Tuesday 10 March 2015

திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்.




அவர் என்னுடன் பணியாற்றுபவர். தன் மகளுக்குப் பெரும் பொருட்செலவில் திருமணம் முடித்து வைத்திருந்தார். விடுப்பு முடிந்து பணியில் சேர வந்தததன் பின் பேச்செல்லாம் மருமகனைப் பற்றியும் திருமணம் பற்றியுமாய்த்தான் இருந்தது.

அடுத்து மணமக்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்ய  வேண்டும் ஊட்டி கொடைக்கானல் என்று போனால் நல்லாயிருக்காது என்றார். வேறெங்கு அனுப்பலாம் என்று கேட்டார்.

ஒருவர் மூனாறு என்றார். இன்னொருவர் டாப்சிலிப் நன்றாக இருக்கும். ரிசாட் எல்லாம் இருக்கிறது என்றார்.

மணவை ஜேம்ஸ் அய்யா, தடாலடியாக “ அப்பப் பேசாம சுவிட்சர்லாந்த் அனுப்பி வைச்சுருங்களேன் சார் “ என்று போட்டார் ஒரு போடு.

அது மாப்பிள்ளையின் காதில் விழுந்துவிட்டதாகவே பதறிப்போன நண்பர், சிம்லா டார்ஜலிங் என முன்னரே தான் செய்துவைத்திருந்த ஏற்பாட்டைச் சொல்லவேண்டியிருந்தது.

இன்றும்  தம்பதிகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் குளிர் நிறைந்த மலைப்பகுதிகள்தான் சட்டென நம் நினைவுக்கு வருகின்றன.

புணர்தலையும் புணர்தல் நிமித்தத்தையும் மலையும் அது சார்ந்த இடமுமான குறிஞ்சித் திணைக்கு  உரிய ஒழுக்கம் 
( உரிப்பொருள் ) என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.

நம் மரபில் மலைகள் எனக்குறிப்பிடுவது வெறும் மொட்டைப் பாறைகளை அல்ல.
அடர்ந்த வனங்களை, ஆற்றின் மடியை, அளவில்லா வளத்தை, இயற்கையின் பேராண்மையை, இனிய குளிரை எப்போதும் தன்னுள் பொதிந்து வைத்திருப்பவைகளைத்தான் நாம் மலையும் அது சார்ந்த இடமும் என்று அழைக்கிறோம்.


குளிரென்றால் பிறபகுதிகளில் உள்ளதைப்போல் நம்மலைகள் ஒருபோதும் உறைந்திறுகிப் பனிக்கட்டிகளாய் மாறிவிடுவதும் இல்லை. அன்றி உலர்ந்து கருக்கும் அளவிற்கு அங்கு வெயில் வாட்டுவதும் இல்லை.
.
அப்பகுதியில் பெரும்பாலும் நிலவுகின்ற காலநிலை குளிர்காலம். ஊட்டி கொடைக்கானல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அங்கிருக்கின்ற குளிர்தானே..?
எனவேதான் மலைசார்ந்த பகுதிகளுக்குக்  குறிஞ்சி என்று பெயர் வைத்தவர்கள் அதற்கு  உரிய சிறப்பான பெரும்பொழுதாகக் குளிர்காலத்தை குறிப்பிட்டிருக்கலாம்.

அதே போல்தான் அம்மலைப்பகுதியில் ஒரு முழுநாளை எடுத்துக் கொண்டால் அதன் இருண்மையும் தண்மையும் உச்சம் பெற்றிருப்பது  நட்டநடுநிசி. அதாவது யாமம். எனவே அதனைக் குறிஞ்சியின் சிறு பொழுதாக வைத்திருக்கலாம். இவை குறிஞ்சிக்குப் பெரும்பொழுதாய்க் குளிர்காலத்தையும், சிறுபொழுதாய் யாமத்தையும் குறிப்பிடுவதற்கு நாமாக யூகிக்கும் காரணங்கள்.

புலி,கரடி, யானை, குரங்கு என விலங்குகள் ஒருபுறம்.
சந்தனம், அகில், தேக்கு, அசோகு என வளர்ப்போரும் வீழ்த்துவோரும் இன்றிச் செழித்து வளர்ந்திருக்கும் பலநூறு வயது கடந்த மரங்கள் ஒருபுறம்.


குறிஞ்சி மலர் பூத்த குறிஞ்சி.


“வெயில் நுழைபு அறியா குயில்நுழை பொதும்பர்“ என்று சொல்வார்களே வெயில் தரையில் படாத அளவுக்கு அடர்த்தியான மரங்கள் சூழ்ந்து குயில் முதலிய பறவைகள் உட்புகுந்து உறைகின்ற காடு அது.

குறிஞ்சி, 


குவளை,


கண்ணோடு ஒப்பிடப்படும் குவளை.


 வேங்கை, 
பாறைமேல் இம்மலர்கள் விழுந்தால் வேங்கையோ என யானை மிரளும் வேங்கை

காந்தள்,  
மருதாணியிட்ட பெண்ணின் சிவந்த விரல்கள் எனத்தோன்றும் காந்தள்.

என நிறைந்திருக்கும் பூக்கள் ஒரு புறம்.

காட்டின் குருதிக் கசிவென எங்கும் ஈரம் கசியும் பாறைகள். கசிவு நீர் திரண்டு ஒழுகும் ஓடைகள். ஓடை பெருகப் பாயும் காட்டாறு. ஆற்றின் இடுப்பை ஒடித்து ஓலமிட்டுப் பெருங்கூச்சலுடன் விழும் அருவி. தேனின் சுவையைத் தோற்கடிக்கும் இனிப்புடன் தித்திக்கும் சுனை நீர் என எண்ணத்திகட்டாத கற்பனைகளுக்கு விருந்தளிக்கும் மலையைத் தொலைவிலிருந்து பார்க்கும் போது  அதன் மேகம் போர்த்திய முகடுகள்  பெருமரம் ஒன்றில் பூத்திருக்கும் வெண்பூவாய் எனக்குப் பலநேரங்களில் தோன்றியிருக்கிறது.

இன்றைய குறிஞ்சி நிலத்தின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அது மலைக்காடுகளில் சின்னஞ்சிறு சிறுமியென இயற்கை கவலையற்றுத் துள்ளித்திரிந்த காலம்.

ஒரு இரண்டாயிரம் வருடங்களுக்குமுன், இயற்கையை மனிதன் இன்றைய நாளைப்போல் மாசு படுத்தியிராத சூழலில் அந்தக் காடுகளின் அடர்த்தியை, இன்றும் நாம் அன்றைய இலக்கியப் பதிவிலிருந்து ஓரளவிற்கு மீட்டெடுத்துப் பார்க்க முடிகின்றது.

   அக்காலத்தில் அழிந்திராப் பறவைகளின் விலங்குகளின் தாவரங்களின் வளத்தை, காட்டிற்கே உரிய மணத்தை , மலைகளின் சமதளங்களில் சிறுசிறு குடிகளென, கிடைத்ததைத் தம்குடியில் உள்ள எல்லார்க்கும் எனப் பகிர்ந்து அம்மலைமேல் வாழும் வெற்பர்களின் குடியை, பொருப்பர்களின் குடியை, சிலம்பர்களின் குடியை, மலைக்கும் சமவெளிக்குமான பிணைப்பை ஏற்படுத்திய நாடோடிகளாய்த் திரிந்த அம்மலைக்குச் சொந்தக்காரர்களான குறவனை, குறத்தியை இந்த இலக்கிய வாசிப்பு நம் கண்முன் கொணர்கிறது.

இயற்கைதான் தங்களுக்கு எல்லாமும்  என்பதை வாழ்வின் அறமாகக் கொண்ட தொல்குடி ஒன்றின் சிந்தனையைச் செயல்பாட்டைக் கற்பனையாகவேனும்  நினைத்துப் பார்க்க முடிகிறது.

இயற்கையின் அழகிற்கு மானுட உருவைக் கொடுத்து அவர்கள் தங்களுக்கென உருவாக்கிக்கொண்ட முருகன் என்னும் தெய்வம்.

மலைமேல் உள்ள சமதளங்களைச் சீர் செய்து, உணவிற்காய் மலையில் விளையும் ஒருவகை நெல்லை விதைப்பதும், தினை பயிரிடுவதும், தேனெடுப்பதும், கிழங்கு அகழ்வதும் எனத் தொடரும் அவர்கள் தொழில்.

எனக்கு உனக்கு என இல்லாமல் எல்லோரும் பாடுபட்டு எல்லோரும் பகிர்ந்துண்ட வாழ்வு. ஓய்வில் ஒருங்குகூடிக் களிக்கையில் உடுக்கடித்துப் பாடும் குரவைப்பாட்டு
( உடுக்கையைத்தான் அவர்கள் தொண்டகப்பறை என்றார்கள்.)
தொண்டகப்பறை என்னும் உடுக்கு

 அவர்களுக்கென ஒரு பண் குறிஞ்சி. அவர்களுக்கென ஒரு யாழ் குறிஞ்சியாழ்.

இதுதான் குறிஞ்சியின் பின்புலம். இவைதாம் குறிஞ்சியின் கருப்பொருட்கள்.

இந்தக் குறிஞ்சியின் முதல் பொருள் என்பதில்,

நிலம் என்பது நாம் பார்த்த மலையையும் மலைசார்ந்த இடமான காட்டையும் குறிக்கும்

காலம் என்பதில், ஆண்டில்  வரும் பருவ காலமாகிய குளிர்காலமும் ( பெரும் பொழுது ), நாளில் சிறுபொழுதாகிய யாமமும் உள்ளடங்கும்.

கருப்பொருள் என்பவை அவர்கள் வழிபட்ட இறைவன், அங்கு வாழும் மக்கள், அங்கிருக்கும் பறவை, விலங்கு, மரம், மலர், உணவு, அவர்கள் கொட்டும் பறை, மீட்டும் யாழ்,   பாடும்  பாட்டு      ( பண் ) என்பது போல அவர்களது வாழ்க்கைச் சூழலின் பின்புலமாக அமைந்திருப்பவை.

பள்ளிக்கூடத்தில் என் ஒன்பதாம் வகுப்பில்  முதல் கரு உரிப்பொருள்கள் என்று நான் மனப்பாடம் செய்திருக்கிறேன்.

தமிழகத்தில் உயர்நிலை வகுப்பு வரை தமிழ் படித்தவர்கள் எல்லோரும் இதைப் படித்திருக்கிறோம்.

என் பள்ளிப்பருவத்தில் தேர்விற்காகக் கடம் அடித்திருக்கிறேனே தவிர, இவற்றை எதற்குச் சொல்கிறார்கள்? ஏன் இதைப் படிக்க வேண்டும் என்கிற புரிதல் எனக்கு அன்று இருக்கவில்லை.

இது அந்தக் கால மக்களின் ஒழுக்கம்,வாழ்வியல் முறை,
சுற்றுச்சூழல் என்று அரிதாய் எந்த மாணவராலாவது எழுப்பப்பட்ட கேள்விக்கு அரிதினும் அரிதாய் ஓர்  ஆசிரியர் விடையளித்திருக்கலாம்.

நான் மிக மதிக்கும் என் ஆசிரியரோ “ உலக மொழிகளில் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் இருக்கலாம். ஆனால் வாழ்வியல் நெறிக்கு இலக்கணம் வகுத்த மொழி தமிழ். வாழும் நெறி இது என்று உலகிற்குக் காட்டிய குடி தமிழ்க்குடி“ என்றுதான் சொன்னார். அன்று அவர் மேல் இருந்த நம்பிக்கையில் நம்மவர்கள்தான் இந்த உலகையே கண்டுபிடித்தவர்கள் என்று சொன்னாலும் நான் அப்படியே நம்பியிருப்பேன்.

அப்போது அது பிரமிப்புதான்.

தொல்காப்பியப் பொருளதிகாரமும், அகப்பொருளும், புறப்பொருள் வெண்பாமாலையும் சுட்டுவது எல்லாம் தமிழ்ப்பாடல் மரபுகளையே..! அது வாழ்வியல் நெறிக்கொன்றும் இலக்கணம் வகுக்கவில்லை.

பாடல்களை அமைக்கவும் புரிந்து கொள்வதற்குமான வழிகளே இவை என்று புரிந்து கொண்டபோது பெரிதுபெரிதாய் என்னுள் பல பல வண்ணங்கள் காட்டி ஊதிப்பெருத்திருந்த ஒரு பெருமிதத்தின் குமிழி உடைந்து போனது.

பேருலகொன்றுடன் கலக்கும்  ஆனந்தம் சங்க இலக்கியங்களை அணுக  இப்படி ஒரு புதிய வழி இருக்கிறது என்பதைக் கண்டடைந்ததில் இருந்தது.

அந்தக்காலத்தில் மலை இல்லையா.. கடல் இல்லையா….மக்கள் இல்லையா என்று கேட்கலாம்.

இருந்தன...இருந்தார்கள்.

இலக்கியம் இருப்பதில் இருந்துதான் எழுகிறது.

அதன் வேலை இருப்பதை அப்படியே சொல்வதல்ல.

எனவே பொருளிலக்கணம் பண்டைய தமிழரின் வாழ்வியலின் இலக்கியத்திற்கு ஏற்ற ஒரு கோணத்தைப் பிரதிபலித்தாலும் அது காட்டும் பிம்பங்கள் முற்றிலும் உண்மை என்று உறுதிகூற முடியாது.

பொருள் இலக்கணம் பழந்தமிழர் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுக்கிறது என்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அதன்படியே  வாழ்ந்திருக்க வேண்டும் என்பதுதானே அதன் பொருள்?

புணர்ச்சி குறிஞ்சித் திணைக்கே வரையறுக்கப்பட்டால்
பிற முல்லை, மருதம் , நெய்தலில்  இருப்பவர்கள் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தார்களா என்ன?

வயல்வெளியில் ( மருதத்தில் வாழ்ந்தவர்கள் ) எப்பொழுதும் கணவனும் மனைவியும் ஊடல் செய்து கொண்டே இருப்பார்களா?

அது ஒரு பாடல் நெறி.

பாடலின் உருவத்தை யாப்புச் சட்டகத்தில் அடைப்பதுபோல் பாடலின் உட்பொருளைக் கட்டமைக்கவும் கணிக்கவும் உதவுகின்ற மரபு.

இந்தப் புரிதல்தான் நாம் சங்க இலக்கியங்களை அணுகுவதற்கு முதலில் அவசியமானது.

பண்டைய மக்களின் வாழ்வியல் அதில் இல்லையா..?

இருக்கிறது.

அதிலிருந்துதான் இலக்கியம் பிறக்கிறது. 

இத்திணைக்கு இந்த ஒழுக்கம் உரியது. இத்திணை இந்தக் காலவரம்பிற்குள் நிகழ வேண்டும் என்கிற கருத்து பாடலில் இருக்கலாம்.
அன்றைய மக்களின் வாழ்க்கை அப்படி இருக்கும். அந்த வாழ்க்கைக்கான இலக்கணத்தைத்தான் பொருளிலக்கணம் சொல்கிறது என்று பெருமை பேசித்திரிவதில் ஏதாவது நியாயம் உண்டா?



சென்ற பதிவில் எடுத்துக்காட்டப்பட்ட பாடலில், கேள்வி ஒன்று கேட்கப்பட்டது நினைவிருக்கலாம்.

அந்தப் பாடலின் கூற்றை,

தலைவி தோழிக்குச் சொல்வது போல அப்பாடல் அமைவது ஒருவாய்ப்பு.

தலைவி தனக்குத் தானே சொல்லிக்கொள்வதுபோல அமைவது ஒரு வாய்ப்பு, 
எனுமாறு இருக்கலாம் என்று சொல்லி

மூன்றாவதாய்,

இது ஏன்    தலைவியின் தாய் ( நற்றாய் ) தன் கணவனிடமும் மக்களிடமும் மகளின்  காதலைக் கூறி, தந்தையும் உடன்பிறந்தோரும் அவளைச் சூழ்ந்து கொண்டு, அவன் யார்? நீங்கள் திருமணம் செய்ததற்குச் சாட்சிகள் யார்? என்று கேட்டிருக்கக் கூடாது ? அப்படி ஒரு சூழலில் ஏன் அந்தப் பாட்டை அணுகக் கூடாது என்பதாய் அந்தக் கேள்வி இருந்தது.

அப்படி அந்தக் காலத்தில் நடந்திருக்கக் கூடாதா என்றால் நிச்சயம் இருந்திருக்கலாம்.

ஆனால் நம் சங்கப்பாடல் மரபில் அதுபோன்ற ஒரு சூழல் இல்லை.

தலைவி தன் காதலை நேரடியாகத் தன் தாயிடம் தெரிவிப்பதில்லை.

தாய் தன் ஐயர்க்கு அறத்தொடு நின்றதாக அது பாடுபொருளை அமைக்கவில்லை. ( விதிவிலக்கான ஓர் இடம் கலித்தொகையில் வருகிறது.)

எனவே இச்சூழலின்படி அந்தப் பாடலை நாம் அணுகுவதில் தடை இருக்கிறது.

அந்தக் காலத்தில் பாடலுக்கெனப் பின்பற்றப்பட்ட சில மரபுகள் இருக்கின்றன.

நமக்குக் கிடைத்திருப்பன சமுதாயத்தால் வடிகட்டப்பட்ட உன்னதங்கள்.

அவற்றை  மட்டும் வைத்துக்கொண்டு நாம் பழந்தமிழர் வாழ்வியலை மீட்டெடுத்ததாய்க் காட்ட முடியாது.

எனவே செவ்விலக்கியங்களின் படைப்பு, வாசிப்பு அனுபவம் பற்றித்தான் தொல்காப்பியம் மற்றும் பிற பொருளிலக்கண நூல்கள் கூறுகின்றனவேயன்றி, அவை தமிழரின் வாழ்வியல் நெறிக்கு வகுக்கப்பட்ட இலக்கணம், பழந்தமிழரின் வாழ்க்கை நெறிகளை அப்படியே பேசுகிறது  என்பது கற்பனைச் சுகம்தான்.

நமது விஷயத்திற்கு வருவோம்.

குறிஞ்சிக்கு நாம் பார்த்தது போலவே முதல் , கரு, உரிப்பொருள்கள் ஒவ்வொரு திணைக்கும் இருக்கின்றன.

எனவே,

பாடலில் வரும் நிலத்தையோ , பொழுதையோ ( இது முதற்பொருள் ), பாடலின் பின்னணியையோ ( இது கருப்பொருள் ), பாடலில் உள்ளே வரும் பாத்திரங்களின் மன உணர்வையோ ( இது உரிப்பொருள் )  கொண்டுதான் நாம் அந்தப் பாடல் எந்தத் திணையைச் சார்ந்து அமைகிறது என்று தீர்மானிக்க  வேண்டும்.

இதைத்தானய்யா சங்கப்பாட்டிற்கு உரையெழுதியவர்கள் சொல்லிவிட்டார்கள்.

அப்புறம் எதுக்கு நாம தேடிப் பார்க்கனும் என்றால்………..
உரையாசிரியர்கள் நமக்கு அவர்கள் கண்களால் கண்டதைக்  கூறுகிறார்கள்.

அது நமக்கு நிச்சயமாய் உதவுவதுதான்.

    ஆனால் நமக்கு இருக்கும் கண்களால் நாமும்  அதைப் பார்க்க வேண்டும் . ஒருவேளை உரையாசிரியர்களின் பார்வையில் எங்கேனும் அரிதாகக் கோளாறிருக்கலாம்.

அவர்கள் கூறி முடித்த உரைப்புள்ளியிலிருந்து நாம் அவர்கள் கூறாத பரிமாணங்களை மீட்டெடுத்துத் தொடரலாம். அப்படி என் வாசிப்பில் தோன்றியதுதான் குருகு தலைவன் என்றும் ஆரல் தலைவி என்றும் பார்க்கச் செய்தது.

இவை போன்றவற்றை இறைச்சி உள்ளுறை எனப்பேசும் உரையாசிரியர்கள் இந்தப் பாடலைப் பொருத்தவரை இவை பற்றிப் பேசவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களை மிகுந்த நயத்தோடு பொருள் கூறிச்சென்றவர்களும் இந்தக் குறிப்பிட்ட பாடலை இந்தப் பார்வையில் அணுகியிருக்கவில்லை.

அவர்களே இப்படிக் குறிப்பிடாத நிலையில், ஒவ்வொருவரும் தமக்குத் தோன்றியவாறு இட்டுக்கட்டிப் பொருளுரைக்கலாமா என்றால்,..., பிரதி அதற்கு இடம் தந்திருந்தால் அப்படிச் சொல்வதை மரபு அனுமதித்திருந்தால் சொல்லாம்.

     உரைகளின் வழியாகப் பாடலைச் சற்றுப் புரிந்து கொண்டபின்  ( இன்று பழைய உரைகளின் ..ஏன்.. உ.வே.சா. அவர்களின் உரையே கூட சாதாரணத் தமிழ் வாசகனை பயமுறுத்துகின்றன) அந்தப் பொருள் மட்டுமன்றி அந்தப் பாடலை அதன் தன்மையில் உள்வாங்கிக் காணவேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.

சென்ற பதிவில் நாம் பார்த்த குறுந்தொகை பாடலை முதன்முதலில் உரையெழுதிப் பதிப்பித்தவர் சௌரிப்பெருமாள் அரங்கன்.

 அதுவரை ஏடுகளில் இருந்த குறுந்தொகைப் பாடல்களுக்குக் கூற்று ( அந்தப் பாடல்களை யார் கூறியது என ) இருந்ததே ஒழிய இது குறிஞ்சி, முல்லை மருதம் … எனத் திணை வகுக்கப்படவில்லை. சௌரிப்பெருமாள் அரங்கன்தான் தன் புரிதலின் அடிப்படையில் அதற்குத் திணை வகுக்கிறார்.

அதன் பின்  டாக்டர். உ.வே.சாமிநாதையர் குறுந்தொகைக்கு உரையெழுதுகிறார். ( உ.வே.சா. உரையெழுதிப் பதிப்பித்த ஒரே சங்க நூல் இதுதான் ). அதில் சௌரிப்பெருமாள் அரங்கன் அவர்கள் ஒவ்வொரு பாடலுக்கும் இது குறிஞ்சி இது மருதம் எனத்  திணைகளை விளக்கிக் கூறியது போல் அய்யர் கூறவில்லை. அவரது குறுந்தொகையில் இப்பாடல் இந்தத் திணையைச் சார்ந்தது என்கிற திணைக்குறிப்பு இல்லை.

காரணம் என்ன எனத் தெரிகிறதா? யோசியுங்கள்.

இது ஒரு புறம் இருக்கட்டும்.

இங்கு முதற் கரு உரிப்பொருள்களின் அடிப்டையில் குறிப்பிட்ட பாடலின் திணையை வகுப்பதில்  ஒரு சிக்கல் வருகிறது

   குறிஞ்சிக்கு உரிய மயில் மருத நிலமான வயலில் வந்து அமர்ந்திருக்கிறது என்பதாக ஒரு சங்கப்பாடலில் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதே பாட்டில் சொல்லப்படுகிற உரிப்பொருள் ( மக்களுடைய ஒழுக்கம் ) ஊடல் சார்ந்ததாக இருக்கிறது. ஊடல் என்பது மருதத்திணைக்குரிய ஒழுக்கம்.

பாடலில் குறிஞ்சிக்குரிய கருப்பொருளான மயிலும் வருகிறது.
மருதத்திணைக்குரிய உரிப்பொருளான ஊடலும் வருகிறது.

இச்சூழலில் அந்தப் பாட்டைக் குறிஞ்சித் திணை என்று சொல்வதா மருதத் திணை என்று சொல்வதா ?

காத்திருங்கள்.
பின்குறிப்பு. ( சங்ககாலத்தில் திருமணத்திற்கு முன்  தலைவனும் தலைவியும் குறிஞ்சி நிலத்திலேயே ஒருவரை ஒருவர் சந்திப்பதாகவும், அவர்களின் உறவு அங்குத்  தொடங்கி உள்ளத்தாலும் உடலாலும் அவர்கள் இணைவதாகவும் சங்கப்பாடல் மரபு சொல்கிறது. அதைக் குறிக்கத்தான் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டது. அவர்களின் சந்திப்பும் காதலில் இன்றைப் போலவே அன்றைய அவர்களது அவத்தைகளும் அடுத்த பதிவில் ( பகவான்ஜியின் பின்னூட்டத்தில் இருக்கும் நியாயத்திற்காக  )

படங்கள்.
நன்றி.
1) காடு http://miriadna.com/

2) குறிஞ்சி. http://www.tamillemuriya.com/


3)    குவளை https://amudhankandasamy.files.wordpress.com/


4) வேங்கை http://opendata.keystone-foundation.org/


5) காந்தள் http://1.bp.blogspot.com

6)  தொண்டகப்பறை  http://ta.wikipedia.org/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

47 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    இன்றைய மனித வாழ்க்கையை சங்க இலக்கியங்களுடன் ஒப்பிட்டு மிக அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்
    பாடசாலையில் கல்வி கற்றது போல ஒரு உணர்வு ஐயா தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் ஒரு சங்க இலக்கிய பாடல் இருந்தால் அந்த பாடல் எந்த வகைக்குரியது என்பதை கண்டு பிடிக்கும் தன்மையை செம்மையாக சொல்லியுள்ளீர்கள் காத்திருக்கோம் அடுத்த பகுதிக்கு.. த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்.
      நீங்கள் அளிக்கும் ஊக்கம் பெரிது.
      எனக்கென்னமோ இந்த இடுகை பொருள் புரியும் படி இருக்கிறதா அல்லது மிகக் குழப்பி வைத்திருக்கிறேனா என்ற சந்தேகம் இன்னும் இருக்கிறது.

      தங்கள் முதல் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.

      என்ன நண்பர் கில்லர்ஜியின் இடத்தை நீங்கள் பிடித்துக் கொண்டீர்கள் :))

      Delete
  2. வணக்கம் அண்ணா.
    நல்ல அலசல். மீண்டும் வருகிறேன்..ஹைய்! நீங்க கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் தெரியுமே :))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாருங்கள் சகோ!
      உங்களைச் சென்ற பதிவிற்கே எதிர்பார்த்தேனே..!
      இளம்பூரணனும், நச்சினார்க்கினியனும் எல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டு ரத்தக் களறியாய்க் கிடக்கும் இடமல்லவா அது...!
      தயவு செய்து சஸ்பன்ஸ் வைக்காமல் அந்தப் பதிலை முதலில் கூறிவிடுங்கள்..!
      எல்லார்க்கும் உதவியாய் இருக்கும்!!!!! :))

      Delete
    2. அட ஆமாம் அண்ணா, வலைச்சரப் பதிவு எழுதிக் கொண்டிருந்ததால் அப்புறம் படிக்கலாம் என்று நினைத்தேன், விட்டுப்போய்விட்டது. பார்க்கிறேன் அண்ணா.
      கூறிவிடவா? மருதம். :)

      Delete
    3. நன்றி சகோதரி வருகைக்கும் பதிலுக்கும்..!

      உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

      ஆனால் அப்படி மட்டுமே கொள்வதில் சில சிக்கல்களைத் தடைகளைக் காட்டுகிறார்கள் உரையாசிரியர்கள்.

      விவாதிப்போம். :))

      Delete
    4. அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன் அண்ணா

      Delete
  3. செங்காந்தள் பூவை ரசித்தேன் ..#திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்.# என்ற தலைப்பு அருமை ,(பல்பு வாங்கினதை பெருமையாய் சொல்லிக்க முடியலே ):)
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      பகவானே.....

      உண்மையில் கண்களில் நீர்வரும் அளவிற்குச் சிரித்துவிட்டேன்.

      கல்யாணத்துக்குமுன் ஹனிமூன் போகும் இடம் விவரித்துக் கொண்டிருந்ததே மிக நீண்டு விட்டதால் போனவர்களைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டேன்.

      நிச்சயம் அடுத்த பதிவு அவர்களைப் பற்றித்தான்..!!!


      இனிமேல் இங்கு பல்பு விற்பதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திலும் நகைச்சுவையாய்ப் ( அதிலென்ன நகைச்சுவை உண்மைதானே ) பின்னி எடுப்பதற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  4. அன்புள்ள அய்யா,

    ‘திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்’.
    இந்தக் காலத் தேனிலவிற்குச் சுவிட்சர்லாந்த் போகச் சொன்னால் ... நீங்கள் சங்க காலத்திற்குக் கூட்டிச் சென்று விட்டீர்கள்! நீங்களும் திருமணத்திற்கு முன் நடப்பதத்தைதான் சொல்கிறீர்களா?
    ஓ... சிம்லா ஸ்பெசல்! திருமணத்திற்குப் பின் நடந்த தேனிலவு! இதை விட்டுவிடலாம்...!
    தொல்காப்பியம் திணைக்குரிய உரிப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்பதற்கு இளம்பூரணர் ஏனைய மொழிந்த பொருளோடொன்ற வைத்தல் என்னும் தந்திர உத்தியால் புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தலுக்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரியதாகவும் சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரியதாகவும் கொள்ளப்படும் என்று கூறுகின்றார் . குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்கு பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வவ்நிமித்தங்களுக்கும் உரியதென்று ஆராய்ந்துணர வேண்டும் என நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.

    அன்பின் அய்ந்திணைக்குரிய உரிப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் முதலியன அந்தந்தத் திணைக்குரியது என்றால் மலை, காடு, வயல், கடல், பாலை போன்ற மற்ற மற்ற இடங்களில் இருப்பவர்களுக்கு இந்த உரிப்பொருள் உரியது ஆகாதா? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததுண்டு!

    தங்களின் பதிவைப் பார்த்த பொழுது அதற்கு விடை கிடைத்தது. புணர்ச்சி குறிஞ்சித் திணைக்கே வரையறுக்கப்பட்டால்
    பிற முல்லை, மருதம் , நெய்தலில் இருப்பவர்கள் முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தார்களா என்ன?
    ஒரு முறை பேரறிஞர் அண்ணாத்துரை சொன்னாராம், “நானும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல... அவளும் படிதாண்டா பத்தினியும் அல்ல!”

    வயல்வெளியில் ( மருதத்தில் வாழ்ந்தவர்கள் ) எப்பொழுதும் கணவனும் மனைவியும் ஊடல் செய்து கொண்டே இருப்பார்களா?

    அது ஒரு பாடல் நெறி.

    பாடலின் உருவத்தை யாப்புச் சட்டகத்தில் அடைப்பதுபோல் பாடலின் உட்பொருளைக் கட்டமைக்கவும் கணிக்கவும் உதவுகின்ற மரபு.

    ஆமாம்... தாங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்றே கருதத் தோன்றுகிறது. காரணம் அது ஒரு பாடல் நெறி என்றால் சரியானதே!

    அவ்வாறு இல்லாமல் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்றால்... அப்படிச் சொல்லவது அபத்தமாகத்தான் தெரியும்... அல்லது தெரிகிறது! இத்திணைக்கு இந்த ஒழுக்கம் உரியது என்பது அதிகம் நிகழக்கூடியதை... அதற்கு வசதியாக இருப்பதற்காகக் கூறப்பட்டிருக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் எல்லாம் நிகழகக் கூடியதே வாழ்வியல் உண்மையாக இருக்கும் என்பதே உண்மை.

    குறிஞ்சித் திணைக்குரிய ஓர் அருமையான... அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியான விளக்கத்தை மலர்களுடன் பறையடித்துச் சொன்னது மிகவும் நன்றாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.

    காத்திருக்கிறோம்...தொடருங்கள்... தொடர்கிறோம்!
    -நன்றி.
    த.ம.6



    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.

      உங்களது பதிவாகும் அளவிற்கான பின்னூட்டம்......!!!!

      முதலில் உங்களின் சிரத்தைக்கும் இவ்வளவு தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள்.
      நானும் இதுபோலப் பின்னூட்டங்களை இடுவதுண்டு.
      உத்திகளைப் பற்றி ஒரு பதிவெழுதுங்களேன் .

      படிக்கச் சுவாரசியமாயும், படைப்பாளிகளுக்குப் பயன்படும் படும்படியாகவும் இருக்கும். :))

      தங்களைப் போன்ற தமிழாசிரியர்களிடம் நான் வேண்டுவது இதுதான்...

      மாணவர்களது தமிழறிவு வெறும் மனப்பாடக் கல்வியாய் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்குச் செல்லும் போது புத்தகங்களுடன் உதறிவிட்டுச் செல்வதாய் இருந்திடக்கூடாது.

      அவன் எந்தத் துறைக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்..

      எங்கிருந்தாலும் தன்மொழியின்மேல் லயிப்புடன் அவனை இருக்கச் செய்ய வேண்டும்.

      தமிழாசிரியர்களால் மட்டுமே ஆகக் கூடியது அது.

      உங்கள் கரங்கள் அதற்கு உதவும் என்கிற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!!

      Delete
  5. அருமை ஐயா...
    அழகான பகிர்வு.

    ReplyDelete
  6. படித்து முடித்து பட்டம் பெற்று வேலைக்கு போய் அக்கடான்னு உட்கார்ந்து இருப்பவனை மீண்டும் பள்ளிக்கு கூடத்திற்குள் இழுத்து உட்கார வைத்து உன் வாத்தியார் சொல்லி தந்ததைவிட நான் மிகவும் அருமையாக சொல்லி விளக்குகிறேன் என்று சொல்லி அழகாகவும் மிக எளிமையாகவும் அருமையாகவு பாடம் நடத்துகிறீர்கள் சபாஷ்.

    உங்கள் பதிவுகளில் ஒரு குறை கண்டுபிடித்து இருக்கிறேன் முடிந்தால் எழுத்தின் அளவை குறைக்கவும் அளவு 12 சைஸ்ஸுக்கு மேல் செல்ல வேண்டாம் என்பதுதான்

    ReplyDelete
    Replies
    1. அய்யா நீங்கள் எல்லாம் இருக்கின்ற சூழலில் இருந்து இதுபோன்ற பதிவுகளைப் படிப்பதே முதலில் எனக்கு மகிழ்ச்சிதான்.

      இதைப்படித்து என்ன ஆகப்போகிறது......?

      வாத்தியார் சொல்லித் தந்ததைவிட நான் நன்றாகச் சொல்லித் தருகிறேனா..!!!

      உண்மையென்றால் அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறென்ன...:))))

      நிச்சயமாகக் குறைகளைச் சொல்லுங்கள்.

      எப்போதும் அதை வரவேற்கிறேன்.

      எழுத்தின் அளவை அடுத்த பதிவிலிருந்து குறைத்துவிடுகிறேன்.
      12 க்கு மேல் செல்லவில்லை.

      வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள்.

      Delete
  7. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களே!!

      Delete
  8. நல்ல பதிவு விஜூ. நடைமுறையுடன் சேர்த்து, தேனிலவுக்குக் குளிர்சார் மலைக்குப் போகும் உளவியல் நடைமுறையை உடைத்துவிட்டீர்கள்.
    சங்க இலக்கியம் எல்லாம் நடந்திருக்குமா என்றால் “இ்ப்படி இருந்தால் நல்லது தானே”? என்று கற்பனை கலந்த எதார்த்தம் என்றே பலரும் சொல்கிறார்கள். அப்படியே மயில் மருதத்திற்கு வந்தால் இருக்கவே இருக்கிறது புறநடை. அப்படியே அன்பின் ஐந்திணை தாண்டி, கைக்கிளை, பெருந்திணை பற்றிய விளக்கங்களும் வாழ்வின் எதார்த்தங்களைப் பற்றிய ஆய்வு என்றே தோன்றுகிறது... எவ்வளவு நுட்பமான, இயற்கை சார்ந்த சிந்தனைகள். “புலனெறிவழக்கம்“ என்றாலும் அவ்வளவும் வாழ்வியல் விளக்கங்கள்தானே? பெரியவுங்க பெரியவுங்கதான்... நன்றி விஜூ.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.

      தங்களைப் போன்றவர்களின் ஊக்கமும் நெறிப்படுத்தலுமே நிச்சயமாய் நான் இது போன்ற பதிவுகளை எழுதக் காரணம்.

      சங்க இலக்கியங்களில் எனக்குள்ள அறிவு குறைவுதான்.

      மிகக்குறைவு.

      அதனால் என் பார்வைகளில் பிழை நேரலாம்.

      பெரும் தயக்கம் எனக்கு இந்தப் பதிவினைத் தொடர்வதில் இருக்கிறது.

      திணை வகுப்பதற்கான சிக்கல்கள். . .

      உள்ளுறை இறைச்சியை அடையாளங்காண்பதில் மிகப்பெரிய தமிழாளுமைகளுக்கு இடையே இருக்கின்ற கருத்து முரண்கள்....தெளிவின்மை

      எனது அறியாமை..........

      இவ்வளவுக்கும் நடுவில் நான் துணிந்திறங்கி இருப்பது

      தவறான பாதை யொன்றில் பயணிக்க உங்களைப் போன்றவர்கள் விட்டுவிட மாட்டீர்கள் என்கிற அசாத்திய துணிச்சலில் தான்.

      மிக மிகக் கவனமாகத் தரவுகளை ஆராய்ந்துதான் எழுதிப் போகிறேன் என்றாலும் கூட எனது புரிதலில் பிழை நேரலாம் என்கிற அச்ச உணர்வு எனக்கு உள்ளோடிக் கொண்டேதான் இருக்கிறது.

      தவறிருந்தால் நிச்சயமாய் அதை நீங்கள் சுட்டிக்காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையினால் நான் தொடர்ந்து போகிறேன்.

      நீங்கள் கூறியுள்ளது போல் அன்பின் ஐந்திணைகளைக் காட்டிலும் கைக்கிளை .பெருந்திணை என்பன யதார்த்தங்களைச் சித்தரிப்பனதான். இன்றளவும் அதுவே யதார்த்தம்.

      அதனால்தானோ அய்யா இலக்கணக்காரர்கள் அதற்கு நிலமும் பொழுதும் கருவும் இன்னதென்று விதந்து கூறாதிருப்பது...?

      இருப்பினும்,

      அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்
      கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்

      என இவற்றிற்கான இலக்கண வரையறையைப் பார்க்க, யதார்த்தமான இந்தக் கைக்கிளையையும் பெருந்திணையையும் கூட உயர்குலத்தினர்க்கு உரிய திணைகள் அல்ல இவை இழிசனர்க்குரியவை என்று கூறியிருப்பதுமான மரபுகளை நாம் யதார்த்தமாகக் கொள்ள முடியாதென நினைக்கிறேன் அய்யா!

      இன்னொரு கோணத்தில் பார்த்தால்,

      காமத்தின் பத்து அவத்தைகளில்

      1) காட்சி
      2) வேட்கை
      3) உள்ளுதல்
      4) மெலிதல்
      5) ஆக்கம் செப்பல்

      என்னும் ஐந்தும் அன்பின் ஐந்திணைகளில் வரும் கைக்கிளையோ என்று தோன்றுகிறது.

      விருப்பத்தைச் சொல்லியபிறகு தலைவி உடன் பட்டால் அது அன்பின் ஐந்திணைபாற்படலாம்.

      அவள் விரும்பாதபோதும் அவன் தொடர்ந்தான் என்றால் அதைப் பெருந்திணையின் பாற்படுத்தலாம்.

      ஆனால், இதை மீண்டும் குறிப்பிட்ட ஒரு பிரிவினர்க்கு மட்டும் என்பதாகவும் சான்றோர் மரபன்று என்றெல்லாம் ஒதுக்கிவைப்பது நீங்கள் சொன்னபடி யதார்த்தமற்ற புனைந்துரைக்காகவோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

      தங்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.

      நன்றி.

      Delete
  9. சங்ககாலச் சூழல், இயற்கை, சமூக நிலை, பண்பாடு என்ற பல பொருண்மைகளை மிகச் சிறந்த புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. சங்க காலம் தொடர்பான அரிய செய்திகளை அறியமுடிந்தது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. அருமையான பதிவு
    நாங்கள் படித்த காலத்தில் இதுபோல் சொல்லிக் கொடுக்கத்தான் ஆளில்லை
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா
      படிக்கின்ற காலத்தில் இதை எல்லாம் சொல்லிக் கொடுத்தால் நம் மாணவர்கள் “கெட்டுப்“ போய்விட மாட்டார்களா என்ன? :))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      Delete
  11. சிந்திக்க வைத்த கேள்விகள்...

    ஒவ்வொரு விளக்கமும் அழகு...

    பாடங்களை படிக்க காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி டிடி சார்!
      நீங்கள் தொடர்ந்து வருவதற்கும் கருத்துப் பதிவற்கும் வாக்களித்த ரகசியத்தைக் காப்பாற்றிப் போவதற்கும் :))

      Delete
  12. ஹை! திருமணத்திற்கு முன் தேனிலவா?!!! என்ன ஆசானே அது இப்போது போலல்லவா இருக்கின்றது!!? ம்ம்ம் காலங்கள் மாறினாலும், காதலும், ஊடலும், வாழ்க்கையும் மாறவில்லை என்பதைத்தான் அது சொல்லுகின்றதோ?! அப்படியென்றால் ஏன் நம் பெரியவர்கள் எப்போதும் "நாங்கல்லாம் அந்தக் காலத்துல இப்படியா இருந்தோம்...ம்ம் இப்ப உள்ள சிறுசுங்க எல்லாம் தறி கெட்டு அலையுதுங்க...காதல் கத்தறிக்காய்னு" என்று அங்கலாய்க்கின்றார்கள் ஆச்சரியம்தான். ஏதோ மாற்றம் வந்தது போல... உலகம் எவ்வளவுதான் தொழில்நுட்பமாக மாறினாலும், மனித மனங்கள் அப்படியேதான் உள்ளது போலத்தான் தோன்றுகின்றது..இல்லையோ

    ஆம் பாடல்களில் வரும் உரிப்பொருள், கருப்பொருள் எல்லாம் அன்று பள்ளியில் படித்தவைதான்.....//இது அந்தக் கால மக்களின் ஒழுக்கம்,வாழ்வியல் முறை,
    சுற்றுச்சூழல் என்று அரிதாய் எந்த மாணவராலாவது எழுப்பப்பட்ட கேள்விக்கு அரிதினும் அரிதாய் ஓர் ஆசிரியர் விடையளித்திருக்கலாம்.// உண்மை.....அதான் இப்போ நீங்கள் சொல்லித் தருகின்றீர்களே! கற்கின்றோம். எத்தனை வயதானால் என்ன நாம் எல்லோருமே மாணவர்கள் தான்....

    நல்ல ஆராய்ச்சி ஆசானே! திணைக் குறிப்பை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே..!
      இன்று சன் தொலைக்காட்சிச் செய்திகளில் நீலகிரி மலையில் வாழும் தோடர்கள் பற்றிய சிறப்புச் செய்தியை வழங்கினார்கள்.
      அவர்கள் திருமணம் என்பது கருவுற்ற பின்தானாம்..!
      உங்கள் பின்னூட்டத்தை அப்போது நினைத்துக் கொண்டேன்.

      சங்க காலத்திலும் பெரிசுகள் அப்படித்தான் சொல்லியிருக்கும்.

      இதே தலைவனும் தலைவியும் மணமுடித்தபின் வயதுக்கு வந்த தன் மக்களிடம் ““ நாங்க எல்லாம் அந்தக் காலத்தில எப்படி இருந்தோம்னா..“
      என்றுதான் சொல்லியிருப்பார்கள்.

      அதுதான் எதார்த்தம்.

      இலக்கியம் அதை அப்படியே பதிவு செய்வதில்லை.
      ஏனெனில் அது ரசித்தவன் ஒருவனால் ரசனை உடையவர்க்காக எழுதப்படுவது.

      அந்த ரசனை காலத்தால் வகுக்கப்பட்ட அதற்கென இருக்கும் தனித்த அடையாளங்களுடனான விழுமியங்களால் ஆனது.
      காதல் கொண்ட நாயகனும் நாயகியும் பாடல் ஒன்றைப் பாடி ஆடும் திரைப்படம் போல. நம் சமுதாயத்தில் காதலிக்கும் யாராவது அப்படிப் பாட்டுப் பாடி ஆடியதுண்டா?
      நிஜத்தில் இல்லாத புனைவில் மட்டுமே இருக்கக் கூடிய விடயம் அது.

      சங்கப்பாடல்களும் இதனோடொத்ததுதான்..!

      பிறன் மனை நோக்கல் அங்கில்லை.

      தலைவியை ஏமாற்றித் திருமணம் முடிக்காமல் சென்ற அல்லது ஒருத்தியைக் காதலித்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட தலைவனை நீங்கள் சங்க இலக்கியத்தில் எங்கும் காண முடியாது.

      ஏனெனில் அது பெரும்பாலும் அன்றைய வாழ்வின் இலட்சியங்களை உன்னதங்களைத் தன்னுள் வடிகட்டி வைத்திருக்கிறது.

      இதன் மறுபக்கத்தையும் பாடுவேன். என்னை என்ன செய்ய முடியும் எனச் சில புரட்சிப் புலவர்கள் எழுந்திருக்கலாம்.

      அன்றைய சமுதாயம் அப்படைப்பின் கழுத்தினைத் திருகித் தூர எறிந்திருக்கும். சான்றோர் பாடல் சான்றோர் பாடல் என்று காலகாலமாய்ப் புகழந்துரைக்கும் தமிழ்ப்புலமை மரபு அது போன “ஈனமான“ பாடல் ஏதாவது இருந்தால் அதை விட்டுவைத்திருக்குமா என்ன..?


      இங்குச் சங்கப்பாடல்களைத் தொகுத்தோரின் ரசனை, அவர்களுடைய சித்தாந்தங்கள், கருத்தியல் போன்றவைகளும் குறிப்பிட்ட பாடல்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றவற்றை நிராகரித்தல் என்பதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

      நமக்குக் கிடைப்பவை, இது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தமிழ்மரபு நமக்கு விட்டுச் சென்றிருப்பதைமட்டும்தான்.

      நிகழ்த்து கலைகளில் புழங்கப்பெற்ற கலி பரிபாடல் போன்ற வடிவங்களில் ( குறிப்பாகக் கலித்தொகை ) மெல்லச் சங்க இலக்கியம் கட்டிக்காத்த கண்ணிய மரபுகள் நெகிழத் தொடங்கி இருப்பதை அம்மரபின் தொடர்ச்சியூடாக நாம் அவதானிக்க முடியும்.

      தணிக்கை செய்யப்பட்ட கெட்ட வார்த்தைகள் அதில் உள்ளன.
      சங்க இலக்கிய அகத்திணை மரபில் பிற இடங்களில் நாம் காண முடியாத காட்சிகள் அதில் கிடைக்கின்றன.

      மனித மனங்களும் இயல்பும் அப்படி உள்ளதுதான் ஆசானே!

      நான் சொல்லித் தருகிறேனோ இல்லையோ படிக்கப்படிக்க விரியும் பிரமாண்டத்தில் திகைத்துப் போகிறேன்.

      நன்றி.

      Delete
    2. //இதன் மறுபக்கத்தையும் பாடுவேன். என்னை என்ன செய்ய முடியும் எனச் சில புரட்சிப் புலவர்கள் எழுந்திருக்கலாம். அன்றைய சமுதாயம் அப்படைப்பின் கழுத்தினைத் திருகித் தூர எறிந்திருக்கும். சான்றோர் பாடல் சான்றோர் பாடல் என்று காலகாலமாய்ப் புகழந்துரைக்கும் தமிழ்ப்புலமை மரபு அது போன “ஈனமான“ பாடல் ஏதாவது இருந்தால் அதை விட்டுவைத்திருக்குமா என்ன..?// - உண்மைதான். ஆனால், ஐயா, தமிழர் தங்கள் பெருமை பாடத் தொடங்கிய காலம் தொட்டே அவர்களைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகளும் நடந்து வந்திருப்பதை நாம் காண்கிறோம். சங்க காலத்துக்குப் பின்னான பண்பாட்டுப் படையெடுப்பில் ஆரியர்கள் தொடர்ந்து தமிழர்களையும் அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் காட்டுமிராண்டித்தனமாகச் சித்தரித்து வந்திருக்கிறார்கள். எனவே, அப்படி ஏதேனும் பாடல் இருந்திருந்தால் அதை அவர்கள் எடுத்துக்காட்டாமலா, பயன்படுத்திக் கொள்ளாமலா இருந்திருப்பார்கள்? இப்படியும் சிந்திக்கலாம் இல்லையா?

      (ஞானப்பிரகாசன் பற்றி ஞானப்பிரகாசனின் மனக்குரல்: கொஞ்சம் ஓவராத்தான் போயிக்கிட்டிருக்கோமோ!... போவோம்... என்ன பண்ணிருவாய்ங்க!)

      Delete
    3. அய்யா
      வணக்கம்.
      தங்களிடம் இரண்டு விளக்கங்களைப் பெற விரும்புகிறேன்.

      1) ஆரியர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் ?

      2) அவர்கள் எங்கு தமிழர்களின் வாழ்க்கை முறையைக் காட்டுமிராண்டித்தானமாகச் சித்தரித்திருக்கிறார்கள் ?

      இவ்விரண்டும் அறியாவினாதான்.

      இதற்குப் பதில் தெரிந்தால் சங்க இலக்கியத்திலிருந்து நீங்கள் கேட்ட வினாவிற்கு எனக்குத் தெரிந்ததைக் கூறமுடியும்.

      நன்றி

      Delete
  13. குறிஞ்சியைப் பற்றி இவ்வளவு விரிவாக எடுத்துரைத்ததுக்கு நன்றி ஆசானே.
    இப்படியெல்லாம் பொருள் உணர்ந்து அன்றைக்கு படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் தான் இப்போது வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லாம் நீங்கள் பொருள் உணர்வீர்கள் என்றால் ஒன்பதாம் வகுப்பிற்குப் போய் இதைப் பாடமாய் இன்றும் வைத்திருப்பார்களா அய்யா?
      :))

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  14. எடுத்தோம் படித்தோம் என்றில்லாமல் இத்தனை! ஆழமாக ஒரு கருத்தை அலச முடியுமா ? என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது தங்கள் பார்வை. உண்மையில் கை கட்டி வாய் பொத்தி அமர்ந்து கேட்காதது தான் குறை. அத்தனை ஆர்வத்துடன் கற்கிறோம். தொடருங்கள் சங்க காலத்தை நேசிக்கத் தொடங்குவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. செவிவாயாக நெஞ்சு களனாகக் கேட்பவை கேட்பவை விடாதுளத்தமைக்க இது அந்தக் காலம் இல்லையே கவிஞரே....!

      நானொருவன் இப்படிச் சொல்லிவிட்டேன் என்பதற்காக நீங்கள் அப்படியே ஏற்க வேண்டுவதில்லை.

      நிச்சயமாக இந்தப் பதிவிற்குக் கடும் விமர்சனங்களை எதிர் நோக்கினேன்.

      அது வரவில்லை.

      மாற்றுக் கருத்திருப்பின் மறக்காது கூற உங்களைப் போன்ற மரபில் இயங்குபவர்களிடம் வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  15. சங்கப் பாடல்களைப் புரிந்து கொள்வது எப்படி எனத் தொடர் எழுதுவதாகக் கூறிவிட்டு, அதைத் தமிழின் பெருமை பேசும் தொடராக மட்டும் இல்லாமல், நாம் அதைப் புரிந்து கொண்டுள்ள விதத்திலிருக்கும் தவற்றையும் சுட்டிக்காட்டத் தொடங்கியிருக்கிறீர்கள் தங்களுக்கேயுரிய வழக்கப்படி. பெரும்பாலானவர்கள் இப்படி இல்லை ஐயா. தமிழையும் தமிழரையும் இவற்றின் பெருமையையும் அணுவளவும் குன்றிவிடாமல்தான் எதையும் கூற வேண்டும் என நேர்ந்து கொண்டிருக்கும் தமிழார்வலர்களுக்கு இடையில் தங்களைப் போன்ற சிலரும் இருப்பது எனக்கொரு துணை. மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!

      சங்கப்பாடல்கள் என்பன தமிழ்மரபின் தனித்த அடையாளம்.

      இதுபோன்ற நெறிகளைக் கொண்டு அமைந்த இலக்கியத்தை வடமொழி அறிந்திருக்கவில்லை.

      வடமொழியிலிருந்துதான் தமிழ் இலக்கியங்கள்..... அதன்பால் இல்லாததிவ் வுலகில் இல்லை என்று பெருமை பேசுபவர்கள் சங்கப் பாடல்களின் நாம் பார்க்கும் இந்தப் பாடல்மரபின்முன், உள்ளுறை இறைச்சி என விளங்கும் அதன் பொருட்செறிவின் முன் வாய்மூடி மௌனமாய்ப் போவார்கள்.

      இணையத்தில் நான் கண்டு மிரண்டு போன விடயங்களில் ஒன்று தமிழை அதன் பெருமையைக் காப்பதாகச் செய்யும் மிகமிக அபத்தமான களேபரங்கள்.

      எந்த நகைச்சுவைத் துணுக்கையும் விடப் படிப்போரை அதிகம் சிரிப்பூட்டக் கூடியவை அவை.

      கிரீடங்களைச் சூடி, பின்னால் ஒளிவட்டம் வரைந்து தமிழை வழிபடுவதைவிட நாம் பேசும் மொழிபற்றிய நடுநிலையான பார்வை , அதன் மரபுகள் ஏன் எதற்கு என்று விளங்கிக் கொள்ள முயல்தல்.
      இன்றைய தலைமுறைக்கு ஆகச்சுவையாக விளக்குவதன் நம்மொழியின் கருவூலங்களை விளக்குவதன் மூலம் அவர்களுக்குச் சொந்தமானது மற்றவர்க்குச் சளைத்தன்று என்கிற உணர்வை ஏற்படுத்தித் தமிழ்பால் அவர்தம் கவனத்தைத் திருப்புதல் எனுமிவற்றையே விரும்புகிறேன்.
      போலிப் பெருமைகளால் நாம் பகடி செய்யப்படுவதைப் பார்க்கிலும் இருப்பது என்ன என அறிந்து அதை உலகிற்குக் காட்டினாலே போதும் தமிழ் பேசுபவர்களை மட்டுமல்ல... பிறரது கவனத்தையும் அது ஈர்க்கும்.
      ( இதற்கு முன்பும் ஈர்த்திருக்கிறது.) என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  16. வணக்கம் சகோ!
    ஆற்றின் இடுப்பை ஒடித்து ஓலமுடன் பாயும் அருவி, வெண்பூவாய் பூத்திருக்கும் மேகம் போர்த்திய முகடு என குளு குளு மலையின் இயற்கை வர்ணனை வெகு அழகு!
    நான் பள்ளியில் படித்த அந்தக்காலத்தில் என் தமிழாசிரியரும் வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவன் தமிழன் என்று பெருமிதமாகச் சொன்னார்.
    நானும் எதுவும் புரியாமல் ஆமோதித்து மண்டையை ஆட்டினேன். அன்று துவங்கி இன்று வரை எத்தனையோ முறை இதே வசனத்தைப் பல ஏடுகளிலும் புத்தகங்களிலும் வாசித்துவிட்டேன்.
    உங்கள் பதிவு தான் உள்ளது உள்ளபடி எடுத்துரைத்திருக்கின்றது.
    அதற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நடுநிலையில் நின்று திறனாய்வு நோக்கில் சங்க இலக்கியத்தை அணுகும் உங்கள் பார்வை இக்காலத்துக்கு அவசியம் வேண்டும். நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்!
    நீங்கள் சொன்னதிலிருந்து நான் புரிந்து கொண்டது இதுதான்:-
    சங்க காலத்தில் நிலத்தை ஐந்தாகப் பிரித்து ஒவ்வொரு நிலத்துக்கும் அதன் தன்மைக்கேற்ப ஓர் ஒழுக்கத்தை பாடல் நெறிக்காக வகைப்படுத்தியுள்ளனர்.
    எ.கா:- குளிர்பிரதேசமான குறிஞ்சிக்குக் கதகதப்பூட்டும் புணர்ச்சி, ஏற்கெனவே அனலடிக்கும் மருதத்துக்கு ஊடல்.
    மருதத்தின் ஒழுக்கம் ஊடல் என்பதால் அங்கு வாழ்பவர் அனைவரும் எந்நேரமும் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள் என்ற அர்த்தமில்லை.
    எனவே இலக்கியத்துக்கான வரைமுறைகளை வகுக்கத் தான் இந்த ஒழுக்கவிதிகளே யொழிய, இவையே வாழ்வின் இலக்கணமாகாது.
    எல்லா நிலங்களிலும் எல்லா ஒழுக்கமும் இருக்கும். இதுவே இயற்கையின் நியதி இது வாழ்வின் இலக்கணமாகாது என்ற பேருண்மை இன்று தான் எனக்குப் புரிந்தது. இந்தத் தெளிவை ஏற்படுத்திய உங்களுக்கு என் நன்றி.
    உங்கள் கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை.
    மயில் வந்தாலும், ஊடல் இருந்தாலும் அது எங்கு நிகழ்கிறதோ அந்த நிலத்தைப் பொறுத்தே (முதற் பொருள் என்பதால்) திணை வகுக்கப்படும் என்பது என் யூகம். சரியா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
    அருமையான தொடருக்குப் பாராட்டுக்கள். தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!
      தங்களின் வருகையை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேனோ இப்போதெல்லாம். :))


      என் பதிவுகளில் இருந்து நீங்கள் மேற்கோள் காட்டும் வரிகளை நினைக்கும் போது உவமையின் பயனாக இலக்கணம் சுட்டும் பகுதிதான் நினைவுக்கு வருகிறது.

      1) புலன் அல்லாதன புலனாக்கல். ( புலப்படுத்த முடியாததைப் புலப்படுத்துதல் )

      2) கேட்டார்க்கு அலங்காரமாகி இன்பம் பயத்தல்.

      நீங்கள் இவ்விரண்டுள் எதனால் கவரப்பட்டீர்களோ தெரியவில்லை.

      ஆனால் எதனாலெனினும் மகிழ்ச்சிதான் எனக்கு.

      எனக்கும் உங்களுக்கும் மட்டும் அல்ல இன்றைய வகுப்புகளில் இப்பகுதியைப் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கும் அப்படித்தான் சொல்லித்தரப்பட்டுக் கொண்டிருக்கிறது இன்னமும்.

      இதைச் சொல்லும் போது மரபில் இருந்து பெரிய எதிர்ப்புக்குரல் எழலாம் என்று நினைத்தேன்..

      தமிழ்ப்பதிவுகளைப் படிப்பதும் விவாதிப்பதும் என்று மாறிவிட்டால் தான் தமிழ் வளர்ந்துவிடுமே..!!!

      சங்க இலக்கிய வாசிப்பிற்கான மிகச்சிறிய புரிதல் எனக்குள் இருக்கிறது.

      அதை எப்படிச் சொல்வது என்பது இன்னும் மலைப்பாகவே இருக்கிறது.

      உங்களைப் போன்றவர்கள் அதற்குத் தரும் ஊக்கம் பெரிது.

      இவ்வளவு சிரத்தை எடுத்து நீங்கள் பின்னூட்டம் இட்டிருக்கின்றமைக்கு நன்றி.

      திணை வகுத்தல் அதில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி நிச்சயம் விவாதிப்போம்.

      சற்றுப் பொறுமையாக....!

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

      Delete
  17. அருமையான தொடருக்கு த.ம வாக்களிக்க மறந்து விட்டேன். இப்போது அளித்து விட்டேன்.

    ReplyDelete
  18. வணக்கம் ஊமைக்கனவுகள் !

    அடடா பழைய நினைவுகள் போல என்றோ கற்றுக் கொண்டவைகள் நெஞ்சில் மீண்டும் ஒளிர்கிறது ஆனாலும் தலைகளை மட்டுமே ஆட்டிக் கொண்டு படித்தவைகளை இப்போ சிந்திக்க வைக்கிறது இப்பதிவு ...தொடரட்டும் இன்னும் கற்க ஆசையாகவே இருக்கிறது !

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி கவிஞரே!

      Delete
  19. தங்கள் விளக்கம் மிக அருமை. தங்களின் ஒரு கருத்தோடு ஒத்துப்போகிறேன்.உரையாசிரியர்கள் உரைகளை நான் ஒதுக்க வில்லை. ஆனால் மாற்றி யோசித்தால் என்ன? என்று. சிலப்பதிகாரம் காலம் விவாதத்துக்கு உள்ளது. சிலப்பதிகாரம் ஓர் ஆரிய மாயை என்றும் கூறுவர். எது எப்படியோ, என் முனைவர் பட்ட ஆய்வு சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை.அதற்காக ஆய்வு மேற்கொண்ட போது என்னால் உரையாசிரியர்கள் வழி ஒத்து நிற்க இயலவில்லை. ஆனால் பட்டத்திற்காக????????, இனி பேசலாம் என்று. மாற்றி யோசிக்க அடியார்க்கு நல்லார் அரும்பதர் இவர்கள் காலம் ,,,,,,,,,,,,,, அய்யோ நான் வேறு வழி செல்கிறேனா? நாம் மாற்றி யோசித்தால் என்ன? பொருள் மாற்றி அல்ல,,,,,,,,,,,,, அவர்களின் மனநிலை தான் பெரும்பாலும் தெரியும் படைப்புகளில்.
    ஈசனின் கூந்தல் வாசம் பிரச்சனை கொங்கு தேர் ,,,,,,,,,,,,,,,,,,,, எனும் பாடல்.
    தாங்கள் சொல்வது போல் ஒரு செயலைப் பற்றி சொன்னால் நாள் முழுவதும் அப்படியே என்று இல்லை.

    அந்த கேள்வி ஏன் தாங்கள் அறியாததா? சரி,
    தங்களின் மற்ற படைப்புகளை பார்வையிட்டு பின் வருகிறேன்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி.
      தாங்கள் முனைவர் பட்ட ஆய்வினைத் தமிழில் மேற்கொண்டவர் என்றறிய மிக்க மகிழ்ச்சிதான் எனக்கு.
      தங்களைப் போன்றோர் என் தளம் வருவதும் கருத்துரைப்பதும் நானுற்ற பேறுதான்.
      உரையாசிரியர்கள் கூறுவதை அப்படியே கொள்ள வேண்டும் என்று நான் எந்த இடத்திலும் கூறவில்லை.

      அவை நாம் அந்தப் பாடலை அணுக முதன்மைத் துணை ஆவன.

      அவை இல்லாவிட்டால் பல சொற்களின் பொருள் கூட நமக்குப் புலப்பட்டிருக்காது.

      அவை மூலம் நுழைந்து பின்னர் அவர்களின் வாசிப்பை நம் அனுபவம் கொண்டு கடந்து போக வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. இதற்கு முந்தைய பதிவின் பாடலிலும் நான் கூறியிருப்பது என் மனதிற்குத் தோன்றிய புலப்பாடுதான்.
      அதை உ.வே.சா . அவர்களோ சௌரிப்பெருமாள் அரங்கனோ கூறவில்லை.
      ஆனால் நான் அந்தப் பாடலினுள் அவர்கள் காட்டிய உரைவழியாகத்தான் நுழைய முடிந்தது என்பதுதான் உண்மை.

      கொங்குதேர் வாழ்க்கை அதைப் பற்றி விரிவாக ஒரு பதிவு இட வேண்டும்.
      தங்களைத் தொடர்ந்து வந்து கருத்துரைக்க வேண்டுகிறேன்.
      நன்றி

      Delete
  20. “பழந்தமிழ்ப் பாடல்கள் எந்தெந்த சப்ஜெக்ட் பற்றிப் பாடுகின்றன என்பதைத் தொகுத்து, வகைப் படுத்தி, திணை, துறை முதலிய பெயர்களைச் சூட்டி, விளக்குவதுதான் பொருளதிகாரம். (அது வாழ்க்கையின் இலக்கணம் அல்ல).”

    நீங்கள் தொல்காப்பியம் பற்றி இப்பதிவில் சொன்ன இதே கருத்தை வலியுறுத்தும் பதிவினை இன்று இலக்கியச் சாரல் தளத்தில் வாசித்தேன். நீங்களும் அவசியம் வாசியுங்கள்.
    இணைப்பு:- http://sgnanasambandan.blogspot.in/2014/04/blog-post_19.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி.
      நான் இதை இப்போதுதான் பார்க்கிறேன்.
      மரபார்ந்த அறிஞர்களிடம் இருக்கின்ற இதுபோன்ற புரிதல் தமிழுக்கு நல்லது.
      இலக்கண உரையாசிரியர்களிடம் இந்தப் பார்வை இருக்கிறது.

      இந்தப் பதிவை எழுதும் போது அய்யாவின் பதிவைப் பார்க்கத் தவறிவிட்டேன்.

      இருப்பின் இதைக் குறிப்பிட்டிருக்கலாம்.

      தகவலுக்கு மிக்க நன்றி சகோ!

      தாமதப் பதிலுக்கு மன்னிக்க!

      நன்றி

      Delete

  21. வணக்கம்!

    கற்பும் களவும் கமழும் தமிழ்நெறியைப்
    பற்றுடன் ஏந்தும் படைப்பிது! - பொற்புடன்
    சொல்லும் உரையுணர்ந்து சொக்குகிறேன்! இப்பதிவு
    ஒல்லும் மனத்துள் ஒளிர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete