Sunday, 16 October 2016

இந்தப் பழைய தமிழ் உரையாடலில் உள்ள இரகசியம் – உங்களுக்குத் தெரிகிறதா?


பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இருவர் பேசிய உரையாடலின் எழுத்துப்பதிவு இது. இவர்கள் உரையாடலுள் ஓர் இரகசியம் இருக்கிறது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

கவிராயர் ஒருவருக்கும் வள்ளல் ஒருவரின் மேலாளருக்கும் இடையே நடந்த உரையாடல் இது.

கவிராயர்: நம்ம துரையவர்களைக் காண இன்றைக்கு மனசு துடிக்குது! கண்டு முறையிட்டுக்கொள்வது உசிதமோ கூடாததோ சொல்லுங்கள் பிள்ளையவர்களே!

மேலாளர்: அய்யா கவிராயர் அவர்களே! தங்களுக்குச் செய்யும் மரியாதி விஷயத்தில் ஐயரும் நானும் சொன்னோம். நம் எசமானும் ஒப்பி மனசுஞ் சுமுகமாச்சுது!

கவிராயர்: தாங்களறியாத சமாசாரமென்ன? உத்தரவு வாங்கி என்னை ஊர்க்கனுப்பி வைப்பதெற்கெல்லாம் கிருபைதான் வேணும் மேனேஜர் அவர்களே! மெத்த நம்பினேன்! வீண்பேச்சல்ல! நிசம்!

மேலாளர்: நமது பிரபுவிடத்தினிலே மரும சங்கதி முழுதும் பேசி முடிவு செய்திருக்கிறேன். அதிக சந்தோஷந்தானே அய்யா கவிராயரே!

உரையாடலை மட்டும் கவனியுங்கள். நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது அதில்தான் இருக்கிறது.

தமிழ் படித்தவர்களாயோ பிடித்தவர்களாயோ இருப்பவர்களுக்கு இரகசியம் கண்டறிதல் எளிது.

என் பதிவுகளுள் ஒன்றில்,  இதே போன்ற இரகசியம் அடங்கிய பின்னூட்டம் ஒன்றை எழுதி இருக்கிறேன். அதன் இறுதியில் என்ன இரகசியம் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறேன்.

ஒருவேளை விடை கண்டறியச் சிரமம் இருப்பின் இங்கும் தேடலாம்.

இம்முறை பின்னூட்டம் மட்டுறுத்தப்படவில்லை.

உங்கள் விடைகளை உடனே அறியத்தாருங்கள்.

நிச்சயம் எவரேனும் இரகசியத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்னும் நம்பிக்கை உள்ளது.


விடை இதுதான்.

நமது துரையவர்க ளைக்காண வின்றைக்
குமன சுதுடிக் குதுகண்டுமுறையிட்டுக்
கொள்வ துசிதமோ கூடாத தோசொல்லுங்
கள்பிள் ளையவர் களே!


அய்யா கவிரா யரவர்களே தங்களுக்குச்
செய்யு மரியாதி விஷயத்திலையருநா
னுஞ்சொன்னோ நம்மெசமா னுஞ்சரியென் றொப்பிமன
சுஞ்சு முகமாச் சுது

தாங்களறி யாதசமா சாரமென்ன வுத்தரவு
வாங்கியென்னை யூர்க்கனுப்பி வைப்பதெற்கெல்-லாங்கிருபை            தான்வேண்டும். மேனே ஜரவர்களே, மெத்தநம்பி
னேன்வீண்பேச் சல்ல நிசம்.

நமது பிரபு   விடத்தினி லேம
ருமசங் கதிமுழு தும்பே – சிமுடிவு
செய்திருக்கி றேன திகசந்தோ ஷந்தானே
அய்யா கவிரா யரே!

இந்த உரைநடை முழுவதும் வெண்பா இலக்கணத்தோடு இருக்கிறது.

இதற்குச் சரியான விடையளித்த தமிழ்மிகு. முருகபூபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த உரைநடையை மட்டுமே வைத்து இதனை இவ்வாறு மாற்றிக் காண்பது எவ்வளவு கடினம் என்பதை இப்பதிவு வாயிலாக நானும் அறிகிறேன். ஆயினும் தொடர்ந்து முயன்று தம் முயற்சியை அறியத்தந்தவர்களுக்கும் அறியத்தராமல் தாமே முயன்று கொண்டிருந்தவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இது போல இனிச் சோதிக்க மாட்டேன். :)

இந்த வசன வெண்பாவின் சொந்தக்காரர், மாம்பழக்கவிச்சிங்க நாவலர்.


1836 ஆம் ஆண்டு பழநியில் பிறந்தவர்.

மூன்றாம் வயதில் வைசூரி நோயால் தம் இரு கண்களையும் இழந்தவர்.

எத்தகைய பெரிய நூலையும் ஒருமுறை கேட்டால் அதை மனதிற் கொள்ளவும் அப்படியே திரும்பச் சொல்லவும் வல்லவர்.

தொடர்வோம்.

பட உதவி- நன்றி - https://encrypted-tbn3.gstatic.com/images



Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

64 comments:

  1. ஒருவர் ஆநந்த ரங்கம் பிள்ளை என்று தோன்றுகிறதுகவிராயர் யார் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் உடனடி வருகை குறித்து மகிழ்ச்சி.

      இங்குப் புதிர் அல்லது இரகசியம் என நான் குறிப்பிடுவது உரையாடுவோர் யார் என்பதில் இல்லை.

      உரையாடலில் இருக்கிறது.

      விடை தாங்கள் அறிந்ததுதான்.

      நன்றி.

      Delete
    2. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலம் 18 ஆம் நூற்றாண்டு என நினைக்கிறேன்.
      இக்கவிராயரின் காலம் 19 ஆம் நூற்றாண்டு.

      நன்றி

      Delete
  2. இதில் மேனேஜர் அவர்களே! என்று ஆங்கிலத்தில் வருகிறதே ஏன் ?
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. கவிராயர் ஆங்கிலம் பயன்படுத்த ஏதும் தடையில்லையே நண்பரே :)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. கவிராயர் பாரதியாராக இருப்பாரோ என்ற ஐயம் எனக்கு. அவர் பாரதியாக இருந்தால், ஆங்கில அரசிடம் கைதாவதைத் தவிர்த்துப் புதுவைக்கு வருவதற்கு ஏற்பாடு பண்ணுவதைத் தான் மரும சங்கதி எனக்குறிப்பிடுகிறாரோ? (உத்தரவு வாங்கி என்னை ஊர்க்கனுப்பி வைப்பதற்கெல்லாம் என்றிருப்பதால் இந்தச் சந்தேகம் எனக்கு)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      புதிருக்கான விடை உரையாடுவோர் யார் என்பதில் இல்லை.
      அது உரையாடலில் இருக்கிறது.

      நீங்களும் அறிவீர்கள்.

      முயன்று பாருங்கள்.

      நன்றி.

      Delete
  4. யோசித்தேன். முடியவில்லை. தங்கள் பதிவை (விடையை) எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அதைப் பின்னூட்டத்தில் அறியத் தந்தமைக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  5. Replies
    1. வணக்கம்.

      விடை தவறு என்றபோதும் இப்படித் தாங்கள் ஊகித்ததற்கான காரணத்தை நான் அறிந்து கொள்ளலாமா?

      நன்றி.

      Delete
  6. இன்று வள்ளல் துரையைக் காண வேண்டும்; இன்று பார்ப்பது உசிதமா என்று கவிராயர் கேட்பதற்கு நேரிடையான பதிலைச் சொல்லாமல் தாம் பேசி முடிவு செய்துவிட்டதாகக் கூறுகிறார் மேலாளர். வள்ளலை நேரிடையாக இவர் சந்திக்கக்கூடாது என்று மேலாளர் நினைப்பது தான் இதில் உள்ள ரகசியமோ? வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் யோசித்தால் உங்களால் நிச்சயம் விடை கண்டறிய முடியும் என்று நினைக்கிறேன்.

      நீங்கள் அறிந்ததுதான்.

      நன்றி.

      Delete
  7. தலையைப் பிய்க்கிறேன்
    விடையைத் தேடுகிறேன்
    செய்து ஒன்று பரிமாறப்படுகிறது - அது
    என்னவென்று தெரியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      காத்திருங்கள் ஐயா.

      வருகைக்கும் தங்கள் வாசிப்பை உணர்த்திய பின்னூட்டத்திற்கும் நன்றிகள் என்றென்றும்.

      Delete
  8. இரகசியம் பிடிபடவில்லை.
    கவிராயர் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார், வள்ளல் ஊற்றுமலை ஜமீன்தார் என்று நினைக்கிறேன்.சரியா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா.

      இரகசியம் உங்களுக்கு நிச்சயம் தெரிந்ததுதான்.

      கொஞ்சம் யோசியுங்கள்.

      நன்றி.

      Delete
    2. இவ்வுரையாடல், அண்ணாமலை ரெட்டியார், ஊற்றுமலை ஜமீந்தார் பற்றியதன்று.

      இதில் கவிராயர் என்று குறிப்பிடப்படுபவர்,

      மாம்பழக்கவிச்சிங்க நாவலர்.

      இந்தக் குறிப்பு ஏதேனும் வகையில் உதவுமோ? :)

      வாருங்கள் அண்ணா
      நன்றி

      Delete
    3. இவ்வுரையாடல், அண்ணாமலை ரெட்டியார், ஊற்றுமலை ஜமீந்தார் பற்றியதன்று.

      இதில் கவிராயர் என்று குறிப்பிடப்படுபவர்,

      மாம்பழக்கவிச்சிங்க நாவலர்.

      இந்தக் குறிப்பு ஏதேனும் வகையில் உதவுமோ? :)

      வாருங்கள் அண்ணா
      நன்றி

      Delete
  9. எனக்கும் இரகசியம் பிடிபடவில்லை.. மேலாளர் தன் முதலாளியை துரையவர்கள், எசமான், பிரபு என்றெலாம் குறிப்பிடுகிறார். மேலாளரை கவிராயர் பிள்ளையவர்களே.. மேனேஜர் அவர்களே என்றெலாம் விளிக்கிறார். ஐயர் என்றொரு பாத்திரம் உள்ளே வருகிறது. வேறெந்த குறிப்பும் இரகசியமும் புலப்படவில்லை.. விடை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      உள்ளடக்கம் முக்கியம்தான் உருவத்தையும் கொஞ்சம் ஆராயலாமே!

      மீண்டும் வாருங்கள்.

      Delete
  10. ரகசியம் என்னவென்று நீ(ங்களே )யே சொல்லு(ங்க):)

    ReplyDelete
    Replies
    1. மறைமுகமாக அந்த இரகசியத்தின் முக்கால்வாசியை நீங்களே சொல்லிவிட்டீர்கள் பகவானே!

      Delete
  11. குழப்பமாக இருக்கிறதே ஐயா! நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பதே முதலில் புரியவில்லையே!

    கவிராயர் ஒருவருக்கு வள்ளல் ஒருவரிடத்தில் ஏதோ உதவி தேவைப்படுகிறது. அதை அந்த வள்ளலின் மேலாளர் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறார். அந்த மேலாளரிடத்தில் ஒருநாள் கவிராயர் வந்து, அன்றைக்கு வள்ளலைச் சந்திக்க மனம் துடிப்பதாகச் சொல்லி, காண இசைவு கிடைக்குமா எனக் கேட்கிறார்.

    மேலாளரோ, கவிராயருக்கு மரியாதை செய்வது தொடர்பாகத் தானும் ஐயர் என்கிற ஒருவரும் வள்ளலிடத்தில் பேசியிருப்பதாகவும் வள்ளலும் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கூறுகிறார். மேலாளர் அப்படிச் சொன்ன பிறகும், தன்னை ஊருக்கு அனுப்பி வைக்க ஆணை வாங்கித் தருவதற்கு உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள வேண்டியதை ‘அருள் வேண்டும்’ எனக் கேட்கிற அளவுக்குக் கவிராயர் மிகவும் கெஞ்சிக் கேட்கிறார். பதிலுக்கு மேலாளரோ, மர்ம விதயம் பற்றி வள்ளலிடம் முழுவதுமாகப் பேசி முடிவு செய்து விட்டதாகக் கூறி, "மகிழ்ச்சிதானே" என்று கேட்கிறார். இவ்வளவுதானே? இதில் மர்மம் என ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே ஐயா? எல்லாமே வெளிப்படையாக இருக்கின்றனவே!

    ஒருவேளை, இவர்கள் இருவரும் எது குறித்துப் பேசுகிறார்கள் என்பதுதான் இந்த உரையாடலுக்குள் ஒளிந்திருக்கும் இரகசியம் என நீங்கள் குறிப்பிடுவதோ? எனில், அதற்கான பதிலை வேண்டுமானால் சொல்கிறேன்.

    எனக்கென்னவோ, கவிராயர் அந்த வள்ளலின் அவைப் புலவராக இருப்பார் எனத் தோன்றுகிறது. அவருக்குத் தற்பொழுது மிகவும் வயதாகி விட்டதால் ஓய்வு கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்குமாறும், தனக்குப் பதிலாகத் தன் பிள்ளைக்கு - அல்லது தனக்கு வேண்டியவர் யாருக்காவது - அவைப் புலவர் பதவியைத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார் போலும். ஓய்வு பெற்று ஊருக்குப் புறப்படும்பொழுது கவிஞருக்கு முறைப்படி விழா எடுத்து மரியாதை செய்து அனுப்ப வேண்டும் இல்லையா? அதைத்தான் கவிராயர் கேட்டிருப்பார். கவிராயருக்கு மரியாதை செய்வது தொடர்பாகத் தானும் ஐயரும் வள்ளலிடத்தில் பேசியதற்கு வள்ளல் ஒப்புக் கொண்டு விட்டதாக மேலாளர் குறிப்பிடுவது அதைத்தான் என நினைக்கிறேன்.

    அதன் பிறகும் கவிராயர் கெஞ்சுவதை அடுத்து ‘மரும சங்கதி’ முழுவதையும் பேசி விட்டதாக மேலாளர் கூறுவது அவைப் புலவர் பதவிக்கான கவிராயரின் பரிந்துரை பற்றியதாக இருக்க வேண்டும். ஏனெனில், இப்படிக் கவிராயர் தனக்கு வேண்டியவரைத் தனக்குப் பின் பணியில் அமர்த்துமாறு கேட்பது தவறு இல்லையா? அது வெளியில் தெரிந்தால் அவருக்கு இழுக்கு ஆகிவிடுமே! அதனால்தான் அதை மேலாளர் மூலம் கமுக்கமாக நிறைவேற்றப் பார்க்கிறார். அதனால்தான் மேலாளரும் அதை மரும சங்கதி என்கிறார்.

    அந்தக் காலத்திலேயே இப்படிப் பரிந்துரை, திரைமறைவு வேலைகள் மூலமாகப் பதவி பெறுதல் போன்றவையெல்லாம் இருந்திருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதால் இதைப் பதிவிட்டதாகத் தாங்கள் கூறப் போகிறீர்கள். சரியா ஐயா?

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      மிகக் குழப்புகிறேன். மன்னிக்க!

      உள்ளடக்கத்தோடு உருவத்தையும் கொஞ்சம் ஆராயலாம் ஐயா.

      விடை கிடைக்கும்.

      Delete
    2. ஆகா! மிகவும் அளவுக்கு மீறிக் கற்பனை செய்து விட்டேனோ!

      Delete
    3. வணக்கம் ஐயா.

      நிச்சயம் இல்லை.

      இந்தக்குறிப்புகள் இதற்கான விடையைக் கண்டுபிடிக்கப் போதுமானவை அல்ல என்பதே உண்மை.

      நான் உருவத்தை மட்டும ஆராயச் சொல்லி இருக்கவேண்டும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  12. நண்பர் இ பு ஞானப்பிரகாசம் அவர்களின் பதில் ஏற்புடையதாக இருக்கிறது. கேள்வியே மர்மமான விஷயமாகவும் இருக்கிறது. மர்மம் என்பது ஏதாவது கமிஷன் அல்லது லஞ்சம் பற்றிய சமாச்சாரமா?

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      இங்கு நான் நீங்கலாக நம்மில் ஒருவர் விடையோடு வருவார் ஸ்ரீ.

      அதனால்தான் முடிவினை அறிவிக்கும் நாளை நீட்டித்தேன்.

      Delete
  13. மெத்த நம்பினேன்; வீண் பேச்சல்ல நிசம் என்பது சங்கேதச் சொற்களாயிருக்கும்; ஊருக்குப் போவதற்குப் பணம் வேண்டும்; அதை மேனேஜர் வாங்கிக்கொடுத்தால் உங்க்ளைத் தனியே கவனிக்கிறேன் என்பது தான் இவற்றின் உண்மையான அர்த்தமா? அதைச் சொன்னவுடன் மரும சங்கதி முழுதும் பேசி முடிவு பண்ணிவிட்டேன் என்று மேலாளர் சொல்கிறாரா? மரும சங்கதி என்பது கவிராயருக்குக் கிடைக்கும் பணம். இரண்டு நாட்களாக யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      மிகவும் குழப்புகிறேனோ? :)

      விடை நீங்கள் முயன்றதும் அறிந்ததும்தான்.

      கண்டுபிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      வாருங்கள். :)

      Delete
  14. பரிந்துரை அதோடு பரிசுடன் விடைபபெறும் நிகழ்வோ?

    ReplyDelete
  15. மன்னிக்கவும். செல்லில் டைப் செய்வதால் பிழை.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!

      நெடுநாட் கழித்து,,,,,,,,,,,,,,,,

      வருகை உவகை.

      நலம்தானே?

      இதற்கான விடையை எனக்கிட்ட ஒரு பின்னூட்டத்தில் நீங்கள் அளித்திருக்கிறீர்கள்.

      இங்குப் பின்னூட்டமிட்டோரின் பதில்களுக்கு நான் கூறிய குறிப்புகளைக் கொண்டு சற்று முயற்சி செய்யுங்கள்.

      பதில் நிச்சயம் காணலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மீண்டும் நன்றி.

      தொடர வேண்டுகிறேன்.

      Delete
  16. கிருபைதான் வேண்டும், என்பதில் கிருபைதான் என்பது பணத்தின் அளவைக் குறிக்கும் சொல்லாக இருக்கும் என நினைக்கிறேன். இரு பை தான் என்பதைக் கிருபைதான் என்று சொல்கிறாரோ? விடையறியக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ.

      உள்ளடக்கத்தோடு உருவமும் காணுங்கள்.

      இதுவே குறிப்பு.

      Delete
  17. விடை தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. காண வேண்டுகிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. பிள்ளையவர்களே என்று மேலாளரை விளித்தால் அதில் எந்த விஷயமுமில்லை. மாறாக மேனேஜர் அவர்களே என்று விளித்தால் அதில் தான் அந்த மர்ம சங்கதி (லஞ்ச சங்கதி) அடங்கியுள்ளது. மேனேஜர் என்றால் லஞ்சத்துக்குச் சம்மதம் என்று அர்த்தம்! சரியா? வேறு எதுவும் தோன்றவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஆம் ரொம்பவும் தான் சோதிக்கிறேன்.
      மீளப்பார்த்தபோது சோதனை கடுமைதான் எனத் தோன்றுகிறது.

      உள்ளடக்கத்தை விடுங்கள் சகோ.

      நேரடியாக இரு குறிப்புகளைத் தருகிறேன்.

      1. உரையாடலின் உள்ளடக்கத்தை விடுங்கள் உருவத்தைப் பாருங்கள்.

      2. இந்த வலைத்தளத்தின் எந்தப் பதிவு தங்களுக்குப் பயனுடையதாய் இருந்தது?

      இதற்குமேல் என்ன சொல்ல.

      கொஞ்சம் உன்னிப்பாய்க் கவனித்தால் புரியும்.

      காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
  19. உத்தரவு வாங்கி? உம் தரகு வாங்கி?

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் உள்ளடக்கம் எதுவாக வேண்டுமாயினும் இருக்கட்டும்.

      சொற்களின் வடிவத்தைப் பாருங்கள் சகோ.

      புதிருக்கு விடை கிடைக்கும்.


      நன்றி.

      Delete
  20. எழுத்து வடிவமென்றால் மரும (மரு/ம) இரண்டு ரூபாயா? சங்கதியைச் சேர்த்தால் (சங்/கதி) நான்கு ரூபாயா?

    ReplyDelete
  21. நமது துரையவர்க ளைக்காண வின்றைக்கு
    மன சுதுடிக் குதுகண் – டுமுறையிட்டுக் கொள்வ
    துசிதமோ கூடாத தோசொல்லுங்
    கள்பிள் ளையவர் களே

    அய்யா கவிரா யரவர்களே தங்களுக்குச்
    செய்யு மரியாதி விஷயத்தி – லையருநா
    னுஞ்சொன்னோ நம்மெசமா னுஞ்சரியென் றொப்பி மன
    சுஞ்சு முகமாச் சுது

    தாங்களறி யாதசமா சாரமென்ன வுத்தரவு
    வாங்கியென்னை யூர்க்கனுப்பி வைப்பதெற்கெல் -
    லாங்கிருபை தான்வேண்டும். மானே ஜரவர்களே, மெத்த நம்பி
    னேன்வீண்பேச் சல்ல நிஜம்.

    நமது பிரபுவி டத்தினி லேமருமசங் கதிமுழு தும்பே – சிமுடிவு
    செய்திருக்கி றேன திகசந்தோ ஷந்தானே அய்யா, கவிரா யரே!

    கவிராயரும் அப்பாச்சி பிள்ளை அவர்களும் பேசுவதெல்லாம் வெண்பாவே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம். தமிழ்மிகு.முருகபூபதி அவர்களே!

      கவிராயரும் அப்பாச்சிப் பிள்ளையும் பேசுவதெல்லாம் வெண்பாவே..! இரகசியம் இதுவே.

      என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.


      இப்பதிவில் குறிப்பிட்ட இரகசியம் இதுதான்.

      இத்தளத்திற்கான தங்களின் வருகை, புதிரின் விடையை வெளிப்படுத்திய அறிமுகத்தோடு நிகழ்வதில் மிக மகிழ்கிறேன்.

      இப்பதிவின் மூலம் பழைய இலக்கியங்களை வாசிக்கும் ரசிக்கும் பழக்கம் உள்ள ஒருவரைக் கண்டறிந்திருப்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

      புதிரை விடுவிக்கப் போதுமான குறிப்புகளை நான் கொடுத்துப்போகவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.

      கொடுத்திருந்தால் இத்தளத்தில் இதனைப் பதிவேற்றிய சில நிமிடங்களிலேயே விடையை அளித்துப் போகின்றவர்களை நான் கண்டிருக்கிறேன்.

      அப்பாவுப்பிள்ளையையும் மாம்பழக்கவிச்சிங்க நாவலரையும், இதோ இந்த உரைகவியையும் தங்களின் வாசிப்பினால் நீங்கள் இப்பதிவிற்கு முன்பே அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

      யாப்புச்சூக்குமம் என்ற தொடரில் இணைக்க வைத்திருந்த தகவல் இது.
      அப்பதிவு நீண்டதால் வெட்டப்பட்டுத் தனியே இருந்தது இப்பொழுதே பதிவேற்ற வாய்த்தது.

      இதுபோன்ற செய்திகளை அறிந்துகொள்ள என்னைப்போன்ற பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.

      தாங்கள் வலைப்பூ ஏதும் வைத்திருப்பின் அதன் சுட்டியை அறியத் தருமாறு வேண்டுகிறேன்.

      தங்கள் எண்ணங்களில் இருந்தும் எழுத்துக்களில் இருந்தும் கற்கக் காத்திருக்கிறேன்.

      வெண்பாவின் தளைபிறழாமல் எதுகையுடனும் சிறு மாற்றங்களுடன் தங்களின் விடையைப் பதிவில் பதிகிறேன்.

      மீண்டும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

      Delete
    2. அன்பின் ஐயா,
      வணக்கம். நான் நீங்கள் நினைப்பதைப் போல தமிழறிவு அதிகம் கொண்டவனில்லை. ஆனால் தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவன். தேடுதலிலும் ஆர்வம் உண்டு. முன்பொரு காலத்தில் கிறுக்கியவை murugapoopathi.blogspot.com வலைப்பூவில் இருக்கின்றன. நேரம் அமையும் போது வலைத்தளங்களில் உலாவுகிறேன். உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

      Delete
    3. தங்களின் வருகைக்கும் வலைத்தள முகவரிப் பகிர்விற்கும் நன்றி ஐயா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  22. ஒரு வழியாய் முருகபூபதி அவர்களின் உதவியால் சரியான விடை கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சியே. உள்ளடக்கத்தைப் பார்க்காதீர்கள், உருவத்தைப் பாருங்கள் என்று நீங்கள் திரும்பத் திரும்பச் சொல்லியும் நான் அதையே தான் பார்த்துக்கொண்டிருந்தேன். கவிராயர் வெண்பாவில் பேசலாம்; மேலாளர் கூட வெண்பாவில் பேசுவார் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எப்படியோ யாரோ ஒருவர் விடையுடன் வருவார் என்ற உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. விடை கண்டறிகிறேன் பேர்வழியென்று, தப்புத் தப்பாய் உளறியபோதும், உடனுக்குடன் குறிப்புகள் கொடுத்து ஊக்குவித்தமைக்கு நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      நிச்சயமாய் இது மதிப்பிற்குரிய இ.பு.ஞா ஐயா சொன்னது போல் மிகக் கடுமையான சோதனைதான்.

      ஏதோ ஆர்வக்கோளாறில் இட்டுப்போனேனே தவிர, இச்சிக்கலை அவிழப்பதில் உள்ள கடினம் பற்றிப் பதிவிடும் முன் எண்ணிப்பார்க்கவில்லை.

      உங்களின் தொடர்முயற்சி, இன்னும் சற்று நேரம் கிடைத்திருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

      இது போன்ற புதிர்களின் பின்னால் ஆர்வம் கொண்டு அலைந்தது, அதனால் ஏற்படும் மனச்சோர்வு இவற்றை அனுபவித்தவன் என்ற முறையில் அறிவேன்.

      அதற்காக மிக வருந்துகிறேன்.

      தாங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் முயற்சியையும் பெரிதும் பாராட்டுகிறேன் .

      மிக்க நன்றி.

      Delete
  23. எனில், கடைசியில் முருகபூபதி ஐயா சொன்னதுதான் விடையா? இது மிகக் கடுமையான சோதனை! All Fail - One Pass! முத்து நிலவன் ஐயா, மகேசுவரி பாலச்சந்திரன் அம்மணி போன்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ளாமல் எங்களைப் போன்ற மாணவர்களுக்காக விட்டு வைத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா.

      கடுஞ்சோதனை தான்.

      இனி இத்தகு சோதனைகள் நிச்சயம் இருக்காது :)

      நன்றி.

      Delete
  24. தாங்கள் தந்த இரகசியத்திற்கான விடையை யாரேனும் சொல்லிவிடுவார்கள். இல்லாவிடில் நீங்களே சொல்லிவிடுவீர்கள் என்பதால் குழப்பிக்கொள்ள விரும்பவில்லை. காத்திருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      நல்லதொரு தீர்மானத்தை ஆரம்பத்திலேயே எடுத்துவிட்டீர்கள். :)

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  25. வணக்கம்.

    புதிருக்கான விடையும், இதை எழுதிய கவிராயர் பற்றிய குறிப்புகளும் பதிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

    காண வேண்டுகிறேன்.

    இதில் விடையைக் கண்டறிய முயன்ற அனைவர்க்கும் எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  26. நான் நிச்சயம் கண்டுபிடித்திருக்க மாட்டேன்!

    :)))

    ReplyDelete
  27. அட
    நீங்கள் உருவத்தைப் பாருங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும் கண்டுபிடிக்க முடியவில்லையே.

    அய்யா முருகபூபதி. தங்கள் தமிழறிவுக்கு தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  28. அட
    நீங்கள் உருவத்தைப் பாருங்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும் கண்டுபிடிக்க முடியவில்லையே.

    அய்யா முருகபூபதி. தங்கள் தமிழறிவுக்கு தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றவர்களுக்கே சிக்கல் என்பதால்தான் இதன் கடினம் எனக்கு விளங்கிற்று.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அண்ணா.

      Delete
  29. ஆஹா!!! விடையைப் பதிவேற்றிய பின்னர் வந்திருக்கிறேன்..முன்பே வந்திருந்தாலும் தத்து பித்து என்று உளறிதானிருப்பேன் :)

    ReplyDelete
  30. uruvaththai paarkkach sonnIrkaL, padaththaiye thirumpath thirumpap paarththuk koNdirunthEn, anthO parithApam.

    ReplyDelete
  31. சகோ! மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன் பொருள் ரகசியம் என்றால் கவிராயரின் சன்மானம் குறித்தாக இருக்கலாம்.

    நீங்கள் அதை வெண்பாவில் கொடுத்திருப்பதை வாசிக்கும் போது அதன் ரகசியம் மெய்மயக்கமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

    பல விற்பன்னர்கள் இருக்க யாரேனும் விடை பகன்றிருக்கிறார்களா என்று பார்க்கிறேன். தங்களின் விடையை அறியக காத்திருக்கிறேன். அடுத்த பதிவிலோ?? விடை? போகிறேன் இதோ..

    கீதா

    ReplyDelete
  32. வடமொழிச் சொற்கள் பல கலந்திருக்கின்றது .

    கீதா

    ReplyDelete
  33. இன்னும் பார்த்தால், அன்றைய தமிழ்ச்சமூகத்தில் நிலவிய தமிழ்மொழி மற்றும் தமிழ்சமூகத்தின் கட்டமைப்புத் தெரிகிறது போல் உள்ளது. அதற்கு முந்தைய காலக்கட்டத்திற்கும் இங்கு சொல்லப்பட்டிருக்கும் காலக்கட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள், தமிழ்ச்சமூகம் மற்றும் தமிழ் மொழியின் மாற்றங்கள் தெரிகிறது.

    கீதா

    ReplyDelete