Sunday, 25 September 2016

கூட்டம் மயக்கும் கலை.


ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியை ஒருவர் கட்டுரை ஏடுகளைத் திருத்தி மாணவர்க்குக் கொடுத்துப் பொதுவான பிழைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்.

முயற்சி என்ற சொல்லிற்குப் பல மாணவர்களும் முயற்ச்சி என்று எழுதியதைக் குறிப்பிட்டு, தமிழ் மொழி இயல்பில் அடுத்தடுத்து இரு மெய்யெழுத்துகள் அருகருகே வரா! ற் என்னும் மெய்யெழுத்தின் அருகே ச் என்னும் மெய்யெழுத்துச் சேர்த்து ‘முயற்ச்சி‘ என்று எழுதுவது பிழை! முயற்சி என்பதுதான் சரி! என விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்.

ஒரு மாணவன் எழுந்து, அப்போ “மகிழ்ச்சி“ என்பதை ‘மகிழ்சி‘ என்று எழுதவேண்டுமா என்று கேட்க ஆசிரியை ஒரு கணம் திகைத்துப்போனார்.

மறுகணமே, “இல்லை. மகிழ்ச்சி என எழுதுவதுதான் சரியானது!” என்று கூறினார்.

இப்பொழுது அவர் சொல்லிய “ தமிழ்மொழி இயல்பில் அடுத்தடுத்து இரு  மெய்யெழுத்துகள் அருகருகே வரா ” என்னும் விதி பொய்த்துப்போனது.

மாணவன் கேட்டான் “ மகிழ்ச்சிக்கு அருகே இரண்டு மெய்யெழுத்துக்கள் அருகருகே வரலாமென்றால் அப்போ முயற்ச்சி ” என்னும்போது மட்டும், ஏன் மெய்யெழுத்துக்கள் அருகருகே வரக்கூடாது?”

“சில இடங்களில் வரும் . சில இடங்களில் வரக்கூடாது அவ்வளவுதான்!”
என்று கூறி அம்மாணவனை அமரச்சொன்னார் அந்த ஆசிரியை.

மாணவனை அதட்டிச் சமாதானம் கூறி அமரவைத்தாலும், “தன்னெஞ்சறிவது பொய்யற்க!” எனத் தான் சொல்லியது தவறு தமக்குச் சரியான விடைதெரியவில்லை. ஏதோ கூறி இப்போதைக்குச் சமாளித்துவிட்டோம்” என்ற எண்ணம் நிச்சயம் அந்த ஆசிரியைக்கு இருந்திருக்கும். எல்லா ஆசிரியர்களும் இதுபோன்ற தருணத்தைத் தங்கள் பணியனுபவத்தில் எதிர்கொண்டே இருப்பர்.

இதில் தவறில்லை.

எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்க முடியாது.

ஆனால், அப்படித் தெரியாததைக் குறிப்பாக மாணவர் கேட்டுத் தனக்குத் தெரியாத அல்லது தானே ஐயுறும் வகையில் அளித்த விடையைத் தெரிந்து கொள்வது அதை அம்மாணவர்க்குத் தெரிவிப்பது ஒரு ஆசிரியரின் கடமை!

பொதுவாக மேலே மாணவன் கேட்ட விடைக்குச் சற்றே தமிழ்ப்பரிச்சயம் உள்ளவர்கள் அளிக்கும் பதிலொன்றுண்டு.

“வல்லின எழுத்துகள் (க்,ச்,ட்,த்,ப்,ற்) வந்தால் அதற்கு அருகில் இன்னொரு மெய்யெழுத்து வராது.“

ஆனால் இப்பதில் முற்றும் சரியானதன்று.

கீழே சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறேன்.

காக்கை

உச்சி

கத்தி

உப்பு

இவை சற்றுப் புரிதலுக்காகக் கீழ்க்கண்டவாறு பிரித்துக்காட்டப்படுகிறது.

காக்கை = கா(க்+க்)+ஐ
உச்சி = உச்+ச்+இ
கத்தி = கத்+த்+இ
உப்பு = உப்+ப்+உ

இங்கு உயிர்மெய் எழுத்துப் பிரிக்கப்படும் போது ஒரு மெய்யெழுத்திற்கு அருகில் இன்னொரு மெய்யெழுத்து வந்திருப்பதைக் கவனியுங்கள்.

இன்னொரு ஒற்றுமையும் இச்சொற்களில் உண்டு.

அதாவது,

மேலே காட்டிய சொற்களில் அருகருகே வரும் இரண்டு மெய்யெழுத்துகளும் ஒரே மெய்யெழுத்தாக உள்ளன. (க்,க் – ச்,ச் – த்,த் – ப்,ப் )

இப்பொழுது உங்களுக்கு ஒரு போட்டி…..!

தமிழ்ச்சொற்களில் இதே போன்ற எந்தச் சொற்களை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக்காட்டலாம். ஆனால் நான் காட்டிய இந்த நான்கு மெய்யெழுத்துகளுக்கு (க்,ச்,த்,ப்) அருகிலும்  வேறு மெய்யெழுத்துகள் தான் வரவேண்டும். அதே எழுத்து அருகே வரக்கூடாது.

ஒருவேளை எங்களால் இது முடியவில்லை வேண்டுமானால் இதே போல் அருகருகே ஒரே மெய்யெழுத்துச் சேர்ந்துவரும் சொற்களைக் காட்டுகிறோம் என்று சொல்வீர்களானால் அதற்கு இன்னொரு போட்டி இருக்கிறது.

இதோ இந்தச் சொற்களைப் பாருங்கள்!

தீர்ப்பு

மகிழ்ச்சி

இங்கு, தீர்ப்பு என்ற சொல்லில்,
ர்ப்
என்னும் இரண்டு மெய்களும்,

மகிழ்ச்சி என்னும் சொல்லில்
ழ்ச்
என்னும் இரண்டு மெய்களும் அருகருகே வந்துள்ளன.
(தேர்வு, (தேர்+வ்+உ) வாழ்க (வாழ்+க்+அ) என்பன போன்ற சொற்களில் அருகே வரும் உயிர்மெய்யைப் பிரித்தாலும் இவ்வாறு ர், ழ், என்னும் இரு எழுத்துகளின் அருகே வேறு மெய்யெழுத்துக்கள் வந்திருப்பதைக் காணலாம்.)

இப்பொழுது,

ர் மற்றும் ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகளுக்கு அருகிலும் அதே மெய்யெழுத்துகள் வரும் தமிழ்ச்சொற்களைக் காட்டுங்கள். அதாவது ர்ர், அல்லது ழ்ழ் என அருகருகே அதே மெய்கள் வந்திருக்க வேண்டும்.

போட்டி இதுதான்.

க்,ச்,த்,ப் ஆகிய மெய்யெழுத்துகளுக்கு அருகில் வெளிப்படையாகவோ உயிரெழுத்துடன் சேர்ந்தோ வேறு மெய்யெழுத்துகள் வரும் தமிழ்ச்சொற்களைக் காட்ட வேண்டும்.

அல்லது,

ர்,ழ் மெய்யெழுத்துகளுக்கு அருகில் வெளிப்படையாகவோ உயிரெழுத்துடன் சேர்ந்தோ அதே மெய்யெழுத்துகள் வரும் தமிழ்ச்சொற்களைக் காட்ட வேண்டும்.

முக்கியமாய் நீங்கள் காட்டும் சொற்கள் தமிழ்ச்சொற்களாய் இருக்க வேண்டும்.

முயற்சி செய்யுங்கள்.

தலைப்பிற்கான காரணமும் இதன் பதில்களுக்கான தொடர்ச்சியும் அடுத்த பதிவில்……!

படஉதவி - நன்றி http://i.ndtvimg.com/



Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

56 comments:

  1. சபாஷ்! சரியான போட்டி!! விடை காண முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      வாருங்கள் ஐயா.

      தங்கள் வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றிகள்.

      தங்கள் முயற்சியினை அறியத் தாருங்கள்!

      Delete
  2. பணியில் உங்கள் இன்வால்வ்மெண்ட் என்னை ஈர்க்கிறது நானெல்லாம் தமிழ் இலக்கணம் படித்து எழுத வில்லை. படிப்பதும் எழுதுவதும் இயல்பாகவே இருக்கிறது இப்போதுதான் இந்த மாதிரி சில விதிகளைப் படிக்கிறேன் பதிவுகள் வாயிலாக. பத்திரிக்கைகள் எழுத்துகள் வாழ்த்துகள் போன்றவற்றை எழுதும் போது சந்தேகங்கள் வருவதுண்டு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!
      நல்ல நடையில் எழுதப்பட்ட எம்மொழி நூலாயினும், அதில் பரவலான வாசிப்பு இருப்பவர்களுக்கு இலக்கணம் படித்து எழுதவேண்டும் என்பதில்லை.

      நீங்கள் சொல்லியுள்ளபடி சில சந்தேகங்கள் வரும்போதுதான் இந்த இலக்கணங்களைத் தேட வேண்டி இருக்கிறது.

      நேரமும் ஆர்வமும் தேவையும் அறிந்தவர்தொடர்பும் இருக்கும்போது யாவர்க்கும் இது எளிதாகவே அமையும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. ர்,ழ் மெய்யெழுத்துகளுக்கு அருகில் வெளிப்படையாகவோ உயிரெழுத்துடன் சேர்ந்தோ அதே மெய்யெழுத்துகள் வரும் தமிழ்ச்சொற்களைக் காட்ட வேண்டும்.//

    சர்ச்சை,வார்த்தை பார்வை, காழ்ப்பு சரியா சகோ?

    கீதா

    இதோ அடுத்ததற்கும் விடை சொல்ல முயற்சி செய்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!
      தங்களின் ஆர்வம் கண்டு வியக்கிறேன்.
      பதிவு படித்த நண்பர் ஒருவர் இப்பொழுதுதான் கூறினார். “ஆரம்பம் நன்றாகத்தான் இருந்தது. பின்பான நீட்சி புரிந்து கொள்ளமுடியாத ரசனைக்கு இடமற்ற இலக்கணச் சரக்கென்று”

      அவர் இதனை வாசித்ததற்காக நன்றி கூறிக்கொண்டிருந்தபோதுதான் தங்களின் பின்னூட்டம்.

      மிகுந்த மகிழ்ச்சி!

      ///ர்,ழ் மெய்யெழுத்துகளுக்கு அருகில் வெளிப்படையாகவோ உயிரெழுத்துடன் சேர்ந்தோ அதே மெய்யெழுத்துகள் வரும் தமிழ்ச்சொற்களைக் காட்ட வேண்டும்.//

      சர்ச்சை,வார்த்தை பார்வை, காழ்ப்பு சரியா சகோ?////

      இவற்றுள் இரு சொற்கள் வடசொற்கள்.

      நிற்க,

      விதியை மீண்டும் காண்க...!

      ர், ழ், என்னும் இரு எழுத்துகளுக்கு அருகில் அதே மெய்கள்தான் வரவேண்டும்.

      ர்ர், / ழ்ழ்

      எனுமாறு.

      இவ்விரண்டெழுத்திற்கும் அதுதானே விதி?
      நீங்கள் காட்டியுள்ள எடுத்துக்காட்டில் இவ்விரு மெய்களின் பின்பும் வேறு மெய்கள் அல்லவோ வருகின்றன :)
      தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

      நன்றி

      Delete
    2. ஓ! ஆம்! ஆம்!இரு சொற்கள் வட சொற்கள்....!!! அதே மெய்யும் இல்லை..ம்ம்ம்ம் முயற்சி செய்கிறேன். சகோ

      Delete
  4. முதலில் சொன்னதற்கு மற்றுமொன்று....உணர்ச்சி

    //க்,ச்,த்,ப் ஆகிய மெய்யெழுத்துகளுக்கு அருகில் வெளிப்படையாகவோ உயிரெழுத்துடன் சேர்ந்தோ வேறு மெய்யெழுத்துகள் வரும் தமிழ்ச்சொற்களைக் காட்ட வேண்டும்.//

    சக்கை - பச்சை இவை இதற்குச் சரியான உதாரணங்கள் அல்ல..இருங்கள்:.....

    பக்தி? சக்தி - த் + இ மறைமுகமாக

    இன்னும் கொஞ்சம் மூளையைக் கசக்குகின்றேன். அருமையாக இருக்கின்றது..சுவாரஸ்யமான வகுப்பு சகோ. மீண்டும் மிகவும் விருப்பமான இலக்கண வகுப்பிற்குள் இருப்பது போன்ற மகிழ்ச்சியான உணர்வு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருக வருக!

      உணர்ச்சி என்பதும் முற்சொன்ன நிபந்தனைப்படி பிழையே ஆகும்.
      சக்கை பச்சை இவை நீங்களே சொல்லியதுபோல சரியான உதாரணங்கள் அல்ல.
      அடுத்து,
      பக்தியும் சக்தியும் தமிழ்ச்சொற்கள் அல்ல. :)
      பக்தி இலக்கியம் என்று நாம் வகைப்படுத்தி இருப்பினும்,
      “சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்
      பத்தி மலர்தூவ முத்தி யாகுமே!
      என்று பக்தியைத் தமிழ்ப்படுத்தி ஆண்டனவே அவ்விலக்கியங்களும்!
      நீங்கள் காட்டும் சொற்கள் தமிழ்ச்சொற்களாய் இருக்க வேண்டும்.

      ஆனாலும்,

      தங்களின் ஆர்வம் காண எனக்கும் ஊக்கம் மிகுகிறது.

      தொடருங்கள்.

      நன்றி

      Delete
    2. ஆம் சகோ புரிகிறது அந்த இரு சொற்க்களும் தமிழ்ச்சொற்கள் அல்ல என்று தெரிந்து கொண்டே தான் ஆனால் இப்போது பயன்பாட்டில் இருப்பதை வைத்து இங்கு பதிந்துவிட்டேன்!!! புரிந்து கொண்டேன் சகோ

      Delete
    3. அதானே பார்த்தேன் சகோ எப்படி அவ்வளவு எளிய போட்டியை அறிவித்து விட்டார் என்று!!! ஆர்வம் தொற்றிக் கொள்ள விரைந்து அனுப்பிய பதில்கள்.

      மீண்டும் வாசிக்கும் போதுதானே போட்டியின் கடினம் உரைக்கிறது!!!!

      Delete
    4. உறைக்கிறது தவறாக உரைக்கிறது என்று வந்துவிட்டது

      Delete
    5. ஒரு சிறு திருத்தம்! உரைக்கிறது என்பதே சரி.

      Delete
    6. ஐயா,

      இப்போதுதான் காண்கிறேன்.

      ‘உறைக்கிறது‘ என்பதே ‘நன்கு பட்டது‘ என்று பொருள்படும். எனவே சகோ. கீதா அவர்களின் திருத்தம் சரிதானே?

      உரைக்கிறது என்பது எப்படிச் சரியாகும்?

      வேறேதும் பொருள் உளதா?

      விளக்கம் வேண்டுகிறேன்.

      நன்றி

      Delete
  5. நல்லதொரு போட்டி....

    அதே வேகத்துடன் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றிகள் நண்பரே!

      Delete
  6. காழ்ச்சை என்பதும் தமிழ்ச்சொல் -(இதோ அடுத்து ஒரு உதாரணம்) என்று அறிந்ததாய் நினைவு. சரியா சகோ?


    ReplyDelete
    Replies
    1. காழ்ச்சை என்பது மலையாளம் அல்லவா சகோ!
      தமிழில் காட்சி?!
      இங்கும் ழ் அருகில் ழ் வரவில்லை அல்லவா?

      Delete
    2. ஓ அது மலையாளச் சொல்தானோ...ஆம் காட்சி அது தெரிகிறது. புரிந்தது. இணைய வகுப்பு போல் உள்ளதால் ஆசிரியரிடம் மாணவி பதில் சொல்லி, கேள்வி எழுப்பி விடை பெறுவது போல் உள்ளது. சகோ. தவறாக நினைக்க வேண்டாம்..

      கீதா

      Delete
  7. வார்ப்பு, தீர்ப்பு, கீர்த்தி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கும் இவை சரியான உதாரணங்கள் இல்லை. ஆர்வ மேலீட்டினால் ...அதுவும் கீர்த்தி தமிழ்ச்சொல் அல்ல ...

      கீதா

      Delete
    2. அன்பீனும் ஆர்வ முடைமை அதுவீனும்
      நண்பெனும் நாடாச் சிறப்பு
      :)

      Delete
    3. ஹஹஹ் நன்றி அழகான திருக்குறள் பதில்!!

      Delete
  8. வணக்கம் சகோ.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இலக்கணத்துடன் கூடிய பதிவு கண்டு மகிழ்ச்சி. வல்லினம் மிகாது என்று படித்திருக்கிறேன்.
    எவ்வளவு யோசித்தும் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துக்களுக்கு அடுத்து, வேறு மெய்யெழுத்து உள்ள சொல்லைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே இவற்றுக்கு முன்புறம், வேறு மெய்யெழுத்து வரும் சொற்களை எழுதியுள்ளேன்:-
    மாணவர்க்கு - ர் + க் (+உ)
    மீட்சி - ட்+ ச் (+இ)
    வாழ்த்து - ழ்+த் (+உ)
    உயிர்ப்பு – ர்+ப் (+உ)
    அது போல் ழ், ர் ஆகிய மெய்யெழுத்துக்களுக்கு அடுத்து அதே மெய் வருவதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
    காரிருள். தமிழீழம் என உயிர்மெய் எழுத்துக்கள் சேர்ந்து வருகின்றனவேயன்றி, இதே மெய்யெழுத்து சேர்ந்து வருவதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
    தலைப்பிற்கான காரணத்தையும், பதில்களையும் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
    எல்லாரும் என்பது எல்லாவரும் என்று தட்டச்சாகியிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      இலக்கணப்பதிவுகளைக் காண மகிழ்ச்சி என்று நீங்கள் கூறுவது கேட்க ஈன்ற பொழுதினும் பெரிதுவகை எனக்குத்தான்.

      முதன்மையாய்,

      பிழையைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.
      திருத்திவிட்டேன்.

      சகோ. கீதா அவர்கள் காட்டிய பக்தி என்ற சொல் பெரிதும் தமிழ் என நம்பப்படுவது.

      நம்மிடம் வழக்கத்தில் உள்ள மேலும் பல சொற்களை இவ்விதிக்குட்படுத்தி ஆராயலாம்.

      தங்களின் வருகையும் ஆர்வமும் தேடலும் காண எப்பொழுதும் போல் வியப்பும் நன்றியும்.

      அடுத்த பதிவில் நிச்சயம் தங்கள் தேடலுக்கான விடை கிடைக்கும்.


      Delete
    2. “சகோ. கீதா அவர்கள் காட்டிய பக்தி என்ற சொல் பெரிதும் தமிழ் என நம்பப்படுவது. நம்மிடம் வழக்கத்தில் உள்ள மேலும் பல சொற்களை இவ்விதிக்குட்படுத்தி ஆராயலாம்.”

      நீங்கள் சொன்னபடி வழக்கத்தில் உள்ள தமிழ் அல்லாத சொற்களைக் கீழே எழுதியிருக்கிறேன்:-

      சப்தம்
      பிராப்தம்
      குயுக்தி
      ஜகத்குரு

      Delete
  9. தலைப்பின் அர்த்தம் மெய்ம்மயக்கமோ சகோ????!!! இப்போது நினைவுக்கு வருகிறது. இதைப் பற்றி இலக்கண வகுப்பில் கற்றது நினைவுக்கு வருகிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஓரேர், ஈரேர் என்று நினைவுக்கு வருகிறது சகோ.

      திருப்பாவையில் 29 வது பாடலில் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் (இந்த ஏழேழ் )(30 பாடல்களும் மனப்பாடம். ) என்று வருமே இதுதான் நினைவுக்கு எட்டுகிறது.
      ஆனால் சரியான உதாரணங்கள் நினைவுக்கு எட்டவில்லை. உங்கள் விளக்கத்திற்குக் காத்திருக்கிறேன். மிகுந்த ஆவலுடன்,ஆர்வமுடன்!

      Delete
    2. தலைப்பு அப்படிப் பொருள்படுகிறதா?:)

      தங்களின் விடையறியக் காத்திருக்கிறேன்.

      Delete
    3. ஓர் + ஏர்., ஈர் + ஏர்

      ஏழ் + ஏழ்

      இங்கு இவ்விருமெய்க்கும் அருகில் உயிரன்றோ வருகிறது?!

      தொடர்க.

      காத்திருக்கிறேன்.
      நன்றி

      Delete
    4. ஆமாம் சகோ..இவை சரியான உதாரணங்கள் அல்ல. மெய்ம்மயக்கத்திற்கும் அல்லதான். எனக்கு நினைவுக்கு ஏதோ வந்ததைச் சொன்னேன் சகோ. ஆமாம் உயிர் தான் வருகிறது ...ம்ம்ம் நானும் மூளையைத் தேய்த்துக் கொண்டிருக்கிறேன். சகோ. விடை கிடைக்கிறதா பார்க்கிறேன்.

      Delete
  10. தள்ளி நின்று வேடிக்கை காண்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் கலந்துகொள்ளலாம் நண்பரே!

      Delete
  11. நான் கலந்து கொள்ள இயலவில்லை!காரணம் வயதும் மறதிதியும் ஆகும்! மன்னிக்க!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      விடை நிச்சயமாய் நீங்கள் அறிந்ததுதான்.

      தாங்களின் புலமையை நான் அறிவேன்.

      மன்னிப்பெல்லாம் நான் கேட்க வேண்டியது.

      தங்களின் வருகைக்கும் அன்பினுக்கும் நன்றிகள்.

      Delete
  12. "மேற்கு" என்ற சொல்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      இது போட்டியின் முதற்பகுதிகென்றால்,

      அதில்,

      காட்டப்பட்டுள்ள நான்கு சொற்களுள்,(க்,ச்,த்,ப்) ற் என்பது இல்லையே!!! :)

      தொடருங்கள் .

      நன்றி

      Delete
  13. பதிவை இன்னும் படிக்கவில்லை.
    முதலில் தங்களை வணங்கி வரவேற்கிறேன்.
    இன்ப அதிர்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா!
      தங்களின் பதிவுகள் பார்த்தேன் அண்ணா!
      பின்னூட்டமிட மாலையில் வருகிறேன்.
      தங்கள் அன்பினுக்கு நன்றி

      Delete
  14. முயன்று பார்க்கிறேன். என் சிற்றறிவுக்கு எதுவும் கிடடவில்லை.
    சப்தம் , உத்யோகம் , சத்யம் --- அட எல்லாம் வடமொழி சொற்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா இவை வடசொற்களே!
      ஆனால் தமிழில் இவை,

      சத்தம், உத்தியோகம், சத்தியம் என நான் மேற்சொன்ன நிபந்தனைக்குட்பட்டே இயங்குவதைக் கவனியுங்கள்.
      நன்றி

      Delete
  15. மீண்டும் விசையோடு வந்ததற்கு வாழ்த்துகள்.கணினி குறைபாட்டால் உடன் தொடரவோ, பின்னூட்டமிடவோ இயலவில்லை. தொடர்வேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      தங்களின் அன்பை அறிவேன்.

      வருக வருக.

      நன்றி

      Delete
  16. புதிய வேகத்தோடு தங்களின் வரவு மகிழ்வளிக்கிறது. போட்டியா?....அருகேயிருந்து பார்ப்பேன். அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  17. சபாஷ் (வடமொழி தான் இது )சரியான போட்டி ,கலந்துக்கத் தான் எனக்கு நேரமில்லாமல் போய்விட்டது :)

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை இதைத் தட்டச்சுச் செய்யும் போதே எந்த வரியை எடுத்துக் கலாய்க்கப் போகிறீர்களோ என்றெண்ணியபடியே தட்டச்சினேன்.
      அதுவரையில் தப்பித்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete
  18. வீரப்பா பாணியில் சொல்ல வேண்டுமானால், "சபாஷ்! சரியான போட்டி! ஹாஹ்ஹாஹ்ஹாஹா..."

    நான் ஏழாவது எட்டாவது படிக்கும் வயதில் நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைத் தொடங்கியபொழுது இப்படித்தான் ‘முயற்ச்சி’, ‘பயிற்ச்சி’ என்றெல்லாம் எழுதலானேன். அப்பொழுது யாரோ "வல்லின றகரத்துக்கு அடுத்து ஒற்று மிகாது" என்று கூறித் திருத்தினார்கள். எனக்கு என் அம்மாவில் தொடங்கிப் பின் வீட்டு அக்கா வரை ஆசிரியர்கள் ஏராளமானோர் என்பதால் திருத்தியவர்கள் யார் என நினைவில்லை. அவர்கள் சொன்னதை அடுத்து நானே ஆர்வக்கோளாற்றில், மேலே அந்த ஆசிரியர் கூறியது போல ‘ஒருவேளை, இரண்டு மெய்யெழுத்துக்கள் அடுத்தடுத்து வரக்கூடாது என்பதால் இப்படிச் சொல்கிறார்களோ’ என்றெண்ணிப் பிறகு தாங்கள் கூறியது போல் மகிழ்ச்சி, தீர்ப்பு எனப் பல சொற்கள் நினைவுக்கு வந்து அது தவறென்று உணர்ந்தேன்.

    சரி, போட்டிக்கு வருகிறேன்.

    இதற்கான விடை, "இப்படிப்பட்ட சொற்களே இல்லை" என்பதுதான், சரியா ஐயா?

    எனக்கு இலக்கணம் ஏதும் தெரியாது. இருந்தாலும் எந்த அடிப்படையில் சொல்கிறேன் என்றால், நீங்கள் கருத்துரையில் சொன்ன பதிலுரைகளை வைத்துத்தான். கீதா அவர்கள் பக்தி, சக்தி ஆகிய சொற்களை எடுத்துக் காட்டியபொழுது அவை வடமொழிச் சொற்கள் என்று கூறியதோடு நில்லாமல் அவை தமிழில் தமிழ் இலக்கணத்துக்கேற்ப ‘பத்தி’, ‘சத்தி’ என்றே வழங்கியதாகக் கூறியிருந்தீர்கள். ஆக, வல்லின மெய்யெழுத்துக்களை அடுத்து வேறு மெய்யெழுத்துக்கள் இடம்பெறுவது தமிழ் இலக்கணத்தின்படி பிழை என்றாகிறது. அப்படியிருக்க, அப்படிப்பட்ட சொற்கள் தமிழில் எப்படி இருக்கும்? இரண்டு ‘ர்’, இரண்டு ‘ழ்’ வரும்படியான சொற்களுக்கும் அப்படியே. நான் கூறியது சரிதானே ஐயா?

    ஏதோ, குறுக்குச்சால் ஓட்டிக் கண்டுபிடித்து விட்டேன். ஆனால், என்னால் விடையை மட்டும்தான் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர, இஃது ஏன் எப்படி என்பதற்கான காரணங்களைத் தாங்கள்தாம் விளக்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.
      தங்களின் முடிவு சரியானதே!
      சகோ கீதா அவர்கள் இதன் இலக்கணப்பெயரைக் கணித்து விட்டார்கள்.
      சகோ. கலையரசி அவர்கள் இதன் விதியை வருவித்துவிட்டார்கள்.
      இதோ நீங்களும்.

      பொதுவாக,

      இது போன்ற சொற்களை உச்சரிக்கும்போது, (முயற்+ச்+இ )அங்கு ச் என்ற மெய் வந்தே இ என்ற உயிர் தோன்றுகிறது.

      நாம் சொல்லும் போது குறிப்பிட்ட எழுத்திற்குக் கொடுக்கும் வன்மை அல்லது அழுத்தம் காரணமாக எழுதும்போது இப்பிழை நேர்கிறது என்பது என் எண்ணம்.
      நானும் இத்தவறுகளைச் செய்து திருத்தப்பட்டவன்தான்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      அடுத்த பதிவில் இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி ஐயா! இதோ, போய்ப் பார்க்கிறேன்.

      Delete
  19. எப்படி இருந்தாலும் றகரத்தைத் தொடர்ந்து மெய்யெழுத்து வராது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்ரீ!

      வருக வருக!!

      //எப்படி இருந்தாலும் றகரத்தைத் தொடர்ந்து மெய்யெழுத்து வராது!//
      எல்லா மெய்யெழுத்துக்களுக்கு அருகிலும் மெய்யெழுத்துகள் வரும் என்பது என் கருத்தன்று. அது தமிழ் மரபிலக்கணக் கருத்தே!

      வகுப்புகளில் வல்லினத்தைத் தொடர்ந்து மெய்யெழுத்துக்கள் வராது எனக் கற்பிக்கப்படலாம்.

      எனக்கு அவ்வாறே கற்பிக்கப்பட்டது.

      பொதுவாக வல்லினத்தில் சில குறிப்பிட்ட எழுத்துகள் வருமிடங்களில் (கட்ச்சி, முயற்ச்சி…) பிழை தவிர்த்து எழுதுதற்கு எளிதில் நினைவு கூரத்தக்க உத்தி என்பதால் அதனை ஓரளவிற்கு ஏற்கலாம்.

      ஆனால், மெய்ம்மயக்கம் பற்றிப் பேசுமிடத்து இவ்வாறு கொள்வது தடையாகும்.
      ஏனெனில் மெய்ம்மயக்கம், எல்லா மெய்களுக்கு அருகிலும் மெய்யெழுத்து வரும் என்கிறது.

      பயிற்சி என்பதை, பயிற்+ச்+இ

      எனப் பிரித்து ற் என்னும் மெய்யெழுத்தின் அருகில் ச் என்னும் மெய் வருகிறது என்று நம் இலக்கணம் சொல்லும்.

      இதற்குக்காரணம், இலக்கணங்களில் எழுத்துக்களின் பெரும்பகுப்பு உயிர் – மெய் என்றிருப்பதே!

      சொல்லப்போனால், உயிர்மெய் எழுத்துக்கள் என்பன, எழுதுதல் எளிமை கருதிய மெய் – உயிர் இணைந்த கூட்டுவடிவத்தின் குறியீடே…!

      ஒருகாலத்தில் ணா, னை, லை என்பன போன்ற எழுத்துக்கள் துணையெழுத்தின்றி ஓரெழுத்தாக எழுதப்பட்டது போன்று மெய்யும் உயிரும் தனித்தனியே எழுதப்பட்டுப் பின் கூட்டுவடிவாயிருக்க வேண்டும்.

      ஆனால் இதனை இந்நாளில் நாம் கூறிக்கொண்டிருக்க இயலாது.

      ஆகவேதான் பதிவில்,

      “வல்லின எழுத்துகள் (க்,ச்,ட்,த்,ப்,ற்) வந்தால் அதற்கு அருகில் இன்னொரு மெய்யெழுத்து வராது.“

      என்பது தவறானது என்று சொல்லாமல்,

      “இப்பதில் முற்றும் சரியானதன்று.”

      என்று கூறியிருந்தேன்.

      மேற்குறித்த காரணங்களால்,

      றகரத்தைத் தொடர்ந்து மெய்யெழுத்து வராது என்று என்னால் துணிந்து கூற இயலவில்லை.

      உங்கள் வருகையும் கருத்தும் என்றும் வேண்டும்.

      நன்றி.

      Delete
  20. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முனைவரே!
      நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
      இங்கே, கருத்துகளை மட்டுறுத்துவதில்லை என்பதால் தங்கள் பின்னூட்டம் உடனே வெளியாகிவிட்டது.
      மன்னிக்க...!

      இதோ நீக்கி விடுகிறேன்.

      மீண்டும் வாழ்த்துக்கள்.

      நன்றி

      Delete