Pages

Monday, 26 September 2016

கூட்டம் மயக்கும் கலை – அது இப்படித்தான்!




மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. இப்பதிவிற்கு இவ்வளவு ஆர்வத்துடனான பங்கேற்பை, மறுமொழியை உண்மையில் நான் எதிர்பார்க்கவேயில்லை.

சென்ற பதிவில் கேட்கப்பட்டிருந்த இரண்டு கேள்விகளுக்குப் பதிலளித்தோர் பதிலளிக்க முனைந்தோர், தங்களுக்குள்ளாகவே நிபந்தனைகளைப் பொருத்தி ஆய்ந்தோர் அனைவருக்கும் நன்றி.

சகோ. கீதா அவர்களும் சகோ.ஞா. கலையரசி அவர்களும் விடைகளை ஓரளவு கண்டுபிடித்து விட்டார்கள். அவர்களின் ஆர்வத்திற்கும் தேடலுக்கும் முயற்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இதோ சென்ற  போட்டிக்கான பதில்கள்.

1. ஒரு சொல், அது தமிழ்ச்சொல்லானால், அங்கு, க், ச், த், ப், ஆகிய நான்கு மெய்யெழுத்துக்களை அடுத்து அதே மெய்யெழுத்துக்கள்தான் வரும். வேறு மெய்யெழுத்துக்கள் வரா.

2. ர்,ழ் ஆகிய இரு மெய்யெழுத்துகளை அடுத்து, வேறு மெய்யெழுத்துக்கள்தான் வரும். அதே மெய்யெழுத்துக்கள் வரா.

இனி இதற்கான இலக்கணம்.

தமிழில் உள்ள பதினெட்டு மெய்களும் சொல்லாகும் தன்மை சார்ந்து கீழ்காணும் விதிகளுக்கு உட்பட்டே சேர்கின்றன.

1. க்,ச்,த்,ப், ஆகிய நான்கு மெய்யெழுத்துக்களும் தம்மை அடுத்துவர வேறு மெய்களை அனுமதிப்பதில்லை. அவையே வருகின்றன.

2. ர்,ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்கள், அவற்றைத் தொடர அதே மெய்யெழுத்துக்களை அனுமதிப்பதில்லை.  அங்கு வேறு மெய்யெழுத்துக்கள்தான் அவற்றைத் தொடர அனுமதிக்கின்றன.

3. பதினெட்டு மெய்களில் மீதமுள்ள பன்னிரண்டு மெய்களும் தம் அருகே தம்மையும் அனுமதிக்கின்றன. பிற மெய்களையும் அனுமதிக்கின்றன.

இலக்கணக்காரர்கள்,

ஒரு மெய்யெழுத்து அதே மெய்யெழுத்துடன் மட்டும் சேர்ந்து வருவதை உடனிலைமெய்ம்மயக்கம் என்கிறார்கள். இப்படி வருவன க்,ச்,த்,ப் என்னும் நான்கு  மெய்கள்.

ஒரு மெய்யெழுத்து வேறுமெய்யெழுத்துடனும் சேர்ந்து வருமானால், அதனை வேற்றுநிலைமெய்ம்மயக்கம் என்கிறார்கள். க்,ச்,த்,ப், என்னும் நான்கு மெய்யெழுத்துகள் தவிர மீதமுள்ள பதினான்கு மெய்யெழுத்துக்களும் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆவன.

இப்பதினான்கனுள் ர், ழ் என்னும் இரண்டு மெய்கள் தம்மை அடுத்து வேறு மெய்யெழுத்துக்கள் நிற்க மட்டுமே இடம் அளிப்பன.

எனவே,

ங்,ஞ்,ட்,ண்,ந்,ம்,ய்,ல்,வ்,ள்,ற்,ன்,

ஆகிய பன்னிரண்டு மெய்யெழுத்துக்களும் தம்முன் தாமும்வரும். பிறமெய்யெழுத்துகள் வரவும் இடமளிக்கும்.

இனிக் கற்பித்தலுக்காக.....

தமிழ்ப்பாடத்தில் எட்டாம் வகுப்பில் இப்பகுதி உள்ளது என நினைக்கிறேன்.

இந்த எழுத்து இதனருகில் வரும் இது வராது என்று புத்தகத்தில் இருக்குமாறு சொல்வதற்குப் பதிலாக மாணவரிடம் சில எடுத்துக்காட்டுகளைக்காட்டி அவர்களைக் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டுச் சொற்களைத் தேடச் செய்யலாம்.

அவர்கள் கண்டுபிடித்துவரும் சொற்களை விதிமுறைக்குட்படுத்தி ஆராயலாம்.

இறுதியில் அவர்கள் கண்ட முடிவை வகைப்படுத்த, அவர்களாகவே இம்மெய்யெழுத்துகளுக்கு அருகே இம்மெய்யெழுத்து வராது அல்லது இதுதான் வரும் என்கிற உண்மையைக் கண்டறிந்திருப்பர்.

அதன்பின்தான், இலக்கணக் கலைச்சொல்லான, மெய்ம்மயக்கம் என்பதையே அறிமுகப்படுத்த வேண்டும்.

மெய் என்ற சொல்லை மாணவர் அறிந்திருப்பர்.

மயக்கம் என்பதற்குக் கூட்டம் என்பது இங்குப் பொருளாகும். இது இன்று நாம் பயன்படுத்தும் ( மயக்கம் – நினைவிழத்தல் ) பொருளோடு முற்றிலும் மாறுபட்டது. மாணவர் இன்றைய பொருளோடு இதனைப் பொருத்திப் புரிந்திட இடர்படுவர். 

எனவே ஒரு சொல்லின் பழைய ஆட்சியை இன்றைய பயன்பாட்டுடன் இணைத்துப் பொருள் என்னவாகும் என்பதை நகைச்சுவையாய் மாணவர்க்கு உணர்த்தலாம்.

எ.கா.

காலைக்கூட்டம்” என்பதைக் ‘காலை மயக்கம்‘ என்று சொன்னால் எப்படி இருக்கும்?

இவ்வாறாக மயக்கம் என்பதன் அன்றைய பொருளை  மாணவர் மனதில் பதியச் செய்ய வேண்டும்.

கற்பித்தல் முறையில் இது விதிவரு முறை எனப்படுகிறது.

எடுத்துக்காட்டுகள் வாயிலாக மாணவரே குறிப்பிட்ட விதிகளைக் கண்டுபிடிப்பதே இம்முறையாகும்.

இதன் பயன் புரிதல் சார்ந்தது. மனப்பாடம் தவிர்ப்பது, நிலையானது. மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தைக் கற்பவர் மனதில் ஏற்படுத்திடக் கூடியது. குறிப்பாக இன்றைய தமிழிலக்கணக் கற்பித்தலுக்குப் பெரிதும் வேண்டப்பெறுவது.

இதன் கூடுதல் பயன், மாணவர் இவ்விதிமுறைக்கு உட்பட்டுவராத சொல் எதுவாயினும் அது வேற்றுமொழிச் சொல்லே என்ற உறுதியை அடைய முடியும்.

தமிழில் இதுபோன்று எழுத்துக்களின் கூட்டம் சொல்லாகும்போது குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகிறது என்று அறியும்போது யாவர்க்கும் வியப்பு நேரும்.

கூட்டம் மயக்கும் கலை.

என்ற தலைப்பு இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். :)

தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn0.gstatic.com/images


40 comments:

  1. உடனிலைமெய்ம்மயக்கம்,வேற்றுநிலைமெய்ம்மயக்கம்..இலக்கணம் இவ்வளவு இருக்கா ,எனக்கு மயக்கமே வருதுங்க :)

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு கூட்டம் வருவதால்தானே தமிழ் மணத்திலும் மனத்திலும் நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்கள் பகவானே!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. அருமை.
    இலக்கணம் தெரியாமலேயே கவிஞன் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாய் இருக்கிறது.
    தங்களால் அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா!

      தானே வருவதற்கும் கற்றுக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டண்ணா..!

      உங்களை வியக்கிறேன்.

      நன்றி.

      Delete
  3. இலக்கணம் கற்கிறோம் உங்கள் மூலமாக, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  4. அட! சகோ!தங்கள் வகுப்பு மெய்ம்மயக்கம் தான் இல்லையா !!! மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டோம். விதிமுறைக்குட்பட்டு வராத சொல் வேற்று மொழிச் சொல் என்பதைப் புரிந்து கொண்டோம். உண்மையாகவே "மெய் மயக்கம்" அடைந்தோம்!!! தொடர்ந்து கற்கிறோம். மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      உங்கள் முயற்சியை இன்னும் இன்னும் எண்ணிக்கொண்டே இருக்கிறேன். ஒரு பதிவின் கேள்விக்காக எவ்வளவு நேரம் செலவிட்டிருப்பீர்கள்....?

      உங்களுக்கு உள்ள ஆர்வம் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் ஒருசேர ஏற்படுத்தியது.

      இது போன்ற புதிர்களில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.

      ஆர்வம்...நாம் முதலில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற தீவிரம் என்றெல்லாம் எனக்குத்தோன்றும்.....இவற்றில் என்னையே உங்களில் கண்டேன்.

      இலக்கணக் கட்டுரைகளைப் பொருத்தவரை ஆர்வமாய்ப் படிப்பவர்களும், அதில் குறிப்பிட்ட பயிற்சிகளைச் செய்து பார்ப்பவர்களும் மிகமிகக் குறைவு.

      இதையும் பொருட்படுத்திப் பார்ப்பவர்களும் பதிலிடுபவர்களும் கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

      நீங்கள் மெய்ம்மயக்கம் என்பதைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்....! நான் அப்போதே அதைக்குறிப்பிட்டிருக்க வேண்டும்.
      சற்றுக் குழப்பி விட்டுவிட்டேன். :)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் நன்றி.

      வாழ்த்துக்கள்.

      Delete
    2. சகோ! //ஆர்வம்...நாம் முதலில் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற தீவிரம் என்றெல்லாம் எனக்குத்தோன்றும்// ஆம்!.எனக்குப் போட்டிகளில் அதுவும் இப்படி மூளையைப் பயன்படுத்தும் போட்டிகள் என்றால் முயற்சி செய்வேன். வாரா என்று தெரிந்திருந்தும்....ஒரு வேளை சங்ககால இலக்கியப் பாடல்களில் எங்கேனும் வந்திருக்குமோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், பாடல்கள் அறியும் அளவிற்கு எனக்குத் திறமை கிடையாது.

      பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி, தமிழ், ஆங்கில இலக்கணக் கட்டுரைகளை ஆர்வமாய் படிப்பது மட்டுமின்றி நிறைய, முடிந்த அளவு பயிற்சி செய்து உதாரணங்களுடன் வகுப்பிற்குச் செல்லும் வழக்கம் உண்டு. இது எல்லா பாட வகுப்புகளிலும் செய்வதுண்டு. நான் என்வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு எப்போதேனும் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு நேர்ந்தால்,குறிப்பாக தமிழ், ஆங்கில இலக்கணம் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு நேர்ந்தால் அவர்களுக்கு இது போன்ற நிறைய எடுத்துக்காட்டுகள்-செய்முறை பயிற்சிகள் கொடுப்பது வழக்கம். வினைச் சொற்கள் உபயோகித்து வாக்கியங்கள் அமைத்து வரும் படிச் சொல்லுவது. ஆனால், வருத்தம் என்னவென்றால், அவர்கள் எழுதிக் கொண்டு வர மாட்டார்கள். எனக்குக் கற்றுக் கொடுக்கும் ஆர்வம் குறைந்துவிடும். மதிப்பெண்ணிற்காகக் கற்றுக் கொள்ள வருவார்கள். அவர்கள் மனம் புண்படக் கூடாது என்று கற்றுக் கொடுத்துவிட்டுவிடுவேன். நீங்கள் எனது பள்ளீ, கல்லூரிக் கால நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள். மீண்டும் மாணவியாகிவிட்டேன். நன்றி சகோ.

      நீங்கள் கொடுத்து வைத்திருப்பதை விட நாங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் சகோ. எப்பேர்ப்பட்ட ஈடுபாட்டுடன் ஒரு ஆசிரியர் இப்படிக் கிடைப்பது எவ்வளவு அரிது! அடுத்த வகுப்பிற்குத் தயார்.

      நீங்கள் குழப்பினாலும் எனக்கு அது உறுதியாகத் தெரிந்தது.

      மிக்க நன்றி சகோ.

      Delete
    3. வணக்கம் சகோ.
      வகுப்பில் விடையை முதலில் சொல்லிவிட வேண்டும் என்று கைத்தூக்கும் மாணவர்களில் என்னைப் போல நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை உங்கள் ஆர்வம் கண்டு உணர்ந்தேன்.விடை தவறாய் இருந்தால் என்ன..?
      தவறெது என அறியவும் சரியைக் காரணங்களோடு காணவும் அது உதவும் தானே?

      பொதுவாகவே படித்தல்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை. குறிப்பாக எழுதுபவனுக்கு அவ்வாசித்தல்தான் மந்திரக்கோல்.
      அடுத்துக் கற்பித்தல்.....!

      எனது பத்தாம் வகுப்பில் ஆரம்பித்தது இது...!

      உணவு இடைவேளைகளிலும் காலை நேரங்களில் வகுப்புத் தொடங்கும் முன்பாகவும் நண்பர்களுக்குக் கணிதம் கற்பித்தல்.

      ஏனெனில் ஒன்பதாம் வகுப்புவரை எனக்கிருந்த கடின பாடங்களுள் கணிதமும் ஒன்று.

      பத்தாம் வகுப்பில் நான் அதை இலகுவாக்கிக் கொண்டேன். என் பிழை அறிந்தேன்.

      அதை நண்பர்களுடன் பகிர்தல் எனக்குப் பெருமகிழ்வாய் இருந்தது.
      ஏதோ அவர்களுக்கே நான் ஆசிரியரானதைப் போன்ற பெருமிதம்...!
      ஆனால் நான் கற்பித்தலில் அவர்கள் அறியாத சுயநலம் இருந்தது.
      அது நான் ஒருபோதும் அதன்பின் அதை மறந்ததில்லை.

      விடை தெரியாமல் பாதியில் நிற்க நேரிடும் போதும் அது குறித்து கவலை கொண்டதில்லை.
      மீண்டும் அதைக் கண்டறியாமல் விட்டதில்லை.
      எனவே கடினம் என மற்றவர் ஒதுக்குவது எனக்கு எளிதாய் இருந்தது.
      பன்னிரண்டாம் வகுப்பிலும் கணிதம் மீதான என் மோகம் பெரிதுயர்ந்தது.
      அதன்பின், பலவாய்ப்புகளிடையே, பெற்றோரின் எதிர்ப்பின் இடையிலும் நான் ஆசிரியப் பயிற்சியிற்சேர்ந்தது தற்செயலன்று.

      இப்பதிவு பற்றிய இரகசியம் ஒன்றுண்டு.

      இது குறித்து, நான் பெரிதும் மதிக்கும் ஆசிரியர் ஒருவர் நெடுநாட்களாக எழுதச் சொல்லியிருந்தார்.
      பதிவின் இறுதியில் இப்பதிவிடக்காரணமான அவர்க்கு நன்றி எனக்குறிப்பிடலாம் என நினைத்தேன்.
      பின்பு வேண்டாம் என விட்டேன்.

      இங்கே இணையத்தெழுதும் ஒவ்வொருவரிடத்தும் நாம் கற்க ஏராளம் உண்டு.
      ஆக நாமே ஆசிரியராக மாணவராக மாறும் தருணங்கள் அதிகம்.

      அதிலும் உங்களைப் போன்ற ஆர்வம் மிக்கவர்கள், என்னைப் போன்ற சோம்பேறிகளை மேலும் கற்கத் தூண்டுகிறார்கள் என்பதே உண்மை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    4. தங்கள் அனுபவம் குறித்து அறிகின்றேன். சகோ. எனது அனுபவமும் இதே போன்றுதான். கற்றுக் கொடுக்கும் போது நாம் கற்பது அதிகமே. தாங்கள் சோம்பேறியா....அப்படியென்றால் நாங்கள் எல்லோரும் என்ன சொல்லிக் கொள்ள??!!

      மிக்க் நன்றி சகோ!

      கீதா

      Delete
  5. மிக இனிமையான இலக்கண வகுப்பு. பலவற்றையும் அறிந்துகொண்டேன்.
    நன்றி நண்பரே!
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!

      Delete
  6. அருமையான இலக்கண வெளியீடு
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி திரு. ஜீவலிங்கம் யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம்.

      Delete
  7. பலரும் பலன் பெறும் பதிவு தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!

      Delete
  8. வழக்கம் போல் போட்டியில் பங்கேற்றபோது, அது அத்தனை கடினமாய் இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. விதிகளின் படி சொற்களைத் தேட முனைந்தால், ஒன்று கூட அகப்படமாட்டேன் என்றது.
    சப்தம், நிசப்தம், பிராப்தம், ஜகத்குரு என அகப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் வடமொழிச் சொற்கள். வெகு நேரத்துக்குப் பிறகு தான், இல்லாத ஒன்றைக் கண்டுபிடிக்கச் சொல்லி, இவர் போட்டி வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. அது இப்போது உறுதிப்பட்டிருக்கின்றது.
    இந்த விதிவருமுறை கற்பித்தல் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையாகத் தேடியபோது தான் இது போல் ஒரு விதி இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன்.
    பள்ளியில் இந்த மெய்மயக்கம் பற்றி நானும் படித்திருந்திருப்பேன். இப்போது அது பற்றித் துளியும் எனக்கு நினைவில்லை. மனப்பாடம் பண்ணி தேர்வு எழுதியதோடு மறந்திருக்கக் கூடும்.
    ஆனால் இப்போது நான் கற்றுக்கொண்ட பாடம் என் ஜென்மத்துக்கும் மறக்காது. இந்தத் தேடலின் போது எனக்குக் கிடைத்த அனுபவம், மிக சுவாரசியமானது.
    தமிழில் உள்ள அனைத்துச் சொற்களும் இந்த விதிகளின் படி கட்டமைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்த போது மிகவும் மலைப்பாகயிருந்தது. கட்டுக்கோப்பான நம் மொழியிலக்கணத்தை நினைத்துப் பெருமையாயும் இருந்தது.
    இந்த விதிகளுக்கு உட்படாத வடமொழிச் சொற்களை இனங்காணுவதும் எளிதாயிருந்தது. புதியது கற்ற மகிழ்ச்சியும், ஒருங்கே ஏற்பட்டது.
    ஒரேயொரு பதிவு மூலம், இத்தனை அனுபவங்களையும் ஒரு சேரக்கொடுத்த சகோதரருக்கு, என் உளங்கனிந்த நன்றி! தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      மீண்டும் உங்களைப் போன்றவர்களின் ஆர்வத்திற்குத் தலைவணங்குகிறேன்.
      உங்களைப் போன்றவர்களின் இதனால் பயன்கொண்டதாகச் சொல்லும் போது உள்ளம் நிறைகிறேன்.
      இது வெற்றுச்சொல்லன்று.
      பொதுவாக இதுபோன்ற கட்டுரைகள் பரவலாகப் படிக்கப்படாது என்பதை அறிவேன்.
      ஆயினும் இதுபோன்ற பதிவுகளை அவ்வப்போது எழுதிச்செல்ல உங்களைப் போன்றோர் அளிக்கும் ஊக்கம் மிகப்பெரிது.

      மிக்க நன்றி.

      Delete
  9. இலக்கணத்தை எளிமையாக சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றி! நீண்ட நாட்களாய் பதிவுலகை மறந்துவிட்டீர்கள் போல! திரும்ப வந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  10. உங்கள் மூலம் நானும் கற்றுக் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  11. வணக்கம் பாவலரே !

    நீண்டநாட்களின் பின்னர் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி !

    இலக்கணம் இன்னும் கற்க ஆவலாய் இருக்கிறோம் தொடர்ந்து வந்து பதிவுகள் இட வேண்டுகிறேன் நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே!

      தங்களைப்போன்றோரின் ஊக்கம் பெரிது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  12. என்னால் தங்களின் கேள்விக்கு விடையளிக்க முடியவில்லை. தங்களின் இந்த பதிவின் மூலம் மெய்யாலுமே அறியாதன அறிந்தேன். அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி! தொடர்கிறேன் இன்னும் தங்களிடமிருந்து கற்றுக்கொள்ள.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      இந்தக் கேள்விக்கு என்னாலும் விடையளிக்க முடியாது. அது உங்கள் பிழையன்று.
      தமிழில் அதுபோன்று சொற்கள் இல்லை என்பதே உண்மை.

      நிச்சயமாய் நீங்கள் தேடி இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  13. அருமை ஐயா!

    போட்டிக் கேள்விகளுக்கான விடைகளை நான் கண்டுபிடித்து விட்டாலும், சும்மாயிருக்கும்பொழுது ’அப்படிப்பட்ட சொற்கள் ஒருவேளை இருக்குமோ’ என்ற ஐயத்தில் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் இவ்விதிகளுக்கு ஏற்ப வரும் சொற்கள் அனைத்தும் வேற்றுமொழிச் சொற்களாகவே இருப்பதை உணர முடிந்தது. அப்பொழுதுதான் புரிந்தது, பழந்தமிழ் நடையில் ‘சக்ரவர்த்தி’ என்று எழுதாமல் ஏன் ‘சக்கரவர்த்தி’ என்று எழுதினார்கள்; ‘பிப்ரவரி’ எனச் சராசரித் தமிழர்கள் எழுதுவது போல் அன்றித் தமிழறிஞர்கள் ஏன் ‘பிப்பிரவரி’ என எழுதுகிறார்கள்; ‘சத்ர சிகிச்சை’ என எழுதத் தமிழால் முடிந்தும் ஏன் அந்நாளில் ‘சத்திர சிகிச்சை’ என்று எழுதினார்கள் என்பவையெல்லாம். இப்படியோர் இலக்கண நெறி இருப்பது தெரியாமல், ஏதோ அந்தக் காலத்தில் எல்லாரும் தமிழைத் தேவையில்லாமல் நீட்டி முழக்கியதாக எண்ணி இன்று நாம் எல்லாரும் எவ்வளவு பிழையும் தவறுமாகத் தமிழை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்பது அப்பொழுதுதான் உரைத்தது.

    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  14. மேலே குறிப்பிட்டவாறு, இந்த நெறிகளுக்குட்பட்டு வரும் சொற்களைத் தேடிக் கொண்டிருக்கையில், வெகு நாட்களாக மனத்தை அரித்துக் கொண்டிருந்த ஒரு சொல் மீண்டும் நினைவில் இடறியது. அது ‘ரேழி’!

    இது என்ன சொல் ஐயா, தமிழா? ஆம் எனில், இஃது எப்படித் தமிழிலக்கண நெறிகளுக்கு மாறாக ‘ரே’ எனும் சொல்லில் தொடங்குகிறது? ஒருவேளை இது தமிழ் இல்லை எனில், இதில் தமிழுக்கே உரிய ழகரம் வந்தது எப்படி? ஆண்டுக்கணக்காக மண்டையைக் குடையும் கேள்வி இது. நேரம் கிடைக்கும்பொழுது பதிவில் விளக்க வேண்டுகிறேன்.

    இதை வைத்து ‘கார்ரேழி’ (கருப்பு ரேழி), ‘சீர்ரேழி’ (அழகிய ரேழி) என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை இது தமிழ்ச்சொல்தான் என்றால், இவை இரண்டும் உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்! அதாவது, இரண்டு ’ர்’ அடுத்தடுத்து வருகிறது. ஆனால், கண்டிப்பாக இது தமிழ் இல்லை என்றே நம்புகிறேன். அதனால்தான் இவற்றைப் பதிலாக அளிக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் கண்டறிதல் முற்றிலும் உண்மையே.

      வேற்றுமொழிச்சொற்கள் தமிழில் வரும்போது அதன் இயல்புகளுக்கேற்பவே உட்செரிக்கப்பட்டது.

      அடுத்து ரேழி...!

      இது தமிழ்ச்சொல்தான்.

      இப்போதென்றன்று சங்ககாலத்திலேயே வழக்கில் இருந்த தமிழ்ச்சொல்.

      பண்டைய வீடுகளின் நுழைவாயிலுக்கும் அதற்கடுத்த வாயிலுக்கும் இடைப்பட்ட பகுதி.

      இதன் சரியான வடிவம் இடைகழி என்பதே.

      “புழைவாயிற் போகுவிடைகழி
      மழைதோயு முயர்மாடத்து ” என்னும் பட்டினப்பாலை.(144)

      இதற்குப் பின் வந்த பத்தி இலக்கியத்தும் காப்பியத்தும் இச்சொல் பெருவரவிற்று.

      இதன் மரூஉ வடிவமே ரேழி என்பது.

      பேச்சு வழக்கில் இவ்வாறிருப்பினும் இதனைத் தமிழ் மரபில் இரேழி என எழுதுதலே தகும்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி ஐயா! நெடுநாள் ஐயத்துக்கு விடை பகர்ந்தீர்கள்! மிக்க நன்றி! இடைகழி எனும் சொல்லை உரைநடை இலக்கியங்கள் வாயிலாக அறிந்ததுண்டு. ஆனால், இரேழி அதன் மருஉ என்பது தெரியாது. எப்படித்தான் இப்படியெல்லாம் மருவுமோ! வியப்பாக இருக்கிறது. இதை ‘இரேழி’ என்றுதான் எழுத வேண்டும் என்பதால் இதன் முன்னால் கார், சீர் போன்ற சொற்களைச் சேர்த்தாலும், நான் எதிர்பார்த்தது போல் இரண்டு ‘ர்’ அடுத்தடுத்து வர வாய்ப்பில்லை, இல்லையா? புரிந்து கொண்டேன். நன்றி ஐயா!

      Delete
    3. நாங்கள் எங்கள் வீடுகளில் இப்போதும் ரேழி என்றுதான் சொல்லுவது வழக்கம். பண்டு கடிதம் எழுதும் போது விஜு சகோ சொல்லியிருப்பது போல் இரேழி என்று எழுதுவது வழக்கம். இடைகழி என்ற சொல்லும், விஜு சகோவிடமிருந்து இப்போது அறிந்து கொண்டாயிற்று!! நன்றி இபுஞா சகோ!!

      கீதா

      Delete
  15. இனிமையான இலக்கண வகுப்பு
    நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!

      Delete
  16. சகோ தயவாய் ஒரு வேண்டுகோள். எதிர்கொள்/எதிர்கொண்டு, எதிர்காலம் என்று வருபவை எதிர்க்கட்சி, முதற் சொற்களில் ர் க்கு அடுத்து க் வருவதில்லை. அதே போன்று, எதிர்ப்பாளர், எதிர்ப்பு, எதிர்ப்படுவது, எதிர்ப்பதம் என்று வருவது எதிர்பார்ப்பு, எதிர்பார் என்று ர் க்குப் பிறகு ப் இல்லாமல் வருவது ஏதோ புரியது போல் இருந்தாலும், சற்று விளக்க முடியுமா சகோ.

    அதே போன்று, காலக்கட்டம், காலகட்டம் இதில் எது சரி? விளக்க முடியுமா சகோ. உங்களைத் தொந்தரவு செய்திருந்தால் தயவாய் மன்னிக்கவும்.


    இதற்கான விளக்கம் தர இயலுமா

    கீதா

    ReplyDelete
  17. எதிர்பார் என்பதற்கும் எதிர்ப்பாளர், எதிர்ப்பார் என்பதற்கும் உள்ள அர்த்த வேறுபாடு புரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      எது சரி எது தவறு என்பதை ஒருவாறு சொல்ல முடியும்.
      அது உங்களாலும் முடியும்.

      ஏன் என்பதற்கான காரணங்களும் இலக்கணவிதிகளும் கொஞ்சம் தேடிப்பார்க்க வேண்டும்.

      சற்று அவகாசம் தாருங்கள்.

      தயவு கூர்ந்து என்பதையும் தொந்தரவு ...மன்னிக்கவும் என்பதையும் நிச்சயமாய்த் தவிர்க்கலாம்.:)

      நன்றி.

      Delete
    2. மிக்க நன்றி சகோ. நானும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். கொஞ்சம் புரிந்தாற்போல் இருக்கிறது. இன்னும் முயற்சி செய்கிறேன். சரி இனி அவ்வார்த்தைகளைத் தவிர்த்து விடுகிறேன்.

      கீதா

      Delete
  18. விளக்கமாய் ஒரு பகிர்வு...
    அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

      Delete