Tuesday, 27 May 2014

உரைச்சுத்தியில் உடைபடும் சொற்கள்.

   
           

 பண்டைய இலக்கண இலக்கியக் கருவூலத்தின் திறவுகோல்களாய் விளங்குவன உரைகள். மூலநூலுக்கும் நமக்கும் இடையே உள்ள பன்னூறாண்டுக்கால இடைவெளியை நாம் கடத்தற்குப் பாலமாய் விளங்குவன உரைகள் என்றாலும் கூட அவை எழுதப்பட்ட காலத்திற்கும் இன்றைக்குமான இடைவெளியை இட்டு நிரப்பிடப் பெருமளவிற்கு விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் கூட அவற்றின்கண் இடம் பெற்றுள்ள இலக்கணக் கூறுகள் பொருட்படுத்தப்படாமையும் பயன்பாட்டுக்கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்படாமையும் பெருவழக்காக உள்ளது.
உரையாசிரியர்களால் காட்டப்படும் பொருளுணர்த்தும் சில இலக்கணக்கூறுகளுக்கான விளக்கங்கள் புதியனவாய், அவர்தம் முன்னிலக்கண  நூல்களிலும் காணப்படாதனவாய், இருண்மைப் பண்பினதாய், ஆயுங்காலைத் தமிழ் மரபிற்கப்பாற்பட்டனவாய்க் குறிப்பாய், வடமொழி இலக்கண மரபினவாய்க்  காணப்பட்டன. இக்கட்டுரையில் இனி வடமொழி எனச் சுட்டப்பெறும் இடங்கள் சமஸ்கிருதத்தைச் சுட்டுவன.

                தமிழில் சமஸ்கிருதச் செல்வாக்கு உரைகளில் மட்டுமல்லாமல்         தமிழிலக்கண முந்து நூலான தொல்காப்பியத்திலும் காணக்கிடக்கிறது. தொல்காப்பியத்திற்குப் பாணினியம் மாதிரியாக அமைந்தது என்பார் வையாபுரிப்பிள்ளை. பாணினீயம் மற்றும் ஐந்திர வியாகரணச் சிந்தனைகள் தொல்காப்பியத்தற்கு மூலாதாரங்களாய் உள்ளன என்பார் தெ.பொ.மீபிராதிசாக்கியங்கள், யாஸ்கரின் நிருத்தம், பாணிணியின் சிக்ஷைகள், மற்றும் அஸ்டத்தியாயி ஆகியவற்றின் தாக்கம் தொல்காப்பிய இலக்கணத்தின் தனித்தன்மையை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றாலும், தொல்காப்பியம் இவை போன்ற இலக்கணங்களை மாதிரியாகக்கொண்டு எழுதப்பட்ட இலக்கணம் என்பார் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார்.(சு.இராசாராம்.2010) 
                        தொல்காப்பியர் வடமொழி வியாகரணத்தில் பயின்றுவரும் சங்கதச் சொற்களிற் சிலவற்றை மொழிபெயர்த்துக் கொண்டார். அவை அளபு (மாத்ரா); அவையல் கிளவி ( அஸப்யம்);  தகுதி (யோக்யதா);  தொகை (ஸமாஸம்);  வேற்றுமை (விபக்தி) முதலியன. இங்ஙனம் மொழிபெயர்த்தல் கூடாது என்று தான் கருதிய இடங்களிலும், மொழிபெயர்ப்புப் பல பொருளுடைத்தாய்ப் பொருள் மயக்கமேற்படுத்துமெனக் கருதிய இடங்களிலும், சங்கதச் சொற்களையேனும் அவற்றின் பாகத வடிவங்களையேனும் எடுத்தாண்டுள்ளார். அதிகாரம், உத்தி, காண்டிகை, ஞாபகம், படலம், பிண்டம், வாணிகம், வைசிகன் எனச் சில சங்கதப் பதங்களின் இலக்கணங்களையும் விபரங்களையும் அவர் மொழிபெயர்த்தும் அமைத்திருக்கிறார்.”  (வேலுப்பிள்ளை-தமிழ் வரலாற்றிலக்கணம்.; பக்.-29)

          தொல்காப்பியரின் வடமொழிச்சிந்தனை பற்றிக் குறிப்பிடும் போது, சமஸ்கிருதத்தின் முக்கியமான இரு இலக்கண மரபுகளாகக் கருதப்படும் ஐந்திர மரபையும், மகேஸ்வர மரபையும் ஒப்புநோக்கித் தொல்காப்பியம் எம்மரபின் சிந்தனைத் தொடர்ச்சியான செய்திகளைக் கொண்டுள்ளது என்பதையும் காண்டல் வேண்டும். தொல்காப்பியப் பாயிரம் காட்டும்ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்”  எனும் அடியை அகச்சான்றாகக் கொண்டு ஐந்திர மரபை அறிந்தே தொல்காப்பியர் தம் நூலைப் படைத்துள்ளார் எனக் கருத இடமுண்டு. இவ்வடிக்கு, “ஐந்திர வியாகரணத்தை நிறைய அறிந்த பழைய காப்பியக்குடியிலுள்ளோன் என நச்சினார்க்கினியர் கூறும் உரை இக்கருத்திற்கு அரண் செய்யும். ஐந்திர மரபைச் சேர்ந்ததாகக் காதந்திரமும், மகேஸ்வர மரபினதாகப் பாணினியமும் வடமொழி இலக்கண மரபில் உள. சுருக்கமும் தெளிவும் வேண்டும் இலக்கணங்கள் பாணிணியின் மகேஸ்வர மரபினையும், விளக்கமும் நெகிழ்வும் கொண்ட இலக்கணங்கள் காதந்திரரின் ஐந்திர மரபினையும் சார்ந்து இந்திய மொழிகளில் எழுந்ததாகக் கொள்வோமேயானால், தொல்காப்பியத்தில் ஐந்திர மரபின் தாக்கமே விஞ்சி நிற்பதை அறிய முடியும்.
                 வடமொழி வளர்ச்சியோடு சமயம் உட்கலந்து தன்னை நிலைநிறுத்தித் தனக்கான வரையறைகளை மொழிகொண்டு பதிவுசெய்ய முனைந்த போது மொழிக்கான வரையறைகளை அது உருவாக்கத் தலைபட்டது. வேதத்தின் ஆறு அங்கங்களான, சடங்கு (கல்பம்), ஒலியியல் (சிக்ஷா ), யாப்பியல் (சந்தம்), சொற்பிறப்பியல் (நிருக்தம்), இலக்கணம் (வியாகரணம்), வானியல் (சோதிடம்) எனுமிவற்றுள் ஒலியியல், யாப்பியல், சொற்பிறப்பியல், இலக்கணம், எனும் நான்கும் சமயத்துள் மொழிச்செல்வாக்கைக் காட்டுவனவாய் அமைவன   
                        பாணினீயம் காதந்திரமெனும்    இவ்விரு மரபுகளுமே ஒரே மொழிக்கான இலக்கணத்தைத்தான் கூறுகின்றன எனினும் வேறுபாடு  மொழிசார்ந்தமையும் இந்நான்கு அங்கங்களுள்   எதனை மிக வலியுறுத்துவதாய் அமைகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது. பாணினியத்திற்கு முன்பாக, ஐந்திறம் தவிர சாகடாயனா, ஆபிசலி, சாகல்ய, காசகிருஷ்ண, கார்கிய, காலவ, காஸ்யபா, செனக, சுபோதாயன, சந்திரவர்மன எனும் மரபுகள் இருந்தபோதும், (பாணினியம் உட்பட பன்னிரு இலக்கணப்பள்ளிகள்) பாணினியத்தின் எழுச்சியின் முன் ஐந்திறம் தவிர ஏனை இலக்கணமரபுகள் நிலைபெறாவாயின. பாணினியின் காலத்தில் வேதம்/சந்தஸ் (செய்யுள்) என்னும் வைதிக வழக்கும், லோகம்/பாஷா என்னும் லௌகிக வழக்கும் இலக்கணத்திற்குப் பிரதியாக இருந்தன. பாணினீயம் செய்யுள் வழக்கிற்கென (வேதத்திற்கு மட்டுமாய்) இலக்கணம் வகுப்பதைத் தன் முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும் தனக்கு முன்னுள்ள இலக்கணிகளின் சொல்லாட்சியையும் உத்திமுறைகளையும் கையாண்டுள்ளது இயலபானதே. பாணினி வேறுபடுவதற்கு அவரது அதீத செயற்கைத்தனமும், சுருக்கமும், செறிவான கட்டமைப்பும், உலகவழக்கொழிந்ததற்கு இலக்கணம் கூறியதும் காரணம் ஆகலாம். தமிழில் வழங்குவனபோலவே செய்யுள் வழக்கு, உலக வழக்கு என்பன வடமொழியில், வைதிகபிரகிரியை / லௌகிகபிரகிரியை எனப்படினும் வைதிக வழக்கு  வேதவழக்கையும் லௌகிக  வழக்கு இதிகாசம் முதலிய பிற இலக்கியங்களுக்கான இலக்கண வழக்கையுமே குறித்தமைகிறது         என்பதை மனத்திருத்தவேண்டும். பாணினியம் வகுத்த வேதத்திற்கான சிறிதும் நெகிழ்வற்ற கட்டமைப்பே காலந்தோறும் மொழிமாறக்கூடியது எனும் இயற்கைச் சித்தாந்தத்தின் முன் தோற்றுப்போய் வழக்கிழந்து போகக் காரணமாய் அமைந்தது. வேறு கோணத்தில் சிந்திப்போமானால் வேத வழக்குச் சிதைவுறாமற் காக்கப் பாணினீயம் திட்டமிட்டே இந்தப் பாதையை வகுத்திருக்க வேண்டும் எனவுங் கொள்ளலாம்.

        இவ்வடிப்படைகளோடு இலக்கண, இலக்கிய நூல்களுக்கெழுந்த மரபுரைகளை, அவை வழங்கிய காலச்சூழலோடு பொருத்திப் பார்ப்பின் மேற்குறித்த அவ்வுரைகளில் சிக்குண்டு கிடக்கும் வடமொழி இலக்கணப் புதிர்களுக்கு ஓரளவிற்கேனும் விடைகாண இயலும். உரைநூல்களுக்கு மூல இலக்கணமாக விளங்கிய தொல்காப்பியத்திலேயே காணப்படும் வடமொழியின் மிகக் குறைந்த அளவிலான செல்வாக்கினை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழ் உரைக்காரர்களுக்கு அவர்தம் வடமொழிப் புலமைமரபின் விதைகளை ஏற்ற இடம் எங்கனும் தெளித்துச் சென்றிடவியன்றது. ஏதேனும் உள்நோக்கத்தோடோ, தமது பிறமொழிப் புலமையைக் காட்டும் விதமாகவோ உரைக்காரர்கள் இப்பணியைச் செய்திடவில்லை என்பதைத் துணிந்து கூறலாம்.அன்றைய வழக்கியல் மரபு அது அவ்வளவே!
     
               அடுத்து, மரபுரைகளின் தன்மையை மதிப்பிடும்போது அவை எழுந்த காலச்சூழலையும் அவ்வுரைக்கான தேவையையும் நாம் எண்ணிட வேண்டும். பெரும்பாலான உரைகளும், புத்திலக்கண நூல்களும் உருப்பெற்ற காலமாகப் பிற்காலச் சோழர் காலத்தைக் ( கி.பி.850- கி.பி. 1270 ) கூறுவர். அப்பேரரசு தன் ஆளுகையின் கீழுள்ள பன்மொழிபேசும் தேயத்தாரையும் இணைக்கும் மொழியாகச் (Link language) சமஸ்கிருதத்தையே (எழுத்து வழக்கில்/ஆவணங்களில்.பேச்சு வழக்கிலன்று) கொண்டிருந்தது. இச்சூழலில் தமிழ் மக்களிடை வழக்கிலும் செய்யுளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் புத்திலக்கணங்கள் தோன்றிடவும், சமஸ்கிருதத்திற்கிருந்த உயர்தனிச் செல்வாக்கு உரையாக்கத்தில் அதன் கூறுகளை வெகு இயல்பாக உட்கிரகிக்கவும் செய்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அரசு அங்கீகாரத்துடன் சமஸ்கிருதம் அடைந்த இம்மேட்டிமை, சமஸ்கிருதம் அறிந்தோரே கற்றோர் ஏனையோர் கல்லார் எனும் மனப்பாங்கினை எளிதில் தோற்றுவித்திடப் போதுமானதாகும். (ஆங்கிலம் தெரிந்தவன் மெத்தப் படித்தவன் என இக்காலத்தில் நினைப்பது போல) படித்தோர் தகுதியாக நிலைபெற்ற சமஸ்கிருத மொழியறிவு நிரம்பிய நம் உரைக்காரர்களைத் தம் உரைகளில் ஏற்புடையிடங்களில் (தமிழ் மரபிலக்கணத்தில் இல்லாதபோதும்) வடவிலக்கண மரபைப் பொருத்திக்காட்டுமாறு இச்சூழல் பெரிதும் தூண்டியிருக்க வேண்டும். அன்றியும் மூலத்தை விளக்குதற்குப் பயன்படும் (இன்று விளங்கிக் கொள்ள இடர்படும் ) இவ்வடமொழியிலக்கணச் சொல்லாட்சிகள் அன்று கற்கின்ற மாணவர்க்கு ( உரைகேட்போருக்கு) எளிதில் பொருள் விளங்கச்செய்   கருவியாய், சுவையூட்டியாய் அமைந்திருக்க வேண்டும். இதை நாம் ஏற்போமானால் தொல்லிலக்கண இலக்கியப் பாடங்களைச் செவிகொளுந்தகுதியாய் அன்றைய மாணாக்கர் தமிழறிவோடு அடிப்படை வடமொழியறிவேனும் பெற்றிருந்திருக்க வேண்டும் என்பதையும் ஏற்கவேண்டும்.

      தொல்காப்பியத்தை அடுத்தெழுந்த இலக்கண நூல்கள் வடமொழி இலக்கண இலக்கியங்களை மாதிரியாகக் கொள்வதையும், தமிழ்ப்படுத்துவதையும் வெகுவியல்பாக மேற்கொண்டன. சான்றாக யாப்பருங்கலக் காரிகையின் முதற் சூத்திர உரையைக் காட்டலாம்.

        அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ வெனின், பாளித்தியம் என்னும் பாகத இலக்கணமும், பிங்கலம் என்னும் சந்தோபிசிதமும் போலக் காரிகை யாப்பிற்றாய், குணகாங்கியம் என்னும் கருநாடகச் சந்தமே போல மகடூஉ முன்னிலைத்தாய், அவையடக்கமும் உடையதாய், மயேச்சுவரர் யாப்பேபோல உதாரணம் எடுத்தோதி, இசைத்தமிழ்ச் செய்யுள் துறைக்கோவையே போலவும், அருமறையகத் தட்டகவோத்தின் வருக்கக்கோவையே போலவும், ரூபாவதாரத்திற்கு நீதகச்சுலோகமே போலவும், முதனினைப் புணர்த்திய இலக்கியத்ததாய், வேதத்திற்கு நிருத்தமும் , வியாகரணத்திற்குக் காரிகையும், அவிநயர் யாப்பிற்கு நாலடி நாற்பதும் போல யாப்பருங்கலம் எனும் யாப்பிற்கு அங்கமாய், அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையால் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து. ...................இந்நூல் யாவரால் செய்யப்பட்டதோவெனின், ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகையாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்னும் ஆசிரியரால் செய்யப்பட்டது.
 
          இம்மேற்கோள் அக்கால இலக்கணங்களின் உருவாக்கம் வடமொழி நூற்களைப் பெரிதும் மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்பதையும், காரிகை என்னும் யாப்புத் தமிழன்றிப் பிறமொழி இலக்கணச் செய்யுள் வடிவாய் விளங்கியது என்பதையும், அமிதசாகரர் ஆரியமொழியினைத் தமிழ்ப்படுத்திக் காரிகையாக்கினார் என்பதையும் காட்டுவதாய் உள்ளது. தமிழ்மொழிக் கல்வியோடு ஒருங்கமைந்த வடமொழிப் பயிற்சியும் ஒரு மொழியின் அறிவினை மற்றொரு மொழிக்கும் பொதுமைப்படுத்தும் முயல்வும்  இதற்குக் காரணமெனலாம்.

            இந்தியாவில் இன்று இணைப்பு மொழியாக விளங்கும் ஆங்கிலத்தோடு இச்சூழலை ஒப்பிடலாம். இன்றைய காலகட்டத்தில் ஆங்கில இலக்கணக் கூறுகளை உள்வாங்கிப் புதிய தேவைகளுக்காகத் தமிழிலக்கணப்பரப்பை விரிவு செய்வதைப் போலவும், புதிய கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்வதைப் போலவும் அன்று நம் மரபிலக்கண ஆசிரியர்களும் உரைக்காரர்களும் வடமொழி மரபின் சில கூறுகளைத் தம் நூலிலும் உரையிலும் கையாண்டுள்ளனர். தற்பொழுதைய தமிழ் இலக்கிய/ வழக்கு நடைக்குப் புதியதொரு இலக்கணம் கட்டமைக்கப்படுமாயின், மரபிலக்கணம் இதுகாறும் மொழியாத புதினம், சிறுகதை போன்ற நவீன இலக்கிய வகைமைக்கான கலைச்சொற்களைத் தேவைக்கேற்ப உருவாக்கிக் கொள்வதையும், இவை பற்றிய பிறமொழி அறிஞர்களின் கருத்துக்களின் பிழிவிலிருந்து தெளிவான வரையறைகளை உருவாக்கிக் கொள்வதையும் போன்றதே இது. இற்றை நாளில் எழுதப்படும் இலக்கண வரலாறு எவ்வாறு உரைநடை என்னும், மரபினை மீறிய புதிய வடிவில் எழுதப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமோ அதுபோன்றதொரு தேவை பிற்காலச் சோழர்காலத்தில் புத்திலக்கணம் படைத்தோர் கட்டளைக் கலித்துறையை யாப்பு வடிவாகத் தேர்ந்து கொண்டதன் பின்னணியிலும் இருந்திருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.
          இத்தகு வடமொழிச்  செல்வாக்குத் தமிழின் தனித்தன்மையைப் பாதித்துவிடவில்லை எனினும், காலநீட்சியில், தமிழின் மரபாகவே உட்கலந்த வடசொற்களையும்வடமொழி இலக்கணக் கூறுகளையும் பின்வந்தோர் தமிழுட்படுத்தி இலக்கணம் எழுத நேர்ந்தது. இதன் உச்சகட்டமாக ஒருமொழியின் இலக்கணக் கொள்கை எல்லா மொழிகளுக்கும் ஏற்புடையதாக அமையும் என்னும் மீவிலக்கணக் கோட்பாட்டை (Meta Grammar) உட்கொண்டு வடமொழி இலக்கணக்கருத்துக்களைத்தான் தமிழும் கொண்டுள்ளதாகக் கூறி அதைச் செயற்கையாகப் பொருத்திக் காட்டும் வன்முயற்சியில் ஈடுபட்ட புத்தமித்திரர் போன்ற இலக்கணக்காரர்களும் தமிழ் மரபில் உதித்தனர். இவ்வாறு தமிழில் வடமொழி இலக்கணத்தைப் பொதுமைப்படுத்துதல்            என்பது,
1)    சொற்களைத் தற்சமம் - தற்பவமாக்கித் தமிழ்ப்படுத்துதல்.

2) தமிழ் நூல்களில் வடமொழி இலக்கணவிலக்கியக் கருத்துக்களைப்                    பொருத்திக் காட்டுதல் மற்றும்
3)  விதியாக்கப் புதுநூல் சமைத்தல் எனும் மூன்று நிலைகளில் அமைந்தது.


              இவ்வடமொழி       இலக்கண      மரபைத் தமிழ் இலக்கண இலக்கிய உரைமரபில் கையாளாத மரபுரையாசிரியர்கள் எவரும் இல்லை எனலாம். இதன்    காரணம்         முற்சுட்டப்பட்டது.      இவை     சில      இடங்களில் பொருத்தமுற்றமையினும்          அனைத்துமே      தமிழ்மரபிற்குப் பொருந்துவனவாக அமையுமா   எனுங்    கேள்வியை       உளங்கொண்டு உரையாசிரியர் பலரால் எடுத்தாளப்படும், தமிழ் மரபிலக்கணங்களில் காணப்பெறா ஓர் இலக்கணக்கூறினை மட்டும் சான்றிற்காய்ச் சுட்டி விளக்குவதாய் இக்கட்டுரையின் தலைப்பு அமைக்கப்பெற்றது.

அதன் விளக்கத்திற்காய்ச் சீவகசிந்தாமணியுள்ளிருந்து இரு பாடல்களும் அதற்கு நச்சினாரக்கினியரின் உரையும் இங்குத் தரப்பட்டுள்ளது.

          
                 1.   அருளு மேலர சாக்குமன் காயுமேல்
                       வெகுளச் சுட்டிடும் வேந்தனு மாதெய்வம்
                       மருளி மற்றவை வாழ்த்தினும் வையினும்
                       அருளி யாக்க லழித்தலங் காபவோ “   ( சிந். 247.)

(வேந்தனு மாதெய்வம் அருளுமேல் அரசாக்கும். வெகுளச் சுட்டிடும். மற்று அவை வாழ்த்தின் அருளியாக்கலும், வையின் அழித்தலும்   அங்காபவோ)
      (நச்.) வேந்தெனுந் தெய்வம் அருளுமேல் அரசாக்கும். காயுமேல்           சுட்டிடும்.      மற்று   மயக்கத்தையுடைய            அத்தெய்வங்கள்         தம்மையொருவன் வாழ்த்துவனாயின்,    அவனை அருளியாக்கலும்,     தம்மையொருவன் வைவானாயின் அவனை அருளாதொழித்தலும் அவைகளுக்கு அப்பொழுதே ஆகாவே யென்றான் என்கமருளி-‘பகுதிப் பொருள் விகுதி. (பகுதியின் பொருளன்றித்              தனக்கென்று வேறு பொருளில்லாத    விகுதி.).  ‘ தாமினி நோயும் “ (பு-வெ. 187) என்றாற் போல உம்மை மாற்றுக.
                   
     2.   ‘பனைக்கை யானைமன்னர் பணியப் பைம்பொன் முடியிற்
            கனைக்குங் கரும்பார் மாலை கமழ மதுவுந் தேனும்
             நனைக்குங் கழலோன் சிறுவ னாமவெல் வேள்வலவன்
             நினைக்க லாகா வகையா னேரா ருயிர்மே லெழுந்தான் ” (சிந். 2194)

(மன்னர் பணியப்  [பைம்பொன் ]முடியிற் கனைக்குஞ் சுரும்பும் தேனுமார் மலை து கமழ நனைக்குங் கழலோன் சிறுவனாம வேல்வௌ் வலவன் நினைக்க லாகா வகையானே ராருயிர் மேலெழுந்தான்)
         (நச்.) மன்னர் வணங்குதலின், அவர் முடியிற் கனைக்குஞ் சுரும்பும்  தேனுமார்ந்த மாலையின் மதுக்கமழும்படி நனைக்கும் அடியையுடைய சச்சந்தன் புதல்வனாகிய வேல்வெற்றியையுடையவன். அவர் நினைக்க வொண்ணாத வஞ்சனையாலே பகைவருயிரைக் கொல்ல எழுந்தானென்க. உம்மை             மாற்று.

        இவ்விரு பாடல்களிலும் பொதுப்பட அமைந்த உம்மை மாற்றுக என்னும் இலக்கணக் கூறினுக்கு, நச்சினார்க்கினியத்திலோ அவர் காலத்திற்கு முன்னெழுந்த இலக்கண நூல்களிலோ விளக்கங்கள் இல்லை. உரையைக் கொண்டு முதல் எடுத்துக்காட்டில்வாழ்த்தினும்’, வையினும்என்பதிலுள்ள உம்மைகளைப் பிரித்துக் கொண்டுபோய், ‘ஆக்கல்/  ‘அழித்தல்’  என்பதனோடு சேர்த்து, ‘வாழ்த்தின் அருளியாக்கலும், வையின் அழித்தலும்என்னுமாறும், இரண்டாம் பாடலில்மதுவும்என்பதில் உள்ள உம்மையைப் பிரித்தெடுத்து, சுரும்பு என்பதனோடு சேர்த்து, ‘கனைக்குஞ் சுரும்பும் தேனுமார் மலை மது கமழ நனைக்கும் என்னுமாறும் மாற்றிப் பொருள் காண்டலையே இவ்விலக்கணக் குறிப்புச் சுட்டிச் செல்கிறது.
                             சங்கச் செய்யுட்களைச் சான்றோர் செய்யுளென்றும், தொல்காப்பியம் மட்டுமே அதற்கிலக்கணங் காட்டும் நூலென்றும் வாதிட்டு, பிற்கால இலக்கண நூல்களைப் புறந்தள்ளிய நச்சினார்க்கினியார் சங்கச் சான்றோர் செய்யுட்கும் ஏன் தொல்காப்பிய உரையிலும் கூட   (புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே-தொல்.-எழுத்.35)  இவ்விலக்கணக் குறிப்பினை அளித்திருப்பது வியப்பெனின் வியப்பாம். அக்கால      உரைமரபெனின் அமைதியாம்.
              இனி மாட்டுறுப்பை நச்சினார்க்கினியர் போல் பயன்படுத்தி உரைகண்ட உரைக்காரர்கள் வேறெவரும் இல்லை என்றும், இதுவும் மாட்டெனும் உறுப்பின்பாற் படாதோ எனின் படாது. தொல்காப்பியத்துள் நச்சர் மாட்டு எனும் உறுப்புக் குறித்துப் பேசும் மூன்று சூத்திரங்கள் உள.


         1) மொழிமாற் றியற்கை
              சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய
              முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல்; (தொல். எழுத்.-403)

இச்சூத்திரத்திற்கான நச்சரின் உரையைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
செய்யுளில் பாடல் நின்ற நிலைக்கேற்பப் பொருள்தராமல் இருந்தால், பொருள்படுமாறு அப்பாடலின் சொற்களை முன்பின்னாகப் பொருத்திப் பொருள்கொள்ளவது மொழிமாற்று எனப்படும்.

மொழிமாற்றாவது கேட்டோர் இவ்வாறு கூட்டிப் பொருள் கொள்ளுமாறு இரண்டடிக்குள் மட்டுமே வரும்.

மாட்டு என்னும் உறுப்பாவது, இரண்டிற்குமேற்பட்ட பல அடிகளிலும், பல செய்யுள் தொடர்களிலும் அகன்றும் அணுகியும் வரும். ( இது மொழிமாற்றிற்கும் மாட்டிற்குமுள்ள வேறுபாடு )

பூட்டுவிற் பொருள்கோளும், அளைமறி பாப்புப் பொருள்கோளும், தாப்பிசைப் பொருள்கோளும், கொண்டு கூட்டுப் பொருள்கோளும் மாட்டு என்னும் உறுப்பில் அடங்கும். யாற்றொழுக்குப் பொருள்கோள் யாப்பு என்னும்          உறுப்பின்கண்             அடங்கும்.

தனிநிலைச் செய்யுட்கண் வருவன அணுகி வந்த மாட்டு.
தொடர்நிலைச் செய்யுட்கண் வருவன அகன்று வந்த மாட்டு.


இச்சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டுகளாகப் பின்வரும் பாடல்கள் நச்சரால் காட்டப்படுகின்றன.

                        குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
                        
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரிய (அகம்.4)
           (  புரவியினது வாங்குவள் நரம்பு ஆர்ப்பு அன்ன பரிய’)

                        இடை முலைக் கிடந்து” (குறுந். 178)
            (முலையிடை கிடந்து ’)

                         கடற்படை குளிப்ப மண்டி (புறம். 6)
           ( ‘ படைகடல் குளிப்ப ’)

                        இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பில
          (  ‘இருமா’   ..............)

அகன்று வந்த மாட்டை முருகாற்றுப் படை முதலியவற்றுள் காண்க.

இரண்டாவது நூற்பா மாட்டு என்பதன் இலக்கணத்தைச் சுட்டுவதாயச் செய்யுளியலில் உள்ளது.

                  அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்
                 
இயன்று பொருள் முடியத் தந்தனர்உணர்த்தல்
                 
மாட்டெனெ மொழிப பாட்டியல் வழக்கின் ( தொல். செய். 220)

இதற்கு       நச்சினார்கினியரின்       உரைக்கருத்தாவது,

                மாட்டுதலாவது கொண்டு வந்து கொளுத்துதல். பொருள் கொள்ளும் போது சொற்கள் அகன்று கிடந்தாலும், அணுகி இருந்தாலும் பொருள் கொள்வதற்கு ஏற்ற வண்ணம் கொண்டு வந்து கூட்டிப் பொருள் காணுதல் மாட்டு    என்னும்      உறுப்பாகும்.
   இது மொழிமாற்றுப் பொருள்கோளன்றிப் புலவர் வேறு செய்வதோர் செய்கையாகும்.
        இது பல பொருள் தொடரால் பல அடியால் வரும் ஒரு செய்யுளிலும்பல செய்யுளைப் பல பொருள் தொடரால் ஒரு கதையாகச்      செய்யுமிடத்தும் வரும்.
                அருமையும் பெருமையும் உடையதாய்ப் பல சொற்கள் தொடர்ந்து பொருள் தருவதோர் இன்பம் நோக்கிச் சான்றோர் இம் மாட்டிலக்கணமே யாண்டும் பெரும்பான்மை வரச் செய்யுள் செய்ததால் பின்னால் தொடர்நிலைச் செய்யுள் செய்தவர்களும் இம் மாட்டிலக்கணமே யாண்டும் வரச் செய்யுள் செய்தார்இதுவும் பொருள்வகை போல் புலவர் செய்து கொண்டது ஆயிற்று.

           பல பொருள் தொடரால் பல அடியால் வரும் ஒரு செய்யுளிற்குச் சான்றாகத் திருமுருகாற்றுப் படையைக் காட்டும் நச்சர், இதே போல் பிற பாட்டுகளுக்கும் இவ்வாறே அகன்றும் அணுகியும்   மாட்டுறுப்பு         வரும்           என்கிறார்.
           பல செய்யுளைப் பல பொருள் தொடரால் ஒரு கதையாகச் செய்வதற்குச் சிந்தாமணிக்கு அவரால் கூறப்பட்ட பல உரைகளைக்          கண்டுணருமாறு   கூறுகிறார்.
இதற்கடுத்த நூற்பாவிலும் மாட்டு பற்றிய செய்தி இடம் பெறுகிறது. 

மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி
                        
உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே.
                                                                                     ( தொல். செய்.203)

தொடர்நிலை என்பது முற்சூத்திரத்தில் கூறிய இருவகைத் தொடர்நிலைச் செய்யுட்களை எனக் குறிப்பிடும் நச்சர், முற்கூறிய மாட்டும் எச்சமும் இல்லாமல் செய்யுளில் சொற்கிடந்த முறையிலேயே (உடனிலை மொழி) பொருள் பெற்றும் செய்யுள் அமையும் என்கிறார்.

             இனி இச்சூத்திரங்களைக் கொண்டு மாட்டு பற்றிய நச்சினார்கினியரின் கருத்துக்களைப் பின் வருமாறு அமைக்கலாம்.
1)       இது தனிநிலை மற்றும் தொடர்நிலைச் செய்யுட் குரியது.
2)  இலக்கியத்திற் சொற்களைப் பொருள் கொள்ளற்கேற்றாற்  போல் முறை மாற்றியமைத்துப்           பொருள்      காண்பது.
3)    பொருள்கோளோடு  இது ஒருங்கு வைத்து எண்ணப்படினும் மாட்டென்பது தனித்து எண்ணற்குரிய வரையறை உடையது.

          இங்கு இவை இலக்கியப் பொருள் கொள்கையிலேயே கையாளப் பெறுவதும், சொற்களை அப்படியே  இடம் மாற்றுவதன்றி, சொற்களின் விகுதி, இடைச்சொல் முதலானவற்றைப் பிரித்து இடம் மாற்றுதற்கு நச்சினார்கினியர் உதாரணம் எடுத்தோதாததும் இதன் மறுதலையாக அவர் உம்மை மாற்றுதலை இலக்கண நூற்பாக்களுள் கையாள்வதும், உம் என்னும் இடைச்சொல்லை மாற்றி யமைத்துப் பொருள் கொண்டிருப்பதும் கவனிக்கத் தக்கன.

                இஃதிவ்வாறிருக்க வடமொழி மரபில் மாட்டெனுங் கூறு கையாளப்பட்டுள்ளதா, கையாளப் பட்டிருப்பின் அதன் இயல்பியாதென அறிவது நச்சரின் கருத்தமைதியை மெலும் தெளிவுறுத்தக் கூடும். சுப்பிரமணிய தீட்சதரின் பிரயோக விவேகமும், சுவாமிநாத தேசிகரின் இலக்கணக் கொத்தும் வடமொழி இலக்கணச் செய்திகளைத் தமிழ் மரபோடு பொருத்திக் காட்டும் பிற்கால நூல்களாகும்மாட்டு என்பதோடு ஒத்த கூறு பற்றி பிரயோக விவேகத்தின் 19 ஆவது காரிகையிலிருந்தும், இலக்கணக் கொத்தில் 89 மற்றும் 108 ஆம் நூற்பாக்களிலிருந்தும் பின்வருங் கருத்துக்கள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன.
            தனிநிலைச் சொற்கள் தகுதி (யோக்கியதை), அவாய்நிலை (ஆகாங்ஷை‘), அண்மைநிலை ( ஆசத்தி/சந்நிதி), என்னும் மூன்றுடன் கூடி, அல்வழியிலோ வேற்றுமையிலோ, தொகைநிலைத் தொடராகவோ தொகாநிலைத்   தொடராகவோ            வரும்.

தகுதி- இந்நிலைமொழிக்கு இவ்வருமொழி வருதலே தகுதி என்ற பொருளில் சொற்களைச்       சேர்த்துப்     பொருள்      கொள்வது.

(.கா.)         நீரால்            நனை:           தீயால்          எரி.

அவாய்நிலை- ஒரு சொல் தன் பொருள் முடிய வேறு ஒரு சொல்லை வேண்டி நிற்றல்.

(.கா.) ‘ உயர்திணை என்மனார்(உயர்திணை என்று சொல்லுவார்) என்னும் போது, என்மனார் என்னும் வினையானது, புலவர் என்னும் தோன்றா எழுவாயை வேண்டி நிற்பது போல்வது.

அண்மைநிலைமுடிக்கப்படும் சொல்லிற்கும், முடிக்கும் சொல்லுக்கும் இடையே பொருளை மாற்றுதற்குரிய வேறு சொற்கள் வராமல் இணைந்தே வருவது.
(.கா.) உணவை உண்டான். உணவை என்னும் சொல் உண்டான் என்னும் சொல்லை            அண்மையில்       கொண்டிருத்தல்.
 தூரான்வயச்சொல், மரூஉத்தொகைச் சொல், கட்டியசொல், சார்ந்த சொல் என்னும் நான்கும் அண்மைநிலையோடு மட்டுமே வரும்.

 தூரான்வயச்சொல்லாவது, சேய்மைச் சொல்லோடு பொருள் பொருத்தமுறச் சேர்வது. ஒன்பது வகைப் பொருள்கோள்களுள், ஆற்றொழுக்கும், அடிமறிமாற்றும் தவிர்ந்த, அடிமொழி மாற்று, சுண்ண மொழிமாற்று, நிரல்நிரை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறி பாம்பு, கொண்டுகூட்டு என்னும் ஏழும் தூரான்வயத்த.(தூரான் வயத்தை இலக்கண விளக்க நூலார் பொருத்தமில் புணர்ச்சி எனப் பெயரிட்டுள்ளமை தனித்துச் சுட்டத்தக்கது.)

எடுத்துக்காட்டாக பின்வருந் திருக்குறளையும் அதற்குப் பரிமேலழகர் உரையையும்        நோக்குவோம்.

       அனிச்சப்ப்பூக் கால்களையாள் பெய்தா ணுசுப்பிற்கு
        நல்ல படாஅ பறை.  ( குறள்-1115 )

(பரி.) அனிச்சப் பூவை முகிழ் களையாது சூடினாள் இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. அம்முகிழ்ப்பாரம் பொறாமையின் இடைமுரியும். முரிந்தால் அதற்குச் செத்தார்க்குரிய நெய்தற் பறையயே படுவதென்பதாம். மக்கட்குரிய சாக்காடும் பறைபடுதலும் இலக்கணைக் குறிப்பால் நுசப்பின் மேலேற்றப்பட்டன.
            இவ்வுரையின் பொருளைமென்மையானது அனிச்சமலர். அம்மலரின காம்புகளை நீக்க மறந்து சூடிவிட்டாள். இனி அக்காம்பின் பாரம் தாங்கமாட்டாமல் இவள் இடை முறிந்து இறப்பாளே! எனவே இவளிடைக்கு நல்ல பறைகள் முழங்கா! இறப்பதால் சாவிற்கு ஒலிக்கும் பறையான நெய்தல் பறைகளே முழங்கும்.” எனமாறு கொள்ளலாம். இலக்கணை என்பது சொல்லிய செய்தியிலிருந்து குறிப்பால் ஒரு பொருளைப் பெற வைத்தல். இங்கு நல்ல பறை படாஅ என்பதிலிருந்து தீயபறை படும் எனக் கொள்ள வேண்டும். சாவில் அடிக்கப்படுவதே தீய பறை. இடைக்கு (நுசுப்பிற்கு) மரணமோ சாப்பறை முழங்கப் படுதலோ இல்லை. அது மக்களுக்கு உரியதாகும். ஆனால் வள்ளுவர் நுசுப்பிற்கு நல்ல பறை படா என்பதால், அவள் இறந்து படுவள். ஆங்குச் சாப்பறை ஒலிக்கும் எனும் பொருளைப் பெறவைத்தமையால் இது இலக்கணைக் குறிப்பாயிற்று. வடமொழியில் இதை லக்ஷணாமூலத் தொனி என்பர்;.     (இலக்கணை குறித்து தனிப்பதிவில் விளக்கப்பெறும்.) இங்கு நல்ல படாஅ பறை என்பதைப் பதம் பிரித்து நல்ல பறை படா எனப் பரிமேலழகர் பொருள் கொள்வதை வடமொழி இலக்கணம் தூரான் வயப்பதம் என்னும். இது நாம் கண்ட மாட்டுறுப்போடு ஒத்ததே!    இந்தப் பதத்தோடு பதம் பிரித்துக்கூட்டும்  தூரான்வயப் பதத்தினுள், விகுதியைப் பிரித்துக் கூட்டல், உம்மையைப் பிரித்துக் கூட்டல், வேற்றுமையைப் பிரித்துக் கூட்டல், பண்பைப் பிரித்துக் கூட்டல் என்பதும்    அடங்கும். இவை தமிழ்மரபிற்கு ஏற்புடைத்ததா என ஆய்தல் வேண்டும்.
  
தூரான்வயப் புணர்ச்சியின்   வகைகள்.  

   1.       பதத்தோடு பதம் பிரித்துக் கூட்டல்     
           (  எ.கா.) பொறிநுதல் வெயர்த்தல்”                 ( தொ.பொ. 261)        
            (   மாற்றம்)            வெயர்ப்பொறித்த நுதலாதல்.   

   2.      விகுதியைப் பிரித்துக் கூட்டல் .             
                               (  எ.கா.) அறஞ் சொல்லும் நெஞசத்தான்”             (குறள்-185)            
                            (   மாற்றம்)                நெஞ்சோடு அறஞ்சொல்வான்.

   3.     உம்மையைப் பிரித்துக் கூட்டல் .             
       (  எ.கா.) ‘ புணரியல் நிலையிடைக் குறுகலும்   உரித்தே(தொல்.-எழுத்.35)
                          (   மாற்றம்)                புணரியல் நிலையிடையும் குறுகல் உரித்து.   

   4.      வேற்றுமையைப் பிரித்துக் கூட்டல்.              
             (  எ.கா.) செல்வத்துள் எல்லாம் தலை”                         (குறள்-411)   
                     (   மாற்றம்)                செல்வம் எல்லாவற்றுள்ளும் தலை.   

   5.     பண்பைப் பிரித்துக் கூட்டல்.              
         (  எ.கா.) ‘இனிய உளவாக இன்னாத கூறல் 
                         கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”                            (குறள்-100)  
                   (   மாற்றம்)                 இனிய கனி, இன்னாத காய்.
   
          நச்சினார்க்கினியராலும் பண்டைய உரைக்காரர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ள இவ்விலக்கணக் குறிப்பு மாட்டென்னும் வகைமையுள் நச்சரால் அடக்கப்பெற வில்லை. தூரான்வயப் பதம் எனும் வடநூற்கருத்தின் வாயிலாகவே இது துலக்கமுற்றது.   இங்குக் காட்டப்பட்டுள்ள சொற்சேர்க்கைகளுள் பொருள் பொருத்தமுடையனவும், வலிந்து பொருள்கொள்ளற்கெனக் கூட்டப்பபட்டனவும் உள. தூரான்வயப் பதத்துள் தொல்காப்பியரால் சொல்லப்பட்ட மாட்டு என்னும் சொற்களைப் பிரித்துப் பொருள்கொளச் சேர்த்தல் என்பது மட்டுமே தமிழ் மரபிற்கேற்றதாய் உள்ளது. பிற வகைகள், சொற்களைத் தம் கால உரைமரபிற்கேற்ப உடைத்து, வலிந்து பொருள் கொள்ளும் உரையாசிரியர்களின் புலமைத்திறத்தைக் காட்டுவனவாய், தமிழ் மரபிற்குப் பொருந்தாதனவாகவே இருக்கின்றன. இருப்பினும்,   உம்மை மாற்றுதல் என்னும் இலக்கணக் குறிப்பிற்கான விளக்கங்கள் வடமொழி இலக்கணக் கூறுகளைப் பெரிதும் சார்ந்து இயற்றப்பட்ட இந்நூல்களிலிருந்தே பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் தொல்காப்பியம், நன்னூல் போன்ற நூல்களில் காணப்பெறா, உரைமரபில் பயின்று வரும், இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நிற்றல் முதலான உபசார வழக்குகள், இலக்கணை, சாதியொருமை, சொற்சோதனை போன்ற இன்னும் பல இலக்கணச் சொற்களுக்கான விளக்கங்களை வடமொழி இலக்கணஞ் சார்ந்து மட்டுமே இன்றைய காலகட்டத்தில் பொருள் விளங்கிக் கொள்ள முடிகிறது என்பதை நாம் ஏற்றாக வேண்டும். பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து போன்ற நூல்களுக்கு இவ்வுரைகளும் பிரதியாக (Text) அமைந்திருக்கும் என்பதையும் நாம் மறுத்தற் கில்லை. அக்காலச் சமஸ்கிருதச் செல்வாக்கின் துணைகொண்டு தமிழுக்கு மெருகூட்ட நினைந்த உரையாசிரியர்களின் பணி சில வேளைகளில் உம்மை மாற்றுதல் போல செருப்பிற்கு வெட்டப்பட்ட காலாய் நிற்பதைக் காணமுடிகிறது.

துணைநூல்கள்.

1)  இராசாராம்,சு.2010. காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.

2) சுந்தரம்,இராம.(மொ-பெ.),2007 திராவிடச்   சான்று, தாமஸ்   டிரவுட்மென்       . காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.

3)கோபாலையர்தி.வே.(.) 1973. பிரயோக விவேகம். சரஸ்வதி மஹால் வெளியீடு,   தஞ்சை.

4)கணேசையர்,சி,(.)2007. தொல்காப்பியம். நச்சினார்க்கினியம்.   உலகத்தமிழாராய்ச்சி   நிறுவன     வெளியீடு,      சென்னை.

5)Burnell, A.C, 1875. The Aindra School of Sanskrit Grammarians. Basel Nission Book        & Tract  Despository,  London.

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

8 comments:


  1. வணக்கம்!

    வண்ணத் தமிழ்மொழியில் வந்தேறி வாழ்கின்ற
    பண்ணுரை ஆய்ந்து படைத்துள்ளீா்! - எண்ணத்தில்
    கற்றோங்கும் ஆசை கலைமேவும்! நல்லாற்றல்
    பெற்றோங்கும் என்னுள் பெருத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  2. ஐயா வணக்கம்!

    மின்னஞ்சல் முகவாியையும் தொலைபேசி எண்களையும் தொிவிக்கவும்.

    என் மின்னஞ்சல் kambane2007@yahoo.fr

    ReplyDelete
  3. ஐயா,
    வணக்கம். இக்கட்டுரையைப் பதிவேற்றிட மிகத் தயங்கினேன். படிப்பரோ கருத்தறிவரோ என்பதே தயங்கிடக் காரணம். உங்களைப் போன்ற தமிழச் சான்றோர் படித்தமையும் கருத்திட்டமையும் உண்மையில் மிக்க மகிழ்வளிக்கிறது. பாராட்டுகளை விட என்னை இன்னும் சரிப்படுத்த உதவும் கருத்துக்களையே உங்களைப் போன்ற பெரியோர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை... இலக்கணச் சுரங்கத்தில் உள்ள வைரங்களை வெட்டிக் கொணர்ந்து ஒளி வீசிடச் செய்யுங்கள்... தோள் கொடுக்க வருகிறேன். கொ.சுப.கோபிநாத் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி, திண்டுக்கல் மாவட்டம்... எனது வலைப் பக்கம் வாருங்கள் இலக்கணத் தேறலை மாந்துங்கள்... www.ilakkanatheral.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி!
      உங்களைக் குறித்து முத்துநிலவன் அய்யாவிடத்திலிருந்து நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.எனக்குக் கவிதையைக் காட்டிலும் இலக்கணத்தில் அதிக ஆர்வமுண்டு. நிறைய நிறைய சந்தேகங்களும் .....! தீர்க்கத் தோள்கள் இருக்கும் போது இனி எனக்கென்ன கவலை?

      கண்டிப்பாய்த் தொல்லைப் படுத்துவேன்!





      Delete
  5. சிறந்த ஆய்வுக் கட்டுரை

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  6. கட்டுரை பயன்மிக்கது. நன்றி.

    ReplyDelete