Pages

Tuesday, 4 October 2016

மாண்டவன் நாட்குறிப்பு - 1



கசப்பின் நெடிபடர்ந்த எழுத்துகளை
அமுதசுனையூறும்
உன் எரியோடைக்குத்தான் கொண்டுவருகிறேன்  இப்போதும்….!

அருவறுத்து முகஞ்சுளித்துப் போகும்
உன் கணப்புகளுக்கேனும்
விறகாக எடுத்துப்போ!

முள்ளின் கூர்முனைகளுக்கும்
மலரின் மெல்லிதழ்களுக்கும் பேதமறியாத
உன் தீக்குள்
நான் பொதிந்து சுமந்திருந்த
கரு  குறித்தான பிரக்ஞை
ஒருபோதும்
இருக்கப்போவதில்லை உனக்கு!

இரந்து நீட்டப்பட்ட கைகளை
வலிந்து பற்றி
நின் பற்சக்கரங்களினூடே
அரைக்கத் திரளும் குருதி தொட்டுத்தான்
எழுதப்பட்டது இவ்வெழுத்து 
காலகாலமாய்….!

கோணலெனத் தெரியும்
அதன் வளைவுகளில்
அடக்கப்பட்டிருப்பன
உனதண்மையில் உயிர்தரித்தன!

ஊர்ந்திழையும் கணமும் பொறுக்காமல்
கால்நசுக்கிப்போகும் உன்முன்
அட்டையாய்ச் சுருண்டுகிடக்கும்போதும்
கூர் அலகு கொண்டு
என்னை விரித்துப் பரப்பும் உன் விளையாட்டு
எனக்கு மரண வேதனை!

உகிர்களால் பிளந்திடும்
ஒவ்வொரு கணுவிலிருந்தும்
வழியும் செந்நீர் உண்டு
பசியாறிடுக நின் அலகுகள்.

என்னில் இருள்நிறைத்து
உன் ஒளி நோக்கிப் பாயுமென்
நட்சத்திர விட்டில்கள்..!

வீரியம் மிகுந்த என் கற்பனைகளைச்
சொத்தையாக்குகின்றது இந்த நிதர்சனம்.

விடு……!

வேர்களால் விலக்கி வைக்கப்பட்ட
பெருமரம் நான்!

மலைகளும் பெயர்க்கும் உன் கொடுங்காற்றின்முன்
உன் நதிகளால் செழித்த ஆயிரம் வனங்களின்
பெயரறியா மரமொன்றிலிருந்து
உதிரும் ஓர் சருகாயேனும் இருந்துபோகிறேன்..!

பட உதவி - நன்றி /https://claudiamegbailey.files.wordpress.com/2014/05/falling-leaf1.jpg



32 comments:

  1. "என்னில் இருள்நிறைத்து
    உன் ஒளி நோக்கிப் பாயுமென்
    நட்சத்திர விட்டில்கள்..!" என
    எல்லாமே
    அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.
      தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

      Delete
  2. மாண்டவன் மீண்டவனாய்...
    உதிரும் ஓர் சருகாய்...
    முள்ளாய் மலராய்...
    முகம் காட்டி
    நாள் குறிக்கும்
    நாட்காட்டி
    ஆகாட்டி ஆகாட்டி
    கசந்த வசந்தம்...!

    தமிழ்மணக்க + 1

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தமிழ் மணக்கிறது ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. வேர்களால் விலக்கி வைக்கப்பட்ட
    பெருமரம் நான்!

    ஆகா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. “ஊர்ந்திழையும் கணமும் பொறுக்காமல்
    கால்நசுக்கிப்போகும் உன்முன்
    அட்டையாய்ச் சுருண்டுகிடக்கும்போதும்
    கூர் அலகு கொண்டு
    என்னை விரித்துப் பரப்பும் உன் விளையாட்டு
    எனக்கு மரண வேதனை!”

    துன்பத்தில் இன்பம் காணும் சாடிஸ்ட் மனநிலையை விளக்கும் அருமையான வரிகள்! கவிதையை வாசிக்கும்போது, நானே அந்த மரண வேதனையை அனுபவிப்பது போன்ற உணர்வு!

    “என்னில் இருள்நிறைத்து
    உன் ஒளி நோக்கிப் பாயுமென்
    நட்சத்திர விட்டில்கள்..! “

    என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை!

    “வேர்களால் விலக்கி வைக்கப்பட்ட
    பெருமரம் நான்!”

    இதுவரைக் கேள்விப்படாத புதுமையான சிந்தனை. வளர்ந்தவுடன் வேர்களை (அடையாளங்களை) மறக்கும், துறக்கும் மரங்கள்(!) பற்றித் தான் இதுவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    பாராட்டுக்கள் சகோ! என் தளத்தில் நீங்கள் எழுதிய கவிதைக்கு என் மறுமொழியைக் காண அழைக்கிறேன்.

    நன்றி. வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      உங்களின் வருகைக்கும் பார்வைக்கும் அதைப் பின்னூட்டத்தில் அறியத் தந்தமைக்கும் நன்றிகள்.

      தங்களது பின்னூட்டம் கண்டேன். பதிலிட்டேன். பதிவும் இட்டுள்ளேன். நன்றி.

      Delete
  5. //வீரியம் மிகுந்த என் கற்பனைகளைச்
    சொத்தையாக்குகின்றது இந்த நிதர்சனம்.//

    அருமையான வரிகள்! எப்போதுமே கற்பனையை விட மெய்ம்மை தானே யதார்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. அருமையான வரிகளில் அற்புதமாய் ஒரு கவிதை. மனதை தொட்டுச் சென்றது.
    வாழ்த்துக்கள்.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  7. //வீரியம் மிகுந்த என் கற்பனைகளைச்
    சொத்தையாக்குகின்றது இந்த நிதர்சனம்.//

    அருமையான வரிகள் மிகவும் இரசித்தேன்
    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  8. ஊர்ந்திழையும் கணமும் பொறுக்காமல்
    கால்நசுக்கிப்போகும் உன்முன்
    அட்டையாய்ச் சுருண்டுகிடக்கும்போதும்
    கூர் அலகு கொண்டு
    என்னை விரித்துப் பரப்பும் உன் விளையாட்டு
    எனக்கு மரண வேதனை!//

    உண்மையாகவே கத்தி கொண்டு அறுக்கும் வேதனை மிக்க வரிகள்!

    //உகிர்களால் பிளந்திடும்
    ஒவ்வொரு கணுவிலிருந்தும்
    வழியும் செந்நீர் உண்டு
    பசியாறிடுக நின் அலகுகள்.//

    வேர்களால் விலக்கி வைக்கப்பட்ட
    பெருமரம் நான்!// வேர்களும் விலகியதால் தள்ளாடும் மரம் ..வேதனையின் உச்சம்??!!

    வீரியம் மிகுந்த என் கற்பனைகளைச்
    சொத்தையாக்குகின்றது இந்த நிதர்சனம்.// உண்மை அதுதானே

    வரிகள் ஒவ்வொன்றையும் ரசித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் என் நன்றிகள்.

      Delete
  9. ஒரு உண்மையைச் சொல்லட்டுமா . மாண்டவனின் நாட்குறிப்பு என்பதே நினைக்க முடியாதது சரி போகட்டும் என்னதான் இருக்கிறது என்று பார்த்தால் எல்லாமே அப்ஸ்ட்ராக்ட் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் உண்மையை புன்னகையுடன் படித்தேன் என்றால் நம்புவீர்களா? :)

      கருத்தினை வெளிப்படையாகக் கூறுகின்றமையை மனதார வரவேற்கிறேன்

      தொடர வேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  10. மாண்டவன் நாட்குறிப்பில் ,மறைவாய் தெரியும் கருத்துக்கள் பலவும் ,மாண்டால்தான் புரியும் போலிருக்கே :)

    ReplyDelete
    Replies
    1. புரிய வேண்டும் என்று மாண்டுபோகிறவர்களுக்குக் கம்பெனி பொறுப்பல்ல !

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி பகவானே!

      Delete
  11. துள்ளித்திரியும் இளமை போல் .சிதறிப்பாயும் மலையருவிபோல்
    தமிழ் கொஞ்சி விளையாடுகிறது நண்பரே.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. அருமை. உகிர் என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு நன்றி ஸ்ரீ.

      உகிர் என்பது நகம்.

      இங்குப் பறவையினுடையது.

      Delete
  13. ஏற்கெனவே குறிப்பிட மற்ந்து விட்டேன். வளைவுகளுள் என்பதில் தட்டச்சுப் பிழையிருக்கிறது. த.ம வாக்கு 6. உகிர் என்றால் என்னவென்று எனக்கும் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் மறு வருகைக்கும் பிழை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி.

      திருத்திவிட்டேன்.

      உகிர் என்பது நகம்.

      நன்றி.

      Delete
  14. நான் ஒன்று சொல்வேன். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ!

    நேற்றா அல்லது அதற்கு முந்தைய நாளா என நினைவில்லை; உங்கள் கவிதை படிக்க விருப்பமாக இருக்கிறது. பழையதாக இருந்தாலும் சரி, நீங்கள் இன்னும் வெளியிடாத கவிதையாகத் தேர்ந்தெடுத்து ஒன்றை எங்களுக்காகப் பதிவிட முடியுமா என்று கேட்க எண்ணியிருந்தேன். பார்த்தால், இன்று ஒரு கவிதையை வெளியிட்டே விட்டீர்கள்!

    அப்பப்பா! மிகக் கொடுமையான வரிகள் ஐயா! ஆனால், மிக அருமை! "அமுதசுனையூறும் எரியோடை" இதுவரை எந்தக் கவிஞரிடத்தும் காணாத முரண்! "என்னில் இருள்நிறைத்து உன் ஒளி நோக்கிப் பாயுமென் நட்சத்திர விட்டில்கள்" என்னும் வரி வெகு நேரத்துக்குச் சிந்தையில் பல அர்த்தங்களைக் கற்பிக்கும்!

    மிரள வைக்கும் கவிதை! நன்றி ஐயா!

    ReplyDelete
  15. பெருமரம் தான் நீங்கள்.
    மீண்டும் மீண்டும் படித்து வியக்கிறேன். உதாசீனத்தின், புறக்கணிப்பின் வலியை ஒவ்வொரு வரியிலும் உணர முடிகிறது.

    ReplyDelete
  16. கவிதையின் தாக்கம் இன்னும் தீரவில்லை!

    ReplyDelete