Monday 17 October 2016

வசைகவி – கொஞ்சம் காதைப் பொத்திக் கொள்ளுங்கள்!


புலவர்கள், கவிஞர்கள் வாழ்த்திப் பாடுவதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவன் எப்படியெல்லாம் நாசமாகப் போகவேண்டுமென அவருள் எவரேனும் பாடியதைக் கேட்டிருக்கிறீர்களா?

தமிழில் கவிஞரிடையே,

ஆசுகவி (உடனடிக் கவிஞர்)

சித்திரக்கவி (படக்கவிஞர்)

வித்தாரக்கவி (விளக்கக்கவிஞர்)

மதுரகவி (இன்சுவைக் கவிஞர்)

என நான்கு வகைப்பாடிருப்பதாக இலக்கணம் கூறும்.( மொழிபெயர்ப்பு எனது. காப்புரிமை உடையது. கையாளுவோர் அவசியம் ஆசிரியரின் அனுமதி பெறவேண்டும் :) )

இதேபோல் கவிதையின் தன்மையை வைத்தும் வகைப்பாடுண்டு.

அடுத்தவர் கவிதையைக் காப்பியடித்துத் தனதெனச் சொல்லும் கவி,
சோரகவி.

ஒருவன் அழிய வேண்டும் என்று பாடும்கவி வசைகவி.

இங்கு நாம் பார்க்கப்போவது, அதுபோன்றொரு வசைகவிதான்.

அவன் பெயர் வெங்கட்டராமன். கவிஞர்க்கு அவன் என்ன தீங்கு செய்தான் எனத்தெரியவில்லை

ஆனால், எப்படித் திட்டுகிறார் பாருங்கள்….!

 சீவனுள் அளவுமே நட்டுவக் காலியும்
        தேளும் சினந்து கொட்டத்
  திருதிரெனு முண்டவிழி யிற்குளவி
       கொட்டவது செங்குருதி யாறுகொட்டப்
பாவிமக னேயுனது வாசலிற் சாம்பிணப்
       பறைகண்மிக வந்து கொட்டப்
  பந்தரடி மாரடித் துறவினர்கள் வாய்க்கரிசி
       படிநெற் கொணர்ந்து கொட்ட
ஆவலொடு கான்மாட்டில் உனதுபெண்
       டாட்டிகண் ணருவியொரு கோட்டை கொட்ட
  ஐயையோ என்செய்வே னென்றுமக னீர்மாலை
       யதனைக் கொணர்ந்து கொட்டச்
சாவடியில் அறுதலிகள் கூடியழ
       நீவந்து சப்பாணி கொட்டியருளே!
  சண்டிக்குலாமனே வெங்கட்ட ராமனே
       சப்பாணி கொட்டியருளே!

தமிழில் பிள்ளைத்தமிழ் என்றொரு சிற்றிலக்கியம் இருக்கிறது.

அதில் வரும் சப்பாணிப்பருவத்திற்கு உரிய பாடலை இங்கு இக்கவிஞர்
வசைகவிக்குக் கையாள்கிறார். சப்பாணி கொட்டுதல் குறித்து அறிந்து இந்தப்பாடலைப் படித்தால்  வசையின் வீரியம் இன்னும் கூடியிருப்பது தெரியும்.:)

பாடலின் பொருள் வெளிப்படையாய் இருப்பதால் பொருள் எழுதவில்லை.
பொதுவாகப் போற்றிப் பாடல்களையே பார்த்த நமக்குத் தமிழில் இதுபோன்ற பாடல்களும் இருந்திருக்கின்றன என்பதற்காக இதைப்பதிந்தேன்.

சென்ற இடுகையை ஒட்டி, இதனுள்ளும் புதிரைத் தேடுவோருக்கு……. இப்பாடலை எழுதிய கவிராயர் யார் என்று தெரிகிறதா? :)

அடுத்து ஆசீவகம்.

தொடர்வோம்.


படஉதவி- 

நன்றி http://static.wixstatic.com/media/56959b_7646583de66942aba5a5fa25cd0f2503~mv2.jpg
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

32 comments:

  1. //பாடலின் பொருள் வெளிப்படையாய் இருப்பதால் பொருள் எழுதவில்லை//

    உண்மைதான் கவிஞரே என்னைப் போன்ற பாமரனுக்கும் புரிகின்றது இதை படித்து புரிந்து கொள்பவர் அடுத்தவர் கவிகளை மட்டுமல்ல, வார்த்தைகளைகூட திருட மாட்டார்கள்

    கவிதையின் வரிகள் மனதில் கிலியை உண்டு பண்ணுகிறது தொடர்கிறேன்
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      தங்களின் உடனடி வருகையும் கருத்தும் வாக்கும் பேரூக்கம் தருவது.

      நன்றி.

      Delete
  2. அந்தக் காலத்தில் அறம் பாடுவது என்று சொல்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. அறம் பாடுதலுக்கும் வசைகவிக்கும் வேறுபாடுண்டு ஸ்ரீ.

      விளக்குகிறேன்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. இப்ப்டியும் ஒரு கவி உண்டா? வியப்பாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  4. ஐயா! இந்த வகைப் பாடலை ‘சரமகவி’ என்பார்கள் இல்லையா? இதே போலக் கலம்பகம் பாடியும் ஒருவரை அழிப்பதுண்டு. எடுத்துக்காட்டு நம் அனைவருக்கும் தெரிந்த நந்திக்கலம்பகம்.

    ஆனால், இவையெல்லாம் உண்மை என நீங்கள் நம்புகிறீர்களா? இவை பலிப்பதுண்டா? என்னிடம் நந்திக் கலம்ப நூல் ஒன்று இருக்கிறது. அதன் முன்னுரையில் உரையாசிரியர், "நந்திக் கலம்பகம் கேட்டு அரசன் நந்திவர்மன் இறந்ததாகக் கூறப்படுவதே தவறு. ஏனெனில் நூலில் எந்த இடத்திலும் நந்தி வர்மனை அழிக்கும்படியான வசைச் சொற்கள் ஏதும் இடம்பெறவில்லை; வெறும் அமங்கலச் சொற்கள், அமங்கலமான முறையில் மொழியைப் பயன்படுத்தியமை மட்டுமே காணப் பெறுகின்றன. நந்திவர்மனை அழிந்து போகச் சொல்லும்படியான பொருளில் இல்லை" என்று கூறியுள்ளார். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    ஏன் கேட்கிறேன் என்றால், ஒருவேளை இது பலிக்குமானால் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அவர்கள் மீதெல்லாம் பாட வேண்டும்! :-D

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      வசைகவிக்கும், அறம்பாடுதலுக்கும், சரமகவிக்கும் வேறுபாடுண்டு.

      வசைகவி என்பது ஒருவர்மீது தொடுக்கப்படும் நேரடியான தாக்குதல்.

      அறம்பாடுதல் என்பது, அமங்கலமான எழுத்துக்கள் என்று பாட்டியல் நூல்கள் வகுத்த நெறிகொண்டு குறிப்பிட்ட கட்டமைப்பில் பாடுதல். அங்கு நேரடியாக ஒருவன் அழிய வேண்டும் என்று குறிப்பிட வேண்டியதில்லை.

      நம் மரபில் விளக்கை அணைக்கச் சொல்லுதல் அமங்கலமெனக் கருதி, பெருக்கச் சொல்லும் மங்கலச் சொல்போல்,

      அழியப்பாட வேண்டியதெனக் கூறாமல் அறம்பாடல் என்பதே மங்கலச்சொல்தான் என்றே நான் கருதுகிறேன். இது என் கருத்தே. தவறிருக்கலாம்.

      மூன்றாவதாக,

      சரம கவி என்பது இறந்தார்மேல் கொண்ட பற்றின் காரணமாக மனம்கலங்கிப் பாடுவது.இதனைக் கையறு நிலைப்பாடல் என்னும் நம் இலக்கணங்கள்.

      தாங்கள் காட்டிய நந்திக்கலம்பகத்திலேயே,

      வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
         மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
      கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
         கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
      தேனுறு மலராள் அரியினை அடைந்தாள்
          செந்தழல் அடைந்ததுன் தேகம்
      யானும்என் கவியும் எங்ஙனே புகுவோம்
         எந்தையே நந்தி நாயகனே.

      என்பது சரமகவிதான்.

      கண்ணதாசன் நேரு இறந்தபோது பாடிய,

      சீரிய நெற்றி யெங்கே.....சாவே உனக்கொருநாள் சாவுவந்து சேராதோ.....எல்லாம் இக்காலத்திய எடுகோள்கள்.

      நிற்க,

      இந்த அறம்பாடுதல் பற்றிய நம்பிக்கை பகுத்தறிவை மீறி என்னிடம் இருக்கிறது.

      அது பலித்தும் இருக்கிறது.

      இதற்கு இலக்கணங்கள் இருக்கின்றன.

      நீங்கள் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியது போல,

      நடந்ததால் நம்பினேன். :)


      உங்கள் பட்டியலைப் பத்திரமாய் வையுங்கள்.

      :)


      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  5. நான் இதுவரை இதை வாசித்ததில்லை . திருமலைராயன் பட்டினம் காரைக்காலுக்கு அருகில் உள்ளது ; அவ்வூர் அழிந்துபோக வேண்டும் என்று சபித்துக் காளமேகம் பாடியதாய் ஒரு வெண்பா இருக்கிறது ; உங்களுக்குத் தெரிந்திருக்கும் . பாடலை அறிமுகப்படுத்தியமைக்கு என் பாராட்டு .

    ReplyDelete
  6. நான் இதுவரை இதை வாசித்ததில்லை . திருமலைராயன் பட்டினம் காரைக்காலுக்கு அருகில் உள்ளது ; அவ்வூர் அழிந்துபோக வேண்டும் என்று சபித்துக் காளமேகம் பாடியதாய் ஒரு வெண்பா இருக்கிறது ; உங்களுக்குத் தெரிந்திருக்கும் . பாடலை அறிமுகப்படுத்தியமைக்கு என் பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      பாடல் நினைவில் இல்லை. மண்மாரி பெய்தழிக என்று பாடியதாகவும் அவ்விடம் மண்மேடாகப் போனதாகவும் படித்திருக்கிறேன்.

      வசைகவிக்குச் சரியான எடுத்துக்காட்டு இப்பாடல்.

      ஔவையார் பாடின, கம்பர் பாடின என்றெல்லாம் உண்டு. இணையதளத்தில் இப்பாடல் இல்லை என்பதும் இப்பதிவிற்குக் காரணம்.

      தங்கள் வருகையும் பாராட்டும் மிக்க மகிழ்வூட்டுகிறது.

      நன்றி.

      Delete
    2. திருமலைராயன் பட்டினம் அழிந்துபோக வேண்டும் என்று சபித்துக் காளமேகம் பாடிய அந்த பாடல் இதோ

      “ செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
      அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற்
      கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
      மண்மாரி யாலழிய வாட்டு”

      Delete
    3. பாடலைத் தந்துதவியதற்கு மிக்க நன்றி திரு. நடனசபாபதி ஐயா.

      Delete
  7. கவிதையில் திட்டு வாங்கவும் கொடுத்து வைத்திருக்கணும்:)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்

      அதற்குப் பிறர் வாழ்வைக் கெடுத்தும் இருக்க வேண்டுமோ? :)

      நன்றி பகவானே!

      Delete
  8. அப்பப்பா.
    கவிக்கூற்று பலிக்கும் என்பார்கள். என்ன ஆனார் வெங்கட்ராமன்?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. கவிஞரின் சொல் பலிக்கும் என்பார்களே...
    இப்படி திட்டியிருக்காரே...

    ReplyDelete
    Replies
    1. ஆம் பரிவையாரே!

      கவிஞரின் சொல் என்றல்ல.. மனம் நொந்து எவரொருவர் கூறினாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறவன் நான்.

      நன்றி.

      Delete
  11. எங்குதான் இப்படிப்பட்ட தகவல்களையெல்லாம் திரட்டுகிறீர்களோ..!! ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே!
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. உங்களை விடவா நண்பரே?

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. அறம்பாடுதலின் இன்னொருவடிவம் தான் இந்த வசைக்கவி என்று வாசித்த ஞாபகம் இருக்கு .பாடல் இன்றுதான் கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சற்று வேறுபாடுண்டு நண்பரே!

      பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. காளமேகப்புலவர் திருமலைராயன் அரசவையில் தனக்கு அமர இடம் கொடுக்காத புலவர்களை நோக்கி

    ‘’வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு
    காலெங்கே யுட்குழிந்த கண்ணெங்கே-சாலப்
    புவிராயர் போற்றும் புலவீர்காணீவிர்
    கவிராய ரென்றிருந்தக் கால்”

    என்று பழித்து பாடியதை படித்திருக்கிறேன்.

    கம்பனை நோக்கி ஔவைப்பாட்டி

    "எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே!
    மட்டில் பெரியம்மை வாகனமே!- முட்டமேல்
    கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
    ஆரை அடா சொன்னாய் அடா!

    என்று பழித்து பாடியதையும் படித்திருக்கிறேன்.

    இது போன்ற பாடலை இப்போது தான் பார்க்கிறேன். நீங்களே சொல்லிவிடுங்களேன் இந்த பாடலை எழுதிய கவிராயர் யாரென்று.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      இரண்டு பாடல்களுமே கவிஞரின் உட்கிடக்கையை மறை சொற்களால் புலப்படுத்துவன.

      வசை கவிக்கு இன்னும் வீரியம் இருக்கிறதல்லவா?

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  14. அப்பப்பா! கொட்டக் கொட்ட என்று கொட்டித் தீர்த்துவிட்டார்! வசை கவி, அறம்பாடுதல் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      அவருடைய மூலதனம் சொற்கள்.

      அதைக்கொண்டுதானே கொட்ட முடியும்? :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  15. சோரகவி பின்புலத்தை மிக நயமாக இப்பதிவின் மூலம் எடுத்துக்காட்டியுள்ளீர்கள். வசையிலும் வெங்கட்டராமன் மனம் மகிழ்ந்திருக்கும், அதன் தமிழினிமையால்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      சோரகவி மரபு என்றோர் நூலே இருக்கிறது.

      தமிழினிமையை இரசிக்கத் தெரிந்தவராய் இருந்தால் வாயில் விழுந்திருக்க மாட்டார் வெங்கட்ராமன் என எனக்குப் படுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. தமிழே! இப்படியும் நீ பயன்பட்டாயா! என்று தான் தோன்றியது அண்ணா, அதையே நீங்கள் இறுதியில் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு பதிவிலும் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது. நன்றி அண்ணா

    ReplyDelete
    Replies
    1. //இந்த அறம்பாடுதல் பற்றிய நம்பிக்கை பகுத்தறிவை மீறி என்னிடம் இருக்கிறது.// அப்படியா!! :)

      Delete