Friday, 18 December 2015

எது கவிதை?


‘தமிழகத்தில் மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்பதாக என்றோ வாசித்த துணுக்கொன்று இப்போது நினைவுக்கு வருகிறது. இணையத்தில் இயங்கத்தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கவிஞர்களாய்த் தெரிகிறார்கள். ஒருவேளை ‘காமாலைக்காரன் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று கூறுவதுபோல என் கண்களுக்குத்தான் இப்படிப்படுகிறதோ என்னமோ?

அதிலும் குறிப்பாக மரபில் எழுதுகின்றவர்கள் என்னைப் பெருமளவில் ஆச்சரியப்பட வைத்தார்கள். ‘இந்த வடிவத்தில் எல்லாம் இன்னும் எழுதுகின்றவர்கள் நாம் வாழும் காலத்தில் வாழ்கின்றார்களா?’ என்று பலமுறை என்னை நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டதுண்டு. ஏனெனில் இணையத்திற்கு வரும்முன் சரியாக வெண்பா எழுதுகின்றவர்களைக் கூட என்னைச் சுற்றி நான் கண்டதில்லை.(விதி விலக்கு உண்டு) அதில் வியப்பதற்கும் எதுவுமில்லை.

நானறிந்தவரை, மொழிவளம் மிக்க, கற்பனைத்திறன் மிக்க ஒருவர்கூடத் தான் கையாளும் சொற்களை, கொத்தியும், உடைத்தும், மாற்றியும் எழுத வேண்டிய சூழல் மரபில் இருக்கிறது. அல்லது அப்படி இருப்பதுதான் மரபெனவும், அதைப் புனைவது என்பது சாதாரணமானதில்லை எனவும்  நம்மிடையே ஒரு கற்பிதம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது.
( வந்தது என்று இறந்தகாலத்தில் கூறுவது, யாப்பிற்குள் எல்லாம் நுழையாமல் இயல்புத் தமிழையே பிழையின்றி எழுத வேண்டும் என்ற தோன்றல் இன்று குறைந்து வருவதால்தான்.)

இலக்கணத்தைப் போலவே ஒரு பயம் கலந்த சூழலில் செய்யுளின் யாப்பு வடிவங்களை எதிர்கொள்கின்றவர்களாகவே நம்மில் மிகப்பலரும் இருக்கிறார்கள்.

என்னைக் கேட்டால், மரபுப்பாடல்களைப் ‘புரிந்து கொள்வதற்குச் சிரமம் என்று ஒதுக்குபவர்கள், எப்படி இப்படி எழுதுகிறான் என்று வியப்பவர்கள், சொற்களைக் கொண்டு யாப்புச் சட்டகத்தினைக் கற்பிக்கப்பட்ட மரபிற்குட்பட்டுப் பொருத்துகின்றவர்கள், அரிதினும் அரிதாக அதற்குக் கவிமூச்சளித்து உயிர்ப்பிக்கிறவர்கள்’ என நம் மரபு வடிவத்தை எதிர்கொள்பவர்களை வகைப்படுத்துவேன்.

தமிழில் நாம் வழங்கும், செய்யுள், பாடல், கவிதை, எனப்படும் சொற்களுக்கிடையே உள்ள வேறுபாடு நிச்சமாய் யாப்பு வடிவங்களைப் படைப்போரும் படிப்போரும் அறிந்தாக வேண்டிய ஒன்று.

தமிழ் இலக்கணம், நாம் கட்டமைக்கும் எல்லாவற்றையும் செய்யுள் என்றும் அது யாப்பிற்கு உட்பட்டது என்றும் கூறுகிறது. இன்று நாம் நவீன இலக்கிய வகைமையெனக் கருதும், சிறுகதை, புதினம், திறனாய்வு எனத் தமிழின் எல்லா வடிவங்களும் இதனுள் அடங்கும். இவ்வளவு ஏன் நான் எழுதும் இந்தப் பதிவு கூட யாப்பிற்கு உட்பட்ட செய்யுள்தான்.

இதை நம்ப மறுப்பவர்களை,

பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,
வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது' என்மனார் புலவர்“

“எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்,
அடி வரை இல்லன ஆறு' என மொழிப“        

“அவைதாம்,
நூலினான, உரையினான,
நொடியொடு புணர்ந்த பிசியினான,
ஏது நுதலிய முதுமொழியான,
மறை மொழி கிளந்த மந்திரத்தான,
கூற்று இடை வைத்த குறிப்பினான“

என்ற மூன்று தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியல் சூத்திரங்களையும் அவற்றிற்கான பேராசிரியரின் உரையையும் காணப் பரிந்துரைக்கிறேன்.

எனவே செய்யுள் என்பதையும் யாப்பென்பதையும் மொழியில் நாம் கட்டமைக்கும் சகல சாத்தியங்களையும் உட்செரிக்கும் திரண்ட பொருளினதாகவே நம் தமிழ்மொழி மரபு காண்கிறது.

மரபில் நாம் கையாளுகின்ற பா என்பதும் அதன் இனங்கள் என்பதும் இதே செய்யுளின் யாப்பினை ஒரு குறிப்பிட்ட வரைறையை வகுத்துக் கொண்டு அதற்கேற்ப ஒழுகி குறிப்பிட்ட ஓசை கொணரும் வழிமுறைதான்.

செய்யுளை நூலென்றும், யாப்பினை நூலால் நெய்யப்படும் துணி என்றும் கற்பனை செய்து கொண்டால், அத்துணியைக் கொண்டு பல வண்ணங்களில் உருவாக்கப்படும், சட்டை, சேலை போன்றவையே பாக்களும் அதன் இனங்களும்.

எனவே சொற்களை ஒருசில விதிகளுக்கு உட்பட்டு ஒழுங்குபடுத்தும்போது உரிய ஓசை கிடைத்து, கட்டமைக்கும் தொடர் ‘பா’ என்பதன் நிலைக்குத் தரம் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு பா என தரம்உயர்த்தப்படுதால் மட்டுமே அதை நாம் கவிதை என்று கருதிவிட முடியாது. பதினெட்டாம் நூற்றாண்டுவரை, மருத்துவமும், சோதிடமும், ஏன் கணிதம் கூட இலக்கண வரையறைகளுடன் எழுதப்பட்ட பா வடிவத்திலேயே இருந்தது. அவை ஒருபோதும் கவிதையானதில்லை.

எனவே ஓசையொழுங்கிற்கு உட்பட்டு எழுதப்படும் பாவடிவங்கள் எல்லாம் கவிதை என அழைக்கப்படலாகாது. கவிதை என்பது இவற்றின் வேறானது.
மரபுக்கவிதை எனப்படுவதிலும், வெறும் இலக்கணவிதிகள் மட்டுமன்றிப் படைப்பாளியின் அனுபவம், நுவல்திறன் , நுண்ணுணர்வு எனப்பல திறன்கள்  அதன் ஆக்கத்திற்குத் தேவைப்படுகின்றன.

அது, வெறும் சொற்றொகுப்பன்று. சொற்றொடரும் அன்று. தாள ஒழுங்கன்று. சொல் கடந்தும், அச்சொல்லின் பொருள் கடந்தும் ஒரு உணர்வெழுச்சியை வாசிப்பவனின் உள்ளத்தில் ஏற்படுத்த வல்லதாய் அமைவது. அவ்வுணர்ச்சிப் பெருக்கில் வாசிப்பவனையே உள்ளிழுத்துப் போவதாய் அமைவது. பாவிலக்கணக்கட்டமைப்பு அதற்குச் சற்றுக் கூடுதல் பலத்தைத் தரலாம். 

வாசிப்பின் ஏதோ ஒரு தருணத்தில், நெடுங்கதையொன்றின் ஓரிரு வரிகள் அத்தரிசனத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி இருக்கக்கூடுமென்றால் அங்கு அச்சொல், அத்தொடர், அம்மொழி கவிதையாய் இருக்கிறது.

கட்டுரையொன்றில் சொல்லப்பட்ட தகவல், வெறும் செய்தி என்ற நிலையைக் கடந்து, அதைச் செதுக்கிய படைப்பாளியின் மாயக்கரங்கள் உங்கள் உள்தொட்டு, விவரிக்க முடியாத பாதிப்பிற்கு உங்களை உட்படுத்தி இருந்தால் அங்கு அந்த உரைநடை கவிதையாய் இருக்கிறது.

நமக்குப் பயன்தருமெனப் படிக்கின்ற அறிவியல் விதிகள், நமக்கு அறிவூட்டினாலும், அதைப் படிக்கும் நம்முள் எவ்வித உணர்வுச் சலனத்தையும் ஏற்படுத்துவதாய் இருப்பதில்லை.

அதே சொற்சேர்க்கையின் விளைவாக நம்முடைய அறவுணர்வுகள் தொட்டெழுப்பப்படுமிடத்து அதை நாம் கவிதை என்கிறோம்.


எனவே கவிதை என்பது நம் உணர்வுகளிடையே ஏதேனுமொரு தூண்டுதலை நிச்சயம் நிகழ்த்துவதாகவேதான் எப்போதும் இருக்கிறது. அது மரபிலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்படுவதாயினும் சரி. (மரபுப்பா). புதுக்கவிதையாயினும் சரி. (  இதன் வடிவத்திற்கும் இலக்கணம் மரபில் சொல்லப்பட்டதுதான். அது பற்றி அடுத்த பதிவில்)

எனவே  படைப்பவனின் மொழியாளுமை நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமே இங்கு முதன்மைப்படுத்தப்பட வேண்டியது. அதுவே மொழி தன்னைக் கடைந்து பிரமிப்பூட்டும் சிற்பங்களாய்க் காட்சியளிக்கின்ற சொல்லின் சுவை.
அத்தகு சொல்லாடலிலிருந்து கவித்துவத்தை வாசகன் உணர்தல் ஒரு விவரிக்க இயலா அனுபவம்.

படைப்பில் இருந்து கவிதையைப் பிரித்தறிய வாசகனுக்கு ஓரளவிற்கேனும் மொழிப் பின்புலமும் கூருணர்வும் அவசியமாய் இருக்கிறது.

மாபெரும் மரபுக்கவிஞர்கள் எனத் தமிழில் கொண்டாடப்படுகிறவர்கள் யாவரிடத்தும் அவர்கள் கவிதை என்ற பெயரில் செய்த பல செய்யுட்களை, பாடல்களை எளிதில் நம்மால் இனம்காண முடியும். அதே நேரம் அவர்களிடம் இருந்து சில நல்ல கவிதைகளும் கிடைத்திருக்கின்றன என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

எனவே மரபின் பா இலக்கணங்களுக்கு உட்பட்டு  எழுதப்படுகின்றவை எல்லாம் கவிதையாகி விடாது என்ற எண்ணம் நமக்கு, அதிலும் குறிப்பாக மரபில் எழுதுகின்றவர்களுக்கு வேண்டும். ஏனெனில் மரபுக்கவிதைகளின் அழிவிற்கு, இந்த உயிரில்லா வெற்றுச் சட்டகமாய்ப் பல்லிளிக்கும் சொற்சேர்க்கைகளும், சக்கைப்பாக்களுமே காரணமாயின என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.

இன்று புற்றீசல்போல பெருகித் தம்மைக் கவிதையெனும் (?புதுக்கவிதைகளுக்கும்(?) இது பொருந்தும்.


( “எதுகை மோனை தேவையில்லாத் தமிழ் மரபுக்கவிதைகள்“ என்ற பதிவினை அடுத்து எழுதப்பட்டு வெளியிடாமல் சேமிப்பில் இருந்ததை இன்று வெளியிடும் துணிவு பெற்றேன். )

பட உதவி- நன்றி http://www.archaeology.org/images/News/1504/India-Harappan-skeletons.jpg
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

32 comments:

 1. ஊமையன் ஒருவன் கனவுகள் கண்டான்.
  உரக்கச் சிரித்தான்.
  உறங்கியவர் எழுந்தனர்.
  உனக்கென்ன பைத்தியமுமா ?
  உன்மத்தம் ஆனது ஏன் ?
  உண்மையைச் சொல் எனக்
  கடிந்தார்கள்.
  ஊமையனோ தன்
  கை அசைவுகளிலே சொன்னான். என்
  கனவுகளும் ஊமை என்றான்.
  கவிஞனானான் .

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சுப்புத்தாத்தா!

   உங்கள் வருகையும் பின்னூட்டமும் காணப் பேருவப்பு.

   கனவுகள் பேசியிருந்தாலும் கூட அதை ஊமையால் சொல்லி இருக்க முடியாதுதானே? ;(

   மிகவும் அருமை.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 2. செய்யுள், பா, கவிதை பற்றி நன்றாகப் புரியும்படியான பதிவு. செய்யுள் என்பதைக் தவறாகப் புரிந்து இருக்கிறேன் என்று இப்பொழுதுதான் உணர்ந்தேன். பள்ளியில் அப்படித்தானே கற்றுக்கொடுக்கப்பட்டது - உரைநடையும் செய்யுளும் என்று! உரைநடை என்று படித்தப் பாடங்கள் கூட செய்யுள் தான், என் புரிதல் சரியா அண்ணா?

  கற்றுக்கொடுப்பதற்கு மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ!

   “““““பள்ளியில் அப்படித்தானே கற்றுக்கொடுக்கப்பட்டது - உரைநடையும் செய்யுளும் என்று! உரைநடை என்று படித்தப் பாடங்கள் கூட செய்யுள் தான்“““““

   பள்ளிப் பாடப்புத்தகத்தின் இப்பிரிவுகள் குறித்து இப்பதிவில் சேர்த்துப் பின் நீக்கியிருந்தேன் என்றால் நம்புவீர்களா? :).

   ஒரு மொழியின் ஒரு சில சொற்கள் காலவளர்ச்சியின் பொருள் மாற்றம் அடைகின்றன. இதனைப் பொருட்பேறு என்பர் மொழியியலார்.

   மொழியாற் செய்யப்படும் எல்லாவற்றையும் குறித்த செய்யுள் என்னும் சொல்லும் யாப்பு என்னும் சொல்லும் பின் குறிப்பிட்ட ஒன்றை மட்டுமே குறிக்கும சொற்களாகச் சுருக்கம் பெற்றதைச் சிறப்புப் பொருட்பேறு என்பர் அவர்கள்.
   இதனடிப்படையில் இன்று செய்யுள் என்பதும் யாப்பு என்பதும் பா வடிவங்களுக்கு மட்டுமே தனித்த உரிமையான சொல்லாடலாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதால் அவ்வரிகளைத் தவிர்த்தேன்.

   ஆனால் மரபுப்பாடல்களைப் பற்றிக் கூறும் போது இச்சொற்களின் மரபார்ந்த பொருளினையும் அறியவேண்டும் என்பதால் பகிர்ந்தேன்.

   இதன்படி உங்கள் புரிதல் மிகச் சரியானதே!

   கற்றுக் கொடுத்தல் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை. நீண்டநாட்கள் என் மனதில் தேங்கி இருந்த கருத்துகளே இவை.

   மாற்றுக்கருத்துகள் இருக்கக் கூடும்.

   தங்களின் வருகையும் கருத்தும்காண மிக மகிழ்ச்சி.

   தொடர வேண்டும்.

   நன்றி.

   Delete
  2. வணக்கம் அண்ணா.
   //பள்ளிப் பாடப்புத்தகத்தின் இப்பிரிவுகள் குறித்து இப்பதிவில் சேர்த்துப் பின் நீக்கியிருந்தேன் என்றால் நம்புவீர்களா? :).// ஹாஹா நீங்கள் இதை யோசிக்காமல் இருப்பீர்களா? எதையும் நன்கு ஆராய்ந்து எழுதுபவரல்லவா தாங்கள்? பொருட்பேறு என்பதையும் மரபார்ந்த பொருளினையும் அறியத் தந்ததற்கு நன்றி அண்ணா. நீங்கள் அறிந்த வாசித்த அருமையான தகவல்களை எங்களுடன் பகிர்வதால் நாங்களும் கற்றுக்கொள்கிறோமே. மாற்றுக் கருத்துகள் வந்தால் பார்த்துக்கொள்வோம் :)
   தொடர்கிறேன் அண்ணா, கிடைக்கும் சில நிமிடங்களில் வாசித்துக் கடக்கும் பதிவுகள் அல்ல உங்களுடையது, ரசித்துப் படித்து உள்வாங்கி மகிழவேண்டும் என்று நினைப்பேன்..அதனாலேயே தாமதமாகிறது அண்ணா..ஆனால் கண்டிப்பாகத் தொடர்வேன். நன்றி.

   Delete
 3. #ஏன் கணிதம் கூட இலக்கண வரையறைகளுடன் எழுதப்பட்ட பா வடிவத்திலேயே இருந்தது. அவை ஒருபோதும் கவிதையானதில்லை.#
  இந்த பாவிக்கும் ஏதோ கொஞ்சம் புரிகிறது :)

  ReplyDelete
  Replies
  1. அந்த அடைப்பிற்குள் உள்ளது மட்டும்தானே பகவானே? :)

   வருகைக்கும் தொடர்ச்சிக்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

   Delete
 4. வணக்கம் பாவலரே !

  நல்லதோர் பதிவு நானும் சிந்தித்துப் பார்க்கிறேன் குறுக்கு விசாரணைகளால் மூளையைக் குடைந்து பார்க்கிறேன் தாங்கள் சொல்லியது போல் ஒரு கவிதையை நான் எழுதியதாக எனக்குப் புலப்படவில்லை ம்ம் முயற்சிக்கிறேன்.....வாசகனை
  ஊடுருவும் கவிதையை எழுத !

  புதுக்கவிதைக்கும் யாப்பிலக்கணம் இருக்கிறதா விரைவில் எதிர்பார்க்கிறேன்
  மிக நல்ல பதிவொன்றினைத் தந்தீர் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வாழ்க வளமுடன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பாவலரே!

   தங்களைப் போன்ற மரபாளுமைகளின் சிந்தனையை எனக்கு இப்பதிவு தூண்டிற்றென்றால் மகிழ்ச்சியே. மாற்றுக் கருத்திருப்பினும் தயங்காமல் அறியத் தாருங்கள்.

   அதற்காக
   “ஒரு கவிதையை நான் எழுதியதாக எனக்குப் புலப்படவில்லை “ என்று கூறுவது உங்களின் தன்னடக்கம்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

   Delete
 5. \\\\ வாசிப்பின் ஏதோ ஒரு தருணத்தில், நெடுங்கதையொன்றின் ஓரிரு வரிகள் அத்தரிசனத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி இருக்கக்கூடுமென்றால் அங்கு அச்சொல், அத்தொடர், அம்மொழி கவிதையாய் இருக்கிறது.

  கட்டுரையொன்றில் சொல்லப்பட்ட தகவல், வெறும் செய்தி என்ற நிலையைக் கடந்து, அதைச் செதுக்கிய படைப்பாளியின் மாயக்கரங்கள் உங்கள் உள்தொட்டு, விவரிக்க முடியாத பாதிப்பிற்கு உங்களை உட்படுத்தி இருந்தால் அங்கு அந்த உரைநடை கவிதையாய் இருக்கிறது.////

  அற்புதமாக புரியவைத்துள்ளீர்கள் கவிதை என்றால் என்ன செய்யுள் என்றால் என்னவென்று. உரைநடையில் கூட கவிதை இருக்கும்.

  ஆனால் ....ம்..ம்

  \\\எனவே மரபின் பா இலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்படுகின்றவை எல்லாம் கவிதையாகி விடாது என்ற எண்ணம் நமக்கு, அதிலும் குறிப்பாக மரபில் எழுதுகின்றவர்களுக்கு வேண்டும். ஏனெனில் மரபுக்கவிதைகளின் அழிவிற்கு, இந்த உயிரில்லா வெற்றுச் சட்டகமாய்ப் பல்லிளிக்கும் சொற்சேர்க்கைகளும், சக்கைப்பாக்களுமே காரணமாயின என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.////

  உண்மை தான் இந்த உணர்வு நிச்சயம் இருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் நான் கவிதை என்று கிறுக்குபவையை எண்ணிப் பார்க்க வெட்கமாகவும் வேதனையகாவுமே இருக்கின்றது.
  ஆனால் நிச்சயமாக என்னுடையது எதுவும் கவிதை ஆகாது என்று மட்டும் புரிகிறது. திருத்தப் பட்டவை தவிர. அப்படி ஒரு கவிதையை என்னால் எழுத முடியாது என்பதையும் புரிந்து கொண்டேன். ஹா ஹா ....

  \\\கொதிக்கும் நினைவென்னை வடிகின்றது - வெந்து
  கிடக்கும் கனவின்னும் துடிக்கின்றது.///

  இப்படி எத்தனையோ தங்களுக்கே உரிய இந்த வரிகள் எல்லாமே அந்த மாயா ஜாலத்தை செய்து தான் போகிறது.....ஒவ்வொரு கவிதையும் சொல்லொணா பாதிப்பை என்று சொல்வதை விட பரவசத்தை ஏற்படுத்திச் செல்லும் எனக்குள். துயரம் நிறைந்தவையாக இருந்த போதும், ரசித்தேன் அவைகளை பிரமிப்புடன். அப்படி எழுதும் ஆற்றலை போற்றத்தானே வேண்டும். விபரிக்க முடியாத அளவுக்கு ஆஹா..... என்று கூற வைக்கும் அற்புதமான பாடல்கள்தான் அனைத்தும்.


  அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பதிவிற்கு நன்றி! தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 6. நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு யாப்பும் புரிவதில்லை. வெண்பாவும் வருவதில்லை. உங்களை எல்லாம் பிரமிப்புடன் பார்க்கவும் ரசிக்கவும் மட்டுமே தெரிகிறது.

  ReplyDelete
 7. கவிதை என்பது நம் உணர்வுகளிடையே ஏதேனுமொரு தூண்டுதலை நிச்சயம் நிகழ்த்துவதாகவேதான் எப்போதும் இருக்கிறது.
  நன்று சொன்னீர் நண்பரே நன்றி
  தம +1

  ReplyDelete
 8. எது கவிதை? இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ற கட்டுரை.

  // நானறிந்தவரை, மொழிவளம் மிக்க, கற்பனைத்திறன் மிக்க ஒருவர்கூடத் தான் கையாளும் சொற்களை, கொத்தியும், உடைத்தும், மாற்றியும் எழுத வேண்டிய சூழல் மரபில் இருக்கிறது //

  என்று சரியாகவே சொன்னீர்கள். மரபுக்கவிதை படைக்கும் சிலரும் வலிய வார்த்தைகளைப் போட்டு கவிதை படிக்கும் ஆர்வத்தை குறைத்து விடுகின்றனர். மரபுக் கவிதை, புதுக் கவிதை எதுவாக இருந்தாலும், பாடும்போது, தாளம் தட்டாது, ராகம் தப்பாது இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும். ( உதாரணத்திற்கு மனதில் நிற்கும் பழைய சினிமா பாடல்கள்)

  ReplyDelete
 9. வாசிப்பின் நீட்சியில் மொழியறிவின் அவசியத்தை உணர்த்தும் பதிவு. நன்றி

  ReplyDelete
 10. நானறிந்தவரை, மொழிவளம் மிக்க, கற்பனைத்திறன் மிக்க ஒருவர்கூடத் தான் கையாளும் சொற்களை, கொத்தியும், உடைத்தும், மாற்றியும் எழுத வேண்டிய சூழல் மரபில் இருக்கிறது. அல்லது அப்படி இருப்பதுதான் மரபெனவும், அதைப் புனைவது என்பது சாதாரணமானதில்லை எனவும் நம்மிடையே ஒரு கற்பிதம் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது.// உண்மைதான் சகோ. நாங்கள் இதில் அடக்கம். அதனால்தான் யாப்பு பயமுறுத்துகின்றதோ என்னமோ எங்களை...எழுதவருவதில்லை புரியாததினாலோ என்னமோ. ஆனால் ரசிக்கின்றோம், அனுபவிக்கின்றோம். ஒருவேளை சொற்கள் திணித்து எழுதப்படுவதால் அதன் உணர்வுகளின், அழகியலின் வெளிபாடு குறைந்து விடுவதால் மனம் லயிக்க மறுக்கின்றதோ?

  எது கவிதை என்று நீங்கள் சொல்லிய விளக்கம் புரிகின்றது. //வாசிப்பின் ஏதோ ஒரு தருணத்தில், நெடுங்கதையொன்றின் ஓரிரு வரிகள் அத்தரிசனத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி இருக்கக்கூடுமென்றால் அங்கு அச்சொல், அத்தொடர், அம்மொழி கவிதையாய் இருக்கிறது.

  கட்டுரையொன்றில் சொல்லப்பட்ட தகவல், வெறும் செய்தி என்ற நிலையைக் கடந்து, அதைச் செதுக்கிய படைப்பாளியின் மாயக்கரங்கள் உங்கள் உள்தொட்டு, விவரிக்க முடியாத பாதிப்பிற்கு உங்களை உட்படுத்தி இருந்தால் அங்கு அந்த உரைநடை கவிதையாய் இருக்கிறது// ஆஹா. அப்படி என்றால் நாங்கள் படித்த பாடங்களில் மனதைத் தொட்டவை எல்லாமும் உரைநடை என்றில்லாமல் கவிதைகளாய்தான் இருந்திருக்கின்றன! கதைகள் உட்பட! அப்படியென்றால் மனதைத் தொடாத பாக்கள் கூடக் கவிதை என்ற சட்டத்திற்குள் அடங்குவதில்லை அல்லவா?

  நல்லதொரு விளக்கத்தினால் ஒரு நல்ல கருத்தைத் தெரிந்துக் கொண்டோம் சகோதரரே. தமிழ்வகுப்பில் இருந்தது போன்ற உணர்வு.

  ReplyDelete
 11. எனக்கு இந்த சந்தேகம் பலமுறை எழுந்திருக்கிறது எனக்கு மரபிலக்கணம் தெரியாது தேர்ச்சி பெற முயற்சிக்கவுமில்லை. இருந்தாலும் எழுதி வந்தேன் புலவர் ஐயா தான் நான் எழுதுவதும் கவிதைதான் என்று ஒரு பின்னூட்டதில் ஊக்கம் அளித்தார் நான் எழுதி இருந்த ஒரு சில கவிதை(>)களையும் ஏதோ வரம்புக்கு உட்படுத்தநீங்களும் முயன்றிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை கவிதையில் உண்மை தெரிய வேண்டும் அனாவசிய சொல்லாடல்கள் இருக்கக் கூடாது சுருங்கச் சொன்னால் எளிதில் புரியும் படி இருக்க வேண்டும்

  ReplyDelete
 12. // கவிதை என்பது நம் உணர்வுகளிடையே ஏதேனுமொரு தூண்டுதலை நிச்சயம் நிகழ்த்துவதாகவேதான் எப்போதும் இருக்கிறது.//

  உண்மைதான். ஒரு கவிதை நம்முடைய உணர்வுகளைத் தூண்டாவிடில் அது வெறும் சொற்கோர்வைதான். மிக அருமையாக எது கவிதை என்பதை விளக்கிவிட்டீர்கள். பாராட்டுக்கள்!

  திரு துளசிதரன் V தில்லையகத்து அவர்கள் சொன்னதுபோல் தமிழ் வகுப்பில் இருப்பது போன்ற உணர்வு எனக்கும் ஏற்பட்டது.

  ReplyDelete
 13. எனக்கும் கவிதை எது என்பதில் குழப்பம் இருக்கிறது. உங்கள் பதிவு கொஞ்சம் தெளிவைக் கொடுத்திருக்கிறது.
  இன்றைக்கு கவிதை எழுத தயங்கும் நான் தொடக்கத்தில் கவிதைகளைத்தான் நிறைய எழுதிக்கொண்டிருந்தேன்.
  காலம் எப்படி நம்மை மாற்றுகிறது பாருங்கள்.
  அருமையான பதிவு!
  த ம 12

  ReplyDelete
 14. அன்புள்ள அய்யா,

  எது கவிதை? என்பது பற்றி நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்.

  மணவையில் இன்று கவிஞர் வைரமுத்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்...

  ஒரு வரிக்கவிதையாகச் சிலரை எழுதுத் சொன்னபோது அவர்கள் எழுதியதாக...

  இறுதியாக இவர்களின் கல்லரையில் எழுதப்படவேண்டியது


  குடிகாரன்...

  தண்ணீரில் தள்ளாடியாவன்... தரையில் படுத்துவிட்டான்!

  விபச்சாரி...

  இன்றுதான் தனியாக படுத்திருக்கிறாள்!

  அரசியல்வாதி...

  கைதட்டிவிடாதீர்கள்... உங்களையும் இழுத்து விடுவான்!

  ‘கவிதை நினைத்தால் வருவதல்ல... இதயம் கனத்தால் வருவது’ என்று வார்த்தைச் சித்தார் வலம்புரிஜான் குறிப்பிடுவார்.

  த.ம.12

  ReplyDelete
 15. தங்கள் பதிவை
  எனது தளத்தில் அறிமுகம் செய்த பின்
  மீண்டும் வருகிறேன்.

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 16. கவிதை எது என்று சிறப்பாக விளக்கி விட்டீர்கள்! அருமையான கட்டுரை! நன்றி!

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. தங்களின் இந்தச் சாட்டைச் சுழற்றலில் ஒரு பலத்த அடி என் மேலும் விழுந்திருக்கிறது. மகிழ்ச்சியோடு வாங்கிக் கொள்கிறேன். இப்போதும் எழுதிக் கொண்டிருப்பவற்றை எல்லாம் வெளியிட வாய்ப்பும் கால அவகாசமும் இல்லையெனினும், தேவையில்லை எனவும் தெளிவாகிறது. தங்களின் கூற்றுப்படி இந்தப் பதிவும் ஒரு சிறந்த கவிதைக்கான எல்லாத் தகுதியும் பெற்றிருக்கிறது.வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete

 21. வணக்கம்!

  எதுகவிதை என்றே எழுதியஇவ் வாக்கம்
  மதுக்கவிதை மாண்பேந்தி வாழும்! - புதுக்கவிதை
  உற்ற நிலைகாட்டும்! ஒண்டமிழ்த் தாயருளால்
  பெற்ற கலைகாட்டும் பேணு!

  பாட்டரசர் கி. பாரதிதாசன்
  தலைவர்:
  கம்பன் கழகம் பிரான்சு
  உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

  ReplyDelete
 22. வணக்கம் ஐயா,

  நெடுநாட்களாக என் மனதில் எழுந்த வினா?

  எது கவிதை,,,,,,

  சில உண்மைகளை வெளிப்படையாக சொல்ல எனக்கு துணிவு இல்லை, அழகான ஆழ்ந்த பொருள் பொதிந்த வரிகள்.

  தங்கள் கவி வரிகள் அருமை ஐயா,,,,

  ......வாசிப்பின் ஏதோ ஒரு தருணத்தில், நெடுங்கதையொன்றின் ஓரிரு வரிகள் அத்தரிசனத்தை உங்களுக்குள் ஏற்படுத்தி இருக்கக்கூடுமென்றால் அங்கு அச்சொல், அத்தொடர், அம்மொழி கவிதையாய் இருக்கிறது..........

  இது தான் இது தான் உண்மை,,,

  மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 23. வணக்கம் ஆசானே!!
  "//எது கவிதை" - அருமையான விளக்கம் ஐயா.

  இந்த கட்டுரையை கண்டிப்பாக இன்றைக்கு திரைப்படத்துறையில் இருக்கும் நிறைய கவிஞர்கள்(?) படிக்க வேண்டும்.

  ReplyDelete
 24. “கட்டுரையொன்றில் சொல்லப்பட்ட தகவல், வெறும் செய்தி என்ற நிலையைக் கடந்து, அதைச் செதுக்கிய படைப்பாளியின் மாயக்கரங்கள் உங்கள் உள்தொட்டு, விவரிக்க முடியாத பாதிப்பிற்கு உங்களை உட்படுத்தி இருந்தால் அங்கு அந்த உரைநடை கவிதையாய் இருக்கிறது.”
  அப்படியா? கவிதையைப் பற்றி நீண்டகாலமாக இருந்த ஐயம் நீங்கியது. தமிழ் இலக்கணம் சிறுகதை, திறனாய்வு, புதினம் போன்றவற்றைக் கூட செய்யுள் என்ற வகைமையில் அடக்குகிறது என்பது எனக்குப் புதிய செய்தி. மிகவும் நன்றி சகோ.

  ReplyDelete
 25. ஐயா! செய்யுள் தூள்!!

  மிக மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்! எது கவிதை என்பதை விளக்குவது தேனின் சுவையைச் சொற்களால் புரிய வைக்க முயல்வது போலாகும். ப்ச்! மிகவும் பழைய உவமையாக இருக்கிறதோ! சரி, இப்படிச் சொல்லலாமா? அது, மல்லிகையின் மணத்தை எழுத்துக்களால் உணர்த்த முயல்வது போல என்று? எப்படியோ, அதைத் தாங்கள் வெகு அழகாக உணர்த்தி விட்டீர்கள். சொற்களால் இதை விடப் புரிபடும் வகையில் கவிதை பற்றி விளக்கி விட முடியாதென்றே கருதுகிறேன். இவ்வளவு சிக்கல் மிகுந்த விதயங்களையெல்லாம் எழுத்து வடிவில் எப்படியேனும் புரிய வைத்து விட முயலும் தங்கள் மொழியாளுமையும் அதன் மீதான தங்கள் தன்னம்பிக்கையும் அபாரம்! இப்படி ஒரு கல்வெட்டுக் கட்டுரைக்காக மிக்க நன்றி!

  ReplyDelete