Wednesday, 12 October 2016

சமணம் – சில அனுபவங்கள்..!



தமிழகத்தில் வழக்கிலிருந்த தொல்சமயங்களைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தபோது தோன்றியது.

ஆயினும் அதில் எனக்குச் சில தயக்கங்கள் இருந்தன. 

கூறப்போகும் சமயக்கருத்துக்களுள் ஏதேனும் ஒன்றில் எனது சார்பு நிலை அல்லது எதிர்ப்பு நிலை வெளிப்படுமா?

தரவுகளையும் தத்துவங்களையும் உள்வாங்கியதுபோல எழுத்தில் புரியுமாறு வெளிப்படுத்திவிடமுடியுமா?

இதனைப் பொது வாசிப்பிற்குக் கொண்டுபோக முடியுமா?

முதல் இரண்டு கேள்விகளுக்கும் கூடுமானவரை நியாயம் செய்தேன் என்றே நினைக்கிறேன். சமயம் பற்றி இதுவரை வெளிவந்த பதிவுகள் அனைத்தையுமே தட்டச்சியபின் மிகத்தீவிரமாகப் பலமுறை நான் படித்துப் பார்த்ததன் பின்னே வெளியிட்டேன்.

பதிவினில், இது படிப்பவர்க்கு விளங்காமல் போகுமோ? குழப்பமாக உள்ளதோ என நான் நினைந்தவற்றை வெளியிடும் முன்பே பலமுறை மாற்றினேன்.

ஒருசார்பாகவும், என் கருத்தாகவும் அப்பதிவுகளின் இடையிடையே நானறியாமல் வந்தனவற்றை வெளியிடும்முன் நீக்கினேன்.

இத்தொடர்பதிவின் முதற்பதிவான “உலகாயதம் – கடவுளைக்கொன்றவனின் குரல் ” என்ற இடுகையிலேயே

“இங்குச் சொல்லப்படும் எந்தக் கருத்தும் எனது கருத்தல்ல. இக்கருத்தினோடு எனக்குள்ள உடன்பாடு மற்றும் உடன்பாடின்மை என்பது என்னோடு இருக்கிறதே அன்றி அதை ஒரு சார்பாய் இப்பதிவுகளில் எங்கும் வெளிப்படுத்திடவில்லை.

இந்தப் பதிவை எழுதி நீண்டநாள் ஆன பின்பும், இத்தயக்கத்தினால்தான், இதை வெளியிடத் தாமதித்தேன்.” என இது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

எனது இக்கருத்திற்கு எதிர்வினைகள் நான் மதிப்போரிடத்திருந்தும் வந்தன. பின்னூட்டங்களிலும் வெளிப்பட்டன. அவை, நான் எந்நிலைப்பாடுடையவன் என்பதை வெளிப்படுத்தவேண்டும் எனக் கோரியிருந்தன. 

அடுத்து,

இத்தொடர்பதிவினைத் தொடர்ந்த வாசகர் எண்ணிக்கை பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.








எனது ஏனைய பதிவுகளை நோக்க இதற்கு வந்த வாசகர் எண்ணிக்கை குறைவுதான் என்னும் போதும் ஆர்வத்துடன் வாசித்தவர்கள், சற்றுக் கூடுதலாக இச்சமயங்கள் குறித்துத் தெரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

ஆனாலும் ஏனைய பதிவினைவிட நீண்ட விவாதங்களும் பலதகவல்களை நான் கற்றுக்கொள்ள வாய்ப்பும் இத்தொடரின் பின்னூட்டத்தினால் விளைந்தது.

இப்பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களுள் சிலவற்றை இங்குப் பகிர எண்ணுகிறேன்.

அடுத்த தொடரான ஆசீவகம் பற்றிய         அறிமுகமும் இப்பின்னூட்டத்திலேயே வந்திருக்கிறது.

நேரமும் பொறுமையும் ஆர்வமும் இருப்பவர்களைத் தொடர வேண்டுகிறேன்.



உங்களிடமிருந்து உலகாயதம் (MATERIALISM) பற்றிய. ஒரு புதிய தொடர். நிறைய சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

// இங்குச் சொல்லப்படும் எந்தக் கருத்தும் எனது கருத்தல்ல. இக்கருத்தினோடு எனக்குள்ள உடன்பாடு மற்றும் உடன்பாடின்மை என்பது என்னோடு இருக்கிறதே அன்றி அதை ஒரு சார்பாய் இப்பதிவுகளில் எங்கும் வெளிப்படுத்திடவில்லை.//

என்று தாங்கள் இப்படி சுற்றி வளைத்துச் சொல்வதை விட வெளிப்படையாகவே நான் ஒரு ஆத்திகன் என்றோ அல்லது நாத்திகன் என்றோ வெளிப்படுத்தி, நான் உலகாயதம் (MATERIALISM) பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. இது ஒன்றும் தவறில்லை.

எனவே வாதப் பிரதி வாதங்கள் செய்ய உங்கள் தளத்திற்கு நிறைய பேர் வருவார்கள். அவர்களுள் விதண்டாவாதிகளும் உண்டு. (இது எனது அனுபவம். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்) நீங்கள் அவர்களுக்கு கட்டுரையாளர் என்ற முறையில் உலகாயதத்திற்கு ஆதரவாக மறுமொழிகள் கொடுப்பீர்களா என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள்! தொடருங்கள். (..7)


ஐயா வணக்கம்.

உலகாயுதம் பற்றிய தொடர் அன்று இது. அது பற்றிய சிறிய அறிமுகம்.

அடுத்து பௌத்தம் பற்றியும் சமணம் பற்றியும் எழுதலாம் என்று இருக்கிறேன்.

பொதுவாக என்பதிவில் இருந்து நீங்கள் மேற்கோள்காட்டிய பகுதியைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
இது உலோகாயுதரின் கோட்பாடுகள் பற்றிய சிறு அறிமுகம் என்ற நிலையில் இருந்து காணவேண்டிய பதிவே ஒழிய அதைப் பதிவரின் கோட்பாடாகக் காணுதலும் விவாதித்தலும் தவிர்க்கவே இப்படி எழுதிப் போனேன்.

அடுத்துச் சமணம் பற்றி எழுதும் போதும் பௌத்தம் பற்றி எழுதும் போதும் அதை என் கொள்கையாகப் பாவிக்கக் கூடாது என்பேன்.

//தாங்கள் இப்படி சுற்றி வளைத்துச் சொல்வதை விட வெளிப்படையாகவே நான் ஒரு ஆத்திகன் என்றோ அல்லது நாத்திகன் என்றோ வெளிப்படுத்தி, நான் உலகாயதம் (MATERIALISM) பற்றி எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. இது ஒன்றும் தவறில்லை. //

என்னைக் குறித்த அடையாளங்களையே நான் வெளிப்படுத்தத் தயங்குகின்ற போது சமயம் பற்றிய எனது தனிப்பட்ட கொள்கைகளோ, அல்லது அரசியலோ பதிவில் எங்கும் வரவேண்டாம் என்றே விரும்புகிறேன். அது என் நிலைப்பாடும் கூட.


அடுத்ததாய்,

இந்த வாதப் பிரதிவாதங்கள்...............

நிச்சயமாய் அதை நான் செய்யப்போவதில்லை.

ஒருவேளை அடுத்து அவைதிகம் பற்றிய இடுகைகளில் அவர்கள் அக்கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தால் அதைக் குறிப்பிடுவேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்


இதெல்லாம் சிலரின் கற்பனை ஊற்றுபெருக்கோடியதால் ஏற்பட்ட பொருளில்லா சித்தாந்தங்கள் என்று நான் சொன்னால் கோபிக்கக் கூடாது.



ஐயா வணக்கம்.

நான் ஏன் கோபிக்கப் போகிறேன்?.

பதிவில் இருப்பது சமணரின் கருத்து.

இது உங்களின் கருத்து.

அவ்வளவுதானே...?

கொள்கைகளைத் தெரிந்து கொள்ளும்போது இது சரி.... இது கற்பனை .....இது சரியில்லை....... என்ற எண்ணம் வருவது இயல்பானதுதான்.

ஒவ்வொரு சமயங்களின் கொள்கைகளை விவரிக்கும் பதிவில் எல்லாம் எல்லார்க்கும் ஏற்புடையதாக இருக்காது என்பது இயல்பானதுதானே..?


இப்பதிவுகளின் நோக்கம், பொதுவாக பள்ளி அளவில் மிகச் சொற்பமே அறிந்த ( சிலவற்றைப் பற்றி முற்றிலும் அறியாத ) சமயக் கொள்கைகளை நடுநிலையோடு பகிர்தல், அடுத்து அதன் மூலம் சில பழந் தமிழ் இலக்கியப் பார்வைகளை முன்வைத்தல், என்பதைத் தவிர, ஒரு பக்கம் நின்று வாதிடுவதோ, என் தனிப்பட்ட கருத்துக்களைச் இடைச் செருகுவதோ இதன் நோக்கமில்லை.

இதன் மூலம் இதற்கு முன் அறியாத சிறு துணுக்கு அளவு செய்தியேனும் படிப்பவர்கள் அறிந்தால் அது குறித்து எனக்குப் பெருமகிழ்ச்சியே..!

கற்றலில் பெரும்பாலும் இவை போன்ற மகிழ்ச்சித் தருணங்களைத் தேடுவது என் சுபாவம்.

அதை எதிர்பார்த்துத் தொடர்வனவே என் பதிவுகள்.

தங்களது கருத்துகளைத் தொடர்ந்து வரவேற்கிறேன்.

நன்றி.


வணக்கம் என் ஆசானே,

சமணம் சார்ந்த கொள்கைகளில் அனுவிரதம் குணவிரதம், சிகிச்சை விரதம் என்று,

பிறருக்குத் துன்பம் தருவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று அனுவிரதம் பெசுகிறது,

மனத்தினால் நோகுமாறு சாபம் இடுதல் எதைக் குறிக்கிறது.

சிலப்பதிகாரத்தில்,

குறுநீர் இட்ட குவளை அம்போதோடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருந்ததும் நீர் அஞர் எய்தி
அறியாது அடி ஆங்கு இருதலும் கூடும்’‘

உழவர்கள் வரப்புகளில் அள்ளிவிட்ட குவளை மலர்களில் தேன் உண்ண வண்டுகள் மொய்த்திருக்கும். இவற்றின் மேல் கால் வைத்தால் வண்டுகள் இறந்து போகும். உயிர் கொலை நேரிடும்.

சரி வாய்க்கால் வழி போகலாம் என்றால் வாய்க்காலில் நண்டு, நத்தை காலால் நசுங்கித் துன்புறும் என்று சொல்லப்படுகிறது

ஆனால் கவுந்தியடிகள்

எள்ளுநர் போலும் என்பூங் கோதையை
முள்ளுடை காட்டில் துளரி ஆகுக

என சாபம் இடுகிறார்,

சமணத்திற்கு ஒவ்வாத ஒன்று இது, மனதினால் துன்புற வைக்கும் கவுந்தியின் செயல் எந்தச் சமணத்தின் கோட்பாடு,
காத்திருக்கிறேன்,
நன்றி.


பேராசிரியரே,

வணக்கம். இப்படி அறிவினாவை எழுப்பி அறியாத அடியேனைச் சோதித்தல் தகுமா..?

எனதிந்தப் பதிவுகளின் நோக்கம், தொல் இந்தியச் சமயங்கள் பற்றிப் பரவலாகத் தெரிந்திராத கொள்கைகளைத் தருதல். அனைவர்க்குமான ஒரு எளிய அறிமுகம், அது தமிழிலக்கியங்களில் சிற்சில இடங்களில் பயில வந்திருப்பதைக் காட்டுதல் என்பதாக அமைந்தது.

இதில் ஆழங்கால் பட்ட தங்களைப் போன்றவர்கள் வந்து கருத்திடுவதும் அறிந்த செய்திகளை அறியத் தருவதும் நானுற்ற பேறு. அதற்காக இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நான் என்ன செய்வேன்..?

சமணம் பற்றி மட்டுமல்ல, பண்டைய இலக்கியங்கள் பேசும் கொள்கைகளைப் பற்றி அறிய ஆர்வம் இருக்கும் அளவிற்கு எனக்கு அறியக் கூடவில்லை. விளக்கம் தருபவர்களைக் காணக் கிடையாமை. சரியான பார்வை நூல்கள் இன்மை. எல்லாவற்றிற்கும் மேலாய் என் முயற்சி இன்மை என்றெல்லாம் பல குறைகளைக் கொண்டிருக்கிறேன் நான்.

நீங்கள் கேட்கும் பெரு முரண்களில் அன்று ஆகச்சிறிய விடயங்களிலேயே ஐயம் அகற்றமுடியா அறிவின் போதாமைகள் நிறைய உண்டு என்னிடம். அது சாகும் மட்டும் இருக்கும்.

சரி …!

நீங்கள் சொன்ன இந்த விரதங்கள்…,
அதற்குமுன் சமணம் வீடுபேற்றை அடைய உதவும் கருவிகளாகக் கொள்வன மூன்றுள.

அவை,

நற்காட்சி ( சம்யக் தரிசனம் )

நல்லறிவு ( சம்யக் ஞானம் )

நல்லொழுக்கம் ( சம்யக் சாரித்திரம் ) என்பன.

இவை திரிரத்தினங்கள் எனப் பள்ளியில் படித்து எழுதியது இதைத் தட்டச்சும்போது என் நினைவிற்கு வருகிறது. என் ஆசிரியர் திரு.லூர்து சாமி அவர்கள் இவ்விடைக்கு ஒன்றரை மதிப்பெண்கள் இட்டிருந்தார். இது இரு மதிப்பெண் வினா. ( அரை மதிப்பெண்கள் குறைந்ததன் காரணம் கேட்கச் சென்று அறை வாங்கியதுதான் மிச்சம் :) )

இம்மூன்றனுள் முக்கியமானது நல்லொழுக்கம் ஆகும். அதனை அடையவே நீங்கள் சொன்ன அணு விரதம், சிகிச்சை விரதம் குணவிரதம் பயன்படுகிறது.

நீங்கள் சொன்ன இம்மூன்றும் இல்லறத்தார்க்கு உரிய விரதங்கள்.

கவுந்தியடிகள் துறவி.

அவருக்குரியது மகாவிரதம்.

அணு விரதம் முதலிய மூன்றும் சமணர்களில் இல்லறத்தவர்களுக்கு உரியது என்பதால் அது சாதாரணமானது.

மகாவிரதம் என்பது துறவோர்க்கு உரியது என்பதால் அது பின்பற்றக் கடினமானது.

இல்லறத்தார்க்கு உரிய விரதங்களுள் முதலாவதாகிய அணுவிரதம் ஐந்தாகப் பகுக்கப்படுகிறது.

அவை,

1) கொல்லாமை

2) பொய்யாமை

3) திருடாமை

4) பிறன் மனை நோக்காமை

5) மிகு பொருள் சேர்க்க விரும்பாமை
என்பன.

மகாவிரதர்க்கும் அணுவிரதர்க்கும் கொல்லாமை பொதுவானது.

அணுவிரதர், கொல்லாமை என்பதை அறிந்து எவ்வுயிர்க்கும் ஊறு செய்யாமை என்பதனோடு நிறுத்த, மகாவிரதர் அறியாமல் கூட எவ்வுயிர்க்கும் தீங்கு செய்து விடக் கூடாது என்ற கொள்கையுடன் இருப்பர்,

சமணத் துறவிகளின் வசிப்பிடங்கள் ( பள்ளிகள் ) மலைமேல் இருந்ததற்கு மண்ணில் இருக்கும் சிற்றுயிர்க்குக் கூட அறியாது ஊறு செய்தல் ஆகாது என்பதே காரணம்.
மகாவிரதிகளைப் போல இல்லறத்தார் இந்த அளவு கடுமையான நெறி நிற்க முடியாது.

மலைப்பகுதி அல்லாத இடங்களில் கூட, உறியைக் கட்டி அவ்வுறியில் வசித்தமையால்உறியிற் சமணர்என அவர்கள் அழைக்கப்பட்டதை இலக்கியங்கள் காட்டுகின்றன.

அன்றியும் காற்றில் இருந்து நுண்ணுயிர்கள் மூச்சோடு உட்சென்று இறந்துவிடலாகாது என்று மூக்கைத் துணி கொண்டு மூடி இருப்பர் என்றும் மயிர்க்கால்கள் சிற்றுயிர்களுக்கு இடமாகி தாம் அறியாமல் அவை கொல்லப்படக் கூடாது என்பதற்காகத் தங்கள் உடலின் ரோமங்களை ஒவ்வொன்றாய் முற்றிலும் பிடுங்கி எடுப்பர் என்றும் இவர்களைப் பற்றிப் பழம் நூல்கள் கூறுகின்றன.
பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்னும் இந்த மகாவிரதிகளின் நோக்குத் தம்முயிரைப் போக்கிக் கொள்ளும் எல்லை வரை சென்று விடுகிறது என்பதுதான் இதன் உச்சம்.

அவர்கள் உடலை வருத்தித் தம் உயிரைப் போக்கிக் கொள்வதைக் குற்றமெனக் கருதார்.
இதை இங்கு நிறுத்தி உங்களின் சிலம்பு காட்டும், “ வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்பகுதிக்கு வருகிறேன்.

(என்றேனும் ஒரு மாறுதலுக்காக பதிவிட வைத்திருந்த சிலப்பதிகாரச் செய்தி இது வேறொரு கோணத்தில்.)

சமணம் பற்றிய முதற்பகுதியில், பிற உயிர்களைக் கொல்லாமை மட்டும் அல்ல அகிம்சை - அது பிற உயிர்களுக்கு இன்னல் நேரும் போது அதைக் காத்தலும் என்பதுமாகவே சமணர் கொள்கை அமைந்திருக்கிறது எனக் கூறியிருக்கிறேன்.

இங்குக் கோவலன் கண்ணகியுடன் வரும் கவுந்தியடிகளைப் பார்த்து, “இவர்கள் யார்?” என வினவும் பரத்தையும், அவளுடன் இருந்தோனுக்கும் கவுந்தியடிகள், “ இவர்கள் என் மக்கள்என்று பதில் கூற, அவர்களோ,

இருவரும் உம் மக்கள் என்றால், உடன் பிறந்தாருக்குள் திருமணம் செய்து கொள்வதுதான் உங்கள் வழக்கமோ? ” என்கிறார்கள்.

தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க

அந்நடுக்கம் காணப் பொறாமல்தான் கவுந்தி சினக்கிறார்.

சரி.

துறந்தவர் சினக்கலாமோ சாபமிடலாமோ என்பதே உங்களின் கேள்வி எனின்,

ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும் ” ( குறள் – 264 )

தவத்தின் பயன், “அறத்திற்குப் பகையாய் அழிவு செய்யும் வலிமையானவர்களைச் சினந்து அழித்து, அறத்தையே விரும்பும் மெலியவர்களைக் காத்தல்என்பதாய் இதற்குப் பதில் கூறிவிடுகிறார் வள்ளுவர்.

எனவே தவவாழ்வு வாழும் துறவிகள் சினக்க வேண்டியதற்குச் சினக்கத்தான் வேண்டியிருக்கிறது. அது ஒருபோதும் அவர்களின் சுயநலனிற்கானதன்று.
இங்குக் கவுந்தி அடிகள் செய்வது கூட உயிர்க்கொலை அல்ல. குயுக்தி கொண்ட அம்மனிதரை அவ்வியல்புடைய விலங்காய்ப் போ என்பதுதான் அவர் செய்தது.
ஒருவேளை அவர்களை அவர் அழித்திருந்தால் நிச்சயம் அது சமண அறத்திற்குப் பெருங் கேடாய்த்தான் முடிந்திருக்கும்.

பேராசிரியரே…,

மற்றபடி என்னை நீங்கள் இப்படிச் சிக்கலில் மாட்டிவிட்டால், இந்த மாதிரி மெழுகலான பதிலைத்தான் தரவேண்டி இருக்கும். :)

தங்களின் தொடர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


ஆசான் அவர்களுக்கு,

என் மீள் வருகையைப் பொறுத்தாற்றுங்கள்,
பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்னும் இந்த மகாவிரதிகளின் நோக்குத் தம்முயிரைப் போக்கிக் கொள்ளும் எல்லை வரை சென்று விடுகிறது என்பதுதான் இதன் உச்சம்.

அவர்கள் உடலை வருத்தித் தம் உயிரைப் போக்கிக் கொள்வதைக் குற்றமெனக் கருதார்.
இது என்ன நியாயம்?
சரி இதை இதோடு முடிக்கிறேன்.
அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி.


பேராசிரியரே உங்கள் மீள் வருகைக்கு எப்போதும் போல வரவேற்பு.

தங்களின் முந்தைய கேள்விக்கான விடையில் திருப்தி ஏற்பட்டதா..?
எனில் மகிழ்ச்சி.

//பிற உயிர்களைக் காக்க வேண்டும் என்னும் இந்த மகாவிரதிகளின் நோக்குத் தம்முயிரைப் போக்கிக் கொள்ளும் எல்லை வரை சென்று விடுகிறது என்பதுதான் இதன் உச்சம்.

அவர்கள் உடலை வருத்தித் தம் உயிரைப் போக்கிக் கொள்வதைக் குற்றமெனக் கருதார்.
இது என்ன நியாயம்?//

நியாயம் அநியாயம் எல்லாம் தனிப்பட்டவரின் மனப்பாங்கினோடும் அவர் சார்ந்த சமூகச் சமயக் கொள்கைகளோடும் தொடர்புடையன அல்லவா பேராசிரியரே..?

கொல்லாமை கூடாது, புலால் ஆகாது என்பது சமண நெறி.

கொல்லக் கூடாது ஆனால் கொன்றதைத் தின்னலாம் என்னும் பௌத்தம்.

அவரவர்க்கும் அவரவருடையதான நியாயங்கள்.

ஒரு தரப்பாரின் நியாயம் இன்னொரு தரப்பாருக்கு அநியாயமாய்த் தோன்றுதல் உலகத்தின் இயற்கை.

அவர்கள் தம்முயிரைப் போக்குதலைக் குற்றமெனக் கருதார்.

அது அவர்கள் கொண்ட நியாயம் அவ்வளவே.

அது சரியா தவறா என்பதைப் பற்றி என் கருத்தை நான் சொல்லவே இல்லை.

அவர்கள் கொள்கை இது அவ்வளவுதான்.

ஆனால் ஒன்று,

புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்துறத்தலையும், நவகண்டத்தையும் நீங்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களில் காண முடியும். அப்படி ஒரு மரபு சமூகத்தில் இருந்தது என்று அதைப் பதிவு செய்யும் போது அப்படிப் பதிவு செய்தவர்களை நோக்கி இது நியாயமா என்று யாரும் கேட்பதில்லை. :))

அருள்கூர்ந்து இப்பதிவினையும் அதுபோல எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

நன்றி.




அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி எனப் பாடிய அவ்வையும், பாடப்பட்ட ஐயன் வள்ளுவரும் சமணத் துறவிகளாக இருந்தவர்கள். மூவேந்தர்களுக்கு முந்திய ஐவேந்தர்கள் காலத்தில் இருந்த சத்தியப்புத்திரன் அதியமான் வடதமிழகத்தை ஆண்டதோடு சமணம் வளர்த்ததை ஜம்பை கல்வெட்டு சான்றாக்கியது. கொற்கைப் பாண்டியர்களும், மதிரைப் பாண்டியர்களும் சமண, பௌத்த மதத்தை போற்றியவர்கள். சேரமான் செங்குட்டுவனின் இளவல் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி ஆவார். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்று சமண சமயக் காப்பியம், ஐஞ்சிறுக் காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தவரால் எழுத்தப்பட்டது. சங்கக் காலப் பாடல்களில் முக்கால்வாசிப் பாடல்கள் சமணர்களால் எழுத்தப்பட்டது. திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் சமண சமயக் கொள்கைகளை பரப்ப எழுத்தப்பட்ட அறநூல்களாகும். ஆதிபகவன் எனத் தொடங்கும் திருக்குறளில் ஆதிபகவன் என்பவரே முதல் சமணத் தீர்ந்தங்கரரது பெயராகும்.

இவ்வளவு அறக்கொடைகளையும் நமக்கு வழங்கிவிட்டு எவ்வித இறுமாப்பும் இன்றி இந்தியாவில் இன்றும் சமணம் மிக அமைதியாக வாழ்ந்து வருகின்றது. அவர்களது கொள்கைகளை உருவி மதம் வளர்த்தவர்கள் பொய்களையும், புனைவுகளையும் கட்டமைத்துக் கொண்டு அரசியல் செய்து வருவது தான் வியப்பே.

இன்றளவும் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 120 தமிழ் சமணக் கிராமங்கள் இருக்கின்றன. இங்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். நவீன சமணம் அதிகம் வழிபாட்டுக்கும், வாழ்வியலுக்கும் முக்கியம் கொடுத்து வருவதாலும், சுற்று முற்றில் இந்து சமூகங்களில் தாக்கத்தாலும் தேய்ந்த நிலையிலேயே இருக்கின்றது. 2000 ஆண்டுகள் பழமையான சமண சின்னங்கள் மதுரை உட்பட பல மாவட்டங்களில் கிராணைட் தொழில்களாலும், அரசின் அக்கறையின்மையாலும் அழிந்து வருகின்றன.

திருப்பதி, காஞ்சி, மதுரை, பழநி ஆகிய இடங்களில் இருக்கும் பல கோவில்கள் ஒரு காலத்தில் சமணக் கோவில்களாக இருந்தவை. அங்கிருந்த சமண தீர்ந்தங்கரர்கள் பாலாஜி, ஐயனார், சிவன் என மாற்றப்பட்டதோடு, தீர்ந்தங்கரர்களது காவலர்களாக இருந்த இயக்கன், இயக்கிகள் எல்லாம் பலவேறு தெய்வங்களாக மாற்றப்பட்டு இந்து மதத்தினரால் வணங்கப்பட்டு வருகின்றன என்பது வருத்தமான உண்மைகள்.

உங்களது சமணம் சார்ந்த பதிவுகளை தொடருங்கள். வாழ்த்துக்கள்.


ஐயா வணக்கம்.

தங்களது வருகைக்கும் ஆகச் செறிந்த பின்னூட்டங்களுக்கும் நன்றி.


இங்குநான் குறித்துக் காட்டும் கருத்துகள் தவிர ஏனைய தங்களின் கருத்துகளோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

1) அணுக்கொள்கை என்பது சமணர் தோற்றுவித்ததன்று. சமணர்களிடமிருந்து பிற வைதீக சமயங்கள், பல கொள்கைகளை எடுத்துத் தமதாக்கிக் கொண்டது போலவே அணு பற்றிய கொள்கை ஆசீவகரிடம் இருந்து சமணம் எடுத்துக் கொண்டதாகக் கருதுகிறேன். உலகாயதத்தை அடுத்த பதிவாக ஆசீவகத்தைத் தான் சொல்லி இருக்க வேண்டும். சமணத்திற்கு முற்பட்டு அணுக்கொள்கையைக் கூறிச் செல்வது ஆசீவகமே. ஆனால் தமிழ் இலக்கியங்களில் அது பற்றிக் கிடைக்கும் சான்றுகள் மிகக் குறைவு என்பதால் இறுதியில் சொல்லக் கருதினேன். ஆசீவகம் மற்றும் சமணக் கொள்கைகளை நோக்க அவை தோழமை நெறிகளாகப் படுகின்றன. ஆனால் இவை இரண்டும் வேறுபட்டன என்பதற்கும் ஆசீவகத்தின் கொள்கையை மறுத்தும் எள்ளியும் சமணம் செல்வதற்கும் சமண நூலான நீலகேசியில் சான்றுகளுண்டு.

2) திருக்குறள் சமண நெறிகளைப் புலப்படுத்தும் நூல் என்பது எனக்கும் உடன்பாடே.

ஆனால் ஔவைஅணுவைத் துளைத்தேழ்என்று சொன்னது அளவிற் சிறுமைக்காக என்றே நான் எண்ணுகிறேன். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஔவைகள் வாழந்தனர் எனினும், ” சிறுகட் பெறினே எமக்கீயும் மன்னேஎன்ற புறநானூற்று ஔவையாக இவர் நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் அவர் ஊன் உண்பவர்.

சமணம் அதை முற்றிலும் நிராகரிக்கிறது.

3) சங்ககாலப் பாடல்களில் முக்கால்வாசிப் பாடல்கள் சமணர்களால் எழுதப்பட்டவை என்பதனோடும் என்னால் உடன்படமுடியவில்லை. ஏனெனில் சமணம் இல்லறத்தார்க்கு வலியுறுத்தும் ஐவகை அறங்களுள், அளவிகந்த காமம் தவிர்த்தல் என்பதும் ஒன்று. அஃதாவது தன் துணையுடன் மட்டுமே சேர்ந்திருத்தல் . பிற பெண்டிரைத் தவிர்த்தல். அவ்வாறாயின் பரத்தையர் மாட்டுப் பிரிதலைச்சித்தரிக்கும் மருதத்திணைப் பாடல்கள் பலவும், சமணரின் கொள்கைக்குடன்பாடாக முடியாததாய்ப் போகும். புறப்பாடல்களுள் வெட்சியின் தோற்றுவாயே நிரை கவர்தல்தான். அது இல்லறத்தார்க்கென விதிக்கப்பட்ட அனுவிரத்தில் அஸ்தேயம் எனப்படும் களவு புரியாமையோடு மாறுபடும்.

சங்கப்பாடல்களில் சமணக் கொள்கைகளின் தாக்கம் இருக்கின்றன. அதே நேரம் சமணம் தமிழகத்தில் காலூன்றுவதற்கு முன்பான தமிழரின் கருத்தியலைச் சங்க நூல்கள் காட்டிச் செல்கின்றன என்பது என் நிலைப்பாடாக இருக்கிறது.

தங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கும் அறிவூட்டும பின்னூட்டத்திற்கும் தலைவணங்குகிறேன்.
நன்றி.


தங்களின் இனியக் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே !

1. அணுக்கொள்கை யார் உருவாக்கினார்கள் என்பதில் இன்னம் தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் தாங்கள் சொல்லியது போல ஆஜீவகத்தார் உருவாக்கியிருக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன. பண்டைய திராவிட பண்பாட்டு வெளியில் தோன்றிய ஸ்ரமண வழி சிந்தாத்தந்தில் கிளைத்த மற்றொரு மதம் தான் ஆஜீவகம் ஆகும். இந்த மதத்தினை பரப்பிய மக்காளி கோசர் என்பவர் புத்தர், மகாவீரரது சமக் காலத்தவர் என்பதும் முக்கியமான ஒன்று. சமணத் துறவியினர் அம்மணமாக வாழ்பவர்கள் என்றால் ஆஜீவகத் துறவிகள் கோவணம் மட்டும் பழக்கமுடையவர்கள். இந்தியா முழுவதும் சில சமண, பௌத்த குகைகள், மலைகளின் அருகில் கோவணத்தோடு நின்ற கோலத் துறவிகளின் சிற்பங்களையும் காணலாம். அதில் ஒன்று சித்தனவாசல் அருகேயும் காணக்கிடைக்கின்றன. பழநி முருகன் கோவிலில் நிற்கின்ற பழநியாண்டவர் கூட ஆஜீவகர் என்ற கருத்தும் உள்ளது. ஆஜீவகத்தின் கொள்கைகள் தெளிவில்லை. மற்ற சமயத்தவரது வாத எதிர்வாதப் பாடல்களின் மேற்கோள்கள் ஊடாக அறிகின்றோம்.

2. தென்னிந்தியாவில் பல அவ்வைகள் வாழ்ந்திருக்கின்றனர். அவ்வை பெண் துறவியரது பெயர்கள் என நினைக்கின்றேன். ஜம்பைக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் அதியமானை பாடும் அவ்வை சங்க இலக்கியத்தில் வருகின்றார். அவரும் திருக்குறளைப் புகழ்ந்து பாடும் அவ்வையும் ஒன்றா தெரியவில்லை. சங்கப் பாடலில் ஊன் உண்ணுதலைப் பாடும் அவ்வை வேறொருவராக பிற்கால ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் பாடும் அவ்வை மற்றொரு அவ்வையாக இருக்கலாம். அவ்வைகள் என்ற பெயர்களில் கருநாடகம், மராத்திய நாடுகளிலும் பலர் இருந்திருக்கின்றார்கள்.

3. இதை மன்னிக்க. சங்கக் காலப் பாடல்களில் சமணர்களும் பாடியிருக்கின்றனர். அது மட்டுமின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் பாடிய கனியன் பூங்குன்றனர் வைணவர் எனச் சொல்லப்பட்டாலும் அவர் ஆஜீவகராக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். சங்ககாலப் பாடல்கள் பலவும் தமிழரது தொல் சமயக் கொள்கையாளர்கள் தான் பாடியிருக்க வேண்டும் ஏனெனில் பரத்தையர் கூடல், ஆநிரை கவர்தல், போர்களைப் புகழ்தல், ஊன் உண்ணுதல், கள் பருகுதல் போன்றவைகள் ஆதி தமிழர் மதக் கொள்கைகள். இவ்வாறான பழக்கங்கள் இன்றளவும் நாட்டுப்புற மக்களிடமும், மத்திய இந்தியா முதல் பரவி வாழ்கின்ற திராவிட பழங்குடிகள் மத்தியிலும் காணப்படுகின்றன. இவ்வாறான வாழ்க்கை முறை ஒழுக்கமற்றது என போதித்தவர்கள் சமணர்கள், பௌத்தர்கள் அதனால் தான் நெடுநல்வாடையில் மதுவருந்திப் போவோரை மாக்கள் என கூறுகின்றனர்.

உலகாயதம் பற்றியும் நாம் கவனிக்க வேண்டும். ஆர்யர் கொண்டு வந்த வைதிக பிராமண மத்தில் இருந்து மாறுபட்ட மரபில் தோன்றிய மதங்களான சமணம், பௌத்தம், ஆஜீவகம் போல உலகாயதமும் வித்தியாசமான ஒன்றாக கருதப்படுகின்றது. உலகாயதம் முற்று முழுவதுமாக நவீன நாத்திகத்தை ஒத்திருப்பதும் பொருள் சார்ந்த வாழ்வியலை சித்தரிப்பதும் வியப்பே.

தொடர்ந்து எழுந்துங்கள் இவற்றை எல்லாம் பற்றி அதிகம் அறிய ஆவல், தொடர்ந்து பேசலாம்.


மதிப்பிறிகுரியீர் வணக்கம்.

ஆசீவகர் குறித்து இனி எழுதும் பதிவுகளில் கூட அவர்தம் கொள்கைகளையே குறிப்பிடக் கருதிகிறேன் என்பதால், இங்கு ஆசீவகரின் தோற்றம் குறித்தத் தங்களின் கருத்தினோடு ஒட்டிய சில செய்திகளைப் பகிர்ந்திடவிழைகிறேன்.

தாங்கள் கூறியுள்ளஸ்ரமண வழி சிந்தாத்தந்தில் கிளைத்த மற்றொரு மதம் தான் ஆஜீவகம் ஆகும். இந்த மதத்தினை பரப்பிய மக்காளி கோசர் என்பவர் புத்தர், மகாவீரரது சமக் காலத்தவர் என்பதும் முக்கியமான ஒன்று

என்பதில் இன்னுமோர் கூடுதல் குறிப்பு உள்ளது. இம்மூவருமே தம்மை 24 அல்லது 25 ஆவது தீர்த்தங்கரர் என்றும் புத்தர் என்றும் சொல்லிக் கொண்டவர்கள்.

மட்டுமல்லாமல், வைதிக நெறியிலிருந்து விலகிய இவர்களின் கொள்கைகளிலும் சில பொதுமைகள் காணலாகின்றன.

1) யாகங்களையும், வருணாச்சிரம நடைமுறைகளையும் கடவுளரையும் மறுத்தவர்கள் இவர்கள்.

2) வேதம் வலியுறுத்தும் இயற்கைச் சக்திகளுக்கும் உபநிடதங்கள் வலியுறுத்தும் பரம்பொருளுக்கும் மாற்றாக அண்டத்தின் அமைப்பியல் நியதிகளை ஏற்றவர்கள்.

3) அண்டத்தின் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தோராய் விளங்கியவர்கள்.

சொல்லப்போனால், ஆசீவகத்தின் மற்கலி கோசாலர், சமணத்தின் மகாவீரர், பௌத்தத்தின் கௌதமபுத்தர் இம்மூவரையும் இச்சமயங்களின் சிறப்புமிக்கவர்களாகக் கருதவேண்டுமே அல்லாமல் இவற்றைத் தோற்றுவித்தவர்களாகக் கருத வேண்டுவதில்லை என்றே தோன்றுகிறது.

நீங்கள் கூறுவதுபோலவே பாலிபிடக நூல்களிலும், சமண சூத்திர உரைகளிலும், புத்தர் மகாவீரர் இவர்களுடன் தொடர்பு கொண்டவராகவே மற்கலிகோசர் குறிப்பிடப்படுகிறார்.

மணிமேகலை, நீலகேசி, போன்ற நூல்களில் அகிரியாவாதத்தை முன்னெடுத்தோரும் ( பூரணர் ) நியதிக்கொள்கையை முன்னெடுத்தோரும் ( மக்கலி ) அணுக்கொள்கையைக் தமதெனக்கொண்டோரும் ( பகுதகச்சானர் ) ஆசீவகர் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இம்மூன்று கொள்கைகளும் ஆசீவகத்தின் அடிப்படையாய் இருத்தல் கூடும்.

பாலிபீடகம் மற்கலியைமக்கலிகோசாலஎன்றும் மகாயான பௌத்த நூல்கள்மஸ்கரின் கோசால‘, ‘கோசாலிக புத்திரஎன்றும், பிராகிருதச் சமண நூல்கள்கோசால மங்கலிபுத்ரஎன்றும் தமிழ்ச்சமண பௌத்த நூல்கள்மற்கலிஎன்றும் குறிப்பிடுகின்றன.

அரசவைக்குச் சென்று, போர் பாடுபவர்களாகவும், புகழ் பாடுபவர்களாகவும் இவர்கள் விளங்கினர். ஆடல் பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் இவர்களது சமயச் சடங்குகளில் இயல்பாக இடம்பெறுவதாகச் சமண பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியங்கள் காட்டும் பாணர் கூத்தர் முதலான குடிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள இடையே உள்ள உறவு நுட்பமாய் ஆராயப்படவேண்டும்.

முற்கூறிய பாலிபிடகங்களும், சமண சூத்திர நூல்களும் புத்தருக்கும் மகாவீரருக்கும் மூத்தவர் மற்கலி என்றே சொல்கின்றன.

மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில், ஒவ்வொரு சமயக்கொள்கையாக எடுத்துக் கூறி விளக்கும் இடத்தில் கூட ஆசீவகம் பற்றிய கொள்கை விளக்கப்பட்டு அதன் பின்னர்தான் நிகண்டவாதம் எனப்படும் சமண நெறி விளக்கப்படுகிறது. பண்டைய நூல்களின் இதுபோன்ற முறைவைப்புக் காரணகாரியத்தினோடு பொருத்தப்பாடுற்றே அமைவதாகும் என்பது நான் கண்டது.
உலகாயதத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையதாகவும் ஆசீவகமே கருதப்படுகிறது. ஏனெனில் ஐம்பூதங்களில் ஆகாயத்தை உலகாயதர் போலவே ஆசீவகரும் ஏற்பதில்லை.

இறந்தோரைத் தாழிகளில் புதைக்கும் வழக்கிலும் இருவரும் ஒன்றுபடுகின்றனர்.

உயிருடனே தாழிகளில் அமர்ந்து தவநிலையில் உயிர்துறத்தலும் இவர்களிடம் உண்டு. ஆதிச்ச நல்லூர் போன்ற இடங்களில் காணப்படும் தாழிகள் பல ஆசீவகரின் உயிருடன் அமர்ந்து தவம் புரிந்த தாழிகளாக இருக்கவும் கூடும்.


மகாவீரர் போலவே மற்கலியும் திகம்பராக இருந்தார் என்ற கருத்தும் உண்டு.
பிற்காலத்தில் சமணத்தில் வலியுறுத்தப்பட்ட கடும்நோன்பு ஆசீவகத்தில் இருந்து உட்செரிக்கப்பட்டதாய் இருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

ஏனெனில் தண்ணீரும் அருந்தாமல் தங்களை வருத்திப் புலன்களை அடக்கித் தவமிருக்கும் இவர்களை தானங்க சூத்திரம் என்னும் சமணநூல் விளக்கிச் செல்கிறது.

இது பற்றி வெளிநாட்டினரின் தொன்மையான பௌத்த சமயக்குறிப்புகளிலும் குறிப்பு உண்டு.

கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகாபதும நந்தன் என்னும் அரசன் ஆசீவக சங்கத்தை ஆதரித்தாகக் கூறப்பட்டிருக்கிறது. அசோகனுக்குச் சமகாலத்தவனான, தேவனாம்பிரியதிசனின் பாட்டன்பாண்டுகாபயன்அநுராதபுரத்தில் அசீவகப் பள்ளியை அமைத்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது.

இதே நூற்றாண்டில் நிறுவப்பெற்ற அசோகனின் 7 ஆம் ஸ்தூபிக் கல்வெட்டு, தன்னுடைய சமயமான பௌத்தத்தை முதலிடத்திலும், ஆசீவகத்தை இரண்டாமிடத்திலும் சமணத்தை மூன்றாம் இடத்திலும் பிற சமயங்களை நான்காம் இடத்திலும் வைத்துக் குறிப்பிடுகிறது.

நம்நாட்டிலும் ஆசீவகப்பள்ளி இருந்ததை, சிலப்பதிகாரத்தில் காப்பியத்தலைவர் மறைவுக்குப் பிறகு, கண்ணகியின் தந்தையாம் மாநாய்கன் தன் செல்வத்தையெல்லாம் ஆசீவகப் பள்ளிக்குத் தானம் செய்துவிட்டு, துறவியானான் என்பதைக் குறிப்பிடும்,

கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத் தாசீவகர்முன்
புண்ணிதானம் புரிந்தறங் கொள்ளவும்
என்னும் சிலம்பினடிகள் காட்டுகின்றன.

ஆசீவகர் வானியலிலும், காலக்கணிதத்திலும், மெய்யியலிலும், உலகியலிலும், ஒலியியலிலும், சிறந்து விளங்கிய இந்தியத் தொல்குடியினராவார்.

குறிப்பாக இந்தியத் தத்துவ இயலில், வான் கோள்களைக் கணித்து நிமித்தங்களைக் கூறும் இன்றைய சோதிடத் தோற்றுவாய் ஆசீவகர்களில் இருந்தே தொடங்குகிறது. ஆசீவகர்கள் சோதிடக் கலையில் வல்லவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழில் கணியர்கள் எனப்பட்டவர்கள் இவர்களே. இன்றும் இம்மரபினர், கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமணம் இந்நிமித்தங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறது.

கணியன் பூங்குன்றனாரின் , “யாதும் ஊரே யாவரும் கேளிர்என்பது ஆசீவகத் தத்துவத்தின் அடிப்படையான நியதிக் கொள்கையை வலியுறுத்திச் சொல்லுவதாகும். சமணம் இதனுடன் வேறுபட்டு வினைக்கொள்கையை முன்னிறுத்துவது இங்கு எண்ணத்தக்கது.

ஆசீவகத் தத்துவங்கள் குறித்துச் சமணம் பற்றிய பதிவுகள் நிறைவுற்றதும் பகிர்ந்து கொள்ள உங்கள் பின்னூட்டங்கள் தூண்டுகின்றன.

தங்களின் வருகைக்கும் அறிவூட்டும் கருத்தாழமிக்க பின்னூட்டங்களுக்கும் மீண்டும் நன்றி.


ஆர்யர்கள் இந்தியாவுக்கு வருமுன் சிந்து நதி என அழைக்கப்படும் குமரி நதிக்கரையில் ஹரப்பன் பண்பாட்டு வெளியில் தோன்றியது தான் சமணம். இதனை முதன் முதலில் தோற்றுவித்தவர் பேரரசராக விளங்கி பின்னர் துறவறம் பூண்ட ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிசபதேவர் ஆவார். இவரது மகன் பரதன் தான் தமிழகம் நீங்கலாக இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தவன் அவனது பெயரால் தான் இந்தியா பரத நாடு என அழைக்கப்பட்டது. இந்து மதங்கள் சொல்கின்ற ராம கதை, கிருஷ்ண கதை எல்லாம் சமண மதத் தொன்மக் கதைகளாக இருந்தவை. இவை திருடப்பட்டு திரிக்கப்பட்டு இந்து மத புராணங்கள், இதிகாசங்களாக மாற்றப்பட்டன. ஆதிபகவன் உட்பட 24 தீர்ந்தங்கரர்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களில் கடைசியாக தோன்றியவர் தான் மகாவீரர் என்பவர். புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர். புத்தர் கூட ஆறு ஆண்டுகள் சமண துறவியாக இருந்திருக்கின்றார். பின்னர் சமணத்தின் கடுமையான துறவறத்தை வெறுத்து தனியொரு வழியில் போய்விட்டார். அதுவே பௌத்தமாக உருவாகியது என்பர்.

சமணர்கள் தமது மரபை திராவிட மரபு என்றே அழைக்கின்றனர். அது மட்டுமின்றி வடநாட்டில் மௌரியர்கள் ஆட்சிக் காலத்தில் சமணம் உயர்வான இடத்தைப் பெற்றது. சந்திரகுப்த மௌரியர் தமது இறுதிக் காலங்களில் சமண துறவியாகி கருநாடக மாநிலம் சமண வெள்ளைக் குளத்தில் தங்கியிருந்து இயற்கை எய்தினார். சமணத் துறவி பத்திரபாகு என்பவர் காலத்தில் வடநாட்டில் பெரும் வறட்சி வரவும் பல ஆயிரம் துறவிகள் தென்னாடு வந்தனர். அதன் பின்னரே தமிழகம் சமணத்தைத் தழுவிக் கொண்டது. சமணத்துக்கு தமிழகம் அடைக்கலம் கொடுத்ததினால் தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வளர்ந்தது எனலாம்.

கி.பி ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கங்களால் சமணமும், பௌத்தமும் காவு வாங்கப்படாமல் போயிருந்தால் இன்று இந்தியா வளர்ச்சி கண்ட அறிவொளி மிக்க அறிவியல் வளம் கொண்ட நாடாக பரிணமித்திருக்கும். சைவமும், வைணவமும் இந்தியாவை சாதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் வழியில் கொண்டு போய் இருண்ட காலத்தை தோற்றுவித்தது வருத்தமான உண்மை. சமண தத்துவமும், கொள்கைகளும் அனைவரால் வாசிக்கப்பட வேண்டும், அதன் உயர்ந்த தத்துவங்கள் நவீன அறிவியலுக்கு ஒப்பாக இருப்பது தான் வியப்பு.


ஐயா வணக்கம்.

“““““““““இந்து மதங்கள் சொல்கின்ற ராம கதை, கிருஷ்ண கதை எல்லாம் சமண மதத் தொன்மக் கதைகளாக இருந்தவை. இவை திருடப்பட்டு திரிக்கப்பட்டு இந்து மத புராணங்கள், இதிகாசங்களாக மாற்றப்பட்டன.“““““““““““

புதிதாகப் பிறக்கும் மதங்கள் அனைத்துமே கொள்கை அளவில் முந்தைய மதத்திலிருந்து தாம் வேறுபடுவதாய்க் காட்டித் தமக்குமுன் உள்ள சமயத்தின் கொள்கைகளையும் தொன்மங்களையும் புதுக்கியும் மாற்றியும் வழிமொழிந்தும் போகின்றனவாகவே இருக்கின்றன.

இராமாயணம், இராவணன், இந்திரன், நான்முகன் என இவர்கள் சமணத்தில் சுட்டப்படுகின்றவர்களே.

பரகதி என்பதைக் கூட சமணம் சிவகதி என்றே சொல்கிறது.

சைவர் சொல்லும் பஞ்சாக்கிர மந்திரம் போல சமணர்க்கும் உண்டு.

தாங்கள் கூறும் ஆதிபகவர் இடப தேவர் குறித்த தகவல்கள் இன்றைய சமணம் குறித்துப் பள்ளிகளில் படிக்கும் பலரும் அறியாததே. இது குறித்து முந்தைய பதிவொன்றில் குறித்திருக்கிறேன். சமணத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரர் என்பதாகவே இங்குப் பள்ளிப்படிப்புச் சொல்லிக்கொடுக்கப் படுகிறது.

தீர்த்தங்கரர் என்ற சொல்லைப் பார்க்க, ” பிறவிப்பெருங்கடல் நீந்துவார்என்னும் அரிய மிகப்பொருத்தமான வள்ளுவச் சொல்லாட்சி நினைவுக்குவருகிறது.

பௌத்தத்திற்கு அசோகனைப் போலவே, சமணம் வளர்த்த காரவேலன் என்பானைப் பற்றிய செய்தி பலரும் அறியாதது.

கி.மு. 2 ஆம் நூற்றாண்டினனான கலிங்கத்தை ஆண்ட இவ்வரசன், தமிழகத்தையும், வடஇந்தியாவையும் தன்குடைக்கீழ்க் கொணர்ந்தான். தமிழ் மூவேந்தரையும் முறியடித்தான்.

புஷ்யமித்திரன் என்ற மகத மன்னனை வென்றான்.

தமிழகத்தின் தென்கோடியான குமரிக்குன்றில், வாழ்ந்த சமணத் துறவியர்க்கு இவன் அளித்த நிவந்தங்களை இவனது 13 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக் கூறுகிறது.

வரலாறு மறந்துபோன ஆளுமை.

பொதுவாக இப்பதிவுகள் இவர்தம் கொள்கையைத் தொட்டுக்காட்டிச் செல்வன என்பதால் வரலாற்று நோக்கில் இவை குறித்து விளக்க இயலவில்லை.



நீங்கள் முற்கூறியபடி செல்வாக்குற்ற சமயங்கள் தளர்ந்தவர்களின் திருத்தலங்களைத் திருத்தி எளிதாய்த் தமதுடைமையாய் மாற்றிக் கொண்ட வரலாறு எழுதப்படவேண்டும்.

தங்களின் தொடர்ச்சிக்கு மிக்க நன்றி.


மிகச் சரியாக சொன்னீர்கள் சமண தத்துவத்தை அடியொற்றி அரசியல் வளர்த்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கூட சமணத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என்றே நினைக்கின்றேன். நமது பள்ளிப் பாடங்களில் சமணத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரரே என்பதாகவே கற்பிக்கப்படுவது, வைதிக மதம் மிகப் பழமையானது என்றக் கருத்தை நிறுவவே. அது போல சமணச் சின்னங்கள் ஹரப்பன் பண்பாட்டு வெளியில் கிடைத்துள்ளதையும் கூறுவதில்லை. மாறாக பசுபதி கிடைப்பதாக கூறிவிடுகின்றனர்.

இந்திரன், மித்திரன், வருணன், பிரம்மன் ஆகியோர் ஆர்ய பண்பாட்டு குடியேற்றங்களின் பின் வந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். ஏனெனில் இந்தக் கடவுள்களை இந்தியாவிற்கு வெளியே இரானில் உருவான பண்டைய சுராஸ்தரன மதத்திலும் உள்ளார்கள். ஆர்ய இனங்கள் இரண்டாக பிரிந்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு பிரிவினருக்கு இந்திரன் கடவுள், மற்றொருவர்களுக்கு அசுரன் கடவுள். அசுரனை வழிபட்டவர்கள் இரானில் குடியேறியிருக்கின்றார்கள். அவர்களிடம் தோற்றுப் போய் இந்தப் பக்கம் வந்தவர்கள் தான் பிராமண மதத்தைத் தோற்றுவித்திருக்கலாம்.

ஆர்ய குடியேற்றங்களின் பின் ஏற்பட்ட மக்கள் கலப்பினால் பண்டைய திராவிட சமயங்களிலும் ஆர்ய கடவுள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

சமண, பௌத்ததின் பிரகாரம் ராவணன் பற்றிய குறிப்புக்கள் இல்லை. ராமன் மட்டுமே வருகின்றான். ராமன், கிருஷ்ணன் ஆகிய இருவரும் யாதவக் குலத்தவர்கள். சமணம், பௌத்தம் தோற்றுவிக்கப்பட்டது யாதவக் குலத்தவர்கள் என்பதால் யாதவக் குலத்தவர்களது தொன்மக் கதை மாந்தர்களாக ராமர், கிருஷ்ணர் இருக்கலாம். இவ்விருவரும் கறுநீல வண்ணத்தில் காட்டப்படுவதால் இவர்கள் கறுப்பின மக்களான திராவிட யாதவர்களதாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

ராமன், கிருஷ்ணர் பற்றிய குறிப்புக்கள் வேதங்களில் கிடையாது. கிருஷ்ணர் என்றால் கறுப்பர் என கறுப்பின மக்களை ரிக் வேதம் சொல்லும். ஆக, பிராமண வைதிக மதம் சிந்து நதியில் இருந்து கங்கை நதி நோக்கி பரவியக் காலத்தில் அங்கிருந்த பூர்வ மக்களின் கடவுள்களை சுவீகரம் செய்திருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அதே போலத் தான் காஷ்மீரத்துக்கு பரவிய போது அங்கிருந்த திபெத்திய மக்களின் கடவுளான ஷிவனையும் வைதிகம் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. ஆக, வைதிகம் பரவிய இடங்களிலும் எல்லாம் உள்ளூர் மக்களின் கடவுளைச் சேர்த்துக் கொண்டே போனதால் தான் இந்து மதத்தில் பல நூறு கடவுள்கள் இன்று தென்படுகின்றனர்.

சமண மதத்தை சந்திரகுப்த மௌரியர் ஆதரித்து வளர்த்திருக்கின்றார். ஆனால், தாங்கள் சொன்னது போல கரவேலா மன்னர் அசோகரைப் போல சங்கங்கள் மற்றும் பள்ளிகள் அமைத்து பரப்பியதாக நானும் வாசித்திருக்கின்றேன். வடக்கில் புஷ்யமித்திரன் என்ற பிராமண மன்னன் மௌரியரை வீழ்த்திய பின்னர் அவன் அங்கிருந்த சமண, பௌத்த மடங்களை கொளுத்தி, பலரைக் கொன்றதாக நூல்கள் கூறுகின்றன. எரிந்த செங்கற்களோடு கண்டெடுக்கப்பட்ட சில விகாரைகளின் அகழ்வாய்வுகள் புஷ்யமித்திரனது காலத்தோடு பொருந்துவதாக ஆய்வாளார்கள் சொல்லுகின்றார்கள். இவனது காலத்தில் தான் பல சமணர்கள் கருநாடகம், தமிழகம் வந்தனர்.

அசோக மன்னரையே ஆங்கிலேயர் வெளிக் கொணர்ந்த பின்னர் தான் நாம் அறிந்து கொண்டோம். அந்த வகையில் இந்தியாவை சிறப்புடன் ஆட்சி செய்த சமண, பௌத்த மன்னர்கள் பற்றி பாடநூல்கள் இருட்டடிப்புச் செய்வது வியப்பல்லவே. இன்றும் இந்தியாவின் பொற்காலம் குப்தர்கள் காலம் என்கின்றனர். ஆனால் பல பொற்காலங்கள் அன்றிருந்தன என்பதையும் சொல்வதில்லை. உண்மையில் நடுநிலையான அகழ்வாய்வுகளும், ஆராய்ச்சிகளும் வரலாறு, தொல்லியல் துறைகளில் மேற்கொள்ளப்படுவதில் பின் தங்கிவிட்டோம் என்றே சொல்லலாம்.


ஐயா,

வணக்கம்.

தங்களின் மீள்வருகைக்கும் மேலதிகக் கருத்துகளுக்கும் மகிழ்ச்சி.

நானறிந்த சில கருத்துகள் மட்டும்....தங்களின் பின்னூட்டத் தொடர்ச்சியாய்..

“““இந்திரன், மித்திரன், வருணன், பிரம்மன் ஆகியோர் ஆர்ய பண்பாட்டு குடியேற்றங்களின் பின் வந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். ஏனெனில் இந்தக் கடவுள்களை இந்தியாவிற்கு வெளியே இரானில் உருவான பண்டைய சுராஸ்தரன மதத்திலும் உள்ளார்கள். ஆர்ய இனங்கள் இரண்டாக பிரிந்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு பிரிவினருக்கு இந்திரன் கடவுள், மற்றொருவர்களுக்கு அசுரன் கடவுள். அசுரனை வழிபட்டவர்கள் இரானில் குடியேறியிருக்கின்றார்கள். அவர்களிடம் தோற்றுப் போய் இந்தப் பக்கம் வந்தவர்கள் தான் பிராமண மதத்தைத் தோற்றுவித்திருக்கலாம். ““““““

இது தங்கள் கருத்தே ஆயினும், மணிமேகலையின் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில், சமணரின் கருத்தாகச் சீத்தனார் இந்திரர் வணங்கும் இறைவனாக அருகனைக் காட்டுகிறார்.

இந்திரர் தொழப்படும் இறைவனெம் மிறைவன்

என்பதாகவே சமணத்தின் நவபதார்த்தங்களை விளக்கும் நிகண்டவாதியின் கருத்துத் தொடங்குகிறது.

மகாவீரரின் தலையான பதினோரு சீடர்களுள்ளில் ஒருவர்இந்திரபூதிஎன்பார். இப்பெயரளவிலான பொருத்தமும் ஈண்டு எண்ணத்தக்கது.

சமணம் தம் வணக்கத்திற்குரியோரைப் பரமேட்டிகள் என்று குறிக்கிறது. தேவாரத்திலும் பிரபந்தத்திலும் சிவனும் திருமாலும்பரமேட்டிஎன்று அழைக்கப்படுகின்றனர்.

நன்னூலை இயற்றிய சமணரான பவணந்தி, தன் எழுத்ததிகார இறைவணக்கத்தில்,

அருககக் கடவுளை,

பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுதுநன் கியம்புவன் எழுத்தே

என்று பரவுதல் நோக்க, அருகனுக்கு நான்முகன் என்னும் பெயரும் உரியதாய் இருத்தல் அறியப்படும்.

தாங்கள் சொல்லும்,

““““சமண, பௌத்ததின் பிரகாரம் ராவணன் பற்றிய குறிப்புக்கள் இல்லை. ராமன் மட்டுமே வருகின்றான். ”””””

என்னும் கருத்தை மறுக்க வேண்டியவனாய் இருக்கிறேன்.

பிராகிருதத்தில் காணப்படும் பல இராமயணங்களுள் பழமையானது விமலசூரி என்பார் எழுதிய பௌமசரியம் ( தமிழில் -பதுமசரிதம்). இச்சரிதத்தில் இராமன், இராவணன் என இருவருமே சமணராகச் சித்தரிக்கப்படுகின்றனர்.
“““““சமண மதத்தை சந்திரகுப்த மௌரியர் ஆதரித்து வளர்த்திருக்கின்றார்.““““

தாங்கள் சென்ற பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போலவே, இக்குறிப்பு அதிமுக்கியத்துவம்வாய்ந்த ஒன்றாகும்.

ஏனெனில் மகாவீரரின் வாய்மொழிகளைக் கொண்டு அவரது பதினோரு சீடர்களால் ஆக்கப்பட்ட நூல்கள் அழிந்ததன் காரணம் அப்பொழுது ஏற்பட்ட கடும்பஞ்சமே என்ற கருத்து உண்டு.

பத்திரபாகு என்கிற சமணத்துறவியின் தலைமையில், “எண்ணாயிரம்என்று அழைக்கப்பட்ட ஒரு சமணக்கூட்டம் புலம்பெயர்ந்து, கர்நாடகத்தில் உள்ள சிரவணபெல்கோல ( வெள்ளைக்குளம் ) என்ற இடத்தில் நிலைகொண்டு இயங்கத் தொடங்கிய இந்தச் சந்திரகுப்தன் காலத்தில்தான்.

( எண்ணாயிரம் சமணர்களை வாதில் வென்று சம்பந்தர் கழுவேற்றினார் (அல்லது அவர்களாகக் கழுவேறினர் ) என்று சொல்லப்படுவது எண்ணாயிரம் என்கிற எண்ணிக்கையை அல்ல. இக்கூட்டத்தைச் சேர்ந்த சமணர்கள் எண்ணாயிரம் சமணர்கள் என்று அறியப்பட்டனர். அவர்களுள் ஒருவர் இறந்திருந்தாலும் அது எண்ணாயிரம் சமணரைக் கொன்றதாகவே அறியப்பட்டிருக்கும். அது எட்டாயிரம் என்கிற எண்ணிக்கைக் குறித்ததாகப் பிறழ உணரப்பட்டதும் உணர்த்தப்பட்டதும் நம் வரலாற்றின் புனைவு. அவ்வாறு நிகழ்ந்த பென்னம்பெரிய படுகொலையை ( அல்லது ) தற்கொலையை இலக்கியமோ கல்வெட்டோ நாட்டார் வழக்காற்றியலோ பதிவு செய்து வைத்திருக்கவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. )

நிற்கத் தென்னாடெங்கினும், இலங்கையிலும் இவ்வெண்ணாயிரச் சமணர் குழு வழியாகவே சமணம் பரவிற்று.

பத்திரபாகுவுடன் புலம்பெயராமல் பாடலிபுத்திரத்திலேயே தங்கிவிட்டவர்கள் அனைவரும் தூலபத்திரர் என்பாரின் தலைமையில் ஒன்றிணைந்து அழிந்தது போக எஞ்சியவற்றைத் தொகுக்க முனைந்தனர். அவர்களால் தொகுக்கப்பட்டன அங்கம் உபாங்கம் என்பனபோன்ற நூல்கள்.

ஆனால் இத்தொகுப்பைத் தாயகம் கடந்த பத்திரபாகு தலைமையிலான எண்ணாயிரக் குழு ஏற்க மறுத்தது.

துறவிகள் வெள்ளாடை உடுத்தலாம் என்பதைத் தூலபத்திரர் தலைமையிலான சமணர் கொள்கையாய்க் கொண்டனர்.

ஆடையென்பதும் துறவிக்கு மிகையே. அதனால் வரும் கவலை எமக்கெதற்கு? திக்குகளையே ஆடையாய் உடுத்தவர் யாம்!’ என்று பத்திரபாகு தலைமயிலான எண்ணாயிரக் குழு தூலபத்திரக் குழுவின் கொள்கையை புறந்தள்ளியது.

இதில் இன்னும் ஆழமாகச் சென்று பார்க்க, 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் வெள்ளாடை தரித்தலையும், 24 ஆம் தீர்த்தங்கரான மகாவீரர் ஆடை துறத்த நிலையையும் கொண்டு இரு தீர்த்தங்கரின் கொள்கைவழிப் பிரிந்த இரு சமணக் குழுக்களாகவும் பத்திரபாகுவையும், தூலபத்திரரையும் கொள்ளலாம்.
இங்கு, ஒருசார் ஒற்றுமைக்கான இடைச்செருகலாய், பழைய ஏற்பாட்டின் யஹோவா என்பவரை ஏற்றுப்பின்பற்றிவரும் யூதரையும், அம்மரபில் இருந்து தோன்றி யஹோவாவையும் ஏற்று, கிறித்துவை முதன்மையாகக் கொண்ட கிறித்தவரையும் ((( விலகி இறந்துபோன ஒருசீடனைத் தவிரக் கிறித்துவின் போதனையை உலகெங்கிலும் பரப்ப முனைந்த))) அவர்தம் 11 சீடர்களையும் ( மகாவீரருக்கு இருந்த பதினொருவரைப் போல) ஒருங்கெண்ணத் தோன்றுகிறது.
ஆகத் துறவிகள் வெள்ளாடை அணியலாம் என்பன போன்ற கொள்கைகளை உடைய சமணர் சுவேதம்பரர் என்றும்.
ஆடையும் மிகையே. அதையும் அவிழ்த்தெறிவதுதான் துறவு என்ற சமணர் திகம்பரர் என்றும் சமணர் இதன் பின் இருபிரிவினராய் அழைக்கப்படலாயினர்.

சுவேதம்பரரின் கிரந்தங்களை உடன்படாத் திகம்பரர் நிர்கிரந்தர் எனப்பட்டனர். இதுதான் நிகண்டம் ஆயிற்று. மணிமேகலை கூறும் நிகண்டவாதி என்பான் திகம்பரப் பிரிவினனே.

சமணரின் இப்பிரிவிற்குச் சந்திரகுப்தரின் காலத்தில் நேர்ந்த அந்தப் பஞ்சமும் அதனைத் தொடர்ந்த புலம்பெயர்தலும் காரணமாயிற்று.

நான் முன்பே குறிப்பிட்டது போன்று வரலாறு என்றல்லாமல், சமணம் மட்டுமன்றி, பழங்காலத்தில் தமிழகத்திருந்த பல்வேறு சமயக்கொள்கைகள் பற்றிய பதிவுகளாகவே இதனை எழுதிப்போகிறேன். இன்னும் பல சமயங்கள் பற்றி எழுத வேண்டி இருக்கிறது.

வரலாற்று நோக்கில் அதனை விளக்கித் தாங்கள் அளிக்கும் பின்னூட்டம் படிப்போர்க்கு இதன் சொல்லப்படாத இன்னொரு கோணத்தையும் புலப்படுத்தி, முழுமையான ஒரு பரிமாணத்தைக் காட்டத்துணைபுரியும் என்பது உண்மை.

அதற்காய் என் நன்றியும் மகிழ்ச்சியும் என்றென்றும்.

ஆசீவகம் குறித்து மேலும் பல செய்திகளை அடுத்த பதிவில் காண்போம். 
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

25 comments:

  1. மிக நுணுக்கமாக அதே சமயம் ஆழமாக விவாதித்துள்ள விதம் அருமை. முந்தைய பதிவுகளின்போது இது தொடர்பாக அதிகம் படித்துள்ளேன். ஒவ்வொரு பதிவிலும், பதிலிலும் உங்களது முத்திரையைப் பதித்துவிடுகின்றீர்கள். நீங்கள் சொன்ன சிக்கலில் ஒன்று நானும் எதிர்கொண்டுவருகிறேன். "பௌத்தம் பற்றி அதிகமாக எழுதுகின்றீர்கள், களப்பணி அனுபவத்தை எழுதுகின்றீர்கள், ஆனால் இன்னும் திருநீறு பூசுகின்றீர்களே?" என்று சிலர் கேட்கின்றனர். பக்குவமற்ற பலர் சைவத்திற்கு எதிரானவனாகப் பார்க்கின்றனர். மாற்றுக் கருத்தினை ஏற்கும் அனுபவமும், ஆய்வு நிலையின் இயல்புத்தன்மையையும் புரிந்துகொள்ளும் நிலை பலருக்கு இல்லை. தினமும் காலையில் ஒரு தேவாரப்பதிகம் என்ற நிலையில் நான்காண்டுகளுக்கு மேலாகப் படித்து வருகிறேன். அந்நிலையில் அண்மையில் சுந்தரர் தேவாரத்தினை நிறைவு செய்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை படித்ததை, அறிந்ததைப் பகிர்வோம் என்ற நிலையில் தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முனைவர் ஐயா,

      தொல்சமயங்களில் ஒன்றான பௌத்தம் பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற தங்களின் பின்னூட்டம் இப்பதிவிற்கு முதலாவதாய் வந்தது நினைந்து பெரிதும் மகிழ்கிறேன்.

      சமயங்கள் குறித்த தேடலும் ஆர்வமும் கொண்டிருக்கிறேனேயன்றி இதுவரை நான் எதையும் கண்டடைந்திடவில்லை.

      சமயம் தொடர்பான பதிவுகளை நான் அறிந்ததை, வாசித்தவற்றுள் கடினமாகப் பட்டவற்றை எளிதாக்கிப் புரிந்து கொண்டதைப் பகிர்ந்துபோகும் களமாகவே காண்கிறேன்.

      சில வினாக்களும் ஐயங்களும் மேலும் என்னைக் கூர்தீட்டும் என்பதால் சற்றுச் சுயநலமும் இதில் உண்டு.

      தங்கள் வருகை மீண்டும் பேருவப்பே.

      நன்றி.

      Delete
  2. வணக்கம் கவிஞரே
    பிரமிக்கத்தக்க பின்னூட்டங்கள் பொறுமையாக படித்து நிறைய விடயங்கள் இதனுள் நுழைய முடியா விட்டாலும் அரியாத பல விடயங்கள் அறிந்தேன் நன்றி
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      அளவு பேரதிகம்தான்.

      தங்கள் வருகையும் பின்னூட்டமும் வாக்கும் ...

      மிக்க நன்றி.

      Delete
  3. அறிவார்ந்தவர்கள் எழுதி அதை படித்து கருத்துபறிமாறிக் கொள்ளும் பதிவாக எனக்கு தெரிகிறது.. இது நம்ம ஏரியா இல்லையாதலால் இந்த ஏரியாவிற்கும் வந்து எட்டிப்பார்த்தேன் என்பதற்காக இந்த பின்னுட்டத்தை வெளியிடுகிறேன்.


    இந்த பதிவுகளுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் இந்த பதிவுகளுக்கு வந்தவர்கள் எல்லாம் நீங்கள் சொல்லிய விஷயங்களை தேட் வந்தவர்களாக இருப்பார்கள். அதனால் இப்படி தேடி வருபவர்களுக்காக பல நல்ல விஷயங்களை பதிவு செய்து விவாவதம் செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மதுரைத் தமிழரே!

      பதிவுலகில் இயங்கும் ஒவ்வொருவரையும் நான் பெரிதும் மதிக்கிறேன். இது வெறுமனே வார்த்தைக்காகச் சொல்லப்படுவதன்று.

      இரண்டு வரிகள் தவறின்றி தமிழெழுதத் தெரியாத தமிழ் முனைவர்களை நான் அறிவேன்.

      முனைவர் ஆய்வேட்டின் முதற்பத்தியில் (பன்னிருவரிகளுக்குள்) பதினேழோ பதினெட்டோ பிழைகளைக் கொண்ட முனைவர் பட்ட ஆய்வேட்டை என் கண்குளிரக் கண்டிருக்கிறேன்.

      பொதுவாசிப்பிற்குக் கடைகளில் தொங்கவிடப்படும் புத்தகங்களைக்கூடத் தொட்டுப்பார்திராத ஆசிரிய ஆளுமைகள் இங்கு அநேகர் உண்டு.

      ஆகவே உங்களின் வாசிப்பிற்கும் வருகைப் பதிவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

      இந்தப் பதிவுகளுக்கு வாசகர் எண்ணிக்கை மற்ற பதிவுகளை ஒப்பிடக் குறைவுதான் அதில் எனக்கு மனக்குறை உண்டு என்றாலும் இதனை விரும்பித் தொடரும் பதிவர்களைப் பார்க்க மகிழ்ச்சியே.

      சில பின்னூட்டங்கள், வியப்பையும் ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியவை.

      இங்கு பதிந்துபோன பின்னூட்டங்கள் அத்தகையவே!

      உங்களைப் போன்றோர் வலையுலகில் செய்வது சமகால மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான எழுத்துப்பணி...!

      நிச்சயமாய் என் போன்றோர் பதிவுகளைவிட இது மிக அத்தியாவசிய தேவை உள்ளது.

      தொடருங்கள்.

      தொடர்கிறேன்.

      நன்றியும் மகிழ்வும்.

      Delete
  4. கற்றோர் நிறைந்த அவை. கப்சிப் என்று கைகட்டி நிற்கிறேன்.
    அரிச்சுவடி அறியாதவனை, கல்லூரி வகுப்பில் அமர வைத்தது போல் உணர்கிறேன்.
    ஆனாலும் தொடர்வேன் தங்கள் தமிழ் சுவைக்க.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா.

      உண்மையில் அரிச்சுவடிதான் இது

      உள்ளே நுழைந்துபார்க்க இன்னும் கடலளவு இருக்கிறது.

      தங்களின் வருகையும் கருத்தும் காண பெருமகிழ்ச்சி.

      நன்றி.

      Delete
  5. வணக்கம் சகோ. ஆய்வுக்கட்டுரை போன்று அமைந்துள்ள இதன் செய்திகளை உள்வாங்க மிகவும் மெதுவாக ஊன்றிப் படிக்க வேண்டியிருந்தது. நீலன் அவர்களின் கருத்துச் செறிவுள்ள பின்னூட்டங்கள், உங்கள் பதிவின் தரத்தை மேலும் உயர்த்துகின்றன.
    எத்தனை எத்தனைப் புதுச் செய்திகள்? அத்தனையையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்பதால் புதிதாக அறிந்தவற்றைக் குறிப்பெடுத்துக் கொண்டேன். அவை வருமாறு:-
    • மலைப்பகுதி அல்லாத இடங்களில் உறியைக் கட்டி
    வசித்தமையால்‘உறியிற் சமணர்’ என அழைக்கப்பட்டதை
    இலக்கியங்கள் காட்டுகின்றன. (உறியில் கூட வசிக்க முடியுமா? வியப்பாயிருக்கிறது!)

    • கொல்லக் கூடாது; ஆனால் கொன்றதைத் தின்னலாம் என்னும் பௌத்தம். (சமணரைப் போலவே, இவர்க்கும் கொல்லாமை கூடாது; புலால் ஆகாது என்றே இதுவரை நினைத்திருந்தேன்)

    • அணு பற்றிய கொள்கை, ஆசீவகரிடமிருந்து சமணம் எடுத்துக்கொண்டது; சமணத்துக்கு முன்பே அணுக்கொள்கையைக் கூறுவது ஆசீவகமே.

    • சங்கப் பாடல்களில் சமண மதத்தின் தாக்கம் இருக்கின்றது; ஆனால் சமணம் தமிழகத்தில் காலூன்றுவதற்கு முன்பான தமிழரின் கருத்தியலைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

    • பண்டைய திராவிட பண்பாட்டு வெளியில் தோன்றிய ஸ்ரமணவழி சிந்தாத்தந்தில் கிளைத்த மற்றொரு மதம் தான் ஆஜீவகம். .இந்த மதத்தினைப்பரப்பிய மக்காளி கோசர் என்பவர் புத்தர், மகா வீரரது சமக் காலத்தவர். (மக்காளி கோசர் என்பவரைப் பற்றி நான் கேள்விப்படுவது, இது தான் முதல் முறை!) இம்மூவருமே தங்களை 24 அல்லது 25 தீர்த்தங்கரர் என்றும் புத்தர் என்றும் சொல்லிக்கொண்டார்கள்.

    • உலகாயதத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையதாகவும் ஆசீவகமே கருதப்படுகிறது.ஏனெனில் ஐம்பூதங்களில் ஆகாயத்தை உலகாயதர் போலவே ஆசீவகரும் ஏற்பதில்லை.
    • ஆசீவகர் வானியலிலும், காலக்கணிதத்திலும், மெய்யியலிலும், உலகியலிலும்,ஒலியியலிலும், சிறந்து விளங்கிய இந்தியத் தொல்குடியினராவார்.
    • ஆசீவகர்கள் சோதிடக் கலையில் வல்லவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழில்கணியர்கள் எனப்பட்டவர்கள் இவர்களே. இன்றும் இம்மரபினர், கேரளத்தை ஒட்டியுள்ளபகுதிகளில் வாழ்கின்றனர் .
    • சமணம்.மதத்தை முதன் முதலில்தோற்றுவித்தவர் பேரரசராக விளங்கி பின்னர் துறவறம் பூண்ட ஆதிபகவன்என்றழைக்கப்படும் ரிசபதேவர் ஆவார். இவரது மகன் பரதன் பெயரால் தான் இந்தியா பரத நாடுஎன அழைக்கப்பட்டது.
    • இராமாயணம், இராவணன், இந்திரன், நான்முகன் என இவர்கள் சமணத்தில்சுட்டப்படுகின்றவர்களே.
    • பௌத்தத்திற்கு அசோகனைப் போலவே, சமணம் வளர்த்தவன் காரவேலன். .
    • கி.மு.இரண்டாம்நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்டவன். தமிழகத்தையும்,வடஇந்தியாவையும் தன்குடைக்கீழ்க் கொணர்ந்தான். தமிழ் மூவேந்தரையும்முறியடித்தான். இதுவரைக் கேள்விப்படாத வரலாற்று ஆளுமை!.
    • பிராகிருதத்தில் காணப்படும் பல இராமயணங்களுள் பழமையானது விமலசூரிஎன்பார் எழுதிய பௌமசரியம் ( தமிழில் -பதுமசரிதம்). இச்சரிதத்தில் இராமன்,இராவணன் என இருவருமே சமணராகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

    இப்பதிவையும் நீலன் அவர்களின் பின்னூட்டங்களையும் படிக்க ஆரம்பித்த பிறகு தொல் சமயங்கள் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளமிருக்கின்றன என்ற உண்மை எனக்கு உறைக்கிறது. மிகவும் ஆழமாகத் தெரிந்துகொள்ளாவிட்டாலும், அடிப்படைக் கொள்கைகளை அறிந்து கொண்டேன் என்பதில் எனக்குத் திருப்தி. உங்களுக்கும் நீலன் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகுக!

    தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      மதிப்பிற்குரிய நீலன் அவர்களின் பின்னூட்டங்கள் மிகச் செறிவுள்ளவை என்பதில் சற்றும் ஐயமில்லை.

      இதுபோன்ற ஆழமான பின்னூட்டங்களை நேரமெடுத்து என்தளத்தில் பதிந்துபோவது நானுற்ற பேறு.

      படிக்கும் பொழுது குறிப்பெடுத்துக் கொள்ளும் வழக்கம் என் சிறுவயதில் இருந்து இருக்கிறது.

      அப்படிப்பட்ட ஒரு குறிப்பொன்றை இப்பதிவிற்கு நானெழுதியதுபோல இருந்தது.

      தங்களின் வாசிப்பிற்கும் அவ்வனுபவங்களை அறியத் தருகின்றமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. அப்பாடா... ஒருவழியாய் படித்து முடித்துவிட்டேன்.
    எவ்வளவு தகவல்கள்.
    பிரமிக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நேரமொதுக்கிப் படித்துக் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  7. இரண்டு பகுதிகளாக வெளியிட்டிருக்கலாமோ!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஸ்ரீ..!

      ஆனால் எழுத இன்னும் கிடக்கிறதே..!

      சமணத்தின் இறுதியாகவும் ஆசீவகத்தின் தொடக்கமாகவும் இருக்கட்டுமே என எண்ணி இப்பதிவினைத் தொகுத்தேன்.

      இருபதிவுகளாக வெளியிட்டிருக்கலாம்தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. மிகவும் ஆழமான பதிவும் அர்த்தபூர்வமான பின்னூட்டங்களும்... சமணம் குறித்த பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. புரியாத சிலவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  9. ஒரு எழுத்தாளரைப் படிக்கும் போது எழுதுவது பற்றி அவருடைய கருத்தும் சொல்லி இருக்க வேண்டியது அவரது தார்மீகக் கடமை என் நினைக்கிறேன் அல்லது கருத்திடத் தயங்கி இருக்கிறீர்களோ என்னும்சந்தேகமும் எழுகிறது உங்களைச் சந்தித்தவன் என்பதாலும் உங்களைப் பற்றியாரும் எந்த ஒரு முடிவுக்கும் வரக்கூடாது என்பதில் திண்ணமாக இருப்பதாலும் அதை நான் பெரிது படுத்தவில்லை விஷயங்களைத் தேடுபவருக்கு எங்கும் கிடைக்கும் நீங்கள் எழுதும்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் வாசகர்கள் விரும்புவார்கள் நினைத்ததைப்பதிவது என் இயல்பு/. யாரையும் நோகடிக்கும் எண்ணம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஜி.எம்.பி சார்.

      ஒரு படைப்பு என்னும் போது அதுபற்றி வாசிப்பவன் தன் கருத்தைத் தெரிவிப்பதில் தடையில்லை.

      ஆனால், இங்குச் சமயம் பற்றிய பதிவுகள் என்பதால், இது சரி அல்லது தவறு என்று சொல்வது, அக்குறிப்பிட்ட சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கு உகந்ததாய் இராது.

      இப்பதிவுகளை நான் எழுத எடுத்துக் கொண்டதன் நோக்கம், சமயம் பற்றிய திறனாய்வு அன்று. அது பற்றிய சிறு அறிமுகமே!

      அதில் நான் புகுத்தும் எனது மாற்றுக் கருத்துக்கள் அக்கொள்கையைப் பின்பற்றுபவர்களுக்கு நிச்சயம் உவப்பாய் இராது.

      இத்தொடர்பதிவுளுள் ஒன்றிற்குச் சமணசமயத்தவர் ஒருவரின் பின்னூட்டம் இருந்தது.

      எனது பதிவுகளில் நான் இது பற்றிய சர்ச்சைகளை விரும்பவில்லை என்பதால்தான் என்னுடைய கருத்தைக் கூறுவதைத் தவிர்த்தேன்.

      இவை நான் விரும்பித் தேடியவை.

      என்னைப் போன்ற தேடல் உடையவர்க்குப் பயன்படும் என்றவகையில் நான் தொகுத்த குறிப்புகளைக் கூடிய வரையில் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் இலக்கு.

      உங்களையும் உங்கள் மனத்தினையும் ஓரளவிற்கு நான் அறிவேன்.

      என் ஆரம்ப நாட்களில் உங்கள் பின்னூட்டங்களை ஒரு திடுக்கிடலுடன் பார்த்ததுண்டு.

      பின்பு நம்மால் முடியாததை இவர் செய்கிறாரே என்ற வியப்பு.

      இப்பொழுதெல்லாம் உங்கள் பின்னூட்டமும் என் ரசனைக்குகந்ததாகவே மாறிவிட்டது.

      முந்தைய பதிவொன்றில் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்பதாய் நினைவு.

      நீங்கள் என்னை நோகடித்ததாக ஒருபோதும் நினைக்கவில்லை.

      உங்கள் வருகையும் வெளிப்படையான கருத்தும் எப்பொழுதும் வேண்டப்பெறுவது.

      நன்றி.

      Delete
  10. ஆகா!... ஆகா!... ஆகா!... என்ன சொல்ல! ஏது சொல்ல! புதிதாகப் பார்வை கிடைக்கப் பெற்ற ஒருவன் எடுத்த எடுப்பிலேயே யானையைப் பார்த்தது போன்ற உணர்வு! அலையலையாய்ச் செய்திகள்! மாந்தி மகிழ்கிறேன்! மிகுந்த நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களது தொடர்வருகையும் தரும் ஊக்கமும் யாரையும் நன்கு எழுதிடச் செய்யும்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  11. வலைப்பக்க எழுத்தை விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் செய்யும் சிலரிடையில், உங்கள் பதிவுகள் பாடப்புத்தகங்களாகத் திகழ்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படுகிறது. பாடநூல்களைப் படிக்கக் கடமைப் பட்டவர்கள் மட்டுமே படிப்பார்கள். எனவே, பார்வையாளர் குறைவு பற்றிய தகவலைப் புறந்தள்ளி காத்திரமான செய்திகளுக்காகக் காத்திருப்போருக்காக நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் விஜூ. “எனக்குச் சில தயக்கங்கள் இருந்தன.
    கூறப்போகும் சமயக்கருத்துக்களுள் ஏதேனும் ஒன்றில் எனது சார்பு நிலை அல்லது எதிர்ப்பு நிலை வெளிப்படுமா?” என்னும் தங்கள் வரிகளில் உள்ள தயக்கம் வேண்டியதில்லை. உண்மையில் நடுநிலை என்று ஒன்றில்லை அல்லவா? அவரவருக்கும் ஒரு சார்புநிலை உறுதியாக இருக்கத்தான் செய்யும் அதை வெளிப்படுத்தும்போது, மற்றவர் கருத்துக்கும் தரும் முக்கியத்துவம் தங்களிடம் வேண்டிய அளவு இருக்கிறது. அதிலும் இதுபோலும் சமயங்கள் பற்றிய ஆய்வில் அது தவிர்க்க இயலாதது. நம் தாத்தன் வள்ளுவனும் தனது சமணக் கருத்துகளை ஆங்காங்கே தெளித்துவிட்டுத்தானே போயிருக்கிறான்? எனவே உங்கள் பதிவுகள் கூட்டங்களின் பார்வையாளர்களுக்கானவை அல்ல, புத்தகங்களைப் படிப்பவர்களுக்கானவை என்னும் தெளிவோடு தொடருங்கள்.

    கூறப்போகும் சமயக்கருத்துக்களுள் ஏதேனும் ஒன்றில் எனது சார்பு நிலை அல்லது எதிர்ப்பு நிலை வெளிப்படுமா?

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் விஜூ. எனது முந்திய பின்னூட்டத்தின் இரண்டு வரிகள் உங்கள் பதிவில் வெட்டிச் சேர்க்க வைத்திருந்தவை (கட் & பேஸட்) அவை மீளவும் வந்துவிட்டன. தவறாக எண்ண வேண்டாம்.

      Delete
    2. ஐயா வணக்கம்.

      என்போன்றோருக்குத் தாங்கள் தரும் ஊக்கம் மிகப்பெரிது.

      என் பதிவு பாடப்புத்தகங்கள் என்பதைப் பாராட்டுதலுக்காக நீங்கள் சொன்னாலும் இன்னும் இப்பதிவுகளில் நான் செலுத்த வேண்டிய கவனமும் நுண்ணோக்கும் செலுத்தச் சொன்ன வார்த்தைகள் எனவே நான் கருதுகிறேன்.

      எனக்குச் சில தயக்கங்கள் இருந்தன இருக்கின்றன என நான் சொன்னது, இப்பதிவுகள் நம் தொல்சமயங்கள் குறித்த அறிமுகமாக இருக்க வேண்டியன என்ற நிலைமாறி அது பற்றிய திறனாய்வாக விமர்சனமாக விவாதப்பொருளாக மாறிவிடக் கூடாது என்ற பொருளில்தான் ஐயா.

      வாசிப்பவர்களுக்குப் புலப்படும் இது சரி இது தவறென்று. அல்லது மேலாய்வுக்காக அவர்கள் அது குறித்து இன்னும் ஆழமாகப் படிக்கத் தொடங்கலாம்.
      தேவையற்றது எனப் புறந்தள்ளலாம்.

      என் கருத்து இதில் வேண்டாம் எனக் கருதியது, விவாதங்களைத் தவிர்ப்பதற்காகத்தான்.

      அது படிக்கவும் பதிவிடவும் ஆன நேரத்தைச் சுருக்கித் தன் முனைப்புக் கொள்ளச் செய்யும்.

      வள்ளுவம் பற்றிய தங்களின் வரையறை நுட்பமானது.

      பார்வையாளர்கள் குறித்து ஆதங்கம் இருப்பது உண்மைதான்.

      இருப்பினும் இதைத் தொடர்ந்து படிக்கும் ஒருவர் இருப்பினும் அவர்க்காக எழுதுவேன் என்ற உறுதியோடு இருக்கிறேன்.

      பணிக்கிடையில் தங்களின் வரவும் கருத்தளிப்பும் வழிநடத்தலும் மனதிற்கும் புத்தலைகளை எழுப்புகிறது.

      மிக்க நன்றி.

      Delete
  12. முதலில் தங்கள் வகுப்பிற்குத் தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.

    வியந்து, வாய் பிளந்து நிற்கிறோம். என்ன சொல்ல என்று தெரியாத நிலையில். அத்தனைக் கருத்துகள். இதுவரை அறிந்திராத கருத்துகள். ஆர்வம் தூண்டும் கருத்துகள். ஆழமான கருத்துகள். பல முறை வாசிக்க வேண்டும். பதிவில் சொல்லப்பட்டிருக்கும் பின்னூட்டக் கருத்துகள் நீலன் மற்றும் உங்கள் கருத்துகளுள் ஒரு சில ஆங்காங்கே வாசித்திருந்தாலும், எல்லாம் இங்கு ஒருமித்து வாசிக்கும் போது, இதுவரை சமயம் பற்றி இருந்தக் கருத்துகள் பல தற்போது ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்துகின்றன என்றும் சொல்லலாம். என்றாலும் மிகவும் கனமான பாடம் தான்!!!!

    திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சிலர் சொல்லுவதும் அவர் கருத்துகள் சமணத்துடன் ஒத்திருப்பதால் என்பதையும் இங்கு மீண்டும் தெரிந்து கொள்ள உதவியது தங்கள் பதிவு.

    மேலும் தெரிந்து கொள்ள ஆவலுடன் தொடர்கிறோம். தங்களின் அடுத்த பதிவிற்கு இதோ....

    ReplyDelete
  13. தமிழில் சமண பௌத்த தாக்கத்தைப் பற்றி ஓரளவு படித்திருக்கிறேன், ஆசிவகம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆழமான கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் இப்பதிவில் படித்தேன்.

    ReplyDelete