Monday 26 May 2014

நீ + நான் = நீ




கவிதைக்கு அழகூட்டும் கலைவாணி நீ! – என்
     கைவெட்டும் உளியானால் சிலையாக நீ!
செவிமொய்க்கும் ஒலிக்கூட்டில் இசையாக நீ! – மெய்
     செயல்யாவும் முடியச்செய் விசையாக நீ!


தவிக்கின்ற மனம்தேடும் உணவாக நீ! – பின்
     தனிக்கின்ற எனைத்தின்னும் கனவாக நீ!
புவிக்குள்ளில் அழகிற்குப் பொருளாக நீ! – கண்
     புலராமல் எனைமூடும் இருளாக நீ!

சிறைசெய்ய முடியாத கடலாக நீ! – நான்
     சினேகிக்கும் மறுபாதி உடலாக நீ!
நிறைந்தோடி வருகின்ற நதியாக நீ! – என்
     நினைவிற்குள் எனைஆளும் ரதியாக நீ!

உலகத்தில் எனக்காக உளபெண்மை நீ! – என்
     உணர்வுக்குள் எனைமீறி வளர்கின்றாய் நீ!
விலங்கிட்டும் எனைக்கட்டும் கயிறாக நீ! – நான்
     வெறுக்கத்தான் முடியாத உயிராக நீ!

புதிர்சிக்கி மனம்சோர விடையாக நீ! – என்
     புலன்வென்று அரசாளும் படையாக நீ
எதிர்பட்டால் துகளாக்கும் கணையாக நீ! – என்
     எழுத்தூறும் வறளாத சுனையாக நீ!

தலைவாழை இலையிட்ட விருந்தாக நீ! – என்
     தனிக்கின்ற மனநோய்க்கு மருந்தாக நீ!
கலைந்தாலும் கருமேகத் துளியாக நீ! – என்
     கண்மூடும் வரைவாழ்வின் ஒளியாக நீ!

என்தீயை வளர்க்கின்ற விறகாக நீ! – வான்
     எழுவேன்அப் போதெல்லாம் சிறகாக நீ!
வன்பாலை வழிசெல்வேன் நிழலாக நீ! – மெய்
     வதஞ்செய்யும் குளிரென்றால் அழலாக நீ!




யிர்க்கின்ற உன்நாளின் நொடியாக நான்! – நீ
     உயர்கின்ற சமயத்தில் படியாக நான்!
பயில்கின்ற பொழுதெல்லாம் விழியாக நான்! – உன்
     பாதங்கள் நடக்கட்டும் வழியாக நான்!

மறவாமல் உனைப்பூக்கும் மரமாக நான்! – உன்
     மகிழ்ச்சிக்கு எனைத்தந்து உரமாக நான்!
இறவாமல் உனைஎண்ணும் மனமாக நான்! – நீ
     இலையென்று சொன்னாலும் உனதாக நான்!

இடுகின்ற நறுஞ்சாந்தின் துகளாக நான்! – உன்
     இருகாதில் அசைகின்ற குழலாக நான்!
தொடுகின்ற நினதாடை இழையாக நான்! – உன்
     தேன்கூந்தல் மதுஉண்ணும் மழையாக நான்!

இருகையுள் கழலாத அணியாக நான்! – நீ
     இடும்காலின் கொலுசுக்குள் மணியாக நான்!
விரல்பற்றும் மருதாணிச் சிவப்பாக நான்! – நீ
     விலக்காத கழுத்தார உவப்பாக நான்!

நீநிற்கும் இடமெல்லாம் தரையாக நான்! - உன்  
    நதிபாய அதுகாக்கும் கரையாக நான்!
நீநீங்கத் தொடர்கின்ற நிழலாக நான்! – உன்
    நினைவூதும் இசைப்புல்லாங் குழலாக நான்!

தூரத்தில் நீசெல்லத் தடமாக நான்! – உன்
     தூக்கத்தில் விழிக்கின்ற கனவாக நான்!
யாரற்றுப் போனாலும் உறவாக நான்! – உன்
     அமைதிக்குள் இமைமூடும் இரவாக நான்!

பிரிக்கின்ற கொடுநஞ்சின் முறிவாக நான்! – நம்மைப்
     பிணைக்கின்ற வலைஅங்குச் செறிவாக நான்!
சிரிக்கும்உன் இதழோரம் நகையாக நான்! – நீ
     சினக்கின்ற தருணத்தில் புகையாக நான்!!  



[  திசம்பர் 1995 மாயனூர்ப் பதிவுகளிலிருந்து... ]  


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

11 comments:

  1. அருமை அருமை.
    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டமைக்கு நன்றி.

      Delete

  2. வணக்கம்!

    கொஞ்சும் மொழியாகக் கோர்த்த கவிதைகள்
    நெஞ்சுள் இருக்கும் நிலைத்து!

    நீயென்றும் நானென்றும் சொன்னகவி தேன் - உன்
    நெஞ்சன்றோ தமிழேந்தி மின்னுகவி வான்!
    தாயென்றும் இறையென்றும் தண்டமிழைத் தான் - போற்றிச்
    சாற்றுவதால் தாழ்பணிந்தேன் உன்தமிழை நான்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கமபன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கடல்நீங்கள் சிறுதுளிநான் கவிதையெனும் வான்
      படுபரிதி பார்க்குமொரு மின்மினியே தான்!
      நன்றி ஐயா!

      Delete
  3. மாயனூர்க் கவிதைகளில் ஏதோ மாயம் நிகழ்ந்திருக்கிறதே! மிகுந்த கலைநயமும், தகுந்த ஓசை நயமும் கொண்ட கவிதைகள் அருகி வரும் காலத்தில், தங்கள் கவிதைகள் சிறப்பான வரவேற்பினைப் பெறுவது உறுதி. அய்யா, அன்பு கூர்ந்து தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      கவிதை என ஏதேதோ கிறுக்கி அலைந்த காலம் விட்டு நெடுநாளாயிற்று. துறைமாறி இன்னும் முடிவற்ற தேடலுடன்தான் நானிருக்கிறேன். உங்களால் இது கூடிற்று.
      பாராட்டுகளை விடவும் என்னைத் திருத்தும் கருத்திடவே தங்களை வேண்டுகிறேன்.
      நன்றி என்றென்றும்...!

      Delete
  4. ஆண்டவனை நினைத்து ஆச்சரியப் படுகிறேன். கண்களில் நீர் மல்க ரசித்தேன். கவி மீது கொண்ட பற்றை எவ்வளவு அழகாக எழுதி அசத்தியிருக்கிறீர்கள். இவை கிறுக்கல்களா இல்லவே இல்லை. திருந்தவும் இடம் இருகிறதா? ஆச்சரியம் தான்.

    கவிமீது கொண்ட பற்று
    புவிமீது விரைவில் பரந்து பற்றும் ! நன்றி !தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  5. அன்புச் சகோதரி,
    உங்களின் உற்சாகமூட்டும் பின்னிடுதல்களைப் பல வலைப்பூக்களில் , குறிப்பாகக் கவிதை எழுது தளங்களில் காணநேர்ந்தது. பொதுவாக ஒருவரிப் பின்னூட்டம் அளிக்கும் உற்சாகத்தை வாழ்க்கையில் முதல்முறையாக இப்போது உணருகிறேன். அட, நம் எழுத்தையும் படித்துக் கருத்திடச் சில உள்ளங்கள்...! கவிமனம் ஒரு குழந்தையினுடையது தான்! அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
    கிறுக்கல்கள் என்று நான் சொன்னதை தயவு செய்து அவையடக்கம் என்று கருதிவிடாதீர்கள்! முத்துநிலவன் அய்யா ” இது புதிது ” என்னும் என் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தையும் அதற்கு எனது பதிலையும் பார்க்க உங்களுக்கு உண்மை புலப்படும் என நினைக்கிறேன். எனது பழைய பதிவுகளையும் பார்க்கின்றமைக்கும் கருத்திடுகின்றமைக்கும் நன்றியுண்டு!

    ReplyDelete
  6. அன்பு நண்பரே
    நீ+நான்= நீ மாயனூரில் ஓரு கவிதை(யை) கண்டு மாயமானதால் ...
    மிக அருமையான கவிதை கிடைத்தது. சொல்லில் விளையாடி எத்தனை பேரை சொக்க வைத்து விட்டீர்கள்!. அதில் உன்பால் என்னையும் சிக்க வைத்தீர்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    ReplyDelete
  7. செந்தமிழில் நீர்வடிக்கும் கவியெல்லாம் தேன்.- என்
    செவிதன்னில் ஆறாகப் பாயுது என்பேன்.
    எந்தமிழ்தான் இனிதென்று இறுமாந்திருந்தேன்..
    என் தோழன் உடைத்தெறிய இன்பமெய்தினேன்.

    ReplyDelete
  8. நீ
    இலையென்று சொன்னாலும் உனதாக நான்
    கவிக்கு நன்றிகள் பல

    ReplyDelete