Pages

Sunday, 28 June 2015

வெளிநாட்டில் சம்பாதிக்கச் சென்றவனின் வேதனை அனுபவம்!


சுற்றுலாவிற்கென அயல்நாடு செல்லுதலைப் போன்றதன்று பணம் சம்பாதிக்க அயல்நாடு செல்லுதல். அதுவும் திருமணம் ஆன புதிதில் மனைவியை விட்டுச் செல்லுதல் என்பது இன்னும் கடினம். மனைவியைப் பிரிந்து  பொருள் தேடி வேற்று நாட்டிற்குச் சென்றவனின் வேதனைகள் பல நாம் அறிந்ததும் அனுபவித்ததுமாக இன்று இருக்கலாம். ஆனால் நான் சொல்லப்போவது தோராயமாக இரண்டாயிரம் ஆண்டிற்கு முன் வாழந்தவனின் அனுபவம்.


அது அவர்களுக்குத் திருமணம் ஆன புதிது.
ஆரம்பத்தில் உல்லாசமாய்த்தான் போயின நாட்கள்.
பின் தன் குடும்பத்தைக் குறித்த கவலை வந்தது அவனுக்கு.
என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.
நல்ல சம்பளம் வேண்டும்.
கட்டிய மனைவியை நன்றாக வைத்துக் காப்பாற்ற வேண்டும்.
பிறக்கும் பிள்ளைகளைக் கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும்.

உள்ளூரில் அவனுக்கு ஏற்ற வேலை  கிடைக்கவில்லை.
அவ்வூரிலேயே வெளியூருக்குச் சென்று வேலை பார்த்து வசதியாக இருப்பவர்கள் இருந்தார்கள்.
எப்படியோ அவர்களின் தொடர்பால் வேலை ஒன்று கிடைத்தது.
ஆனால், கடல்கடந்து செல்ல வேண்டும்.
அதில் கொஞ்சம் ஆபத்துத்தான்.
எதில்தான் ஆபத்து இல்லை. தன் குடும்பத்திற்காக இதை ஏற்கத்தான் வேண்டும்.
அவளிடம் சொல்லி இதைப் புரிய வைத்து எப்படியாவது ஒத்துக் கொள்ளச் செய்ய வேண்டும்.

மெல்லத் தன் மனைவியிடம் சொல்கிறான்.

மனைவி சொல்கிறாள், “ அதிகம் சம்பளம் இல்லாட்டாக் கூடப் பரவாயில்லங்க. இங்க உள்ளூரிலேயே உங்களுக்குத் தக்க வேலையாப் பாக்கக் கூடாதா?

“இல்ல. இங்க பத்து வருஷத்தில இங்க சம்பாதிக்கிறத அங்க ஒரு வருஷத்தில சம்பாதிச்சிடலாம். நான் என்ன போயி அங்கயேவா இருக்கப் போறேன். நல்லா சம்பாதிச்சிட்டு, இங்க வந்து மிச்ச காலம் எல்லாம் நாம வசதியா இருக்கலாமில்ல..!” என்று அவளைத் தேற்றுகிறான் அவன்.

அவனுக்கும் மனதில்லைதான். “இங்கு நல்ல வேலையாக் கிடைச்சா நாம ஏன் வெளியப் போகப் போறோம்..? நாம கஷ்டப்படுறது இவளை நல்லா வைச்சுக்கணுமின்னு தானே” என்று தன்னைத் தேற்றியபடி புறப்படுகிறான்.

கண்ணீரோடு விடை கொடுக்கிறாள் அவள்.

அவன் நினைத்ததுபோல் வேலையொன்றும் எளிதாய் இல்லை.
அது காட்டினை அழித்து நாடாக்கும் வேலை.
மரத்தினை வெட்ட வேண்டும்.
வெட்டிய மரத்தினை உருட்டிச் சேர்க்க வேண்டும்.
சேர்த்த மரத்தினைக் கயிற்றால் கட்ட வேண்டும்.
பாகர்கள்  வழி நடத்த யானைகள் அவற்றைத் தூக்கிச் செல்லும்.

வீட்டில் அவனுடலில் சிறு சிராய்ப்பென்றாலே அலறிப்புடைத்து மருந்திடும் அன்பு மனைவி.

இங்கோ மரம் வெட்டித் தோல் வழன்ற கையும், முள்ளும் கிளையும் கிழித்து உடலெங்கும் ஆன காயங்களும் கொண்டு பேணுவாரற்ற பிணம் போலானது அவன் உடல்.

பல நேரங்களில் அவன் உடலின் வியர்வையைவிடக் கண்ணீர் அதிகம் சுரக்கும்.

“நாம் அவளைப் பார்ப்போமா………..அல்லது இங்கேயே…………?

இப்படியே புறப்பட்டுப் போய்விட்டால் என்ன..?

நினைத்தபோது போய்விடப் பக்கத்துத் தெருவிற்கா வந்திருக்கிறோம்..?”

அவன் மனப்போராட்டத்தில் வேகம் எடுக்கும் கைகள் மரத்தினை வேகமாக வெட்டிச் சாய்த்தபடி இருக்கும்.

அவனது இரவுகள் மிகக் கொடூரமானவை.

பேய்போல்  பகலில் செய்த வேலைக்குப் பிணம் போல் உறக்கம் வரும்.

அவனும் வந்த புதிதில் அப்படி உறங்கியவன்தான்.

ஆனால் இப்போதெல்லாம்  இரவுகள் அட்டைப் பூச்சிகளென அவன் உடலெங்கும் பரவுகின்றன.

கடித்துத் தம் உடல்புடைக்க, வலியுணர்ந்து ஒவ்வொன்றாய் அவற்றினைப் பிய்த்தெறிந்து கொண்டிருப்பான் அவன். கடிபட்ட இடங்களில் இருந்து அவள் நினைவு குருதியெனப் பீறிட்டுக் கொண்டிருக்கும் வேதனை.

உறக்கமின்றிச் சிவந்த அவன் விழிகளைக் காலைச் சூரியன் பிரதிபலிக்க விடியலில் மீண்டும் வேலை தொடங்கும்.

அன்றும் அதுபோல் ஓரிரவில்,

வேதனை தாளொண்ணாமல் தன் கூடாரம் விட்டு வெளிவருகிறான் அவன்.

வெளியே தென்படும் காட்சி அவனைத் திடுக்கிட வைக்கிறது.

என்ன இது..? இவள் தன் மனைவியல்லவா..?

அவள் இங்கெப்படி வந்தாள்..?

அதுவும் கண்ணுக்கு எட்டியவரை தன் கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு...

அதோ அவளது துயர் படிந்த  கண்கள் நீர் நிரம்பிப் பளபளக்கின்றன...!

அழாதே..!

அவள் எப்படி இங்கு வந்தாள்? இங்கென்ன வேலை என்றெல்லாம் கேட்கத் தொன்றவில்லை.

அப்படியே அவளிடம் சரிந்து வீழ்கிறான்.

பொன் பொருள் எதுவும் இனி எனக்கு வேண்டாம். அதை எங்கு வேண்டுமானாலும் எப்போது  வேண்டுமானலும் சம்பாதித்துக் கொள்ளலாம். நீ இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட எனக்கு வேலையில்லை.
இதோ வருகிறேன்.

எனக்கு ஞானம் பிறந்தது.

உன் அண்மை....அதை இவ்வுலகில் வேறு எதுவும் தந்துவிட முடியாது.”
என்றபடி அவளை நோக்கி அவன் கால்கள் உறுதியுடன் முன்னேறுகின்றன.

யாருமற்ற பேரிரவில் இலக்கற்ற எதையோ நோக்கிப் பயணிக்கிறது அவன் உடல். அது வசமற்று இழுத்துச் செல்லும் அவனது மனப்பித்து.

திடீரென அவனுள் இருக்கும் அறிவு விழிக்கிறது.

அது சொல்கிறது.

“முட்டாளே நில்! எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்..?

“ அவள்....... கூந்தல் ” என முணுமுணுக்கிறது அவன் வாய்.

“இது அவள் கூந்தல் அல்ல. இரவு.

அந்தக் கண்களின் கண்ணீர்...!

இது அவள் கண்கள் அல்ல. மலர்கள்.

அதில் துளிர்த்திருப்பது அவள் கண்ணீர் அல்ல. பனித் துளி.

நன்றாகப் பார்.

இதெல்லாம் உன் மனம் உன்னை ஏமாற்றச் செய்யும் மாய வேலை.

இவ்வளவு தூரம் வந்தது கஷ்டப்பட்டது இதற்காகவா..?

பாதியிலேயே வேலையை விட்டுப் போனால் இவ்வளவு நாள் உழைத்தற்கும் பலனில்லாமல் போய்விடுமே..!!

ஊரில் உள்ளோர் நீ எதற்கும் லாயக்கில்லாதவன் என எள்ளி நகையாடுவார்களே..!

இன்னும் சிறிது காலத்தில் நீ நினைத்தபடி பணம் சேர்த்து அவளுடன் சேர்ந்து நீ விரும்பிய படி வாழலாம். இவ்வளவுநாள் பொறுத்தாயே..! இன்னும் சில நாள்தான். இவ்வளவுநாள்  பாடுபட்டதற்கும் பலன் கிடைக்கப்போகிறது. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டாமா.? வெண்ணை திரண்டுவரும் நேரம் தாழி உடைத்துப் போகாதே!

திரும்பி உன் கூடாரத்திற்குப் போ”

கண்டிக்கிறது அறிவு.

மனம் சொல்வதைக் கேட்பதா, அறிவு சொல்வதைக் கேட்பதா என அறியாமல் தடுமாறியபடி கால்கள் தளர, தலையில் கை வைத்தபடி நடுவழியில் அமர்கிறான் அவன்.

இருட்டின் மெல்லிய வெளிச்சத்தில்

அவன் முன்னே யானைகள் கட்டப்பட்ட களம்.

இருளைப் பிடித்து வைத்தாற்போலச் சில யானைகள் படுத்துக்கிடக்கின்றன.  சில நிற்கின்றன. சில தங்கள் துதிக்கையைச் சுழற்றியபடி விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அவற்றுள், இரு யானைகள் , மரம் கட்டும் வலிமையற்றது எனக் கழிக்கப்பட்ட புரிகள் அறுந்து தேய்ந்த ஒரு கயிற்றைத் துதிக்கையில் பிடித்துக்  கொண்டு விளையாடிக் கொண்டிருக்கின்றன.

கயிற்றின் இரு முனைகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு யானை பிடித்துக் கொண்டு வெவ்வேறு திசைகளில் இழுக்கின்றது.



ஓஒ.... அவற்றிடையே யார் பலசாலி என்பதைப் பார்க்கக் கயிறு இழுக்கும் போட்டி..!

கயிறோ மிகவும் தேய்ந்து புரிகள் சில அறுந்த கயிறு.

இழுக்கும் யானைகளோ பலம் வாய்ந்தவை.

வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்முன் இந்தத் தேய்ந்த கயிறு அறுந்து போகுமே..!

அவன் மனம் இந்த யானை விளையாட்டில் லயிக்கிறது.

அவன் கண்கள் கூர்மையடைகின்றன.

மெல்ல யானைகளுக்கு இடையில் அல்லாடும் கயிறு உருமாறுகிறது.

அது…..அது………… நைந்து போன ஒரு மனித உடல்.

அதன் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் இருயானைகள் பிடித்து இழுக்கின்றன.

ஐயோ.. உயிர் இருக்கிறதா அவ்வுடலில்…?

இந்த இரவு நேரம் யானைக்களத்திற்கு வந்து அவற்றிடம் சிக்கிக் கொண்டது யாராய் இருக்கும்..?

சற்று அண்மையில செல்கிறான் அவன்.

அவன் உடல்  ஒருகணம் அதிர்கிறது.

இது……….இது………. நானல்லவா..?

கண்களைக் கசக்கிப் பார்க்கிறான்.

இல்லை . அது கயிறுதான்.

மனம் ஒரு புறமும் அறிவு ஒரு புறமும் இழுக்க அவனை யானைகள் இழுக்கும்  தேய்புரிப்பழங்கயிறாக்கிக் காட்டியது அவன் கற்பனை.

இனி அவன் நிலை என்ன..?

செய்வதறியாது திகைத்துப் போய்க் கலங்கி நிற்கிறான் அவன்.


பொருள்தேடி அயல்நாடு செனறு ஏங்கித் தவிப்பவனின் மனநிலையை நற்றிணைப் பாடல் ஒன்று இப்படிப் பதிவு செய்கிறது.



புறந்தாழ்பு இருண்ட கூந்தற் போதின்
   
நிறம்பெறும் ஈரிதழ் பொலிந்த உண்கண்
   
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
   
செல்லல் தீர்க்கஞ் செல்வாம் என்னுஞ்
           
செய்வினை முடியாது எவ்வஞ் செய்தல்
   
எய்யா மையோடு இளிவுதலைத் தருமென
   
உறுதி் தூக்கத் தூங்கி அறிவே
   
சிறிதுநனி விரையல் என்னும் ஆயிடை
   
ஒளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய
           
தேய்புரிப் பழங்கயிறு போல
   
வீவது கொல்என் வருந்திய வுடம்பே.
                                                                                284. நற்றிணை.
                                                                        தேய்புரிப்பழங்கயிற்றினார்.

இனிச் சொற்றொடர் பொருள்.

     புறம் இருண்ட தாழ்பு கூந்தல் போதின் நிறம் பெறும் – புறவெளியில் உள்ள இருளானது  வீழ்ந்து (பரந்து) கிடக்கும் அவளது கூந்தலின் நிறம் பெறும்.

 ஈர் இதழ் பொலிந்த உண்கண் – ஈரம் பொருந்திய இதழ்களை உடைய மலர்கள் அவள் மைதீட்டப்பட்டுக் கண்ணீர் நிறைந்த கண்களாய்த் தோன்றும்.

 உள்ளம் பிணிக்கொண்டோள் வயின் செல்வாம் - ( இனி நாம் இங்கிருத்தல் தகாது) நம் உள்ளத்தைப் பிணித்தவளிடம் செல்வோம்.

செல்லல் தீர்க்கம் என்னும் நெஞ்சம் –செல்லுதலே (துயர்) தீர்க்கும் என்று சொல்லிப் புறப்படுகிறது என் நெஞ்சம்.

 அறிவே – ( ஆனால் ) அறிவோ,

 செய்வினை முடியாது எவ்வம் செய்தல் – என்னால் முடியும் என்று சொல்லிப் புறப்பட்ட செயலை முடியவில்லை என்று சொல்வது

 எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என –  அறிவில்லாதவன் என்ற அவப்பெயரோடு இழிவினைப் பெற்றுத் தரும் என்று

உறுதி தூக்கத் – ( நான் அவளைக் காணப் புறப்படக் கிளம்பிய) உறுதியான முடிவை அசைத்துப்பார்க்க

தூங்கி சிறிது நனி விரையல் என்னும் – ( அறிவு ) மயங்கி நீ செல்லவேண்டாம் என்று சொல்லும்.

ஆயிடை – இவ்வாறு மனம் ஒரு புறமும் அறிவொரு புறமும் இழுக்க

வருந்திய என் உடம்பு  அவற்றின் நடுவில் பட்ட என் உடலோ

 ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய – வெண்தந்தங்களை உடைய யானைகள்  இருமுனைகளையும் பற்றி இழுக்க

 தேய்புரிப் பழங்கயிறு போல –  தேய்ந்த புரிகளையுடைய பழைய கயிறு போல

வீவது கொல் -  அழிய வேண்டியதுதானே..?


இதை எழுதிய சங்கப் புலவரின் பெயர் தெரியவில்லை.

இப்பாடலில் அவர் பயன்படுத்திய உவமையால், தேய்ப்புரிப்பழங்கயிறார் என்னும் பெயரால் அவரைச் சங்கப் பாடல்களைத் தொகுத்தோர் அழைத்தனர்.

இப்பாடல் பொருள்தேடிப் பிரிந்த தலைவனின் அவலத்தைச் சொல்கிறது.
இப்பாடலின் மையம் இதுதான்.

பிரிதல் பற்றியும் அதன் காரணங்களையும் பாடுவது பாலை எனப்படுகிறது.

எனவே இது பாலைத் திணையின்பாற்படும்.

மருதமும் பிரிதல்தான்.

ஆனாலும் தலைவியின் பார்வையின் பாலைக்கும் மருதத்திற்கும் வேறுபாடு உண்டு.

அது என்ன..?

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images

57 comments:

  1. பொருள்தேடி அயல்நாடு சென்று ஏங்கித் தவிப்பவனின் மனநிலையை நற்றிணைப் பாடல் ஒன்று இப்படிப் பதிவு செய்கிறது.//

    எக்காலத்திற்கும் பொருந்தும்......விளக்கம் அருமை சகோ. தொடர்கிறேன்...
    தம 3

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  2. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மிக அருமையாக இதைவிட தெளிவாக எளியமையாக யாரால் எழுதமுடியும், பழம் பாடல்களை இப்படி விளக்கி சொல்லி கொடுத்தால் தமிழ் வேண்டாம் என்று சொல்லுபவன் கூட தமிழ் கற்றுச் செல்வான். பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும் திரு மதுரைத் தமிழன் அவர்களே!

      நன்றி

      Delete
  3. அண்ணா, இப்படி ஒவ்வொரு பாடலையும் விளக்கினால் மீண்டும் ஒரு முறை கூட படிக்க வேண்டாம், அப்படியே மனதில் பதிகிறது. மதுரைத் தமிழன் சகோ சொல்வது போல் யாராலும் இப்படித் தெளிவாக அழகாகச் சொல்ல முடியாது.
    பொருளீட்ட மனைவியைப் பிரிந்து தொலைதூரம் சென்று உடல் வருந்த உழைப்பவனின் மன நிலையை எவ்வளவு அழகாகச் சொல்கிறது பாடல். நம் இலக்கியங்களில்தான் எவ்வளவு விசயம் இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!

      உங்களைப் போன்றவர்களின் முயற்சிக்கும் எழுத்திற்கும் முன்னால் இதெல்லாம் சிறு துரும்பு அல்லவா.

      உங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றிகள்.

      Delete
    2. அண்ணா, வேணாம் ...நான் அழுதுருவேன்...
      :-)

      உங்களுக்கு ரொம்ப ரொம்ப தன்னடக்கம் அண்ணா.

      Delete
    3. http://thaenmaduratamil.blogspot.com/2015/06/theeyil-mezhukaai-ainkurunooru-32.html
      நேரம் கிடைக்கும்பொழுது பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் அண்ணா, நன்றி

      Delete
  4. என்றுமே இந்நிலைதான் எண்ண வலிக்கிறது
    கண்ணீரோ காவிரியாய் கன்னம் கரைக்கிறது
    பெண்ணையும் மண்ணையும் விட்டுப்போய் இன்னல்கள்
    கொண்டவனும் பட்ட துயர் !

    கணவன் தொலை தூரம் சென்று படும் அல்லல்கள் அனைத்தையும் இப் பாடல் புரியவைக்கிறது . உங்கள் அழகான விளக்கம் காண மகிழ்ச்சியாகவே உள்ளது. தமிழை இன்னும் கற்க ஆவல் பெருகுகிறது.
    அருமை அருமை ! காலத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது பதிவு நன்றி வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா.

      என்ன.... என்னையும் வெண்பா எழுத வைக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறது,...

      “நாடுவிட்டு வந்து நரகின் இடைப்பட்டுக்
      கூடெனினும் நம்வீடே கோயிலென - நீடுநினைந்
      தாற்றி அழுவார் அகம்காய்வார் எல்லோர்க்கும்
      நேற்றிருந்தான் காட்டும் நினைவு.”

      தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அம்மா.

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    பொருள் வேண்டி மனைவியை விட்டுக் கடல் கடந்து இன்று வெளிநாடு செல்பவர்பளின் மனநிலையை வெகு உண்மையாக கூறி... அந்தக் காலத்தில் ‘நற்றிணை’ பாடலோடு ஒப்பிட்டுக்கூறி விளக்கியது அருமை.

    வெளிநாட்டில் வாழும் நம்மவர்கள் வியந்தும் விரும்பியும் படிப்பார்கள்.

    நன்றி.
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. ஆகா
    நம் முன்னோர் எழுதாமல் விட்டு வைத்த செய்தி
    ஒன்றுமில்லையோ
    பாட்டும் அதை தாங்கள் எடுத்துரைத்த விதமும் அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete
  7. பொருள் வேண்டி வெளி நாடு மட்டுமல்ல வெளி மாநிலம் செல்பவர்களுக்கு கூட இதுபோன்ற மனநிலை ஏற்படுவதுண்டு. இதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பனை செய்து எழுதிய அந்த பெயர் தெரியா புலவர் பெருமானுக்கு பாராட்டுவதோடு, அவரின் பாடலை எங்களுக்கு புரியும் வண்ணம் விளக்கிய தங்களையும் பாராட்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      நீங்கள் சொல்வது உண்மைதான்.

      நம் இடம் நீங்கிக் குடும்பம் விட்டு வேறிடம் உறைதல் வேதனைதான்.

      பொருளீட்டுதலுக்காக என்று சொன்னாலும் கூட அது மகத்தான தியாகம்தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete
  8. என்னவொரு எளிமையான அருமையான விளக்கம்... நன்றி... வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. பாலை -பிரிவின் நிலையைச்சொல்வது
    நெய்தல் -குறித்த நேரத்தில் வராமல் போன தலைவனை நினைத்து வருந்துதல்.
    இவை தான் என் அறிவிற்கு எட்டிய வேறுபாடு. ஆனாலும் என்ன சொல்லப்போகிறீர்கள் என்ற ஆவலுடன்....காத்திருக்கிறேன்.
    காட்சியை அழகாக கண் முன் கொண்டு வந்தது தாங்கள் விளக்கிய விதம். நன்றிங்க ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே.

      சிறு தவறு நேர்ந்தது என் கேள்வியில்.

      அது பாலையின் பிரிவிற்கும் மருதத்தின் பிரிவிற்கும் தலைவியின் மனநிலையை ஒட்டிய வேறுபாடு என்ன என்பதாய் இருந்திருக்க வேண்டும்.

      தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்கப்படும்தானே.

      இல்லாவிட்டாலும் உங்கள் பதில் சரிதான்.

      தலைவியைப் பொறுத்தவரை இரண்டும் பிரிவுதான் என்றாலும்

      பாலையில் நிகழும் பிரிவு ஏதேனும் தேவை கருதியது. தலைவனின் மேல் அவளுக்கு அன்பையும் காதலையும் மிகுவிக்கக் கூடியது. நாட்களை எண்ணி எண்ணி காலம் வேகமாக ஓடிப் போகாதோ எனத் தவிப்புடன் இருக்கும் காத்திருத்தல் அது.

      மருதத்தில் பிரிவோ அவன் உடல் சுகம் தேடி பொதுப்பெண்டிரை நாடிச் செல்வதால் ஏற்படுவது. இங்குத் தலைவன் மீது கொண்ட அன்பினால் அவள் மனதில் கோபமும் வெறுப்பும் இயலாமையும் மனக்கசப்பும் தோன்றும்.

      இரண்டிடத்தும் நிகழும் பிரிவை தலைவியின் மனநிலையை ஒட்டிய எளிய விளக்கமாக இப்படிச் சொல்லலாம்.

      பாலை என்பது கணவனின் பிரிவை எண்ணி ஆற்றி இருத்தல்.

      மருதம் என்பது அவன் பிரிவினை எண்ணிய ஆற்றாமை.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!

      Delete
  10. மிக அருமையான எளிமையான விளக்கம்! காட்சியை கண் முன்னே கொண்டுவந்து நிறுத்திவிட்டீர்கள்! நீங்கள் ஆங்கில ஆசிரியர் என்று சொல்வதை நம்ப முடியவில்லை! பிள்ளைகளுக்கு தமிழும் சொல்லிக் கொடுக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      ஹ ஹ ஹா..

      ஆங்கில ஆசிரியர் என்பதை நம்ப முடியல்லையா..!


      நான் என்ன செய்யட்டும் :(


      “““““பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கலாமே..”””””

      விட்டால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்.

      மொத்தத்தில் மொழி இனிது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. Thanks viju. Tears in my eyes. I have no words.Thanks a lot to you and the poet.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா.

      ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கும் உங்களின் நிலையையும், உங்களின் கவிதையையும் பார்க்கச் சட்டெனத் தேய்புரிப்பழங்கயிறு வரும் இந்தப் பாடல் நினைவு வந்து மனம் கனத்தது.

      சங்க காலத்தில் பொருள் ஈட்டத் தன் குடும்பத்தை விட்டு நெடுந்தொலைவு சென்று நைந்து நலிந்து, நீண்டகாலம் வாடும் ஒருவனின் மனப்பதிவு.

      ஒரே மூச்சில் முழுவதையும் சடசடவென தட்டச்சுச் செய்து முடித்துத்தான் ஓய்ந்தேன்.

      அதனால்தான் தங்களின் வருகையையும் கருத்தையும் வேண்டினேன்.

      உங்களின் மனநிலையை உணர்கிறேன் அண்ணா.

      அதையும் தாண்டி தங்களின் தமிழ் சுவைக்க வேண்டி நிற்கிறது என் சுயநலம்.

      எல்லாம் நலமாகும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  12. வணக்கம் என் ஆசானே,
    தெரிந்த பாடல், ஆனால் தாங்கள் சொல்லும் விதம் அருமை,
    இப்படி படித்து இருந்தால் நன்றாக இருக்கும், சரி இனி நான் சொல்லிக்கொடுக்கவாவது பயன்படட்டும்,
    முல்லை நிலத்தில் கணவன் திரும்பி வருவது உறுதி என்பதனால் ஆற்றிக்கொண்டு இருத்தல் உரிப்பொருள் ஆயிற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோரது நிலை அதுவன்று. எனவே மனைவி கவலைப்படுவது இரங்கலாயிற்று.
    பொருள், போர், கல்வி முதலான புறப்பொருள் நிமித்தம் தலைவன் பிரிதலும், தலைவி வாடுதலும் பாலை எனல்
    சரியா ஆசானே,
    பரத்தையர் மாட்டு சென்ற அதாவது வேறொருத்தியோடு வாழ்ந்த தலைவனிடம் தலைவி கொள்ளும் ஊடல்,மருதம்,
    சரியா ஆசானே,
    தாங்கள் சொல்வது,,,,,,,,,
    ஏதோ சரியா படிக்காத எனக்கு தெரிந்தது,
    சொல்லூங்கள்,
    நன்றி.
    தளிர் சுரேஷ் அவர்கள் சொல்வது போல் தாங்கள் ஆங்கில ஆசிரியர் தானா????????????????
    எக்காலமும் உள்ள கலக்கம்,,,,,,,,,,,
    வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே.

      என் கேள்வியில் பிழையிருந்தது. தற்போது திருத்திவிட்டேன்.

      நான் கேட்க நினைத்தது, பாலையின் பிரிவிற்கும் மருதத்தின் பிரிவிற்கும் தலைவியின் மனநிலை எப்படி வேறுபட்டு இருக்கும் என்பது..!

      தலைவனின் வரவெண்ணி ஆற்றியிருத்தல் பாலை.

      தலைவனின் பிரிவிற்கு ஆற்றாமை மருதம்.

      இது நான் பெற நினைந்த பதில்.

      கேள்வி தவறானதால் வேறு சில கேள்விகளைத் தங்களிடம் கேட்கலாம் தானே?

      ஒருகேள்வி தவறாயிற்றென்பதால் சில கேள்விகள்,

      இப்பாடலில் ,

      அவன் அவளைப் பிரிந்து நீண்ட காலம் ஆயிற்று என்னும் குறிப்பு எங்குள்ளது..?

      அவன் கடல் கடந்து சென்றுள்ளான் என்பதை எப்படி இப்பாட்டில் இருந்து அனுமானிக்க முடியும்?

      அவனது உடல் நிலை உழைப்பால் சீர் கெட்டது என்பதை எப்படி அறிகிறோம்?

      இப்பாடல் நடைபெறும் களம், காடு கொல்லுதல் என்பதாக எப்படிக் கொள்ளமுடியும்?

      ( அப்பாடா. . . இது போதும் ☺ )

      தங்களின் பதில் நாடுகிறேன்.

      நான் ஆங்கில ஆசிரியரா எனப் பலரும் கேட்க எனக்கும் இப்போதெல்லாம் அந்தச் சந்தேகம் வருகிறது :)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. வணக்கம் என் ஆசானே,
      இது என்ன விளையாட்டு,
      கேள்வி தவறு எனின் கூடுதல் மதிப்பெண் வழங்குதல் மரபு,
      ம்ம்,,,,,,,,,,
      என்னை இப்படி மாட்டிவிட, நான் ஏதும் கேள்விகள் தங்களைக் கேக்கவில்லையே,
      நான் இதற்கு வரவில்லை,
      விடுங்கள் என்னை,
      நன்றி.

      Delete
    3. வணக்கம் என் ஆசானே,
      சரி, இதோ எனக்கு புரிந்த நிலையில்,
      புறம்பு- முதுகு
      புறவு- காடு
      இது, பொருள் முடியா நின்ற தலைமகன் ஆற்றானாகிச் சொல்லியது,

      Delete
    4. தங்கள் முதல் கேள்வி, என்ன?
      அவன் அவளைப் பிரிந்து நீண்ட காலம் ஆயிற்று என்னும் குறிப்பு எங்குள்ளது..?
      கயிற்றைக் கருவிக்கொண்டு அறுக்காமல் ஈர்த்தவழி அது புரிபுரியாய் நெக்குற்று அறுபடுவது பற்றி தேய்புரி கயிறு என்றும்,
      நீண்ட காலம் பயண்பட்ட பொருள் இற்று போவது எனும் உலக வழக்கு,
      சரியா ஆசானே,
      ம்ம்,,,,,,,,
      தங்கள் இரண்டாம் கேள்வி,
      அவன் கடல் கடந்து சென்றுள்ளான் என்பதை எப்படி இப்பாட்டில் இருந்து அனுமானிக்கமுடியும்?
      அவன் கடல் கடந்து சென்றுள்ளான் என்பது,
      மையுண்ட கண் நெய்தல் மலரின் நெய்தல் மலரின் தண்ணிய இதழ் போறலால் போதின் நிறங்கினர் ஈரிதழ் எனப்பட்டது,
      நீனிற நெய்தலிற் பொலிந்த வுண்கண் நெய்தல்- எனும் போது கடல் கடந்து சென்றுள்ளான் எனும் குறிப்பு, இதுவும் நான் புரிந்துக்கொண்ட வகையில் எனல்,
      அடுத்து தங்களின் 3 கேள்வி,
      அவனது உடல் நிலை உழைப்பால் சீர் கெட்டது என்பதை எப்படி அறிகிறோம்?
      நெஞ்சின் கண் நிகழும் நினைவெல்லாம் தலைவியின் உருநலம், குணநலம், செயல் நலங்களேயாக இருப்பது பற்றி நெஞ்சை உள்ளம் பிணிக்கொண்டோள் என்றான்,
      நெஞ்சம் உடல் வழி நின்று அதன் செயலாகிய உடம்பு தரு பணிக்கண் இயைந்தொழுகு மாகலின், உடலையும், அதன் பணியையும், அதனை இயக்கும் உயிரையும் அதற்கு வேண்டும் உறுதியையும்,,
      இப்பாடல் நடைபெறும் களம், காடு கொல்லுதல் என்பதாக எப்படிக் கொள்ளமுடியும்?

      Delete
    5. மனம் ஒரு புறமும் அறிவு ஒரு புறமும் இழுக்க அவனை யானைகள் இழுக்கும் தேய்புரிப்பழங்கயிறாக்கிக் காட்டியது அவன் கற்பனை.
      ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
      அய்யா சரியா?
      ஏதோ பார்த்து மதிப்பெண் இடவும்,
      இப்படி எல்லாம் பயமுறுத்த வேண்டாம்,
      நான் சின்னப் பெண் ஏதோ தெரியாமல் கேள்வி கேட்டு இருந்தால்,,,,,,,,,,,,,,,
      சிறிது நேரம் கொடுங்கள் இன்னும் தெளிவாக சொல்ல முயற்சிக்கிறேன், நன்றி. மீண்டும் வருவேன்.
      நன்றி.

      Delete
  13. திரை கடல் ஓடியும் திரவியம் தேடுபவன் மனநிலை ஓக்கே. இவன் நினைவால் வாடும் மனைவிகுறித்தும் ஏதாவது யாராவது பழைய இலக்கியங்களில் எழுதி இருக்கிறாகளா.?

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் சிவக்குமரன் அண்ணாவின் பதிவில் இருந்தது பாவனைப் பாடலன்று.

      அவர் தற்போது பணி நிமித்தம் ஆப்ரிக்காவில் இருக்கிறார்.

      அவர் வெளியிட்டிருந்த கவிதை காணத் தோன்றியதுதான் இந்தப் பதிவு.

      அங்கு உங்களின் பின்னூட்டம் கண்டதால் இக்கருத்தைக் கூறினேன்.

      பிரிவு நினைந்து இரங்கும் பெண்ணின் மனவுணர்வுகளைப் புலப்படுத்தும் பழைய இலக்கியப் பாடல்கள் நோக்க, ஆணின் உணர்வு குறித்துச் சித்தரிக்கும் பாடல்கள் குறைவே.

      நிறைய இருக்கின்றன ஐயா.

      பதிவில் தொடர்கிறேன்.

      நன்றி.

      Delete
  14. வயிற்றுப்பிழைப்பிற்காக செல்பவனின் நிலையை நினைத்து வருத்தப்படுவதா? இலக்கியத்தின் பெருமையை நினைத்து மகிழ்ச்சி கொள்வதா? நம் மண்ணை விட்டுப் பிழைக்கப் போனவர்களின் நிலையை எடுத்துச் சொல்லும் பாங்கினை, வேதனையை ஒவ்வொருவரும் உணரும் வகையில் உணர்த்தியதைப் பாராட்டுவதா? சிறிது நேரத்தில் மனம் அல்லாடிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர்வருகைக்கும் ஊக்கப்படுத்தும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  15. பொருளீட்டலின்கண் உள்ளத்தைப் பிணித்துப் பற்றிக்கொண்டவளின் பிரிவையும், அதன் கொடுமையும் மிக நேர்த்தியாக படைக்கப்பட்ட பாடலின் வழி நன்கு விளங்க வைத்துள்ளீர்கள். களிறும், கயிறும் அருமையான உவமைகள். மகளிர்பால் சில சூழ்நிலைகளில் மயங்கினார்க்கு ஆராய்ச்சி தோன்றாமையும், மயங்காதார்க்கு ஆராய்ச்சி மேம்படத் தோன்றக்கூடும் என்பதையும் நற்றிணையின் இப்பாடல் வழி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.
    சங்கம் வளர்த்த தமிழ்க்கவிகள் சால்புற
    மங்கும் மதியின் மருளவிழ - எங்களுக்கு
    பற்பல செய்திகள் பாங்காய்ப் பகிர்ந்தீரே!
    கற்றிடக் கண்டோம் களிப்பு.
    தன்நிகர் அற்றத் தமிழில் பதிவேற்றும்
    நின்மதி எண்ணி வியக்கின்றேன் - பொன்பதிவை
    வேர்வாங்கி மண்ணில் தழைத்தோங்கும் புற்களும்
    சீர்தூக்கிச் செப்பும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      அருமையாக மரபுக் கவிதை எழுதுகிறீர்கள்.

      தங்களது பதிவுகளில் இதனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் ஊக்குவிக்கும் வெண்பாக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. ஹா..... அருமையாக எடுத்தாண்டிருக்கிறீர்கள். இன்றைய நிலைக்கும் கூட எவ்வளவு பொருத்தம்! அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

      Delete
  17. ஆசானே! என்ன ஒரு எளிதான, அருமையான விளக்கம் நற்றிணைப் பாடலுக்கு.....ஏற்கனவெ சொல்லியது போல இப்படி எல்லாம் மரண்டைகள் எங்களுக்கும் புரியும் படி சொன்னால் எந்தக் குழந்தைதான் தமிழ் கற்க தயங்கும்.....?!!! நீங்கள் ஆங்கில ஆசிரியர் என்றாலும்....தமிழுக்காக நீங்கள் இணையக் கல்வி ஆரம்பித்துவிடலாம்...இல்லை என்றால் உங்கள் மாணவர்களுக்கு உங்கள் வலைத்தள முகவரி கொடுத்துப் படிக்கச் சொல்லலாம்.... இது நீங்கள் ஆங்கிலமும் கூட இப்படித்தான் எளிமையாகப் புரிய வைப்பீர்கள் என்று நினைக்கின்றோம்....மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ஆசானே!

    அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முதலில் நன்றி ஆசானே!

      தங்களின் அன்பை அறிவேன்.

      அதனால் இதோ தங்களின் இந்தப் புகழ்ச்சியையும்.

      பள்ளியில் மணவையார் அன்றி வேறெவர்க்கும் ( ஆசிரியர்க்குக் கூட ) இந்தத் தளம் பற்றித் தெரியாது ஆசானே!

      பத்திரிக்கைகள் படிப்பதையே பாரமாக நினைப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கும் போது, மாணவர்கள் நிலைதான் என்ன..?!


      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. அன்று நற்றிணை இந்த நிலையைதான் இன்றைய மன நல மருத்துவர்கள் 'ஹல்லுசினேசன் ' என்கிறார்கள் :)

    ReplyDelete
  19. வணக்கம்
    ஐயா

    இன்றைய நினைவுகளை சங்கால கருப்பொருலுடன் கருத்து சொல்லிய விதம் மிக சிறப்பாக உள்ளது... படித்து மகிழ்ந்தேன் ஐயா பகிர்வுக்கு நன்றி த.ம 13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு, ரூபன்.

      Delete

  20. வணக்கம்!

    பாலைத் திணையில் படைத்திட்ட பாட்டுக்குச்
    சோலை உரைகண்டு சொக்குகிறேன்! - வேலையினைத்
    தேடும் பிரிவினைச் செப்புகின்ற நற்றிணை
    சூடும் கவிகள் சுகம்

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஐயா
      வணக்கம்.

      நீண்ட கடற்பரப்பை நாடும் அலைப்பூவும்
      தீண்டும் அணுத்துகளே சொல்வதெலாம் - ஈண்டறிய
      உள்ளதெலாம் கோடி ஒருபிறவி போதாதே
      துள்ளுந் தமிழ்சொல்லத் தான்.

      தங்களது வருகைக்கும் வெண்பாவிற்கும் நன்றி ஐயா.

      Delete
  21. என்றோ படித்தது! நினைவுபடத்தினீர்! விளக்கம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நினைவு கூர்தலுக்கு நன்றி ஐயா.

      Delete
  22. என்ன அருமையான விளக்கம்!
    அருமை ஐயா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி திரு. குட்டன்.

      Delete
  23. பழைய பாடலைப் படித்துப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அருமையாக இன்றைய தமிழில் விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டு . கொஞ்சம் சுருக்கியிருக்கலாமோ ?

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களைப் போன்ற அறிஞர்கள் இத்தளம் வந்து கருத்திடுவது நான் இன்னும் அதிகக் கவனமாய் இருக்கத் துணைசெய்வதாகும்.

      தங்களின் பாராட்டிற்கு நன்றி.

      இனி வரும் பதிவுகளில் தங்கள் அறிவுரையை மனங்கொள்கிறேன்.

      நன்றி.

      Delete
  24. வெளிநாடு சென்று பொருள் ஈட்டிவர சென்றவர்களின் பெரும்பாலான வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது

    ReplyDelete
  25. வெளிநாடு சென்று பொருள் ஈட்டிவர சென்றவர்களின் பெரும்பாலான வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னும்....!!!!


      நன்றி வலிப்போக்கரே!

      Delete
  26. மூன்று நாட்களாய் வெளியூர் சென்றிருந்தேன். இப்போது தான் வாசித்தேன். என்ன அருமையான உவமை! தேய்புரிப்பழங்கயிறு போல உழைத்துழைத்து ஓடாய்த் தேய்ந்த பின்னரும் அவன் இன்னும் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை; பயணச்செலவு உட்பட தேவையான அளவு சம்பாதித்து ஊர் திரும்பி மனைவியைக் காண்போமா என்று அவனுக்கு ஐயம் வந்துவிட்டது; அதனால் தான் தலைவிரி கோலமாக மனைவி அழுவது போல் பிரமை! ஒரு சிறுகதையாக விரிக்கும் அளவுக்குப் பொருட்செறிவு மிகுந்த பாடல்! இதுவரை ப் படித்தறியாத பாடலை எடுத்து விளக்கியமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      இருள் அவள் கூந்தலாக இழைபிரித்துக் கிடப்பதுபோல் தோன்றும் காட்சி.

      மலர்கள் கண்களாய், அதில் திரண்ட பனித்துளி கண்ணீராய்க் கவிஞன் காட்சிப்படுத்தும் போது..............

      நாம் பிரிவுற்றுத் தேய்ந்த ஒரு மனிதனின் உடற்கூட்டைக் காண முடிகிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  27. ஐயா, வணக்கம்,
    சகோதரர் சீராளன் மூலம் இந்த வலைப்பக்கம் எனக்கு அறிமுகம் ஆனது.
    யாப்புச் சூக்குமம், விருத்தத்தூண்டில் போன்ற இலக்கணப் பகுதிகளால் நான் மரபு கற்று ஓரளவு வெண்பா எழுத கற்றுக்கொண்டேன்.

    இன்னும் கொஞம் உள்ளே சென்று பார்த்தால், அப்பப்பா! தமிழ்ப்பெட்டகம்!

    இதோ இப்போது நாள் முழுக்க ஊமைக்கனவுகள், புராஜக்ட் மதுரை இணைய தளத்திலும் சங்க இலக்கியங்களை சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.

    நன்றிகள் ஐயா!

    ReplyDelete