Wednesday 3 May 2017

ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3


பல மாதங்களுக்கு முன் எழுதத் தொடங்கிய ஒரு தொடர்பதிவை, நீண்ட இடைவெளிக்கும் வேறுவேறு பதிவுகளுக்கும் பின் தொடரும்போது சில சங்கடங்கள் இருக்கின்றன.

முதலாவது, முன்பு படித்தவர்களே அதன் தொடர்ச்சியை மறந்திருப்பர்.

புதிதாய்ப் படிப்பவர்களுக்குத் தலையும் வாலும் புரியாது.

ஒரு தொடரினை முடித்துவிட்டு அடுத்த தொடரினைத் தொடங்கலாம் என்றாலோ, ஒரே மையக்கருத்தை வைத்துத் தொடர்ந்து எழுதுவது பொது வாசிப்பில் அலுப்பூட்டக்கூடும் என்பதாலும், வேறு  பொருள் பற்றி இடையிடையே பேச வேண்டி இருக்கின்றமையாலும் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

தொடர் பதிவின் சாரத்தை நினைவூட்டவும், மேலும் தொடரவும், முன்னிரண்டு பதிவுகளின்  சுருக்கத்தைத் தருகிறேன்.

இந்நிகழ்வின் சூழலும் களமும் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.

அவள் இடையர் குலத்தைச் சேர்ந்தவள். ஒருவனை விரும்புகிறாள். அவர்கள் மரபுப்படி அவளினத்துப் பெண்ணை மணம் புரிய விரும்புகிறவன் அப்பெண்ணின் வீட்டுக்காளையை அடக்க வேண்டும். அதற்காகக் குறிப்பிட்ட நாளில் தொழு ( ஏறு தழுவும் களம் ) ஆயத்தப்படுத்தப் படுகிறது.

மணம் செய்ய விரும்புகின்ற ஆண்கள், காளைகளை அடக்கத் தயாராகின்றனர்.

ஏறுகள் தொழுவில் இறக்கிவிடப்படுகின்றன.

அவனும் அங்கு வருகிறான்.

அவன் கண்முன்னேயே  அடக்க இறங்குகின்றவருள் மூவரைக் காளைகள் கொடூரமாகக் குத்திச் சாய்க்கின்றன.

அவளது கண்களில் பயம் தெரிகிறது.

தனது காதலன் வெற்றிகரமாகத் தன்வீட்டுக் காளையை அடக்கிவிடுவானா?

அவளுக்கு அருகில் நிற்கும் தோழி அதைக் கவனிக்கிறாள்.

அந்த நேரம்பார்த்து, ஆயர் தம் குழல்களை ஊதுகின்றனர்.

இது நல்ல சகுனம். உன் காதலனுக்கு ஒன்றும் ஆகாது. அவன் நம் காளையை அடக்கி உன்னை மணம் புரிந்து கொள்வான் என்று அவளைத் தேற்றுகிறாள் தோழி.

பின், அவள் மெல்ல நடந்து தலைவியின் காதலன் நிற்கும் இடத்துக்குப் போகிறΠள்.

( இது சுருக்கம்தான். பழந்தமிழ் இலக்கியத்தின் நயங்களைக் காண விரும்புவோர் இந்தத் தொடர்பதிவின் முந்தைய பதிவுகளைக் கீழே கண்ட சுட்டியைச் சொடுக்கிப் பார்த்துத் தொடர்க )இனி……………..,

கண் முன்னே மூன்று பேரைக் குத்திச் சிதைத்த காளைகளைக் கண்ட தலைவனின் மனநிலை எவ்வாறிருக்கும்.

அவனைத் தேடிச் சென்று தோழி சொல்கிறாள்.

“குழலோசை கேட்டாய் அல்லவா?

எவ்வளவு நல்ல சகுனம்.

மதயானையை விட ஆற்றல் உடைய தலைவியின் வீட்டுக் காளையைக் கை நெகிழ விடாமல் அடக்கித் தலைவியின் தோள்களில் வெற்றிக் கொடியை அணிவித்து அவனை உனக்கு உரிமையாக்கிக் கொள்ளப் போகிறாய் என்பதற்கு அறிகுறியாகத்தான் அக்குழலோசை ஒலித்தது.

இவ்வாறு அவனை ஆயத்தப்படுத்தியபின் தோழி தலைவியிடம் செல்கிறாள்.

 “ கடாஅக் களிற்றினுங் கண்ணஞ்சா வேற்றை
விடாஅதுநீ கொள்குவை யாகிற் படாஅகை
யீன்றன வாயமக டோள்.

( கடாஅக் களிறு – மதயானை. படாஅகை – பதாகை (கொடி)

இப்பொழுது தலைவியைச் சார்ந்தவர்கள் தங்கள் காளையைக் களத்தில் இறக்கிவிட ஆயத்தமாகின்றனர்.

தோழி தலைவியிடம் சொல்கிறாள்.,

“பகலில் விரிந்த மாலையைச் சூடியவன், வருந்திய குழலினை உடையவன், கம்பினை இரு தோளிலும் பதித்துக் கொண்டு கைகளால் பிடித்து வருபவன் இவர்கள் எல்லாம் பிறருக்குச் சேவைபுரிபர்கள். அவர்களுக்கு இக்காளையை அடக்கல் அரிது. இந்தக் காளையை அடக்குபவனுக்குத்தான் உன்னை மணமுடித்துக் கொடுப்பதாக உன்னவர்கள் கூறுகின்றனர். எனவே நம் காளையை அடக்குதற்கு உன் காதலனே தகுதியானவன்.

 “ பகலிடக் கண்ணியன் பைதற் குழலன்
சுவன்மிசைக் கோலசைத்த கைய னயலது
கொல்லேறு சாட விருந்தார்க்கெம் பல்லிருங்
கூந்த லணைகொடுப்பேம் யாம்

( பகலிடக் கண்ணியன் – பகலில் மலர்ந்த மலர் மாலையைச் சூடியவன், பைதல் குழலன் – வருத்தத்தையுடைய குழலை உடையவன்.
சுவல் மிசை – தோள் பகுதியில். கூந்தல் அணை கொடுத்தல் – பெண்ணைக் கொள்ளும் உரிமையை அளித்தல் )

காளைகள் இறக்கி விடப்படுகின்றன.

தலைவியின் அச்சம் அதிகரிக்கிறது.

அதனைப் போக்கும் விதத்தில் தோழி சொல்கிறாள்.

நம் காளையைப்பற்றி நான் சொன்னபோது, நம்முடைய பசுக்கூட்டங்களிடையே நின்றுகொண்டு, “ என்னைத் தவிர வேறு யாரால் இந்தக் காளையை அடக்க முடியும்? ” என்று அவன்  உறுதிபடக் கூறினான்.

அவனது அந்த உறுதி உன் விருப்பத்தை நிறைவேற்றும்.

அவன் காளையை அடக்குவேன் என்று சொன்ன போது எனது இடது கண் துடித்தது. அது நல்ல நிமித்தமாகும்

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அவன் நம் காளையை அடக்கி உன்னை மணமுடிப்பது உறுதி.

“கோளாளர் என்னொப்பா ரில்லென நம்மானுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கொருநாள்
கேளாள னாகாமை யில்லை யவர்கண்டு
வேளாண்மை செய்தன கண்

(கோளாளர் – கொள்ளுபவர். இங்குத் தலைவியைக் கொள்ளும் தலைவன். தாளாண்மை – முயற்சியின் வலிமை. கேளாளன் – உறவினன் ( இங்குக் கணவன் ) கண் வேளாண்மை செய்தல் – கண் துடித்தல் )

ஏறுதழுவுமிடத்தில் வீரர்களைத் தாக்கியும் அவர்களுக்குப் பிடிகொடாமல் ஓடியும் ஏறுகள் களைத்தன. அதனைத் தழுவ முயன்ற ஆயர்களும் காயம் பட்டனர்.

ஏறுகளைத் தழுவி அடக்க முடியாமல் காயம்பட்ட வீரர்களைப் பொதுமகளிர் விரும்பி அழைத்துக் கொண்டு முல்லை பூத்த சோலைக்குச் சென்றனர்.

ஆங்கு,
ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார்
நாறிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லோரு
முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ
டெல்லாம் புணர்குறிக் கொண்டு

பாடல் முடிந்தது. பாடல் மட்டும்தான்.


நயங்கள்.

1. கூந்தல் அணை கொடுத்தல் – பழந்தமிழ் மரபில் பெண்களின் கூந்தல் அவளுடைய திருமண நிகழ்வோடு பெரிதும் தொடர்புடையதாய் இருந்தது. திருமணம் புரிந்தற்கு அடையாளமாகத் திருமணமான  பெண்கள் மட்டும் பூச்சூடும் வழக்கம் இருந்திருக்கிறது. கூந்தல் அணை கொடுத்தல் என்னும் சொல்லாடல் ஒரு பெண்ணை ஒருவனுக்கு உரிமையாக்குதல் என்ற பொருளுடைய வழக்காக அக்காலத்தில் ஆளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

புறநானூற்றில் ( 301) ஒரு ஆவூர் மூலங்கிழார் என்பவரால் எழுதப்பட்ட பாடல்,
பல்சான் றீரே பல்சான் றீரே
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரி னிட்ட வருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே

எனத் தொடங்குகிறது.

இங்கு ஒரு முள்வேலியின் வலிமையைக் கூறப் பெண்களின் கூந்தலைக் காட்டுகிறார் புலவர்.

அந்த முள்வேலி குமரி மகளிர் கூந்தல் போன்றதாம்.

குமரி மகளிர் என்பவர்கள் திருமணமாகாத பெண்கள்.

திருமணமாகாத மகளிரின் கூந்தல் எந்தவொரு ஆண்மகனாலும் தீண்ட இயலாதது. அதைப்போல பகைவரால் தொடமுடியாத முள்வேலி என்கிறார் புலவர்.

இது நாம் மேலே சொன்ன கருத்திற்கு வலுவூட்டும்.

இந்தத் தொடர்பதிவின் முதற்பகுதியிலேயே, இதே பாடலில் வந்துள்ள,

“அஞ்சீ ரசையில்  கூந்தற்கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு...”

என வரும்வரிகள், ஒருவனுக்கு உரிமைபூண்ட பெண்ணின் கூந்தலை மற்றவன் தொட்டால் என்ன நிகழும் என்பதைக் காட்டுகிறது. ( அடுத்த பதிவு முடி பற்றியதுதான் ;)  )

2. தாளாண்மை, வேளாண்மை என இப்பாடலுள் வரும், ஆண்மை என்னும்சொல் என்பது ஆணுக்குரியது என்ற பொருளில் வழங்கப்படுகிறது. இது, அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்ற நான்கு பண்புகளும் உடைய தன்மை என்பதைக் குறிக்கும் சொல்லாகும்.

அறிவென்பது காண்பதில் மெய்மை எது என்பதைக் காணும் குணம்.

நிறை என்பது காக்க வேண்டியவற்றைக் காக்கவும் அழிக்க வேண்டியவற்றை அழிக்கவும் மேற்கொள்ளும் செயல்கள்.

ஓர்ப்பு என்பது  எந்தப் பொருளாயினும் அதன் தன்மை இப்படிப் பட்டதென்று ஆராய்ந்து உணர்தல்.

கடைப்பிடி என்பது கற்றது மறவாமை.

 3. இரண்டு சகுனங்கள் இந்தப் பாடலில் வந்தன.  ஒன்றை நினைக்கும் போது அல்லது சொல்லும் போது குழல் ஓசை கேட்டல். அப்படிக் கேட்டால் நல்லது நடக்கும் என்ற பண்டையோர் நம்பிக்கை. ( இன்று ஏதேனும் சொல்லும் போது மணியோசை கேட்டால் அது உண்மையென்றோ நடக்கும் என்றோ நல்ல சகுனம் என்றோ கூறுவதைப் போன்றது அது, )

அடுத்து, இடதுகண் துடித்தல் – பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்ல நிமித்தமாகும் என்ற  பழந்தமிழர் எண்ணம்.

4. சங்க இலக்கியங்களை அதிலும் குறிப்பாகக் கலித்தொகை போன்ற நூற்களைப் பார்க்கும் போது, அந்தக்கால ஒழுக்க நெறிகள் என்பன நாம் இன்று  பொற்காலமாய்க் கற்பனை செய்து கொண்டிருக்கும் காட்சிகளுடன் முரணுவது இயல்புதான். பொதுமகளிர் என்னும் போதே அவர்கள் தனியொருவனுக்கு உரிமை பூண்டவர் அல்லர் என்பதும் நாறிரும் கூந்தல் என்னும்போது அவர்களது கூந்தலின் நாற்றம் ஒருவர்க்கு மட்டுமே உரியதன்று என்பதும் புலனாகும். அவர்கள் காயம்பட்ட ஆயர்களைப் புணர்குறி கொண்டு பொழிலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஒரு வழியாய் ஒரு பாடலை முடித்துவிட்டோம். கூடுமானவரை இந்தப் பாடலுக்கான உரை நச்சினார்க்கினியர் உரையைத் தழுவி எழுதப்பட்டதுதான்.

ஆனால் இந்தப் பதிவில் அவரது உரைப்பார்வையில் இருந்து நான் மாறுபடும் இடங்கள் உண்டு.

1. பகலிடக் கண்ணியன் பைதற் குழலன்
சுவன்மிசைக் கோலசைத்த கைய னயலது
கொல்லேறு சாட விருந்தார்க்கெம் பல்லிருங்
கூந்த லணைகொடுப்பேம் யாம்

என்னும் இடத்தில், பகலிடக்கண்ணியன், பைதற்குழலன், சுவன்மிசை கோலசைத்த கையன் என்னும் இம்மூவரும் வினைவலபாங்கினர், அவர்களுக்கு இந்தக் காளையை அடக்குவது அரிது என்று கூறும் நச்சினார்க்கினியர், இம்மூன்று பேரும் ஏறு தழுவினவர்கள்  என்றும் கூறுகிறார்.

( “அயலதென்றது ஏறுதழுவுதற்கு அரிதென்னும் பொருட்டு. இம்மூன்று பெயரும் ஏறுதழுவினவர்களை நோக்கிக் கூறிற்று.” – நச்.)

உரைக்குறிப்பெழுதிய, இ.வை.அனந்தராமையரோ, பெருமழைப்புலவர் .சோமசுந்தரனாரோ, இளவழகனாரோ நச்சினார்க்கினியரின் இம்முரண் பற்றி எதுவும் கூறவில்லை.

இனி, என் பார்வை,

பகலிடக் கண்ணியன் பைதற் குழலன்
சுவன்மிசைக் கோலசைத்த கைய னயலது
கொல்லேறு சாட விருந்தார்க்கெம் பல்லிருங்
கூந்த லணைகொடுப்பேம் யாம்
.
இங்குக் காளையை அவிழ்த்து விடும்முன் தலைவியின் உறவினர் காளையின் பெருமையைப் பறைசாற்றுகின்றனர்.

(எங்கள் காளை,   இதற்குமுன் நடந்த ஏறுதழுவலின் போது,)
பகலில் அலர்ந்த மாலையைச் சூடியும்,
வருந்திய குழலுடனும்,
 இருதோளினும் கம்பொன்றை அசைத்தும்
தன்னை நெருங்கியவர்களைக் கொன்ற காளை இது. ( அயலது கொல்லேறு ). இதனை அடக்குபவனுக்கு எம் பெண்ணை உரிமையாகக் கொடுப்போம்.

2. எனக்கென்னமோ, இந்தப் பாடலின் வாசிப்பில்,

' ஏதோ தெரியாத்தனமாக முல்லை நிலப்பெண்ணை விரும்பிய ஒருவன், ஏறுதழுவினால்தான் அவளை அடையமுடியும் என்கிற அவளது குலவழக்கினை அறிகிறான். காதலின் மயக்கத்தில், இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா? நாங்க பாக்காத மாடா அடக்காத காளையா என்றபடி ஏறுதழுவும் இடத்துக்கு வருகிறான். அங்கு நடந்த காட்சிகளைப் பார்த்தபின்தான் தெரிகிறது, ‘இது விளையாட்டில்லை’ பெண் வேண்டுமா உயிர் வேண்டுமா என அந்த இடத்திலேயே அவனுக்குள் போராட்டம் தொடங்கிவிட்டது.

காளைகள் வரிசையாகக் களத்தில் இறக்கிவிடப்படுகின்றன.

வீரர்கள்  உயிரை எறிந்து அதனை அடக்கப் பொருதுகிறார்கள்.

குருதி நனைந்த நிலம்.

உயிர்கள் உதிரும் களம்.

தலைவியின் கண்கள் அவன் எங்கே எனத் தேடுகின்றன.

அவனைக் காணவில்லை.

தலைவி, அவிழ்த்து விடப்போகும் தன் காளைக்கு அருகில் நிற்க வேண்டும்.

தோழியிடம் சொல்கிறாள்.

“ நீ போய்ப் பாரேன்!”

தோழி, அவன் எங்கிருக்கிறான் என்று தேடிப்போகிறாள்.

கொஞ்ச நேரம் முன்புவரை அங்கிருந்தவனை இப்போது காணவில்லை.

தேடி அலைந்து இறுதியில் ஓரிடத்தில் தோழி அவனைக் காண்கிறாள். அவனிடம், ”குழல் ஓசையைக் கேட்டாயா? எவ்வளவு நல்ல சகுனம். மதயானையை விட வலிமை பொருந்திய காளை அது. கொஞ்சம் கவனமாக அதனை விடாமல் பிடித்து உன் காதலியை உனக்கே உரிமையாக்கிக் கொள்”. என்றபடி அவன் நிற்கும் இடத்தின் சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.

அவனோ “ என்னைத் தவிர அந்தக் காளையை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதியுடையவன் யார்? காளையை அடக்கி அவளை என் உரிமையாக்குவேன்” என்கிறான்.

ஆனாலும், அவன் நிற்கும் இடம்…..?

அவன், தலைவிக்கு உரிய பசுக்கூட்டங்களின் நடுவே பாதுகாப்பாக நின்று கொண்டுதான் இப்படிப்பட்ட வீரவசனத்தை முழங்கிக் கொண்டிருக்கிறான்.  ”கோளாளர்  [ தலைவியைக் கொள்பவர் ] என்னொப்பார் இல்லென நம் ஆனுள் [நமது பசுக்கூட்டத்துள் நின்று] தாளாண்மை கூறும் பொதுவன்”

“சரி..சரி! தலைவியின் வீட்டுக் காளையை இறக்கிவிடப் போகிறார்கள். சீக்கிரம் களத்திற்கு வந்து சேர் ” என்றபடி தலைவியிடம் அவனைப் பார்த்துத் தகவலைச் சொல்லியாகிவிட்டது என்பதைத் தெரிவிக்கச் செல்கிறாள் தோழி!

அவனுக்குள் ஒரே தவிப்பு. அவளா? உயிரா? அவனுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையையும், காளையை அவிழ்த்துவிடும் முன், தலைவியின் வீட்டார் காளையைப் பற்றிச் சொன்ன அதன்  கொலைபுராணம்  கேட்டதும் ஓடிவிட்டது.

அப்படியெனில், தாளாண்மை, கேளாண்மை எல்லாம் என்ன ஆவது?

எல்லா ஆண்மைகளையும் விட உயிர் முக்கியமில்லையா?

காளை களத்தில் இறக்கிவிடப்பட்டுப் பாய்கிறது.

அடக்க வருவதாகச் சொன்ன அவனைக் காணோம்.

எங்கே அவன் என்று தலைவியின் கண்கள் தேடுகின்றன.

தோழிக்குப்  புரிந்துவிட்டது

பிடிபடாக் காளைகளுள் ஒன்று களத்தில் நிற்கிறது. மற்றொன்று ஓடிவிட்டது.”

இருப்பினும், தலைவியின் மனம் தேற்றச் சொல்கிறாள்.

“இன்றில்லாவிட்டாலும் என்றாவது அவன் நமக்கு உறவாவான். ஏனெனில், காளையை அடக்கி உன்னை அடைவேன் என்று அவன் சொன்னபோது எனது இடது கண் துடித்தது. அதனால் பொறுத்திரு ”

மனிதர்கள் மேல் நம்பிக்கை இழக்கும் தருணங்களில் சகுனங்கள் சற்றுக் காலத்திற்கு அந்நம்பிக்கையைக் காப்பாற்றித் தக்கவைத்துவிடுகின்றன.

மேற்குறித்த எனது இந்தப் பார்வைக்காய், நச்சினார்க்கினியர் உட்டபட ஏனைப்புலவர் குழாம் என்னை மன்னிக்கட்டும்.

இப்படிப் பொய்யுரை கூறி, ஆண்மையற்றவர்களாகத் தமிழர்கள் இருந்தார்கள் அவதூறு பேசுகிறாய் என்மேல் சினப்பவர்களுக்குஉயிர் எனக்கு அவள்தான். எனவே அவளைப் பெற எதையும் செய்வேன் என்று களமிறங்கும் ஒருவன் எப்படிக் காளையை அடக்குகிறான் என்பதையும் அடுத்துக் காணத்தான் போகிறோம்.

இப்பாடலுக்கு நச்சினார்க்கினியரின் உரை தமிழார்வலர்கள் படிக்கவேண்டியது. நயம் வாய்ந்தது. இலக்கண இலக்கியத் தகவல்கள் நிரம்பி  வாசிப்பை நுண்ணிதாக்கத் துணைபுரிவது. அது நமது  இன்னொரு தளமான மனம்கொண்டபுரத்தில் விரைவில் வெளியாகும்.

தொடர்வோம்.

பட உதவி - https://encrypted-tbn1.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

24 comments:

 1. ஏறு தழுவுதலில் இத்தனை விசயமிருக்கா?! தமிழர் வாழ்வில் ஒன்றென கலந்த ஏறுதழுவுதலின் இன்றைய நிலை?!

  ReplyDelete
 2. வணக்கம்.

  வருகையும் முதற்பின்னூட்டமும் காண மகிழ்ச்சி.

  ஏறுதழுவுதல் - தலைப்பு அப்படித்தான் அமைந்திருக்க வேண்டும். வாசக ஈர்ப்பிற்காயும் முன் பதிவுகளின் தொடர்ச்சிக்காகவும் ஜல்லிக்கட்டெனக் குறிப்பிடநேர்ந்தது.

  நன்றி.

  ReplyDelete
 3. ஆகா...! அற்புதமான பதிவு...!!!


  சென்னை மெரினா போராட்டத்தின் போது இப்பதிவு வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஐயா...

  நன்றி...

  ReplyDelete
 4. அருமையாக சொல்லிச்செல்லும் விளக்கம் தொடர்கிகொடி...

  பதாகை - கொடி

  மலையாளத்தில் கொடி பதாகை என்றே சொல்லப்படுகிறது.
  த.ம.

  ReplyDelete
  Replies
  1. த.ம. இணைக்கவில்லையே...

   Delete
 5. பயந்தவர்களைப் பற்றியும் அந்தக் காலப் பாடல்களில் பேசியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. இது மாற்றுப்பார்வைதான்.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீ.

   Delete
 6. அருமையான பதிவு நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கரந்தையாரே!

   Delete
 7. “உரைக்குறிப்பெழுதிய, இ.வை.அனந்தராமையரோ, பெருமழைப்புலவர் .சோமசுந்தரனாரோ, இளவழகனாரோ நச்சினார்க்கினியரின் இம்முரண் பற்றி எதுவும் கூறவில்லை.”
  ஏற்கெனவே ஏறு தழுவியவர்களிடம், ஏறு தழுவுதல் அரிது என்று சொல்வது முரணாகத் தான் இருக்கின்றது.
  அம்மூவரைக் கொன்ற காளையிது; இதனை அடக்குபவனுக்கு எம் பெண்ணைக் கொடுப்போம் என்று பெண் வீட்டார் சொல்வது போன்ற உங்கள் பார்வை பொருத்தமாய் இருக்கின்றது.
  அந்த மூவரைப் பற்றி எனக்குச் சந்தேகம்.
  அதென்ன வருந்திய குழல்? சீர் செய்யப்படாத முடியா? அதற்கும் அடக்குவதற்கும் என்ன தொடர்பு? பகலில் அலர்ந்த மாலையைச் சூடினால் காளையை அடக்க முடியாதா? அணிகின்ற மாலைக்கும், அடக்குவதற்கும் என்ன சம்பந்தம்? அதுபோல் தோளில் கம்பு அசைத்து வருவதால், அடக்குவது முடியாது என்று ஏன் கூறுகின்றனர்.
  திருமணத்துக்குப் பிறகு தான் பெண்கள் பூச்சூடும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது புதுச்செய்தி. அதனால் தான் கணவன் இறந்த பிறகு பூ வைக்கக் கூடாது என்ற பழக்கம், நம் சமூகத்தில் வந்திருக்க வேண்டும்!
  “இடதுகண் துடித்தல் – பெண்களுக்கு இடது கண் துடிப்பது நல்ல நிமித்தமாகும் என்ற பழந்தமிழர் எண்ணம்”.
  நம் காலத்திலும் இந்த நம்பிக்கையிருக்கிறது. நம் திரைப்பாடலில் சில வரிகள் இவை:_
  “நாம் ஒருவரையொருவர் சந்திப்போம் எனக்
  காதல் தேவதை சொன்னாள்
  என் இடது கண்ணும் துடித்தது
  உன்னைக் கண்டேன், இந்நாள் பொன்னாள்”
  வீரன் காளையை அடக்கும் நிகழ்வைச் சொல்லும் பதிவை வாசிக்கக் காத்திருக்கிறேன். தொடருங்கள்.
  நன்றி. வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.

   இந்த இடுகை மிக நீளமாக அமைவதைத் தவிர்க்க இயலாமல் போனது. சொல்லப்போனால், தட்டச்சுச் செய்திருந்த பலவற்றை நீக்கினேன். எப்படியும் இந்த ஒரு பாடலையாவது முடித்துவிடவேண்டும் என்கிற உந்துததல்தான் அதற்குக் காரணம்.
   இதைப் பொறுமையாகப் படித்துக் கருத்தினைப் பதிகின்ற உங்களுக்கு முதலில் நன்றி.

   ““““உரைக்குறிப்பெழுதிய, இ.வை.அனந்தராமையரோ, பெருமழைப்புலவர் .சோமசுந்தரனாரோ, இளவழகனாரோ நச்சினார்க்கினியரின் இம்முரண் பற்றி எதுவும் கூறவில்லை.“““““

   ஒருவேளை அவர்கள் இதனை விளங்கிக் கொண்டிருக்கலாம். அதனால் அவர்களுக்கு இது முரணாகத் தென்படாதிருக்கலாம்.

   எனக்கு இவ்விடம் விளங்கவில்லை என்பதே உண்மை.

   இம்மூவரைப் பற்றி இங்குக் கூறப்படுவதில் அவர்கள் பெருவீரம் வாய்ந்தவர்கள் என்பதற்கான குறிப்பாக அவர்களைக் குறித்த அடைமொழியை நாம் எடுத்துக் கொள்ள முடியாது. மூன்று பேரைக் கொன்றது அவர்கள் யார் என்பதற்கான அடையாளம் ..விவரணைதான் பகலிடக்கண்ணியன், பைதற்குழலன், சுவல்மிசை கோலசைத்த கையன் என்பதெல்லாம்.
   நம் அக இலக்கியத்திற்கு ஒரு மரபு இருக்கிறது.

   அகமரபில் ஒருவனது பெயரைக் குறிப்பிடுதல் ஆகாது.

   'மக்கள் நுதலிய அகன் ஐந் திணையும்
   சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் ' என்று தொல்காப்பியம் இதனை இலக்கணப்படுத்தும்.

   அச்சூழலில் ஒருவரை இதுபோன்ற தோற்றத்தின் மூலமோ செயல்களின் மூலமோதான் அடையாளப்படுத்த முடியும். இது காளைகளால் முட்டுண்ட மூன்று பேருக்கு அவ்வாறான அடையாளக் குறி அவ்வளவே.

   அடுத்து, பைதற் குழலன் என்பதில் பைதல் என்பதற்கு வருத்தத்தையுடைய என்று நச்சினார்க்கினியர் பொருளுரைக்கிறார்.

   பைதல் என்றபதற்கு இளமை என்ற பொருளும் உண்டு. அவ்வாறு பொருள் கொண்டால் இளம் பிராயத்தன். இளமையான குழலை (முடியை)க் கொண்டவன் எனப் பொருள் கொள்ள முடியும்.
   அன்றி வருத்தத்தை உடைய குழல் என்னும் போது, வருந்தத்தக்க இசை மீட்டுகின்ற புல்லாங்குழலை உடையவன் என்பது சிறப்பான பொருளாயிருக்கும் என்பது என் கருத்து.

   பகலிடக் கண்ணியன் என்பதில், மாலைகளில் சூடப்படும் பூக்கள் கொண்டு பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் சிற்றினக் குழுக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. இம்மூவரும் ஏதேனும் மூன்று வெவ்வேறு குழுக்களின் பிரதிநிதிகளாய் இருக்கலாம். அவர்தம் தோற்றம் வாயிலாகவும் செயல்வாயிலாகவும் இதனை வேறுபடுத்திக் காட்ட புலவன் முயன்றிருக்கலாம். அவர்கள் வீரர்கள் என்பதற்கான குறிப்பன்று இது.

   மக்கள் மத்தியில் பதிந்துவிட்ட இது போன்ற பழக்கங்கள் அவ்வளவு எளிதில் மாறிவிடுவதில்லை என்பதைத்தான் இன்றும் தொடரும் இந்நிமித்தங்கள் காட்டுகின்றன.

   தங்களது வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

   Delete
  2. அகமரபில் ஒருவனது பெயரைக் குறிப்பிடுதல் ஆகாது. என்பதையும்
   தோற்றம் வாயிலாகவும், செயல்வாயிலாகவும் காளைகளால் கொல்லப்பட்ட வீர்ர்களைப் பற்றி இப்பாடல் சொல்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன். உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

   உங்கள் விளக்கத்துக்குப் பிறகு எனக்குத் தோன்றிய சந்தேகம் இது:
   அவர்கள் மூவரும் பெருவீரம் வாய்ந்தவர்களாக அப்பகுதியில் பிரபலமடைந்திருக்கலாம்; ஏற்கெனவே பல காளைகளை அடக்கிப் புகழ் பெற்றவர்களாயிருந்திருக்கலாம்.
   அவர்களே இக்காளையிடம் முட்டுப்பட்டுக் கொலையுண்டவர்கள்; எனவே ஏற்கெனவே பலமுறை காளையை அடக்கிப் புகழ்பெற்றவர்களாலேயே முடியாத அரிதான செயல் இது என்று உரையாசிரியர் சொல்கிறாரோ?
   இது தான் நாம் நினைக்கும் முரணுக்குக் காரணமோ?

   Delete
  3. வாருங்கள் சகோ.
   உங்கள் மறுவருகையும், வினாக்களும் இன்னும் சிந்திக்கச் செய்கின்றன.
   பிரதியை எழுதியதும் எழுதியவன் இறந்துவிடுகிறான். அதன் பின் அப்பிரதி வாசகனுடையதாகி விடுகிறது என்னும் பின் நவீனத்துவம். இங்கும் அதே போலத்தான் நாம் நமக்குக் கிடைக்கும் பிரதியினை அடிப்படையாகக் கொண்டு சிந்திக்கிறோம்.

   சரியான தர்க்க நியாயங்களுக்கு உட்பட்டிருந்தால் நாம் சொல்லும் பொருளும் பிரதியுள்ளிருந்து கிடைக்கும். ( குழப்புகிறேனோ? :( )

   சரி,

   இவர்கள் இறந்தார்கள் என்பதற்கான குறிப்பினை நச்சினார்க்கினியர் தரவில்லை. அயலது கொல்லேறு என்பது கொண்டு அவ்வாய்ப்பு இருக்கலாம் என நாம் கருதியதுதான்.

   ““மூவரும் பெருவீரம் வாய்ந்தவர்களாக அப்பகுதியில் பிரபலமடைந்திருக்கலாம்; ஏற்கெனவே பல காளைகளை அடக்கிப் புகழ் பெற்றவர்களாயிருந்திருக்கலாம்“““

   என்பதற்கான குறிப்புகள் இங்கிருப்பதாகப் படவில்லை. அன்றியும் இங்கு ஏறுதழுவுதல் என்பது பல வெற்றிகளைப் பெற்றுக் குவிக்கும் போட்டியன்று. மணத் தேர்விற்கான வழிமுறையாகவே வருகிறது.

   எனவே அவளை மணம் புரிய விரும்பி ஏறுதழுவ முயன்று இறந்தார் என்ற கண்ணோட்டத்தில் இதை நோக்கல் தகும்.

   மற்றபடி, நச்சினார்க்கினியரின், உரை முரணற்றிருப்பதற்கான வாய்ப்பொன்றை, மனம் கொண்ட புரத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

   http://manamkondapuram.blogspot.com/2017/05/13.html

   காண அழைக்கிறேன்.

   நன்றி.


   Delete
  4. “இங்கு ஏறுதழுவுதல் என்பது பல வெற்றிகளைப் பெற்றுக் குவிக்கும் போட்டியன்று. மணத் தேர்விற்கான வழிமுறையாகவே வருகிறது.
   எனவே அவளை மணம் புரிய விரும்பி ஏறுதழுவ முயன்று இறந்தார் என்ற கண்ணோட்டத்தில் இதை நோக்கல் தகும்.”
   நான் தான் ஏறுதழுவலைத் தற்போதைய ஜல்லிக்கட்டுப் போட்டி போல நினைத்துக் குழம்பி விட்டேன். மணத்தேர்வுக்கான வழிமுறை மட்டுமே என்றறிந்தேன். விளக்கத்துக்கு மிகவும் நன்றி சகோ.

   Delete
 8. காதல் கொள்ள ஒருவன் வீரனாய் இருக்க வேண்டுமோ வீரம்உள்ளவன் விருப்பமில்லாத ஒருத்தியை மணம் முடிக்கும் வாய்ப்பும் இருந்திருக்கிறதே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா.

   நிச்சயம் இருக்கிறது.

   அதனால்தான் இதனை, சிறப்பில்லாத ஆசுரமாகிய கைக்கிளை என்பார் நச்சினார்க்கினியர்.

   இது குறித்து,

   http://manamkondapuram.blogspot.com/2017/05/13.html

   என்னும் தளத்தில் விவரித்திருக்கிறேன்.

   நன்றி.

   Delete
 9. #மனம்கொண்டபுரத்தில் விரைவில் வெளியாகும்.#
  ஆஹா ,இன்னொரு தளமுமா ?இப்போதே என் மனம் ,மனம் கொண்டபுரத்தில் குடியேறி விட்டது :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பகவானே!

   தளம் முன்பே இருந்ததுதான்.

   தற்பொழுதேனும் தங்கள் மனம் அங்கு குடியேறி இருக்கிறது என்பது என் பேறு.

   நன்றி.

   Delete
 10. இப்படியான ஏர்தழுவுதல் பலருக்கு சென்று சேரவேண்டிய பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு தனிமரம்.

   Delete
 11. உங்கள் புதுக் கருத்து பொருத்தந்தான்.பாராட்டுகிறேன் .

  ReplyDelete
 12. அமர்க்களம் ஐயா! அமர்க்களம்!

  உண்மையாகச் சொல்கிறேன், நச்சினார்க்கினியரின் விளக்கத்தை விட உங்கள் விளக்கம்தான் பொருத்தமாக இருப்பதாக என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, குறிப்பிட்ட அந்தப் பாடலுக்கு முதன் முறை அளிக்கப்பட்ட விளக்கத்தைப் படித்தவுடனே என் மனதிலும் சிறு நெருடல் ஏற்பட்டது. பகலில் விரிந்த மாலையைச் சூடியவன், வருந்திய குழலினை உடையவன், கம்பினை இரு தோளிலும் பதித்துக் கொண்டு கைகளால் பிடித்து வருபவன் ஆகியோர் பிறருக்குச் சேவை புரிபர்கள் என்பதற்கும், ’காளையை அடக்குபவனுக்குத்தான் உன்னை மணமுடித்துக் கொடுப்போம்’ என்பதற்கும் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதே அந்த நெருடல். இடையில், ’அயலது’ என்ற சொல் மூலம், அவர்கள் இந்தக் காளையை அடக்குவது அரிது எனச் சொல்லப்பட்டிருந்தாலும், அதற்கும் "காளையை அடக்குபவனுக்குத்தான் உன்னை மணமுடித்துக் கொடுப்போம்" என்கிற அந்த இறுதி வரிக்கும் என்ன தொடர்பு என்கிற வினா எழவே செய்தது. அப்படி அந்த வரிகள், சேவை புரிபவர்களால் இத்தகைய காளையை அடக்க இயலாது என்பதைக் கூறுவதாக இருந்தால் அதே பாடலின் இறுதி வரிகளில் எத்தகையோர் அந்தக் காளையை அடக்க இயலும் என்பதை வருணிக்கும் விதமாக அன்றோ அமைந்திருக்க வேண்டும்? அப்படியும் இல்லையே! ஆக, நீங்கள் கொடுத்த விளக்கமே சரியாகப் பொருந்துகிறது ஐயா!

  என்னைப் போல் தமிழறிவில் எளியோரும் இத்தகைய உயர்தமிழ் விருந்தைச் சுவைக்கும்படி படைக்கும் தங்களுக்கு நனிநன்றி!

  ReplyDelete
 13. ஆசான்/சகோ,

  உங்கள் பார்வை மிகவும் எதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது எங்களுக்கு. அதுவும் எழுந்த ஐயங்களைப் போல கலையரசி அவர்களும் எழுப்பிட, அதற்கு உங்கள் பதில் கருத்தையும் கண்டு தெளிவாயிற்று. ..

  உங்கள் தமிழாலும், விளக்கங்களாலும் நாங்கள் பல கற்றுக் கொள்கிறோம். அறியாதன பல அறிகிறோம்...நன்றி ஆசானே/சகோ

  ReplyDelete
 14. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete