ஈரமுலர்ந்த மணல்வீடொன்றின் கலைந்துதிரும் ஆயிரமாயிரம் துகள்களின் மிச்சமிருந்தன, வனைந்த கரங்களால் இணைந்த கனவுகள். அலை ஆரத்தழுவி அத்தனையும் உட்செரித்த பேராழங்களில் உவர்மண்ணாய்க் கிடந்தவோர் நாளில் திடீரென நினைவு வந்தது,…. அன்று அவனை அறியாமல் அகன்றுபோன அவளது பிறந்தநாள்…….!
எங்கோ ஓர்துகள் காலுந்தி மேலெழ, அதனை வாரிற்றுச் சொற்சுழல்.
தலைகீழ்க் கோபுரமொன்றின் கலசமாகக் கிடைத்த வாய்ப்பென்றெண்ணித் துடுப்பொன்று துழவ உடைகல்லாய், மீள்சேராத நீர்ப்பிளவையின் உட்புறம் இப்படியாக இருந்தது………………
என்பேரும் உன்பேரும் இணைகின்ற போது
இனிக்கின்ற என்நெஞ்சம் நீ‘இல்லை என்னும்,
துன்பத்தின் தூக்கிற்குள் தலைசிக்க எங்கோ
தூரத்தில் நீவாழத் துடிக்கின்ற தின்னும்!
ஒன்றாகு வோமென்ற நிலையில்லை இன்று!
ஒவ்வொன்றாய்க் கலைகின்ற கனவுள்ளே நின்று
‘நன்றாக நீவாழ்க பல்லாண்டு’ என்று
நினைக்கின்ற மனமென்னில் எப்போதும் உண்டு!
கண்மூடத் தெரிகின்ற கனவோடு.. உன்னில்!
கதிர்பட்டுத் தெறிக்கின்ற ஒளியோடு.. உன்னில்!
மண்சேர மணக்கின்ற மழையோடு.. உன்னில்!
மறுக்காமல் நதியேற்கும் கடலோடு.. உன்னில்!
விண்முட்டத் துடிக்கின்ற மலையோடு.. உன்னில்!
விதியாடும் விளையாட்டின் வலியோடு.. உன்னில்!
திண்டாடும் மனம்உன்பேர் திகட்டாமல் சொல்லித்
தெய்வத்தின் அருள்வேண்டி நீவாழ்க என்னும்!
தூரத்தில் நீசென்று மறைந்தாலும் என்ன?
தொடங்காத கதையென்னில் முடிந்தாலும் என்ன?
ஓரத்தில் நீயென்றே ஒளித்தாலு மென்ன?
ஓய்விலுன் பேர்சொல்லி ரசித்தாலும் என்ன?
நீரற்ற நதியாகி நின்றாலும் என்ன ?
நீயற்ற வாழ்வென்னில் நீண்டாலு மென்ன?
பாரத்தில் மூச்சற்று வீழ்ந்தாலும் உன்றன்
பாதத்தின் தடம்தேடிப் பார்க்கின்றே னேடி!
ஒளிகின்ற விளையாட்டில் நீதோற்றுப் போனாய்!
ஒளித்தென்னைக் காட்டாமல் நான்வென்று.. என்ன?
குளிர்கின்ற தீக்குள்ளும் காய்பனியி னுள்ளும்
கிடந்தென்றன் மனம்வாடக் கடன்பட்ட தென்ன?
துளிர்க்கின்ற தளிரெல்லாம் நீகொய்து போவாய்!
துணையாகும் கனவும்நீ துண்டிப்ப தென்ன?
வளர்கின்றாய் எனைத்தின்று நான்தீரத் தீர
வலியோடு சுகம்தந்து வாழ்விப்ப தென்ன?
போரில்நான் புறங்காட்டிப் போனாலும் என்ன?
பொய்யான முகத்தோடு திரிந்தாலு மென்ன?
ஊரில்என் பேர்‘ஊமை ஆனாலும் என்ன?
உன்னோடு பழகாமல் பிரிந்தாலும் என்ன?
நாரில்லாப் பூமாலை நானானால் என்ன?
நரைகூடி உடல்மெல்ல நசிந்தாலும் என்ன?
நேரில்'உன் முகம்காண முடியாத போதும்
‘நிலவாகக் கதிராக நீவாழ்க!’ என்பேன்!
பட உதவி - நன்றி: https://encrypted-tbn3.gstatic.com/images
அருமை..ஒளிகின்ற விளையாட்டில் நீதோற்றுப் போனாய்!
ReplyDeleteஒளித்தென்னைக் காட்டாமல் நான்வென்று என்ன?
குளிர்கின்ற தீக்குள்ளும் காய்பனியி னுள்ளும்
கிடந்தென்றன் மனம்வாடக் கடன்பட்ட தென்ன?
வணக்கம் கவிஞரே!
Deleteஎழுதுபவனுக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய சந்தோஷமே அதை வாசிப்பவர்கள் அதனைச் சரியாக உள்வாங்கிக் கொள்வதுதான்.
சிறுவயதில் மிக அரிதாக ஒளிந்து விளையாடிருக்கிறேன்.
ஒளிந்தாடுகின்ற விளையாட்டில், ஒளிந்திருப்பவனைக் கண்டுபிடிக்காவிட்டால், ஒளிந்திருப்பவனுக்கு வெற்றிதான்.
ஆனால் அதே காதலில், ஒளிதல் கண்டறியாப் படாவிட்டால்..........?
ஒளிகின்ற விளையாட்டில் நீதோற்றுப் போனாய்,
ஒளித்தென்னைக் காட்டாமல் நான்வென்று என்ன?
தங்களின் வருகைக்கும் நுட்பமான பார்வைக்கும் மிக நன்றி.
வணக்கம் பாவலரே !
ReplyDeleteஒன்றாகி நின்றோரின் உணர்வெல்லாம் இன்னும்
.............உயிருக்குள் வலிகொட்டி உறக்கங்கள் தின்னும்
வென்றாகி விட்டோமே விதியென்று எண்ணும்
............ வினாடிகள் வந்தாலும் விழிநீரே உண்ணும்
என்றாகி லும் 'ஓர்நாள் இதயத்தைத் தட்டும்
.............இழந்தவர் நினைவாலே இமைதானாய் முட்டும்
மன்றாடிக் கேட்டாலும் மயக்கங்கள் போக்கும்
............மருந்தில்லை மறந்தாலே மனைமாட்சி பூக்கும் !
மிக அருமையான தங்கள் கவிதைக்கு முன்னால் ஏதோ எனது கிறுக்கல்கள் பாவலரே
தொடர வாழ்த்துக்கள் நானும் தொடர்கிறேன் வாழ்க வளமுடன்
தமிழ்மணம் கூடுதல் ஒருவாக்கு
வணக்கம் பாவலரே!
Deleteஅழகிய சந்தத்தில் தாங்கள் எழுதும் விருத்தத்தின் சுவை அற்புதம்.
ம்ம்.........இது உங்கள் துறை அல்லவா..?!!!
தங்களின் வருகைக்கும் பின்னூட்ட விருத்தத்திற்கும் மிக்க நன்றி.
அழகான கவிதை!
ReplyDeleteத ம 2
வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அற்புத வரிகள் உயிரோட்டம் உள்ள வரிகள் வாழ்த்துக்கள் ஐயா த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.
நாரில்லாப் பூமாலை நானானால் என்ன?
ReplyDeleteநரைகூடி உடல்மெல்ல நசிந்தாலும் என்ன?
நேரில்'உன் முகம்காண முடியாத போதும்
‘நிலவாகக் கதிராக நீவாழ்க!’ என்பேன்!
ஆகா
அன்பென்றால் இதுவன்றோ
அருமை நண்பரே
தம +1
வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஐயா.
ஆகா... அருமை ஐயா...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
Deleteநன்று நண்பரே.....நன்று
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteநல்ல பிறந்த நாள் வாழ்த்து ,படித்தவள் நெஞ்சம் பூரித்து இருக்கும் :)
ReplyDeleteஅது பகவான் நினைத்தாலும் நடவாதது பகவானே! :(
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம்!
ReplyDeleteஎங்கிருந்தா லும்வாழ்க எனும்பாடல் கண்டேன்!
எழிற்றமிழால் சுரக்கின்ற இன்னமுதை உண்டேன்!
செங்கரும்பா ளும்தோட்டம் போல்செழித்த சொற்கள்!
சிந்தனையை மயக்குகின்ற சிர்விருத்த நற்..கள்!
அங்கிருந்தா ளும்தன்மை! தமிழ்தந்த வன்மை!
அருங்கவிஞர் சோசப்பின் எழுத்தெல்லாம் நுண்மை!
இங்கிருந்தா ளும்பாட்ட ரசன்என்றன் வாழ்த்து!
ஈடின்றிப் புகழேந்தி வாழ்கநலம் பூத்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
ஐயா வணக்கம்.
Deleteபூத்தமனப் பூவமர்‘உம் பாட்டெனுமோர் வண்டு
புதுமையென வேரிறங்கிப் புத்தியினை உண்டு
கூத்திடவே ஐம்புலனும் கொள்ளையிடக் கண்டு
கூடுகிறாள் நாடுகிறாள் கொஞ்சுதமிழ்ப் பெண்டு!
யாத்தமர புச்சுவைவா யகத்துளகற் கண்டு!
அருவியென உருகிவிழு அமுதமதைக் கொண்டு..
ஈத்துவக்கும் இன்பத்தில் இலக்கணத்தை மொண்டு..
இங்களிபா ரதிதாச! ஏத்துவன்‘உம் தொண்டு!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
வணக்கம் ஐயா,
ReplyDeleteநிலவாகக் கதிராக வாழ்வென்பது என்றும்
நிலையான வாழ்வா? என்புரிதல்
இது தானய்யா, என்னசெய்வது மண்டையில்
எதுஇருக்கோ அதுதானே வரும்.
நன்றாக நீவாழ்க பல்லாண்டு என்றும்
இது தானே என்றும் நன்று.
/////என்பேரும் உன்பேரும் இணைகின்ற போது
இனிக்கின்ற என்நெஞ்சம் /////
ஒவ்வொரு வரியும் அருமை ஐயா,,,,,
வாழ்க நாளும்,,,,
வணக்கம் பேராசிரியரே!
Delete““நிலவாகக் கதிராக வாழ்வென்பது என்றும்
நிலையான வாழ்வா?“““““
என்ற உங்களின் வெளிப்படையான கேள்விக்கு நன்றி.
இந்த வரிகளின்பின் இரு செய்திகள் இருக்கின்றன.
ஒன்று மரபில் இருக்கும் கல்வெட்டு, சாசனம் சம்பந்தப்பட்டது.
இன்னொன்று, நல வாழ்வு சம்பந்தப்பட்டது. இதனை ஜி.எம்.பி ஐயாவின் பின்னூட்டத்தில் விளக்க அனுமதியுங்கள்.
நீங்கள் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் செதுக்கப்பட்ட நிவந்தங்களைக் கண்ணுற்றால் அதன் இறுதிப்பகுதியில் சில வாசகங்களைக் காணலாம்.
இத் தர்மம் சந்திராதித்தர் உள்ள காலம் வரை இருக்கும் என்பது அதில் ஒன்று.
பூமியை விடச் சந்திரனுக்கும் சூரியனுக்கும் அதிக வாழ்நாள் இருக்கும் என்று கருதினார்கள் போல பண்டைய சமூகத்தோர். மரபில் ஒன்றன் அதிக பட்ச வாழ்நாளைக் குறித்தமையும் சொல்வழக்கு எனக்குத் தெரிந்து இதுவாகத்தான் இருக்க முடியும் என நினைக்கிறேன்.
நிலவாகக் கதிராக நீவாழ்க என்பேன் என்னும் பாடலின் இறுதி அடி அதை நினைந்தும் எழுதப்பட்டதுதான். எனவே இது சாசன வழக்கு.
எனவே இது தகவல் அன்று.
உலக நடப்பில், நம்முடையோர் நம்மை விட்டு இறந்து போவார்கள்; வாழுங்காலம் அறுதியிடப்பட்டது என்று அறிவுக்குத் தெரிந்தபோதும், எப்பொழுதும் அவர்கள் நம்முடனேயே இருக்க வேண்டும், நம்மை விட்டுப் பிரியக் கூடாது என்று எண்ணுவதில்லையா அதுபோன்ற மனப்பாங்குதான் இங்கு ஒலிப்பது.
பல்லாண்டு வாழ வேண்டும் என்பது ஆசை என்றால், நிலவாகக் கதிராக நீ வாழ்க என்பது பேராசை. அதில் தவறில்லையே…?
முன்னது இயல்பு நவிற்சி எனில் பின்னது உயர்வு நவிற்சி.
இதற்குரிய இன்னொரு பொருளுக்கான வாய்ப்பை ஐயாவின் பின்னூட்டத்தில் சொல்கிறேன்.
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மனம்பட்ட கருத்தைத் துணிந்துரைப்பதற்கும் என்றென்றும் என் நன்றிகள்.
வணக்கம் ஐயா,
Deleteமழையின் காரணத்தால் இணையத்தில் இயங்க இயலவில்லை, எனவே பின்னூட்ட பதில் இப்போ தான் பார்க்க நேர்ந்தது.
நான் ஏதேனும் ,, தங்கள் கவிதையில் சொல்ல முடியுமா? சும்மா ஏதோ எனக்கு தோன்றியது என்றேன்.
நான் சொல் பொருள் இதுபற்றி சொல்லவில்லை ஐயா,
நிலவு, கதிரவன் அதன் இயல்பு தான் சொல்ல நினைத்தேன். என்றும் நிலையாக இல்லையே,,, உலகம் உள்ளளும் இருக்கும் என்பது சரி,,,, அதுவரை இருந்து என்ன நல்லபடியாக இல்லாமல் என்று தான்,,,
நீண்ட நாள் வாழ்தல் ,,, நலமுடனும் வளுமுடனும் எனின் மகிழ்ச்சியே,
தங்கள் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.
உள்ள வரை,,,
Deleteபிழைகளுக்கு மன்னிக்க
எங்கோ ஓர்துகள் காலுந்தி மேலெழ, அதனை வாரிற்றுச் சொற்சுழல்.///////
ReplyDeleteபடத்திற்கான வரிகளா? அல்லது வரிகளுக்கான படமா? வியக்கிறேன், தங்கள் ஆளுமைக்குறித்து,,,,
நாளும் நளமுடன் தமிழோடு வாழ வாழ்த்துக்கள்
வணக்கம் பேராசிரியரே!
Deleteமுதலில் தங்கள் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
எப்பொழுதுமே வரிகளுக்கான படம்தான்.
படத்திற்கு வரிகள் எழுதும் அளவு இன்னம் தேறவில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
வணக்கம் ஐயா,
Deleteதங்களால் எந்நிலையும் எழுத முடியும்,,
தன்னடக்கம் வேண்டும் ஆனால் தாங்கள்,,,,,
,,,,.படத்திற்கு வரிகள் எழுதும் அளவு இன்னம் தேறவில்லை.,,,,
இது கொஞ்சம் அதிகம்,,, மேலே உள்ள வரி இதற்கு தான்.
நன்றி.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteநீயாகக் கவிபாடி வாழ்த்திட்ட பாடல்
நீங்காத தமிழ்போல நிலையாகி வாழும்
தீயாகி எரித்திட்டாய் திசையெல்லாம்! காதல்
தீபத்தை ஏற்றிட்டாய்! மதியாகி வாழ்க!
நன்றி.
த.ம.11
வணக்கம் ஐயா.
Deleteபாடலுக்குப் பாடலில் பின்னூட்டம் இடும் தங்களின் புலமையை வாழ்த்துகிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நிலவாகக் கதிராக வாழ்வது சாத்தியமா.?
ReplyDeleteவணக்கம்.
Deleteஇரண்டையும் இருண்மைக்கு மறுதலையான ஒளியின் குறியீடாகவும் கொள்ள வேண்டும் ஐயா.
அன்றியும்,
எப்பொழுதுமே வாழ்த்துவதென்பது விருப்பம் சார்ந்தது.
நடைமுறையில் அதற்கான சாத்தியங்கள் இல்லாவிட்டாலும் கூட...!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
வணக்கம் ஐயன் !
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும் தவிர்க்கமுடியாத காரணங்களால் வலைக்கு வரமுடியவில்லை இருந்தாலும் இடையில் பதிவுகள் பார்ப்பேன் கருத்து இடமுடியலை.
அற்புதமான சந்தத்தில் மனம் ஒன்றிப் போனாலும் நெஞ்சை ரணமாக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு அடிகளும், பொருளாளம் நிறைந்தவை. பிரமிக்க வைக்கின்றன. அத்தனை பாடல்களும். இனிய கவிக்கு நன்றி !
மனமார வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு என நானும் !
அருமையான கவிக்கு நன்றி !
நிலவாகக் கதிராக வாழட்டும் பெண்ணும்
நிழலாக நீநின்றால் தூங்காது மண்ணும்
பலமாக நீவாழ பரந்தாமன் வேண்டும்
பழுதேதும் வாராமல் மனம்காக்க மீண்டும்
குலம்காக்க குறள்போல உருவாக வேண்டும்
குறைவற்ற வாழ்வில்நீ குளிர்ந்தாட வேண்டும்
வலையில்நீ வந்தென்றும் மொழிசிந்த வேண்டும்
வருங்காலம் கைகூப்பி உமைவாழ்த்த வேண்டும் !
ஏக்கங்கள் ஒவ்வொன்றாய் ஈர்த்துன்னை வாட்டிட
தாக்கங்கள் தான்தோன்றும் தூக்கத்தைப் - போக்கும்!
இன்பமளி தாய்த்தமிழே ! என்புதல்வன் துவளாமல் !
என்றும் துணையாய் இரு !
வாருங்கள் அம்மை.
Deleteநலம்தானே..!
பார்த்து எவ்வளவு நாளாயிற்று.
வாய்ப்பிருப்பின் நிச்சயம் வந்திருப்பீர்கள் என்று எண்ணினேன்.
உங்களின் வருகையும் என் மேல் கொண்ட அன்பும் பெரிது.
உங்கள் விருத்தமும் இனிமையாக உள்ளது.
பின்னது வெண்பாவெனில், போக்கும் இன்பமளி என்னுமிடத்தில் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.
மற்றபடி
தங்களின் மீள்வருகை பெருமகிழ்வு.
நன்றி
ஆமால்ல ரொம்பக் கவனக் குறைவு இல்ல. மன்னிக்கணும்...தேறவே மாட்டேன் என்று தோன்றுகிறது தானே....ம்..ம் எனக்கும் புரிகிறது ஐயனே அது. சட்டியில இருக்கிறது தானே அகப்பையில வரும். ஹா ஹா ஹா ....அப்போ இந்த ஜென்மத்தில வராது போல.....
Deleteஇப்படி மாற்றினால் சரி தானே...பாவலரே.
ஏக்கங்கள் ஒவ்வொன்றாய் ஈர்த்துன்னை வாட்டிட
தாக்கங்கள் தான்தோன்றும் தூக்கத்தைப் - போக்கிடும்!
இன்பமளி தாய்த்தமிழே ! என்புதல்வன் துவளாமல் !
என்றும் துணையாய் இரு !
சொல்லின் பயன்பாடும் நேர்த்தியும் உணர்வின் வெளிப்பாட்டை தெளிவுற முன்வைத்துள்ளது. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.
ReplyDeleteபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html
வணக்கம் ஐயா.
Deleteசென்னை நிகழ்வு வேதனைதான்.
என்னால் இயலுவனவற்றைச் செய்திருக்கிறேன். செய்யவும்.
தங்கள் பதிவினைக் கண்டு கருத்திட்டேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஒன்றாகுவோம் என்ற நிலையின்றில்லை என்றாலும் அவள் வாழ்க பல்லாண்டு என்று நெஞ்சார வாழ்த்தும் மனதைப் போற்றுகிறேன். தனக்குக் கிடைக்காவிட்டால் யாருக்குமே கிடைக்கக் கூடாது என்று முகத்தில் அமிலம் வீசிச் சிதைக்கும், கொலை செய்யும் அரக்கர்கள் மிகுந்திருக்கும் இந்நாளில் இப்படியான வாழ்த்தைப் படிக்கும் போது மனம் நிறைவாக உள்ளது. இவ்வுலகில் நல்லவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அருமையான சந்தத்தில் அமைந்த அருமையான பாடலுக்குப் பாராட்டும் வாழ்த்தும்.
ReplyDeleteவணக்கம் சகோ.
Deleteபாடலின் கருத்தை உள்வாங்கி நீங்கள் இடுகின்ற பின்னூட்டமும் நெஞ்சு தொடுகிறது.
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
என்பேரும் உன்பேரும் இணைகின்ற போது
ReplyDeleteஇனிக்கின்ற என்நெஞ்சம் நீ‘இல்லை என்னும்,
துன்பத்தின் தூக்கிற்குள் தலைசிக்க எங்கோ
தூரத்தில் நீவாழத் துடிக்கின்ற தின்னும்!//
ஆரம்பமே இனிமையான வார்த்தைகள் "நெஞ்சம்" வரை...ஆஹா போட வைத்தன.
ஒளிகின்ற விளையாட்டில் நீதோற்றுப் போனாய்!
ஒளித்தென்னைக் காட்டாமல் நான்வென்று.. என்ன?
குளிர்கின்ற தீக்குள்ளும் காய்பனியி னுள்ளும்
கிடந்தென்றன் மனம்வாடக் கடன்பட்ட தென்ன?
துளிர்க்கின்ற தளிரெல்லாம் நீகொய்து போவாய்!
துணையாகும் கனவும்நீ துண்டிப்ப தென்ன?
வளர்கின்றாய் எனைத்தின்று நான்தீரத் தீர
வலியோடு சுகம்தந்து வாழ்விப்ப தென்ன?//
சகோ! என்ன சொல்ல என்று தெரியவில்லை. நாங்கள் பாவலர்கள் அல்ல...ஆனால் ரசித்தோம் மெய்சிலிர்த்தோம்...உண்மையாக சகோ. அருமையானவரிகள்.
நானூற்றுப் பாடல்களில் உள்ள அகத்திணை எங்களுக்குப் புரிதல் கடினம் ஆனால் உங்களின் இந்தப் பாடலின் அகத்திணை அகத்தில் ஏறிவிட்டது! வேறு வார்த்தைகள் இல்லை சொல்லிட...
வணக்கம் சகோ.
Delete“ உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே “ என்று கூறும் தொல்காப்பியம்.
ஒரு பதிவை நீங்கள் உணர்ந்து ரசிக்கும் விதம் கண்டு பலமறை வியந்திருக்கிறேன்.
இப்போதும் கூட.
ஏதோ எழுதிப்போகும் என்னைப் போன்றவர்களுக்கு இதை விடப் பேரூக்கம் தரத்தக்க ஆற்றல் வேறெதற்கும் இல்லை.
உங்களின் வருகையும் கருத்தும் என்றும் நான் மேம்பட உதவும்.
மிக்க நன்றி.
தாமதமாக வருவதற்கு மன்னிக்க. கடந்த 4 நாட்களாக தொலைபேசி, கைப்பேசி, மற்றும் இணைய இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது. அதனால் வலைப்பதிவுகளை படிக்க இயலவில்லை. கவிதையை இரசித்தேன்! பாராட்டுக்கள்!
ReplyDeleteகடைசி வரி ‘நிலவாகக் கதிராக நீவாழ்க!’ என்பேன்!’ என்பதை நிலவாக எப்போதும் நீவாழ்க!’ என்பேன் என்றிருக்கலாமோ? ஏனெனில் பெண்களை நாம் எப்போதும் நிலவோடு ஒப்பிடுகின்ற காரணத்தால் இந்த கருத்தை சொல்கிறேன். மற்றபடி தங்களுடைய கவிதையில் திருத்தம் சொல்வதாக எண்ணவேண்டாம். அந்த அளவுக்கு திறன் படைத்தவன் அல்லன் நான். தவறாக எண்ணாதீர்கள்.
ஐயா வணக்கம்.
Deleteசென்னை வெள்ளப்பெருக்குப் பற்றிய செய்திகளை அறியுந்தோறும் சென்னையில் இருக்கும் உங்களைப் போன்ற எனக்குத் தெரிந்த அனைவரையும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருந்தேன். அதுபோலவே புதுவையிலும்.
இடறுற்றிருக்கும் சமயம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பதற்குக் கூட பயமாய்த்தான் இருக்கிறது.
ஆனால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினேன். என்னால் ஆவன செய்தேன்.
தங்களின் கருத்தினைக் கண்டதே மகிழ்ச்சிதான்.
உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுஞ்கள்.
நிலவாகக் கதிராக என்பதற்குப் பேராசிரியர் மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களுக்கும், திரு. ஜி. எம். பி. ஐயா அவர்களுக்கும் அளித்துள்ள விளக்கத்தைக் காண வேண்டுகிறேன்.
நிலவை பெண்களுக்கு உவமிப்பது, அதன் வடிவம் சார்ந்தது.
இங்கு நிலவையும் கதிரையும் வாழ்த்தியல் மரபு சார்ந்தும், அதன் வினை சார்ந்துமே பயன்படுத்தி இருக்கிறேன்.
நிச்சயம் ஒருபோதும் தவறாக எண்ண மாட்டேன்.
தவறுகளைத் திருத்துபவர்களை எப்போதும் வரவேற்கிறேன்.
நன்றியுடன் திருத்தம் செய்யவும் ஆயத்தமாக இருக்கிறேன்.
தங்களின் வளப்படுத்தும் கருத்துகளுக்கு நன்றி.
அருமை.
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
Delete//ஊரில்என் பேர்‘ஊமை ஆனாலும் என்ன?
ReplyDeleteஉன்னோடு பழகாமல் பிரிந்தாலும் என்ன?
நாரில்லாப் பூமாலை நானானால் என்ன?
நரைகூடி உடல்மெல்ல நசிந்தாலும் என்ன?
நேரில்'உன் முகம்காண முடியாத போதும்
‘நிலவாகக் கதிராக நீவாழ்க!’ என்பேன்!// - ஏதோ உங்கள் சொந்தக் கதையைச் சொல்லும் வரிகள் போல் தொனிக்கின்றன. யாரோ சந்திக்க முடியாத ஒருவருக்கு விடும் தூது போல் தோன்றுகிறது. அவலச் சுவை மிக்க கவிதை.
அப்படித் தோன்றுகிறதா? :)
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.
‘நன்றாக நீவாழ்க பல்லாண்டு’ என்று
ReplyDeleteநினைக்கின்ற மனமென்னில் எப்போதும் உண்டு!
எத்தனை உண்மை! நிலையற்ற இவ்வுலகில் நிம்மதி தேடி அலையும் உள்ளங்கள் எத்தனை.......