம் என்று எண்ணிச் செய்யும் அழகுபடுத்தல்கள், சலிப்பையும், சோர்வையும் வாசிப்பவருக்கு ஏற்படுத்திப் போய்விடுகின்றன.
   மரபுக் கவிதைகள் வழக்கிறந்து போனதற்கான பல காரணங்களில், கவிதைக்குச் சற்றும் தொடர்பில்லாத, வேண்டப்பெறாத இந்த வெற்று வார்த்தை அலங்காரங்களும் ஒரு காரணம் எனவே நான் எண்ணுகிறேன்.
   வைரமுத்தோ மு க வோ நீங்கள் சொன்ன செய்தியை நான் அறிந்திருக்கவில்லை.
   அறியத்தந்தமைக்கு நன்றி.
   தங்கள் வருகைக்கும் மதிப்புமிக்க கருத்துகளுக்கும் என்றென்றும் நன்றியுடையேன்.

   Delete
 9. எதுகையோ மோனையோ இயைபோ தொடையோ, எதுவாக இருந்தாலும் உறுத்தாமல், தனியாகத் துருத்திக் கொண்டு தெரியாமல் இருந்தால்தான் அழகு. அப்படி இல்லாவிட்டால், புதுமையாகவாவது இருக்க வேண்டும். அவ்வகையில் அண்மைக்காலமாக, பாடலாசிரியர் மதன் கார்க்கி அவர்கள் அசத்தி வருகிறார். 'அஸ்கு லஸ்கா' பாடலில் 'ராஜாவின் மனதை' என்பதற்குத் 'தேஜாவூ கனவில்' என்று அவர் எழுதியிருந்தது மிரள வைத்தது! பொதுவாக, ராஜாவுக்கு ரோஜாவும், ரோஜாவுக்கு ராஜாவும் மட்டும்தான் தமிழ்த் திரைப்பாடல்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம். இதையே எத்தனை நாட்களுக்குப் பிடித்துக் கொண்டு தொங்குவது என்று கருதியோ என்னவோ, பின்னர் "ராசா - ரோசா" என எழுதத் தொடங்கினார்கள். ஆக மொத்தம், இந்த வார்த்தைகளுக்கு வேறு இயைபே கிடையாது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம். அதை மாற்றிப் போட்ட மதன் கார்க்கி, தொடர்ந்தும் இது போல் பற்பல புது முயற்சிகளை அரங்கேற்றி வருகிறார். இப்படிப்பட்ட திறமையாளர்கள் இருக்கும் வரை எதுகையும் மோனையும் இயைபும் பிறவும் பஞ்சமின்றி வாழும்! அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்ன மதன் கார்க்கி அவர்களின் பாடலை நான் கேட்டதில்லை.
   தகவலுக்கு நன்றி.எதுகை மோனை இயைபு என்பன தேவையற்றவையல்ல. அவை செயற்கையாகக் கவிதையில் சேர்க்கப்படக் கூடாது என்ற இப்பதிவின் மையத்தை உங்கள் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தியமைக்கு நன்றி.
   நீங்கள் குறிப்பிட்ட திரு. மதன் கார்க்கி அவர்களின் பாடலை நான் கேட்டதில்லை.
   தங்களின் தொடர்வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

   Delete
 10. இலக்கண நீதிகளை மதி கொண்டு மதியாது,
  விதியின் பெயரால் விலகி செல்லும் அன்பர்களுக்கான
  நல்லுரையாக
  "எதுகை மோனை தேவையில்லாத் தமிழ் மரபுக்கவிதைகள்"
  இதைக் கொள்ளலாமா? அய்யா!

  புது இலக்கணம் புற்றீசல் போல் பெருகி வருவதைத்தான்

  இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் படைத்தல் என்று சொன்னீர்களா?
  அருமை!

  மு.மேத்தாவின் வரிகள் இதோ:

  இலக்கணம் செங்கோல்

  யாப்பு சிம்மாசனம்

  எதுகை பல்லாக்கு

  மோனைத் தேர்கள்

  தனிமொழிச் சேனை

  பண்டித பவனி

  இவையெதும் இல்லாத

  கருத்துகள் தம்மைத் தாமே

  ஆளக் கற்றுக் கொண்ட

  புதிய மக்களாட்சி முறையே

  புதுக் கவிதை"

  என்கிறார்.

  மன்னர் ஆட்சி செய்த "மரபு" நீங்கியது போல்
  மக்களாட்சி முறை( புதுக் கவிதை)
  சிறந்து விளங்க வேண்டும் என்பது இப்போது
  அவசியம் வேண்டுமல்லவா? அய்யா!

  சிந்தையைத் தூண்டிய அரும் பதிவு!

  நன்றியுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. அய்யா வணக்கம்.
   நீங்கள் காட்டிய கவிஞர் மேத்தாவின் மரபுகள் புதுக்கவிதை இயக்கத்தின் எழுச்சிக் காலத்தில் மிகப்பிரபலமானவை.
   ஆனால் புதுக்கவிதை என்று தனியே “ இலக்கணத்தை மீறியதாக “ ஒன்றைச் சொல்ல வேண்டியதில்லை என்புதும், அதற்கும் நம் மரபிலக்கணத்தில் இடமிருக்கிறது என்பதும் என் கருத்து.
   கூடுமானால் அதற்கும் ஒரு பதிவிட்டால் போகிறது.
   நன்றி

   Delete
 11. இலக்கணத்தை விளக்கிய விதம் நன்று கவிஞரே,,,
  தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

   Delete
 12. ஹை! எதுகை மோனை இல்லாமல் கவிதை எழுதலாமா...அப்போ தேடித் தேடில் காண வேண்டாம் வார்த்தைகளை...ஹப்பா. சரி அப்போ இப்பவாவது கவிதை எழுதிப் பாருங்களேன் அப்படினு உங்க வாய்ஸ் கேக்குது ஆசானே....ஹஹஹ் பார்த்துட்டாப் போச்சு.....

  மிக்க நன்றி ஆசானே!

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஆசானே இல்லாமலும் எழுதலாம்.
   நன்றி

   Delete
 13. ஓகோ!இப்படியும் ஒண்ணு இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. ஒன்றில்லை அய்யா பல இருக்கின்றன.....!
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

   Delete
 14. எது கைக்கு வருகிறதோ அதுவே எதுகை என்று எழுதப்பட்ட பாடலுக்கு ,நீங்கள் சொல்லி இருக்கும் உதாரணம் கூட அருமை :)
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. விட்டால் எது கைக்கு வருகிறதோ அதை எதுகை என்பது போல் எது வாய்க்கு வருகிறதோ அதை கவிதை என்று விட மாட்டீர்களே பகவானே..!
   வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி !

   Delete
 15. ஒ! அண்ணா உங்களுக்குமா!!???
  கவிதை என்பது இதுகாறும் என்னை ஆற்றொழுக்கில் இழுத்துச்செல்லும் மலராய் தான் நகர்த்திசென்றது. ஆனால் இந்த வெண்பா முயற்சிகள் இருக்கிறதே அப்பப்பா! புதிதாய் வாய்த்த மணவாழ்வை போல் என்ன சொல்லவருகிறதென்றே தெரிவதில்லை. நானென்று நினைத்துத் தொடங்க இந்த மோனை முயற்சிகளால் அது எங்கோ சென்று கொண்டிருக்கும்:))) இப்போ நீங்க சொல்லியிருக்கும் கருத்து எனக்கு ரொம்ப ஆறுதலாய் இருக்கு அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் கவிதை நீங்கள் சொல்வது போலத்தான் இருக்க வேண்டும்.
   மரபிலும் அதுபோல வார்த்தைகள் இயல்பாய் வந்து விழுவதுண்டு. எதுகை மோனை எல்லாம் இயற்கையாய்ப் பொருந்தும் கணங்கள்.
   அப்பொழுது இந்த விகாரம் ஏற்படுவதில்லை.
   கவிதையைச் “செய்ய“ உட்காரும் போதுதான் இதுபோன்ற சூழ் நிலைகள் ஏற்படுகின்றன.
   யாராய் இருந்தாலும் அப்படித்தான் என்றே நினைக்கிறேன்.
   நன்றி

   Delete
 16. எதுகையும் மோனையும் எங்கோ இழுக்க
  பதுமையாய் நாமும் அதன்பின் தொடர
  புதுமையாய் சொற்கள் புகுந்து மரபாய்
  அதுசங்க மிக்ககவிக் கழகு!

  இதுகைவரப் பெற்றால் கவிக்குயிலே! இல்லைஎனில்
  எதுவரினும் பற்றியதை பாடுக! எப்படி
  ஆக்கினால் என்ன சமையல் ருசியென்றால்
  ஏக்கமேன் பசிவர உண்ணு !

  என்னமோ போங்கய்யா பிழையாக எழுதுகிறேனோ என்று வருந்தும் போது ஆறுதலாக இருக்கிறது. இப் பதிவு அப்பாடா என்று பெருமூச்சு விட வைக்கிறது. கற்றுக் கொண்டு எழுத ஆசை தான். ஆனாலும் அதற்கு கொடுப்பினை என்று ஒன்று வேண்டாமா என்ன? ஆனாலும் முயற்சி செய்வேன். ஹா ஹா ....
  பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் உள்ளது.ம்..ம்..ம் வெண்பாவையும் சொல்லித் தந்து வராவிட்டாலும் என்ன dont worry இப்படியும் எழுதலாம் ? ஹா ஹா நல்லதப்பனே. மிக்க மகிழ்ச்சி !

  ReplyDelete
  Replies
  1. இரண்டையும் சொல்ல வேண்டும்தானே..!
   ஆனால் உங்களுக்கு எதுகை மோனையோடல்லவா கவிதை வருகிறது.
   இயற்கையாய் அப்படி வந்தால் அது பரவாய் இல்லை.
   செயற்கையைப் பற்றித்தான் நான் கூற வந்தது.
   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா!

   Delete
 17. சிறப்பான பதிவு..
  த ம 10.

  ReplyDelete
 18. ஐயாஎனக்கு இதில் மிகவும் பிடித்தவரிகள்\\இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்
  வகுத்தாற்போல் புதுக்கவிதக்கும் அல்லது இக்காலக்கவிதைக்கும் இலக்கணத்தை
  வகுத்துவிட வேண்டியதுதானே//

  ReplyDelete
  Replies
  1. புதுக்கவிதைக்கும் மரபில் இலக்கணம் இருக்கிறது சகோ.

   அதை எழுத வேண்டும்.

   என்ன வழக்கம்போலச் சோம்பல் தான்..


   தொடர்வோம்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete

 19. வணக்கம்!

  வெல்லும் தமிழில் விளைந்த கவியெல்லாம்
  சொல்லும் மரபைத் தொடர்ந்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.

   சொல்லின் படைநடத்திச் சோர்வகற்றும் உம்வெண்பா
   வெல்லநான் வீழ்தல் விழைவு.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

   Delete
 20. நீங்கள் கொடுத்த இணைப்பின் வழி இப்பதிவு வந்தேன். செயற்கையாக வேனும் பொருந்தாதச் சொற்களை எதுகைக்காகச் சேர்த்துத் தான் ஆக வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றறியும் போது ஆறுதலாயிருக்கிறது. வெண்பா இலக்கணம் கற்ற பிறகு கண்ணில் படும் பாவெல்லாம் என்னிடம் மாட்டிக்கொண்டு தவியாய்த் தவிக்கிறது. அதைப்பற்றி ஒரு வெண்பா எழுதியுள்ளேன். சரியாவென்று சொல்லுங்கள்:-

  வெண்பா இலக்கணம் கற்றாலுங் கற்றேனே
  பண்ணிசைக்கும் பாவின் நயம்விடுத்துக் – கண்டவுடன்
  நேர்நிறை நேரென்றே குத்திக் கிளறிக்
  கூறுபோடத் துள்ளும் மனம்.

  ReplyDelete
 21. நேர்நிரை என்பதை நேர்நிறை என்று தவறாக எழுதிவிட்டேன். நேர்நிரை என வாசிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.

   வழக்கம்போல மிகத்தாமதமாகத்தான் பதிலளிக்கிறேன்.

   எதுகை மோனை தேவையில்லை என்பது இயல்பு.

   எதுகை மோனையோடு எழுதுதல் மரபு.

   ரொம்பக் குழப்புகிறேனோ? :)

   இப்பொழுதுகூடப் பாருங்கள் உங்கள் வெண்பாவிலேயே எதுகையும் மோனையும் நிறைந்துதான் வந்துள்ளது.

   சரி சரி இனிமேல் எனக்கு வெண்பா தெரியாது என்கிற முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.

   தங்கள் வெண்பாவை ரசித்தேன்.

   அழகு.

   வாழ்த்துகள்.

   நன்றி.

   Delete
 22. விகற்பம் வெண்பா இலக்கண வடிவில் படிக்கப் போக, உம்மின் வலைதளம் வந்து சேர்ந்தேன். தற்போது சில நூறு கவிதை இயற்றிய நான், இதுமுதல் பலமடங்கு எழுதுவேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சாய்.

   Delete
 23. வணக்கம்!

  ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  ஓதலிற் சிறந்தன் றொழுக்கம் உடைமை.

  மேலுள்ள அடிகளில் மோனையும் உண்டு. எதுகையும் உண்டு.

  ஆர்கலி - ஓதல் - ஆசெதுகை
  ஓதல், ஒழுக்கம், உடைமை - இரண்டாம் அடியில் உள்ள மோனை
  ஆர்கலி - எல்லாம் - ஆம் உள்ளடங்கும் மோனை

  ஆசான் அளித்த அறிவினால் இங்குரைத்தேன்
  வாசக் கருத்தை வகுத்து!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   இங்கு இவ்வரிகளை எடுத்துக்காட்டி இதனுள் எதுகை இல்லை மோனை இல்லை இயைபு இல்லை முரண் இல்லை என்றெல்லாம் சொன்னவன் நான் அல்லேன். அது யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் கூற்று.

   அவர் கூற்றில் எனக்கு உடன்பாடு உண்டோ எனின் உண்டு.

   ஆசெதுகை என்பதே சிறப்பில் எதுகை என்பதுதானே? அது ஒருவகை வழுவமைதிதான். விதிக்குள் அடங்காதனவற்றிற்கும் இணக்கம்காட்டி ஓர் இனத்திற்குட்படுத்த முயலுதல்.

   “““ஆர்கலி - ஓதல் - ஆசெதுகை ““““

   எனக்குறிப்பிட்டுள்ளீர்கள்.

   ய ர ல ழ ஒற்றுகள் இடையில் வர அதற்கடுத்த எழுத்துகள் எதுகையில் ஒன்றாக வர வேண்டும் என்பதே ஆசெதுகை என்பதற்கான வரையறையாகவும்,

   “காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்
   பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து
   தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
   ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே.“

   என்பது போல வரும் இடங்களை இதற்கு உதாரணமாகவும் காட்டிச் செல்கிறது யாப்பருங்கலக்காரிகை.

   இங்கு, முதலடியின் முதற்சீரில் யகரம் எதுகைக்கு இடைவந்து அடுத்துவரும் மகாரம், ஏனைய அடிமுதற்சீர்களில் இரண்டாவதாய் வந்து ஒன்றி அமைந்தமையால் இதுபோல் வருவனவற்றையே ஆசெதுகை என்றும் விளக்கமும் சான்றும் காட்டிச் செல்கிறது அது.

   எனவே தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல

   “ ஆர்கலி – ஓதல் ” என்பது ஆசெதுகை ஆகாது.

   அதே நேரம்,

   'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
   ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை”
   என்னும் பாடலையும் இதே ஒழிபியலில் எடுத்துக்காட்டி,
   “ இது முதலெழுத்து ஒன்றாதாயினும் முதலெழுத்தின்மேல் ஏறிய நெடில் ஒப்புமை நோக்கி நெடில்மோனை என்று வழங்கப்படும்” என்றும் குறிக்கிறது காரிகை.
   இதையே எனது பதிவிலும் குறித்தேன்.

   முன்னோர் பாடலின் இதுபோன்று வருமிடங்களைத் தவிர்க்க நினையாது வகுத்துக் கொண்ட இலக்கண அமைதியாகத்தான் இதனைக் காணவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

   எவ்வாறு கொள்ளிலும் மரபுப்படி இவை சிறப்பில்லாதன என்பதை காரிகையே ஏற்கிறது.

   அக்காரிகைச் சூத்திரம் இதோ,

   “வருக்க நெடிலினம் வந்தா லெதுகையு மொனையுமென்
   றொருக்கப் பெயரா லுரைக்கப் படுமுயி ராசிடையிட்
   டிருக்கு மொருசா ரிரண்டடி மூன்றா மெழுத்துமொன்றி
   நிரக்கு மெதுகையென் றாலுஞ் சிறப்பில நேரிழையே!“ ( யா. கா. 41)

   இதனை, எதுகை என்றாலும் அது சிறப்பில நேரிழையேதான்.

   நிற்க,

   தாங்கள் காட்டியவாறே இப்பாடலின் இரண்டாம் அடியில் மோனை இருக்கிறது.
   ஆயின்,
   முதல் அடியை மோனைக்கும், இரண்டு அடிகளையும் எதுகைக்கும் எடுத்துக்கொண்டு தந்த விளக்கமாகவே விருத்தியுரைகாரரின் உரை எனக்குப் படுகிறது.

   மரபிற் பயில்வோர்க்கு எதுகை மோனை என்பனவற்றைவிடக் கவியழகும் பொருளழகும் அவசியம் என்பது என் கருத்தாய் இருப்பதாலும், மரபில் நுழைவோர் தம் கருத்துவிளக்க உரிய சொற்கள் இருந்தும் இவ்வெதுகைக்கு ஏங்கியும் மோனைக்கு முட்டியும் அலைப்புறுதல் கண்டதாலும் அறிந்ததைப் பகிர்ந்தேன்.

   “ஆசானெக் கில்லை! அருங்கலம் உற்றசிறு
   தூசேநான்! கற்றல் துணை!“

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் அறிவூட்டுதலுக்கும் நன்றிகள்.

   Delete