Pages

Wednesday, 18 November 2015

தகனம்.




கொதிக்கும் நினைவென்னை வடிக்கின்றது! – வெந்து
     கிடக்கும் கனவின்னும் துடிக்கின்றது!
விதிக்கும் விளையாட்டுப் பிடிக்கின்றது! – நாட்கள்
     விடிந்தும் விழிமூடிக் கிடக்கின்றது!
உதிக்கும் கதிர்`கண்டு சிரிக்கின்றது! – பின்னர்
     உருகிப் பலதுண்டாய் வெடிக்கின்றது!
பதிக்கும் கவிக்குள்தீ யார்கண்டது? – உன்
     பார்வை அறியாக்கண்- நீருண்டது!


பகலில் விளக்காக எரிகின்றது! – உன்
     பார்வைக் குறைவன்று! புரிகின்றது!
அகலம் அறிவிற்குத் தெரிகின்றது! – எண்ண
     அலைகள் தினம்மோதக் கரைகின்றது!
துகளின் சிறிதாயும் இருக்கின்றது – பின்னர்த்
     துரும்பாய் எனைமாற்றிப் பெருக்கின்றது!
தகனம் இனிதாக நடக்கின்றது! – ஐயோ
     தமிழ்‘ ஏன் உடன்வந்து கிடக்கின்றது?

பட உதவி - நன்றி http://s1.wallippo.com/

54 comments:

  1. அருமையான கவிதை நண்பரே!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டக் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  2. அன்புள்ள அய்யா,

    நேற்றைய தினம் அன்பு நண்பனின் தந்தை அவர்களின் மரணம். அன்னாரின் உடல் இன்று தகனம் அல்ல அடக்கம் செய்யப்பட்டது.

    ‘அன்பு என்னும் கோயில்தன்னிலே
    பாசம் என்னும் தீபம் தன்னிலே
    உள்ளம் ஒன்று மயங்குகின்றது
    தன்னை எண்ணி கலங்குகின்றது
    மெழுகுவர்த்தி எரிகின்றது எதிர்காலம் தெரிகின்றது
    புதிய பாதை வருகின்றது புகழாரம் தருகின்றது
    புதுவேகம் எழுகின்றது பூஞ்சோலை அசைகின்றது’
    -கண்ணதாசனின் பாடல் நினைவுப்படுத்தியது.

    ‘தகனம்’ கவிதை பல அர்த்தங்கங்கள் பொதிந்ததாக அருமையாக இருக்கிறது.

    நன்றி.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் இனிய பாடல் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  3. வணக்கம்
    ஐயா

    அற்புதமான வரிகள் கருத்து நிறைந்தவை... பகிர்வுக்கு நன்றி த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. உங்கள் கவிதை மொழியை, தமிழை ரசிக்கின்றோம் சகோ...விளையாடுகின்றீர்கள் தமிழோடு!

    அந்த இறுதி இரு வரிகள் எங்கள் சிற்றறிவைக் குழப்புகின்றது சகோ. அதன் அர்த்தம் மட்டும் சொல்ல முடியுமா சகோ?! தகனத்தில் தமிழும் அழிந்து விடும் என்ற அர்த்தமா இல்லை....வேறு பொருள் உண்டோ...

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      மிகக் குழப்பிவிட்டேனோ...??

      முதலில் இது காதலைப் பற்றியது.

      (கால உலை) கொதித்து வடிக்கக் கிடந்து துடிக்கும் கனவினூடாக உள்ளே நுழைய வேண்டும்.

      தகனம் என்பது அந்த நினைவுகளை எரிக்க அழிக்க தன்னை விட்டு விரட்டச் செய்யும் முயற்சி.

      அவ்வாறான முயற்சியின்போது வெளிப்படும் இதுபோன்ற எழுத்துக்களை நோக்கிக் கேட்கப் பட்டதுதான் “ ஐயோ... தமிழேன் உடன்வந்து கிடக்கின்றது?“ என்னும் கேள்வி.

      வருகைக்கும் தங்களின் ஐயத்தை அறியத் தந்தமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  5. வணக்கம் பாவலரே !

    கவிதை அழகாக இருக்கின்றது - மனக்
    ..........காயம் வெளிக்காட்டிச் செல்கின்றது
    குவியும் கருத்தெல்லாம் இறப்பென்றது - எனைக்
    ..........குடையும் குழப்பங்கள் தொடர்கின்றது
    செவியில் வினாவாக ஒலிக்கின்றது - உளம்
    ........,,சிகரம் இடிந்தார்ப்போல் சிலிர்க்கின்றது .
    புவியில் மர்மங்கள் இருக்கின்றது - அதைப்
    ....... ,,புரிந்தேன் விழி'ஈரம் சுரக்கின்றது !

    யாரோ ஓர் தமிழறிஞனின் தகனம் பற்றிச் சொல்கிறது கவிதை என்று நினைக்கிறேன்
    கடைசிவரி அதைத்தான் எனக்கு உணர்த்துகிறது ! ஆழ்ந்த கருத்துள்ள தங்கள் கவிதைக்கு
    புரிந்தும் புரியாமல் நான் கிறுக்கியது பாவலரே இது எசப்பாட்டு இல்லை !

    வாழ்க வளமுடன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாவலரே!

      பாடல் உங்கள் துறைதான்.

      துளசிதரன் சகோவின் பின்னூட்டத்தில் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

      கவிதை அழகாக இருக்கின்றது என்பது உங்கள் பாடலைக் கண்டு நான் இடவேண்டிய பின்னூட்டம்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  6. அருமையான வரிகள் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  7. இனிதான தகனம் கூட சாத்தியமா?

    கவிதை சொல்ல வரும் பொருள் எதைப் பற்றி என்று சரியாகப் புரியா விட்டாலும் வார்த்தைகளின் அழகை (தம) வாக்கிட்டு வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. “““இனிதான தகனம் கூட சாத்தியமா““““

      அது தகனம் செய்யப்படுவது எது என்பதைப் பொருத்ததல்லவா ஸ்ரீ?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  8. கவிதை உணர்வினை ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ரசனைக்கு மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  9. ஒரு தமிழ் கவிஞன்/தமிழ் அறிஞரின் தகனம் தங்களைப் பாதித்ததை கவிதையாய் வடித்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். கவிதைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாடலின் பொருள் குறித்துத் துளசிதரன் சகோவின் பின்னூட்டத்தில் குறித்திருக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      Delete
  10. பட உதவி தெரிகிறது ,படம் தகனமாகி விட்டதா :)

    ReplyDelete
    Replies
    1. ஆம் பகவானே!
      நிழற் படம்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  11. தகனம் இனிதாக நடக்கின்றது! – ஐயோ
    தமிழ்‘ ஏன் உடன்வந்து கிடக்கின்றது?//
    நம் தமிழாய் இருப்பதால்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கவிஞரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  12. வணக்கம் ஐயா,
    அருமையாக உள்ளது தகனம் , ஒரு வேளை அது மட்டும் தான் உறவோ???
    நான் புரிந்துக்கொண்டது இப்படி தான்,,,,,,,
    நன்றி ஐயா,,,

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் புரிந்து கொண்டது ஓரளவிற்குச் சரிதான் பேராசிரியரே!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. பேராசிரியராய் என் புரிதல் தவறு தான் ஐயா,,,

      Delete
  13. தெள்ளிய நடையில் துள்ளி வந்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. தங்கள் கவிதைகளே நெருப்பாலானவைதாம். இதில் தகனத்துக்குக் கேட்க வேண்டுமா! பதற வைக்கும் கவிதை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. ஐயா பொறுத்தருளவும். சிறப்பான தங்கள் பாடலின் இறுதி இரண்டடிகளின் பொருள் மட்டும் இப்பாமரனுக்கு கோர்வையாக விளங்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, தங்கள் விளக்கம் கண்ணுற்றேன். நன்றி.

      Delete
    2. வணக்கம்.

      சுருங்கச் சொன்னேன் என்றாலும் சற்று கூடுதலாய்.......
      கவியில் மூண்ட தீ ..........உன் பார்வை படாததால் பிறந்த என் கண் நீர் பட்டு அணைந்தது.

      பகலில் எரிகின்ற விளக்கு எந்த பயனும் அற்று யாராலும் அறியப்படாதது போல காதலும் அறியப்பட வில்லை.

      துகளின் சிறிதாய் இருக்கும் எண்ணமே பின்னர் துரும்பாய் மாற்றும் அளவிற்குப் பெருக்கின்றது.

      என்னால் உருக்கொண்ட எண்ணங்களை தகனம் செய்யும் மனம் நோகும் வேளை (இப்படிப்பட்ட எழுத்தாய் மாறுவதால்) தமிழேன் உடன் வந்து கிடக்கின்றது என்பதாய் அமைந்தது இதன் இறுதிப்பகுதி ஐயா.

      இதிலென்ன பாமரன் என்றெல்லாம்..............?

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்.

      Delete
  16. தகனம் என்பதும் அடக்கம் என்பது வேறு வேறா நண்பரே...மணவையாரின் கருத்துரையிலிருந்து எழுந்தது சந்தேகம் நண்பரே.....

    ReplyDelete
  17. தகனம் என்பதும் அடக்கம் என்பது வேறு வேறா நண்பரே...மணவையாரின் கருத்துரையிலிருந்து எழுந்தது சந்தேகம் நண்பரே.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வலிப்போக்கரே!

      மிக மிகத் தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.

      ஆம் இரண்டும் வேறுபட்டதுதான்.

      தகனம் என்பது எரியூட்டப்படுவது.

      அடக்கம் என்பது புதைக்கப்படுவது.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. தமிழ்மணம் ஓட்டுப் பெட்டி தங்களுக்கு செயல்படுகிறது.. நண்பரே..

    தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... .? நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  19. வணக்கம்!

    படைத்த கவிதை ஒளிர்கின்றது - மனம்
       படித்துப் படித்துக் குளிர்கின்றது!
    அடைத்த உணர்வை அறிகின்றது - உயிர்
       அளித்த அடியுள் அமிழ்கின்றது!
    புடைத்த மறத்தோள் உயர்கின்றது - கண்
       புதுமை அழகால் சுழல்கின்றது!
    உடைத்த வினையை உணர்கின்றது - தமிழ்
       உடன்வந் துறவாய்ப் புணர்கின்றது!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகையும் தொடர்ச்சியும் பாடற்பின்னூட்டமும் காண மகிழ்வு.

      மிக்க நன்றி.

      Delete
  20. தகனம் இனிதாக நடக்கின்றது! – ஐயோ
    தமிழ்‘ ஏன் உடன்வந்து கிடக்கின்றது?
    மிக இனிய வரிகள்.பொறாமையாக இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  21. எனக்கு மிகப்பிடித்த தேனார்கமழ்தொங்கல் மீனவன் கேட்பத் ...
    என்னும் காரிகைப் பாடலின் வரியை முகப்பில் வைத்தது கண்டு பேரின்பமடைந்தேன்....உங்கள் வலைப் பூவுக்குத் தொடர்ந்து வருவேன்..வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  22. தகனம் என்ற தலைப்பப் பார்த்தவுடன் மரணத்துக்குப் பின் அடக்கம் என்றே நானும் படித்துக் குழம்பினேன். பின்னூட்டத்தில் நீங்கள் கொடுத்த விளக்கம் கண்டு தெளிந்தேன். பதிக்கும் கவிக்குள்தீ யார் கண்டது? உன் பார்வை அறியாக்கண் நீரூண்டது என்ற வரிகளை ரசித்தேன். நினைவுகளை விரட்டும்போது தமிழும் உடன் வந்து கிடப்பதைக் கண்டு பதறும் வரிகளும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசனைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  23. சந்தநடை மனதை சுண்டியிழுக்கிறது. உடனே இதே போன்று எழுத விழைந்தேன். பின்னர் பூனை சூடு போட்டுக் கொண்டாற்போல் ஆகிவிடும் என்பதாலும், இதுவே பின்னர் தொடர்கதையாகி விடும் என்பதாலும் கைவிட்டேன்.

    "தகனம் செய்யப்படுவது எது என்பதைப் பொருத்ததல்லவா ""
    சரியாய்ச் சொன்னீர்கள். எவ்வளவோ இருக்கின்றன்வே இனிய தகனங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  24. சந்தநடை மனதை சுண்டியிழுக்கிறது. உடனே இதே போன்று எழுத விழைந்தேன். பின்னர் பூனை சூடு போட்டுக் கொண்டாற்போல் ஆகிவிடும் என்பதாலும், இதுவே பின்னர் தொடர்கதையாகி விடும் என்பதாலும் கைவிட்டேன்.

    "தகனம் செய்யப்படுவது எது என்பதைப் பொருத்ததல்லவா ""
    சரியாய்ச் சொன்னீர்கள். எவ்வளவோ இருக்கின்றன்வே இனிய தகனங்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அண்ணா!

      சில தொடர்பதிவுகளாக விதவிதமான வண்ணங்களை முயன்றுவருகிறேன்.
      எதுவும் எனதானதன்று... ! எல்லாம் தமிழுடையதுதானே?

      உங்களின் எழுத்தில் இந்தச் சந்தத்தைக் கற்பனை செய்து பார்க்கவே இனிமையாக உள்ளது.

      நிச்சயம் எழுதுங்கள்.

      பின்னர் புலி பூனை எல்லாம் யார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை அண்ணா.

      இணையம் வர இயலாச் சூழலிலும் தாங்கள் என் தளத்திற்கு வருவதும் கருத்திடுவதும் நானுற்ற பேறன்றி வேறென்ன.?

      மிக்க நன்றி அண்ணா.

      Delete
  25. உங்கள் வரிகளில் கரைந்துவிட்டேன் , பகிர்வுக்கு நன்றி.
    Joshva

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஜோஷ்வா.

      தொடர்ந்து இணைந்திருங்கள்.

      நன்றி.

      Delete
  26. துயரத்தின் விளிம்பில் நின்று வடித்த கவிதை நெஞ்சத்தை உருக்குகிறது. தாமதத்திற்கு வருந்துகிறேன். ஆனால் சந்தம் நெஞ்சத்தை அள்ளுகிறது. எத்தனை முறை wow சொன்னாலும் அடங்காது.
    இனிய கவிதைக்கு நன்றி ! நலம் பல பெற என் வாழ்த்துக்கள் ...!

    தகனம் இனிதாக நடக்கின்றது - என்
    __தாய்மை அது கேட்டுத் துடிக்கின்றது
    தகிக்கும் நிலைகண்டு கனக்கின்றது -மனம்
    __தடுக்கும் வழிதேடித் தவிக்கின்றது
    பகரும் துயர்கன்னம் நனைக்கின்றது - படும்
    __பாடு பலகாணப் பதைக்கின்றது
    சுகமும் பெறவேண்டிக் கேட்கின்றது. - துயர்
    __சூளும் நிலைமாறத் தொழுகின்றது


    தவிக்கும் உன்துயரைத் தடுக்கின்றது -தமிழ்
    __தனியே நின்றுள்ளம் தணிக்கின்றது
    புவியில் உயிர்வாழ விளைகின்றது - மனம்
    __புகழும் மொழியுண்டு தளைக்கின்றது
    செவியில் தேனாகப் பாய்கின்றது - மிகும்
    __சீரின் அழகுண்டு திளைக்கின்றது
    குவியும் சொல்வன்மை கமழ்கின்றது - வளம்
    __கொடுக்கும் தமிழன்னை மகிழ்கின்றது !

    ReplyDelete
    Replies
    1. கவனிக்கத் தவறிவிட்டேன் மனிக்கவும் சூழும் என்று வரணும். தட்டச்சுப் பிழைக்கு வருந்துகிறேன்.

      Delete