Pages

Tuesday, 25 October 2016

ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்


ஆசீவகர் பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது? என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.

வெளியில் உள்ள பொருட்களின் தூண்டுதலே காமத்தை விளைவிக்கும் எனக் கருதிய ஆசீவகர் அதனைத் தவிர்க்கும் முயற்சியாக வெளியுலகிற்கும் தமக்கும் உள்ள தொடர்பினை நீக்கிக்கொள்ள முயன்றனர்.

மலையிலோ காட்டிலோ குகைகளிலோ இருப்பினும் வெளியுலகத் தொடர்புகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று கூற முடியாது.

அதற்கென அவர்கள் கண்ட வழிமுறைதான், தாழிகள்.

நாம் முதுமக்கட்தாழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.

பொதுவாக அவை இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பண்டைக்காலத்தில் பயன்பட்டது என்பதை அறிந்திருப்போம்.

கொஞ்சம் கூடுதலாக, உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களையும் இப்படித் தாழியுள் இட்டு, தானியங்களையும் சிறு விளக்கொன்றையும் உள் வைத்துப் புதைக்கும் முறை இருந்ததையும்  சிலர் அறிந்திருக்கலாம்.

ஆனால் வாயகன்ற பெரிய தாழிகளுள், சம்மணமிட்ட நிலையில் அமர்ந்து இவ்வுலக தொடர்புகளைத் துண்டித்துத் தவம் இயற்றும் முறையை ஆசீவகர் கையாண்டனர்.

சங்க இலக்கியத்தில் ஆசீவகர்களின் கொள்கைகள் குறித்தும், தாழிகள் குறித்தும் குறிப்புகள் இருப்பினும் அதில் ஆசீவகர் என்ற சொல் இல்லை.

ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணியில் இத்தாழியில் ஆசீவகர் செய்யும் தவம் பற்றி வெளிப்படையான குறிப்பு வருகிறது.

“  தாழியிற் பிணங்களும் தலைப்பட வெறுத்தவப்
பாழியிற் பிணங்களுந் துளபெழப் படுத்தியே” (376)

இவ்வரிகளுக்கு அதன் பழைய உரையாசிரியர்,

தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களில் புக்குத் தவம் செய்வாராதலின் அவரைச் சுட்டி நின்றது

என்று  பொருள் கூறுகிறார்.

இக்குறிப்பு, ஆசீவகர் தாழிக்குள்ளே இருந்து தவம் செய்து தம் உயிரையும் போக்கிக் கொள்வர் என்பதைக் காட்டுகிறது.

இங்கு வந்திருக்கும் ஆருகதர் என்ற சொல் பொதுவாகச் சமணரைக் குறிக்க  இன்று வழங்கப்பட்டாலும் துறவு நெறியை வலியுறுத்தியோர் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இது இங்கு ஆளப்பட்டமை கவனிக்கத்தக்கது.

இதைப்போன்றே சிரமணர்கள் என்ற சொல்லும், ( சிரமம் அதாவது ) உடலை வருத்தி இதுபோன்ற தவமுயற்சிகளில் ஈடுபடுவோரை பொதுவாகக் குறிக்கும் சொல்லாகும்.

இதுவும் நாளடைவில் சமணரைக் குறிக்கும் பொதுச்சொல்லாக அமைந்தது.

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் நச்சினார்க்கினியர்,

வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேழன்” ( தொல்.பொருள்-60 )

என்னும் சூத்திரத்தின் பொருள்விளக்குமிடத்து மேற்கோளாக,

தாழி கவிப்பத் தவஞ்செய்வார் மண்ணாக
வாழிய நோற்றனை மால்வரை – யாழிசூழ்
மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக்
கண்டன னின்மாட்டோ கல்

என்னும் பாடலைக்காட்டுகிறார்.

இதில்,

தாழி கவிப்பத் தவஞ்செய்வார் என்னுந் தொடர் ஆசீவகரைக் குறிப்பதாகும்.

வேதங்கள் வரும்முன்பு இந்திய மக்களிடையே நிலவிய சமயக் கொள்கைகளில் உள்ள சில ஒற்றுமைகளை ஆசீவகம் பற்றிய சென்ற பதிவில் கண்டோம்.

ஆசீவகம் சமணம் பௌத்தம் ஆகிய இச்சமயங்களிடையே உள்ள இன்னொரு ஒற்றுமை, அவை இத்தகு தவநெறிக்குக் கொடுத்த முக்கியத்துவமாகும்.

வைதிக சமயங்கள் பிரம்மச்சரியம், கிரஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற படிநிலைகளின் இறுதியாய்த் துறவினை அணுகினாலும், வீடுபேறடையத் துறவே வழி என்ற என்ற நிலைப்பாடுடையனவாய் இந்த மூன்று அவைதிக சமயங்களும் விளங்கின.

வேதங்கள் இந்தியாவில் கால்கொளும் முன்பே துறவு என்னும் சிந்தனை இங்கு வாழ்ந்த தொல்குடிகளிடையே நிலைபெற்றிருந்தது என்பதை நாம் மனதிருத்த வேண்டும்.

உலகில் ஒருவருக்குப் பற்று என்பது இந்த உடலின் மூலமாக ஏற்படுகிறது.

இந்த உடலுக்கென எதனையும் வேண்டாததன் மூலம், அதனைப் பொருட்படுத்தாதன் மூலம், இன்னும் சற்று மேலே போய், இவ்வுடலைக் கடுமையாக வருத்திக்கொள்வதன் மூலம் சுயநலமற்ற, பற்று நீங்கிய சிந்தனையையும் அதன் விளைவாக வீடுபேற்றையச் செய்யும் ஞானத்தையும் பெறமுடியும் என இவர்கள் நம்பினர்.

அதிலும் சமண பௌத்தரை நோக்க, ஆசீவகர் மேற்கொண்ட தவமுயற்சிகள் மிகக்கடுமையானவை.

அவர்கள் மேற்கொண்ட நான்குவகைத் தவமுயற்சிகள் எத்தகு கொடுமையானவை என்பது பற்றி அடுத்த பதிவில் காண்போம்.


தொடர்வோம்.

பட உதவி -நன்றி - https://upload.wikimedia.org/

20 comments:

  1. இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளால் தான் ஆசீவகம் அழிந்திருக்கும்.

    ReplyDelete
  2. வணக்கம் கவிஞரே விளக்கம் சொல்லும் முறை அழகு தொடர்கிறேன்
    த.ம.2

    ReplyDelete
  3. திரு சிவகுமாரன் அவர்கள் சொன்னதுபோல் கடுமையான தவமுயற்சியை கொண்டதால் தான் ஆசீவகம் அழிந்துபட்டதோ?
    ஆசீவகர்கள் மேற்கொண்ட கொடுமையான அந்த நான்கு வகைகளை அறிய தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. //உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களையும் இப்படித் தாழியுள் இட்டு, தானியங்களையும் சிறு விளக்கொன்றையும் உள் வைத்துப் புதைக்கும் முறை இருந்ததையும் சிலர் அறிந்திருக்கலாம்// - எனக்குத் தெரியாது. இப்படி ஒரு முறை இருந்ததை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். திகிலான தகவல்! ஒரு மனிதருக்கு உற்றாரின் உதவி இன்றியமையாத் தேவையாக இருக்கும் நேரத்தில் அவரை இப்படிக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்களே என நினைத்துத் தலைகுனிவதா? அல்லது, இன்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தும் பரிவுக் (கருணைக்) கொலை முறையை அந்தக் காலத்திலேயே தமிழர்கள் கடைப்பிடித்து, இவ்வகையிலும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்களே எனப் பெருமைப்படுவதா? புரியவில்லை!

    ஆனால், பதிவில் இருப்பவை அனைத்தும் மிக மிக அரிய செய்திகள்! ஏதாவது ஒரு நூலைப் படிக்கும்பொழுது, அதில் காணும் அரிய செய்தியை மற்றவர்களும் அறியப் பகிர்வது பதிவு. ஆனால் தாங்களோ, ’ஆசீவகம்’ ’சமணம்’ எனக் குறிப்பிட்ட விதயங்களை எடுத்துக் கொண்டு அவை தொடர்பாகப் பல்வேறு நூல்களிலும் எங்கோ போகிற போக்கில் சொல்லிச் சென்றிருக்கும் அரிய செய்திகளையெல்லாம் தோண்டித் துருவியெடுத்துப் படையல் இடுகிறீர்கள். இது ஆராய்ச்சித்தரத்துக்குரியது! நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல! மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. ஆசிவகத்தின் ஆய்வாளராக உலகறிந்த நபராக இருப்பவர் பேரா. நெடுஞ்செழியன்..
      தாழிக்குள் புகுந்து உயிர் துறப்பது குறித்து விரிவாக எழுதவில்லை அவர்.

      இங்கே விரிவான தகவல் இருக்கிறது.

      நல்ல வேலை பதிவர் மீண்டும் எழுதத் துவங்கினார்..
      தொடரலாம் பிரகாசன் ..

      Delete
  5. ஐயா! ‘ஆசீவகம்’ குறித்த இந்த ஆய்வை முழுமையாகச் செய்து முடித்தவுடன் தாங்கள் ஏன் இதை முனைவர் பட்டத்துக்காக அனுப்பக்கூடாது? தாங்கள் மட்டும் முனைவர் பட்டம் பெற்றுவிட்டால், தாங்கள் ஆங்கில ஆசிரியர் என்கிற ஒரே காரணத்தால் தமிழ் தொடர்பான விதயங்களில் தலையிடக் கூடாது எனத் திமிர் காட்டும் பிறவிகளின் கொட்டத்தை அடக்கி விடலாம் இல்லையா?

    அளவுக்கு மீறிப் பேசியிருப்பின் பொறுத்தருள்க!

    ReplyDelete
    Replies
    1. இபுஞா சகா....விஜு சகோ ஆங்கிலத்திலும் ஆளுமை மிகுந்தவர்!!! எனது தனிப்பட்ட எண்ணம் அவர் ஆங்கிலத்திலும் ஒரு தளம் ஆரம்பித்து கற்றுக் கொடுக்கலாம் என்பதே! ஆனால், அது நம் சுயநலம் என்றாகிவிடும். அவருக்கும் எத்தனையோ வேலைப்பளு, நேரமின்மை...அருமையான ஆசிரியர்! டைம் மெஷினில் நாம் எல்லாம் கொஞ்சம் பின் நோக்கிச் சென்று விடலாமா? இபுஞா? !! அதுவும் அவர் கற்பிக்கும் பள்ளியில் மாணவர்களாக!!!

      கீதா

      Delete
  6. தலை முடியை ஒவ்வொன்றாய் பிடுங்கி எடுக்கும் கொடுமையான முறை இன்றளவும் பௌத்த மதத்தில் இருப்பதாக கேள்விபட்டேன் ,அதனினும் ஆசீவகர் மேற்கொண்ட தவமுயற்சிகள் மிகக்கடுமையானயா ?

    ReplyDelete
  7. பிணங்களைத் தாழியில் வைத்துப் புதைத்ததாகத் தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இவர்கள் அதனுள்ளே அமர்ந்து தவம் செய்து தம் உயிரைப் போக்கிக்கொள்வர் என்ற செய்தியை இன்று தான் அறிந்தேன். அவர்கள் மேற்கொண்ட தவமுயற்சிகளை அறிய ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
  8. கடுமையாக வருத்திக்கொள்வது சற்று சிரமமே. இருந்தாலும் இந்த விஷயத்தில் அவர்கள் விரும்பி உள்ளே சென்றார்களா, வலிந்து உள்ளே (தாழிக்குள்) வைக்கப்பட்டார்களா என்ற கோணத்தில்கூட சிந்திக்கவேண்டியுள்ளது. தம5

    ReplyDelete
  9. இப்படியும் வாழ்ந்துள்ளனரா நம் முன்னோர்கள்? ஏன் தாழிக்குள் சென்று தவமிருக்க வேண்டும்? ஆசீவகம் குறித்த தக்கயாகப் பரணி சிறந்த எடுத்துக்காட்டு.

    ReplyDelete
  10. ji these rigorous inhuman practices only paved way for the disappearance of aaseevagam buddhism samanam...and the great hinduism survived....

    ReplyDelete
  11. உயிருடன் புதையல்! திகிலான தகவல். மற்ற விஷயங்களும் நான் அறியாதவையே. நன்றி. தொடர்கிறேன்.

    ReplyDelete
  12. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  13. ஆசீவகர் தம் ஆசைகளை எப்படியெலாம் கட்டுப்படுத்த முயன்றிருக்கின்றனர் என்பதை அறிய தாங்கள் கூறியது போல் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. மிகவும் முதுமை சூழ்ந்து உடல் குறுகி உடற்பாகங்கள் அனைத்தும் இயக்கமிழந்து உயிர்மட்டும் தொக்கிநிற்கும் நிலையில் முதுமக்களைத் தாழியில் அடைத்துப் புதைப்பர் என்ற தகவலை பள்ளியில் படிக்கும்போது அறிந்திருக்கிறேன். அதனால்தான் அது முதுமக்கள் தாழி எனப்பெயர் பெற்றதாகவும் அறிந்திருக்கிறேன். ஆசீவகர்கள் தவஞ்செய்யத் தேர்ந்தெடுத்த வழி என அறிய ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக உள்ளது.

    இங்கே ஆஸ்திரேலியாவில் பெரும்பாலானத் தோட்டங்களில் அலங்காரத்துக்கென வைக்கப்பட்டிருக்கும் பெரிய பெரிய தாழிகளைப் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம் முதுமக்கள் தாழி நினைவுக்கு வந்து மனம் வருத்தும். இனி ஆசீவகர்களும் நினைவுக்கு வருவார்கள்.

    ReplyDelete
  14. அருமையாக விளக்கிச் சொல்லியிருக்கீங்க...
    உயிரோடு புதைத்தலா...? ஆசீவகர் தன் ஆசைகளை கட்டுப்படுத்த எப்படியெல்லாம் முயன்றார் என்பதை அரியும் போது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

    ReplyDelete
  15. வணக்கம் அய்யா,

    நலம் தானே,, அனைவரும் நலமா?

    தாங்கள் மீண்டும் பதிவுலகம் வந்தது கண்டு மகிழ்ச்சி,,,

    ஆசீவகம் குறித்த தங்கள் ஆய்வு மிக அருமை,,

    ஆசீவகம் ஆசிவீகம் இரண்டும் ஒன்று தானா???

    தாங்கள் எழுதி இருப்பதே சரி என ,,

    தொடந்து எழுதுங்கள் அய்யா பலவற்றை நாங்கள் தெரிந்துக்கொள்ள,,

    நன்றி நன்றி,,

    ReplyDelete
  16. என்ன ஒரு விரிவான விளக்கம்!! ஆசீவகம் பற்றி. புதிய தகவல்கள். இதுவரை இப்படி விளக்கமாக அறிந்திராத தகவல்கள். இன்னும் அறிய வேண்டித் தொடர்கின்றோம்!

    கீதா: ஓ! தாழியில் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்ளுவது ஆசீவகமா?! இதைப் பற்றி எப்போதோ வாசித்த நினைவு ஆனால் அது ஆசீவகம் என்ற சொல்லை முன்பு அறிந்திருந்தாலும் அதனுடன் தொடர்புப் படுத்தி அறிந்திருக்கவில்லை.

    //உடல்நலிந்த முதியவர்களையும் தீரா நோய் கொண்டவர்களையும் இப்படித் தாழியுள் இட்டு, தானியங்களையும் சிறு விளக்கொன்றையும் உள் வைத்துப் புதைக்கும் முறை இருந்ததையும் சிலர் அறிந்திருக்கலாம்// இதுவும் ஆசிவகம் என்பது புதிதாய் அறிவது. அப்படியென்றால் இப்போதும் நம்மில் பலரும் பெற்றோரையே வயதாகியோ இல்லை தீரா நோய்வாய்ப்பட்டவர்கள் என்றால் பார்த்துக் கொள்ளும் பொறுமையற்று, நேரமற்று எப்போது இறப்பார்கள் என்றோ இல்லை மடியட்டும் என்று விட்டுவிடுவதும் கூட, என்ன தாழியுள் புதைக்காமல் ஆனால் அதே எண்ணத்துடன் இருப்பதும் உயிரின/ மனித வளர்ச்சியின் பரிணாமத்தில் தொடர்ந்துவரும் எண்ணம்தானோ? கொஞ்சம் நாகரீகமாக! நாகரீக வளர்ச்சியின் காரணமாக...என்றும் எடுத்துக் கொள்ளலாமோ?

    மேலநாட்டில் பேசப்படும், சட்டமாகவே இருக்கும், நம் நாட்டிலும் சமீபத்தில் பேசப்பட்ட பரிவுக் கொலை என்பதும் அன்றே இருந்திருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாமோ?

    ஏனோ மனம் இது போன்ற செயல்களை ஒப்ப மறுக்கிறது!!! ஒன்று தெரிகிறது உயிரினத்தின் பரிணாம வளர்ச்சியில் புறத்தில் நிகழும் செயல்பாடுகள் அதாவது தொழில்நுட்ப வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று நிகழ்ந்திருக்கலாம் ஆனால் மனிதனின் மன வளர்ச்சியில் அவ்வளவாக எதுவும் வளர்ந்திருக்கவில்லை, அடிப்படை எண்ணங்கள் அப்படியேதான் இருக்கின்றன...நாகரீகத்தின் பெயரில் மறைந்து அடித்தளத்தில் இருப்பதாகவேபடுகிறது.

    என் எண்ணங்கள் தவறாக இருக்கலாம். எனக்குத் தோன்றியதைப் பகிர்ந்துள்ளேன் சகோ.

    நீங்கள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறீர்களோ சகோ? முனைவர் பட்டம் பெற? ஆனால், நீங்கள் பட்டம் பெறாமலேயே, பட்டத்திற்காக அல்லாமலேயே ஆய்வு செய்பவர்.விருப்பத்துடன், ஆர்வத்துடன், தேடலில் ஆழ்ந்து வாசிப்பவர். அதனை இங்குப் பகிர்பவர் என்பது நன்றாகவே தெரியும். தங்கள் பதிவுகள் அனைத்தும் அதற்குச் சாட்சி!!!

    அறியாதவை பல அறிய முடிகிறது. மிக்க நன்றி சகோ! நாங்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள்! இப்படிப் பகிர்ந்து கொள்ளும் ஒருவர் எங்களிடையே இருக்கிறார் என்பதுவே நாங்கள் பெற்ற பேறு எனலாம். மிக்க நன்றி சகோ! தொடர்கின்றோம்..

    ReplyDelete
  17. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete