Monday 15 September 2014

கவிஞர்.கி.பாரதிதாசன் கண்ணன்விடு தூது


                        






                                    


                               


      
 















                                  காப்பு 

பண்ணில் தமிழ்பாடும் பாரதி தாசர்மேல்

கண்ணன் விடுதூது கட்டுரைத்துக் - கொண்டுசெல

மாலைவரு மாலைதிரு மாலைபெற மாலடியார்

காலைதொழுங் காலையவர் காப்பு.


( ஈற்றிரண்டடிகள் மடக்கு. . இதன் பொருள் : மாலைவரு மாலை -மாலை வேளை வரும் திருமாலை, திருமாலை பெற - மேன்மைபொருந்திய மாலையைப் பெற்றுவரத் தூதாய் அனுப்ப, மாலடியார்  - மாலடியார்களாகிய ஆழ்வார்களின், காலை தொழுங்காலை -  திருவடிகளைப் பணியுங்காலை, அவர்காப்பு -  அவர்களே இந்நூலினைக் காத்தமைவர்)



மங்கலங் கொண்டு மலர்கொண்டு மாமலையின்
தங்குவளங் கொண்டு திடங்கொண்டு – எங்குநிறை
திங்களொளி விஞ்சுந் திருவுடையை! பத்தருளக்
கங்குல் அழிக்குங் கரமுடையை! – தங்குமுனைத்
தாங்கிடவா வென்றழைக்கத் தாமதியா தக்கணமே
வேங்கடவா நீயெழுந்து வாராயோ? – மூங்கிலெழும்
புல்லாங் குழலைம் புலன்சேர்த்துக் கட்டிவிட
எல்லா மெமக்கின்ப மாகாதோ? – கல்லிகந்து
முல்லை நிலம்வாழ்ந்த மூத்தகுடி யாதவரின்
தொல்லை இடர்போக்கத் தோன்றியவா! – வில்லைத்
திருச்சங்கைச் சக்கரத்தைத் தண்டத்தை வாளை
ஒறுப்பதற்குங் காப்பதற்கும் ஒன்றாய் – இருத்திடுமுன்
மல்லாண்ட திண்தோள் மயங்கிக் கிடந்தவனும்
பல்லாண்டு பல்லாண்டு பாடியதும் – நில்லாமல்
உள்ளம் உருக உயிர்விழிக்க உன்னையொரு
பிள்ளைத் தமிழெடுத்துப் பேசியதும் – வெள்ளமெனப்
பெற்றதெலாம் வாரிப் பெருமானுக் காயளித்தொன்
றற்றபினு மீயென் றிரந்ததுவும் – குற்றமன்றென்
றெல்லை யிலாக்காதல் எம்மானே உம்மீதாய்
தொல்லை தருகொள்ளை தேர்ந்ததுவும் – புல்லினிழி
தீண்டாக் குலமென்றும் தீங்கென்று முன்னடியோன்
வேண்டாப் பொருளான வேதனையால் – ஆண்டோரின்
கண்திறக்கக் கல்லடியுன் காதலன்மேற் பட்டவுடன்
புண்பட்ட மேனியனாய்ப் போனதுவும் – பிண்டமென
வந்தோனை முற்றுருவாய் “வாளை உறையிடான்“
செந்தே னமுதளிக்கச் செப்பியதும் – நிந்தித்து
நின்னடியா னைத்துரத்து நாட்டரசைக் கண்டித்து
நின்படுக்கை நீயெடுத்து நீங்கியதும் – இன்பமென்று
கட்டில் கணிகையின்மேல் காமுற் றிருந்தவனை
வட்டில் கொடுத்துதவி வந்ததுவும் – உட்கலந்தே
உன்னடிகள் போற்றி உவந்துன் அடியார்கள்
பொன்னடிகள் என்முடிமேல் பூசிப்பேன் – நின்னடியோன்
பள்ளி எழுப்பிடுமப் பாடல் செவிமடுத்தே
துள்ளியெழு கின்ற இயல்புடையாய் - உள்ளே
ஒருவர் கிடக்க இருவர் அமரத்
திருவடியார் மூவருமே நிற்க – இருள்சூழ
வையந் தகளியாய் வார்கடலே நெய்யென்று
மெய்தீபத் தால்மூவர் மீதுற்றாய்! – உய்ய
இலைமண்ணில் வேர்மேல் இருக்கச் செடியின்
தலையூன்றி நட்டல் தகுமோ? -  மலைத்தோனை
இற்ற கயிறிறைத்  தில்லிக் குடநீரைப்
பற்றின்மேல் பாய்ச்சியவன் பாரித்தாய்! – கற்றறிந்து
எச்சுவையும் முன்னில்லா எம்பெரும! உன்னழகின்
அச்சுவை  காட்டி அணைத்தாண்டாய்! – மெச்சி
உனையல்லால் மற்றோர் உளங்கொள்ளாப் பாடா
நினைவொன்றே கொண்டுநிற் பித்தாய்! – மனையாட்டி
பூக்களால் கட்டிவுனைப் பார்க்கத் தவமிருக்கப்
பாக்களைக் கண்டு பரிந்தேற்றாய் ! – நீக்கமற
ஆண்டவுனைப் பாடாதுன் ஆழ்வாரைப் பாடியவன்
வேண்டாதும் உன்பாத வீடளித்தாய்! – தோண்டத்தன்
கண்கொடுத்தோன் என்றென்றும் காணுதற்கே நின்னழகைக்
கண்பொறித்துப் போனாய்க் கருணையினால் - புண்ணழுகத்
தூற்றும் முறமாக்கென் சல்லடையா முள்ளத்தை
மாற்றும் வகைசெய்யென் மாதவனே! – போற்றிடுநின்
வல்ல செயல்பலவும் வாழ்த்தி அடிதொழுமிப்
புல்லோனுக் காய்த்தூது போவாயோ? - பொல்லாத
வீழ்ச்சி உனதடியார்க் குற்றிடுமென் றாரவர்க்குச்
சூழ்ச்சி பதிலளித்த சுந்தரனே! – வாழ்ந்திடவே
தூதனாய்ச் சாரதியாய்த் துன்பந் துடைப்பவனே!
வேதனை மாற்றி விதிப்பவனே! – சோதனையில்
கண்ணீர் பெருக்கிக் கதறி உயிரினரும்
பெண்மானம் காக்காத பேடிகழ்ந்துன் – எண்ணமெழக்
“கண்ணா எனதுநிலை காணாயோ“ என்றிடக்கார்
வண்ணா உனதருளைக் காட்டினையே! – எண்ணியெண்ணிப்
பாதம் வரைந்துவைத்துப் பட்சணமும் சக்கரையும்
ஓதித் திருநாமம் ஓர்க்கின்றேன்! -  வேதமெலாம்
நீயாகி நிற்பதனை நானிலங் காத்திடுநல்
தாயாகித் துன்பந் தணிப்பதனை –  நோயுற்று
நீயே வழியென்று நின்னை அவரிடத்துப்
போய்மாலை வாங்கிவரப் போக்குகிறேன்! –  காய்மனதால்
அன்னந் தனைவிடுப்பேன் அங்குத் தமிழ்க்கடலில்
நின்று திரும்பிவர நேராதே! – பின்னும்மவ்
வண்டை யனுப்பிடவோ வாடாத வெண்பாப்பூ
உண்டுறைந் தென்நோய் உரைக்காதே! – அண்டிவரு
கிள்ளாய்நீ போயென் கிறுக்குரைப்பாய் என்றால்நெஞ்
சள்ளுமவர் கோவைமொழிக் காற்றாதே! – உள்ளம்போய்க்
கன்னங் கருங்குயிலே காட்டென்றால் அங்கிணைய
இன்னோர் குயிலொன் றிருக்கிறதே ! – என்செய்வேன்?
தென்றலைப்போய்த் தூதுசொல்லித் தீர்ப்பாய்யென் றாலவரின்
முன்றில் தமிழுலவ மோதாதே! – என்றும்
தமிழங் குறையத் தமிழ்பெறு தற்கே
தமிழைப்போ வென்றால் தகுமோ? – “அமிழ்தத்தை
உண்ணப் பெருங்காதல் உண்டவர்பால்“, என்றுரைக்கக்
கண்ணாநீ யன்றிக் கதிவேறார் ? - திண்மையுடன்
ஆயுத மொன்றேந்தா தைவருடன் நின்றெதிர்த்தோர்
மாயும் படிச்செய்த மாயத்தைச் - சாய்வறியாச்
சாகாப் பிறப்பென்று தொல்லை பலகொடுத்த
ஆகா சுரனழித்த ஆண்மையை - நீகாத்த
பார்த்தனுக்குத் தேரோட்டிப் போர்முனையில் சோர்ந்தவனைக்
கூர்த்தமதி யாற்கீதை கூறியதைச் - சீர்த்திமிகு


பட்ட முனக்காகப் பார்த்திருந்த வப்போதும்
இட்ட முடனும்பிக் கீந்தமையை - சுட்டெரிக்கும்
முப்படையும் நூற்றுவர்க்கு முன்னளித்துப் பாண்டவர்க்கு
எப்படையும் வெல்லநீ எஞ்சியதை - ஒப்பிடுநான்
“எச்செயலும் செய்வேன்! எதிர்பாரேன் எவ்விளைவும்.!!
உச்சரிக்க உண்டேகாண் உன்நாமம்!“ – அச்சுறுத்த
அம்புன் திருமுகத்தில் ஆயிரம் தைத்திடவும்
வெம்பினாய் இல்லாய் வலிநோக்காய் – நம்பியவன்
பார்த்தன் அவனழிக்கப் பீ்ஷ்மன் கணையெடுக்க
வார்த்தை தவறிவிட்டாய் வேகத்தில் – தீர்ப்பதற்குச்
சக்ரா யுதமெடுத்துச் சத்தியத்தை மீறியதுன்
பக்தன் அவனிடரைப் போக்கவலோ? - திக்கறிவாய்
வெண்ணெய் மறைப்பவரும் வெல்லுவரோ? தாழியையும்
கொண்டே பறப்பாய்ய சோதையவள் – மண்ணைநீ
தின்றவாய் காட்டென்று தேடத் திருவாயுள்
வென்றவேழ் ஞாலம் வரத்திறந்தாய்! - அன்றி
எளியன் உனையென்றே எண்ணி இருந்தால்
வெளியு நிறையுவடி வாவாய்! - துளிசிந்தக்
குன்றைக் குடையாக்குங் கைவண்மை கால்வண்மை
கன்னில் அகலிகையின் கட்டுடைக்கும் - தன்னில்
எதுவளிக்க வென்றெண்ணி ஏங்கிக் கிடந்த
விதுரனளி வாழைவிருந் துண்டாய் - மதுரமுள
பாலில் தயிராகி மோராகி  வெண்ணையுமாய்
நாலாகி யல்லா நறுநெய்யாய் – மேலமிழ
நானிலமு நீர்படவே நின்றொழியா நின்றொழிலால்
மீனினமாய் யிவ்வுலகு மீட்டதுவும் - வானமுதம்
மேருமத் தாய்ப்பாம்பு மேவுகயி றாய்த்தாங்கக்
கூர்மாவ தாரத்தைக் கொண்டதுவும் - பேர்த்தும்
இராதுலகஞ் செய்த இரண்யாட்சன் கொல்ல
வராகமாய்த் தோன்றி வதைத்து, – தராத
வரம்பெற்றுத் தன்னை வணங்குக என்ற
இரணியனைக் கொன்றநர சிம்ம! – உரங்கொண்ட
காவலனாய் எம்முயிருங் காதல் புரிந்தறிய
ஆவலனாய் நிற்கு மருளாளா ! –மாவலியின்
வீறடக்க ஓரடியும் ஈரடியில் மூவுலகும்
ஆறுமன நான்மறைக்கு ளைம்புலனும் - கூற
சிரசரிந்து தந்தைசொல் சீராட்டுந் தாய்கொல்
பரசுராம னாய்க்கடலைப் பாரி(து) - அரசணைக்க
மாதர் பலகோடி மன்னர்க் குரிமையென்பார்
சீதை ஒருவளன்றிச் சிந்தையிலாய்! – நீவாழ்
குலங்காத்துத் தேனுகனைக் கொல்லுதற்கே மண்ணில்
பலராம னாயுதித்த பாங்கும்   - உலகளந்து
எவ்வழியும் காணும் இயல்பினனே என்னவர்பால்
இவ்வழிபோ  என்றே இயம்புவனோ? – செவ்வடிவ
மெல்லா மறிந்தவுனக் கென்னென்று நானுரைக்க?
நில்லா மனதிலவர் நாடினேன் ! - சொல்லவோ
கூடும் அவர்பெருமை? குன்றாத் தமிழ்க்கடலாம்!
நாடு மொருதுளிநான்! நீயறிவாய் !  - பீடுயர்த்துங்
கம்ப னடிப்பொடியாம் கண்ட அவர்பெருமை
இம்மா நிலத்தில் இனிதுறவே – கம்பனிதழ்
கம்பனந் தாதி கவிமனங் காட்டபெருங்
கம்பன் விழாக்கண்டும் காதலினால் – தம்மனதில்
ஏத்து மவர்பால்நீ ஏகின் வரவேற்றுப்
பூத்தூவு வாருன் பெருமையெலாம் – பாத்தமிழில்
சொல்லு மவர்மொழியில் சொக்கிக் கிடவாமல்
வெல்லுதமிழ் கண்டு வியக்காமல் - நல்லறிவு
கற்றோது முப்பாலும் கம்பன் திருமொழியும்
முற்றோதக் கேட்டதனில் மூழ்காமல் - எற்றுக்கென்
றற்பர் மனம்பொறா தாற்றுவர்‘அச் சிற்றுரைக்காய்ச்
செற்றே அவர்பால் சினவாமல் - பொற்புடைய
உன்பேரும் இன்றமிழுந் தன்னிருகண் என்பாரின்
மின்வலையில் சிக்கி மயங்காமல் – தன்னிகரில்
சொல்லோ வியங்கண்டென் சேதி மறவாமல்
கல்லேன் எனநீபோய் கற்காமல் – கொல்லவரு
வேற்றுமொழித் தாக்குறவே வேகுதமி ழாகுதியில்
கூற்றுவனுங் கொல்வரவர்  ஆறயிரு !  -  போற்றும்
இலக்கண ஆழிகடைந் தின்பத் தமிழைக்
கலக்கமறுத் துக்கொடுக்கக் கொள்வர் - பலகவிஞர்
சந்தக் கவிதைபல சாற்றிப் புகழ்படைப்பர்
வந்த செயல்மறந்து வாழ்த்தாதே! – எந்தமிழின்
பாவலரென் பார்மொழிப் போர்மறவ ரென்றுதமிழ்ச்
சேவகனை வைணவச் செல்வனென்பார் - நாவிலுறும்
அத்தேனெப் பேரிட் டழைத்தாலு மின்சுவையே
இத்தரணி யிற்கொண் டினிக்காதோ? - வித்தகனாம்
பாரதி தாசப் பெருநதியி னூற்றெனநில்
சாரதியே உன்னைச் சரணடைந்தேன் – யாரென்றே
என்னை அறியாது மென்மன தங்கவரின்
தொன்மைத் தமிழுறவில் தோய்ந்திடுதே! - இன்னுமுன்
அந்தமு மாதியிலா அவ்வுருவை வெண்டளையில்
அந்தாதி யாலளந்த ஆற்றலார்! - சிந்துங்
குருவருளே கொண்டு குறைவிலா ஞானத்
திருவரு ளாற்புகழ் தீட்டக் – கருவுயிர்த்துச்
சந்திரா அம்மை சனார்த்தனத் தந்தைக்கு
வந்துதிக்க நீயே வரந்தந்தாய்! – முந்தையர்செய்
எப்பயனோ அக்குலத்தை எங்கள் தமிழேத்த
இப்பிறவி வந்த இணையில்லார்! – ஒப்பி
உரஞ்செய் கருத்துச் சுதந்திரப்பண் பாடும்
பிரெஞ்சினர் தேயத்தில் போம்நீ – மறவாதென்
போற்றுதலைச் சற்றுப் புகல்வாய்ப்பின் அன்போடென்
ஆற்றாமை நோயும் அறைவாயேல் – ஏற்றியுனை
நெஞ்சமெனக் கொண்டோர்முன் நீநிற்க நெஞ்சினிக்கும்
கொஞ்சுதமிழ் சொல்லிக் குலவிடுவார் – விஞ்சமுதில்
உன்னை மறந்தாலும்  உன்னைச் சரணடைந்த
என்னை மறவாதே என்கண்ணா! – உன்மொழியும்
சொல்மறந்து  தன்றன் செயல்மறந்து கேட்பதிடை
மெல்லவென் சேதி மொழிந்திடுக. – “ கல்லா
இலக்கணத்தைக் கற்பிக்க ஏத்துதமிழ்ச் சங்க
இலக்கியமென் நெஞ்சி லிருத்த – உலைக்களத்தில்
பட்டுவே றாகப் படியும் இரும்பினையே
சுட்டுக்கூர் வாளாக்க“ச் சொல்லிடுவாய்! – பட்டறியா
தாசுற்ற வென்னறிவை யாட்கொள்ள ஆசானாய்
மாசுற்ற பொய்யறிவை மாற்றிவிட – பாசுரந்து
ஊட்டுந்தா யாகி உருவாக்குந் தந்தையுமாய்
மீட்டு மிசைத்தமிழால் மேம்படுத்த – தீட்டுஞ்
செழுங்கவிதைச் செல்வர் அவர்சொல்லென் உள்ளுள்
விழுவித்தாய் ஆயிரங்கா டாக்க – விழுந்தாலும்
வேரிடத்துச் சேர விரும்பும் மழைத்துளிபோல்
பாரிடத்து நானவரைப் பற்றியெழ – யாரிடத்தும்
கற்றறியா நுட்பம் கவிதை மரபறியச்
சிற்றறிவைச் சற்றெழுப்பிச் சிந்திக்க -  அற்பனையும்
ஆட்கொள்ள வேண்டுமென நீசொல்ல மாறுவரோ?
காட்டிவரு வாயென்றன் காதலை! – தீட்டி
அமிழ்ந்தேநான் தூதாய் அனுப்புகிறேன் கண்ணா
தமிழ்மாலை வாங்கிவந்து தா!

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

37 comments:

  1. கவிஞர் பாரதிதாசன் தமிழ் மீது கொண்ட காதலால்....

    நீல நிறமில்லா இந்த வண்ணக் கண்ணன் தூது சென்று சிற்றிலக்கியப் புலவர் வரிசையில் ஓர் இடம் பிடித்தீர்! திறமையுடன் கூடிய அருமையான பதிவின் பெருமை என்றும் பேசப்படும்.
    வாழ்க! வாழ்க!
    காப்பு போல விளக்கம் தந்து காப்பது நலம்

    ReplyDelete
    Replies
    1. முதல்பின்னூட்டம் மணவையாரிடமிருந்து வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!
      தங்களின் வாழ்த்து மகிழ்வூட்டுகிறது.
      சிற்றிலக்கியப் புலவர்களின் வரிசையில் இடம்பெறுவதைக் காட்டிலும் தங்களைப் போன்ற தமிழ் படித்தோரின் மனதில் இடம் பெறுவதைத்தான் மிக்க பேறென்று நினைக்கிறேன்.
      காப்பின் பொருள் விளக்கம் போல பாடலின் பொருளை விளக்க வேண்டும் என்ற தங்களின் கருத்திற்கு நன்றி!
      காப்பின் சொற்களை வெறும் சொற்பொருள் பின்வரு நிலையாகக் கருதிடக் கூடும் என்பதால் தான் விளக்க மளிக்கக் கருதினேன்.
      பாடலின் வரிகளை ஆழ்வார்களின் வரலாற்றையும் திருமாலின் அவதாரக்கதைகளையும், கிருஷ்ண லீலைகளையும் கொண்டு விளக்க வேண்டிவரும்.
      இந்தப் பதிவே நீண்டு விட்டது.
      இன்னும் பலமடங்கு நீண்டுவிடும் இதன் உரையாக்கம்.
      நிச்சயமாய்த் தங்களின் கருத்தை உளங்கொள்கிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. அன்பு நண்பருக்கு,

      தூது சொன்ன தூய உள்ளத்தை எண்ணி வியக்கிறேன். இவ்வளவு ஆற்றல்கள் புதைந்து கிடந்தும் தங்களின் மிகுந்த தன்னடக்கம், அல்லது தங்களை மேலாக நினைத்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை!. ஓ... அதனால் தாங்கள் இவ்வளவு உயரத்தில் இருக்கிறீர்களோ? இருக்கலாம்.
      வாழ்த்துகள். நிறை குடம் தழும்பாது என்பார்களே! அது இது தானோ?

      காப்பு போல விளக்கமளிக்க வேண்டியது இப்பொழுதுக்கல்ல... . இனி வருங்காலங்களில் ...ஆழ்வார்களின் வரலாறு, திருமாலின் அவதாரங்கள், கிருஷ்ணனின் லீலைகள் இவையெல்லாம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
      இவற்றிற்கு தனியாக உரையொன்று வருங்காலங்களில் வழங்கலாம்..
      நன்றி.

      Delete
  2. வணக்கம் !

    யார் அங்கே ?...ஊமைக்கனவுகளிற்கு ஒரு கூடைப் பொற் காசுகளை
    அள்ளி வழங்குகள் ! அப்பப்பா என்ன ஓர் ஆளுமை ! அறிவும் திறனும்
    கலந்து படைக்கப்பட அருமையான காவியம் !கண்ணன் விடும்
    தூது கண்டு கன்னித் தமிழும் வியந்திடும் இன்று !! வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள் சகோதரா .இந்தப் பாவரிகளைக் கண்டதும் வாயடைத்து
    நின்றேன் இதற்குக் கருத்து இடும் அளவிற்குக் கூட எம்மிடத்தில்
    புலமை இல்லையே என்று சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு அதன்
    பின்னர் தான் இக் கருத்தினை வழங்கியும் உள்ளேன் .எம் உயிரிலும்
    மேலான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்து நிக்கும் தங்களின்
    புலமை மென்மேலும் உலகம் மெச்சும் அளவிற்கு ஓங்கி வளர
    வேண்டும் .தமிழ்த் தாய் தங்களை எப்போதும் ஆசீர்வதிக்கட்டும் .
    மிக்க மகிழ்ச்சி அன்புச் சகோதரனே .வாழ்க தமிழ் ! அழைப்பிற்கு
    மிக்க நன்றி .

    ReplyDelete
    Replies
    1. சகோதரி !
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      இப்பதிவைப் படித்துத் தாங்கள் இடும் பின்னூட்டமே பலகூடைப் பொன் பெற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
      ஒரு கூடைப் பொன்னெல்லாம் இதன் முன்பு ஒன்றுமேயில்லை.
      தங்களின் வாழ்த்திற்கும் ஆசீர்வாதத்திற்கும் என் நன்றிகள்.
      இதை எழுதும் போதைய எனது ஆயாசங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டது தங்களின் சிலவரிப் பின்னூட்டம்!
      மரபறிந்தவர்கள் - மரபுபடைப்பவர்கள் இதனைக் குறித்துக் கூறும் போது கூடுதல் மகிழ்ச்சி தானே!
      மீண்டும் நன்றி சகோதரி!

      Delete
  3. வணக்கம் ஐயா!

    கண்ணனைத் தூதாய்க் கவியாத்த பாவலரே!
    என்னைத் தொலைத்தேனே இன்றிங்கு! - கண்கள்
    பெருகிடச் சொல்வேன்! பெருங்கவியே! காண்போம்
    உருவாகும் காவியத்தி லொன்று!

    பேச்சற்று எழுத வார்த்தைகள் தொலைந்த நிலையானேன்.
    கருத்துப் பகிரவும் தகுதி எனக்கில்லை!…

    கண்ணனையே தூதுவிட்ட பேராளரே!
    காப்பியந்தான் உங்கள் கவி!

    கண்ணன் தமிழ்மாலை வாங்கி வந்தால்
    இந்த ஏழைக்கும் ஒரு பகுதி - பிரதி தருவீர்களா?...

    தூதுக்கவி அற்புதமாய் இருக்கின்றது.!
    வணங்கி வாழ்த்துகிறேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      தாங்கள் தானே அய்யாவின் பொன்விழா குறித்து முதற் பதிவிட்டீர்கள்!
      உங்கள் பதிவிலிருந்துதான் என் பதிவிற்கான படத்தை எடுத்துக் கொண்டேன்.
      தமிழ்மாலை பிரதி என்ன தமிழ்மாலையே உங்களுக்கு அய்யாவிடமிருந்து கிடைத்து விட்டதே!
      கருத்துப் பதியும் தகுதி மட்டுமல்ல!
      இதனினும் சிறந்தபல படைப்புகளே நீங்கள் படைப்பது!
      இன்னும் பல படைக்கவும் அளிக்கவும் தங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிருக்கிறது.
      பதிவு சற்று நீண்டுவிட்டது படிப்பார்களோ என நினைத்தேன்!
      படித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள்!
      ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிட உரிமையோடு உங்களை வேண்டுகிறேன். நன்றி!

      Delete
    2. ஐயா வணக்கம்!

      தாங்கள் என்மீது கொண்ட இத்தனை உயர்வெண்ணத்திற்கு உரியவளா என்றால் இல்லை!
      உண்மையைச் சொன்னால் நேற்று உங்கள் கவி பார்த்து இரவு நான் தூங்கவே இல்லை. உங்கள் கவிவரிகள் மனக்கண்களில் ஓடிக் கொண்டே இருந்தது. அப்பப்பா!... எப்படி?..... இப்படி?.. என்று வெகுநேரம் சிந்தித்தேன்.

      பிரமிப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை...

      தவறுகளைச் சுட்டிக் காட்டுமளவிற்கு நான் இன்னும் கற்கவில்லை ஐயா!...:)

      மேலும்,.. நேரமிருந்தால் எனது வலைத்தளப்
      புதிய பதிவினைப் பார்க்கக், கருத்திட அழைக்கின்றேன்.
      வராவிட்டால் குறையில்லை!.. வந்தால் மகிழ்வேன்!

      மிக்க நன்றி ஐயா!

      http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_16.html

      Delete
    3. வணக்கம் ஐயா!

      தளங்களில் தங்களைக் காணவில்லையே!..:(
      நலம்தானே!..

      நேரமிருப்பின் என் தளத்திற்கு வந்து
      தங்களின் கருத்தினைப் பதியுமாறு
      விரும்பிக் கேட்டுக்கொள்கின்றேன்!
      மிக்க நன்றி ஐயா!

      http://ilayanila16.blogspot.de/2014/09/blog-post_18.html

      Delete
  4. அற்புதம் எனும் சொல்லுக்கான
    விளக்கமாக இக்கவிதை எனக்குப் படுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்.
      தங்களின் முதல் வருகையும் பின்னூட்டமும் மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றன.
      மிக்க நன்றி!

      Delete
  5. பரம்பொருள் கண்ணனிடத்தில் காதல் பூண்ட கவிதாசன் நான்! கண்ணன் கழலிணையே கண்டு களிப்பதைப் பிறப்பின் பேறாக எண்ணி வாழும் தமிழ்தாசன் நான்!

    கண்ணன் அழகினை
    பண்ணில் இசைப்பவன்!
    எண்ணம் முழுவதும்
    நண்ணும் நாரணம்!

    விண்ணின் ஒளியிலும்
    மண்ணின் வளத்திலும்
    உண்ணும் உணவிலும்
    கண்ணன் தெரிகிறான்!

    என்று எண்ணி வாழும் திருமால் அடியவன் நான்! என்னைத் தேடிக் கண்ணன் வருகிறான்! செந்தமிழ் பாடிக் கண்ணன் வருகிறான்! இலக்கணச் செல்வர் த. சோசப் தூதினைச் சூடிக் கண்ணன் வருகிறான்! கொஞ்சும் தமிழ் கேட்கக் கூத்தாடிக் கண்ணன் வருகிறான்! அடியவன், அடியவர்க்கடியவன் என்னைக் காண ஓடி கண்ணன் வருகிறான்!

    என்ன தவம் நான் செய்தேன்? என்ன தவம் நான் செய்தேன்? கன்னல் தமிழில் இந்தக் கவிஞனின் பெயரும் இணைந்தொளிர்கிறது. கண்ணனின் பெயருடன் கவி வண்ணனாகிய என் பெயரும் புணர்ந்தொளிர்கிறது. எப்பிறப்பில் செய்த பயனோ? இலக்கணச் செல்வரின் நட்பை நான் பெற்றது. தேன்சுரக்கும் தமிழில் கான்மணக்கும் கவியில் வானளக்கும் புகழில் அடியேன் என்னைப் பாடிப் பரவியது. இதற்கு இணையாக என்னால் என்ன தரமுடியும். இணையாக என்னிடம் ஒன்றுமில்லை! என்னையே தருகின்றேன்.

    என்ன தவம்செய்தேன்! ஈடில் கவிசோசப்
    இன்பத் தமிழ்நட்பை நான்எய்த! - துன்பமெலாம்
    போகும் புகழ்கண்ணன் பொற்றூதைக் கண்ணுற்றால்
    வேகும் வினைகள் விரைந்து!

    எப்பிறப்பில் செய்த இனியவையோ? கண்ணனவன்
    இப்பிறப்பில் வந்தான் எழிற்றூதாய்! - அப்பப்பா
    துள்ளி மனமாடும்! தூயவன் நல்வரவை
    அள்ளிக் கவிபாடும் ஆழ்ந்து!

    கண்ணன் திருவடியில் கட்டுண்டே என்னெஞ்சம்
    வண்ணத் தமிழின் வளங்காணும்! - விண்ணின்
    பெருமான் விடுதூதாய் வந்தக்கால் பெற்றேன்
    திருநாள் திகழும்தித் திப்பு!

    திருமலை நாதா! திகழொளி செல்வா!
    அருங்கலை அந்தமிழை ஆளும் - திருவரங்கா!
    எந்தப் பிறப்பிலும் சந்தக் கவி.சோசப்
    சொந்த உறவாகச் சொல்லு!

    நன்றி! நனிநன்றி! கோடிமுறை சொல்லிநான்
    ஒன்றிப் படித்திட்டேன் ஒண்தூதை! - மன்றத்தில்
    அன்றடைந்த இன்பத்தை இன்றடைந்து நிற்கின்றேன்!
    என்றடைப்பேன் இக்கடனை இங்கு!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
    16.09.2014

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்.
      என் முகம் போலும் அறியாமல் இந்த இணைய உலகில் புகுந்த ஆரம்ப நாட்களிலேயே உங்கள் பதிவில் என்னைக் குறித்து எழுதியவர்கள் தாங்கள்!
      ஏறக்குறைய மூன்றுமாதங்களாயிற்று நான் இவ்விணைய உலகில் அடியெடுத்து வைத்து....!
      முத்துநிலவன் அய்யா,
      தோழர். மது, பாண்டியன் மற்றும் அன்றைய இணையப்பயிற்சி வகுப்பில் என்னை உருவாக்கியோர் போலவே தங்களையும் நன்றியுடன் நினைக்கிறேன்.
      தங்கள் பொன் விழாவிற்கு என்னால் ஆன சிறு காணிக்கை இது.
      இன்னும் பலருக்கு நல்ல தமிழ் சொல்லிக்கொடுத்து உருவாக்குங்கள்.
      மரபுக் கவிதைகள் மறந்து போகாதிருக்கப் பயிற்சியளியுங்கள்!
      தங்களின் தமிழ்ப்பணி சிறக்கட்டும்.
      வயதிலும் தமிழனுபவத்திலும் தங்களோடு ஒப்பிடுங்கால் நான் சிறுவன்தான். கற்றுக்கொடுங்கள்.
      நான் செய்யும் பிழைகளையும் திருத்திடுங்கள்!
      என்றும் நன்றி மறவேன்.

      Delete
    2. அன்பு நண்பர் விஜூ அவர்களுக்கு வணக்கம். பாவலர் அய்யா பாரதிதாசன் அவர்களின் பொன்விழா பற்றித் தங்கள் தளத்தின் வழியே அறிந்தேன். அவர்களின் பாத்திறன் இளைய தமிழர்க்கும் வழிகாட்டுவதாய் இன்னும் புதுமைகள்பல படைத்திட ஊக்குவிப்பதாய் அமைய என் வாழ்த்துகளைத் தங்கள் தளத்தின் வழியே தெரிவித்து மகிழ்கிறேன். வாழ்க பல்லாண்டு. வளர்க அவர்தம் கவித்தொண்டு.

      Delete
    3. அய்யா!
      வணக்கம்.
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி!
      தங்களது வாழ்த்து கவிஞர்க்கு நிச்சயமாக மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கும்!
      மிக்க நன்றி

      Delete
  6. வணக்கம்



    தங்களுக்கு  விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்


    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:



    -நன்றி-


    -அன்புடன்-


    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் எல்லார்க்கும் எப்போதும் இடும் பின்னூட்டங்களை விடச் சிறந்த விருது உள்ளதா திரு. ரூபன்!
      இருந்தாலும் வந்த விருதை வேண்டாமென்று விட்டுவிடுவேனா என்ன?
      தங்களின் விருதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுவிட்டேன்!
      கவிதை போட்டியில் கலந்து கொள்ளாமலேயே உங்கள் கையால் விருது பெற்றுவிட்டேன்,,,
      எப்படி........!!!
      அன்பிற்கு நன்றி!!

      Delete
  7. பாரதி தாசனிடம் பாடிடப் போனானா
    சாரதி கண்ணன்? சரியில்லை! – பூரணமாய்
    நற்கவி பாடிடும் நல்லிசையில் தான்மயங்கி
    சிற்பமாய் நிற்பான் சிரித்து!

    அருமையான தூது ஐயா.
    இதற்கு மேல் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.

    ReplyDelete
    Replies


    1. வணக்கம்!

      எல்லாம் அறிந்தவனை! இவ்வுலகை ஓரடியால்
      மெல்ல அளந்தவனை! விண்ணவனை! - வல்லவனை!
      கண்ணனை ஈா்க்கக் கவியிசைத்தேன்! நான்மயங்கி
      வண்ணனை வந்தேன் வலம்!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete

    2. வணக்கம்!

      ஆழ்வார் அருளிய அந்தமிழை நன்குண்டு
      வாழ்பவன் கண்ணன்! வளர்தமிழில் - சூழ்பவன்!
      உண்மை! உயர்கவி உள்ளறிந்து துாதுரைக்கும்
      தண்மை உடையவன் தான்!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  8. இனிய இலக்கிய பதிவு

    தொடருங்கள்

    ReplyDelete
  9. ஆஹா! இதற்கு கருத்திட எனக்குத் தகுதியில்லை..ஆனால் ஒன்று மட்டும் கேட்கிறேன், உங்களுக்குத் தமிழ்மாலை கிடைத்தவுடன் எனக்கும் கொடுங்கள் அண்ணா :)

    நேரமிருப்பின் இப்பதிவைப் பார்த்துக் கருத்துச் சொல்லுங்கள், நன்றி
    http://thaenmaduratamil.blogspot.com/2014/09/will-he-say-not-obligated.html

    ReplyDelete
    Replies
    1. பதிலிட்டு விட்டேன்.
      நீங்களெல்லாம் கருத்திடத் தகுதியில்லை என்றால் நான் என்ன எழுதுவது.
      தமிழ் மாலை என்ன அது பூக்கும் சங்க இலக்கியச் சோலையே இருக்கிறதே உங்களிடம்!
      பிறகென்ன..?
      நன்றி சகோதரி!

      Delete
  10. விடுமுறை விண்ணப்பத்தின் கெடுவையும் மீறிய கால தாமதத்துக்கு வருந்துகிறேன் சகோதரரே,

    இவ்வளவு சிறப்பான மரபு கவிதையை ஒரே மூச்சில் படித்தாய்ந்து ரசிக்கும் அளவுக்கான மொழி திறன் இந்த சாமானியனுக்கு கிடையாது. இன்று பதிவிறக்கம் செய்து கொண்டேன் ! சொல் பிரித்து படித்து புரிந்து கொள்ள நாட்களாகலாம் ! ஆனால் தகுதியானவர்களின் வாழ்த்தே தங்கள் கவிதையின் தரத்துக்கு சான்று.

    உங்களால் தமிழுக்கு இன்னும் பல அணிகலன்கள் தேவை.

    கி. பாரதிதாசன் அவர்களின் பொன்விழாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      வணக்கம். நீண்ட நாள் கழித்து வரும் தங்கள் வருகையும் பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.
      எனக்காக இதைத் தாங்கள் படித்தமைக்கு படிக்க முயற்சி செய்கின்றமைக்கு நன்றி!
      தங்களின் வாழ்த்துகளுக்கும் நன்றி

      Delete
  11. கண்ணன் விடுதூதில் உங்கள் புலமை கண்டு வியக்கின்றேன்
    என்ன அழகான வரிகள் கண்ணனே நேரில் வந்து வார்த்தைகள் தந்தாரோ ?
    பாவேந்தர் பாரதிதாசன் ஐயாவின் பொன்விழா சிறக்க இத்தூது ஒன்றே போதுமானது மிக்க நன்றி கவிஞரே ...பொன்விழா நாயகர் கி. பாரதிதாசன் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    விழா சிறக்க உளமார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. அன்பிற்கினிய சீராளரே!
      தாங்கள் என் மேல் கொண்ட அன்பினுக்கு நன்றி!
      நீங்களெல்லாம் முயன்றால் இது போல் இன்னும் ஆயிரம் தூதுகளும் உலாக்களும் உருவாக்கக் கூடுமே....!
      தங்கள் கவிதைகளின் ரசிகன் நான்!
      என்னுடைய பதிவுகளைத் தாங்கள் படிப்பதே எனக்குப் பேரானந்தம் தான்!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

      Delete
  12. அன்புடையீர் வணக்கம்! எனது ” திருச்சி மாவட்ட வலைப் பதிவர்களே! ” http://tthamizhelango.blogspot.com/2014/09/blog-post_30.html என்ற பதிவினில் தங்களைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். தங்களது கருத்துரையையும் தங்களுக்குத் தெரிந்த இங்கு குறிப்பிடப்படாத திருச்சி மாவட்டத்து வலைப் பதிவர் பற்றியும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா!
      இவ்வலையுலகிற்கு நான் புதியவன்.
      திருச்சி மாவட்டத்து வலைப்பதிவர் குறித்து எனக்குத் தெரிந்ததை நிச்சயமயாய்த் தெரிவிக்கிறேன்.
      நன்றி

      Delete
  13. தங்களது அன்பினுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. வாய் பிளந்து ....எழுத வரவில்லை...ஐயா....உங்கள் அறிவிற்கும், புலமைக்கும், தமிழுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் பல பல பல.....
    யம்மாடியோவ்! நாங்கள் இந்தப் பக்கம் பின்னூட்டம் எல்லாம் இட முடியாதுப்பா...வர்ரோம் உங்கள் தமிழில் நனைகின்றோம், ரசிக்கின்றோம்....களிக்கின்றோம்....மூச்சடைத்து....வுடு ஜூட்!

    நாங்கள் எல்லாம் உங்களைப் போன்ற பதிவர்கள் வலைக்கு வந்து பின்னூட்டம் இடத் தகுதியானவர்களா என்று தோன்றுகின்றது! கடலப்பா......

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      இது அன்பின் மிகையல்லாமல் வேறென்ன..???
      தகுதி பற்றிய அய்யப்பாடா ?
      உங்களுக்கா..!
      ஏண்டா எழுதுற .. என்று வேண்டுமானால் கேட்டுவிடுங்கள் .
      அதற்காக இப்படியெல்லாம் சொன்னால் நான் என்ன செய்யே???
      கடலும் குறுமுனியின் கமண்டலத்துள் அடக்கம் என்பது தாங்கள் அறியாதது இல்லையே குருவே!
      நன்றி

      Delete
  15. அன்பு நண்பா, என் பதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் குறிப்பிட்ட பதிவு இது என்று எண்ணுகிறேன். குறையோ நிறையோ என் மனதில் பட்டதைக் கூறுபவன் நான். முதலில் பதிவைப் படித்தபின் பின்னூட்டங்களை எழுதியவர்கள் யாரென்று நோட்டம் விட்டால் எல்லோரும் கவிஞர்கள். எனக்கு இதைப் படித்துப் புரிந்து கொள்ளவே நிறைய நேரம் ஆகிற்று. இதில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளைக் தெரியாதவர்கள் படித்தால் புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. இதைத்தான் நான் மரபு கவிதை எழுதும் போதுவரும் சிக்கல் என்கிறேன்சீருக்காகவும் தளைக்காகவும் வார்த்தைகளைப் பிரித்து எழுதும் நிலை. அவற்றைச்சேர்த்துப் படிப்பதே சிரமமாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எழுத்துக்கள் சொல்ல வந்ததை படிப்பவர்கள் புரிந்து கொள்ளுமாறு எழுதுதல் வேண்டும். இல்லாவிட்டால் பண்டிதர்களே படிக்க வர வேண்டும் உங்களிடம் மொழியின் ஆளுமை நன்றாகத் தெரிகிறது வலைப் பூவில் எழுதும் அனைவரும் அப்படிப்பட்டவர்களல்ல. நம் எழுத்து எல்லோருக்கும் போய்ச் சேர வேண்டும் இன்னொன்று புரியாததைப் புரியவில்லை என்று சொல்லிப் பின்னூட்டமிடுபவர்கள் மிகக் குறைவு. அதை எழுதுபவனும் எதிர்பார்ப்பதில்லை. புகழ்ச்சி எல்லோருக்கும் தேவைதான் குறைகள் என்று தோன்றினால் எதற்கு வம்பு என்று பதிவைத் தாண்டிப் போய் விடுகிறார்கள். உங்கள எழுத்துக்களில் பொருட் குற்றமோ சொற்குற்றமோ காணும் அளவுக்கு நான் தேர்ச்சி பெற்றவனல்ல. திரு துளசிதரனின் பின்னூட்டம் பாருங்கள் அவர் சொல்வது போல் தமிழில் நனைந்து போகிறோம். ஒரு பிரமிப்பு ஏற்படுத்துவதுதான் உங்கள் நோக்கமா.அவர் உங்கள் நண்பர். கூறிவிட்டார். இந்த அவதாரக் கதைகளை நானும் எழுதி இருக்கிறேன். நிகழ்ச்சிகள் தெரியாதவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் இன்னொன்று. உங்களிடம் எதையாவது தெரிவிக்க விரும்பினால் அதற்கான கணினியின் முகவரியோ உங்களைப் பற்றிய செய்திகளோ இல்லை. ஏன்தான் இது என்று புரிவதில்லை.கிருஷ்ணனின் கதையை நான் “கிருஷ்ணாயணம் “ என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன். மரபுக் கவிதை அல்ல. கவிதை மாதிரி தோற்றம் கொண்டுள்ளதே. சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள். இன்னும் சில பதிவுகளை நீங்கள் பார்க்க வேண்டும் என்னும் உந்துதல் எனக்கு ஏற்படுகிறது. கணினி முகவரி கொடுத்தால் தேடும் சிரமம் இல்லாமல் பதிவுக்குப் போய் படிக்கலாம். மனம் திறந்து குறையோ நிறையோ கூறுவேன் என்னும் உங்கள் எண்ணம் சரிதான் என்று புரிந்திருக்குமே
    “கிருஷ்ணாயணம் ”
    gmbat1649.blogspot.in/2011/10/blog-post_21.html
    வாழ்த்துக்கள். : .

    ReplyDelete