Monday 9 June 2014

முப்பாற்புள்ளி


     
சோதனை முயற்சியாக வழக்குத்தமிழில் நான் பதிவிட்ட “ உடம்பொடு புணர்த்தல் ” எனும் கட்டுரையின் முடிவில் நான் மதிக்கும் இரு தமிழறிஞர்களின் கருத்தினைக் கேட்டிருந்தேன். இருவரின் கருத்துக்களும் வெவ்வேறாயிருந்தாலும் கூட, கவிஞர். கி. பாரதிதாசன் அய்யா அவர்களின் பின்னூட்டம், எனது நடை, பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதைச் சுட்டுவதாய் அமைந்தது.

இலகுவான நடையில் நமக்குப் புரிந்த இலக்கணத்தை கூறலாம் எனும் என்முயற்சி எனக்குக் கைவராமையால் மீண்டும் பழைய நடைக்குத் திரும்புகிறேன். இரவாகிவிட்டபடியால், மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிடம் இதைச் சொல்ல முடியவில்லை. அய்யா அவர்கள் தவறாக நினைக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. கவிஞர். பாரதிதாசன் அய்யா அவர்கள் குற்றியலுகரம்/இகரம் பற்றி எழுத என்னைப் பணித்தார்கள். எனக்குத் தெரிந்ததைப் பதிவிடும் ஆர்வம் மட்டுமே கொண்டு போதிய தரவுகளின்றி உடனடியாகத் தொடங்குகிறேன். தவறுகளோ கருத்துப்பிழைகளோ இதில் இருந்திடக் கூடும். முனைவர். அருள்முருகன் அய்யா தம் பதிவில், “ஆசிரியர்கள் சிலர், தாம் செய்யும் தவறை மாணவர் கண்டுபிடித்தால், நீங்க கவனமா இருக்கிங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் வேணடுமென்றே தப்பா எழுதினேன் ” என்று சொல்லுவார்கள் என்று சொல்வதைப் போல் சொல்லி விட மாட்டேன். இவை நான் தமிழ் கற்கப் பயிற்சி செய்யும் அரிச்சுவடிகள் தான்.  திருத்திக் கொடுப்போரின் அடிச்சுவடுகள் என்றும் என்னுள் அழியாமல் இருக்கும்.   

          முதலில் சார்பெழுத்துக்கள் பற்றிக் குறிப்பிடுவதாகப் பரவலாகக் கொள்ளப்படும் சூத்திரத்தின் சர்ச்சைகளைப் பார்த்துவிடுவோம். தொல்காப்பியத்தின் இரண்டாம் நூற்பா முப்பது எழுத்துக்கள் அன்றி, அதனைச் சார்ந்து வரும் மூன்று எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது. சார்பெழுத்துக்கள் இவை எனத் தொல்காப்பியர் இவற்றை எங்கும் குறிப்பி்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
அந்நூற்பா வருமாறு,
“ அவைதாம்
 குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
 ஆய்தம் என்ற
 முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன“
 இளம்பூரணரும் நச்சரும் இந்நூற்பாவிற்குக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று புள்ளியை உடைய எழுத்தும் மேற்காட்டிய முப்பது எழுத்தினோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் என்பர். 
நச்சினார்க்கினியர் கூடுதலாய் ஆய்தத்தின் வடிவு பற்றிய செய்தியைத் தருகிறார்.
1) ஆய்தம் அடுப்புக் கூடு போன்ற வடிவினது.
2) மூன்று புள்ளி வடிவானது என்பதை விளக்கவே தொல்காப்பியர்         ஆய்தம்  என்ற முப்பாற் புள்ளியும் என்றுள்ளார்.
3) ஆய்தத்தை தற்காலத்தவர் நடுவு வாங்கியிட்டு எழுதுவார்கள்.
4) ஏனைய மெய்யெழுத்துக்கள் போல உயிர் ஏற இடம் கொடுக்காமல் வேறுபட்டு இருப்பதால் இதற்குத் தனியே வடிவத்தைக் கூறினார்.

             என்பன நச்சினார்க்கினியர் ஆய்தத்தின் வடிவம் குறித்துத் தரும் கருத்துக்களாகும். ஆனால், சிவஞான முனிவர், வெங்கடராசுலு ரெட்டியார் முதலிய ஒருசாரார், முப்பாற் புள்ளியென்பது குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்னும் மூன்று எழுத்துக்களும்  புள்ளிபெறும் என்பதையே குறிக்குமேயன்றி ஆய்தம் என்னும் எழுத்தின் வடிவு குறித்ததன்று என்னும் கருத்தினர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் வருமாறு;

1)  முப்பாற்புள்ளி என்பது ஆய்தத்திற்கு அடையாயின்  தொல்காப்பியர் முப்பாற்புள்ளியாகிய ஆய்தம் என்றே குறிப்பிட்டிருப்பார். அடைமொழியைப் பெயருக்கு முன்னொட்டாய் இடுதலே மரபாகும்.
2) ஒருங்குவைத்து எண்ணப்படும் மூன்று எழுத்துக்களைக் கூறும்போது அவை மூன்றிற்கும் உரிய பொதுவியல்பினைக் கூறுவதே முறையாகும். அவ்வாறல்லாமல் ஓரெழுத்திற்கு மட்டும் சிறப்பியல்பினைக் கூறி மற்ற இரண்டு எழுத்துக்களோடு அதை ஒருங்கு வைத்துக் கூறுவது சிறப்புடையது அன்று.

முப்பாற்புள்ளி என்பது ஆய்தத்தையே குறித்தது என நச்சரோடும் இளம்பூரணரோடும் உடன்படும் வெள்ளைவாரணர், சிவஞானமுனிவர் முதலிய ஒருசார் ஆசிரியர்களின் கருத்தைப் பின்வருங் காரணங்கள் காட்டி மறுக்கிறார்.
1) குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனும் மூன்றும் புள்ளிபெறுவதால் முப்பாற் புள்ளி எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதாகக் கொண்டால், புள்ளியிட்டு எழுதப்படும்  எகர ஒகரங்களையும் புள்ளியென்றுதான் கூற வேண்டிவரும். ஆனால் அவை அவ்வாறு கூறப்படுவதில்லை. 
2) குற்றியலுகரம் மொழியின் இறுதியிலன்றி புள்ளி பெறுவதில்லை. மொழியிறுதியில் வரும் குற்றியலுகரமே புள்ளி வைத்துக் காட்டப்படுகிறது.  புள்ளிபெறும் ஈற்றுக் குற்றியலுகரத்திற்குப் புள்ளியில்லாத வடிவமும் உண்டு. எனவே மொழிமுதல் குற்றியலுகரம், குற்றியலிகரம் எனும் இவற்றைப் புள்ளியெனப் பொதுப்பெயர் இட்டு வழங்குவது முறையல்ல!
3) குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பனவற்றைத் தொல்காப்பியர் வேறெங்கும் புள்ளியெனக் கூறவில்லை. இவை மெய்யோடு இயைதல் முதலாக உயிர் இயல்பில் வைத்தே எண்ணப்படுகின்றன.
4) ஆய்தத்திற்கு மூன்று புள்ளியன்றி வேறு வடிவம் இல்லை.

எனவே முப்பாற் புள்ளியென்பதை ஆய்தத்தைக்  குறிக்கவே தொல்காப்பியர் பயன்படுத்தி இருக்கிறார்.

வெள்ளைவாரணரின் கூற்றை பின்வரும் காரணங்களால்  நாம் ஏற்க இயலாதவர்கள் ஆகிறோம்.
1) சார்ந்துவரும் எழுத்துக்களின் வகையை விரித்துரைக்கும் இச்சூத்திரம் அவைகளின் பொதுவியல்பினைப் புள்ளி பெறுவதாகக் கூறுகிறதே ஒழிய புள்ளியென்று அவை அழைக்கப்படும் எனக் கூறுவதாகக் கொள்ள வேண்டுவதில்லை. இங்குப் புள்ளியென்பதை ஆகுபெயராகக் கொண்டு புள்ளி பெறும் எழுத்தினைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.
“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” என மெய் புள்ளிபெறும் என்பதைச் சுட்டும் ஆசிரியர்,  “ எகர ஒகரத் தியற்கையு மற்றே“ எனுமிடத்து எகர ஒகரங்கள் புள்ளிபெறுவதைக் காட்டுவார். எனவே எகர ஒகரங்களைப் புள்ளி எனத் தனித்துக் கூற வேண்டியதில்லை.

2) புள்ளிபெறும் குற்றியலுகரத்திற்குப் புள்ளியில்லாத வடிவமும் உண்டு என வெள்ளைவாரணர் கூறுவது சரிதான் ஆனால் வல்லாறூர்ந்ததால் மட்டுமே கு,சு,டு,து,பு,று என்பவை குற்றியலுகரம் ஆகிவிடாது. இவை குற்றியலுகரம் ஆயின் அதைக் காட்டும் வரிவடிவாக அதன்மேல் புள்ளியிட்டு அடையாளப் படுத்தவேண்டும். புள்ளியிடாவிடின் அவ்வுகரம் குற்றியலுகரம் ஆகாது. முற்றியலுகரம் ஆகிவிடும்.

பரசு, ஏது என்பன வடமொழிச் சிதைவாக வந்த முற்றுகரங்கள் என நச்சினார்க்கினியர் கூறுவது ( தொல். எழுத்-36 ) ஓசையை உளங்கொண்டே ஆகும். இங்கு வரும் உகரங்களை வாய்குவித்துச் சொல்லுவது ( <Parasu>, <Yeathu>)  அன்றைய உச்சரிப்பு வழக்காய் ( Accent ) இருந்திருக்க வேண்டும்.  எழுதும் போது இவற்றின் மேல் புள்ளியிடப் பெறாவிடின் அவற்றை முற்றுகரங்களாக உச்சரிக்க வேண்டும்.  தபு எனும் தனிக்குறிலை அடுத்து வரும் உகரமும் எடுத்துச் சொல்லுங்கால் முற்றியலுகரமாகுமென்றும் ( பொருள்-அடிபடு), படுத்துச் சொல்லுங்கால் குற்றியலுகரமாகுமென்றும் (=அடி) உரையாசிரியர்கள் குறித்துச் செல்வதும் இந்த ஓசை பற்றியே எனவே
தபு் எனக் காட்ட அங்கு வரும் உகரம் குற்றியலுகரம் எனப்புரிந்து கொண்டு ஒலிக்க வேண்டும். 
(சிறு வயதில் நாங்கள் விளையாடும் போது, ஒருவனைப் பலர் சேர்ந்து அடித்ததைச்  சொல்வதற்கு, “அவனைத் தப்புதப்பு ன்னு தப்பிட்டாங்கடா“ என்று சொல்வதும்,
“அப்பிலே இட்டு அடுத்தடுத்து நாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ?  எனும் இரட்டைப் புலவர்களின் சொல்லாட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தபு எனும் வடிவமே தப்பு என்றாயிருக்க வேண்டும். சாப்பறை, தப்பப்படுவதால் (அடிக்கப்படுவதால்) தப்பு என்றாயிற்று என்றெல்லாம் சொல்லாராய்ச்சி செய்வோர் ஆய்ந்து கொள்க )
3) மொழிமரபிலும், செய்யுளியலிலும் இம்மூன்றையும் புள்ளியொடு ஒருங்கு வைத்தே தொல்காப்பியர் காட்டிச் செல்கிறார். எனவே இவற்றைத் தனியே புள்ளி எனக் கூற வேண்டுவதில்லை. குற்றியலுகரமும், குற்றியலிகரமும் உயிரியல்பில் வைத்தே எண்ணப்படுகின்றன. சரிதான். ஆனால் அவை முழு உயிர் அல்ல. மொழியியல் நூலாரும் இவைபோல்வனவற்றை அரை உயிர்கள் (Semi Vowles ) என்பர். அதனால் தான் தொல்காப்பியர், இவற்றை எழுத்தோரன்ன என்கிறார்.( வெள்ளைவாரணர் கருத்தைப் பார்க்க அவர் கூறவந்தது வேறா நான் புரிந்து கொண்டது வேறா என எனக்கு ஐயம் எழுகிறது )
4) நான்காவது காரணம் வலுவானதுதான். ஆய்தத்திற்குப் புள்ளியன்றி வேறு   வடிவம் இல்லை. ஒவ்வோர் எழுத்திற்குமே அதன் வடிவம் தனித்தன்மையானது தான். ஓர் எழுத்தின்  தனித்தன்மை சுட்டுதல் இந்நூற்பாவின் நோக்கமன்று. ஆய்தத்தின் வடிவைப் படிப்போர்க்குப் புலனாக்க வேண்டுமே எனத் தொல்காப்பியர் கவலை கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில், முதற் சூத்திரத்திலேயே,
   “னகர இறுவாய்,
 முப்பஃ தென்ப”  என ஆய்தத்தைக் கையாண்டு விடுகிறார் தொல்காப்பியர்.
எனவே இதுவரை கண்டவற்றின் வழி இச்சூத்திரத்தில் முப்பாற்புள்ளி எனச் சுட்டப்பெறுவது ஆய்தம் எனக்குறிக்கும் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் உரைகளை விட சிவஞானமுனிவரின் கூற்றே அதிகப் பொருத்தம் உடையதாகப் படுகிறது.
எழுத்தோரன்ன எனத் தொல்காப்பியரால் சுட்டப்படும் இம்மூன்றும் தனித்த எழுத்துக்கள் தாமா? அல்லது முதல் எழுத்து முப்பதில் ஏற்புடையவற்றைச் சார்ந்து புள்ளி துணையாகக் கொண்டு, எழுத்தின் மாத்திரையைக் குறைக்கவும் ( குற்றியலுகரம்/ இகரம் ), எடுத்தலோசையைப் படுத்தலோசையாக்கவும் ( காபி – cabi :>  காஃபி – cafi ) அமைக்கப்பட்டவையா என்னும் வினாவை உங்களிடம் விட்டு விட்டு முப்பாற்புள்ளிகளில் ஒவ்வொன்றாக இனிவரும் பதிவுகளில் விவாதிக்க எண்ணுகிறேன். ஏனிந்த வேண்டாத வேலை உனக்கென நீங்கள் கருதினால் அதைக் கருத்திடவும் வேண்டுகிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

18 comments:

 1. Replies
  1. வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. அன்பு விஜூ, நான் இலக்கணத்தில் ஆர்வமிருக்கும் அளவிற்கு ஆற்றலுடையவன் அல்லேன். எனினும் அலட்சியமும் இல்லை. அதே நேரம் இலக்கணத்தை விடவும் இலக்கியப் படைப்புக்கு முக்கியத்துவம் வேண்டும் என முன்னிற்பவன். நிற்க.
  எளிமை எனும்பெயரில் எதையும் மலினப்படுததிவிடக்கூடாது, என்பது ஒருபக்கம் எனில், ஆய்வு எனும்பெயரில் எதையும் தனிமைப்படுத்தி விடவும் கூடாது என்பதே என் கருத்து. “எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என நம் புரட்சிக்கவி இதனைத் தெளிவாகவே சொல்லிவிட்டான். உங்களிடம் இருக்கும் இலக்கண அறிவு, புதிய விளக்கங்களாக அல்லாமல், புதிய விளக்குகளாகவே வரவேண்டும் என்பதே என் விருப்பம். இந்த நம் தம்பி கோபிநாத் அவர்களின் படைப்பையும் தொடர வேண்டுகிறேன் -
  http://ilakkanatheral.blogspot.in/2014/04/blog-post.html நன்றி வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா,
   இலக்கணத்தில் தங்களுக்கிருக்கும் ஆற்றலைக் கட்டளைக் கலித்துறை குறித்து நாம் மேற்கொண்ட விவாதங்களினாலும் ,அதன்பின் நான் பெற்ற தெளிவினாலும் நன்கறிவேன். எனவே மற்றவர்களை விட , உங்களின் இலக்கண அறிவையும் ஆர்வத்தையும் நான் புரிந்து கொண்டவன்.
   உடம்பொடு புணர்த்தல் எனுந்தலைப்பில் இடப்பட்ட பதிவு ஒரு சோதனை முயற்சியே ! நடையும் வலிந்து நான் மேற்கொண்டதே! மலினப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நிச்சயமாய் இல்லை, கவிதை போலவே இலக்கணத்திலும், சுவையான சில விடயங்களைச் சொல்லக் கருதினேன்.
   நிச்சயம் இலக்கணத்தின் சிலகூறுகளை நான் விளங்கிக் கொள்வதற்காக வேனும் பகிர நினைக்கிறேன். புலவர் கோபிநாத் அவர்களின் கட்டுரைகளை இலக்கணத் தேறலில் படித்திருக்கிறேன். அவர் தமிழ் படித்தவர். தமிழாசிரியராய் இருப்பவர். இலக்கணத்தில் கரைகண்டவர். எனக்கு இவ்வரம் வாய்க்கப் பெறாததால் இவர்கள் மேல் உண்மையில் பொறாமை உண்டு. என்ன, நான் தவறு செய்தால் , தமிழ் ஆசிரியரா இருந்துகிட்டே தப்பு பண்றாருப்பா, என எவரும் சொல்லிட வாய்ப்பில்லை எனும் ஒரு வசதி மட்டும் எனக்கு இருக்கிறது.
   தப்பு செய்தால் தான் என்ன , நீங்களெல்லாம் திருத்திட இருக்கிறீர்களே என்ற தைரியமும் தான்.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

   Delete
 3. தொடருங்கள்... இன்னும் அறிந்து கொள்கிறோம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அய்யா.

   Delete
 4. சிறந்த இலக்கணப் பகிர்வு

  visit http://ypvn.0hna.com/

  ReplyDelete
  Replies
  1. கருத்தினுக்கு நன்றி அய்யா!

   Delete
 5. ஒவ்வொன்றும் புதியதாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியுடையேன்.

   Delete
 6. இப்படி மிரட்டினால் எப்படி?

  இருந்தாலும் அருமையான ஆய்வுக் கட்டுரை.

  தொடர்க ...
  வாழ்த்துக்கள்
  http://www.malartharu.org/2014/05/the-godzila-film-review.html

  ReplyDelete
  Replies
  1. ஏதோ கிண்டல் செய்வது போல் தோன்றுகிறதே தோழரே!
   நேரடியாக நீங்கள் சொல்லாவிட்டால் வேறு யார்தான் சொல்வார்கள்?
   நன்றி!

   Delete
 7. இதற்கு கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவும் அனுபவமும் போதாது. என்றே எண்ணுகிறேன். அதனால் அமைதியாகிவிட்டேன். தொடர வாழ்த்துக்கள் ....! சகோதரர் மது சொல்வது போல் இப்படி மிரட்டினால் எப்படி?

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரி,
   மீண்டும் இந்தக் கட்டுரைப் பொருட்புலப்பாட்டுத் தன்மை உடையதாக இல்லையோ என்ற அச்சத்தைத் தான் உங்கள் பின்னூட்டம் எனக்கு ஏற்படுத்துகிறது. கவிதையாயின் புரிந்து கொள்ள முடியாமல் எழுதப்படுவது கவிதை என அதற்கொரு மாற்றிலக்கணங் கூறித் தப்பித்துக் கொள்ளவேனும் வாய்ப்புண்டு. கட்டுரையில் அவ்வாய்ப்புக்கும் வழியில்லை. அநேகமாக உங்கள் தொடர்ச்சிக்கான வாழ்த்துக்களைக்கவிதையைத் தொடருங்கள் என்பதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.
   வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி!

   Delete

 8. வணக்கம்!

  ஆய்தம் குறித்தே அளித்த விளக்கத்தில்
  பாய்ந்துவரும் தேனைப் பருகு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு  ReplyDelete
 9. அய்யா வணக்கம்.
  கருத்தினுக்கு நன்றியுடையேன்.

  காய்நிலத்தில் நீரூற்றித் தாயெனச்சீர் செய்வதற்
  காய்நன்றி சொல்லும் கவி!


  ReplyDelete
 10. வணக்கம் ஐயா. முப்பாற் புள்ளி பற்றிய கட்டுரை அருமை. குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் புள்ளி பெரும் எழுத்துகளே. ஓர் எழுத்து தன் மாத்திரை அளவில் பாதி குறைவதைக் குறிக்க மேலே புள்ளி வைத்தனர். மகரம் புள்ளி பெற்ற மெய். மகரம் மேலும் குறுகி ஒலித்த போது அதன் உள்ளே ஒரு புள்ளி வைத்தனர்."உட்பெறு புள்ளி உருவாகும்மே" என்பது நூற்பா. "மெயின் இயற்கை புள்ளியோடு நிலையல், குற்றிய லுகரமும் அற்று என மொழிப, எகர ஒகரத்து இயற்கையும் அற்றே" எனும் நூற்பாக்கள் குற்றியலுகரம் புள்ளி பெற்றதை உறுதி செய்கின்றன.
  ] தொடர்ந்து எல்லாச் சார்பு எழுத்துகளுக்கும் பதிவிட வேண்டுகிறேன் ஐயா... தங்களின் இலக்கணச் செறிவு அருமை. தங்களின் செம்மாந்த நடை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சேனாவரையம் படிக்கும் போது ஏற்படும் அனுபவம் கிட்டுகின்றது. நன்றி ஐயா. தொடருங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. மோதிரக்கையால் குட்டுப் பெறுவது என்பது இதுதானோ ஐயா!
  ஆனாலும் கடைசியாக நீங்கள் “சேனாவரையம் படிக்கும் போது ஏற்படும் அனுபவம் கிட்டுகின்றது“ என்பதில் ஏதும் வஞ்சப்புகழ்ச்சி இல்லையே?ஏனென்றால் என் (உரை) நடை குறித்து எனக்குப் பேரச்சம் உண்டு. விளங்கக் கூடியதாய், முத்துநிலவன் அய்யா எடுத்துக்காட்டிய பாரதியின் வரிபோல், “ஓரிரண்டு வருஷத்து நூல் பழக்கமுள்ள“ தமிழர்க்கும் கொண்டு சேர்க்க வேண்டுமென்பது தான் என் அவா. ஆனால் என் பதிவுகளில் இலக்கணப்பகுதிகள் வரவேற்கப்படாத போதெல்லாம் என் நடை குறித்த ஐயம் மிகத்தீவிரமாய் எழும். கேட்டார்ப் பிணிக்குந் தகையதாய், வேட்ப மொழியாத மொழி என்ன மொழி? நடை என்ன நடை?
  பார்வையிடுவோரின் பால் எத்தவறும் இல்லை!
  நான்தான் இன்னும் மாற வேண்டும்.
  எப்படி எனத் தெரியாமல்தான் அடுத்த பதிவுகளைப் பதிவிடாமல் வைத்துவிட்டேன்.
  வழிகாட்டுங்கள்! நன்றி!

  ReplyDelete