Saturday, 2 January 2016

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ; பகுதி 1




அவள் இடையர் குலத்தைச் சார்ந்தவள். அதென்ன இடையர் குலம்? தமிழ் நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பிரிக்கப்பட்ட போது, குறிஞ்சி நிலமாகிய காட்டிற்கும் மருதநிலமான வயல்வெளிக்கும் இடைப்பட்டிருந்த காடுகளால் ஆன நிலமான முல்லை இடைநிலம் என அழைக்கப்பட்டது. அந்த இடைநிலத்தில் வாழ்ந்ததனால் அவர் குலம் இடையர் குலம் எனப்பட்டது.

அவள் ஒருவனை விரும்புகிறாள்.

அவர்கள் குல மரபுப்படி அவளை மணம் புரிய வேண்டுமானால் ஊர்மக்கள் மத்தியில் அவர்கள் வளர்க்கும் காளைகளில் ஒன்றை அடக்கியாக வேண்டும்.

அதற்குரிய நேரம் வந்துவிட்டது.

கோடைகாலம் முடிந்து மழை காலம் தொடங்கியதன் அறிகுறியாக வறண்ட நிலங்களின் மேல் நீர் தெளித்துப் போகின்றன மேகங்கள்.

ஏறு தழுவலுக்கான தொழு ( ஏறு தழுவல் நடைபெறும் களத்திற்குத்தான் தொழு என்று பெயர். ) ஆயத்தமாக்கப்படுகிறது.

தம் வலிமைமிக்கக் காளைகளோடு, அதைத் தழுவி அடக்கும் வீரனுக்குத் தம் மகளைக் கொடுப்பதற்குத் திரண்டிருந்த ஆயர் கூட்டத்தில், அவளது பெற்றோர் மற்றும் உறவினர்களோடு அவளும் நிற்கிறாள்.

ஏறுதழுவும் வீரர்க் கூட்டத்தினிடையே அவன் எங்கிருக்கிறான் என அவள் கண்கள் தேடித் தவிக்கின்றன.

அங்கே தங்கள் வீரத்தைக் காட்டித் தம் மனம் கவர் பெண்களை மணம் முடிக்க விரும்புகின்ற வீரர் கூட்டம்.

அவர்கள், ஏறு தழுவும் முன்பாகத் தங்கள் எண்ணம் நிறைவேற வேண்டுமென ஆல மரத்தின் கீழும், மரா மரத்தின் கீழும், நீர்த்துறையின் கீழும் வீற்றிருக்கும் சிறு தெய்வங்களை வணங்கி வந்திருக்கிறார்கள்.

அவர்களுள் சிலர் வெண்மை நிறமுடைய பிடவ மலர்களால் ஆன மாலையைக்  கழுத்தில் அணிந்துள்ளனர்.

சிலர்   நீல நிறமுடைய காயாம்பூக்களால் ஆன மாலையை அணிந்துள்ளனர்.

சிலர் சிவந்த நிறமுடைய காந்தள் பூக்களால் ஆன மாலையை அணிந்துள்ளனர்.

பாதுகாப்பான பரண்களின் மேலே இந்த ஏறுதழுவுதலைப் பார்க்க ஒரு கூட்டம் நின்று கொண்டிருக்கிறது.

விளையாட்டுத் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பறை ஒலி முழங்குகிறது.

மாடுகளுக்கு இடப்படும் நறுமணப்புகை களமெங்கும் பரவுகிறது.

இதோ ஏறுகளைத் தொழுவில் இறக்கிவிடப் போகிறார்கள் !” என்கிறாள் தோழி.

“இவளுக்கு உரிய  காளை இது. இதனை அடக்க விரும்புபவர்கள் வருக.

இவளுக்கு உரிய காளை இது. இதனை அடக்க விரும்புபவர்கள் ஆயத்தமாகுக.”

என் வர்ணனைகள் கேட்கின்றன.

அக்காளைகளின் அருகில் அக்காளைகளை அடக்கும் வீரனை மணமுடிக்கக் காத்திருக்கும் பெண்கள் நிற்கிறார்கள்.

பிறர் முன்னே நின்று  வெல்ல முடியாத சிவனின் குந்தாலிப் படைபோலக் கூரிய கொம்புகளை உடைய காளை ஒன்று  தொழுவில் பாய்கிறது.

அங்கு, மழை முழக்கம் போலவும் இடியோசை போலவும் ஒலி எழுகிறது.

அவள் பார்வை தொழுவில் இறக்கிவிடப்படும் ஏற்றினை நோக்கித் திரும்புகிறது.

தன் கைகளில் மண்ணைப் பிசைந்தவாறு முன்னேறும் காளையை எதிர்கொள்ள அம்மைதானத்தின் நடுவே முன்னேறுகிறான் வீரனொருவன்…!

புகையோடு  காளை கட்டவிழ்த்து விடப்பட்டதால் எழுந்த மண்புழுதியும் களம் மறைத்து எழுகிறது.

அடுத்து என்ன நடக்கப் போகிறது……….?  
             
                               (தயவு செய்து கொஞ்சம் பொறுங்கள்.) 
 
கலித்தொகையின் முல்லைக் கலியின் முதற்பாடலின் தொடக்கத்தில் உள்ள சிறு பகுதி இது. கலித்தொகைப் பாடல்கள்  ஒவ்வொன்றும் ஒரு நாடகக் காட்சியினை ஒத்தவை.

பிற சங்கப் பாடல்களை ( எட்டுத்தொகை ) ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிக நீண்டவை.

அதே நேரம் மிகச் சுவையானவை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வோர் கதையினைச் சொல்லும். நகையும் அழுகையும், வியப்பும் வேதனையும் கொண்ட கதைகள்தான் ஒவ்வொன்றுமே.

அவற்றின் ஊடுசரடாகக் கவித்துவத்தின் கைவண்ணம்.

இது, இவ்வலைப்பூவில் இன்னும்  ஒரு தொடர்பதிவு.

இக்கலித்தொகை தொடர்பதிவின் ஒவ்வொரு பதிவையுமே மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன்.  முதல் பகுதியை எல்லார்க்குமான பொதுவாசிப்பிற்கு உரியதாய் அமைக்க நினைக்கிறேன். நீங்கள் இப்பதிவின் தொடக்கத்தில் வாசித்தது அதன் ஒருபகுதிதான். அது பாடலை விரும்பிப் படிக்க உதவும் சற்றுக் கூடுதல் புனைவுகளுடன் விளக்குதல், பாடல் வரிகளைத் தருதல், அதன் சுருக்கமான பொருளைத் தருதல் என்ற வகையில் அமையும்.  இதன் தொடர்ச்சியாகப் பாடல்வரிகளும் அதன் பொருளும் தரப்பட்டிருப்பது இம்முதற்பகுதியொடு சேர்ந்ததே!

இரண்டாவது பகுதி,

பாடலின் நயங்கள் கவிதைக்குரிய கூறுகள் , படைப்பாளனின் நுட்பம்,  உரையாசிரியரின் உரை வன்மை போன்றவற்றை விளக்குவதாய் இருக்கும். சங்க இலக்கியங்களை அணுக நினைப்போர்க்கும், இன்றைய நவீன இலக்கியப் படைப்பாளிகளுக்கும் நம் மரபில் கையாளப்பட்ட உத்திகள், நடை, போன்றவற்றை அறிய உதவுவதாக இப்பகுதி அமையும்.

மூன்றாம் பகுதி,

பாடலில் உள்ள அருஞ்சொற்களின் பொருள், இதற்குள்ள பழைய உரையாகிய நச்சினார்க்கினியர் உரை. அது பற்றிய என் புரிதல், புரியாமை, மேலாய்விற்கான இடங்கள் என்பவை குறிப்பிடப்படும்.  அதனால் இப்பகுதியில் எனது கருத்தாகக் கூறப்படும் எவையும் முடிந்த முடிபல்ல என்பதும்என் புரிதலின் அடிப்படையிலேயே அமைந்தது என்பதும் மேலும் தெளிவுகள் வேண்டப்பெறும் இடத்து அது குறித்து அறிந்தவர்கள் அவை குறித்த செய்திகளைப் பகிர்ந்து உதவ வேண்டும் என்பதும் இப்பதிவோடு ஒட்டிய எனது வேண்டுதல்கள்.

நீண்ட பதிவொன்றில் அவரவர் வசதிக்கேற்ப அவ்வப்பகுதியைப் படித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே இப்படிப் பிரித்து அமைக்கிறேன். மற்றபடி முழுமையாய்த் தொடர்வீர்கள் என்றால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன?
---------------------------------------------------------------------------------------------------


   I. பாடலும் பொருளும்

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
மணி புரை உருவின காயாவும்; பிறவும்;
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபுடன் ஒருங்கு
அவ்வழி,முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ

=    கார் காலம் தோன்றுவதற்கு அறிகுறியாய்ப்பெய்த முதல் மழையால், மண் நனைந்து அதுவரை ஈரமின்மையால் வாடிய முட்புதற் செடியான பிடவத்தில் பூத்த பூக்களையும், நிமிர்ந்து நிற்கமுடியாமல் தள்ளாடும் கள்ளைப் பருகியவனைப்போல ஆடி, துடுப்புப் போன்ற உறுப்புடன், தீக்கடைக்கோலில் இருந்து புறப்படும் தீயைப் போல மலர்கின்ற இதழ்களை உடைய கொடியாகிய காந்தளின் பூக்களையும், மணிகளைப் போன்ற தோற்றமுடைய காயா மலர்களையும் பிற மலர்களையும் அணிந்து கொண்டு ஏறு தழுவும் வீரர்கள் காளைகளை எதிர்கொண்டு தம் வலிமையைக் காட்டுவதற்கு அத் தொழுவின் ஒரு புறத்தில் இருக்கின்றனர்.

காளையை அடக்க இருப்பவர்கள் வருக வருக என்ற அழைப்பினிடையே,
எவருமே எதிர்நிற்க முடியாத சிவபெருமானின் கணிச்சி என்னும் ஆயுதத்தைப் போலக் கொம்பு சீவி விடப்பட்ட ஏறொன்றினை ஆயர்கள் அவிழ்த்து விட்டனர்.

ஏறுகளுக்கு இடப்பட்ட நறுமணப் புகையாலும், ஏற்றின் பாய்ச்சலால் ஏற்பட்ட மண் புழுதியாலும் களம் மறைகிறது.

அங்கு, மழையின் ஓசை போன்ற ஆரவாரம் எழுந்தது . இடியின் முழக்கம் போன்ற ஓசை கேட்டது. வருகின்ற ஏற்றினை எதிர்கொள்வதற்காக, நீர்த்துறையின் கீழும்ஆலமரத்தின் கீழும், மராமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி வந்த வீரர்கள் நிற்கின்றனர்.

மனம் பதைத்த பெண்கள் கூடி இருக்கின்றனர்வீரருள் ஒருவன் சீற்றத்துடன் வரும் காளையை எதிர்கொள்ள முன்னேறுகிறான்.




II) நயங்கள்.

முதலில் இந்தப் படங்களைப் பார்த்துவிடுங்கள்வீரர்கள்  இந்தப் பூக்களால் ஆன மாலையைத்தான் அணிந்திருந்தனர்.

பிடவம்.



இந்தப் பிடவம் பூத்தல் என்பது கார் காலம் தோன்றுவதற்கான ஓர் அறிகுறி. இக்கருத்தினைத்தான்  இப்பாடலின் முதல் இரு அடிகள் சொல்கின்றன.

முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவம்

என்பது இப்பிடவத்திற்கான அடை.

வெயிற்காலத்தில் காய்ந்து பின் மழை காலத்தில் தளிர்த்த முட்களை உடைய பிடவம் என்பது இதன் பொருள். இது முல்லை நிலத்திற்கு உரிய தாவரம்.

வானியல் அறிவு  மட்டுன்று. தாவரங்களைக் கொண்டும் பருவ நிலைகளைக் கணிக்கும் அறிவு பண்டைத் தமிழர்க்கு இருந்து என்பதற்கான சான்று இது. இதைப் போன்ற தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு பருவ காலங்களைக் கணித்தலைப் பதிவு செய்திருக்கின்றன நம் சங்க இலக்கியங்கள்.

காந்தள்.


இம்மலரை உங்களில்  பலரும் பார்த்திருக்கலாம்இதற்குக் கொடுக்கப்பட்ட அடைமொழியைப் பாருங்கள்.

களிபட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பீன்று
ஞெலிபுடன் நிரைத்த ஞெகிழிதழ்க் கொடல்

‘நன்றாக மது அருந்தியவனைப் போலத் தடுமாறிக் கீழே விழுவதுபோல வளைகின்ற காந்தள்.’

இது இத்தாவரம்  பற்றிய அடை.

திருநெல்வேலி மாவட்டத்தில் சுவர்முட்டி என்கிற நாட்டுச்சாராய வகை உண்டு. குடித்தவர்களால் நகர முடியாது. அவர்கள் ஏதேனும் ஒரு சுவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டுதான் நிற்க வேண்டியிருக்கும். அதனால் அதனைச் சுவர் முட்டி என்கிறார்கள்.

காந்தள் கொடிக்குத் தண்டின் பலம் இல்லை.

எனவே சிறு காற்றிற்கும் அது தள்ளாடக்கூடியது.

சாயக்கூடியது.

அருகில் உள்ள மரங்களைப் பற்றிப்பிடித்து வளரும் நிலையுள்ளது.

கவிஞன் சுவர்முட்டி போல அன்று குடித்துவிட்டுத் தள்ளாடிச் சாய்ந்த குடிமகனைப் பார்த்த கண்களால் இக்காந்தளைப் பார்த்த போது, இதென்ன  மரமுட்டி என நினைத்திருப்பான் போலும்.

காந்தள் அவன் கண்களுக்குக் குடித்துத் தள்ளாடி வளைந்து மரத்தைப் பற்றி நிற்கும் குடிகாரனாய்த் தோன்றுகிறது.

காந்தளுக்கான உவமை இன்னும் முடியவில்லை.

அடுத்து மொட்டு.

அது முதலில் துடுப்பைப் போல இருக்கிறது. ( படத்தில் , மலருக்குக் கீழே இருக்கிறது பாருங்கள்.)

பின்பு, தீயைக் கடைகின்ற ஞெலிகோலாய் (தீ உண்டாக்கக் கடையும் கோல்) மாறுகிறது

ஞெலிகோல்கள் கடையத் தீ சிறுகத் திரண்டு பின் பரவி மேலெழுகிறது.

முதலில் மஞ்சள். பின் மஞ்சள் கலந்த செம்மை. பின் கருஞ்செம்மை.

இதோ காந்தள் பூத்துவிட்டது.

ஞெலிபுடன் நிரைத்த ஞெகிழிதழ்க் கொடல்”

என்கிறான் கவிஞன்.
என்ன ஒரு கற்பனை.?!

அடுத்த மலர்,

காயா.

படத்தைப் பாருங்கள்.



இதற்குக் கொடுக்கப்பட்ட அடை,

மணிபுரை உருவின காயா.”

நச்சினார்க்கினியர் “நீல மணியை ஒக்கும் நிறத்தினை உடைய காயாம்பூக்களும்என்பார்.

காயா என்னும் பெயர் காரணப்பெயர். இம்மரம் காய்ப்பது இல்லை. எனவே இதனைக் காயா என்கின்றனர். முல்லை நிலத்திற்குச் சிறப்புப் பெற்ற மலர் இதனுடையது. இம்மலரின் நிறம் முல்லை தெய்வமாகிய திருமாலின் நிறத்திற்கு ஒப்பிடப்படும் சிறப்புடையது.

முல்லையில் வேறு பல மலர்களும் பூக்கும் எனினும் இம்மூன்று மலர்களையும், இப்புலவர் தேர்ந்து கொண்டமைக்கு ஏதேனும் சிறப்புக் காரணங்கள் இருக்கிறதா?

கொஞ்சம் யோசியுங்கள்.

புலப்பட்டால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.!

என் கருத்தை நாளை இப்பதிவின் தொடர்ச்சியாகச் சேர்க்கிறேன்.

இன்னும் ஒரு நாள் பொறுங்கள் நண்பர்களே!
தமிழார்வலர்களின் கருத்திற்கான காத்திருப்பு.


இதே பதிவில் இன்னும் கூடுதல் செய்திகள் இதன் தொடர்ச்சியாக நாளை வெளிவரும்.

இதுதான் நான் சொன்ன நுட்பம்.

இம்மூன்று மலர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஒரு நுட்பம் இருப்பதாக வாசிப்பில் பட்டது. இது என் பார்வைதான். உரையாசிரியர்கள் எவரும் இது குறித்துக் குறிப்பிடவில்லை.

இங்குக் குறிப்பிடப்படும் பிடவம் என்பது புதர்வகையைச் சேர்ந்த செடி. 
(முட்புதற் பிடவம்)

காந்தள் என்பது கொடி வகையைச் சார்ந்தது.

காயா என்பது மரவகையைச் சார்ந்தது.

ஆகவே அங்கு ஏறுதழுவ நின்ற வீரர்கள், தம் சூழலின் எல்லா வகையான தாவரங்களில் இருந்தும்  பூக்களைத் தேர்ந்தெடுத்து அணிந்திருக்கிறார்கள். புலவன் வகைக்கொன்றாக அதை எடுத்து நமக்களிக்கிறான்.

அந்த வரிசை கூட, செடி, கொடி , மரம் என்று அமைந்திருப்பதைப் பாருங்கள்.

ஒவ்வொரு  மலரும், குறிப்பிட்ட குடியின், இனக்குழுவின் தனித்த அடையாளமாகக் கொள்ளப்பட்டிருக்கலாம். ஆயர் என்பது பொதுவாக முல்லை நிலத்தில் வாழும் அனைவரையும் குறித்தாலும் அவர்களுக்குள்ளும்  வேறுபாடும் உயர்வு தாழ்வும் இருந்திருக்கின்றது. அவை பற்றி இத் தொடர் பதிவினூடாக நாம் பார்க்க இருக்கிறோம். அப்பிரிவுகளுக்கு அடையாளமாகக்கூட அவர்கள் தனித்த மாலையைச் சூடி இருக்கலாம். இது பற்றி இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.

அடுத்து,

காளை அவிழ்த்துவிடப் படும்போது இருவிதமான ஓசைகள் எழும்புகின்றன.

ஒன்று முழக்கம். இரண்டாவது இடியோசை.

பாடல் இதனை,

அவ்வழி,முழக்கு எனஇடி என,”

எனக் குறிப்பிடுகிறது.

இதில் முழக்கம் என்பது, பார்வையாளர்களிடம் இருந்து கிளம்பும் ஓசைக்கும் இடியோசை என்பது, களமிறங்கிய காளையின் ஓட்டத்தினால் ஏற்படும் ஓசைக்கும் பொருத்தமானதாகக் கொள்ளலாம். இதுவும் என்பார்வையே. உரையில் சொல்லப்பட்டதன்று.

இத்துடன் நீளம் கருதி, இந்தத் தொடர்பதிவின் முதற்பகுதியை நிறைவு செய்கிறேன்.

இப்பகுதிக்குரிய நச்சினார்க்கினியரின் உரை, அதற்கான விளக்கம், சொற்பொருள் ஆராய்ச்சி, கலித்தொகை பற்றி நாம் அறிந்திருக்க வேண்டிய அத்தியாவசியமான சில குறிப்புகள், திருமண வகைகள் பற்றி அடுத்த பதிவில்.


இணைந்திருங்கள்.

பட உதவி.

நன்றி.

1) http://i1189.photobucket.com/albums/z437/nisha153/70358132.jpg
2) https://images-blogger-opensocial.googleusercontent.com/
3) https://upload.wikimedia.org/wikipedia/  
4) https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

48 comments:

  1. ஞெலிபுடன், ஞெகிழிதழ் போன்ற வார்த்தைகளை இப்போதுதான் கேள்வியுறுகிறேன். என்ன அர்த்தம்? நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை நானும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் தமிழின் சம்பந்தமாக என்னென்ன புத்தகங்கள் வைத்திருக்கிறீர்கள் என்னும் எண்ணம் மனதுக்குள் ஓடுகிறது.

    அருமை. அருமை. தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      உங்களது வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

      உங்களின் கேள்விக்கான பதிலை

      http://manamkondapuram.blogspot.com/2016/01/11.html

      என்னும் பதிவில் அளித்திருக்கிறேன்.

      கண்டு கருத்திட வேண்டுகிறேன்.

      தங்களின் வருகைக்கம் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  2. அருமையான பதிவு.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் அவர்களே!

      Delete
  3. வெவ்வேறு பருவங்களில் பூக்கின்ற பூக்களாய் இருக்குமென நினைக்கிறேன் ,காந்தள் அழகு :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பகவானே!

      பதில் அளித்திருக்கிறேன்.

      காந்தள் ரசிகராய் மாறிவிட்டீர்களோ?

      நானும் தான்.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. பாடலும் பொருளும், நயங்கள் என்று அழகாக பகுதி பகுதியாக நயத்தோடு புரிய வைத்துள்ளீர்கள். முழுவதையும் வாசித்தேன் ரசித்து. மலர்களுக்கு உரிய உவமானங்களையும் ரொம்பவே ரசித்தேன். காந்தளின் உவமை.....ம். ம் கவிஞரின் கற்பனையை மெச்ச வார்த்தைகளே இல்லை. நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போன்ற தங்களின் வர்ணனையும் அபாரம்.

    சிவனின் குந்தாலிப் படை ,கணிச்சி என்னும் ஆயுதம் இவை புதிய சொற்கள் எதுவாக இருக்கும் என்று கணிக்கக் கூட முடியவில்லை. ம்..ம் ஞெலிபுடன், ஞெகிழிதழ் இதுவும் புதிது தான். மலர்களின் சிறப்பை மேலும் கேட்க ஆவலாக உள்ளேன்.

    பிடவ மலர் ஈழத்தில் பிச்சி என்று அழைக்கபடும் இவை சிவப்பு வெள்ளை நிறத்தில் கண்டிருக்கிறேன். இங்கு கனடாவிலும் பல நிறங்களில் கண்டிருக்கிறேன். ஆனால் இரண்டும் ஒன்றாக இருக்குமா? அல்லது ஒரே மாதிரியான வெவ்வேறு மலர்களா என்பது சரியாகத் தெரியவில்லை. இணையத்தில் தேடிப் பார்த்தேன். ஆனால் புலப்படவில்லை.
    மிக அருமையான பதிவுக்கு நன்றி! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மை

      உங்களின் வருகையும் பதிவினொடு தொடர்புடைய நீண்ட பின்னூட்டமும் கண்டு மகிழ்ச்சி.
      கணிச்சி சிவனின் ஆயுதமாகச் சொல்லப்படுவது. குந்தாலி, மழுவென்பன பிற.
      ஞெலிபு, ஞெகிழிதழ் போன்ற சொற்களின் விளக்கத்திற்கு

      http://manamkondapuram.blogspot.com/2016/01/11.html

      காண வேண்டுகிறேன்.

      விடையை அளித்திருக்கிறேன்.

      உங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.

      Delete
  5. அருமையான தகவல்கள். மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்கின்றமைக்கும் நன்றி.

      Delete
  6. அன்புள்ள அய்யா,

    கற்றறிந்தார் ஏத்தும் கலிப்பாடலையும் பொருளையும் நயங்களையும் படங்களும் நயம்பட விளக்குனீர்கள்.

    அன்றைக்கு ‘விளையாட்டு தொடங்குவதற்கு அறிகுறியாகப் பறை ஒலி முழங்குகிறது...’
    எங்கள் ஊரில் ‘ஜல்லிக்கட்டு’ தொடங்குவதற்கு முன்னால் கோவில் முதல் மணி அடிக்கப்படும்.நாட்டாண்மைக்காரர் இல்லத்திலிருந்து கன்னிப்பெண்கள் தண்ணீர் குடம் எடுத்து வருவார்கள். இரண்டாவாது மணி அடிக்கப்படுகின்ற பொழுது கோவில் வாசலில் அந்தப் பெண்கள் தண்ணீர் ஊற்றுவார்கள். மூன்றாவது மணி அடிக்கப்படுகின்ற பொழுது ‘ஜல்லிக்கட்டு’ தொடங்கும். இன்றைக்குக்கூடத்
    தொழுவத்தில் மாட்டின் கிட்டி அவிழ்க்கும் / வெட்டி விடும் பொழுது பறை கொட்டப்பட்டு மாடு வெளியே வருவதுதான் வாடிக்கை.

    மறவர் போர் தொடங்கும் போது நிகழ்வுக்கேற்ற அடையாளப் பூவைச் சூடுதல் அக்கால வழக்கம். அதுபோலவே ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. பிடவம் மலர் ஒரே நாளில் காடெல்லாம் பூத்து மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகக் கூடியது.
    காந்தள் மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும்; இவற்றை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது.
    காயா மலர் மகளிர் நெற்றியில் வைக்கும் பொட்டுப்போல் இருக்கக்கூடியது.

    ‘பூவே பூச்சூட வா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...’ என்பதற்காகத்தானோ...?
    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      “ கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்பது குறித்துத் தனிப்பதிவொன்றை இடவேண்டும் என்று நினைக்கிறேன்.

      ஜல்லிக்கட்டுக் குறித்து என்னைக் காட்டிலும் நீங்கள் நன்கு அறிவீர்கள் என்பதை அறிவேன்.

      பூக்கள் இனக்குழுக்களின், குடிகளின் தனித்த அடையாளங்களாகக் கொள்ளப்பட்டமைக்கான சாத்தியங்கள் உண்டு.

      மலர்களைக் குறித்த தங்களின் தகவல்களுக்கு நன்றி.

      மூன்று பூக்களைத் தெரிவு செய்தமை குறித்து எனக்குப்பட்டதைச் சொல்லி இருக்கிறேன்.

      இதற்குரிய நச்சினார்க்கினியரின் விளக்கத்தினை

      http://manamkondapuram.blogspot.com/2016/01/11.html

      என்னும் தளத்தில் இட்டிருக்கிறேன்.

      கண்டு கருத்திடுமாறு வேண்டுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  7. அடேங்கப்பா எவ்வளவு தகவல்கள்! பிரமிப்பூட்டுகின்றது! பிரித்துச் சொன்னாலும் எல்லாவற்றையும் அறிய ஆவல். சிறிய சந்தேகம். ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் ஞெ இது போன்று பாடல்களில் மட்டுமே வருமோ? உரைநடையில் இப்படி எழுதுவதுண்டா? இந்த எழுத்தை மெய், உயிர்மெய்யில் கண்டதுண்டு. அவ்வளவே. எங்கள் சந்தேகம் தங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கின்றதோ சகோ?!!!

    தொடர்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      கலித்தொகை பற்றி எழுத வேண்டுமென்ற ஆர்வம் நெடுநாட்களாக உண்டு.

      நிச்சயம் உங்களுக்கு வியப்பூட்டிப் போகும் செய்திகள் அதில் உண்டு.

      ஞ கரமும் நகரமாகத் திரிந்து ஆண்டுகள் பல கடந்தன.

      ஞண்டு - நண்டானது போல.

      ஞகரம் தன்னொலிப்பிழந்து நகரத்தோடு மயங்கியதுதான் இதற்குக் காரணம்.

      இன்று,

      ர - ற

      ந - ன

      போன்ற எழுத்துகள் உச்சரிப்பில் தம் ஒலிப்பிழந்து ஒன்றாய் உச்சரிக்கப்படுகின்றன.

      இது குறித்தெல்லாம் கவலை கொள்வார் நம்மிடையே குறைவு.

      எப்படிச் சொன்னால் என்ன

      புரிகிறதா இல்லையா என்ற மனநிலை ஒன்று போதும் தொன்மரபு கொண்ட ஒரு மொழி தொலைந்து போக.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. சங்ககால மலர்கள் அவற்றை அவர்கள் உருவகப்படுத்தியவிதம் என அருமையாக இருந்தது பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  9. அருமையான பகிர்வு ஐயா...
    அடுக்கடுக்காய் தகவல்கள்... அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பரிவையாரே!

      Delete
  10. எளிமையான அதே சமயம் காட்சியைக் கண்முன் கொண்டு வரும் விளக்கம். இந்த மலர்களை எதற்குத் தேர்ந்தெடுத்தார் புலவர்? ஹ்ம்ம்ம் நிறைய காரணங்கள் தோன்றினாலும் உங்கள் கருத்திற்கே காத்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்தும் உங்களது கருத்துகள் முக்கியமானவை.

      அறியத்தந்தால் எல்லார்க்கும் பயன்படுமல்லவா?

      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. வணக்கம் ஐயா,

    அருமையான தொகுப்பு, நன்னிமித்தமாக இம் மலர்களை அவர் ஆள்கிறார் என,,,,,

    ஒவ்வொரு மலரும் தனித்தனியாக ,,, சரி நீங்களே சொல்லுங்கள்.

    தொடருங்கள்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      உங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ஆம் ஐயா, தங்கள் பார்வை அருமை, அருமை நான் வேற நினைத்தேன். இந்த மண்டைக்குள் இருப்பது அவ்வளவே, நன்றி ஐயா, தொடருங்கள்.

      Delete
    2. நீங்கள் நினைத்ததையும் அறியத் தந்திருக்கலாமே பேராசிரியரே!

      நன்றி.

      Delete
  13. ஐயா!..

    இலக்கியப் பாடற் சுவையும் அதன் பொருட்சுவையும்
    அத்துடன் எனக்கும் புரியக்கூடியதாக நீங்கள் தரும்
    தெளிவான, விளக்கமான உங்கள் பதிவு என்னைக் கனவுலகிற்கே
    ஒரு திரைப்படக் காட்சி காணும் நிலைக்ககே கொண்டு சென்றுவிட்டது!

    நிறைய அறிகின்றேன்! ஒன்றுமே தெரியாமல் இவ்வளவுகாலமும்
    இருந்திருக்கின்றேன் என்ற உண்மை உங்கள் பதிவுகளால்
    எனக்குப் புலனாகிறது. அறிதலுக்காகத் தேடித்திரியாமல்
    அனைத்தையும் நீங்களே வெண்ணைபோல் திரட்டி எம்மிடம் தருகிறீர்கள்.
    உங்கள் பணியின் சிறப்பே தனி! மிக அருமை!
    தொடர்ந்து தாருங்கள் ஐயா! படித்து அறிந்திட மேலும் ஆவலுடையேன்.
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சகோ.

      ஆர்வம் ஒன்று போதும் . நாம் எதையும் கற்பதற்கு.

      உங்களிடம் அது இருக்கிறது.

      உங்களின் வருகைக்கும் நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  14. Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  15. தொடரின் ஆரம்பமே அமர்களமாய் இருக்கிறது. உண்மையிலேயே காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பலதகவல்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது.
    தொடர்கிறேன்.
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!

      தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  16. ஆகா!... ஆகா!... ஆகா!... ஐயா! தங்கள் பதிவு செய்யும் திறனும் படிப்போருக்கு ஆர்வமூட்டும் தங்கள் எழுத்தாற்றலும் எங்கேயோ சென்று கொண்டிருக்கின்றன! நான் மட்டும் தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தால், தமிழ் வளர்ச்சித்துறையின் அமைச்சராக உங்களைத்தான் பணியமர்த்தியிருப்பேன். அதன் பின் தமிழ் பற்றிக் கவலைப்பட எதுவுமே இருந்திருக்காது.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் பாராட்டுதல் அன்பின் மிகை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. ஞானப் பிரகாசம் அவர்கள் சொன்னதை வழிமொழிகிறேன்.

      Delete
  17. மிக நீண்ட பதிவு என்றாலும் விளக்கம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      Delete
  18. வணக்கம்!

    துள்ளும் மறங்காட்டும் சல்லிக்கட்[டு] ஆண்மையினை
    அள்ளும் பதிவிட்டே ஆட்கொண்டீர்! - வெல்லும்
    கலித்தொகைக் காட்சிகளைக் கண்டு களித்தேன்!
    இலை..தொகை ஈடாய் இதற்கு!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      இதற்கெனச் சொல்லும்முன் ஈந்தருளி வெண்பா
      விதவித மாயாக்கு வன்மை - பதமறிந்து
      தீட்டுரைகல் உள்ளம் தமிழ்த்தேன் அறிந்தின்பப்
      பாட்டரசே என்னும் படித்து.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  19. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    saamaaniyan.blogspot.ftr

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா.

      புத்தாண்டில் தங்கள் வருகையும் வாழ்த்தும் காண மகிழ்வு.

      பதிவு முன்பே கண்டும் தாமதமாகவே கருத்திட நேர்ந்தது.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்க்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துகள்.

      நன்றி.

      Delete
  20. ஆஹா! புத்தாண்டில் இனிப்பான செய்தி! கலித்தொகை தொடர் பதிவு வரப்போவதையறிந்து மிக்க மகிழ்ச்சி. எவ்வளவு விரிவாக எழுதினாலும் நான் ஒரு வரி விடாமல் வாசிப்பேன். பணிச்சுமை காரணமாய் என்னால் உடனுக்குடன் வாசிக்க இயலவில்லை. அதனால் தான் தாமதமாய்ப் பின்னூட்டம் எழுதுகிறேன். தவறாய் நினைக்கவேண்டாம். பூக்களின் படங்களையும் கொடுத்ததால் விளக்கம் நன்கு புரிகின்றது. சுவர் முட்டி, மரமுட்டி நல்ல நகைச்சுவை. மிகவும்ரசித்தேன். இந்தப்பூக்களின் தற்போதைய பெயர்களும் இவை தானா? காந்தள் பெயர் மாறவில்லை. இதனைக் கண்வலிக்கிழங்கு என்கிறார்கள். உங்கள் வாசிப்பு நு்ட்பம் பிரமிக்க வைக்கிறது. செடி, கொடி மரம் என்ற வரிசை என்பது எனக்குப் புலப்படவேயில்லை. நீங்கள் புரிந்து கொண்ட நுட்பத்தை எங்களுக்கும் விளக்குவதற்கு மிகவும் நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      உங்களைப் போல் வருகைதந்து ஊக்குவிப்பவர்கள் இருந்தால், யாரும் எவ்வளவும் எழுதலாமே!

      கலித்தொகை எழுத வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு.

      ஆனால் அதற்குரிய உழைப்போ முயற்சியோ ஒருசிறிதும் என்னிடம் இல்லை.

      இப்போது ஓரடி எடுத்து வைத்திருக்கிறேன்.

      இந்தப் பூக்களின் பெயர்கள் பகுதிக்கேற்றபடி அழைக்கப்படுகின்றன.

      இலக்கியத்தில் இவற்றின் பெயர் இதுதான்.

      காந்தளின் கிழங்கு நீங்கள் சொன்னது போல மருந்துவப் பயனுக்காகவே பயிரிடப்படுகிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ந்து வாசித்து ஊக்கப்படுத்துகின்றமைக்கும் நன்றி.

      Delete
  21. திரு ஜோசப் விஜு!

    தயவு செய்து இதை மின் மடலாக பாவித்து, இதில் உள்ளடங்கிய ராஜ நடராஜன் பற்றிய விலாசம்/தொர்பு எண் குறித்துக் கொள்ளுங்கள்
    ***************************

    அவர் தள்த்தில், அவருட்டைய கடைசிப்பதிவு தொடுப்பு இது.

    http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_30.html

    அங்கு சென்று பின்னூட்டங்களை வாசியுங்கள்! தொடர்புக்கு எண்கள் உள்ளன.


    ------------
    அவர் தளத்தில் வந்த பின்னூட்டங்கள் இவைகள்,

    selvaraju M said...
    Hello dears


    I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).
    Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)

    ----------

    ஜோதிஜி திருப்பூர் said...

    நந்தவனம்

    கோவை மற்றும் அவர் மாமாவுடன் பேசி விட்டேன். செய்தி உண்மை தான். நாளை அவர்கள் வீட்டுக்குச் செல்கிறேன். நாளை காலை ஆறு மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு உடல் வருகின்றது. தனிப்பட்ட தொடர்பு உள்ளவர். மிக மிக வருத்தமாக உள்ளது.

    உங்கள் ஃபேஸ்புக் முகவரி இருந்தால் இந்த மின் அஞ்சலில் பகிர்ந்து கொள்க.

    texlords@gmail.com

    -----------

    ஜோதிஜி திருப்பூர் said...

    நண்பர்களுக்கு

    இப்போது ராஜநடராஜன் இறுதி அஞ்சலிக்கூட்டத்தில் கலந்து கொண்டு மயானம் வரைக்கும் சென்று காரியங்கள் முடிந்த பிறகு திருப்பூர் வந்து சேர்ந்துள்ளேன். இது குறித்த விபரங்களை விரைவில் இதே தளத்தில் எழுதி வைக்கின்றேன்.

    ------------------

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் திரு ராஜநடராஜன் குறித்த செய்திகளைப் பகிர்ந்து போனதற்கும் மிக்க நன்றி ஐயா.

      இந்தக் குறிப்புகள் இல்லாவிட்டால் அவர் எழுத்துகளை நான் பார்க்கவே இயலாமற் போயிருக்கும்.

      மூத்த வலைப்பதிவர் ஒருவர் நம்மிடையே இல்லாத நிலையில் அவர் பற்றிய நல்லவிடயங்களை பகிர்ந்து ஒரு பதிவை நீங்கள் இட்டது அவருக்குச் செய்த உண்மையான அஞ்சலி.

      மிக்க நன்றி.

      Delete
  22. ஆகா ஆகா ஆகா....
    தேன் தேன் தேன்
    என் தமிழ் என் தமிழ் என்று இறுமாந்தேன்.

    நன்றி நன்றி நன்றி விஜு.
    வேறு வார்த்தைகள் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தின் பொருண்மையை உணர்ந்தேன் அண்ணா!

      வருகைக்கும் இயலா நிலையிலும் கருத்திட்டுப் போகின்றமைக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்.

      Delete
  23. வணக்கம்
    ஐயா

    பாடலுடன் விளக்கம் நன்று... படித்து மகிழ்ந்தேன் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை... ஐயா அப்படி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  24. நல்ல பணி ....தொடரட்டும்....வாழ்த்துக்கள்....!

    ReplyDelete