Monday, 24 November 2014

பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு…!

பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுகிறோம், அதற்குத் தமிழில் இலக்கணம் இருக்கிறதா என்று மணவையார் சென்ற பதிவில் கேட்டிருந்தார். ஒரு பேச்சிற்காய் இருக்கிறது என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தால் மீண்டும் எப்பொழுது சொல்வீர்கள் என்று கேட்டு விட்டார். தினமும் பார்க்க வேண்டியவர். இனித் தப்பிக்க முடியாது என்று நினைத்து முதலில், பல பிரபலப் பதிவர்களின் தளங்களுக்கு உள்ளே போய்ப் பின்னூட்டங்களை மட்டும் படித்துத் தேவையானதை நகலெடுத்து அப்படியே கணினியில் சேமித்துக் கொண்டிருந்தேன். அடுத்த “காப்பி“ வருவதற்குள் இதை முடித்துவிடவேண்டும்.

பதிவர்களின் பெயர்களையோ பதிவுகளையோ, பின்னூட்டங்களையோ இங்குக் குறிப்பிடாமல், நான் கண்ட அந்தப் பின்னூட்டங்களின் இயல்புகள் இப்படி இருந்தன என்று பார்த்து அவற்றை ஏதேனும் பொது வகைமையின் கீழ்க்கொண்டு வரமுடியுமா? ஏதேனும் இலக்கணக் கொள்கைகளை இதற்குப் பொருத்திக் காண முடியுமா என்று பார்ப்பதற்கு ஒரு நாளாயிற்று.  நான் பார்த்த பின்னூட்டங்களின் அடிப்டையிலும், எனக்குத் தெரிந்த இலக்கணக்கொள்கையின் அடிப்படையிலுமே இவற்றை ஒழுங்கு படுத்துகிறேன். இந்த வரம்பு தாண்டி எவையேனும் இருக்குமானால் கூடுதல் செய்திகளைக் கூற நமது நண்பர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்களே என்ற நினைப்பில் பொதுமையைப் பகிர்கிறேன்.


  1) முதலில் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் பதிவின் கருத்துகளுக்குத் தன்னுடைய   உடன்பாட்டைத்   தெரிவித்துப்      பின்னூட்டமிடுவது      ( கருத்துகளைப் படிக்காமலேயே “ஆகா“ “அருமை“ “சிறந்த பதிவு“  என்று வாழ்த்திச் செல்லும்  பின்னூட்டங்கள் இதில் சிறப்பு வகை. படிக்காமல் இடப்பட்டவை என்பதை எப்படிக் கண்டுபிடித்தேன் என்றால் ஒரு பதிவர் பகிர்ந்திருந்த இரங்கல் செய்திக்கும் ‘ஆகா பின்னூட்டக்காரர்‘ ஒருவரால்     “ ஆகா! அருமை “ என்று பின்னூட்டம் இடப்பட்டிருந்ததைக் கண்டுதான்.
 வந்தோம் என்பதற்கு அடையாளமாய். இது போல் படிக்காமல் பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாகப் பின்னூட்டமே  இடாமல் இருந்துவிடலாம் என்பது எனது தனிப்பட்டக் கருத்து. படித்துச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவராய், ஆகா அருமை என்பது இருந்தால் வாழ்த்துவோம் ) இந்த வகைப் பின்னூட்டங்களை உடன்படல் என்னும் வகையில் வைக்கலாம்.         ( உடன்படல் )

2) இரண்டாவது கொஞ்சம் தைரியமாகப் பதிவில் சொல்லப்பட்ட கருத்துகளை மறுத்தல். இதற்கு முதலில் அதிக நெஞ்சுரம் வேண்டப்படுகிறது. அத்தோடு எதை மறுக்கின்றோமோ அது பற்றிய அறிவும் வேண்டும். பெரும்பாலோனவர்களிடம் மாற்றுக் கருத்துள்ள இடத்தும் அதைச் சொன்னால் பதிவர் மனம் புண்படுமே என்பதற்காக “ எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு அருமையாக எழுத முடிகிறது“ என்பது போன்ற பாராட்டை அளிக்கும் “நயத்தக்க நாகரிகம்“ இருக்கிறது. இதைக்கேட்டுப் புளகாங்கிதம் அடையும் பதிவர்களும் “இடிப்பாரை இல்லா ஏமரா மன்னர்களாக“ மணிமுடி தரித்துக் கோலோச்சுகின்றனர். இன்னொரு புறம் அக்கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ அதைத் தன் பதிவின் பின்னூட்டத்தில்  அனுமதிப்பதற்குப் பதிவருக்கும் மனம் இருக்க வேண்டும். பின்னூட்டக்காரர்களின் இம்முயற்சியை “மறுத்தல்“ என்ற வகையில் வைக்கலாம்.( மறுத்தல் )

3)அடுத்துப் பதிவில் உள்ள கருத்துகளில் ஒரு சிலவற்றை அங்கீகரித்தும் ஒரு சில கருத்துகளை மறுத்தும் செல்கின்ற பின்னூட்டம். ( பதிவின் சில கருத்துகளை ஏற்றல். சிலவற்றை மறுத்தல்)

4)அடுத்து பதவில் கூறியுள்ள கருத்துகளை மறுப்பதோடு நின்று விடாமல் எது சரியான கருத்து எது, அதற்கு ஆதாரம் என்ன என்பதை விளக்கித் தனது தரப்பை நிரூபித்தல். ( பதிவிற்கான மறுப்போடு மட்டும் நின்று விடாமல் எது சரி என்ற தனது எண்ணத்தைச் சான்றுகளோடு நிறுவுதல்)

5) இருவேறு கருத்துகொண்ட பதிவர்களிடையே ஏதேனும் ஒருவர்         சொல்வது சரி, என ஏற்றுக் கொண்டு ஓர் அணியைச் சார்ந்திருத்தல்.  அவர்களுக்கு மட்டுமே பின்னூட்டமிடுதல். மாற்றணியினரை  வசை பாடுதல் . அல்லது பொருட்படுத்தாமல் போகுதல். ( இரண்டு அணியில் ஏதேனும் ஒரு அணியினர் சொல்வது சரி என்று அவரைச் சார்ந்திருத்தல் )

6) பதிவுகளில்  உள்ள சொற்பிழை, பொருட்பிழை இவற்றைப் பின்னூட்டத்தில் சுட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருத்தல். ( பிறர் பதிவின் குற்றம் காட்டல்)

7) பதிவின் கருத்தோடு உடன்படாமல், அதற்கான காரணங்களையும் முன் வைக்காமல், போதுமான அறிவார்ந்த விளக்கம் அளிக்கப்பட்டிருந்தும் ஏற்காமல் “நீ என்ன சொன்னாலும் சரி,என் முயலுக்கு மூன்றுகால்“ என்ற வகையில் இருக்கும் பின்னூட்டங்கள். 
( பிற கருத்துகளை ஏற்காமல் தன் நிலையிலிருந்து மாறாமல் அதிலேயே தொடர்ந்து நிற்றல்)

இன்னும் வேறேதேனும் வகை இருக்கிறதா எனத் தெரியவில்லை.
வசதிக்காகத் தமிழ் கூறும் கொள்கைகளுடன் இவற்றைப் பொருத்தி  பின்னூட்டங்களை வகைப்படுத்த முயற்சியே இது என்பதை முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்.

இனி இலக்கணம்,

எழுவகை மதமே உடன்படல் மறுத்தல்
 பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
 தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
 இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
 பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப்
 பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே“ ( விருத்தி & நன்னூல் -11 )


மதம் என்பதற்குக் கொள்கை என்பது பொருள்.

1) உடன்படல் -  பிறர் கூறுவதை ஏற்றல்

2) மறுத்தல்   - பிறர் கூறுவதை மறுத்தல்

3) பிறர்தம் மதமேற் கொண்டு களைவு – பிறர் கொள்கையை ஒருவாறு அங்கீகரித்துப் பின் மறுத்தல்.

4) தாஅன் நாட்டித் தானாது நிறுப்பு – தானே ஒரு பொருளைக் காட்டி  அதனை  நிலை நிறுத்துதல்

 5) இருவர் மாறுகொள் ஒரு தலை துணிவே -  இருவர் மாறுபடுகின்ற     இரு வேறு கருத்துகளுள் ஒன்றை நீக்கி மற்றொன்றே சரி என்று       எடுத்துக் கொள்ளுதல்.

  6) பிறர்நூல் குற்றம் காட்டல் – பிற நூல்களின் குற்றத்தை எடுத்துக்     காட்டுதல்.
  7) பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல் – பிற கருத்துகளை          ஏற்காமல்   தன் கொள்கையில் நிலைத்து அதுவே சரியென்று    கூறுதல்.

உண்மையில் இதை நீங்கள் எந்தப் பதிவுக்கும் எந்த ஒரு நூலுக்கும் பொருத்திப் பார்க்கலாம். என்ன......... பின்னூட்டங்களுக்கு இதனைப் பொருத்திப் பார்க்கவேண்டிய நெருக்கடி எனக்கு! இதனுள் ஏதேனும் ஒன்றுள் எந்த நூலையும் எந்த பதிவையும் வகைமைப் படுத்த முடியும் எனவே நினைக்கிறேன்.

பின்னூட்டங்களுக்கு இலக்கணம் என்றெல்லாம் இவை இல்லை. தமிழ், பின்னூட்டங்களுக்கு இலக்கணம் சொல்லி இருக்கிறதா என்று கேட்டால் ஏற்கனவே இருப்பதற்கு இப்படி வலிந்து பொருள் சொல்லாமல் வேறென்னத்தான்  நான் செய்ய….?

ஒரு நூலுக்குரிய கொள்கைகள் இவை என ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகுக்கப்பட்டவை இன்றும் பொருந்தி வருகிறதென்று உங்கள் மனதிற்குப் பட்டதென்றால் அந்த ஆச்சரியத்திற்காகவே பின்னூட்டங்களோடு மட்டும் இக்கொள்கைகளை ஒப்பிட்ட இந்தப் பகிர்வு.
படாவிட்டால் நிச்சயம் மாற்றுக் கருத்துகளைக் கூறுங்கள்! ஏழோடு அவற்றையும் சேர்த்துக் கொள்வோம்.

மாற்றம் வளர்ச்சிக்கானதென்றால் வரவேற்கத்தானே வேண்டும்?

அல்லது இதைச் சொல்ல நீ யார்? “ நேற்றுப் பெஞ்ச மழையில இன்னைக்கு முளைச்ச காளான் “ என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். உங்கள் பின்னூட்டத்தைப் “பிறிதொடு படாஅன் தன்மதம் கொளல் “ என்னும் வகைமையில் சேர்த்து விடுகிறேன்.

பட உதவி - நன்றி கூகுள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

57 comments:

  1. மறுத்தல் - பிறர் கூறுவதை மறுத்தல்-என்பதைனை
    விவாதம் என்று கொள்ளலாமா...? திரு. ஊமைக்கனவுகள் அவர்களே!!

    ReplyDelete
  2. பின்னூட்ட ஆராய்ச்சி! மற்றும் அவைகளை வகைப்படுத்தல்!

    இது "உளவியல்" சம்மந்தப்பட்ட ஒரு விடயம என்று நினைக்கிறேன்.

    * பின்னூட்டமிடுபவர் மனநிலை ஒரு பக்கம்!

    * எப்படிப் பின்னூட்டங்களை பதிவர் எதிர் பார்க்கிறார் என்பது இன்னொரு பக்கம்!

    **************************

    பதிவரோ, பின்னூட்டமிடுவரோ இருவருமே குறையும் நிறையும் நிறைந்த சாதாரண மனிதர்கள்தாம்.

    ஒரே பதிவை மிகவும் பாராட்டி அதில் உள்ள நல்லவிடயங்களைச் சொல்லி பின்னூட்டமிடலாம்.
    அதே பதிவை, மிகவும் மட்டம்தட்டி, அதில் உள்ள குறைகளை பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்து கீழே இறக்கலாம்!

    நண்பர் என்பதற்காக ஒரு சில குறைகளை சுட்டிக்காட்டாமல் போகலாம்.

    நமக்குப் பிடிக்காதவர் என்பதால் குறைகளை மட்டும் மிகைப்படுத்தி, நிறைகளை கண்டுக்காமல்ப் போகலாம்.

    ******************************

    ஒரு சிலர் யாரையும் புண்படுத்த விரும்புவதில்லை!

    ஒரு சிலர், இதிலென்ன இருக்கு? மனதில் பட்டதை சொல்லுவோமே? உண்மையைத்தானே சொல்றோம்? என்று சொல்வதுண்டு.

    இதில் முன்னவரை நாகரிகமான நல்லவர் எனலாம்! பின்னவரை அநாகரிகமானவர் எனலாம். இல்லைனா இவர்கள் இருவரையும் இன்னொரு கோணத்தில் பார்த்து பின்னவரை மெச்சலாம். முன்னவரையும் கீழே கொண்டுவரலாம்! அது நீங்கள் யார் என்பதை பொறுத்தது! :)

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். உங்களின் முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
      பின்னூட்டம் பற்றி நண்பர் ஒருவரின் கேள்விக்கு ஏற்கனவே வேறு பயன்பாட்டிற்கெனச் செய்து வைத்திருந்த பெட்டியில் பின்னூட்டத்தை அடைக்கும் குழந்தைமைக்குரிய முயற்சியே இது.
      பின்னூட்ட வகைமைகள் இதனுள் அடங்காமல் துருத்தித் தெரியலாம்.
      கொள்ளளவு போதாமல் வெளியே சிதறிக் கிடக்கலாம்.
      நான் பின்னூட்டங்களை மட்டுமே முதன்மையாய்க் கவனித்தேனே ஒழிய பின்னூட்டமிடுவோரின் மனநிலை, பதிவரின் மனநிலை பற்றி அவ்வளவாகக் கவனிக்க வில்லை.
      நீங்கள் பார்ப்பது ஏற்புடைய இன்னொரு கோணம்.
      ஏனெனில் பின்னூட்டமிடுவரின் மனநிலை - பதிவரோடு அவருக்கிருக்கும் இணக்கம் இதன் தாக்கம் பின்னூட்டத்தில் இருக்கும் தான்!
      மூங்கில் காற்று முரளிதரன் அவர்கள் பின்னூட்டங்களை வகைமைப்படுத்த நல்ல பெட்டியொன்றைச் செய்திருக்கிறார்.
      நான் அதை அறிந்திருக்க வில்லை என்பதால் அதைக்குறித்து இங்குச் சுட்ட முடியவில்லை.
      மீண்டும் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      ( அப்பாடா தப்பிச்சாச்சு.........................................
      இல்ல இப்படிச் சொன்னதில ஏதாவது வில்லங்கம் வருமா.......?!!!)

      Delete
    2. **( அப்பாடா தப்பிச்சாச்சு.........................................
      இல்ல இப்படிச் சொன்னதில ஏதாவது வில்லங்கம் வருமா.......?!!!)***
      ஹா.....ஹா....ஹ....
      வருணுக்கு உங்க மேல மதிப்பு அதிகம். அதனால் பயப்படவேண்டாம். எப்டி சொல்றேன்னு கேட்குறிங்களா?? நான் கடந்த ஜூலை ல இருந்துதான் அவர் ப்லாக் கை follow பண்ணுறேன். அப்போ g.b.m அய்யா பக்கத்தை மட்டும் போட்டு, இதை படிச்சு பாருங்க ஏமாற மாட்டிங்கன்னு போட்டிருப்பார். இப்போ அந்த லிஸ்டில் நம்ம இனியா, சாம் அண்ணாவோடு உங்களையும் இணைத்திருக்கிறார்:))

      Delete
    3. அன்புச்சகோதரி,
      இந்த உண்மையைச் சொல்ல வேண்டாம் என்று தான் இருந்தேன். சொன்னால் நகைச்சுவை என்று நினைத்துவிட வாய்ப்புண்டு என்பதால் அவருடைய பின்னூட்டத்தில் சொல்லவில்லை.
      அவரது பின்னூட்டங்கள் வழியாக அவர் தளம் எனக்கு அறிமுகமாகி மூன்று மாதங்கள் இருக்கலாம்.
      முகாம் ஒன்றில் சிக்கி நான் முடங்கி இருந்த சமயம்.
      ஒரே நாளில் அவரது தளத்தில் ஐம்பது பதிவுகளுக்கு மேல் வாசித்துக் கடந்திருப்பேன். அடுத்தடுத்த நாளும் சிறிது சிறிதாய்ப் பக்குவத்திற்கு வந்திருந்தாலும் முதல் நாள்
      அவரது பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்து ஜுரமே வந்துவிட்டது. ( நான் சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கும் போது சிரிக்காதீர்கள் )
      தற்பொழுதைய அவரது ஜானகிராமன் பதிவுகள் உட்பட பதிவுகளைத் தொடர்ந்தே வருகிறேன்.
      என் தளத்தை அவர், “ ஏமாற்ற மாட்டீங்க “ என்னும் உறுதி கொடுத்துப் பகிர்ந்துள்ளதையும் அறிவேன்.
      பலமுறை பின்னூட்டப்பகுதியில் கைவைத்து பல வரிகளைத் தட்டச்சு செய்த பின் உண்மையில் ஏதாவது வில்லங்கம் வந்து விடுமோ என்று “ நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி“ பின் வாங்கியது உண்மை.
      இப்பதிவிற்கு அவரது பின்னூட்டத்தைக் கண்டதும், அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான்!
      இன்னொரு உண்மையைச் சொல்லவா, எப்படி இதற்குப் பதிலளிப்பது என்றுதான் இவ்வளவு தாமதமாகப் பதிலிட நேர்ந்தது!
      இன்று பணிக்கும் போகாமல் யோசித்துக் கிடந்தது இதற்கான பதிலைத்தான்!
      இதுவரை எந்தப் பதிவிற்கும் பின்னூட்டங்களுக்குப் பதிலிட இவ்வளவு யோசித்தில்லை.

      நான் சொல்வதெல்லாம் உண்மை ..
      உண்மையைத் தவிர வேறில்லை சகோதரி!
      சயின்டிஸ்டாக இருப்பார் என்று நினைத்தால் சகல துறைகளிலும் கால் வைத்துப் போகிறார்.
      உங்களால்தான் இவ்வளவையும் சொல்ல நேர்ந்தது.
      நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்று வந்தால் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
      சரிதானே?
      நன்றி

      Delete
    4. ** ( நான் சீரியஸாகப் பேசிக் கொண்டிருக்கும் போது சிரிக்காதீர்கள் )** செம ஸ்மார்ட் அண்ணா!!

      நிறையபேர் அவர் தப்பாகவே புரிந்து கொள்கிறார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. எல்லா விதத்திலும் வருண் லாஜிக் பார்க்கிற டைப். அப்புறம் எதிக்ஸ் இருக்கணும்னு நினைக்கிற ஒரு இனிய நண்பர்:)

      எனக்கு வருணை புரிந்த அளவில் சொல்கிறேன். அவரும் உங்கள் பல பதிவுகளை படித்திருப்பார் என்றே தோன்றுகிறது:))
      வாங்க அண்ணா வருண் நம்ம friend தான் பார்த்துக்கலாம்:))
      @வருண்

      ஒரு உண்மையை சொல்கிறேன். நொந்து போய் அருமை என பின்னோட்டம் இட்டு நான் எஸ்கேப் ஆகும் பதிவுகளுக்கு , நான் சொல்ல நினைத்த பின்னூட்டத்தை கொஞ்சம் அவர் ஸ்லாங்கில் பின்னூட்டம் இட்டிருப்பார். சில பின்னூட்டங்கள், ஆமா இவர் கேட்கிறதும் சரிதானே என சொல்லவைக்கும். ஆனா மனுஷன் கிட்ட நல்ல பேரெடுக்கிறது ரொம்ப கஷ்டம். நீங்க வருணின் good book இல் இருக்கிறீர்கள். so dont worry:))

      ***ஆச்சரியமும் தான்!
      இன்னொரு உண்மையைச் சொல்லவா, எப்படி இதற்குப் பதிலளிப்பது என்றுதான் இவ்வளவு தாமதமாகப் பதிலிட நேர்ந்தது!
      இன்று பணிக்கும் போகாமல் யோசித்துக் கிடந்தது இதற்கான பதிலைத்தான்!*** ஒரு அப்பாவி புள்ளைய இப்படியா பயமுருத்துவிங்க வருண்:)))

      Delete
    5. அடடா, அண்ணாவும், தங்கையும் இங்கே "வருணாலிசிஸ்" (analyzing Varun) பண்ணுறாங்க போல இருக்கு!!!

      நான் இந்தப்பக்கம் வரவே இல்லை! இதையெல்லாம் வாசிக்கவும் இல்லை! :))))

      Delete
  3. பின்னூட்டம் தெர்டர்பான தங்கள் பதிவினை முழுமையாகப் படித்தேன். பெரும்பாலும் பல்வகை நோக்கில் தாங்கள் தேடிக் கண்டுபிடித்து எழுதியுள்ள விதம் சிறப்பாக உள்ளது. பின்னூட்டம் இடும் ஒரு வாசகரின் நிலை என்ற அளவில் அவரது படிக்கும் திறன், கிரகித்துக்கொள்ளும் பக்குவம், உள்வாங்கும் சக்தி, உரிய மறுமொழியை இடுவதற்கான நேரம் உள்ளிட்ட பல காரணிகளையும் அடங்கியுள்ளன என்பதைத் தெரிவிக்க விழைகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் வருகைக்கும் பின்னூட்டம் இடுவோரின் நிலைக்கான காரணிகள் குறித்தும் தெரிவித்தமைக்கு நன்றி!
      தங்களின் கருத்தை உளங்கொள்கிறேன்.
      நன்றி அய்யா!

      Delete
  4. நண்பரே இதுவரை நான் எவ்வளவே பேருடைய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னூட்டமிட்டுள்ளேன் மறுகருத்து வந்தாலும் தொடர்ந்து எதிர்ப்பேன் ஆனால் கௌரவமாகவே எழுதியுள்ளேன் என்னைக்கூட ஒருவர் காட்டமாக எழுதினார் அவருக்கு நான் கோபப்படாமல் பின்னூட்டமிட்டேன் நான் நினைத்திருந்தால் அதை வெளியிடாமல் அழித்திருக்கலாம் சிறிது நேரத்தில் அவரே சரணடைந்தார் எனக்கும், சாம்சன் என்பவருக்கும் உள்ள கருத்துரையை மட்டும் படியுங்கள் விளங்கும் இந்த இணைப்பில் பாருங்கள்

    http://killergee.blogspot.com/2014/07/blog-post_11.html

    விளக்கமானதொரு பதிவுக்கு நன்றி கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. உடனேயே உங்கள் தளம் சென்று படித்தேன் ஜி!
      மாற்றுக் கருத்திருந்தாலும் அதைப் பதிய போதிய நெஞ்சுரம் இல்லாமையால் கருத்திடாமல் திரும்பி விட்டேன்.
      அனைத்துக் கருத்துரைகளையும் படித்தேன்.
      உண்மைதான் நீங்கள் நினைத்திருந்தால் வெளியிடாமல் தவிர்த்திருக்கலாம் தான்.
      ஆனால் அவர் கேள்விக்கு உங்களிடம் தக்க பதில் இருக்கும் போது நீங்கள் ஏன் வெளியிடாமல் தவிர்க்க வேண்டும்?
      ஆனால் மூங்கில் காற்று முரளிதரன் அய்யா சொன்னது எனக்குச் சரியெனப்படுகிறது.
      தேவையற்ற மனக்கசப்பூட்டும் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லதெனவே என் மனத்திற்குப் படுகிறது!

      Delete
  5. இந்த ஏழு வகை கொள்கையிலும் அடங்க மாட்டார்கள், என் ஜோக்காளி தளத்திற்கு பின்னூட்டம் இடுபவர்கள் ....சிரிப்புக்கு சிரிப்பை வரவழைக்கும் திறமைசாலிகள் ...இப்படிப்பட்ட எட்டாவது கொள்கைவாதிகளை நானும் விரும்புகிறேன் :)
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ஏழுக்கடங்காமல் போகும் எட்டாவது கொள்கைவாதிகள்!
      உங்கள் கருத்தோடு உடன்பட்டுத்தானே அவர்கள் சிரிப்பிற்குச் சிரிப்பை பதிலாகத் தருகிறார்கள் பகவானே!
      உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. உண்மை உணர்ந்தேன் :)

      Delete
  6. அண்ணா,
    கையை கொடுங்கள்:) நீங்க தொழில்நுட்பப் பதிவரா மாறிடீன்களோ என பலத்த வியப்போடு இங்க வந்த, இந்த தலைப்பில் ஒரு இலக்கணப் பதிவு!!!!!!! இந்த blog ல surprises க்கு அளவே இல்லை!! ஆமா இப்போ நான் இடும் இந்த பின்னோட்டம் உடன்படல் தானே!!!

    ReplyDelete
    Replies
    1. இப்படித்தான் பல விஷயங்களுக்கு அவசரப்பட்டு வியக்கிறீர்கள்.
      தெரிந்ததும் அட இதுதானா இவ்வளவுதான என்று ஆகிவிடும்!
      ( இப்ப வெண்பா ஆகிப்போச்சில்லையா .... அது மாதிரி ) எல்லாம் உங்கள் ஊர்க்காரரால் வந்தவினை... இப்பவே வழக்கமாப் பின்னூட்டம் போடும் பாதிபேரக் காணோம். இனிமே நானே எனக்குப் போட்டுகிட்டு இது எந்த வகைன்னு ஆராய்ச்சி செஞ்சிகிட்டிருக்க வேண்டியதுதான் .
      சொந்தக் காசில சூனியம் வைச்சுக்கிறது உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸா..?
      நல்லது!
      இந்தப் பின்னூட்டம் “உடன் படல்“ ன்னா கேட்டீங்க..?
      இப்படி எழுதியும் பாராட்டியிருக்கிங்கன்னா ஏதோ “கடன்படல் “போல இருக்கின்னில்ல எல்லாஞ் சொல்வாங்க..!
      நன்றி

      Delete
    2. வெண்பா ஆச்சரியம் நீங்கிவிட்டது தா??? அது சிறியதாகி இருக்கிறது. ஏன் தெரியுமா ?? அதை இவ்ளோ சிம்பிள் லா சொல்லிகொடுக்க முடியுமா என்கிற பெரிய வியப்பின் பக்கத்தில் இது சிறியதாகிவிட்டது!!!
      -------------------
      அண்ணா பாடலை ஆசிரியர் பயிற்சியில் படித்ததாக நினைவு! ஒழுங்கா படிச்சிருந்தா தானே:(((((
      --------------------
      உங்க பதிவுகள் மூலம் எவ்ளோவோ கடன் பட்டிருக்கிறேன். ஆனா இது கடனுக்கு எழுதிய பின்னூட்டம் இல்லை. உடன்பட்டு எழுதியது அண்ணா:)))

      Delete
  7. பின்னூட்டத்தின் வகைகளை நன்னூல் மூலம் விளக்கியது நன்று.
    பின்னூட்டத்தின் வகைகள் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு எழுதி இருந்தேன்.
    இணைப்பு இதோ
    உங்கள் கருத்து எந்த வகை

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்.
      மன்னிக்கவும். உண்மையில் தங்கள் குறிப்பிட்டுள்ள தங்களின் பதிவைப் பார்க்கவில்லை.
      பார்த்திருந்தால் நிச்சயம் குறிப்பிட்டிருப்பேன்.
      தங்களுடைய வகைப்படுத்தலே உண்மையான வகைப்பாடு.
      நான் ஏற்கனவே நூலின் கொள்கைகளுக்கு இருக்கின்ற வகைப்பாட்டை எடுத்து இதற்குப் பொருந்தும் என்று காட்ட முயன்றிருக்கிறேன் அவ்வளவே!
      தங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி!

      Delete
  8. அன்புள்ள அய்யா,

    ‘ பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு…! ’ எனது வேண்டுகோளுக்கிணங்க...இவ்வளவு விரைவில் விளக்கம் கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவிலலை!.

    இரங்கல் செய்திக்கும் ஒருவரால் “ ஆகா! அருமை “ என்று பின்னூட்டம் இடப்பட்டிருந்ததைக் கண்டு சொல்லி இருந்ததலிருந்து எப்படி பின்னூட்டம் இடப்படுகிறது என்பதையும் அறிந்து வாயடைத்துப் போனேன்.

    “இடிப்பாரை இல்லா ஏமரா மன்னர்களாக“ மணிமுடி தரித்துக் கோலோச்சுகின்றனர். ( மறுத்தல் ) இடித்துரைக்க வேண்டிய இடத்து இடித்துரைத்தல் அவசியம் என்பதையும் எடுத்துரைத் -துரைத்தீர்.

    பிறர் பதிவின் குற்றம் காட்டல் மட்டுமே தொழிலாகக் கொள்ளக்கூடாது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.

    பிற கருத்துகளை ஏற்காமல் தன் நிலையிலிருந்து மாறாமல் அதிலேயே தொடர்ந்து நிற்றலும் கூடாது என்றும் கூறியிருக்கிறீர்கள்.

    பின்னூட்டம் பற்றி நான் கேட்டதற்காக இவ்வளவு விரிவாக விளக்கம் கொடுத்ததற்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதைப் படிப்பவர்கள் தாங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து கொள்ள நல்ல பாடமாக இருக்கும் என்பதைத் தெரிவிதது கொள்கிறேன்.

    மாற்றம் வளர்ச்சிக்கானதென்றே வரவேற்கின்றேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். நானே ஏதோ சொல்லப்போய் என்ன ஆகுமோ என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறேன். நீங்கள் என்னடா என்றால் “குற்றம் காட்டலை மட்டும் தொழிலாகச் செய்யக் கூடாது “ என்றெல்லாம் நான் சொன்னதாகச் சொல்லி இன்னும் சிக்கல் ஆக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே....?
      “ இடிப்பாரை இல்லா ஏமரா மன்னர் “ ................ எடுத்துக்காட்ட வேறு வரிகளே கிடைக்க வில்லையா அய்யா?
      எனது “ தவளைப் பாய்த்து“ தான் தவறாகப் போயிற்றோ?
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      குற்றம் காட்டக்கூடாது என்று சொல்லவில்லை, அவசியம் குற்றத்தைச் சுட்டிக்காண்பிக்க வேண்டும் என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை... தாங்கள் சொல்லியது போல‘ பதிவுகளில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை இவற்றைப் பின்னூட்டத்தில் சுட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருத்தல்’ குற்றம் காட்டலை மட்டுமே தொழிலாகச் செய்யக் கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.

      என்ன சொன்னீங்க...? ‘இப்பவே வழக்கமாப் பின்னூட்டம் போடும் பாதிபேரக் காணோம்‘ உண்மைக்கு புறம்பாக சொல்லக்கூடாது...வாசகர் வட்டத்தைத் தங்களின் வசமாக்கி விட்டீர்களே...!.குருவாகி திருவாகி விட்டீர்கள்... தவறாக பின்னூட்டம் இட்டால்... தப்பாகிவிட்டால் என்று நன்றாக யோசித்து... யோசித்து பிழையில்லாமல் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கையில் அடுத்த பதிவைப் போட்டு அசத்தி விடுகிறீர்கள்...!.

      பாருங்கள்... எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதை அதற்குள்ளே பார்த்து விட்டீர்கள் அல்லவா!

      நீங்கள் இதுக்கெல்லாம் அசர்கிற ஆளா என்ன? எனக்குத் தெரியாதா? நிறைகுடம் அல்லவா நீங்கள்....!

      நன்றி.

      Delete
  9. பின்னூட்டத்தில் இவ்ளோ சமாச்சாரம் இருக்கா!!!!

    பலே பலே பேஷ் பேஷ்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் முதற் கருத்திற்கும் நன்றி சகோதரி

      Delete
  10. ஆஹா!! இலக்கணம் இலக்கியம் பற்றிய பதிவுகளில் கலக்குகிறீர்கள் என்றால், இப்படியும் ஒரு ஆராய்ச்சியா? நல்ல தீசிஸ் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      நலமாக இருக்கிறீர்கள் தானே?
      உங்களின் பதிவுகளைத் தொடர்கிறேன்.
      என்ன பலரது விமர்சனக் கட்டுரைகள் காணும் போது நான் இன்னும் எழுதாமல் இருக்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி..!
      மன்னியுங்கள்.
      ஆராய்ச்சி ஒன்றும் இல்லை நூலுக்கு உரிய கொள்கைகள் என இலக்கணத்தில் சொல்லப்பட்டவற்றை அப்படியே பின்னூட்டத்திற்கென மாற்றிப் போட்டுவிட்டேன்.
      அவ்வளவுதான்!
      சரி வெண்பா முயற்சி என்னாயிற்று?
      தொடருங்கள்!
      நன்றி!

      Delete
  11. பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு…!
    பின்னூட்டம் இடுமுன்னரே - எப்பன்
    எண்ணிப் பார்த்தாவது இடுமாறு
    வழிகாட்டும் நல்ல பதிவு!

    ReplyDelete
    Replies
    1. தங்களி்ன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி யாழ்ப்பாவாணன் அவர்களே!

      Delete
  12. பின்னூட்டம் இடும் முறைபற்றி ஒரு எடுத்துக்காட்டுப்பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. எடுத்துக்காட்டு எந்த வகைமையுள் வரும் என்பதற்கும் இலக்கணம் இருக்கிறது திரு.தனிமரம் அவர்களே!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  13. நல்ல ஆராய்ச்சி. இது சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் எனும் நன்னூல் விதிக்குள் அடங்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆராய்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை அய்யா!
      இதெல்லாம் ஏதோ கொஞ்சம் தெரிந்ததை வைத்து அடித்து விடுவது...!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  14. வணக்கம் ஐயா!

    பின்னூட்டம் இடும்வகைக்கும் நல்ல விளக்கம்!
    அதுவும் நன்னூலின் துணையோடு...!
    தங்களின் அகழ்வாய்வு எத்தகையது என்பதைக் காணுகின்றேன்...:)
    அருமை!.. வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கும் வாழ்த்தினுக்கும் நன்றி சகோ!

      Delete
  15. இதற்கு நான் எந்த வகையில் பின்னூட்டம் இடுவது என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள்! பின்னூட்டத்திலும் இத்தனைவகைகள் என்று விளக்கி அதற்கு பொருத்தமான இலக்கணமும் தந்து பதிவை நிறைவு செய்த விதம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு நன்றி அய்யா!
      விரைவில் உங்களை வெண்பாவோடு எதிர்பார்க்கிறேன்.
      நன்றி!

      Delete
  16. இதுதான் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலா.?

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யா!
      உங்களின் இந்தப் பின்னூட்டம் அந்த வகையைச் சார்ந்ததுதான்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  17. இந்த பின்னூட்ட இலக்கண வகைப்பாட்டின் பின் உள்ள உங்கள் உழைப்பும்,தேடுதலும், பொறுமையுமே எனக்கு தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. உழைப்பு தேடல் பொறுமை....
      இத்தகுதிகளுக்கு இன்னும் உரியவனாகக் கூடுதலாய் முயல்கிறேன் சகோதரி!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

      Delete
  18. அன்பு விஜூ. வணக்கம்.
    உங்களின் சிந்தனையும், தகவல் திரட்டும் பொறுமையும் அவற்றை வகைப்படுத்தும் முறைமையும் பதிவர் பலர் கற்கவேண்டியவை. அதற்காக என் பாராட்டுகள்.
    ஆனால், எதற்கெடுத்தாலும் நீங்கள் நன்னூலை உதாரணம் காட்டுவது அல்லது பழந்தமிழ் இலக்கண நூலொன்றைச் சொல்வது எனக்குப் புதிராகவே உள்ளது. நன்னூல் சொல்லும் ஆசிரியர் - மாணவர் இலக்கணத்தை என்னால் ஏற்க இயல வில்லை என்பதால் வரும் மனச்சிக்கலிது என்று நினைக்கிறேன்.
    நிற்க.
    “பதிவுகளில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை இவற்றைப் பின்னூட்டத்தில் சுட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருத்தல். ( பிறர் பதிவின் குற்றம் காட்டல்)“ எனும் வகைப்பாட்டில் எனக்கொரு போதாமையும் தோன்றுகிறது. உதாரணமாக எனக்கு மிகவும் பிடித்த வகையில், நல்ல கற்பனையுடன், அழகான சொல்லாட்சிகளுடன், எழுதப்பட்ட கவிதை ஒன்றை நான் பாராட்ட நினைப்பேன் (உ-ம் நண்பர்கள் சிவக்குமாரன், இளமதி, இனியா, இன்னும் வேறுசிலர) ஆனால் அதில் ஊடாடிக்கிடக்கும் பக்திப் பரவசம் என்னை மருட்டும். என்றாலும், உள்ளடக்கத்தில் உடன்பாடு இல்லை என்பதைச் சொல்லாமலே, (சில நேரம் உரிமையுடையவரிடத்தில் சொல்லியும்... உ-ம் சிவக்குமாரன்) பின்னூட்டம் இடுவது என் வழக்கம்தான். இதை நீங்கள் வகைப்படுத்த முடியுமா என்று கேட்கமாட்டேன். வகைப்படுத்த வேண்டுமா என்றுதான் கேட்பேன்.
    மொத்தத்தில் பின்னூட்டம் என்பதாக நான் புரிந்துவைத்திருப்பது -
    (1) உங்கள் படைப்பைப் “பார்த்து“விட்டேன் என்று தெரிவித்தல் (அரிமா சங்க பாணியிலான) இதை நான் அங்கீகாரம் என்பேன். (இந்தவகைப் பின்னூட்டமின்மை அங்கீகாரமின்மையே என்பதும் தானே புரிபடும். அல்லது கவனமின்மை காரணமாக, கவனிக்காத்தை அலட்சியம் என்று சொல்லமுடியாத நிலையாக இருந்தால் என்ன செய்வது எனறும் உண்டு. நான் இந்த வகையிலும் பலமுறை மாட்டியிருக்கிறேன்)
    (2) விமர்சனம் - கருத்துப் பரிமாற்றச் சாதனம். கருத்து வேறுபாட்டை நாகரிகமாகச் சொல்வது. (இந்த நாகரிகமில்லாதவர் பலர் பதிவரிடை உலாவி அவ்வப்போது மயக்கப்பொடி தூவுவதும் உண்மைதானே?) இதில்தான் பதிவரின நனிநாகரிகம் தெரியவரும். “உன் கருத்தில் நான் மாறுபடுகிறேன், ஆனால் அதைச் சொல்லும் உன் உரிமையைக் காப்பாற்ற என் உயிரையும் தருவேன்“ என்பது உலகப் புகழ்பெற்ற கருத்துரிமை மேற்கோள்.
    இது வளர்ந்தால் ஜனநாயகம் வளரும். எல்லாருக்கும் எல்லாம் உடன்பாடாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை. கருத்து வேறுபாடுகளுடனே அவரவர் விருப்பத்தில் மகிழ்ச்சி கொள்வதுதான் நல்லது. தவிர எல்லாரையும் தனது கருத்துக்கு மாற்றிவிட முயல்வதும் ஒருவகையில் அராஜகம்தான். இதையே “நூறு பூக்கள் மலரட்டும்“ என்னும் மா-ஓ அவர்களின் கருத்தை மதிக்கிறேன்.
    (3) கருத்து வேறுபாட்டைச் சொல்லத் தெரியாமல் சண்டை போடுதல் தன்னை அறியாமல் பதிவர் பலரிடம் கருத்துவேறுபாடு வளரக் காரணமே இதுதான். “சொல்ல நினைத்தது ஒன்று, அதற்குப் பதிலாக சொல்லிவிட்டது மற்றொன்று“ என்னும்போது, தனது தவறான கருத்தை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்போரிடம் மட்டும் தொடர்பில் இருப்பது இருவருக்கும் நல்ல்து. இது வளர்நதால் நல்ல கருத்தை அனைவரும் எடுத்துக் கொள்வர்.
    இன்னும் நிறைய இருக்கிறது... நேரமின்மை... ஒரு பதிவுபற்றிப் போடாவிடில் ஒன்றும் குடிமுழுகிவிடாது என்னும் சூழல்... இதையெல்லாம் வகைப்படுத்தி அல்லது வகைப்படுத்தாமல்... அடுத்தும் தொடரலாம் என்பதே என் கருத்து
    அடிப்படையில் நீங்கள் பதிவை நூல் எழுதுதலுக்கு ஒப்பிட்டால், “பின்னூட்டம்“ என்பதை நான் “கருத்துரிமை வெளிப்பாடு அல்லது விமர்சன உரிமை” என்றே நான் கணிப்பேன். பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து, எடுத்துக் கொள்வோரைப் பொறுத்து, இது பயன்படும் அல்லது கருத்து வேறுபாட்டை வளர்க்கும். படைப்புவகை எல்லார்க்கும் பிடிபடாத மாதிரி விமர்சன பாணியும் எல்லார்க்கும் பிடிபடும் என்றும் எதிர்பார்க்க முடியாதே!
    எனவே முதலில் எழுதட்டும்... எதையாவது பின்னூட்டம் இடட்டும். பிறகு கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர் படைப்பில் மட்டுமல்ல, பின்னூட்டத்திலும் கற்றுக்கொள்ள முடியும் தானே? தொடர்ந்து எழுதுவோம் தொடர்ந்து கற்போம்! நன்றி
    கொஞ்சமில்ல... ரொம்பவே நீண்டுவிட்டது..மன்னிக்க

    ReplyDelete
    Replies
    1. முதலில் இந்த நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி அய்யா!
      இதில் தாங்கள் கூறும் கருத்துகளில் எனக்குச் சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் மூங்கில் காற்று முரளிதரன் அய்யாவின் பின்னூட்டத்தின் மூன்றாவது வகையில் கூறப்பட்ட கருத்தினுக்கேற்ப நான் அமைதியாய் இருந்து விடுகிறேன்.
      பதிவுலகில் எனக்கிருக்கும் அறிவும் அனுபவமும் ஆகக் குறைவே!
      ஆகவே நீங்கள் கூறும் பிற கருத்துகளை மனங்கொள்கிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  19. கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. நான் முதலாம் வகையில் 'உடன்படல்' இரகம்.

    ReplyDelete
    Replies
    1. பெரிதும் அறியாதவர்களாயின் நானும் உடன்பட்டுத்தான் போவேன் அண்ண!
      தெரிந்தவர்களாயில் மாற்றுக்கருத்திருந்தால் சொல்லுவதில் தடையில்லை அல்லவா?

      Delete
  20. நன்றி முத்துநிலவன் அய்யா. பக்திப் பரவசத்தில் ஊடுருவிக் கிடக்கும் தமிழை ரசியுங்கள் அய்யா. பராசக்தியின் தாசன் பாரதியை தாங்கள் ஏற்றுக் கொண்டது போல .

    ReplyDelete
    Replies
    1. நல்லது சிவக்குமாரன், பாரதி காலத்தில் அது சரி. அதற்கொரு தேவையும் இருந்தது. பாரதி திலகருக்குக் கடிதம் எழுதி, “உங்களின் பாரதமாதா (காளி) பூஜையால் இசுலாமியர்கள் தனித்து விடப்படுகிறார்கள் எனவே அக்பர் பூஜையும் சேர்த்து நடத்தவேண்டும்“ என்று கேட்டவன் அவன். அந்த நிலையில் தேசவிடுதலைக்கு ஒன்றுபடுத்தும் நோக்கில் அது சரிதான். இன்று, அதே மதத்தால் எத்தனை பிரச்சினைகள்? எந்தக்கடவுள் மதச்சார்பின்றி இருக்கிறார்? சிறுதெய்வங்களைக் கூட ஸ்தாபனப்படுத்தும் அரசியல் உங்களுக்குப் புரியவில்லையா சிவா? சரி. நி்ற்கட்டும். அதோடு பாரதி இவற்றைத்தாண்டிப் பாடிய சமூகத்தை, அரசியலை, நீங்கள் எப்போது பாடினாலும் பாராட்டும் முதல் ஆளாக நான் வந்து நிற்பேன். பாரதி வழியில் எல்லாவற்றையும் பாடுங்கள்.

      Delete
  21. பின்னூட்டம் பற்றிய தங்களின் அலசல் அருமை
    என்னைப் பொறுத்தவரை, படிக்கின்ற தளங்கள் அனைத்திலும் ஏதேனும் ஒரு கருத்துரையினை வழங்குவது என் பழக்கம்.
    பெரும்பாலும் வாழ்த்துரைகளாகவே அவை அமையும்.
    தமிழில் எழுதுகின்றவர்கள் மிகவும் குறைவு,
    எனவே எழுதுகின்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது என் எண்ணம். அதிக தளங்களை படிக்கும் போது, ஓரிரு வார்த்தைகளில்தான் கருத்துரை வழங்க இயலும். நேரப் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணம். இன்று பின்னூட்டம் வழங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகின்றது.
    ஒரு பதிவினை ஆயிரம் பேர் படிக்கின்றார்கள் என்றால், கருத்துரை வழங்குபவர்கள் ஐம்பதிற்கும் கீழேதான் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      இவற்றை ஒரு சுவைக்காகவே சொல்லிப் போனேன்.
      தங்களது பணி சிறக்கட்டும்.
      இவற்றில் ஒரே வகைமையை பின்பற்றுவோர் யாருமில்லை.
      அவரவர் புரிதல், மனநிலை, நேரம் எனப் பின்னூட்டத்தில் சொல்லப்பட்ட காரணங்கள் பலவும் இதன் பின்னணியில் உள்ளதென அறிகிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  22. ஆசானே! இது என்ன?!! ஆச்சரியம்?!! தமிழ் வகுப்பிலிருந்து மாறி வேறு வகுப்பிற்கு வந்து விட்டோமோ என்று...நம் ஆசான் தான்....நல்ல ஆராய்ச்சி..அலசல்..அதற்கு இலக்கியத்திலிருந்து பாடல்..விளக்கம் ஹப்பா நம்ம ஆசான் தான்...

    வலையும் முக நூல் போல் ஆகிவருகின்றதோ என்று தோன்றுகின்றது.

    நாங்களும் பல பின்னூட்டங்கள் உடன்படலாகக் கொடுப்பதுண்டு. தெரிந்தவர்கள் என்றால் பகிர்வதுண்டு. எதிர் கருத்துக்கள், இல்லை கூடுதல் தகவல்கள் என்று. அதற்கே சிலர் , "நீங்கள் இடுகை மட்டும் நீளமாக இடுவதில்லை. பின்னூட்டமும் மிகவும் நீளமாக இடுகின்றீர்கள் இடுகை போல" என்று கருத்துத் தெரிவித்தனர். அட என்னடா இது? கருத்துப் பறிமாற்றத்திற்காகத்தானே இடுகைகளும், கருத்துக்கள் இடுவதும்..இது என்னடா இது என்று சிறிது சலிப்பு வந்தது ஆசானே!

    அப்போ எப்படி கருத்துச் சொல்லுவது என்று நினைத்து, அது போன்றவர்களுக்கு "ஆஹா அருமை" என்று முடித்துக் கொண்டு மனமில்லாமல் திரும்ப வேண்டியதாக உள்ளது.

    பெரும்பாலும் வீண்விவாதத்தைத் தவிர்க்கவும், வாக்குவாதம் வராத அளவிலும் பதில்கள் கொடுத்துவிட்டு வந்துவிடுகின்றோம். வேறு என்ன செய்ய...

    மேலும் பல தளங்கள் வாசித்து,அதுவும் நாங்கள் இருவர், ஒருவருக்கு வாசிக்க முடியாத சூழல் எனவே மற்றொருவர் அதை அவருக்குச் சொல்லி பின்னர் கருத்து தெரிவிக்க தாமதித்து விடுகின்றது. இதோ இப்போது போல்.

    ஆசானே! "எப்படியப்பா இப்படி எல்லாம் எழுதுகின்றீர்கள்" இது நாங்கள் சொல்லுவதுண்டு!! எங்களை ஆராய்ந்ததில் சிக்கியதோ ஹஹ்ஹ...பலர் மிகவும் நன்றாக எழுதுகின்றார்கள்...நாங்கள் எல்லாம் அறிவு ஜீவிகள் இல்லாததால் அப்படி பல சமயங்களில் தோன்றியதுண்டு.....அந்த வியப்புதான் அது..ஆசானே! இது உங்களுக்கும் தான்...

    தெரிந்தவர்கள் என்றால் மாற்றுக் கருத்துச் சொல்லுவதில் தவறில்லை. மாற்றுக் கருத்துக்கள் வரும் போதுதான் சிந்தனைகள் வளரும். சிந்தித்துப் பார்க்கத் தோன்றும்...அறிவும் விரிவடையும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து...சரியா ஆசானே?

    ReplyDelete
    Replies
    1. ஆசானே!
      வணக்கம் .
      தங்களின் எழுத்துகள் வழி தங்களை அறிந்தே இருக்கிறேன்.
      புதிதாய் இருக்கிறதே என்று நான் நுழைந்து பார்க்கும் வலைப்பூக்களில் தங்களின் பின்னூட்டத்தைக் கண்டிருக்கிறேன்.
      சிறு பிள்ளை விளையாட்டுப் பொருளொன்றைக் கண்ட மகிழ்ச்சியில் ஆரம்பத்தில் அதனோடு ஒன்றி அதிக நேரம் விளையாடிப் பின் அடுத்தடுத்த புதியவையோ, அல்லது விளையாட்டு ஒழிந்த பெருங்கவலைகளோ அதினும் பெரிய களிப்போ வரும் போது, பழைய விளையாட்டுப் பொருளை அப்படியே விட்டுப் போய்விடுவதில்லையா....
      அது போல் நானும் இந்தப் பதிவுலகத்தை விட்டு ஒரு நாள் நின்று போவேனோ என்ற எண்ணம் இப்போதெல்லாம் இருக்கிறது.( எல்லாரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள் தான் என்பது வேறு)
      முதலில் எனது அதிக நேரத்தை இது எடுத்துக் கொல்கிறது.
      ( கொல்கிறது என்பது எழுத்துப் பிழையில்லை )
      எனவே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் தங்களைப் போன்றோரைக் காண வியப்பே மிஞ்சுகிறது.
      எழுத்து ஒரு போதைதான்.
      பார்க்கும் விழிகள் கூடக் கூட அதன் வீரியம் கூடுகிறது.
      மனம் மயங்குகிறது.
      அட என் எழுத்தையும் படிக்க இத்தனை பேர்!
      ஒரு வரியாய் இருந்தால் என்ன ? படித்துக் கருத்திடும் ஒவ்வொரு பின்னூட்டமும் பதிவரை மகிழ்விக்கும் மந்திரச்சொற்களே!
      சில மனம் நோவிக்கலாம்.
      இருந்தால் என்ன ....!
      ஒன்றும் பேசாமல் மெல்ல கண்டு நகர்பவர்களைவிட, நம்மை விமர்சிக்கும் குறைகூறும் பி்ன்னூட்டங்களில், நம் தரப்பு நியாயத்தை விளக்க வழி இருக்கிறது.
      தவறெனப்பட்டாலோ தயங்காமல் ஏற்கவும்..!
      எது எப்படியோ இதில் இருக்கப் பிடிக்கிறது.
      “இதுவும் கடந்து போகும் “
      என்பதுதானே நிலையானது.
      இணையத்து வந்திருக்கா விட்டால் நான் இருந்திருப்பேன்.
      தங்களைப் போன்றோரின் நட்பையும் அன்பையும் பெற்றிருக்க மாட்டேன். விலைமதிப்பில்லாத அதைப் பெற எனக்குக் கொடுப்பினை இருந்திருக்கிறது.
      அதற்கு என்னை இத்தளத்திற்குக் கொணர்ந்தோருக்கு என்றும் என் நன்றிக்கடன் இருக்கும்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசானே!!

      Delete
    2. ஆசானே! அதிக நேரம் இந்த வலைத்தளம் "கொல்கின்றது" என்பது உண்மைதான். எங்களில் இருவர் இருப்பதால் அது கொஞ்சம் சிரமம் இல்லாமல் போகின்றது. துளசி ஆசிரியர். நேரம் கிடைப்பது அரிது...கீதா வீட்டில். எனவே கீதாதான் பெரும்பாலான வேலைகளை எடுத்துச் செய்பவர் எனப்தால் ஓடுகின்றது. பல சமயங்களில் கடினமாகத்தான் இருக்கின்றது. ஆனால், எப்பொழுதோ கல்லூரிக் காலத்தில், இருவரும் நிறைய எழுது, நாடகம், இன்னும் பிற கனவுகளுடன் இருந்து, பிரிந்து, நினைவுகளுடன், பின்னர் பல வருடங்களுக்குப் பின் அந்த கனவில் இருந்த நினைவுகளில் ஒரு சில தற்போது காலம் கடந்து விட்டதால் புறம்தள்ளி, முடிந்தவற்றை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அப்போது இருந்த அறிவும் நுட்பமும், திறமைகளும் இத்தனை வருடங்கள் பரணில் தூங்கியதாலும், மொழி மாறி, வேலை நிமித்தம் வாழ்க்கைக் சூழல்களில் தடம் புரண்டு விட்டது என்பதும் நன்றாகத் தெரிகின்றது.

      தாங்கள் தயவு செய்து வலைத்தளத்தை விலக்கிவிடாதீர்கள். நேரம் இல்லை என்றால் வாரம் ஒரு முறையேனும் எழுதுங்கள்! பின்னூட்டங்கள் இடவில்லை என்றாலும்....எழுதுங்கள். நாங்கள் எல்லோரும் இருக்கின்றோம்...கற்க.

      Delete
  23. இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் ஆசானே.

    http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_28.html?showComment=1417134527203

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் தங்களின் தளம் வாழ்த்துக்கள். திரு. ஊமைக் கனவுகள் அவர்களே!!

    ReplyDelete


  25. வணக்கம்!

    பின்னுாட்டம் தன்னைப் பிரித்து வகையிட்டீா்!
    மின்னுாட்டம் போன்று மிகுமொளியே! - என்னுாட்டம்
    எங்கும் எதிலும் இனியதமிழ் எத்துவதே!
    பொங்கும் மகிழ்வைப் பொழிந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  26. நான் நினைத்தேன் அதான் நன்னூலார் பாடல் தந்து விட்டாரே என்று, இருப்பினும் புது இலக்கண பாடல் எதிர்பார்த்தேன். நன்றி.நன்னூல் பாடல் தாங்கள் தந்த விளக்கமா? அது சரி ஏன் பிரச்சனை என்றும், பதிவர் வருத்தப்பட வேண்டாம் என்றும், என் போன்ற புதியவர்களை ஊக்கப்படுத்தவும் சில பொய்கள் இருக்கும்.இதற்குமா?,,,,,,,,

    ReplyDelete
  27. பின்னூட்டம் என்பதைத் தமிழோடு
    பிணைத்து - ஆய்வு பிடித்தது.
    அதை விடப் பலரின் கருத்துகள் பதில்களையும்
    மிக ரசித்தேன். தமிழ் இளங்கோவின் பதிவொன்றால்
    அவர் தந்த லிங்குகளால் அனைத்தும் நிகழ்ந்தது.
    நல்ல அனுபவம்.

    ReplyDelete
  28. இதில் இன்னொருவகையுமுள்ளது...தட்டச்சு செய்வதில் மனமில்லாமல், எண்ணவோட்டத்தால் எழுத்தோட்டம் தடைபட்டு, சொல்ல வந்ததைச் சொல்லிச் செல்லாமல் பாதி கூறி வந்த வழி பறந்து செல்லும் என் போன்றோர்!

    பெரும்பாலான நேரங்களில் இதுபோன்று பொதுக்கருத்திடுவது வலை-நாகரிகமாகக் கருதப்படுகிறது. இன்னும் நன்றாகச் சொல்லவேண்டுமென்றால் `நானும் இங்கதான் இருக்கேன், எனக்கும் எல்லாந்தெரியும்` என்ற வகை.

    அருமையான பதிவு! - ம்ம் ஐயகோ வகை-1ல் என் பெயர் இடம்பெறாது என்ற நம்பிக்கையில் செல்கிறேன்.

    ReplyDelete