ஆசிரியப் பயிற்சியின் போது மாணவ ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய பல நெறிமுறைகள்
சொல்லித்தரப்பட்டதுண்டு. அவை அச்சிடப்பட்ட எந்தப் பாடப்புத்தகங்களில் காணக்கிடையாதன. கற்பிக்கும்
ஆசிரியர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தோ அல்லது சக ஆசிரியர்களின் அனுபவத்தில்
இருந்தோ அறிந்து பகிர்வன.
அது போன்ற நடைமுறைகளுள் ஒன்றுதான் ஆசிரியர்கள் பாடம் முடித்து
வெளியே வரும்போது, நடத்திய பகுதிகள் எழுதப்பட்ட கரும்பலகையினை அழித்துவிட்டு வர வேண்டும்
என்பது. ( பல நேரங்களில் இதனால் ஆசிரியர் காப்பாற்றப்படுவார். )
அதற்கு எங்கள் தமிழ் விரிவுரையாளர் எடுத்துக்
காட்டியதுதான் இந்த
“அத்தான் வருவதே இன்பம்” என்ற வரி.
ஓர் ஆசிரியை திருக்குறள் வகுப்பில்
“ அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல
”
என்பதைக் கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு,
அறத்தினால் வருவதே இன்பம். மற்றவை துன்பம்
தருவன. அதனால் புகழும் இல்லை. என்றெல்லாம் விளக்கிவிட்டுப் பாடவேளை முடிந்ததும் கரும்பலகையை
அழிக்காமல் சென்றுவிட்டார்.
அவ்வகுப்பறையில் இருந்த குறும்புக்கார மாணவன்
அறத்தான் என்பதில் உள்ள ‘ற’ என்னும் எழுத்தை அழித்துவிட்டான்.
அடுத்த பிரிவேளை வந்த ஆசிரியருக்குப் புதிய
குறள் ஒன்று கிடைத்துவிட்டது.
“ அத்தான் வருவதே
இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல ”
அதனாலோ என்னவோ ஒவ்வொரு பிரிவேளை முடிந்ததும் எனக்கு அத்தான் நினைவிற்கு வந்துவிடுவார்.
சரி.
திருக்குறள் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும்
அல்லது ஒரு மரபு வழித் தமிழாசிரியரால் செய்யுட் பகுதி எப்படிக் கற்பிக்கப்பட்டது என்பதற்கு
உதாரணமாக இந்தக் குறளையே எடுத்துக் கொள்ளலாம்.
இந்தக் குறளில் உள்ள,
அறத்தான் வருவதே
என்னும் சொல்லில் ஒரு ஏகாரம் இருக்கிறது பாருங்கள்.
இதற்குத் தேற்றேகாரம் என்பது பெயர். ஒரு
கருத்தை நிச்சயப்படுத்தி அதுவன்றி வேறில்லை என்பதற்கோ, உறுதியாகக் கூறுவதற்கோ இந்த
ஏகாரம் செய்யுளில் பயன்படுகிறது.
இப்பொழுது இந்தக் குறளை வாசிக்கும் போது,
இந்தத் தேற்றேகாரத்தைக் கூடிய மட்டும் நீட்ட
வேண்டுமாம்.
“அறத்தான் வருவதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ ” என்ற பின்
“இன்பம்” என்பதைப் படீரென்று சொல்லி முடிக்க வேண்டுமாம்.
அடுத்துள்ள,
“மற்றெல்லாம்”
என்ற சொல்லைக் கூறிச் சற்று நிறுத்த வேண்டுமாம்.
“புறத்த”
என்பதை அழுத்திக் கூற வேண்டுமாம்.
“புகழும்” என்பதை ஒரு பிடி பிடித்து, ( ம் என்பதைச்
சற்று அழுத்தம் கொடுத்துக் கூறி )
“இல” என்பதைக் கையை உதறி ‘இல்லை’ என்பது போல்
காட்ட வேண்டுமாம்.
இப்பொழுது இந்தக் குறளை இதே முறையில் வாய்விட்டுப் படித்துப் பாருங்கள்.
குறளொலிக்கும் உங்கள் குரலில்
பொருளாழம் மிக்க இன்பத் தமிழ் இனிமையை உணர முடிகிறதா?
வித்துவான். ந. சேது ரகுநாதர் என்பார் காட்டும்
குறள் படித்துக் காட்டுதலின் நுட்பங்களுள் ஒன்று இது.
ஒரு மாணவனின் மனதில் அழியாச் சித்திரத்தைத்
தீட்ட விரும்பும் ஆசிரியனின் முயற்சி எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை ஈடுபாடும்,
ஆர்வமும் கொண்ட மரபார்ந்த தமிழாசிரியர்களின் இது போன்ற முயற்சிகளிடையே நாம் காண இயலும்.
அன்றி, வாசிக்கத் தெரிந்த மாணவனுக்குத் தமிழ்ப்பாடத்தை
வாசித்துக் கடக்கும் சாபம் பெற்ற வகுப்பறைகள் இருக்கும்வரை தமிழின் இனிமையை உணரும் ஆற்றல் சிறிதுமற்ற கிளிப்பிள்ளைகள் உருவாகி நம்மொழி நசிந்து கொண்டுதான் இருக்கும்.
படம் - நன்றி http://4.bp.blogspot.com/
Tweet |
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘அத்தான் வருவதே இன்பம்!’ - என்றவுடன் ‘அத்தான்...என்னத்தான்...அவர் என்னைத்தான்...
எப்படி சொல்வேனடி அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணைத்தான் எப்படி சொல்வேனடி...‘ என்று சொல்லப் போகிறீர்கள் என்று எண்ணி ஏமாந்து போனேன்.
‘அறத்தான் வருவதே இன்பம்’ குறும்புக்கார மாணவனின் விளையாட்டைச் சொல்லி... கரும்பலகை அழித்து வரவேண்டியதைக் குறிப்பால் உணர்த்தி வீட்டீர்கள்.
‘தேற்றேகாரம்‘ நீட்டி ஒலிக்க வேண்டும் என்பதைச் சொல்லி... வித்துவான். ந. சேது ரகுநாதர் என்பார் காட்டும் குறள் படித்துக் காட்டுதலின் நுட்பங்களுள் ஒன்று இது என்று கூறி அந்த நூலைப் படிக்கின்ற ஆவலைத் தூண்டி விட்டீர்கள்!
நன்றி.
த.ம. 2
மணவை சகோ நினைத்த பாடலையே நானும் தலைப்பை பாா்த்ததும் நினைத்தபடி(பாடியபடி) வந்தேன்.ஹஹ.
Deleteவணக்கம் ஐயா.
Deleteதங்களது முதல் வருகையும் வழக்கம் போலத் திரைப்படப்பாடல்கள் தேர்ந்த பின்னூட்டமும்....!
மகிழச்சி.
வணக்கம்
ReplyDeleteஐயா
விளக்கம் அற்புதமாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி தவ. ரூபன்
Deleteஈடுபாடும், ஆர்வமும் கொண்ட மரபார்ந்த தமிழாசிரியர்கள் இன்று குறைந்து விட்டார்களே நண்பரே
ReplyDeleteதம +1
தங்களின் தொடர்வருகைக்கு நன்றி நண்பரே
Deleteசிறப்பான பகிர்வு. அத்தான் வருவதே இன்பம் - குறும்புக்கார மாணவராக இருந்திருக்கிறாரே....
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
Deleteஅருமை சகோதரரே இறுதியில் சொல்லியிருப்பது மிக மிகச் சரியே! இப்போதெல்லாம் தமிழ் மொழி பல மாற்றங்களுக்கு உள்ளாகி, எழுத்துகளை வாசிக்கும் போது நாம் கற்றது சரியா இல்லை இப்போது உள்ளதுதான் சரியா? இப்போது செய்தித்தாள் வாசித்து வாசித்து இப்போதுள்ள தமிழ் மனதில் பதிவதாலோ என்னவோ...எழுதும் போது அதுவும் நான் 85 ஆம் வருடத்திலிருந்து மலையாள நாட்டில் வாசம் என்பதாலும் தமிழ் பின்னர் வாசிக்கப்படாததாலும், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராகிப் போனதாலும் நிறைய தடுமாற்றங்கள். உங்கள் தமிழ் மொழியைக் காணும் போதுதான் மீண்டும் மீட்டெடுக்க ஆவல் துளிர்க்கின்றது. அதுவும் கூட சில பல சமயங்களில் தடைபட்டுப் போகின்றது சூழல் அப்படியாகிப் போனதால்..
ReplyDeleteதங்களின் நிலையையும் தமிழ் ஆர்வத்தையும் நான் நன்கு அறிவேன் சகோ.
Deleteதங்களின் வருகைக்கும் என்மேல் கொண்ட அன்பிற்கும் என்றும் நன்றி.
விளக்கம் இனிமை ஐயா...
ReplyDeleteஉங்களை இந்த முறையும் சந்திக்க முடியாதது வருத்தம்...
நிச்சயம் தங்களைச் சந்திப்பேன் ஐயா.
Deleteநன்றி.
கீதா: சகோ உங்களது இந்தப் பதிவு, எனது 5 ஆம் வகுப்பில் எனக்குத் தமிழ் ஆசிரியராக இருந்த திரு சத்தியமூர்த்தி ஐயா அவர்களும், உயர்நிலை வகுப்பில் கற்பித்த திருமிகு சங்கரவடிவு ஆசிரியை அவர்களும், அதுவும் ஓங்கி ஒலிக்கும் குரலில் அவர்கள் சொல்லித் தந்த விதத்தை நினைவுபடுத்தியது. அவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள். ஏற்ற இறக்கத்துடன், நிறுத்தி, ஒருவித ஒலியுடன் மிக அழகாக இருக்கும். எங்கள் ஆசிரியை அப்படிச் சொல்லிவிட்டு மௌனமாக வகுப்பு முழுவதையும், எல்லோரது முகத்தையும் பார்த்தக் கொண்டே மெதுவாக ஒரு நடை நடப்பார், கரும்பலகையின் முன் அங்கும் இங்கும். மீண்டும் சொல்லுவார் அதே போன்று, பின்னர் ஒவ்வொரு வார்த்தையாக. அப்போது நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள மரபு பற்றித் தெரியாது. ஆனால் மனதில் ஆழமாகப் பதிந்ததாலோ என்னவோ எந்தச் செய்யுளை வாசித்தாலும் தெரியாமலேயே அழுத்தம் கொடுத்தும் ஏற்ற இறக்கத்துடநனும் நான் வாசித்து வந்தேன். நான் வாசித்தது, போட்டிகளில் உச்சரித்தது சரியா தவறா என்று கூட இன்று வரை தெரியாது.
ReplyDeleteசுழற்றி அடித்த காலத்தின் சுனாமியில் எல்லாமே போய்விட்டது. இப்போது உங்கள் பதிவுகளை வாசிக்கும் போது மீண்டும் அப்போதைய தமிழ் வகுப்புகளில் இருப்பது போன்ற நான் ரசித்த தருணங்கள் எழுந்து, உங்கள் தமிழ் வகுப்பையும் ரசித்து வருகின்றேன். - தமிழ் வகுப்பு என்றாலே எனக்கு ஆர்வம் மிகுந்து விடும். அது போன்று ஆங்கில வகுப்புகள். (ஆங்கிலத்தில் கூட எங்கள் ஆசிரியை சிலபிள் பிரித்துப் படித்து உச்சரித்துக் கற்பிப்பார்கள். பின்னர் அகராதி பார்த்துக் கற்றுக் கொண்டேன். )
மீண்டும் மீண்டும் திருக்குறளை எங்கள் ஆசிரியரின் குரல் ஒலிக்க வாசித்து வாசித்துப் பார்த்து களிப்படைந்தேன்.
மிக்க மிக்க நன்றி சகோ.....சத்தியமான வார்த்தைகள் உங்கள் தமிழை வாசித்து உங்கள் வகுப்பில் இருப்பது போன்று இன்புற்று வருகின்றேன். இந்தத் தமிழ் இன்பத்தைத் தரும் உங்களுக்கு எத்தனை முறை நன்றி உரைத்தாலும் தீராது.
மிக்க மிக்க நன்றி..
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் சகோ.
Deleteநானெல்லாம் மனப்பாடம் என்று தனியே படித்ததில்லை. வகுப்பின் முடிவில் அது மனதில் பாடமாயிருக்கும். சொல்லிக் கொடுக்கும் முறையும், இனிமையும் மாணவர் மனதில் தூண்டப்பட்ட ஆர்வமும், மனதேற்றுதலின் போது தோன்றும் பெருமிதமும் அதை இயல்பாய் மனதிருத்தச் செய்தன.
ஆசிரியர் பிடிக்காவிட்டால் அந்தப் பாடம் வேப்பங்காய் ஆகிவிடும் என்பதற்கும் என்வாழ்வில் உதாரணங்களை வைத்திருக்கிறேன்.
அதே பாடத்தை அடுத்த வகுப்பில் ஓராசிரியர் தேனாய்க்குழைத்துத் தந்தார்.
இன்றெல்லாம் கொள்வாரும் கொடுப்பாரும் இல்லாத வகுப்பறைகளைக் காணும்போது மனதில் எழும் சோகத்தை மறைக்க முடிவதில்லை.
நீங்கள் கண்டு கருத்திடுவதே மகிழ்ச்சிதான். நன்றியெல்லாம் இதைப் படிப்பதற்காக நான் உங்களிடம் அல்லவா கூறவேண்டும்.
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகூகுள் கூட நடிகர் ரஜனியோட புகழ் பெற்ற வசனத்தைத் தனது பெட்டகத்தில் பதிய வைத்திருக்கிறது போலும்..ஹஹஹ் "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரினு" அவர் சொல்ற வசனம் போல, நான் பின்னூட்டம் இட்டுவிட்டு ஒரு முறைதான் அழுத்தினேன்...ஆனால் அது மூன்று முறை வெளியாகி இருந்தது. நல்ல காலம் 100 முறை இல்லை ஹஹஹ. அதனால் தான் அந்த இரண்டும் அழிக்கப்பட்டது சகோ...
ReplyDelete:)
Deleteசர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி பொழிந்தது போல அருந்தமிழின் பெருமையையும் இனிமையையும் நுட்பங்களையும் புலப்படுத்த எண்ணி மேலும் இனிமை சேர்க்க நகைச் சுவையோடு பயனுள்ள தகவல்களையும் சேர்த்து அளிக்கும் தங்கள் நுட்பம் எப்போதும் போல் வியக்க வைக்கிறது. இதுவும் ஒரு பெரும் கலையே இல்லாவிட்டால் என் போன்றோர்க்கு தமிழின் அருமை புலப்படாமலே போயிருக்கும்.
ReplyDeleteஎன்றும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன் ஐயனே .
\\\அத்தான் வருவதே இன்பம்/// ரசிக்கக் கூடிய குறும்புத் தனம் தான். ம்...ம்
தேற்றேகாரம் பற்றிய விபரங்கள் மகிழ்வையும் மேலும் அறியும் ஆர்வத்தையும் பெருக்குகிறது. அத்துடன் வித்துவான். ந. சேது ரகுநாதர் நூலையும் கற்க ஆர்வம் பிறக்கிறது. பதிவுக்கு மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள் ஐயனே!
வாருங்கள் அம்மா.
Deleteஉங்கள் அன்பினுக்கும் தொடரும் ஊக்கப்படுத்துதலுக்கும் என்றும் நன்றியுடையேன்.
நன்றி.
தேற்றேகாரம் என்பதற்கு இன்றே விளக்கம் தெரிந்துகொண்டேன். வாசிப்பு முறை குறித்தும் ந.சேது ரகுநாதா் நூல் எழுதியிருக்கிறாா் என்பதும் தங்கள் பகிா்வின் மூலம் தான் தெரியவருகிறது. இது போன்ற பகிா்வுகளைத்தொடருங்கள் என்போன்றவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteநன்றிங்க ஆசிரியரே.
பதிவுகளைத் தொடர்வதற்கு மிக்க நன்றி பாவலரே!
Deleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteதிருக்குறளை வாசிக்கும் நுட்பங்கள் எல்லாம் தங்கள் பதிவுகளின் மூலமே அறிய முடிகிறது ,தேற்றாகாரம் நல்ல விளக்கம் இக்குறளை மீண்டும் மீண்டும் வாசித்துப் புரிந்துகொண்டேன் என்றும் இதுபோன்ற கற்பித்தலை தொடர வேண்டுகிறேன் நன்றி பாவலரே வாழ்க வளமுடன் !
தம +1
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!
Deleteகுறள்களையும் பாடல்களையும் சொல்லவேண்டிய விதத்தில் நிறுத்தியும், நீட்டியும், முழக்கியும் சொன்னால் பலராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்பது உண்மையே... அதை விட்டு பொருள்புரியாமல் பாராயணம் பண்ணுவதும் பாராயணம் பண்ணியவற்றை வரிக்கு வரி அப்படியே ஒப்பித்து மதிப்பெண்கள் வாங்குவதுமே இன்றையக் கல்விமுறையாக இருப்பது பெரும் அவலம்தான். ஆசிரியப்பயிற்சியில் கற்றப் பாடமொன்றை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteநீங்கள் சொல்வது அத்துணையும் உண்மையே!
Deleteஇந்த வருத்தம் எனக்கும் உண்டு.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
தமிழ் ஆசிரியர் ,நன்றாக அபிநயம் பிடிக்கத் தெரிந்தவராக இருந்தால் நல்லது ,அப்படித்தானே :)
ReplyDeleteநிச்சயமாக பகவானே!
Deleteஆசிரியன் ஆடவும் பாடவும் நடிக்கவும் எல்லாம் தெரிந்து இருப்பதென்பது மாணவர்க்குக் கற்றலை மகிழ்ச்சியாக்கக் கூடியதுதான்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
சிறு வயதிலிருந்தே நிறையத் திரைப்படங்கள் பார்க்கும் பழக்கம் உள்ள எனக்கு அந்நாளைய நடிகர்களான சிவாஜி கணேசன் ஐயா, மனோரமா ஆச்சி போன்றோர் உரையாடல்களை எப்படியெப்படியெல்லாம் எங்கெங்கெல்லாம் அழுத்தி நீட்டிப் பேசுகிறார்கள் என்பதைப் பார்த்து ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. இன்றைய நடிகர்கள் 'அவர் எங்கப்பா' என்பதற்கும் 'அவர் எங்க அப்பா' என்பதற்கும் கூட வேறுபாடு இல்லாமல் பேசுவதைப் பார்க்கையில் அன்றைய நடிகர்களின் தமிழ்ப் பலுக்கல் அறிவை எண்ணி நான் வியந்ததுண்டு. ஆனால், ஆசிரியர்கள் இதை எந்தளவுக்குக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை நீங்கள் விவரித்திருப்பதைப் பார்க்கும்பொழுது அவையெல்லாம் ஒன்றுமே இல்லை எனத் தோன்றுகிறது! நன்றி ஐயா!
ReplyDeleteவாருங்கள் ஐயா.
Deleteஆங்கிலத்தில் உள்ளதைப் போலவே தமிழிலும், எடுத்தும் படுத்தும் நலித்தும் சொல்லும் முறைகள் உண்டு. மாற்றிச் சொல்லும்போது பொருள் மாறுபடுவதும் உண்டு.
உரையாசிரியர்கள் இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
வாய்மொழி மரபின் மூலம் வழிவழியாக ஒரு சொல்லைச் செய்யுளில் எங்கு எப்படிச் சொல்வது என்றெல்லாம் கற்பிக்கப்பட்ட மரபு, அச்சிடப்பட்ட புத்தகங்களில் அடக்கப்பட்டபோது, அதன் ஓசை நுட்பத்தை இழந்து போனது.
இருப்பினும் அம்மரபில் கற்றுவந்தவருள் ஒருசிலர் அதனைத் தொடர்ந்தனர்.
ஆனால் இன்று அத்தகு மரபு ஏறக்குறைய முற்றிலும் அழிந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
குறைந்தபட்சம் இதுபற்றி அறிந்தவர்கள் இதனைப் பகிர்தல் இன்றைய ஆசிரியர்களுக்குச் செய்யும் உதவியாய் அமையும் என்றே பகிர்ந்தேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
தேற்றேகாரம் திறந்ததென் அறிவையும்!
ReplyDeleteமாற்றுக் கருத்தேது!.. தொடருங்கள் ஐயா!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பாவலரே!
Delete//ஒரு மாணவனின் மனதில் அழியாச் சித்திரத்தைத் தீட்ட விரும்பும் ஆசிரியனின் முயற்சி எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை ஈடுபாடும், ஆர்வமும் கொண்ட மரபார்ந்த தமிழாசிரியர்களின் இது போன்ற முயற்சிகளிடையே நாம் காண இயலும்.//
ReplyDeleteஉண்மைதான். எங்கள் தமிழ் ஐயா திரு குஞ்சிதபாதனார் அவர்கள்,திருக்குறளில், பொருட்பாலில் கல்வி அதிகாரத்தில் உள்ள 397 ஆம் குறளான
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
என்ற பாடலை நாடாம் ஆல்,ஊராம் ஆல் என்ற பிரித்து படிக்கவேண்டும் என எட்டாம் வகுப்பில் சொல்லிக்கொடுத்ததால் தான் 58 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த குறள் நினைவில் இருக்கிறது,
‘ஆடைவாய்ப்பதும் ஆம்படையான வாய்ப்பதும் அதிர்ஷ்டக்காரிக்கு’ என்று சொல்வதுபோல் ஆசிரியர் வாய்ப்பதும் அதிர்ஷ்டக்கார மாணவனுக்கு என்று சொல்லலாம் போல் தோன்றுகிறது.
வணக்கம்.
Deleteநீங்கள் சொல்வதுபோல இன்றைய சூழலில் நினைவுகூரத்தக்க ஆசிரியர்கள் குறைந்து போனார்கள். போகிறார்கள்.
நீங்கள் இங்குக் கூறிய பழமொழி அருமை. இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.
குறித்துக் கொண்டேன்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
வணக்கம் ஐயா,
ReplyDeleteதேற்றேகாரம் விளக்கம் அருமை,
வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நன்றி.
வணக்கம் பேராசிரியரே!
Deleteதங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.
பின்னூட்ட பதில்கண்டு பக்கம் வந்தால்
Deleteபுதிய பதிவு காணோம் எப்போ ஐயா,
நன்றி
அருமையான விளக்கம் நண்பரே! தமிழை எப்படி கற்றுத்தரவேண்டும் என்ற விளக்கத்தை மிக நன்றாக கூறியுள்ளீர்கள். அனைவருக்கும் பயன்தரும் பதிவு!
ReplyDeleteத ம 12
This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா நன்றாக…..வே ரசித்……தேன்… இன்னும் இதுமாதிரி இருந்தால் சொல்லிக் கொண்டே இருக்கவும்.
Deleteபொதுவாகவே அந்தக்கால செய்யுள்கள் யாவும் (திருக்குறள் உட்பட) ராகத்தோடேயே படிக்கப்பட்டன; எழுதப்பட்டன. இந்த காலத்தில் அவற்றை உரைநடையாகவே யாவரும் வாசிக்கின்றனர். தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.
தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅத்தான் வருவதே இன்பம் மாணவனின் குறும்பு ரசிக்க வைத்தது. தமிழின் இனிமையையும் பொருள் ஆழத்தையும் மாணவர் மனதில் பதிய வைக்க ஆசிரியர் சிலர் எடுத்துக்கொண்ட முயற்சி, வழிமுறைகள் பற்றி விளக்கியது மிகவும் அருமை. தமிழின் மீது மாணவர்கள் சிலருக்காவது பற்று ஏற்பட இத்தகைய ஆசிரியர்களின் சீரிய முயற்சியே காரணம். ரசிக்க வைத்த பதிவு. தொடருங்கள்.
ReplyDeleteஆம். எனக்குத் தமிழின் மீது பற்றுவரவும் என் தமிழாசிரியர்தான் காரணம்.
Deleteஇன்று ஒரு மாணவனுக்கு ஏற்படும் சாதாரண ஐயத்தைக் கூடக் களைய மனமில்லாமல் போகும் சூழலே பெரும்பாலான ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.
என்ன செய்ய?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் நன்றிகள்.
அத்தான் வருவதே இன்பம்...
ReplyDeleteஅற்புதமான விளக்கம்.
நன்றி நண்பரே!
Delete" யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால் ".....என்று சொல்லி பல நல்ல பதிவுகள் தருகிறீர்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே!
Deleteகுறளை எப்படி வாசிக்க வேண்டும் என்று நூல் இருக்கிறதா ? இன்று தான் அறிந்து கொண்டேன் அண்ணா ..
ReplyDeleteநன்றி
அப்படி நூலொன்றும் இல்லை சகோ.
Deleteவல்லார் வாய்க் கேட்டுணரத்தான் வேண்டும்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஒரு ஆசிரியர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று உரைத்தமைக்கும், திருக்குறளை எப்படி ஓசை நயத்தோடு படிப்பதற்கு வழிவகை கூறியமைக்கும் மனமார்ந்த நன்றி அய்யா.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கண்ணன்
Delete
ReplyDeleteவணக்கம்!
வந்ததேற் றேகாரம் தந்த பொருளுரைத்தீர்!
செந்தேன் தமிழைக் குழைத்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
குழைத்த தமிழ்நாவில் குன்றாத இன்பம்
Deleteஇழைத்தீர் குறள்கூறி இங்கு
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு. அருமைகள் நிறைந்த பதிவு.
ReplyDeleteஇன்று, தேற்றேகாரத்தில் பற்றிய ஒரு விவாதத்தில் தலை கொடுத்துவிட்டேன். சில புரிந்தது போல் இருந்தது ஆனால் நான் தெளிவு பெறவில்லை. சில விளக்கங்கள் மிரள வைத்த இலக்கண வகுப்பை நினைவூட்டின.
தங்கள்து விளக்கம் நல்ல தெளிவை சுவையோடு நல்கியது
இது, தாங்கள் 8 ஆண்டுகள் 7 நாட்கள் முன்னர் எழுதிய பதிவு.
நான் இன்று கூகுளில் தேற்றத்திற்காக அலசிய போது தங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு வாய்த்தது.
ஊமைக் கனவுகளை நாளும் நனவாக்கும் கூகுள் வாழ்க! வலை பதிவு வாழ்க!!
நலந்தா ஜம்புலிங்கம்