Pages

Friday, 3 July 2015

சமணம்-(3): இந்த உலகம் எப்படித் தோன்றியது;எப்படி அழியும்?


பெரிய விளையாட்டரங்கத்தைச் சுற்றி ஓடுவதைப் பார்த்திருப்போம். அம்மைதானத்தை ஒரு சுற்று சுற்றுவது என்பது, எங்கு ஓடத்தொடங்கினோமோ அங்கு வந்து முடிவது என்பதுதானே? 

அதைப்போலத்தான், உலகம் எதிலிருந்து தோன்றியது எப்படித் தோன்றியது என்பதை அறிய வேண்டுமாயின் அது எங்குபோய் முடிகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் அது எங்குபோய் முடிகிறதோ, அங்கிருந்தே அது தோன்றியது என்கிறது சமணம்.

இதற்கு முந்தைய பதிவில் ஸ்கந்தம் என்பதைப் பார்த்தோமே நினைவிருக்கிறதா..?. ஸ்கந்தம் என்பது  கூட்டுப்பொருள். உலகம் என்பது பஞ்சபூதங்கள் கூடி உருவானது. அந்தச் சேர்க்கை பிரிந்தால், அப்பொருளும் அழிந்துவிடும்.

நாம் காணும் பஞ்சபூதங்களைத் தனித்தனியே, நிலம், நீர், காற்று…என எடுத்துக்கொண்டால், ஒவ்வொன்றையும் இன்னும் நுண்ணியதாகப் பிரித்துக்கொண்டே போக முடியும். உதாரணமாக நீர் என்ற ஒரு அடிப்படை பூதத்தை எடுத்துக்கொண்டால் அதையும் பிரித்துக் கொண்டே போக முடியும். எனவே அவை ஒவ்வொன்றும் ஸ்கந்தங்கள் தான்.

சமணம் சொல்வது 

“எது கூட்டுப்பொருளோ ( எது ஸ்கந்தமோ) அதைப் பிரிக்க முடியும்.

எதைப் பிரிக்க முடியுமோ அது அழியும்.”

தற்கால அறிவியல், ‘ஆற்றல்’ என்பதன் தன்மை பற்றிக் கூறும் வரையறை ஒன்றைச் சமணம் ‘பொருள்’ என்பதை விளக்க எடுத்தாள்கிறது. எப்படி ஓர் ஆற்றலை அழிக்க முடியாது இன்னொரு ஆற்றலாக மாற்றத்தான் முடியும் என்கிறோமோ இதைப்போலவே ஒரு பொருளை அழிக்க முடியாது. ஒரு பொருள் அழிதல் என்பது அது இன்னொன்றாக மாறுவதைத்தான் என்கிறது சமணம்.

சேர்ந்த பொருட்கள் பிரிவுற்றால் அப்பொருள் அழிந்துவிட்டது என்பது பொருள். அப்பொருள்தான் அழிந்ததே தவிர, அதன் அழிவில் அது வேறொன்றாய் மாற்றம் பெற்றிருக்கும். எனவே அழிதல் என்பது முற்றிலும் இல்லாமல் போவதல்ல.

சரி. இப்படி ஒரு பொருளில் சேர்ந்திருக்கக் கூடியவற்றைப்  பிரித்துக் கொண்டே போனால் கடைசியில் என்னவாகும்?

கடைசியில் அது அதற்குமேலும் பிரிக்கமுடியாத ஒன்றாய் எஞ்சும். அதைச் சமணம் ‘அணு’ என்ற பெயரில் அழைக்கிறது.

( சமணம் பற்றிய சென்ற பதிவில் புற்கலம் என்பதன் முதல் இயல்பாக இதுவே சொல்லப்பட்டது.)

இங்கு மீண்டும், ஒரு பொருளைப் பிரித்துக்கொண்டே செல்வோமானால் அது கண்ணுக்குப் புலப்படாத, அதற்கு மேலும் பிரிக்க முடியாத பகுதியாய் எஞ்சும் என்பதையும், எதைப் பகுதியாகப் பிரிக்க முடியாதோ அதனை அழிக்க முடியாது என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

 எனவே மேலும் பிரிக்க முடியாதபடி அமையும் ‘அணு’ என்பது அழியாதது. அந்த அழிவற்ற சிறிய அணுக்களில் சேர்க்கையில் இருந்துதான் நாமும் நாம் காணும் இந்த மாபெரும் உலகமும் தோன்றினவே அன்றி எந்தக் கடவுளாலும் இது படைக்கப்பட்டதில்லை என்பர் சமணர்.


சமணரின் அணுக்கொள்கை பற்றி இன்னும் பார்க்கவேண்டும். சென்ற பதிவின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒரு கேள்விக்கான பதில்தான் இந்தப் பதிவு. இன்னும் அதிலுள்ள விடை கூறாக் கேள்விகளுக்கான விடைகளுடன் இது பற்றிய அடுத்த பதிவில் சந்திப்போம். 

பட உதவி - நன்றி https://encrypted-tbn0.gstatic.com/images

66 comments:

  1. மேலும் அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்.

      Delete
  2. சமணர்கள் விஞ்ஞானததை அறிந்தவர்கள் போல் இருக்கிறது அவர்களது கோட்பாடு. இண்டெரெஸ்டிங்....!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      உண்மையிலேயே ஆர்வமுடையதாக இருக்கிறதா :)

      இத் தொடர்பதிவுகளை விரும்புகின்றவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.

      அதனாலோ என்னமோ இதனைத் தொடர மிகத் தயங்குகின்றேன்.

      உங்களைப் போன்றோரிடமிருந்து வரும் ஊக்கம் மிகப் பெரிது.

      நன்றி.

      Delete
    2. //உண்மையிலேயே ஆர்வமுடையதாக இருக்கிறதா :)

      இத் தொடர்பதிவுகளை விரும்புகின்றவர்கள் குறைவாக இருக்கிறார்கள்.

      அதனாலோ என்னமோ இதனைத் தொடர மிகத் தயங்குகின்றேன்.//

      இப்படிப்பட்ட பதிவுகளை இப்பொழுது சிலர் படித்தாலும்...பின்னாளில் பலரால் படிக்கப்பட்டிருக்கும்....
      கவலையை விடுங்கள்....பயணத்தை தொடருங்கள் வாழ்த்துக்கள்.

      Delete
  3. சமணத்தின் அறிவியலுக்கு பொருந்தும் கருத்துகள் ஆச்சர்யப் பட வைக்கின்றன. சமணம் 1 & 2 படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      தங்கள் கருத்தறியக் காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
  4. சமணம் பற்றி எவ்வளவு விடயங்கள் ம்..ம்..ம் சமணம் இன்னும் இருக்கிறதா இல்லையா என்று நான் பலதடவை சிந்தித் திருக்கிறேன். இப்போ நிறைய விடயங்கள் அவர்கள் பற்றி அறிவதில் மிக்க மகிழ்ச்சியே. மேலும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி ! தொடர வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மா


      சமணம் இன்னும் இருக்கிறது.

      தமிழ்ச் சமணர்களும் சிறுபான்மையினராய் இருக்கிறார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  5. சமணத்தின் அறிவியல் வியக்கவைக்கிறது.....அடுத்த பதிவிற்கு ஆவலாய்...
    தம 5
    என் பக்கம் - அவன் தாள்.....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      இதோ வருகிறேன்.

      Delete
  6. விடை கூறாக் கேள்விகளுக்கான விடைகளுடன்...தொடரப்போகும் விடைக்காகத்தான் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் காத்திருப்பிற்கும் நன்றி கவிஞரே!

      நன்றி

      Delete
  7. அன்புள்ள அய்யா,

    அழிவற்ற சிறிய அணுக்களில் சேர்க்கையில் இருந்துதான் நாமும் நாம் காணும் இந்த மாபெரும் உலகமும் தோன்றினவே அன்றி எந்தக் கடவுளாலும் இது படைக்கப்பட்டதில்லை
    -இந்த உலகம் எப்படித் தோன்றியது... என்று சொல்ல வந்த சமணர்கள் எந்தக் கடவுளாலும் இது படைக்கப்பட்டதில்லை... சபாஷ்... சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

    நன்றி.
    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. கடவுளைக் குறித்து அவர்கள் முன்வைக்கும் கேள்விகளும் சுவாரசியமானவை ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  8. அருமை.. இன்னும் அறியத் தாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. இணையம் அரிதாகிப் போன நிலையிலும் உங்களின் வரவும் கருத்தும் என்னை மிக மிக ஊக்கப் படுத்துகின்றன அண்ணா.


      நன்றி.

      Delete
  9. வியக்க வைக்கும் செய்திகள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் காத்திருப்புக் குறித்து அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  11. சமணர்களின் அறிவியல் அறிவு வியக்க வைக்கிறது. சமணத்தின் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ச்சியாகச் சொல்லி நீண்ட தொடராக எழுதாமல் இப்படிச் சின்னதாய் எழுதும் போது புரிதல் சுலபமாயிருக்கிறது; சுவாரசியமாயுமிருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அறிவுரைக்கு நன்றி சகோ.

      அப்படியே செய்கிறேன்.

      நன்றி.

      Delete
  12. #அறிவியல் பூர்வமான கண்ணோட்டம் வியக்க வைக்கிறது ..நான் என் தளத்தில்...'முற்போக்கான சிந்தனைகள் கொண்ட புத்த மதம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்து இருந்தால் ,பல வழிகளிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்து இருக்கும் என்ற சிந்தனை எனக்குள் இருக்கிறது ' எழுதியது நினைவுக்கு வருகிறது :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் முற்போக்கான சிந்தனைகள் கொண்ட புத்தமதம் வளர்ச்சியடைந்த சிங்களத் தீவினையும் அங்கு பல ‘வலிகளில்’ ஏற்பட்ட முன்னேற்றத்தையும் மறந்துவிட்டீர்களே பகவானே! ;(

      எப்பொழுதுமே தீமை மதங்களால் வருவதில்லை. மதம்பிடித்தவர்களாலேயே வருகிறது.

      அது எவ்வளவு அன்பைப் போதிக்கும் மதமாயினும் சரி.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. அந்த வலியையும் ஏற்கனவே நான் சுட்டி இருக்கிறேனே 'ஒரு இலையைகூட பறிக்க விடக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் ...இந்த வளாகத்தை நிர்வகிக்கும் சிங்கள புத்த பிட்சுக்கள்தான் ....இலங்கையில் சிங்கள அரசால் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக வேட்டை ஆடப்பட்ட போது வாய் மூடி மௌனம் காத்தார்கள் என்பதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது ,இன்னும் இருக்கிறது !'

      Delete
    3. இலைக்கு இருக்கும் மதிப்புக் கூட தமிழ் உயிருக்கு இலை என்றிருப்பார்கள் போல!

      Delete
  13. ஒன்றின் அழிவில் இன்னொன்று தோன்றும் ! உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. மேலும் அறிய ஆவல் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் உங்கள் புதிய பதிவுகள் காண ஆவல்.

      நன்றி.

      Delete
  15. வணக்கம் என் ஆசானே,
    எந்தக் கடவுளாலும் இது படைக்கப்பட்டதில்லை என்பர் சமணர்.
    என்ற வரிகள் உண்மை,
    அறிவியல் படி இது சாத்தியம் எனப்பட்டது தானே,
    எது எப்படியோ, சமணர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டகள் ஏராளம் இல்லையா அய்யா,
    வலியது வாழும், வலிமையற்றது வீழும் என்பது டார்வின் கோட்பாடு,
    சமணம் வலிமையற்றதா?
    பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருஞான சம்பந்தருடன் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள், தாங்கள் வாதத்தில் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறினர். அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தர் வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.
    சமணசமயத்தைத் தோற்றுவித்தவர் யார்? தாங்கள், மகாவீரர் அல்ல என்றால்?
    சரி, தாங்கள் சொல்லும் காரணங்களுக்காய் காத்திருக்கிறோம்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பேராசிரியருக்கு வணக்கம்.

      இந்த இடுகையில் இன்னும் சில சமயங்கள் வர இருக்கின்றன. உண்மை பொய் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.

      நிச்சயமாய் சமணர்கள் தமிழுக்குச் செய்த கொடைகளை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

      வலியது வாழும் என்பது சரிதான்.

      சமணம் வலிமையானதா வலிமையற்றதா என்பது அதைப் பின்பற்றும் மக்களின் வலிமையையும் சார்ந்தே இருக்கிறது.

      நின்ற சீர் நெடுமாறன் காலத்தில் சம்பந்தரிடம் வாதில் தோற்று எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினர் என்பது குறித்த சர்ச்சைகள் உண்டு.

      சமணசமயத்தைத் தோற்றுவித்தவர் யார் என்பது குறித்து மதிப்பிற்குரிய நீலன் அவர்கள் தம் பின்னூட்டத்தில் கூறியிருக்கிறார்.

      அது மகாவீரர் அல்லர் என்பதை அறியவும்.


      அவர் தீர்த்தங்கரருள் இறுதியாய்த் தோன்றியவர்.

      தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

      Delete
  16. வணக்கம்
    ஐயா
    சமணம் பற்றிய அறிவியல் வியக்கவைக்கிறது... ஐயா நன்றாக எடுத்துரைத்துள்ளீர்கள்... த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர்வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி திரு.ரூபன்.

      Delete
  17. அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி எனப் பாடிய அவ்வையும், பாடப்பட்ட ஐயன் வள்ளுவரும் சமணத் துறவிகளாக இருந்தவர்கள். மூவேந்தர்களுக்கு முந்திய ஐவேந்தர்கள் காலத்தில் இருந்த சத்தியப்புத்திரன் அதியமான் வடதமிழகத்தை ஆண்டதோடு சமணம் வளர்த்ததை ஜம்பை கல்வெட்டு சான்றாக்கியது. கொற்கைப் பாண்டியர்களும், மதிரைப் பாண்டியர்களும் சமண, பௌத்த மதத்தை போற்றியவர்கள். சேரமான் செங்குட்டுவனின் இளவல் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் ஒரு சமணத் துறவி ஆவார். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்று சமண சமயக் காப்பியம், ஐஞ்சிறுக் காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தவரால் எழுத்தப்பட்டது. சங்கக் காலப் பாடல்களில் முக்கால்வாசிப் பாடல்கள் சமணர்களால் எழுத்தப்பட்டது. திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் சமண சமயக் கொள்கைகளை பரப்ப எழுத்தப்பட்ட அறநூல்களாகும். ஆதிபகவன் எனத் தொடங்கும் திருக்குறளில் ஆதிபகவன் என்பவரே முதல் சமணத் தீர்ந்தங்கரரது பெயராகும்.

    இவ்வளவு அறக்கொடைகளையும் நமக்கு வழங்கிவிட்டு எவ்வித இறுமாப்பும் இன்றி இந்தியாவில் இன்றும் சமணம் மிக அமைதியாக வாழ்ந்து வருகின்றது. அவர்களது கொள்கைகளை உருவி மதம் வளர்த்தவர்கள் பொய்களையும், புனைவுகளையும் கட்டமைத்துக் கொண்டு அரசியல் செய்து வருவது தான் வியப்பே.

    இன்றளவும் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 120 தமிழ் சமணக் கிராமங்கள் இருக்கின்றன. இங்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சமணர்கள் வாழ்ந்து வருகின்றனர். நவீன சமணம் அதிகம் வழிபாட்டுக்கும், வாழ்வியலுக்கும் முக்கியம் கொடுத்து வருவதாலும், சுற்று முற்றில் இந்து சமூகங்களில் தாக்கத்தாலும் தேய்ந்த நிலையிலேயே இருக்கின்றது. 2000 ஆண்டுகள் பழமையான சமண சின்னங்கள் மதுரை உட்பட பல மாவட்டங்களில் கிராணைட் தொழில்களாலும், அரசின் அக்கறையின்மையாலும் அழிந்து வருகின்றன.

    திருப்பதி, காஞ்சி, மதுரை, பழநி ஆகிய இடங்களில் இருக்கும் பல கோவில்கள் ஒரு காலத்தில் சமணக் கோவில்களாக இருந்தவை. அங்கிருந்த சமண தீர்ந்தங்கரர்கள் பாலாஜி, ஐயனார், சிவன் என மாற்றப்பட்டதோடு, தீர்ந்தங்கரர்களது காவலர்களாக இருந்த இயக்கன், இயக்கிகள் எல்லாம் பலவேறு தெய்வங்களாக மாற்றப்பட்டு இந்து மதத்தினரால் வணங்கப்பட்டு வருகின்றன என்பது வருத்தமான உண்மைகள்.

    உங்களது சமணம் சார்ந்த பதிவுகளை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களது வருகைக்கும் ஆகச் செறிந்த பின்னூட்டங்களுக்கும் நன்றி.


      இங்குநான் குறித்துக் காட்டும் கருத்துகள் தவிர ஏனைய தங்களின் கருத்துகளோடு நான் முற்றிலும் உடன்படுகிறேன்.

      1) அணுக்கொள்கை என்பது சமணர் தோற்றுவித்ததன்று. சமணர்களிடமிருந்து பிற வைதீக சமயங்கள், பல கொள்கைகளை எடுத்துத் தமதாக்கிக் கொண்டது போலவே அணு பற்றிய கொள்கை ஆசீவகரிடம் இருந்து சமணம் எடுத்துக் கொண்டதாகக் கருதுகிறேன். உலகாயதத்தை அடுத்த பதிவாக ஆசீவகத்தைத் தான் சொல்லி இருக்க வேண்டும். சமணத்திற்கு முற்பட்டு அணுக்கொள்கையைக் கூறிச் செல்வது ஆசீவகமே. ஆனால் தமிழ் இலக்கியங்களில் அது பற்றிக் கிடைக்கும் சான்றுகள் மிகக் குறைவு என்பதால் இறுதியில் சொல்லக் கருதினேன். ஆசீவகம் மற்றும் சமணக் கொள்கைகளை நோக்க அவை தோழமை நெறிகளாகப் படுகின்றன. ஆனால் இவை இரண்டும் வேறுபட்டன என்பதற்கும் ஆசீவகத்தின் கொள்கையை மறுத்தும் எள்ளியும் சமணம் செல்வதற்கும் சமண நூலான நீலகேசியில் சான்றுகளுண்டு.

      2) திருக்குறள் சமண நெறிகளைப் புலப்படுத்தும் நூல் என்பது எனக்கும் உடன்பாடே.
      ஆனால் ஔவை “அணுவைத் துளைத்தேழ்” என்று சொன்னது அளவிற் சிறுமைக்காக என்றே நான் எண்ணுகிறேன். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஔவைகள் வாழந்தனர் எனினும், ” சிறுகட் பெறினே எமக்கீயும் மன்னே” என்ற புறநானூற்று ஔவையாக இவர் நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் அவர் ஊன் உண்பவர்.
      சமணம் அதை முற்றிலும் நிராகரிக்கிறது.

      3) சங்ககாலப் பாடல்களில் முக்கால்வாசிப் பாடல்கள் சமணர்களால் எழுதப்பட்டவை என்பதனோடும் என்னால் உடன்படமுடியவில்லை. ஏனெனில் சமணம் இல்லறத்தார்க்கு வலியுறுத்தும் ஐவகை அறங்களுள், அளவிகந்த காமம் தவிர்த்தல் என்பதும் ஒன்று. அஃதாவது தன் துணையுடன் மட்டுமே சேர்ந்திருத்தல் . பிற பெண்டிரைத் தவிர்த்தல். அவ்வாறாயின் பரத்தையர் மாட்டுப் பிரிதலைச்சித்தரிக்கும் மருதத்திணைப் பாடல்கள் பலவும், சமணரின் கொள்கைக்குடன்பாடாக முடியாததாய்ப் போகும். புறப்பாடல்களுள் வெட்சியின் தோற்றுவாயே நிரை கவர்தல்தான். அது இல்லறத்தார்க்கென விதிக்கப்பட்ட அனுவிரத்தில் அஸ்தேயம் எனப்படும் களவு புரியாமையோடு மாறுபடும்.

      சங்கப்பாடல்களில் சமணக் கொள்கைகளின் தாக்கம் இருக்கின்றன. அதே நேரம் சமணம் தமிழகத்தில் காலூன்றுவதற்கு முன்பான தமிழரின் கருத்தியலைச் சங்க நூல்கள் காட்டிச் செல்கின்றன என்பது என் நிலைப்பாடாக இருக்கிறது.

      தங்களின் ஆழ்ந்த வாசிப்பிற்கும் அறிவூட்டும பின்னூட்டத்திற்கும் தலைவணங்குகிறேன்.

      நன்றி.

      Delete
    2. தங்களின் இனியக் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் நண்பரே !

      1. அணுக்கொள்கை யார் உருவாக்கினார்கள் என்பதில் இன்னம் தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் தாங்கள் சொல்லியது போல ஆஜீவகத்தார் உருவாக்கியிருக்கலாம் என்ற ஊகங்களும் உள்ளன. பண்டைய திராவிட பண்பாட்டு வெளியில் தோன்றிய ஸ்ரமண வழி சிந்தாத்தந்தில் கிளைத்த மற்றொரு மதம் தான் ஆஜீவகம் ஆகும். இந்த மதத்தினை பரப்பிய மக்காளி கோசர் என்பவர் புத்தர், மகாவீரரது சமக் காலத்தவர் என்பதும் முக்கியமான ஒன்று. சமணத் துறவியினர் அம்மணமாக வாழ்பவர்கள் என்றால் ஆஜீவகத் துறவிகள் கோவணம் மட்டும் பழக்கமுடையவர்கள். இந்தியா முழுவதும் சில சமண, பௌத்த குகைகள், மலைகளின் அருகில் கோவணத்தோடு நின்ற கோலத் துறவிகளின் சிற்பங்களையும் காணலாம். அதில் ஒன்று சித்தனவாசல் அருகேயும் காணக்கிடைக்கின்றன. பழநி முருகன் கோவிலில் நிற்கின்ற பழநியாண்டவர் கூட ஆஜீவகர் என்ற கருத்தும் உள்ளது. ஆஜீவகத்தின் கொள்கைகள் தெளிவில்லை. மற்ற சமயத்தவரது வாத எதிர்வாதப் பாடல்களின் மேற்கோள்கள் ஊடாக அறிகின்றோம்.

      2. தென்னிந்தியாவில் பல அவ்வைகள் வாழ்ந்திருக்கின்றனர். அவ்வை பெண் துறவியரது பெயர்கள் என நினைக்கின்றேன். ஜம்பைக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் அதியமானை பாடும் அவ்வை சங்க இலக்கியத்தில் வருகின்றார். அவரும் திருக்குறளைப் புகழ்ந்து பாடும் அவ்வையும் ஒன்றா தெரியவில்லை. சங்கப் பாடலில் ஊன் உண்ணுதலைப் பாடும் அவ்வை வேறொருவராக பிற்கால ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் பாடும் அவ்வை மற்றொரு அவ்வையாக இருக்கலாம். அவ்வைகள் என்ற பெயர்களில் கருநாடகம், மராத்திய நாடுகளிலும் பலர் இருந்திருக்கின்றார்கள்.

      3. இதை மன்னிக்க. சங்கக் காலப் பாடல்களில் சமணர்களும் பாடியிருக்கின்றனர். அது மட்டுமின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் பாடிய கனியன் பூங்குன்றனர் வைணவர் எனச் சொல்லப்பட்டாலும் அவர் ஆஜீவகராக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். சங்ககாலப் பாடல்கள் பலவும் தமிழரது தொல் சமயக் கொள்கையாளர்கள் தான் பாடியிருக்க வேண்டும் ஏனெனில் பரத்தையர் கூடல், ஆநிரை கவர்தல், போர்களைப் புகழ்தல், ஊன் உண்ணுதல், கள் பருகுதல் போன்றவைகள் ஆதி தமிழர் மதக் கொள்கைகள். இவ்வாறான பழக்கங்கள் இன்றளவும் நாட்டுப்புற மக்களிடமும், மத்திய இந்தியா முதல் பரவி வாழ்கின்ற திராவிட பழங்குடிகள் மத்தியிலும் காணப்படுகின்றன. இவ்வாறான வாழ்க்கை முறை ஒழுக்கமற்றது என போதித்தவர்கள் சமணர்கள், பௌத்தர்கள் அதனால் தான் நெடுநல்வாடையில் மதுவருந்திப் போவோரை மாக்கள் என கூறுகின்றனர்.

      உலகாயதம் பற்றியும் நாம் கவனிக்க வேண்டும். ஆர்யர் கொண்டு வந்த வைதிக பிராமண மத்தில் இருந்து மாறுபட்ட மரபில் தோன்றிய மதங்களான சமணம், பௌத்தம், ஆஜீவகம் போல உலகாயதமும் வித்தியாசமான ஒன்றாக கருதப்படுகின்றது. உலகாயதம் முற்று முழுவதுமாக நவீன நாத்திகத்தை ஒத்திருப்பதும் பொருள் சார்ந்த வாழ்வியலை சித்தரிப்பதும் வியப்பே.

      தொடர்ந்து எழுந்துங்கள் இவற்றை எல்லாம் பற்றி அதிகம் அறிய ஆவல், தொடர்ந்து பேசலாம்.

      Delete
    3. மதிப்பிறிகுரியீர் வணக்கம்.

      ஆசீவகர் குறித்து இனி எழுதும் பதிவுகளில் கூட அவர்தம் கொள்கைகளையே குறிப்பிடக் கருதிகிறேன் என்பதால், இங்கு ஆசீவகரின் தோற்றம் குறித்தத் தங்களின் கருத்தினோடு ஒட்டிய சில செய்திகளைப் பகிர்ந்திடவிழைகிறேன்.

      தாங்கள் கூறியுள்ள “ ஸ்ரமண வழி சிந்தாத்தந்தில் கிளைத்த மற்றொரு மதம் தான் ஆஜீவகம் ஆகும். இந்த மதத்தினை பரப்பிய மக்காளி கோசர் என்பவர் புத்தர், மகாவீரரது சமக் காலத்தவர் என்பதும் முக்கியமான ஒன்று“

      என்பதில் இன்னுமோர் கூடுதல் குறிப்பு உள்ளது. இம்மூவருமே தம்மை 24 அல்லது 25 ஆவது தீர்த்தங்கரர் என்றும் புத்தர் என்றும் சொல்லிக் கொண்டவர்கள்.

      மட்டுமல்லாமல், வைதிக நெறியிலிருந்து விலகிய இவர்களின் கொள்கைகளிலும் சில பொதுமைகள் காணலாகின்றன.

      1) யாகங்களையும், வருணாச்சிரம நடைமுறைகளையும் கடவுளரையும் மறுத்தவர்கள் இவர்கள்.

      2) வேதம் வலியுறுத்தும் இயற்கைச் சக்திகளுக்கும் உபநிடதங்கள் வலியுறுத்தும் பரம்பொருளுக்கும் மாற்றாக அண்டத்தின் அமைப்பியல் நியதிகளை ஏற்றவர்கள்.

      3) அண்டத்தின் இயற்கை விதியின் ஆட்சியை மதித்தோராய் விளங்கியவர்கள்.

      சொல்லப்போனால், ஆசீவகத்தின் மற்கலி கோசாலர், சமணத்தின் மகாவீரர், பௌத்தத்தின் கௌதமபுத்தர் இம்மூவரையும் இச்சமயங்களின் சிறப்புமிக்கவர்களாகக் கருதவேண்டுமே அல்லாமல் இவற்றைத் தோற்றுவித்தவர்களாகக் கருத வேண்டுவதில்லை என்றே தோன்றுகிறது.

      நீங்கள் கூறுவதுபோலவே பாலிபிடக நூல்களிலும், சமண சூத்திர உரைகளிலும், புத்தர் மகாவீரர் இவர்களுடன் தொடர்பு கொண்டவராகவே மற்கலிகோசர் குறிப்பிடப்படுகிறார்.

      மணிமேகலை, நீலகேசி, போன்ற நூல்களில் அகிரியாவாதத்தை முன்னெடுத்தோரும் ( பூரணர் ) நியதிக்கொள்கையை முன்னெடுத்தோரும் ( மக்கலி ) அணுக்கொள்கையைக் தமதெனக்கொண்டோரும் ( பகுதகச்சானர் ) ஆசீவகர் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இம்மூன்று கொள்கைகளும் ஆசீவகத்தின் அடிப்படையாய் இருத்தல் கூடும்.

      பாலிபீடகம் மற்கலியை ‘மக்கலிகோசால‘ என்றும் மகாயான பௌத்த நூல்கள் ‘மஸ்கரின் கோசால‘, ‘கோசாலிக புத்திர‘ என்றும், பிராகிருதச் சமண நூல்கள் ‘கோசால மங்கலிபுத்ர‘ என்றும் தமிழ்ச்சமண பௌத்த நூல்கள் ‘மற்கலி‘ என்றும் குறிப்பிடுகின்றன.

      அரசவைக்குச் சென்று, போர் பாடுபவர்களாகவும், புகழ் பாடுபவர்களாகவும் இவர்கள் விளங்கினர். ஆடல் பாடல் ஆகிய நிகழ்ச்சிகள் இவர்களது சமயச் சடங்குகளில் இயல்பாக இடம்பெறுவதாகச் சமண பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன.

      சங்க இலக்கியங்கள் காட்டும் பாணர் கூத்தர் முதலான குடிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள இடையே உள்ள உறவு நுட்பமாய் ஆராயப்படவேண்டும்.

      முற்கூறிய பாலிபிடகங்களும், சமண சூத்திர நூல்களும் புத்தருக்கும் மகாவீரருக்கும் மூத்தவர் மற்கலி என்றே சொல்கின்றன.

      மணிமேகலையில் சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில், ஒவ்வொரு சமயக்கொள்கையாக எடுத்துக் கூறி விளக்கும் இடத்தில் கூட ஆசீவகம் பற்றிய கொள்கை விளக்கப்பட்டு அதன் பின்னர்தான் நிகண்டவாதம் எனப்படும் சமண நெறி விளக்கப்படுகிறது. பண்டைய நூல்களின் இதுபோன்ற முறைவைப்புக் காரணகாரியத்தினோடு பொருத்தப்பாடுற்றே அமைவதாகும் என்பது நான் கண்டது.

      ..........................................................................................................தொடர்கிறேன்.....

      Delete
    4. உலகாயதத்தோடு மிக நெருங்கிய தொடர்புடையதாகவும் ஆசீவகமே கருதப்படுகிறது. ஏனெனில் ஐம்பூதங்களில் ஆகாயத்தை உலகாயதர் போலவே ஆசீவகரும் ஏற்பதில்லை.

      இறந்தோரைத் தாழிகளில் புதைக்கும் வழக்கிலும் இருவரும் ஒன்றுபடுகின்றனர்.

      உயிருடனே தாழிகளில் அமர்ந்து தவநிலையில் உயிர்துறத்தலும் இவர்களிடம் உண்டு. ஆதிச்ச நல்லூர் போன்ற இடங்களில் காணப்படும் தாழிகள் பல ஆசீவகரின் உயிருடன் அமர்ந்து தவம் புரிந்த தாழிகளாக இருக்கவும் கூடும்.


      மகாவீரர் போலவே மற்கலியும் திகம்பராக இருந்தார் என்ற கருத்தும் உண்டு.
      பிற்காலத்தில் சமணத்தில் வலியுறுத்தப்பட்ட கடும்நோன்பு ஆசீவகத்தில் இருந்து உட்செரிக்கப்பட்டதாய் இருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.

      ஏனெனில் தண்ணீரும் அருந்தாமல் தங்களை வருத்திப் புலன்களை அடக்கித் தவமிருக்கும் இவர்களை தானங்க சூத்திரம் என்னும் சமணநூல் விளக்கிச் செல்கிறது.

      இது பற்றி வெளிநாட்டினரின் தொன்மையான பௌத்த சமயக்குறிப்புகளிலும் குறிப்பு உண்டு.

      கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மகாபதும நந்தன் என்னும் அரசன் ஆசீவக சங்கத்தை ஆதரித்தாகக் கூறப்பட்டிருக்கிறது. அசோகனுக்குச் சமகாலத்தவனான, தேவனாம்பிரியதிசனின் பாட்டன் ‘பாண்டுகாபயன்‘ அநுராதபுரத்தில் அசீவகப் பள்ளியை அமைத்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது.

      இதே நூற்றாண்டில் நிறுவப்பெற்ற அசோகனின் 7 ஆம் ஸ்தூபிக் கல்வெட்டு, தன்னுடைய சமயமான பௌத்தத்தை முதலிடத்திலும், ஆசீவகத்தை இரண்டாமிடத்திலும் சமணத்தை மூன்றாம் இடத்திலும் பிற சமயங்களை நான்காம் இடத்திலும் வைத்துக் குறிப்பிடுகிறது.

      நம்நாட்டிலும் ஆசீவகப்பள்ளி இருந்ததை, சிலப்பதிகாரத்தில் காப்பியத்தலைவர் மறைவுக்குப் பிறகு, கண்ணகியின் தந்தையாம் மாநாய்கன் தன் செல்வத்தையெல்லாம் ஆசீவகப் பள்ளிக்குத் தானம் செய்துவிட்டு, துறவியானான் என்பதைக் குறிப்பிடும்,

      “கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
      அண்ணலம் பெருந்தவத் தாசீவகர்முன்
      புண்ணிதானம் புரிந்தறங் கொள்ளவும்”
      என்னும் சிலம்பினடிகள் காட்டுகின்றன.

      ஆசீவகர் வானியலிலும், காலக்கணிதத்திலும், மெய்யியலிலும், உலகியலிலும், ஒலியியலிலும், சிறந்து விளங்கிய இந்தியத் தொல்குடியினராவார்.

      குறிப்பாக இந்தியத் தத்துவ இயலில், வான் கோள்களைக் கணித்து நிமித்தங்களைக் கூறும் இன்றைய சோதிடத் தோற்றுவாய் ஆசீவகர்களில் இருந்தே தொடங்குகிறது. ஆசீவகர்கள் சோதிடக் கலையில் வல்லவர்களாக விளங்கியிருக்கிறார்கள். தமிழில் கணியர்கள் எனப்பட்டவர்கள் இவர்களே. இன்றும் இம்மரபினர், கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

      சமணம் இந்நிமித்தங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறது.

      கணியன் பூங்குன்றனாரின் , “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது ஆசீவகத் தத்துவத்தின் அடிப்படையான நியதிக் கொள்கையை வலியுறுத்திச் சொல்லுவதாகும். சமணம் இதனுடன் வேறுபட்டு வினைக்கொள்கையை முன்னிறுத்துவது இங்கு எண்ணத்தக்கது.

      ஆசீவகத் தத்துவங்கள் குறித்துச் சமணம் பற்றிய பதிவுகள் நிறைவுற்றதும் பகிர்ந்து கொள்ள உங்கள் பின்னூட்டங்கள் தூண்டுகின்றன.

      தங்களின் வருகைக்கும் அறிவூட்டும் கருத்தாழமிக்க பின்னூட்டங்களுக்கும் மீண்டும் நன்றி.

      Delete
    5. வணக்கம் என் ஆசானே,
      என் குறுக்கீற்றிற்கு வருந்துகிறேன்,
      தாங்கள் சொன்னது போல் ஓளவையார் பற்றிய பல்வேறு கருத்துக்கள் உண்டு என் கருத்துடன் உடன்படுகிறேன்,
      ஆனால் இல்லறத்தாருக்கு ,,,,,,,,,,,,
      சரி
      சீவகசிந்தாமணி எழுதிய தேவர் என்ன சமயம், அதைப் படித்தால் அவர் துறவி என நினைக்க முடியுமா?
      சங்க இலக்கியங்கள் அகத்தைப் பற்றி மட்டும் எழுந்த நிலையில் புறம் அதாவது வீரம் போர்கலம் செல்ல மக்கள் வேண்டும் என்று கட்டாயப்படத்தி அதாவது விளம்பரம் செய்வது போல்
      அய்யா இன்னும் இருக்கு,
      என் அதிகபிரசிங்க தனத்தைப் பொறுத்தாற்றுங்கள்,
      நன்றி,
      மீண்டும் வருவேன்.

      Delete
  18. சமணர்களின் கோட்பாடுகள் விஞ்ஞானத்துடன் வெகுவாக ஒத்துப் போகிறது போல் உள்ளதே ஆசானே! எல்லாம் ஆங்கிலத்தில் தமிழில் இருந்தாலும் ஆங்கில வார்த்தைகள் கலந்து படிப்பதால், அதன் தமிழ் சொற்கள் புதிதாக இருப்பதால் கொஞ்சம் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது...ஆனால் மிகவும் ஆர்வம் மேலிடுகிறது தெரிந்து கொள்ள...காரணம் முதல் வாக்கியம்...அணுவைப் பற்றிச் சொல்லியது மிகவும் பொருந்துகின்றது....

    காத்திருக்கின்றோம் தொடர்ந்து தெரிந்து கொள்ள....


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே.

      அணுவைப்பற்றி முதலில் சொல்லியதும் அணுக்கொள்கை பெரிதும் அடிப்படையாவதும் ஆசீவகம் என்னும் சமயமே. கடவுள் இல்லை என்ற கோட்பாடு உள்ளவரோடு நெருக்கமுடையது இது.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் நன்றி ஆசானே.

      Delete
  19. ஆர்யர்கள் இந்தியாவுக்கு வருமுன் சிந்து நதி என அழைக்கப்படும் குமரி நதிக்கரையில் ஹரப்பன் பண்பாட்டு வெளியில் தோன்றியது தான் சமணம். இதனை முதன் முதலில் தோற்றுவித்தவர் பேரரசராக விளங்கி பின்னர் துறவறம் பூண்ட ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிசபதேவர் ஆவார். இவரது மகன் பரதன் தான் தமிழகம் நீங்கலாக இந்தியா முழுவதையும் ஆட்சி செய்தவன் அவனது பெயரால் தான் இந்தியா பரத நாடு என அழைக்கப்பட்டது. இந்து மதங்கள் சொல்கின்ற ராம கதை, கிருஷ்ண கதை எல்லாம் சமண மதத் தொன்மக் கதைகளாக இருந்தவை. இவை திருடப்பட்டு திரிக்கப்பட்டு இந்து மத புராணங்கள், இதிகாசங்களாக மாற்றப்பட்டன. ஆதிபகவன் உட்பட 24 தீர்ந்தங்கரர்கள் தோன்றியிருக்கின்றனர். இவர்களில் கடைசியாக தோன்றியவர் தான் மகாவீரர் என்பவர். புத்தரின் சமகாலத்தில் வாழ்ந்தவர். புத்தர் கூட ஆறு ஆண்டுகள் சமண துறவியாக இருந்திருக்கின்றார். பின்னர் சமணத்தின் கடுமையான துறவறத்தை வெறுத்து தனியொரு வழியில் போய்விட்டார். அதுவே பௌத்தமாக உருவாகியது என்பர்.

    சமணர்கள் தமது மரபை திராவிட மரபு என்றே அழைக்கின்றனர். அது மட்டுமின்றி வடநாட்டில் மௌரியர்கள் ஆட்சிக் காலத்தில் சமணம் உயர்வான இடத்தைப் பெற்றது. சந்திரகுப்த மௌரியர் தமது இறுதிக் காலங்களில் சமண துறவியாகி கருநாடக மாநிலம் சமண வெள்ளைக் குளத்தில் தங்கியிருந்து இயற்கை எய்தினார். சமணத் துறவி பத்திரபாகு என்பவர் காலத்தில் வடநாட்டில் பெரும் வறட்சி வரவும் பல ஆயிரம் துறவிகள் தென்னாடு வந்தனர். அதன் பின்னரே தமிழகம் சமணத்தைத் தழுவிக் கொண்டது. சமணத்துக்கு தமிழகம் அடைக்கலம் கொடுத்ததினால் தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வளர்ந்தது எனலாம்.

    கி.பி ஏழாம் நூற்றாண்டில் பக்தி இயக்கங்களால் சமணமும், பௌத்தமும் காவு வாங்கப்படாமல் போயிருந்தால் இன்று இந்தியா வளர்ச்சி கண்ட அறிவொளி மிக்க அறிவியல் வளம் கொண்ட நாடாக பரிணமித்திருக்கும். சைவமும், வைணவமும் இந்தியாவை சாதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் வழியில் கொண்டு போய் இருண்ட காலத்தை தோற்றுவித்தது வருத்தமான உண்மை. சமண தத்துவமும், கொள்கைகளும் அனைவரால் வாசிக்கப்பட வேண்டும், அதன் உயர்ந்த தத்துவங்கள் நவீன அறிவியலுக்கு ஒப்பாக இருப்பது தான் வியப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      “““““““““இந்து மதங்கள் சொல்கின்ற ராம கதை, கிருஷ்ண கதை எல்லாம் சமண மதத் தொன்மக் கதைகளாக இருந்தவை. இவை திருடப்பட்டு திரிக்கப்பட்டு இந்து மத புராணங்கள், இதிகாசங்களாக மாற்றப்பட்டன.“““““““““““

      புதிதாகப் பிறக்கும் மதங்கள் அனைத்துமே கொள்கை அளவில் முந்தைய மதத்திலிருந்து தாம் வேறுபடுவதாய்க் காட்டித் தமக்குமுன் உள்ள சமயத்தின் கொள்கைகளையும் தொன்மங்களையும் புதுக்கியும் மாற்றியும் வழிமொழிந்தும் போகின்றனவாகவே இருக்கின்றன.

      இராமாயணம், இராவணன், இந்திரன், நான்முகன் என இவர்கள் சமணத்தில் சுட்டப்படுகின்றவர்களே.

      பரகதி என்பதைக் கூட சமணம் சிவகதி என்றே சொல்கிறது.

      சைவர் சொல்லும் பஞ்சாக்கிர மந்திரம் போல சமணர்க்கும் உண்டு.

      தாங்கள் கூறும் ஆதிபகவர் இடப தேவர் குறித்த தகவல்கள் இன்றைய சமணம் குறித்துப் பள்ளிகளில் படிக்கும் பலரும் அறியாததே. இது குறித்து முந்தைய பதிவொன்றில் குறித்திருக்கிறேன். சமணத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரர் என்பதாகவே இங்குப் பள்ளிப்படிப்புச் சொல்லிக்கொடுக்கப் படுகிறது.

      தீர்த்தங்கரர் என்ற சொல்லைப் பார்க்க, ” பிறவிப்பெருங்கடல் நீந்துவார்” என்னும் அரிய மிகப்பொருத்தமான வள்ளுவச் சொல்லாட்சி நினைவுக்குவருகிறது.

      பௌத்தத்திற்கு அசோகனைப் போலவே, சமணம் வளர்த்த காரவேலன் என்பானைப் பற்றிய செய்தி பலரும் அறியாதது.

      கி.மு. 2 ஆம் நூற்றாண்டினனான கலிங்கத்தை ஆண்ட இவ்வரசன், தமிழகத்தையும், வடஇந்தியாவையும் தன்குடைக்கீழ்க் கொணர்ந்தான். தமிழ் மூவேந்தரையும் முறியடித்தான்.

      புஷ்யமித்திரன் என்ற மகத மன்னனை வென்றான்.

      தமிழகத்தின் தென்கோடியான குமரிக்குன்றில், வாழ்ந்த சமணத் துறவியர்க்கு இவன் அளித்த நிவந்தங்களை இவனது 13 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக் கூறுகிறது.

      வரலாறு மறந்துபோன ஆளுமை.

      பொதுவாக இப்பதிவுகள் இவர்தம் கொள்கையைத் தொட்டுக்காட்டிச் செல்வன என்பதால் வரலாற்று நோக்கில் இவை குறித்து விளக்க இயலவில்லை.



      நீங்கள் முற்கூறியபடி செல்வாக்குற்ற சமயங்கள் தளர்ந்தவர்களின் திருத்தலங்களைத் திருத்தி எளிதாய்த் தமதுடைமையாய் மாற்றிக் கொண்ட வரலாறு எழுதப்படவேண்டும்.

      தங்களின் தொடர்ச்சிக்கு மிக்க நன்றி.

      Delete
    2. மிகச் சரியாக சொன்னீர்கள் சமண தத்துவத்தை அடியொற்றி அரசியல் வளர்த்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கூட சமணத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல விரும்பவில்லை என்றே நினைக்கின்றேன். நமது பள்ளிப் பாடங்களில் சமணத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரரே என்பதாகவே கற்பிக்கப்படுவது, வைதிக மதம் மிகப் பழமையானது என்றக் கருத்தை நிறுவவே. அது போல சமணச் சின்னங்கள் ஹரப்பன் பண்பாட்டு வெளியில் கிடைத்துள்ளதையும் கூறுவதில்லை. மாறாக பசுபதி கிடைப்பதாக கூறிவிடுகின்றனர்.

      இந்திரன், மித்திரன், வருணன், பிரம்மன் ஆகியோர் ஆர்ய பண்பாட்டு குடியேற்றங்களின் பின் வந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். ஏனெனில் இந்தக் கடவுள்களை இந்தியாவிற்கு வெளியே இரானில் உருவான பண்டைய சுராஸ்தரன மதத்திலும் உள்ளார்கள். ஆர்ய இனங்கள் இரண்டாக பிரிந்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு பிரிவினருக்கு இந்திரன் கடவுள், மற்றொருவர்களுக்கு அசுரன் கடவுள். அசுரனை வழிபட்டவர்கள் இரானில் குடியேறியிருக்கின்றார்கள். அவர்களிடம் தோற்றுப் போய் இந்தப் பக்கம் வந்தவர்கள் தான் பிராமண மதத்தைத் தோற்றுவித்திருக்கலாம்.

      ஆர்ய குடியேற்றங்களின் பின் ஏற்பட்ட மக்கள் கலப்பினால் பண்டைய திராவிட சமயங்களிலும் ஆர்ய கடவுள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

      சமண, பௌத்ததின் பிரகாரம் ராவணன் பற்றிய குறிப்புக்கள் இல்லை. ராமன் மட்டுமே வருகின்றான். ராமன், கிருஷ்ணன் ஆகிய இருவரும் யாதவக் குலத்தவர்கள். சமணம், பௌத்தம் தோற்றுவிக்கப்பட்டது யாதவக் குலத்தவர்கள் என்பதால் யாதவக் குலத்தவர்களது தொன்மக் கதை மாந்தர்களாக ராமர், கிருஷ்ணர் இருக்கலாம். இவ்விருவரும் கறுநீல வண்ணத்தில் காட்டப்படுவதால் இவர்கள் கறுப்பின மக்களான திராவிட யாதவர்களதாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.

      ராமன், கிருஷ்ணர் பற்றிய குறிப்புக்கள் வேதங்களில் கிடையாது. கிருஷ்ணர் என்றால் கறுப்பர் என கறுப்பின மக்களை ரிக் வேதம் சொல்லும். ஆக, பிராமண வைதிக மதம் சிந்து நதியில் இருந்து கங்கை நதி நோக்கி பரவியக் காலத்தில் அங்கிருந்த பூர்வ மக்களின் கடவுள்களை சுவீகரம் செய்திருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அதே போலத் தான் காஷ்மீரத்துக்கு பரவிய போது அங்கிருந்த திபெத்திய மக்களின் கடவுளான ஷிவனையும் வைதிகம் சேர்த்துக் கொண்டிருக்கின்றது. ஆக, வைதிகம் பரவிய இடங்களிலும் எல்லாம் உள்ளூர் மக்களின் கடவுளைச் சேர்த்துக் கொண்டே போனதால் தான் இந்து மதத்தில் பல நூறு கடவுள்கள் இன்று தென்படுகின்றனர்.

      சமண மதத்தை சந்திரகுப்த மௌரியர் ஆதரித்து வளர்த்திருக்கின்றார். ஆனால், தாங்கள் சொன்னது போல கரவேலா மன்னர் அசோகரைப் போல சங்கங்கள் மற்றும் பள்ளிகள் அமைத்து பரப்பியதாக நானும் வாசித்திருக்கின்றேன். வடக்கில் புஷ்யமித்திரன் என்ற பிராமண மன்னன் மௌரியரை வீழ்த்திய பின்னர் அவன் அங்கிருந்த சமண, பௌத்த மடங்களை கொளுத்தி, பலரைக் கொன்றதாக நூல்கள் கூறுகின்றன. எரிந்த செங்கற்களோடு கண்டெடுக்கப்பட்ட சில விகாரைகளின் அகழ்வாய்வுகள் புஷ்யமித்திரனது காலத்தோடு பொருந்துவதாக ஆய்வாளார்கள் சொல்லுகின்றார்கள். இவனது காலத்தில் தான் பல சமணர்கள் கருநாடகம், தமிழகம் வந்தனர்.

      அசோக மன்னரையே ஆங்கிலேயர் வெளிக் கொணர்ந்த பின்னர் தான் நாம் அறிந்து கொண்டோம். அந்த வகையில் இந்தியாவை சிறப்புடன் ஆட்சி செய்த சமண, பௌத்த மன்னர்கள் பற்றி பாடநூல்கள் இருட்டடிப்புச் செய்வது வியப்பல்லவே. இன்றும் இந்தியாவின் பொற்காலம் குப்தர்கள் காலம் என்கின்றனர். ஆனால் பல பொற்காலங்கள் அன்றிருந்தன என்பதையும் சொல்வதில்லை. உண்மையில் நடுநிலையான அகழ்வாய்வுகளும், ஆராய்ச்சிகளும் வரலாறு, தொல்லியல் துறைகளில் மேற்கொள்ளப்படுவதில் பின் தங்கிவிட்டோம் என்றே சொல்லலாம்.

      Delete
    3. ஐயா,

      வணக்கம்.

      தங்களின் மீள்வருகைக்கும் மேலதிகக் கருத்துகளுக்கும் மகிழ்ச்சி.

      நானறிந்த சில கருத்துகள் மட்டும்....தங்களின் பின்னூட்டத் தொடர்ச்சியாய்..

      “““இந்திரன், மித்திரன், வருணன், பிரம்மன் ஆகியோர் ஆர்ய பண்பாட்டு குடியேற்றங்களின் பின் வந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். ஏனெனில் இந்தக் கடவுள்களை இந்தியாவிற்கு வெளியே இரானில் உருவான பண்டைய சுராஸ்தரன மதத்திலும் உள்ளார்கள். ஆர்ய இனங்கள் இரண்டாக பிரிந்து இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு பிரிவினருக்கு இந்திரன் கடவுள், மற்றொருவர்களுக்கு அசுரன் கடவுள். அசுரனை வழிபட்டவர்கள் இரானில் குடியேறியிருக்கின்றார்கள். அவர்களிடம் தோற்றுப் போய் இந்தப் பக்கம் வந்தவர்கள் தான் பிராமண மதத்தைத் தோற்றுவித்திருக்கலாம். ““““““

      இது தங்கள் கருத்தே ஆயினும், மணிமேகலையின் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில், சமணரின் கருத்தாகச் சீத்தனார் இந்திரர் வணங்கும் இறைவனாக அருகனைக் காட்டுகிறார்.

      “ இந்திரர் தொழப்படும் இறைவனெம் மிறைவன் ”

      என்பதாகவே சமணத்தின் நவபதார்த்தங்களை விளக்கும் நிகண்டவாதியின் கருத்துத் தொடங்குகிறது.

      மகாவீரரின் தலையான பதினோரு சீடர்களுள்ளில் ஒருவர் “ இந்திரபூதி “ என்பார். இப்பெயரளவிலான பொருத்தமும் ஈண்டு எண்ணத்தக்கது.

      சமணம் தம் வணக்கத்திற்குரியோரைப் பரமேட்டிகள் என்று குறிக்கிறது. தேவாரத்திலும் பிரபந்தத்திலும் சிவனும் திருமாலும் ‘பரமேட்டி’ என்று அழைக்கப்படுகின்றனர்.

      நன்னூலை இயற்றிய சமணரான பவணந்தி, தன் எழுத்ததிகார இறைவணக்கத்தில்,

      அருககக் கடவுளை,

      “பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
      நான்முகன் தொழுதுநன் கியம்புவன் எழுத்தே”

      என்று பரவுதல் நோக்க, அருகனுக்கு நான்முகன் என்னும் பெயரும் உரியதாய் இருத்தல் அறியப்படும்.

      தாங்கள் சொல்லும்,

      ““““சமண, பௌத்ததின் பிரகாரம் ராவணன் பற்றிய குறிப்புக்கள் இல்லை. ராமன் மட்டுமே வருகின்றான். ”””””

      என்னும் கருத்தை மறுக்க வேண்டியவனாய் இருக்கிறேன்.

      பிராகிருதத்தில் காணப்படும் பல இராமயணங்களுள் பழமையானது விமலசூரி என்பார் எழுதிய பௌமசரியம் ( தமிழில் -பதுமசரிதம்). இச்சரிதத்தில் இராமன், இராவணன் என இருவருமே சமணராகச் சித்தரிக்கப்படுகின்றனர்.

      ........................................................................................................தொடர்கிறேன்.

      Delete
    4. “““““சமண மதத்தை சந்திரகுப்த மௌரியர் ஆதரித்து வளர்த்திருக்கின்றார்.““““

      தாங்கள் சென்ற பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போலவே, இக்குறிப்பு அதிமுக்கியத்துவம்வாய்ந்த ஒன்றாகும்.

      ஏனெனில் மகாவீரரின் வாய்மொழிகளைக் கொண்டு அவரது பதினோரு சீடர்களால் ஆக்கப்பட்ட நூல்கள் அழிந்ததன் காரணம் அப்பொழுது ஏற்பட்ட கடும்பஞ்சமே என்ற கருத்து உண்டு.

      பத்திரபாகு என்கிற சமணத்துறவியின் தலைமையில், “எண்ணாயிரம்” என்று அழைக்கப்பட்ட ஒரு சமணக்கூட்டம் புலம்பெயர்ந்து, கர்நாடகத்தில் உள்ள சிரவணபெல்கோல ( வெள்ளைக்குளம் ) என்ற இடத்தில் நிலைகொண்டு இயங்கத் தொடங்கிய இந்தச் சந்திரகுப்தன் காலத்தில்தான்.

      ( எண்ணாயிரம் சமணர்களை வாதில் வென்று சம்பந்தர் கழுவேற்றினார் (அல்லது அவர்களாகக் கழுவேறினர் ) என்று சொல்லப்படுவது எண்ணாயிரம் என்கிற எண்ணிக்கையை அல்ல. இக்கூட்டத்தைச் சேர்ந்த சமணர்கள் எண்ணாயிரம் சமணர்கள் என்று அறியப்பட்டனர். அவர்களுள் ஒருவர் இறந்திருந்தாலும் அது எண்ணாயிரம் சமணரைக் கொன்றதாகவே அறியப்பட்டிருக்கும். அது எட்டாயிரம் என்கிற எண்ணிக்கைக் குறித்ததாகப் பிறழ உணரப்பட்டதும் உணர்த்தப்பட்டதும் நம் வரலாற்றின் புனைவு. அவ்வாறு நிகழ்ந்த பென்னம்பெரிய படுகொலையை ( அல்லது ) தற்கொலையை இலக்கியமோ கல்வெட்டோ நாட்டார் வழக்காற்றியலோ பதிவு செய்து வைத்திருக்கவில்லை என்பது இங்கு எண்ணத்தக்கது. )

      நிற்கத் தென்னாடெங்கினும், இலங்கையிலும் இவ்வெண்ணாயிரச் சமணர் குழு வழியாகவே சமணம் பரவிற்று.

      பத்திரபாகுவுடன் புலம்பெயராமல் பாடலிபுத்திரத்திலேயே தங்கிவிட்டவர்கள் அனைவரும் தூலபத்திரர் என்பாரின் தலைமையில் ஒன்றிணைந்து அழிந்தது போக எஞ்சியவற்றைத் தொகுக்க முனைந்தனர். அவர்களால் தொகுக்கப்பட்டன அங்கம் உபாங்கம் என்பனபோன்ற நூல்கள்.

      ஆனால் இத்தொகுப்பைத் தாயகம் கடந்த பத்திரபாகு தலைமையிலான எண்ணாயிரக் குழு ஏற்க மறுத்தது.

      துறவிகள் வெள்ளாடை உடுத்தலாம் என்பதைத் தூலபத்திரர் தலைமையிலான சமணர் கொள்கையாய்க் கொண்டனர்.

      ‘ஆடையென்பதும் துறவிக்கு மிகையே. அதனால் வரும் கவலை எமக்கெதற்கு? திக்குகளையே ஆடையாய் உடுத்தவர் யாம்!’ என்று பத்திரபாகு தலைமயிலான எண்ணாயிரக் குழு தூலபத்திரக் குழுவின் கொள்கையை புறந்தள்ளியது.

      இதில் இன்னும் ஆழமாகச் சென்று பார்க்க, 23 ஆம் தீர்த்தங்கரரான பார்சுவநாதர் வெள்ளாடை தரித்தலையும், 24 ஆம் தீர்த்தங்கரான மகாவீரர் ஆடை துறத்த நிலையையும் கொண்டு இரு தீர்த்தங்கரின் கொள்கைவழிப் பிரிந்த இரு சமணக் குழுக்களாகவும் பத்திரபாகுவையும், தூலபத்திரரையும் கொள்ளலாம்.
      இங்கு, ஒருசார் ஒற்றுமைக்கான இடைச்செருகலாய், பழைய ஏற்பாட்டின் யஹோவா என்பவரை ஏற்றுப்பின்பற்றிவரும் யூதரையும், அம்மரபில் இருந்து தோன்றி யஹோவாவையும் ஏற்று, கிறித்துவை முதன்மையாகக் கொண்ட கிறித்தவரையும் ((( விலகி இறந்துபோன ஒருசீடனைத் தவிரக் கிறித்துவின் போதனையை உலகெங்கிலும் பரப்ப முனைந்த))) அவர்தம் 11 சீடர்களையும் ( மகாவீரருக்கு இருந்த பதினொருவரைப் போல) ஒருங்கெண்ணத் தோன்றுகிறது.
      ஆகத் துறவிகள் வெள்ளாடை அணியலாம் என்பன போன்ற கொள்கைகளை உடைய சமணர் சுவேதம்பரர் என்றும்.
      ஆடையும் மிகையே. அதையும் அவிழ்த்தெறிவதுதான் துறவு என்ற சமணர் திகம்பரர் என்றும் சமணர் இதன் பின் இருபிரிவினராய் அழைக்கப்படலாயினர்.

      சுவேதம்பரரின் கிரந்தங்களை உடன்படாத் திகம்பரர் நிர்கிரந்தர் எனப்பட்டனர். இதுதான் நிகண்டம் ஆயிற்று. மணிமேகலை கூறும் நிகண்டவாதி என்பான் திகம்பரப் பிரிவினனே.

      சமணரின் இப்பிரிவிற்குச் சந்திரகுப்தரின் காலத்தில் நேர்ந்த அந்தப் பஞ்சமும் அதனைத் தொடர்ந்த புலம்பெயர்தலும் காரணமாயிற்று.

      நான் முன்பே குறிப்பிட்டது போன்று வரலாறு என்றல்லாமல், சமணம் மட்டுமன்றி, பழங்காலத்தில் தமிழகத்திருந்த பல்வேறு சமயக்கொள்கைகள் பற்றிய பதிவுகளாகவே இதனை எழுதிப்போகிறேன். இன்னும் பல சமயங்கள் பற்றி எழுத வேண்டி இருக்கிறது.

      வரலாற்று நோக்கில் அதனை விளக்கித் தாங்கள் அளிக்கும் பின்னூட்டம் படிப்போர்க்கு இதன் சொல்லப்படாத இன்னொரு கோணத்தையும் புலப்படுத்தி, முழுமையான ஒரு பரிமாணத்தைக் காட்டத்துணைபுரியும் என்பது உண்மை.

      அதற்காய் என் நன்றியும் மகிழ்ச்சியும் என்றென்றும்.

      Delete
    5. தங்கள் இருவரின் உரையாடல்களையே தனிப்பதிவாய் வெளியிடலாம். அவ்வளவு கருத்துக்கள்! வியக்கிறேன்! மலைக்கிறேன்! சுவைக்கிறேன்! நன்றி! நன்றி! மிக்க நன்றி!

      Delete
  20. சுவாரஸ்யமான விளக்கங்கள். கலையரசி அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீ.

      Delete
  21. தொடர்ந்து படித்துவருகிறேன். நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  22. ஐயா வணக்கம்,

    என்னுடைய வேலை இரசாயனம் சம்பந்தப்பட்டது. தங்கள் பதிவில் கூறிய கருத்தியல் முற்றிலும் உண்மையே. நாம் இறந்த பின்னர் இந்த உடம்பு அழிந்து இந்த பிரபஞ்சத்தோடு கலந்து விடுகிறது அதாவது Oxygen,nitrogen, phosphorus, calcium. And etc.,

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக சொன்னீர்கள். நாம் இறந்த பின்னர் நமது உடலின் ஒவ்வொரு பாகங்களும் அதன் basic molecular நிலைக்குப் போய்விடுகின்றது.

      Delete
    2. தங்களது தகவலுக்கு நன்றி.

      தங்களுக்கும் நன்றி ஐயா.

      Delete
  23. நீங்கள் கூறிய ஸ்கந்தத்திற்கும் கந்தன் (முருகன்) க்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?

    ReplyDelete
  24. ஸ்கந்தத்திற்கும் ஸ்கந்தனுக்கும் தொடர்பு இருக்கின்றதா எனத் தெரியவில்லை. ஆனால் கமில் சுவலபில் உட்பட பல ஆய்வாளர்களது நோக்கில் பார்க்கும் போது தமிழ் கடவுளான முருகன், சேயோன் என்பவரும் வடநாட்டுக் கடவுளான ஸ்கந்தன், சுப்பிரமணியன் என்பவரும் வேறு வேறு கடவுள்கள் என்பதாகவே சொல்லப்படுகின்றது. இதை நாம் ஆழமாக கவனிக்கும் போதும் தெரிகின்றது.

    ஒரு ஆய்வின் படி ஸ்கந்த வழிபாடு என்பது வடஇந்தியாவை கிரேக்கர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் தாக்க வந்த போது அதன் பின்விளைவுகளால் ஏற்பட்டது என்கின்றனர். அதாவது கிரேக்கர்கள் இங்கேயே செட்டில் ஆனதோடு தமது அரசரான அலக்ஸாண்டரை ஸிக்கந்தர் என வணங்கி இருக்கின்றனர். இந்த வழிப்பாட்டு முறை பின்னர் பரவி போர்க் கடவுளான ஸிக்கந்தர் அறியப்படுகின்றார். இது தமிழகத்துக்கு வந்த பின், இங்குள்ள முருகனோடு ஸிக்கந்தர் இணைக்கப்பட்டு சுப்பிரமணியர், ஸ்கந்தனாக மாற்றப்படுகின்றார். சங்க இலக்கியத்தின் படி பார்த்தால் முருகன் போர்க்கடவுளாக இல்லாமல் காதல் கடவுளாக அறியப்படுகின்றான். இது குறித்து மேலும் வாசித்து வருகின்றேன் மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

    ReplyDelete
    Replies
    1. -திரு சயின்ஸ் டெர்மினல்-

      ஸ்கந்தன் என்பதற்கும் கந்தன் என்பதற்கும் பெயரளவிலான தொடர்புகள் உண்டு.


      ““கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்
      அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற்
      சாரணர் கூறிய தகைசால் நன்மொழி
      மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு““““

      என்று சிலப்பதிகாரக் காடுகாண் காதையில் இளங்கோ கந்தன் என்று அருகனையே குறிப்பிடுகிறார். கந்தப் பள்ளி என்பது அருகக் கோயில்.

      நாம் முருகனுக்கு வழங்கும் குமரன் என்னும் பெயரும் அருகனைக் குறித்து வழங்கப்பட்டிருக்கிறது.

      சிலப்பதிகாரத்தில்,


      “பெருமகன் திருமொழி“ என வருமிடத்தில் அதன் உரைக்குறிப்பாக “ அருகக் குமரன் அளிச்செய்த பரமாகமங்கள் என்று அடியார்க்கு நல்லார் கூறிச்செல்கிறார்.

      பரமேட்டி என்ற சமணச் சொல்லை பின் சைவமும் வைணவமும் தம்மிறையைக் குறிக்கக் கொண்டாற்போலே கந்தன் என்பதையும் குமரன் என்பதையும் பின்வந்த காலத்து முருகனைக் குறிக்கப் பயன்படுத்தினர் என்று எண்ணுதற்கு இடமுண்டு.


      தமிழ்க்கடவுளாக அறியப்பட்டவன் முருகன் என்பதற்கே பழந்தமிழில் அதிக சான்றுகள் உண்டு.

      தங்களின் வருகைக்கும் மதிப்பிற்குரிய திரு. நீலன் ஐயாவின் விளக்கங்களுக்கும் நன்றிகள.

      Delete
    2. அரிய செய்திகள்! மிக்க நன்றி!

      இது குறித்துச் சிறியேனும் ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

      கே.ஆர்.எசு எனப்படும் 'மாதவிப்பந்தல்' கண்ணபிரான் அவர்கள் பற்றி நீலன் ஐயா, ஜோசப் விஜு ஐயா இருவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அவரும் தங்களைப் போலவே சிறந்த தமிழாய்வாளர், அறிஞர். இறையியலிலும் நாட்டமுள்ளவர். அதே நேரம், முற்போக்குச் சிந்தனைகளும் கொண்டவர். அவர் ஓரிடத்தில் 'கந்தன்' எனும் சொல்லுக்குப் பின்வருமாறு ஒரு விளக்கம் அளிக்கிறார்.

      "கந்தன் = இவன் “ஸ்கந்தன்” அல்ல! கந்து = யானையைக் கட்டி வைக்கும் குறுந் தூண்; அதையும் அந்த யானையே தான் சுமந்து செல்லும்;
      தன்னைக் கட்டும் ஒன்றையும் தானே சுமந்து செல்லுதல் போல்..
      கட்டுப்படாக் கடவுளும், அன்பால் தானே கட்டுப்படல்; அதுவே, கந்து + அன் = கந்தன்!"

      "சங்கத் தமிழில் நாத்திகம்: “கடவுள்” உண்டா?" எனும் அவருடைய அந்த அருமையான பதிவைப் படிக்க https://dosa365.wordpress.com/2012/11/22/106/ எனும் முகவரிக்குச் செல்லலாம். பதிவின் கருத்துரைப் பகுதியில் சிறுவனான என்னுடன் ஒரு குட்டி உரையாடலும் அவர் நிகழ்த்தியிருக்கிறார்! [நீ வாங்குற பத்து அஞ்சு ஹிட்டுக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவையா? ;-)]

      Delete

  25. வணக்கம்!

    எங்குப்போய் இவ்வுலகம் எய்தும்? அறிந்திடவே
    அங்குப்போய்க் கண்ட அணுக்கொள்கை! - இங்குப்போய்
    ஈடிற் பதிவுகளை ஏந்திக் களித்திட்டால்
    ஏடிற் சிறக்கும் எழுத்து!

    நீண்ட கருத்துகள் நெஞ்சுள் நிலைகொண்டு
    துாண்டும் வரலாற்றை! துாயமனம் - வேண்டும்
    நெறிகளைக் கொட்டிக் குவித்தீர்! நிலைத்த
    அறிவினை ஊட்டும் அவை!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      சிற்றறிவிற் கெட்டியவை செல்லரித்துப் போகாமற்
      கற்றறிய வேயிங்குக் காட்டுகிறேன் - நற்றமிழில்
      பாட்டுப் பறைமுழங்கிப் பாராட்டும் வெண்பாக்கள்
      காட்டுமும் உள்ளக் கவின்.


      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  26. மலைப்பூட்டும் பதிவு! இவ்வளவு தாமதமாகப் படிப்பதற்காக வருந்துகிறேன்! சமணர்கள் இறைமறுப்புக் கொள்கையுடையவர்கள் என்பதை அறிவேன். ஆனால், அந்தக் காலத்திலேயே இவ்வளவு அறிவியலைக் கூறிச் சென்றிருக்கிறார்கள் என்று தெரியாது ஐயா! தெரிய வைத்ததற்கு மிக்க நன்றி! ஆனால், இந்தப் பதிவைத் தாங்கள், 'சமணம்', 'தத்துவம்' ஆகிய இரு பகுப்புகளின் கீழ் மட்டுமே வகைப்படுத்தியிருக்கிறீர்களே! 'அறிவியல்' எனவும் ஒரு பகுப்பைத் தொடங்கி அதன் கீழ் இதைச் சேருங்கள் ஐயா! அப்பொழுதுதான் இன்னும் பலருக்கு, குறிப்பாக அறிவியல் தேடல் உள்ளவர்களுக்கு இது போய்ச் சேரும்.

    அதே போல, தளத்தின் தொடர்களுடைய பெயர்களிலேயே பகுப்புகளும் திறந்து அவற்றின் கீழ் அந்தந்தத் தொடர்களை வெளியிட்டு, 'தொடர்கள்' எனத் தனியாக ஒரு பட்டியல் வெளியிட்டீர்களானால் அந்தந்தத் தொடர்களைச் சேர்த்து வைத்துப் படிக்க என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு மிகவும் வசதியாய் இருக்குமே!

    ReplyDelete
  27. அண்ணா, சுவாரசியமாகப் போகிறது தொடர்பதிவு. உங்கள் பதிவிலிருந்தும், பின்னூட்டங்கள், அவற்றிற்கான பதில்கள் என்று கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது.
    நிறுத்திவிடாதீர்கள் அண்ணா, தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, என் சிறு மூளைக்குள் இத்தனை விசயங்கள் ஏறவில்லை..மீண்டும் படித்துவிட்டுத் தான் அடுத்தப் பாகத்திற்குச் செல்வேன். இல்லையென்றால் வினோத்திடம் சொல்லும்போது அவர் கேள்வி கேட்டால் திணற வேண்டும். எங்கள் இருவருக்கும் வரலாற்றில் ஆர்வம் உண்டு. உங்களை அலைபேசியில் அழைத்துக் கதை கேட்டுவிட்டால் என்ன என்றும் தோன்றுகிறது. :-)

      நீலன் அவர்கள் சொல்லியிருக்கும் //நடுநிலையான அகழ்வாய்வுகளும், ஆராய்ச்சிகளும் வரலாறு, தொல்லியல் துறைகளில் மேற்கொள்ளப்படுவதில் பின் தங்கிவிட்டோம் என்றே சொல்லலாம். // கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. இதைப் பற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம்.

      அண்ணா, இத்தொகுப்பை நீங்கள் நூலாக வெளியிட வேண்டும்.

      Delete