Saturday 17 May 2014

இவரடி என் முடிமேலன...!

கிணற்றுத் தவளையைக் கடல்திமிங் கலமென
இணையப் பெருவெளிக் குள்ளே யமிழ்த்த
ஆழம் அறியா ஆழியுள் காக்குந்
தோழமை யற்றுத் துடித்தன கைகள்!
மாந்தப் பெருவெளி சிறுதுளி யாக
நீந்தக் கற்ற நெடுமூச் சினொடு
கணினி கற்றிலார் கண்ணிலார் என்றிகழ்
பிணியிவர் பயிற்சி பெற்றிடத் தீர்ந்தது!
வலைப்பூ வானில் எனக்கும் சிறகுகள்
மலைப்பு மாற்றிப்  பொருத்திய பட்டறை!
ஆங்கு,
இருள்கெட முத்து நிலவொளி நல்க,
அருள்முரு கனென்னும் ஆய்வுச் சாரதி
சுந்தர பாண்டியர் ரங்கனார் திருப்பதி
பன்னீர் செல்வ சரவணக் குமரனார்,
அம்மைமார் சுவாதி கீத லட்சுமி,
இம்மைப் பயனெனக் கிணையத் தருளினர்!
புதிய வேள்விகள் படைக்க இருள்கொலும்
உதய விதைகளோ டிவர்க ளெழுந்தனர்!
அறிவியல் வளர்ச்சி யறியாத் தமிழா
சிரிய ரெனும்வசை யிவரால் தீர்ந்தது!
கந்தல் அறிவையுஞ் செந்தமி ழென்னும்
மந்திரத் தாலிவர் மாற்றிடக் கண்டு,
உயிர்கிளர் உணர்வைத் தமிழை இனத்தை,
வயிறு வளர்க்கவே விற்பவர் நடுங்கினர்!
போனதே பேசிப் பொழுதைக் கழிக்கும்
தானைத் தலைவர் தலைக ளுருண்டன!
வேலிக் கிடையில் காலற் றவரென
கேலி செய்தவர் வீறிட் டலறினர்!
ஊமையாய்க் குருடாய் முடமாய்த் தமிழை
ஒதுக்க நினைத்தவர் திடுக்குற் றெழுந்தார்!
அமைதியாய் அவலம் அறியா துறங்குவோர்
இமைகளைப் பிய்க்க எழுதினர் இலக்கணம்!
“என்ன தமிழில்? எல்லாம் பழங்கதை!“
என்ற வர்மனம் புண்ணா யிற்று!
இருட்டறை யிட்டெமை ஏய்த்தவர் சாய்க்கப்
புறப்பட் டதுகாண் புலிகளின் கூட்டம்!
தரித்தி ரர்எனத் தம்மை நினைப்பவர்
சரித்திரம் என்ன சற்றே உணர்த்துவர்!
கூடுகள் உடைத்துக் கோடுகள் அழித்து
நாடுகள் கடந்து நானிவர் பாதையில்
இணையத் திணையப் புகுந்தேன்!
கணைகள் ஏற்கக் காத்திரு நெஞ்சே!
[ முத்துநிலவனார் 17,18.05.2014 நாட்களில் நடத்திய இணையப் பயிற்சிப் பட்டறையில் புதிய வலைப்பூ அமைத்திடக் கற்றுப் பதியும் முதற்பதிவு.  ]
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

16 comments:

 1. வலையுலகிற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்

  ReplyDelete
 2. நன்றி! நிரை கவர்வது போல் என் மனம் கவர் கரந்தை.
  சமணத் தமிழர் பள்ளி! உமாமகேஸ்வரனார் கல்லூரி! மறக்க முடியுமா உணவகம்.......எதையுமே மறக்க இயலவில்லை!

  ReplyDelete

 3. வணக்கம்!

  முத்தாய்ப் பதித்த முதன்மொழிப் பதிவு
  கொத்தாய் மணத்தைக் கொடுத்த தென்பேன்!
  இன்றேன் அகவல் என்னை ஈா்க்கப்
  பொன்னோ் புலவன் பொழிகிறேன் வாழ்த்து!
  கன்னற் றமிழைக் கணினியில் கண்டால்
  மின்னல் கூடத் தன்னொளி குன்றும்!
  அறிவியல் என்ன? அதையும் தாண்டிச்
  செறிவுடன் விாியும் செந்தமிழ் மாட்சி!
  மரபுக் கவிஞா்! மாண்புடைச் சோசப்
  பரவும் தமிழின் பணிகள் தொடா்கவே!
  ஊமைக் கனவுகள் ஊட்டும் பதிவுகள்
  தீமை எாிக்கும் தீயென எழுகவே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கமபன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. மூலையில் முடங்கி மூச்சற் றிருந்தேன்!
   பாலையின் பனித்துளி போலும்
   வாழ்த்துகள என்னை வாழ்ந்திடச் செய்கவே!
   நன்றி!

   Delete
 4. ஊமையாய்க் குருடாய் முடமாய்த் தமிழை
  ஒதுக்க நினைத்தவர் திடுக்குற் றெழுந்தார்!
  அமைதியாய் அவலம் அறியா துறங்குவோர்
  இமைகளைப் பிய்க்க எழுதினர் இலக்கணம்! -
  பண்டைப் புறநானூற்றின் கம்பீர நடை,
  பாவலரேறு பெருஞ்சிததிரனாரின் “நூறாசிரியம்“ கண்ட கனிச்சாறு நடை! அய்யா தங்களை இணையப்பக்கம் ஈர்த்ததை என் வாழ்நாள் முழுவதும் சொல்லிப் பெருமை கொள்வேன். தொடர்நது எழுதுங்கள்.. தமிழ் வளர... கணினித் தமிழ் உயர எழுதுங்கள். நன்றி.

  ReplyDelete
 5. ஆகா
  கவிதை ரகளை தோழர்
  இப்போத்தான் படித்தேன்..
  நேற்று நேரில் உங்களை நான் பார்பதற்கு முன்பே அவரது பதிவில் அறிமுகம் செய்த உங்கள் நண்பரிடம் உங்களின் எழுத்தை சிலாகித்துக் கொண்டிருந்தேன்.
  இன்று இந்தப் கவிதை ஒரு நல்ல வாசித்தல் அனுபவம்..
  இணையம் ஏனோ உங்களுக்கு கட்டுப்பட காத்திருப்பது போல தோன்றுகிறது எனக்கு..
  வாழ்த்துக்கள்
  http://www.malartharu.org/2014/01/gold-vein.html

  ReplyDelete
  Replies
  1. அன்புத்தோழர்க்கு வணக்கம்!
   இந்தப் பதிவை இப்போது நீங்கள் காண்பதிலும் நன்மையுண்டென நினைக்கிறேன். என் பயணங்களின் முதலடிக்கு நீங்கள் எல்லோரும் தான் கைபிடித்து நடைபழக்கினீர்கள். அதிலும் என் இணையப்பதிவின் முதல் பின்னூட்டக்காரர் நீங்கள் தான். உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. மணலில் பட்ட காலடிகளை அலை அழித்துச் செல்லும் போதும் முதன் முதலில் என்மேல் பட்ட அலையின் குளிர்மை தலைப்பேற்றின் முதல் அசைவாய் என் நெஞ்சுதைக்கும் ........! நினைவொன்று போதுமதற்கு!
   அவ்வனுபவங்களுக்காய் என்றும் நன்றியுண்டு.

   Delete
 6. தமிழ்மனம் தமிழ்வெளி இரண்டிலும் இணைக்கவும்..

  ReplyDelete
  Replies
  1. தோழர்க்கு வணக்கம்.
   முத்துநிலவன் அய்யாவும் இதுவே கூறினார்.
   அதன் பயனோ, எவ்வாறிணைப்பது என்னும் வழிமுறையோ அறியேன். உதவுக.
   நன்றி!

   Delete
 7. தங்களுக்காக முத்து நிலவனார் இணைய பயிற்சி நடத்தினார். நான் எந்தப் பயிற்சியும் இல்லாமல் , தமிழ்மணத்தின் எழுதலாம் வாங்க! என்பதனை படித்து,பல தடவை பெயிலாகி தோற்றவன். நண்பரே!

  ReplyDelete
 8. வணக்கம் வலிப்போக்கரே!
  புத்தகங்களிலேயே புதையுண்டு போயிருந்தது என் வாழ்க்கை!இவர்களால்தான் நான் உங்களோடு பேசச் சாத்தியமாயிற்று்
  கற்போரில் பல வகையுண்டு!
  தானாகக் கற்போர்!
  தட்டுத்தடுமாறிக் கற்போர் இது போல....!
  நீங்கள் முதல் ரகம்.
  நான் கற்றுக் கொடுத்தாலே ஆயிரம் சந்தேகம் கேட்டு திருப்தி அடையாத ரகம்.
  இவர்கள் இல்லாவிட்டால் நிச்சயமாக நான் இணையப் பக்கம் வந்திருக்க மாட்டேன். பெயிலாகியும் நீங்கள் முயன்றிருக்கிறீர்கள், நானோவென்றால் முடங்கியிருப்பேன்.
  உங்களிடம் வலி இருக்கிறது. வலி போக்கும் மருந்தும் இருக்கிறது. கடைவிரித்துக் கொடுக்க இணையம் இருக்கிறது. வாங்க நாங்கள் இருக்கிறோம்.
  பிறகென்ன நண்பரே!
  வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள்!

  ReplyDelete
 9. நன்றி...உங்கள் தமிழ் இனிமை. யார் என்ன சொன்னாலும் இந்தத் தமிழ் நடையைத் தொடர்க... ஏனெனில் நிகழ் காலங்களில் பேச்சுத் தமிழ் என்பது முற்றிலுமாக பிற மொழிக் கலப்பு என உருவாகி விட்ட நிலையில்...நம்மைப் போல் தமிழால் எழுத முடிந்தவர்களும் எளிய நடையில் பிறர்க்கு புரிய வேண்டுமே என எழுதுவதுகொடுமையிலும் கொடுமை...ப்யிற்சியில் நான் ஒன்றும் செய்யேன்....என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி....எனக்கும் தமிழ்மணத்தில் இணைப்பது பற்றிய அறிவு, தெளிவு,விழிப்பு, புரிதல், எதுவும் இல்லை.... இல்லை....நானும் இனி தான் திருவாளர் கஸ்தூரிரெங்கனிடமோ,திருவாளர் முத்துநிலவன் அய்யாவிடமோ கேட்க வேண்டும்...வெற்றி விளையட்டும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வழிநடத்துதலுக்கும் நன்றி சகோதரி!

   Delete
 10. அடடா இதை எப்படி நான் தவறவிட்டேன்.

  வலைப்பூ வானில் எனக்கும் சிறகுகள்
  மலைப்பு மாற்றிப் பொருத்திய பட்டறை!

  உயிர்கிளர் உணர்வைத் தமிழை இனத்தை,
  வயிறு வளர்க்கவே விற்பவர் நடுங்கினர்!
  போனதே பேசிப் பொழுதைக் கழிக்கும்
  தானைத் தலைவர் தலைக ளுருண்டன!
  வேலிக் கிடையில் காலற் றவரென
  கேலி செய்தவர் வீறிட் டலறினர்!
  ஆஹா ஆஹா அருமை அருமை ! தங்களை நினைத்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது. தமிழுக்கும் தங்களால் பெருமையே என்றும். தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 11. பாராட்டிற்கு நன்றி சகோதரி,
  எனக்கு உங்களை எல்லாம் பார்த்தால் பொறாமையாய் இருக்கிறது.
  உங்களுக்கென உலகம் படைத்து.........
  நீங்கள் விரும்புபவரையும், உங்களை விரும்புபவர்களையும்
  அதில் குடிமக்களாக்கி.........
  கவலை மறந்து திரியத் தோழமைகளுடன்......
  அந்த இன்னொரு உலகம் இனிப்பானது தான்!
  இருப்பினும்,
  என்னையும் அதில் சேர்த்துக்கொண்டமைக்காய் மட்டும் சபிக்காமல் விட்டுவிட்டேன்.
  நன்றி!

  ReplyDelete
 12. சபிக்காமல் விட்ட வாழ்த்துக்கள் நன்றி.

  ReplyDelete