Wednesday 5 April 2017

இது நியாயமா?


வகுப்புகள் முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள் நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும் பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.

இதனால், சில நேரங்களில் அவ்வகுப்பின் ஒட்டுமொத்த மாணவர்களிடம் கடுமை காட்டியிருக்கிறேன்.

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் வழக்கமாக, வகுப்பின் இறுதி நாளில் “என்மீதான குறைகள் ஏதும் இருந்தால் சொல்லலாம்.  சொல்லத் தயங்குகிறவர்கள் தாளில் எழுதிப் பெயரிடாமல் தரலாம்.” என்றேன்.

வழக்கம் போலவே, நேரடியாக ஒருவரும் குறைகள் எதுவும் சொல்லவில்லை.

எழுதிய தாள்களிலும் எப்பொழுதும் போலத்தான்.

ஒருவன் மட்டும், “ இந்தக் கிளாஸில் எல்லாமே ரவுடிங்கதாண்டா என்று நீங்கள்  சொல்லியதைத் தாங்க முடியவில்லை, அப்ப நானும் ரவுடியா சார்?” என்றிருந்தான்.

நன்கு படிக்கும் மாணவன்தான்.

நான் அப்படிச்  சொல்லித்தான் இருக்கிறேன். ஆனால் நிச்சயமாக இவனை நினைத்தில்லை.

அவனுட்பட சில நல்ல மாணவர்கள் அவ்வகுப்பில் இருக்கிறார்கள்.

எனது இந்தச் சொல்லாடல் அவனைப் பாதித்திருப்பது நான் செய்த தவறுதான்.

இன்று தேர்வு எழுத வந்திருந்த அவனைப் போகும் போது என்னைப் பார்த்துவிட்டுப் போகச் சொன்னேன்.

பயந்துவிட்டான்.

“ஒன்றுமில்லை. பயப்படாமல் தேர்வு எழுதி விட்டு வா” என்ற போது  அருகிலிருந்த சக ஆசிரியர் கேட்டார் “ என்ன சார், ஏதும் பிரச்சினையா ?”

எழுதியிருந்த தாளை நீட்டினேன்.

“ நல்லவேளை ! உங்ககிட்ட குடுத்தான்! தலைமையாசிரியர் அறைக்கு முன் இருக்கும் புகார் பெட்டியில் போட்டிருந்தால்….? ”

கல்வித்துறை புகுத்திவரும் நவீன மாற்றங்களில் ஒன்று இது.

ஆசிரியரைப் பற்றி மாணவர் புகார் கூறும் வசதி.

“போட்டால்..?”

“ அந்த கிளாஸில மத்தவங்க அப்படி இருக்கலாம். ஆனா அவன் நல்ல பையன்தான? அவனையும் சேத்து நீங்க ரவுடின்னு சொன்னது தப்புதானே அவனது மனநிலையை பாதிச்சிருக்கிங்க தானே?” என்றார் சிரிப்பினூடாக.

“ உங்களுக்குச் ‘சத்திரி நியாயம்’ தெரியுமா? ” என்றேன் நான்.

“ ஆமாம் சார். ஏதாவது சொன்னா சத்திரி நியாயம் கத்திரி நியாயம்னு பேசிகிட்டு ….! ஆள விடுங்க சார்! ” என்று இருக்கையைக் காலி செய்தார் அவர்.

அவன் தேர்வு முடிந்து வந்திருந்தான்.

“என் பேச்சு உன்னைக் குறித்தன்று. உம் மனம் பாதிக்கப்பட்டிருந்தால் வருந்துகிறேன்!” என்று சொல்லி அனுப்பினேன்.

அது சரி! சத்திரி நியாயம் பற்றி யாரிடமாவது சொல்லாமல் இருந்தால் எப்படி....?!

பெரும்பான்மையின் அடிப்படையில் ஒன்றைக் கூறுவதற்குப் பெயர்தான் சத்திரி நியாயம்.

தமிழில்,

ஒரு சொல் உயர்திணையா, அஃறிணையா, ஆண்பாலா பெண்பாலா பலர்பாலா ஒன்றன்பாலா பலவின்பாலா என்பதை அந்த சொல்லின் இறுதி தீர்மானிக்கிறது.

‘செய்தான்’

இந்தச் சொல்லின் இறுதியில் உள்ள, ‘ன்’  எனும் ஓர் எழுத்தைக்  கொண்டு. இது உயர்திணை – ஆண்பால் என்பதைச் சொல்லி விடலாம்.

அதுபோல, தமிழில் உள்ள இரண்டு திணைகளையும், ஐந்து பாலினையும் அந்தச் சொற்களின் இறுதியில் வரும் பதினோரு எழுத்துக்களைக் கொண்டு அறிந்து கொள்ளலாம் என்கிறது தொல்காப்பியம்.

அந்த எழுத்துக்கள்,

ன்,ள்.ர்,ப,மார்,து,று,டு,அ,ஆ,வ,

என்பன.

இங்கு,

“‘மார்’ என்பதை எப்படி எழுத்து என்று சொல்லமுடியும்?” என்று கேட்டால்,
அதுதான் சத்திரி நியாயம்.  பதினொன்றில் மற்ற பத்தும் எழுத்தாக இருப்பதால் இருப்பதால் மார்  என்பதையும் பெரும்பான்மை பற்றி எழுத்து என்று சொல்லிவிட வேண்டியதுதானாம்.

“ இருதிணை மருங்கில் ஐம்பால் அறிய
ஈற்றில் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும்
தோற்றம் தானே  வினையொடு வருமே ”
                                         ( தொல்.-சொல்.-10 )
தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn1.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

36 comments:

  1. வணக்கம் கவிஞரே நலமோ ?
    சத்திரி நியாயம் பற்றி மேலும் அறிய தொடர்கிறேன்...

    த.ம.பிறகு ஒன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!
      நலம்.
      நெடுநாள் கழித்து வரும்போதும் உங்கள் முதல் வருகையும் நலம் நாடலும் காண மகிழ்வு.
      நன்றி.

      Delete
  2. இதுபோன்ற பதிவுகளைப் படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன நண்பரே
    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே
    வலையுலகிற்குத் தங்களை மீண்டும் வருக வருக என்று அழைக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கரந்தையாரே!

      தங்கள் வருகையும் கருத்தும் உவகை.

      தங்கள் கருத்திற்கும் வரவேற்பிற்கும் நன்றி.

      Delete
  3. கதை போல தொடங்கி மார் விளக்கம் அருமை .நீண்டநாட்களின் பின் சந்திப்பது மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு தனிமரம்.

      நீண்ட நாள் கழித்து வரினும் தங்களின் நினைவு கூறலும் தளம் தொடர்தலும் மகிழ்வளிக்கிறது.

      தங்களின் கருத்திற்கு நன்றி

      Delete
  4. சத்திரி நியாயம் என்ற சொல்லை உங்களால் அறிந்தேன். நன்றி. நானும் ஒரு காலத்தில் ஆசிரியனாக இருந்தவன் என்பதால் உங்கள் உணர்ச்சியையும் பாதிக்கப்பட்ட மாணவனின் உணர்ச்சியையும் புரிந்துகொள்ள முடிகிறது. பல நேரங்களில் 'ஜஸ்ட் லைக் தட்' நாம் சொல்லிவிட்டுப் போகும் சில வார்த்தைகள், மாணவர்களை வெகுநாளைக்குப் பாதித்துவிடுவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அடிபட்டுத் திருத்திக்கொள்ளவேண்டியதுதான்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு. செல்லப்பா யக்ஞசுவாமி அவர்களே!

      ஆம். இது பற்றிய முன்னனுபவங்கள் இருந்தபோதும் படித்திருக்கும் போதும் உணர்ச்சிவசப்படும் சில தருணங்களில் இப்படி வாய்த்து விடுகிறது.

      நிச்சயம் திருத்திக் கொள்ளத்தான் வேண்டும்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. ///இன்று தேர்வு எழுத வந்திருந்த அவனைப் போகும் போது என்னைப் பார்த்துவிட்டுப் போகச் சொன்னேன்.

    பயந்துவிட்டான்.

    “ஒன்றுமில்லை. பயப்படாமல் தேர்வு எழுதி விட்டு வா”////


    இப்படி நீங்கள் செய்ததால் அவன் தேர்வின் போது முழு கவனம் செலுத்தாமல் சார் என்ன சொல்லப்போகிறாரோ என்று கவலையில் அவன் இருக்க வாய்ப்புகள் அதிகம்தான். நீங்கள் வருந்துகீற்ர்கள் என்று சொல்வதை பரிட்ச்சைக்கு முன்னால் சொல்லி இருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அவர்கள் உண்மைகள்!
      இங்கு நான் வெறுமனே வார்த்தைகளால் சொன்னதைவிட, என் உடல்மொழியும் குரல் இசைவும் அவன் பதட்டத்தைத் தணித்திருக்கும் என்று நம்பினேன்.
      தேர்வுக்கு முதல் மணி அடித்து விட்டதும், அவனுடன் சற்றுப் பேசக் கருதியதும்தான் தேர்விற்குப் பின் வந்து பார்க்கச் சொன்னதன் காரணம்.

      ஆனால், இப்படிச் சொன்னதால் அவன் தேர்வில் முழுக் கவனம் செலுத்தாமல் நான் என்ன சொல்வேனோ என்று கவலைப்படும் வாய்ப்புகள்தான் மிக அதிகம். அவனை வருத்தப்படுத்தாத ஒரு செய்தியைத் தேர்விற்கு முன்புதான் நிச்சயம்
      சொல்லியிருக்க வேண்டும்.

      தங்கள் வருகைக்கும் வெளிப்படையான கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. பொதுவில் பெரும்பான்மையைக் குறித்துச் சொல்லும்போது இந்த பாதிப்பு இந்தக் குறிப்பிடலில் இல்லாதவர்க்கு சங்கடத்தைக் கொடுக்கும்தான். பாவம் அந்தப் பையன்.

    சத்திரி நியாயம் தொடர்பான விவரங்கள் எனக்குப் புதிது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீ.

      நீங்கள் சொல்வது உண்மைதான்.

      சத்தரிநியாயம் எல்லாம் உரையாசிரியர்களின் கைங்கர்யம்.
      மூல ஆசிரியர்கள் செய்துள்ளவற்றை நியாயப்படுத்த அவர்கள் பேசும் தர்க்கம்.
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  7. வாங்க வாங்க கண்டு பல மாதங்கள் ஆயிற்று. வரும் போதே மிக அழகான பதிவுடன் வந்து விட்டீர்கள்!!! சத்திரி நியாயம் பற்றிக் கேட்டதில்லை....வகுப்புப் பிரச்சனையில் தொடங்கி அழகாக தொல்காப்பியரில் முடித்து தாங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பை அழகுற கொண்டு செல்லும் திறன் வியக்க வைக்கிறது.

    தொடர்கிறோம் சத்திரி நியாயம் பற்றி மேலும் அறிவதற்கு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே!

      எங்குச் சுற்றி்னாலும் கடைசியில் இங்குத் தானே வந்தாக வேண்டும்.

      பதிவிற்கும் தமிழுக்கும் ( தொல்காப்பியம் ) ஆகக் கூறினேன்.

      சத்திரி நியாயம் அவ்வளவுதான்! வேறு நியாயங்களை வேண்டுமானால் பார்க்கலாம். :)
      சத்திரி என்பது வடமொழி. யாரேனும் அதன் பெயர்க்காரணம் கேட்பார்கள் என நினைத்தேன்! :(

      தாங்களும் தோழியாரும் நலந்தானே?

      எல்லாவருடைய பதிவுகளுக்கும் வரவேண்டும்.

      இனிச் சற்று நேரம் கிடைக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. ‘சத்திரி நியாயம்’ இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பல நாளுக்குப் பிறகு வித்தியாசமான பதிவுடன். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  9. மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தமாக்கும் சீரிய பணியில் இருந்ததால் தாங்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை என நினைக்கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பின் தங்களது எழுத்தை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி. காரணம்.தங்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒரு புதியதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பதால் .

    //கல்வித்துறை புகுத்திவரும் நவீன மாற்றங்களில் ஒன்று இது.//

    வங்கிகளின் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி முடியும் நாளன்று பயிற்சி காலத்தில் வகுப்பு எடுத்தவர்களைப் பற்றி அறிவதற்காக ஒரு வினாப்பட்டியல் கொடுப்பார்கள். அதில் எந்த பாட வகுப்பு பயனுள்ளதாக இருந்தது? எந்த பாட வகுப்பு சுமாராக இருந்தது? எந்த பாட வகுப்பு மோசமாக இருந்தது? என குறிப்பிட சொல்வார்கள். அதை நிரப்பி கையொப்பமிடாமல் தரலாம். பங்கேற்ற அனைவரின் கருத்தை அறிந்து அடுத்த பயிற்சியின் போது மோசமாக குறிப்பிடப்பட்டிருந்த பாடத்தை எடுத்த விரிவுரையாளரை மாற்றுவதுண்டு.

    பள்ளியில் அதுபோல் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இது நம்மைப்பற்றி மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு என எடுத்துக்கொள்ளலாம்.

    ‘சத்திரி நியாயம் பற்றி’ இன்று தான் அறிந்துகொண்டேன். ஆனால் சிலசமயம் பெரும்பான்மையோரை குறிப்பிடும்போது ‘மார்’ என்று பயன்படுத்துகிறோமே. அதுவும் சத்திரி நியாயத்தில் வருமா? எடுத்துக்காட்டு: பிள்ளைமார். விளக்கவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.
      தங்களைப் போன்றோரைப் பதிவினூடாகத் தொடர்பு கொள்ள முடிவது நானுற்ற பேறு!

      சத்திரி நியாயம் என்பது பெரும்பான்மை கொண்டு சிறுபான்மையைக் கருத்தில் கொள்ளாமல் பெரும்பான்மையை ஒட்டி முடிவு செய்வது.

      மார் என்பது ஒரு விகுதி.
      தந்தைமார், தாய்மார் என்பது போல.

      அது எழுத்தன்று. ஏனைய பெரும்பான்மை எழுத்துக்களாய் இருப்பதால் பதினோரு எழுத்துகள் என்று அமைதி கூறுவதற்காக இந்நியாயம் பயன்படுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  10. ஐயா! அந்த மாணவனின் உங்களிடம் கேட்ட அதே கேள்வியைத்தான் இந்த மாணவனும் உங்களிடம் கேட்க விரும்புகிறான் - இது நியாயமா?

    இத்தனை நாட்களாக நீங்கள் எழுதாமல் இருந்தீர்களே - இது நியாயமா?

    சேநெய் தொட்டு வைப்பது போல் தமிழின் சுவை காட்டிவிட்டு மேற்கொண்டு சுவைக்க அவாவுற்றுக் காத்திருந்த குழந்தைகளைக் கவனிக்காமலே இத்தனை நாள் விட்டுவிட்டீர்களே - இது நியாயமா?

    சத்திரி நியாயம்! கேள்வி கூடப் படாத புது இலக்கணம்! மிக்க மகிழ்ச்சி! தமிழ்ப் பதிவர்கள் அனைவர் சார்பிலும் என் அன்பும் நட்பும் ததும்பும் வரவேற்பைத் தெரிவித்து மகிழ்கிறேன்!

    தொடர்ந்து எழுத வேண்டி ஆயிரம் முறை கோருகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //ஐயா! அந்த மாணவனின் உங்களிடம் கேட்ட அதே கேள்வியைத்தான் இந்த மாணவனும் உங்களிடம் கேட்க விரும்புகிறான் - இது நியாயமா?

      இத்தனை நாட்களாக நீங்கள் எழுதாமல் இருந்தீர்களே - இது நியாயமா?// :)


      //சேநெய் தொட்டு வைப்பது போல் தமிழின் சுவை காட்டிவிட்டு மேற்கொண்டு சுவைக்க அவாவுற்றுக் காத்திருந்த குழந்தைகளைக் கவனிக்காமலே இத்தனை நாள் விட்டுவிட்டீர்களே - இது நியாயமா?//

      தங்களைப் போன்றோர் என்மீது கொண்டுள்ள அன்பிற்காகவே எழுதுகிறேன் ஐயா.
      எழுதுவேன்.

      நன்றி.

      Delete
    2. மகிழ்ச்சி ஐயா! மிக்க மகிழ்ச்சி!

      Delete
  11. “இது நியாயமா” என்று கேட்கிறீர்கள்...தலைப்பில்தான்!
    கொஞ்சம் கூட நியாயமே இல்லை- இப்படி மாதக்கணக்கில் வலைப்பக்கத்தைக் காயப்போடுவது... அடிக்கடி எழுதுங்க விஜூ... (இனிமேல்தான் உங்கள் பதிவைப் படிக்கணும்..பார்த்ததும் எழுதத் தோன்றியது படித்துவிட்டு எழுதுகிறேன்) நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் உற்சாகமூட்டல் என்றும் என் போன்ற சோம்பேறிகளை வழிநடத்தும்.

      என்றும் நன்றி ஐயா.

      Delete
  12. ரசித்தேன்.. பொதுமைப்படுத்த முடியாதுதான் விஜூ
    ஆனாலும் பலஇடங்களில் இந்தச் சங்கடம் நேர்வதுண்டு, அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு தர்ம சங்கடம் (இது தெரியும்தானே? -அசிங்கமான கதை)
    ள் - பெண்பால் விகுதிதான், அதற்காக “பெருமாள்” கோவித்துக் கொள்ள மாட்டாரல்லவா? (புதியன புகும் “சிம்ரன்” ஆணாகிவிட்டால் பலரும் வருந்தக் கூடும்)
    வழக்கம்போலப் புதிய இலக்கண வகுப்பு, வழக்கும் இயல்பும் தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ள் - என்ற இடத்தில் அள், ஆள் என்றிருக்க வேண்டும்.
      (இப்போதெல்லாம் மக்கள், வேலையாள், கூலியாள், என்பன உயர்திணைப் பொதுப்பெயராக வழங்குவதையும் கவனிக்க வேண்டும்)

      Delete
    2. //பலஇடங்களில் இந்தச் சங்கடம் நேர்வதுண்டு, அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு தர்ம சங்கடம் (இது தெரியும்தானே? -அசிங்கமான கதை)//
      தெரியும் ஐயா.

      ஒன்பதாம் வகுப்பில் இது குறித்து எனதாசிரியர் கூறினார்.

      “அம்மன் என்னும் பெண்பாலில் ன் எனும் ஆண்பால் விகுதியும், பெருமாள் என்னும் ஆண்பாலில் ள் என்னும் பெண்பால் விகுதியும் வருகிறது.
      இது ,
      அம்பாள், பெருமான் என்றிருக்க வேண்டும் என்பது அவர்பதில்.
      இங்குத் தொல்காப்பியத்தில், இவ்விகுதிகள்,“ ஈற்றில் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும் தோற்றம் தானே வினையொடு வருமே ” என்பதால் வினையொடு தொடங்க வேண்டும் என்றே குறிப்பிடப்படுகிறது.

      தங்களின் வருகைக்கும் நெறிப்படுத்தும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  13. இது நியாயமான்னு கேட்கிறீங்க !உண்மையில் நியாயமே இல்லை ,சத்திரி நியாயம் என்று ஒன்று இருப்பதை இது வரையிலும் அறிந்துக் கொள்ளாமல் இருந்த்து:)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அறியாமல் இருப்பதுதான் வியப்பு!

      Delete
  14. சில நேரங்களில் உணராமலேயே கொட்டும் வார்த்தைகள் காயப்படுத்தும் அதுவும்பல மாணவர்களைக் கட்டி மேய்க்கும் ஆசிரியர் உதாரண புருஷராக இருக்கவேண்டும் என்பதும் நியாயமே நானும் என் மகனிடம் ஒரு முறை உருப்பட மாட்டாய் என்று கூறீருந்தது அவனைமிகவும்காயப்படுத்தி இருந்தது. அதைவெகுநாட்களுக்குப் பின் தான் என்னிடம்சொன்னான்ஆனால் அந்த வார்த்தையே அவனை நிரூபீக வைத்தது என்றும் கூறினான் இது குறித்து ஒருபதிவே எழுதி இருந்தேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      உதாரண புருஷனாக எல்லாம் இருக்க முடிவதில்லை என்பதுதான் கசக்கும் உண்மை ஐயா.
      கூடுமானவரை, மனச்சான்றிற்குப் பகையில்லாமல் பணியாற்றுகிறேன் என்பதுதான் உண்மை.
      தவிர்க்க இயலாத சில நிகழ்வுகள் நடந்துபோகும்.
      அதிலிருந்து பாடங்கற்றுத் தொடர்கிறோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  15. அழகான அருமையான விளக்கம் ஐயா...

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  16. வாங்க சகோ! வணக்கம். நலந்தானே? சொல்லாமல், கொள்ளாமல் நீண்ட விடுப்பெடுத்த, உங்களிடம் நாங்கள் கேட்க நினைத்திருந்த கேள்வியையே பதிவின் தலைப்பாக்கிவிட்டீர்கள். மீண்டும் தமி்ழ்ப்பாடம் துவங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. சத்திரி நியாயம் தெரிந்துகொண்டேன். சத்திரி என்பத்ற்கும் சத்திரியன் என்பதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      சொல்லாமல் விடுப்பெடுத்தல் தவறுதான்.
      அவ்வாறு செல்லாமல் இருக்கவே விரும்புகிறேன்.
      பண்டைய உரையாசிரியர்கள் மூலச்செய்யுட்களை விளக்க நிறைய வடமொழி பிரோயகங்களைக் கையாள்வர்.
      அதில் ஒன்றுதான் சத்தரிநியாயம் என்பதும்.

      சத்திரி என்றால் வடமொழியில் சிறுகுடையுடன் போவோர் என்று பொருள்.
      ஒரு கூட்டத்தில் அதிகம் பேர் குடையுடன் சென்றால், சத்திரி போகின்றார் என்பர்.
      அதில் குடையில்லாமல் செல்வோர் சிலரும் இருப்பர். அவர்களையும் பெரும்பான்மை கருதி சத்திரி எனக்குறிப்பிட்டதால் இது சத்திரி நியாயம் எனப்பட்டது.

      மற்றபடி, சத்ரியன் என்பதுடன் இதற்குத் தொடர்பில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  17. கேள்விக்குப் பதிலும் கேட்க்காமல் பாடமும் நடத்தும் பாவலரே
    தாங்கள் வராத கணங்களில் தமிழுக்கும் அழுகை ஆதலால்
    அடிக்கடி வந்து தமிழைப் போதிக்க வேண்டுகிறோம் !

    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் என்மேல் கொண்ட அன்பினுக்கு மிக்க நன்றி கவிஞரே!

      Delete