பீடுகளால் புனிதப்படுத்தப்பட்ட
ஆண்டைகளின் அரியாசனங்களின் கீழ்
நசுக்கப்பட்டுக் கிடக்கும் விரல்கள் நமதானதில்லை!
- நிம்மதியோடிரு!
ஏழ்மையின் கண்ணிகளில் சிக்கி
உயிர்தரிக்க ஒரு வேளை உணவுக்காய்
இரந்து கையேந்தும் அந்தக் குழந்தைகளின் வேர்
நம்மண்ணில் இல்லை! - நிம்மதியோடிரு!
இயந்திரப்பறவைகள் இடும் முட்டைகளில் இருந்து
சிறகடித்துக் கிளம்பும் கொலைப்பறவைகள்
நம்திசை நோக்கி இல்லை! - நிம்மதியோடிரு!
குதறப்பட்ட காயங்களோடு
குருதி வழிய குப்பையில் வீசப்பட்டவளில்,
அமிலக் குழம்பால் அழிக்கப்பட்டவளில்,
எவரும் நம் சகோதரிகள் இல்லை! - நிம்மதியோடிரு!
எரிதிரவத்தில் நனைந்து சூடேறக்
கடைதேடி நின்று
குளிர்காய்ந்து கொண்டிருக்கும்
விறகுகள் நம் வனத்தவை அல்ல! - நிம்மதியோடிரு!
இந்த நிம்மதியோடு,
எங்கோ இவை நடக்கும்போதெல்லாம்,
‘மனிதநேயமும் மக்கள் பண்பாடும் எங்கே போனதோ?’
என்ற நமது அறச்சீற்றத்தை அவ்வப்போது வெளிப்படுத்த
மறக்க வேண்டாம்!
கவனம்!!!
தந்திரங்களால் பதனிடப்பட்டுச்
சுயநலப் பேழைகளுள் பத்திரப்படுத்தப்பட்ட
நமது இதயத்தை
வேறெவரும் பார்த்துவிடாதிருக்கட்டும்!
உறுதி மொழி.
1. “ நிம்மதியோடிரு “ என்னுந் தலைப்பில், புதுக்கவிதை
வகைமையின் கீழ் எழுதப்பெற்ற இப்படைப்பு,
எனது சொந்தப் படைப்பே என
உறுதி அளிக்கிறேன்.
2. இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம்
நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ க்காகவே எழுதப்பட்டது என
உறுதி அளிக்கிறேன்.
(3) இதற்கு முன் வெளியான
படைப்பன்று எனவும் முடிவு வெளிவரும்
வரை வேறு இதழ் எதிலும்
வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன்.
பட உதவி. நன்றி - https://encrypted-tbn2.gstatic.com/
Tweet |
தந்திரங்களால் பதனிடப்பட்டுச்
ReplyDeleteசுயநலப் பேழைகளுள் பத்திரப்படுத்தப்பட்ட நமது இதயத்தை
வேறெவரும் பார்த்துவிடாதிருக்கட்டும்! எத்தனை உண்மை.........
எத்தனை சாட்டை அடி இது எம் ஒவ்வொருவருக்கும். மனசாட்சியை பூட்டி வைத்து விட்டு நிம்மதியாக உள்ளோமே. எங்கள் பாடு எங்கள் கவலை என்று....... ம்..ம் அருமையாக சொன்னீர்கள். வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!
தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி அம்மா.
Deleteதங்கள் படைப்பு நமது விழாத்தளத்தின் போட்டிப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteபார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html
இன்று இரவுக்குள் பிற தலைப்புகளிலும் எழுதி அனுப்பலாமே நண்பரே? நன்றி
நன்றி ஐயா.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘நிம்மதியோடிரு!’ -கவிதை நிம்மதியிழந்து தவிக்கும் மனிதக் காயங்களுக்கு மருந்திடட்டும்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
த.ம.3
நன்றி ஐயா.
Deleteஅருமையான கவிதை போட்டியில் வெற்றி கிடைக்கட்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா.
Delete// தந்திரங்களால் பதனிடப்பட்டுச்
ReplyDeleteசுயநலப் பேழைகளுள் பத்திரப்படுத்தப்பட்ட நமது இதயத்தை
வேறெவரும் பார்த்துவிடாதிருக்கட்டும்!//
உச்சம்!
தம +1
நன்றி ஐயா.
Deleteஐயா.. நிம்மதியோடு இருப்பதா?..
ReplyDeleteஉணர்வுகளை உறைநிலையில் வைத்திருப்பவன் நிம்மதியோடிருக்கட்டும்!
இதயத்தை இரும்பாய் இறுக்கியவன் நிம்மதியோடிருக்கட்டும்!
நினைவுருக்கி நரம்பு கிழித்து இரத்தம் பீறிட
நெஞ்சை நெகிழவைக்கும் படைப்பு ஐயா!
வெற்றியீட்ட உளமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி சகோ.
Delete//எங்கோ இவை நடக்கும்போதெல்லாம்,
ReplyDelete‘மனிதநேயமும் மக்கள் பண்பாடும் எங்கே போனதோ?’
என்ற நமது அறச்சீற்றத்தை அவ்வப்போது வெளிப்படுத்த மறக்க வேண்டாம்!// - அறச் சீற்றம் எனும் பெயரில் வெறுமே எழுதிக் கொண்டு மட்டுமே இருக்கும் எனக்கும் சுளீர் என்கிறது. செய்வேன்!... கண்டிப்பாய் ஏதேனும் செய்வேன்!... அதுவரை இந்த அடியை என் மேனி மறவாதிருக்கட்டும்!
அற்புதமான கவிதை ஐயா! மிக்க நன்றி!
ஐயா வணக்கம்.
Deleteநானும் இதன் உள் தவிப்போடு வெந்துகிடப்பவன்தான்.
தங்களின் உணர்வுகளைப் படிக்கிறேன் எழுத்தும் மொழியும் கடந்து.
நன்றி.
நன்றி ஐயா!
Deleteஎங்கோ இவை நடக்கும்போதெல்லாம்,
ReplyDelete‘மனிதநேயமும் மக்கள் பண்பாடும் எங்கே போனதோ?’
அற்புத வரிகள் நண்பரே
வெற்றி பெற வாழ்த்துக்கள்
தம +1
நன்றி நண்பரே.
Deleteஉண்மைதான்,,,,
ReplyDeleteநம்மளவில் நாம் நலமாக இருக்கிறோம் ,,,,,
மனம் வேதனை,,, மனிதநேயம் வளருமா??
அருமையான வரிகள் ஐயா,
வாழ்த்துக்கள், வெற்றிபெற,, நன்றி.
நன்றி பேராசிரியரே.
Deleteஅப்பப்பா அசந்து நிற்கிறேன். வாழ்த்துகள் சகோதரர். தொடரட்டும் தங்கள் சமூகப்பார்வை.
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஉங்கள் கவிதையை படித்த பின் என்னால் நிம்மதியாய் இருக்க முடியவில்லை (
ReplyDeleteவாழ்த்துகள்:)
நன்றி ஐயா.
Deleteஅருமை... வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஆகா அருளையான கவிதை! சொல்ல வந்ததை சொல்ல வேண்டிய முறைப்படி சொல்லும் இம்முறையே வெல்லும்! வெற்றி தேடிவரும்!
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteபுதுக்கவிதை மூலம் மனிதர்களின் சுயநலத்தை அருமையாய் சாடியிருக்கிறீர்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநிம்மதியோடிரு என்று சொல்லும் ஒவ்வொரு முறையும் உண்மை முகத்தில் அறைகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநன்றி சகோ.
Delete
ReplyDeleteவணக்கம்!
போட்டிக் கவியடிகள் பொங்கும் உணர்வேந்தி
ஈட்டிபோல் குத்தும் எனை!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
எனைபொருட் டாக்கி எழுதிப்போம் வெண்பா
Deleteவினைக்காணத் தோன்றும் வியப்பு
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா