Tuesday 11 April 2017

குடுமியான்மலை – சிரிக்கும் கல்வெட்டு.


குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் குறித்துக் கேள்விப்பட்டிப்பீர்கள். அங்கிருக்கும் ஈசனுக்குக் குடுமி வந்தது பற்றியும் புராணக்கதை உண்டு. ஆனால் இந்தப் பதிவு, அங்கிருந்து சிரிக்கும் கல்வெட்டுப் பற்றியது.

சிவபெருமானைப் பொருத்தவரை அவர் ஒரு விரிசடைக்கடவுள்.

அடர்ந்து விரிந்த சடைமுடியினை உடையவர்.

அவர் விரிசடை குடுமியான் மலையில் குறுகிக் குடுமியாகிவிட்டது.

அதெற்கென்ன என்கிறீர்களா?

அதில்தான் சிக்கல் இருக்கிறது.

உமையொருபாகனான சிவபெருமான், தன்மனைவிக்குத் தெரியாமல், கங்கையைத் தன் விரிசடைக்குள்ளாக ஒளித்து வைத்திருந்தாராம்.

இங்கு அவருடைய விரிசடை குடுமியாகிவிட்டதால், இனிக் கங்கையை இவர் எங்கே ஒளித்து வைக்கமுடியும் என்று நினைத்து நினைத்து உமையாள் சிரிக்கிறாளாம்.

எங்கள் நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை
நங்கை பலகாலும் நகைசெயுமே - கங்கையுறை
கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்ட
தெங்கே யினிமறைப்பா ரென்று.

( எங்களது அழகிய குடுமியான் மலையைப் பார்த்து, ஏழு உலகங்களையும் படைத்த உமையவள், பூந்தாதுகள் பொருந்தி, நறுமணம் வீசும் தன் கணவரின் சடைமுடி, குறைந்து குடுமியாகிவிட்டபடியால், இவர் கங்கையை இனி எங்கே ஒளித்துவைப்பார் என்று எண்ணி எண்ணிப் பலமுறை சிரிக்கிறாள். )

குடுமியான்மலை அகிலாண்டேஸ்வரி  அம்மன் கோவிலின்  இரண்டாவது. கோபுரவாசலுக்கு இடதுபுறச் சுவரில் உள்ள  கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள இந்தப் பாடல், உமையவளின் நகையையும் இதனை எழுதிய புலவனின் கற்பனையையும் காலங்கடந்தும் படிப்பவர் இதழ்களுக்குக் கடத்திச் செல்கிறது.

கல்வெட்டு ஆதாரம் -  புதுக்கோட்டை சாசனங்கள், எண் 1092

பட உதவி நன்றி - http://3.bp.blogspot.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

23 comments:

  1. பாடலின் விளக்கவுரைக்கு நன்றி
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. அருமையான, சுவையான தகவல் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்தி்ற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. இதுவரை அறிந்திராத தகவல் ஆசானே/சகோ! அதுவும் பாடலுடன் விளக்கம் கொடுத்து விவரித்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசானே- சகோ!

      Delete
  4. சில மாதங்களுக்கு முன்தான் குடுமியான்மலைக்கு சென்றேன் ,ஆனால் , சிரிக்கும் கல்வெட்டு பார்க்கவில்லையே என்று நினைத்தேன் !இதைப் படித்த பின்தான் தெரிந்தது ... அது புலவனின் நகைச்'சுவையான'கற்பனைஎன்று! ஒரு சந்தேகம் , கங்கை எங்கேதான் போச்சு :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பகவானே!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      உங்கள் சந்தேகத்தை ஜெயகாந்தனிடம் அல்லவா கேட்கவேண்டும்?
      “ கங்கை எங்கே போகிறாள்?” என்று சொன்னவர் அவர்தானே? :)

      Delete
  5. இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் ஐயா!

      Delete
  6. அந்த புலவரின் நகைச்சுவை கலந்த கற்பனையை இரசித்தேன்.இங்கே எனக்கு ஒரு ஐயம், குடுமி என்பதற்கு ஆண் மக்களின் தலைமுடி என்பது மட்டுமல்லாமல் மாடத்தின் உச்சி, மலையுச்சி, தலையிற் சூடும் அணிகலன் என்றும் பொருள் உண்டு என அறிகிறேன்.
    அப்படி என்றால் இறைவன் உள்ள மலையுச்சியை குடுமியான் மலை என்று அழைத்ததை காலப்போக்கில் இறைவனுக்கு குடுமி இருப்பதால்தான் இது குடுமியான் மலை என அழைக்கப்படுகிறது என்று எண்ணி இந்த கதை புனையப்பட்டதோ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் ரசனைக்கு நன்றி.

      குடுமியான் மலையில் உள்ள சிவலிங்கத்திற்கு மேல் குடுமி போன்ற தோற்றம் உண்டு

      அங்குள்ள ஈசனும் குடுமிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
      ““இறைவன் உள்ள மலையுச்சியை குடுமியான் மலை என்று அழைத்ததை காலப்போக்கில் இறைவனுக்கு குடுமி இருப்பதால்தான் இது குடுமியான் மலை””

      குடுமியில் இருக்கும் இறைவன் குடுமியான் எனப்பட்டு, அதன்பின் எழுப்பப்பட்ட சிவலிங்கத்தில், குடுமிபோன்ற உரு செதுக்கப்பட்டிருக்கிலாம் என்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  7. குடுமியான் மலைக் கல்வெட்டினை நேரில் பார்த்திருக்கிறேன் நண்பரே
    ஆயினும் தகவல் புதிது
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  8. புலவரின் கற்பனை ரசிக்க வைக்கின்றது. குடுமியான் மலை பற்றிய இச்செய்தியை இப்போது தான் அறிகிறேன். நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  9. சுவையான கற்பனை! புலவர், அம்மன் இறையன்பர் போலும். தன் அம்மைக்கு மாற்றாக இன்னொருத்தியையும் தன் அப்பன் வைத்திருப்பது பொறுக்காமல் சமயம் பார்த்துப் பழி வாங்கி விட்டார்! :-D

    கால காலத்துக்கும் நின்று வரலாற்றுக்குக் கட்டியம் கூற வேண்டிய கல்வெட்டுகள் எல்லாம் இன்றிருந்து நாளை மறையும் வீட்டுக் கட்டடங்களுக்குத் தரை இடுவதற்காக வெட்டியெடுக்கப்பட்டு வரும் சூழலில், இந்தக் கல்வெட்டுப் பாடலை மின்வெளியில் செதுக்கியதன் மூலம் அழியாமல் பாதுகாத்து விட்டீர்கள் ஐயா! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவைக்கான இடம் குறைவு.

      அதற்காகவே இச்செய்தியைப் பகிர்ந்தேன் ஐயா.

      அன்றியும், கூடுமானவரை, இணையத்தில்லாத, அல்லது மாற்றுப்பார்வையுள்ள விடயங்களையே தற்பொழுதெல்லாம் பதிவு செய்ய நினைக்கிறேன்.

      தமிழக வரலாற்றினை அறியவும் ஆராயவும் பயன்படும் வரலாற்று மூலகங்கள் ஆராயப்படாமையும் அழிவின் விளிம்பில் உள்ளமையும் சுடும் உண்மை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. வெண்பாவையும், வெண்பாவை விஞ்சும் அழகான உங்கள் விளக்கத்தையும் ரசித்தேன்... கவியின் கண் என்பது இதுதானே?!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete

  11. பாடலும் விளக்கமும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. மிகவும் இரசித்தேன். எங்கள் மாவட்டம் வேறு. பெருமிதம் பிடிபடவில்லை.

    ReplyDelete