Pages

Wednesday, 1 July 2015

ஆதலினால் காதல் சுகம்.


சின்ன விழிக்குருவி செல்லச் சிறகசைக்கத்
தின்ன உயிர்கொடுத்துத் தீர்வதனால் – கன்னமிட்டுப்
போதலினால், கண்டறியாப் பேரலையுள் உன்வலைநான்
ஆதலினால் காதல் சுகம்.


தீப்பிடித்த நெஞ்சில் தினமும்நீ பாய்வதற்கு
நாப்பிறழ்ந்து சொற்கள் நடுங்குவதால் - காப்பதற்காய்
ஊதலிலும் நீயே! ஒலிப்பதுவும் உன்ராகம்
ஆதலினால் காதல் சுகம்.


கொட்டும் மழைக்குளிரின் கொஞ்சல், அதுமாறத்
திட்டும் கதகதப்புத் தேன்துளிகள் - விட்டுவிடா
மோதலினால், கொம்பிரண்டால் முட்டியெனைச் சாய்ப்பதுநீ
ஆதலினால் காதல் சுகம்.


எங்கும் பறக்கின்ற என்னெண்ணத் தேனீக்கள்
தங்கும் அடை‘உனையே தேடுவதால் – மங்குமுயிர்
வேதனையில் இன்பம் விளைவிக்கும் அற்புதம்நீ
ஆதலினால் காதல் சுகம்.


பித்தம் பெருகிடவே பேரழகைக் கண்குவளை
சித்தம் இறைத்திறைத்துச் சேர்ப்பதனால் – எத்துயரும்
சாதலினால், சொல்மரத்தின் சோலையெலாம் பூவெனநீ
ஆதலினால் காதல் சுகம்.

பட உதவி - நன்றி  https://encrypted-tbn2.gstatic.com/images

52 comments:

  1. வணக்கம் என் ஆசானே,
    காதல் சுகம், ஆதலினால் காதல் சுகம், சுகமே
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பேராசிரியரே!

      Delete
  2. வணக்கம்
    ஐயா
    காதல் பாடல்கள் ஒரு சுகந்தான்... பகிர்வுக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. காதலினால் கட்டவிழ்த்து ஓடுமாம் கற்பனைகள் ஆதலினால் காதல் சுகம். அரூமையான வெண்பாக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. போதுமெனச் சொல்லாப் பெரும்பசியின் உள்ளிருப்பாய்
      [co="red"]ஆதலினால் காதல் சுகம்.[/co]

      வருகைக்கும் இனிய குறள் வெண்பாவிற்கும் நன்றி ஐயா.

      Delete
  4. காதல் சுகம்...அருமை...
    வெண்பாக்கள் அழகு....வார்த்தைகள் அழகாய் வந்து விழுகின்றன. பாக்கள் எழுத இப்போது... ஆரம்பிக்கும் போது தான் அதன் அருமை தெரிகிறது. உங்களைப்போன்றவர்களின் வெண்பாக்களைப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. ஆசையாகவும் இருக்கிறது. சகோ.

    வார்த்தைகள் சும்மா விளையாடினால் அல்லவா பாக்கள் அமையும்...!!!!!!!!!!!!!!!!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் விளையாடுகிறீர்களே சகோதரி!

      பின் என்ன?

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete
  5. ஆதலினால் காதல் சுகம் மட்டுமல்ல ..காதலினால் வரும் உங்கள் பாக்களும் சுகம்தான் :)

    ReplyDelete
  6. வணக்கம் பாவலரே !

    மாதுளைச் சாறுண்டு மன்மதனாய் ஆனாலும்
    மோதும் மனக்கவலை முள்ளெடுக்கும் - மாதவமாய்
    கோதும் குழற்கரங்கள் கொண்டுவரும் இன்பங்கள்
    ஆதலினால் காதல் சுகம் !


    ஆதலினால் காதல் சுகம் !

    அருமை அருமை பாவலரே தொடர வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்
    தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு !




    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே!

      மாது(உ)ளம் கொண்டதனால் மாம்பூவில் வண்டாகி
      ஏதுமறி யாமன(து) ஏங்குவதால் - சீதளப்பூம்
      பாதம் படும்நெஞ்சில் பாதை புலனைந்தும்
      [co="red"]ஆதலினால் காதல் சுகம்[/co]

      நன்றி.

      Delete
    2. வணக்கம் கவிஞரே,
      மன்மதன் கரும்புச்சாறு எனில்,,,,,,,,,
      அது என்ன மாதுளைச்சாறு,,,,,,,,,,,
      நன்றி,

      Delete
    3. வணக்கம் கவிஞரே,
      மன்மதன் கரும்புச்சாறு எனில்,,,,,,,,,
      அது என்ன மாதுளைச்சாறு,,,,,,,,,,,
      நன்றி,

      Delete
  7. சத்தியமாய் சொல்லுகிறேன் நான் ரசித்து !!!
    புத்தியும் கொஞ்சம் போதைதனில் தள்ளாட
    கத்திபோல் உள்ளமதை கீறிடுதே இக்கவிதை
    ஆதலினால் காதல் சுகம்!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி!

      எண்ணம் பெருமீனாய் ஏழ்கடலும் நீந்த‘அவள்
      கண்ணச் சிறுகுளத்தில் கட்டுண்டேன் - ஒண்ணுதலாள்
      ஏது மறியாள்போல் எல்லாம் அறிந்திருப்பாள்
      [co="red"]ஆதலினாள் காதல் சுகம்.[/co]


      ( கண் + அச் = கண்ணச் ; கண், அந்த )

      நன்றி.

      Delete
  8. ஆதலினால் காதல் சுகம் என்ற ஈற்றடியை வைத்து பின்னப் பட்ட வெண்பாக்கள் அனைத்தும் அற்புதம் . இதை வைத்து ஒரு போட்டியே வைத்திருக்கலாம்

    ReplyDelete
  9. ஆதலினால் காதல் சுகம் என்ற ஈற்றடியை வைத்து பின்னப் பட்ட வெண்பாக்கள் அனைத்தும் அற்புதம் . இதை வைத்து ஒரு போட்டியே வைத்திருக்கலாம்

    ReplyDelete
  10. ஆதலினால் காதல் சுகம் என்ற ஈற்றடியை வைத்து பின்னப் பட்ட வெண்பாக்கள் அனைத்தும் அற்புதம் . இதை வைத்து ஒரு போட்டியே வைத்திருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      போட்டி என்றால் எனக்குத் தோல்விதான் பரிசு :(

      நன்றி

      Delete
  11. தங்கி மனச்சிறையில் சாய்துறங்கப் பார்த்திருக்கும்
    எங்குமே ஏக்கமதை ஏந்திநிற்கும் -அங்கமதில்
    வேதமென ஓதியே வீற்றிருக்கும் ஆவலதும்
    ஆதலினால் காதல் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!

      “ ஆதலினால் காதல் அழகு ” இதுவும் அழகுதான்.:)

      எனவே உங்களுக்கு பதில் வெண்பா கூற என்னால் முடியுமா? :))

      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  12. பதவுரை கருத்துரை தேடினேன் ஆதலினால் காதல் அழகு காதல் செய்வதும்......?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      மன்னிக்கவும்.

      இதற்கு உரை எழுத முடியாத சூழல்.

      காதல் அழகு ?

      தங்களது வருகைக்கும் கருத்திற்கு நன்றி.

      Delete
  13. உங்கள் கவிதைகளை படிப்பதானல் எங்களுக்கு சுகம்! அருமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு தளிர் சுரேஷ்.

      Delete
  14. வெங்கனலில் நானிங்கு வெந்தாலும் காப்பதற்கு
    பொங்குதடி உன்காதல் பூமழையாய்- அங்கிருந்து
    ஈதலினால் இன்னும் இருக்கின்றேன் சாகாமல்.
    ஆதலினால் காதல் சுகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா!

      காத வழிபோகக் கண்ணீர்த் திரைமறைத்து
      நோதல் தணித்தென்னில் நிற்பாளை - பேதமறப்
      போதம் அழித்தவளின் போர்க்களத்தில் நான்சரணே
      [co="red"]ஆதலினால் காதல் சுகம்![/co]

      நன்றி.

      Delete
  15. கற்றத் தமிழென்னைக்-அன்று
    கைதூக்கி விட்டாலும்
    உற்ற நண்பரென-இன்று
    உம்போன்றர் துணையுடனே-
    பெற்றேன் பெரும்பெறே-முதுமை
    பெற்றாலும் துயராற
    கற்றேன் ஆதலினால்-கவிதையில்
    காதல் அழகு!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் அன்பிற்கும் அழகிய கவிதைக்கும் நல்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  16. எல்லோரையும் போல வெண்பா மூலமே பாராட்டுரை வழங்க எனக்கும் ஆசை தான்! ஆனால் எனக்கு வெண்பா எழுதத் தெரியாதே! அருமையான பாடலுக்குப் பாராட்டு!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      உங்கள் ஆசை எளிதாய் நிறைவேற இந்தப் பதிவைப் பரிந்துரைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. உங்கள் பரிந்துரைக்கு மிகவும் நன்றி. பொறுமையாக வாசித்து விட்டு முயல்கிறேன்.

      Delete
  17. காதலும் சுகம்;அதைச் சொன்ன இக்கவிதையும் சுகம்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  18. காதல் பற்றி இதுபோல் சுவாரஸ்யமான பதிவுகளை படிப்பதும் சுகம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாகவா ?

      மகிழ்ச்சி :)

      நன்றி.

      Delete
  19. அழகு தமிழில் பிழையில்லா காதல் ஆதலினால் காதல் சுகமே! தேன்மதுரத் தமிழ் காதினில் பாய இன்பக் காதல் மனதினில் இறங்கிட ஆதலினால் காதல் சுகமே!

    ஆசானே கலக்கி விட்டீர்கள்! ம்ம்ம் எங்கள் மனதினை! ஆதலினால் காதல் சுகம் என்று சொல்லி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் ஊக்கத்திற்கு நன்றி ஆசானே.

      Delete
  20. சிட்டுக் குருவி சிறகடிக்க வும்நெஞ்சில்
    கட்டுக் கடங்காத கற்பனையோ - முட்டிதினம்
    வேதனை செய்தாலும் வெல்தமிழைச் சொல்லினிமை
    ஆதலினால் காதல் சுகம் !!!

    நெஞ்சம் நினைந்துருகி நித்தம் நெருப்பிடை
    தஞ்சம் அடையும் தவிப்பிருக்க - கெஞ்சுகின்றயே
    காதல் இரப்பதுவும் கண்ணீர் இனிப்பதுவும்
    ஆதலினால் காதல் சுகம்!!!

    அழகாக சொன்னீர்கள் காதலின் உணர்வை மிக்க நன்றி பதிவுக்கு !தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. மொட்டு விரிவதுபோல் மோனம் விழிதிறந்து
      கட்டும் தளையறுத்த காட்டாற்றில் - திட்டமிலாப்
      போதலெனு மின்பப் புயல்வந்து பூத்தூவும்
      [co="red"]ஆதலினால் காதல் சுகம்[/co]

      வருகைக்கும் அழகிய வெண்பாக்களுக்கும் நன்றி அம்மா.

      Delete
  21. ஆய்வுகள் சோதனைச் சாலையில் மட்டுமே செய்யப் படுவதில்லை ...
    வாழ்த்துக்கள் ..
    சோதனை
    வெற்றிகளை கொணர்ந்திருக்கிறது
    தம+

    ReplyDelete
  22. அன்புள்ள அய்யா,

    கொம்பிரண்டால் வம்புபண்ணும் கொம்பன் தமிழ்மகன்

    கம்பன்போல் பாடும் கவிஞனே! - எண்ணத்தின்

    காதலினால் தேன்பாவாய்க் கானம் இசைத்தாயே!

    ஆதலினால் காதல் சுகம்.

    நன்றி.
    த.ம. 16

    ReplyDelete

  23. வணக்கம்!

    மோனை யிலாதஇவ் வீற்றடியில் முற்றடைத்
    தேனை அடைத்துச் செய்தகவி - ஊனையும்
    மெல்ல உருக்கும்! வியக்கின்ற வெண்பாக்கள்
    சொல்லச் சுரக்கும் சுகம்!

    ஈதலினால் இன்பம்! இளம்விழிகள் தாமுண்ணும்
    மோதலினால் இன்பம்! முதுதமிழை - வேதமென
    ஓதலினால் இன்பம்! உயிரொளி உற்றுவக்கும்!
    ஆதலினால் காதல் அமுது!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  24. ஐயா வணக்கம்.

    தங்களின் வருகைக்கும் அழகிய வெண்பாக்களுக்கும் மிக்க நன்றி.

    முதல் வெண்பாவின் இரண்டாம் அடியில் இரண்டு மற்றும் மூன்றாம் சீர்களைக் கவனிக்க வேண்டுகிறேன். ( அடைத்துச் செய்தகவி)

    நன்றி

    ReplyDelete
    Replies

    1. ஐயா வணக்கம்!

      அடைத்திங்குச் செய்தகவி

      என்றுதான் எழுதினேன்!

      ஆனால் மூன்றாம் முறையும் அழைத்துச் செய்தகவி என்றே வந்துள்ளது!
      நான் முதலில் நகல் எடுத்ததையே ஒட்டியுள்ளேன். என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன். பொறுத்தாற்றுக.

      Delete