Pages

Monday, 7 December 2015

கங்கங்கங்கங்கங்கங்கம்; தமிழ்தாங்க! இதன் பொருள் தெரிகிறதா?


கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. தட்டச்சுப் பழகுபவர்கள் அடித்துப் பழகும் எழுத்துகளைப் போலத்தான் முதற்பார்வைக்குத் தோன்றுகிறது.

முதலில் இதைச் சாதாரணமாகப் பிரித்துப் பார்த்தால்,
கம் கம் கம் கம் கம் கம் கம் என்பது, தமிழ்ப் புணர்ச்சி விதிப்படி, கங்கங்கங்கங்கங்கங்கம் என்று சேர்ந்திருப்பதாகச் சொல்ல முடியும்.

புணர்ச்சிவிதி எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.

இதன் பொருள் என்ன..? அதைச் சொல்லப்பா முதலில் என்கிறீர்களா?

வழக்கம்போல அதற்கு ஒரு பாடலைப் பார்க்க வேண்டும்.

தீயிற் பொறியின்பேர் தேகத்திற் கேற்றபேர்
வாயுங் கழுகின்பேர் வானின்பேர் – நேயமுடன்
அங்கிலமாம் நன்மொழியில் யாரையுமே வாவென்னல்
கங்கங்கங் கங்கங்கங் கம்.

இந்தப் பாடலில் கடைசியில் வரும் அடிதான் இந்தப் பதிவின் தலைப்பாக அமைந்தது.

இன்னும் பொருள் வரவில்லை என்கிறீர்களா?

இதோ,

பாடலின் ஒவ்வொரு வரியாகப் பாருங்கள்....,

தீயின் பொறியின் பேர் – கங்கு.

தேகத்திற்கு ஏற்ற பெயர் – அங்கம்

இதை இரண்டையும் சேர்த்துப் பாருங்கள்

கங்கு + அங்கம் – கங்கங்கம்.

( அப்பாடா! மூன்று கம் வந்துவிட்டது )

கழுகுக்குத் தமிழில் கங்கம் என்று பெயருண்டு.

எனவே,  தீயின் பொறி தேகத்தின் பெயர் கழுகின் பெயர் இம்மூன்றையும் சேர்த்தால்,

கங்கங்கங் கங்கம்

அடுத்து,

கம் என்பதற்கு வான் என்று தமிழில் பொருளிருக்கிறது. அதுதான் வானின் பெயர் என்று குறிப்பிடப்படுகிறது. எனவே வானின் பேர் - கான்.

ஆங்கிலத்தில் வா என அழைக்கப் பயன்படுவது கம் ( Come ).

ஆக.

தீப்பொறி + தேகம் + கழுகு + வானம் + ஆங்கிலத்தில் வா என அழைத்தல் சேர்ந்து,

கங்கு + அங்கம் + கங்கம் + கம் + கம் = கங்கங்கங்கங்கங்கங்கம் ஆயிருக்கிறது.

ஒரு பாடலில் ஏழு கம் வருமாறு புலவர் இதை அமைத்திருக்கிறார்.
ஆங்கிலச் சொற்களை எல்லாம் பயன்படுத்திய ஒரு சுவையான தமிழ்ச்சொல்லாடல்.

இவரே, கம் என்பது வெவ்வேறு இடங்களில் ஏழு முறை அமையுமாறு பாடிய வேறொரு வெண்பாவும் உண்டு.

பாரகமுன் கீண்ட பரமனகம் சொல்கின்றேன்
ஊரகம்சீர்க் காரகம்கா ஓங்குவள – நீரகம்தண்
பாடகமிவ் வூர்திருமால் பாரியொடு பாவளவ
கூடகமென் றேநீ குறி.

( பாரகம் பரமனகம் ஊரகம் காரகம் நீரகம் பாடகம் கூடகம்)

இப்பாடல்களில் எந்தக் கவிப்பொருண்மையும் இல்லை.

ஆனால் இங்கு வெண்பாவில், கட்டி எழுப்பிய புலவரின் சொல்லாட்சி வியக்கவைக்கிறது.

இப்புலவரின் பெயர் தென்திருப்பேரை அநந்தகிருஷ்ணையங்கார் என்பது. சென்ற நூற்றாண்டிலே வாழ்ந்திருக்கிறார். காளமேகத்திற்குச் சமமாகச் சிலேடைப் பாடல்களையும், சொல்விளையாட்டுப் பாடல்களையும் பாடியிருக்கிறார். அபிநவ காளமேகம் என்னும் பட்டம் இவருக்கு உ.வே.சா.வால் வழங்கப்பட்டிருக்கிறது. டி. கே. சி. ,வையாபுரிப்பிள்ளை இன்னும் இவர்களைப் போன்ற தமிழறிஞர்கள் இவரை அறிந்துவைத்திருந்திருக்கிறார்கள். இவர் பாடல் இயற்றும் திறமையைக் கண்டு வியந்திருக்கிறார்கள்.

சொற்சுவை மட்டுமல்லாமல், பொருட்சுவை மிகுந்த பாடல்களும், சித்திரக் கவிகளும், மரபில் பெரிதும் கடினமான, யமகம், திரிபு போன்ற பாடல்களும் இயற்றும் வல்லமை பெற்றவராக இவர் விளங்கி இருக்கிறார்.

சந்திரகலாமாலை, திருவரங்கச் சிலேடைமாலை, திவ்யதேசப்பாமலை, திருப்பேரைக் கலம்பகம், மணவாளமாமுனி ஊசற்றிரு நாமம்,  கண்ணன் கிளிக்கண்ணி முதலியன இவர் இயற்றிய வேறு சில நூல்கள்.

தமிழின் அவலம், இன்று நாம் தமிழறிஞர்கள் என்று போற்றுபவர்களால் போற்றப்பட்ட, அண்மையில் வாழ்ந்து மறைந்த இவரைப் போன்ற பெருமக்களைப் பற்றிய செய்தியோ அவர்தம் நூல்களோ அடுத்த தலைமுறை கூட அறியாமற் போனதுதான்.

சுவை மிகுந்த இவர் பாடல்களை மேலும் சிலவற்றோடு தொடர்வோம்.

பட உதவி - நன்றி -https://encrypted-tbn0.gstatic.com/images

47 comments:

  1. அருமையான விளக்கம் நண்பரே, நம் புலவர்கள் சொற்களில் எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறார்கள். வியப்பளித்த பதிவு!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் முதற்கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. அருமையான பாடலும் விளக்கமும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு. வெங்கட்ஜி.

      Delete
  3. அடடே இப்படி எல்லாமா சிந்தித்து இருக்கிறார்கள் எம் முன்னோர் ஆச்சரியமாக இருக்கிறது பாவலரே அவர்கள் எங்கே நாம் எங்கே ....தங்களைப் போன்றோர்கள் இப்படிப் பல விசயங்களை எமக்குக் காட்டினால் மட்டுமே எம்மால் அவற்றைக் கண்டுகொள்ள முடியும் பகிர்வுக்கு நன்றி !

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பாவலரே!

      தங்களைப் போன்றோரால் இதனினும் சிறந்த இனிய பாடல்களை மரபில் படைக்க இயலும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. Sir, your research work is fantastic.our forefathers were great genius.but deciphering their codes were not the the same as people interpreted according to their own intelligence,experience etc.
    welldone.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      இதில் ஆய்வொன்றும் இல்லை ஐயா.

      என்றோ படித்ததைப் பகிரக் கிடைத்த வாய்ப்பு.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    சொல்லில் விளையாடச் சொல்லிக் கொடுத்த புலவர் தென்திருப்பேரை அநந்தகிருஷ்ண அய்யங்காரை அறியச் செய்தது தமிழுக்கு அழகு!

    நன்றி.
    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. வணக்கம்
    ஐயா
    பாடலும் விளக்கமும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்

      Delete
  7. இவரைப் போன்ற பெருமக்களைப் பற்றிய செய்தியோ அவர்தம் நூல்களோ அடுத்த தலைமுறை கூட அறியாமற் போனதுதான்.
    உண்மைதர்ன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  8. இன்தமிழின் சுவையை, அழகை எல்லாம் வியக்கத்தக்க வகையில் எடுத்து ஒவொன்றாக அறியத் தருவது கண்டு பெரு மகிழ்ச்சியே. இவை யாவும் தமிழுக்கு செய்யும் அரும் பெரும் தொண்டு.அத்தனை பதிவுகளுமே வெகு சிறப்பானவை. நாம் என்றும் இதற்கு நன்றி யுடையவர்களாய் இருப்போம்.
    மேலும் அறிய ஆவல்.வாழ்க தமிழ்! தொடர வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மை

      தங்களின் மீள்வருகையும் தொடர்பின்னூட்டங்களும் காண மகிழ்ச்சியே.
      தங்களைப் போன்றோரின் ஊக்கம் மென்மேலும் என்போன்றோரை மிகக் கவனமுடன் எழுதத் தூண்டும்.

      அதற்காய் என்றென்றும் நன்றி உண்டு.

      Delete
  9. இதுவரை என்னைப்போன்ற சிலர் அறியாத இந்த சுவை மிகுந்த பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி! தென்திருப்பேரை அநந்தகிருஷ்ணையங்கார் அவர்களின் மற்ற பாடல்களையும் அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்.

    இதை படிக்கும்போது

    “மண்ணுண்ணி மாப்பிள்ளையே
    காவிறையே, கூவிறையே
    உங்களப்பன் கோவில்பெருச் சாளி,
    கன்னா பின்னா மன்னா
    தென்னா சோழங்கப் பெருமானே.!”

    என்ற தனிப் பாடல் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. இது போன்ற தனிப்பாடல்களையும் எங்களுக்காக விளக்க வேண்டுகிறேன்.

    பி.கு. சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நாங்கள் பட்ட துன்பம் மற்றவர்களைப் பார்க்கையில் மிகக் குறைவே. நான் நலமுடன் உள்ளேன். தங்களின் அன்பான அக்கறைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் உங்கள் வருகைக்கும் என்மேல் கொண்ட அன்பிற்கும் நன்றி.

      பொதுவாக இப்போதெல்லாம் கூடுமானவரை இணையத்தில் இல்லாத பாடல்களை, இணையத்திருந்தாலும் இன்னும் பொருள்நயம் சொல்லத்தகுந்த பாடல்களை மட்டுமே பகிர விரும்புகிறேன்.

      நீங்கள் சொன்ன பாடல் சொற்சுவை பொருந்தியதுதான்.

      தாங்கள் நலமுடன் இருப்பதறிய மகிழ்ச்சி.

      தொடருங்கள்.

      நன்றி

      Delete
  10. மிகுந்த சுவாரஸ்யம்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.

      Delete
  11. வார்த்தையைச் சொல்லிப் பார்த்தேன் ,கம் ஒட்டியது போல் உதடுகள் பிரிய மறுக்கிறது :)

    ReplyDelete
    Replies
    1. அப்போ இது எட்டாவது கம்:)

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி பகவானே!

      Delete
  12. முதன் முறையாக வெண்பாவில் ஓர் ஆங்கிலச் சொல்! எப்படித்தான் இப்படியெல்லாம் சிந்தித்தார்களோ! இப்படி ஒரு சுவையான பாடலைக் காண வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  13. வணக்கம்!

    ஆங்கிலச் சொல்லொன்[று அமர்ந்தழகாய் வந்தாலும்
    ஓங்கிய நற்சுவை ஊட்டியதே! - தேங்குபுகழ்த்
    தென்திருப் பேரையார் தீட்டிய பாட்டெல்லாம்
    இன்னமுது ஏந்தும் இயம்பு!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      “இயம்பும் மொழியெல்லாம் ஏத்தும் தமிழால்
      வியந்தெம் விழிமூடா வித்தை - கயம்பூத்த
      நீர்ப்பூக்க ளாக நிறைகின்ற வெண்பாவின்
      பேரார்க்கும் உங்கள் புகழ்

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. அருமையான விளக்கம். சற்றுப் பொறுமையாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. நன்றி. இதைப் பார்த்தபோது சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் ஒரு நண்பர் பயன்படுத்திய You can can the can என்ற சொற்றொடர் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் இதனோடு தொடர்புடைய சொற்றொடர் ஒன்றை நினைவு கூர்ந்து பகிர்ந்தமைக்கும் நன்றிகள்

      Delete
  15. மிக்க நன்றி.... தென் திரு ப் பேரை யா ரி ன் நூல்கள் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      யார் இதையெல்லாம் மறுபதிப்புச் செய்து கொண்டிருக்கப்போகிறார்கள்.

      பழைய பதிப்புத்தான் இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  16. தமிழ் தெரியாதவனைபின்னி பெடல் எடுக்கிற மாதிரி தெரியுமு நண்பரே.....

    ReplyDelete
  17. தமிழ் தெரியாதவனை பின்னி பெடல் எடுக்கிற மாதிரி தெரியுது நண்பரே.....

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னமோ தெரிந்தவர்களை அப்படிச் செய்வதாகப் படுகிறது வலிப்போக்ரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  18. வணக்கம் ஐயா,
    எனக்கும் இது புது தகவல், இன்று தான் அறிந்துக்கொண்டேன். ஆங்கில வார்த்தை,,,

    நல்ல தேடல், தொடருங்கள் ஐயா, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      உங்களுக்குத் தெரியாத தகவல் ஒன்றை பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியே!

      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  19. அற்புதமான பாடல். விளக்கம். கம் என்ற ஆங்கிலச் சொல் அர்த்தத்துடன் கலந்து வருகின்றதே என்று யோசித்துக் கொண்டே வாசிக்கும் போதே தாங்கள் அதைச் சொல்லியிருப்பதை வாசித்தோம். எப்பேர்ப்பட்டச் சுவையான சுவாரஸ்யமான பாடல்!! அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே!

    கீதா: மேற் சொன்ன கருத்துடன் எனதும். நான் புகுந்த வீட்டாரின், கணவரின் வற்புறுத்தலின் பேரில் சில சமஸ்க்ருத வைணவ ஸ்லோகங்களைக் கற்க நேர்ந்த போது எனக்கோ சம்ஸ்க்ருதம் சுட்டுப்போட்டாலும் ஏற மறுத்தது. அதில் ஏனோ நாட்டமில்லை. பிறந்த வீட்டிலோ சமஸ்க்ருதம் கற்கச் சொன்னதில்லை...ஒரு வேளை சிறுவயதிலிருந்தே தமிழிலேயே வளர்ந்தவள் என்பதால் இருக்கலாம். தமிழில் பாடங்களில் நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தின் சில பாசுரங்களைக் கற்க நேர்ந்ததால், அந்தத் தமிழில் வியப்புற்று ரசித்துப் படித்ததுண்டு. அந்தக் காரணத்தினால் நான் பாசுரங்கள் வேண்டுமென்றால் கற்றுக் கொள்கின்றேன் என்று சொல்ல வீட்டில் தமிழை அவ்வளவாக விரும்பாதவர்கள் பலரும் கூட நான் ஏதோ கற்க முனைகின்றேனே என்று சொல்ல..நானோ தமிழில் இன்புறலாமே என்று சென்றேன். பிரபந்தத்தில் முதலாயிரம் கற்றுக் கொண்டேன். (என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர அதைப் பற்றி எழுதும் அளவிற்குட் தமிழ்ப்புலமை இல்லை. ஏனென்றால், எனது குருவும் தமிழை விட வைணவ சித்தாந்தத்தையும், வைணவ இறை தத்துவங்களையும் அதிகம் போதித்ததால், என்னால் அவ்வளவாக இன்புற்றுக் கற்க முடியவில்லை. நான் விரும்பியது தமிழ். எனக்கு என் சிற்றறிவிற்கு எட்டியவரை கிடைத்தத் தமிழ்ச் சுவையை அனுபவித்தேன். அப்போது, எனது குரு (இப்போது அவர் இல்லை) தென்திருப்பேரை அநந்தகிருஷ்ணையங்கார் அவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கின்றார் அதன் பிறகு இப்போதுதான் உங்கள் மூலமாக தமிழை மிகவும் மகிழ்வுடன் அதன் இனிமையை அனுபவிக்கின்றேன். மீண்டும் இவ்வறிஞரைக் குறித்துச் சொல்லி அவரை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.
      பொதுவாகவே தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் யாப்பின் பெரும்பாலான சாத்தியங்களை முயன்று பார்த்திருக்கின்றன. பிரபந்தத்திலும் திருமுறைகளிலும் சில பாடல்களை நானும் பாடம் செய்து வைத்திருக்கிறேன். ஆனால் அது வேறு நோக்கம் சார்ந்தது.
      அநந்த கிருஷ்ண ஐயங்காரின் பாடல்கள் மிகுந்த சுவை உடையன.
      காள மேகத்தின் பாடல்களைப் பார்த்து அவரைப் போலவே ஆக முற்பட்டிருக்கிறார் என்று அவர் பாடல்களைப் பார்க்கத் தோன்றினாலும், காள மேகத்தையே விஞ்சிவிட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
      என்ன..பாரதி , பாரதிதாசன் என மரபில் நவீனம் கட்டமைக்கப்பட்ட போது, பழம் மரபினைப் பின்பற்றிக் கொண்டிருந்திருந்த இவர் போன்றோர் புதுமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டனர்.

      ஆனாலும், இவர் போன்றவர்களை அடையாளம் காண்பதும் படைப்புகளை வாசிப்பதும் மொழி நுட்பம் பெற விரும்புகின்றவர்களுக்குத் தேவை என்பேன்.

      தாங்கள் இவரை அறிந்திருக்கிறீர்கள் என்னும் போதே தங்களின் வாசிப்புத் தெரிகிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் இடுகையை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  20. தமிழின் இனிமை அளவிடற்கறியது....ஓரே எழுத்தில் பாடப்பட்டுள்ள தனிப்பாடல்களைப்படித்து வியப்பும் மலைப்பும் ஒருசேர எழுந்தன சகோ..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி கவிஞரே!

      Delete
  21. அருமை!பதிவு தமிழுக்குப் பெருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      Delete
  22. சுவையான பாடலை அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி. அண்மையில் வாழ்ந்து மறைந்த இப்புலவரைப் பற்றி இது வரை கேள்விப்பட்டது கூட இல்லை. இவருடைய சுவையான பாடல்களைத் தொடர்ந்து கொடுங்கள். மிகவும் நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. மற்ற பதிவுகளின் இடையே நான் ரசித்த இவரது ஒரு சில பாடல்களைப் பகிர்கிறேன் சகோ.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  23. வணக்கம்!

    ஈற்றில் விழியின்பேர்! ஏற்றசளி செய்யும்பேர்!
    மாற்றிப் பலதுண்டை வார்க்கும்பேர் - சாற்றிடுமே
    இக்கூட் டெலும்பின்பேர்! ஏந்துசிரிப் புற்றபேர்!
    கக்கக்கக் கக்கக்கக் கக்கு!

    கக்க்க்[கு]அக்[கு] அக்கக் கக்[கு] அக்கு!

    ஈற்றில் உள்ள அக்கு - விழியை அக்கு என்றுரைப்பர்
    கக்கு - கக்குதல், இருமுதல்
    அக்கக் - அக்கக்காய்ப் பிரித்தல்
    அக்கு - எலும்பு
    கக்கக்கு - கக்கக்கெனும் சிரித்தற்குறிப்பு

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      இதென்ன சோதனை?!

      “ அக்குமிதோ டேயினமாம்! ஆனைக்குக் கொம்பின்பேர்!
      மிக்கோர் புகழ்க்களித்தல் மேலுயர்தல்!- தக்கதென
      வந்தவிறு சந்தமொழி இந்தமன துந்தியெழு
      தந்தந்தந் தந்தந்தந் தம்!

      அக்கு என்பது இதோடு இனமாம் – தம்
      தம் என்பதும் அக்கு என்பதும் சாரியை எனவே இரண்டும் ஓரினமாயிற்று.
      ஆனைக்குக் கொம்பின் பேர் – தந்தம்.
      மிக்கோர் புகழ்க்கு அளித்தல் – தம் தம் ( தம்முடைய மூச்சு)
      மேலுயர்தல் – மலைமுகடு – தந்தம்.
      அன்றி,
      மிக்கோர் புகழ்க்களித்தல் மேலுயர்தல் என்பதை ஒரு சீராக்கிக் கொண்டு,
      வந்தவிறு சந்தமொழி இந்தமன துந்தி எழுது அந்தம்,- அந்தாதி எனக் கொண்டு,
      அந்தம் ( அந்தாதி )
      தம் ( சாரியை)
      தந்தம் ( யானைக் கோடு )
      தம் தம் ( தம் மூச்சு )
      எனப் பிரித்தல் மற்றொன்று.
      தம் + தம்
      என்பது தத்தம் என வருமேனும்,
      எம் + தம் – எந்தம் எனுமாறு போலும்,
      உம் + தம் – உந்தம் எனுமாறு போலும்,
      ஈண்டு தந்தம் எனப் புணர்க்கப்பட்ட செய்யுளமைதியாகக் கொள்க.

      தங்களின் வருகைக்கும் இனிய வெண்பாவிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  24. தமிழில் புகுந்து விளையாடியிருக்கும் ஐயங்கார் போன்றோரை யாமறியத் தந்து தமிழினிமையில் திளைத்து மகிழச் செய்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நிலாமகள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்கின்றமைக்கும் மிக்க நன்றி.

      Delete