Pages

Saturday, 14 November 2015

நான்கே அடிகளில் இராமாயணம்

பெருங்கதைகளை மிகச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்லிவிடும் தமிழ்ப்பாடல்கள் உண்டு. சிலப்பதிகாரக்கதையை ஒரு வெண்பாவில் சொல்லிப்போகும் பாடலை இதற்கு முன் பதிவொன்றில் கண்டிருக்கிறோம்.

இதைப்போன்றே இராமாயணக்கதையை நான்கு அடிகளில் ‘ ஏகவிருத்த ராமாயணம் ’ என்ற தலைப்பில் சுருக்கித்தந்திருந்த பாடல் ஒன்றைத் ‘தமிழ்ப்புலவர் சரித்திரம்’ என்ற நூலில் காண நேர்ந்தது. இந்நூல் யாழப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவரால் இயற்றப்பட்டது. கம்பரைப் பற்றிச் சொல்லுமிடத்து இந்தப் பாடலை எடுத்தாளும் இவர் “ ஒரு சுலோகத்தில் வடநூலார் கூறிய இராமாயணத்தையும் , ‘ஏக விருத்த ராமாயணம் ’ என மொழிபெயர்த்திருக்கிறோம்“ எனக் கூறுவதில் இருந்து, இவ்விருத்தம் இவரது மொழியாக்கமாக இருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ( பக் – 61 )

பாடல் இதுதான்,

தாதையார் சொலராமன் காடு போதல்
    சார்ந்துளபொன் மானெனுமா ரீசன் சாதல்
சீதையார் பிரிவெருவை மரணம் பானு
    சேயொடுநட் புக்கோடல் வாலி வீடல்
ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்
    உயரிலங்கை நகரெரியால் வேகக் காண்டல்
பாதகராம் அரக்கரெலாம் இறக்கத் தாக்கல்
    பாக்கிய ராமாயணச்சீர் காதை யீதே!

பாடலில் பொருள் எளிதுதான் என்பதால் இந்நூலுள் பாடல்மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடலின் பொருள் இருந்தால் நன்றாக இருக்கும் என்பவர்களுக்காக என் புரிதலின் அடிப்படையில்  இப்பாடலின் பொருளைக் கொடுக்கிறேன்.

தந்தை (தாதை) சொல்ல ராமன் காட்டிற்குப் போதல் – பொன்மானாக வரும் மாரீசன் கொல்லப்படுதல் – சீதை ( இராவணனால் ) இராமனைப் பிரிதல் – சீதையைக் கவர்ந்து செல்லும் இராவணனைத் தடுக்கும் முயற்சியில் தாக்கப்பட்ட கழுகான (எருவை) ஜடாயு, நடந்ததை இராமனிடம் சொல்லி மரணம் அடைதல் – சீதையை மீட்கும் முயற்சியில் இராமன், சூரியனின் ( பானுவின் ) மகனான சுக்ரீவனிடம் நட்பு கொள்ளுதல் – வாலியை அழித்தல் – அனுமன் கடலைத் தாண்டுதல் – இலங்கை நகரைத் தன் வாலின் நெருப்பால் அழித்தல் – சீதை இருக்குமிடத்தை அனுமன் கூறப் போரில் அரக்கர்களை  இராமன் அழித்தல்.

மிகச்சுருக்கமாக இராமயணம் இப்படிக் கூறப்பட்டுவிட்டது.

இதாவது பராவாயில்லை. பள்ளியில் படிக்கும் பொழுது, எங்கள் தமிழ் ஆசிரியர், இராமாயணமும் மகாபாரதமும் “வெறும் மயிரால் பிறந்த கதைகள்” என்றார்.

திடுக்கிடலுடன் பார்த்த எங்களிடம்,

தசரதன் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தபொழுது தலைமுடி நரைத்திருப்பதைக் கண்டு தனக்கு வயதாகிவிட்டதை உணர்ந்து, இராமனுக்குப் பட்டாபிடேகம் செய்ய நினைந்தானாம். அதற்கான முயற்சியில் அவன் ஈடுபடத் தொடங்கியதுதான் கைகேயியின் பொறாமைக்கும் இராமன் காட்டிற்குப் போகவும் காரணமாயிற்றாம்.

மகாபாரதத்தில் பாஞ்சாலி, ‘துரியோதனன், துச்சாதனன் இவர்களது இரத்தத்தைத் தன் கூந்தலில் பூசியே அதை முடிப்பேன்’ என்று அதை அவிழ்த்துச் சபதம் செய்ததால்தான் மகாபாரதப் போர் நிகழ்ந்ததாம்

என்று கூறினார்.

இந்த நான்கு அடிகளைப் படித்தபோது,   அன்று அவர் கூறிய அந்த ஒற்றைவரியும் நினைவிற்கு வந்தது.


தொடர்வோம்.

பட உதவி - நன்றி. http://2.bp.blogspot.com/

49 comments:

  1. வணக்கம்
    ஐயா

    அற்புதமான பாடல் மூலம் விளக்கிய விதம் சிறப்பு ஐயா.. படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  2. ஆச்சர்யமாக உள்ளது....4 வரிக்கதையை நான்கு வருடங்களாக ஒளிபரப்பும் தொலைக்காட்சியினரின் சாமர்த்தியம்....ஒற்றைவரியில் ஆசிரியர் சொன்னதும் உண்மைதானே...

    ReplyDelete
    Replies
    1. சுருங்கச் சொல்லல் ஒரு அழகென்றால் விளங்க உரைத்தலும் இன்னொரு அழகுதான்.

      காலம் மற்றும் தேவையின் அடிப்படையில் ஆனவை இவை.

      வெவ்வேறு பயன்நோக்கிச் செய்யப்பட்டவையாக இதனைக் கருத வேண்டும் என நினைக்கிறேன் கவிஞரே!

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    நான்குவரி இராமாயணம் யாழப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவரால் இயற்றப்பட்ட பாடல் வரிகளை நச்சென்று நறுக்குத் தெரித்தாற்போல சொல்லிச் சென்றது கண்டு வியந்தேன்.

    "ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்" என்று ராமபிரானைப் பெருமைப் படுத்திச் சொல்வார்கள்.

    ‘தனக்கு பிடித்தமானதை
    பிடித்துத் தருவான் என்று
    தனக்கு பிடித்த மான் அதை கேட்டாள் !’
    .-இராமாயணம் பற்றி காவியக் கவிஞர் வாலி.

    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் துரித வருகைக்கும் இராமாயணம் பற்றி நீங்கள் அறிந்த கருத்தொன்றை அறியத் தந்தமைக்கும், வாலியின் பாடற் வரிகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. வணக்கம் பாவலரே !

    இலக்கியங்கள் புராணங்கள் எல்லாம் இவ்வளவு சுருக்கமாகவும் சொல்லி இருக்கிறார்களே ! அதைத் தங்கள் மூலம் அறிந்து மகிழ்வு கொண்டேன் ! “வெறும் மயிறால் பிறந்த கதைகள்” ம்ம் எவ்வளவு சுருக்கம் கதையின் எண்ணக்கருவையே ஒரு வரியில் சொன்ன ஆசிரியர் வளர்த்த மாணவர் தாங்கள் அதனால் உங்களைப் பற்றிக் கேட்வா வேணும்?
    மிக்க மகிழ்ச்சி தொடர்கிறேன் பாவலரே

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாவலரே!

      தங்கள் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.

      Delete
  5. அடடா! அந்த நாலு வரியும், single line பஞ்ச் உம் செம!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  6. இராமாயணம் பெண்ணாசையால் அழிந்ததைப் பற்றிய கதை. மகாபாரதம் மண்ணாசையால் அழிந்ததை பற்றிய கதை. அன்புடன் D.ஜெயச்சந்திரன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகையும் முதல் பின்னூட்டமும் காண மகிழ்வு.
      ““““““““““““இராமாயணம் பெண்ணாசையால் அழிந்ததைப் பற்றிய கதை. மகாபாரதம் மண்ணாசையால் அழிந்ததை பற்றிய கதை““““““““““““““““““““

      நீங்கள் கூறுவது இரண்டிற்கும் ஆன வேற்றுமை.
      அன்று என் ஆசிரியர் கூறியது இரண்டிற்குமான ஒற்றுமை.

      அவ்வளவுதான் வேறுபாடு ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      தொடர வேண்டுகிறேன்.


      Delete
  7. உங்கள் ஆசிரியர் சொன்னதை நினைவு கூரும்போது எனக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. மகாபாரதம் மண்ணாசையால் இராமாயணம் பெண்ணாசையால் என்பார்கள்.

    இலங்கைக் கவிஞரின் சுருக்க ராமாயணம் சூப்பர். முக்கிய இடங்களை மட்டும் சாறு பிழிந்திருக்கிறார்!
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      பதிவு குறித்த தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஸ்ரீ.

      வாக்கிற்கும்.

      Delete
  8. வெறும் மயிறால் பிறந்த கதைகள்..... எவ்வளவு நுணுக்கம்.. வியப்பாக இருக்கிறது. அதே சமயம் கிட்டத்தட்ட உண்மையே. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. நான்கு அடிகளும், ஒற்றை வரியும் - எவ்வளவு எளிதாக சொல்லி விட்டார்கள்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி வலைச்சித்தரே!

      Delete
  10. நாட்டுப்புற பாடல்கள் கவிஞர் முனைவர் நவநீதகிருஷ்ணன் மேடையில் பாடும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை மேலே எறிந்து அது கீழே வருவதற்குள் சுருக்கமாக பாடிய இராமாயணத்தை கேட்டிருக்கிறேன். இப்போதுதான் இராமயணத்தை நான்கு அடியில் சொல்லியிருக்கும் பாடலை கேள்விப்படுகிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      நீங்கள் நவநீத கிருஷ்ணன் என்றதும் சட்டெனப் புரியவில்லை. விஜயலெட்சுமி - நவநீத கிருஷ்ணனைத்தான் சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சொன்ன தகவல் புதிது. அறிந்ததில்லை. இது பற்றிய கூடுதல் செய்திகளைப் பகிர்ந்து கொண்டால் மிக்க உதவியாய் இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  11. பிரிவெருவை மரணம் பானு -இந்த வரியின் பொருள் நீங்கள் சொன்னதால் புரிந்தது. எருவை - ஜடாயு பானு - சூரியன் என்றறிந்து கொண்டேன். மற்ற வரிகள் மிக எளிதாகப் புரியும்படி இருக்கின்றது. நான்கே வரிகளில் ஒரு காப்பியத்தைச் சொல்ல முடிந்திருப்பது சிறப்புத் தான். அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      எருவை என்றால் கருடன். இந்த இடத்தில் ஜடாயுவைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் கருத்துகளை அறியத் தருகின்றமைக்கும் நன்றிகள்.

      Delete
  12. நாலே வரியில் ஒரு காவியம்
    நன்றி நண்பரே
    தம+1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  13. வெறும் மயிறால் பிறந்த கதைகள்///இந்த வரிகள் தான் பிடிக்கிறது....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் நன்றிகள.

      Delete
  14. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  15. து போல சிலப்பதிகாரத்தை ஒரு வெண்பா ஆக சொல்லுதல் இயலுமோ?

    கீதா மேடம் சொன்னால் நன்றாக இருக்கும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  16. இது போல சிலப்பதிகாரத்தை ஒரு வெண்பா ஆக சொல்லுதல் இயலுமோ?

    கீதா மேடம் சொன்னால் நன்றாக இருக்கும்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      இது குறித்து இந்தப் பதிவிலேயே சுட்டி கொடுத்திருக்கிறேனே..?!!!

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  17. அருமை சகோ! எவ்வளவு தமிழ்ப்புலமை இருக்குமானால் இப்படி ஒரு நீண்ட இதிகாசத்தையே மிக ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்! சாமானியர்கள்- நாங்களும் ஓரளவு புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக..

    உங்கள் தேடலும், பகிர்தலும் பல சமயங்களில் வியப்பை அளிக்கின்றது சகோ.

    கீதா: மேல் சொன்ன கருத்துடன் இதுவும். உங்கள் தமிழை வாசித்து,பிழையின்றி எழுதுவதையும் உட்கொண்டு, நாங்கள் கற்று அடி மனதில் புதைந்திருக்கும் தமிழை இப்போது மீட்டெடுக்கும் பணியில். குறிப்பாக ஒற்றுப் பிழைகள் எங்கள் பதிவுகளில் நிறைய இருந்தன. தங்கள் பதிவுகள் கற்றுத் தருகின்றன. சந்தேகம் வரும் போதெல்லாம் உங்கள் பதிவுகளைக் காண்பதுண்டு. அப்படியும் பிழைகள் வருகின்றனதான். உச்சரிப்புச் சரியாக இருந்தால் வராது என்பார் எங்கள் தமிழ் ஆசிரியர். உங்கள் பதிவுகளை வாய்விட்டு உச்சரித்துப் படிக்கின்றோம். உதவுகின்றன. மிக்க நன்றி சகோ!


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.
      உங்களின் அன்பிற்கு முதலில் நன்றி.
      என் பதிவுகள் இதுபோலப் பிழைகளைத் திருத்த சரி பார்க்கப் பயன்படுகிறது என்பதைக் கேட்க மிக்க மகிழ்ச்சிதான்.

      தவறுகள் எல்லார்க்கும் வரக்கூடியன. அதைக் கூடுமானவரை சிரத்தை எடுத்துத் தவிர்த்திட வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும். நம் மொழி வாழும்.

      அது இல்லாமைதான் மிகப்பிழையான தமிழ் வழக்குகளுக்குக் காரணம்.

      உங்களிடம் அந்த சிரத்தை இருக்கிறது.

      அதனால் பெரிதும் பிழையற்ற வடிவத்தை உங்களால் தர முடிகிறது.

      எனவே பாராட்டுகள் உங்களுக்குத்தான்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  18. முதல்வன் திரைக் கதையின் ஒன் லைன் 'ஒரு நாள் முதல்வன்'என்பதைப் போல 'வெறும் மயிறால் பிறந்த கதை' என்பதும் சரிதான் :)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்னால் இருவேறு கருத்துண்டோ?:)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  19. புதிய தகவல்! இலக்கிய தகவல்களை தேடிப்பகிரும் தங்களின் தேடல்களினால் எங்களின் தமிழ்தாகம் ஓரளவு தீர்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!

      தங்களின் தொடர்வருகைக்கும் கருத்தினை அறியத் தருகின்றமைக்கும் மிக்க நன்றி

      Delete
  20. வணக்கம் ஐயா
    தாமதமான வருகைக்கு மன்னிக்
    தங்கள் பதிவின் தலைப்பைப் பார்த்தவுடன் எனக்கு மேலே ஐயா அவர்கள் சொன்ன பதில் தான் நினைவிற்கு வந்தது.
    ஆனால் யார் என்று தெரியாது. இப்போ தான் தெரிந்துக் கொண்டேன்.
    ஆம். எலுமிச்சைப் பழத்தை மேலே தூக்கிப் போட்டு அது திரும்பி கையை வந்து அடைவதற்குள் இராமாயணத்தைச் சொல்லி விடலாம் என்பர்.
    அது எப்படி என்றால் இப்படி தான

    விட்டின் இராமன் செத்தான் இராவனன் என்று


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      தங்கள் வருகைக்கும் அறியாத தகவல் ஒன்றை அறியத் தந்தமைக்கும் மிக்க நன்றி.

      அப்படியே இதன் பொருளையும் விளக்கினால் பயனுள்ளதாய் இருக்கும்.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. வணக்கம் ஐயா
      செல்லில் டைப் செய்வதால் சரியாக.......
      மன்னிக்க.........
      விட்டான் இராமன் செத்தான் இராவனன்.
      இப்ப புரியும் என நினைக்கிறேன்..
      நன்றி.

      Delete
  21. படிக்குங்காலை, எப்போதோ படித்த இந்த பாடலை, நல்ல விளக்கத்துடன் மீண்டும் படிக்க வாய்ப்பு தந்த ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி

      Delete

  22. வணக்கம்!

    நான்கடியைக் கண்டேன்! நறும்விருத்தச் சீருணர்ந்து
    தேன்கனியை உண்டேன் திளைத்து!

    மயிறால் - மயிரால் திருத்தம் செய்யவும்


    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.
      திளைத்துப் பிழைகள் திருத்தும் புலமை
      களைத்தமனம் செய்யும் கவின்!

      சரி செய்துவிட்டேன்.
      பிழை அறியாமையால் நேர்ந்தது. வருந்துகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  23. நான்கடிகள் ஒரு காப்பியத்தை அடக்கியதை விட, இரு காப்பியங்களை ஒற்றை வரியில் விமரிசித்த தங்கள் ஆசிரியரின் திறமை பெரிது!

    ReplyDelete
  24. நான்கு வரிகளில் ராமாயணம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    சப்தரிஷி ராமாயணம் என்று ஒன்று உண்டு. சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்கள் - எழுதியது ஏழு ரிஷிகள் - ஒவ்வொரு காண்டமும் ஒவ்வொரு ரிஷி. அதன் தமிழாக்கம் ஒன்று படித்திருக்கிறேன். அந்த நினைவு வந்தது. சேமித்து வைத்திருக்கிறேன். தேடிப் பார்த்து கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  25. ஐயா, வணக்கம்.இராமாயணத்தின் சாறாகத் தாங்கள் கொடுத்துள்ள செய்தி உள்ளது.
    நாட்டுப்புற வழக்கில் "அம்பை விட்டான் இராமன்
    செத்தான் இராவணன்!"..என்றும்,
    "தம்பி கிழித்தான் கோட்டை!
    அண்ணி தாண்டினாள் கோட்டை!
    அண்ணன் விட்டான் கோட்டை!"..என்றும் சொல்லுவார்கள். இதெல்லாம் நான் மேடைகளில் கேட்ட செய்திகள் தான்.(கம்ப இராமாயணத்தில் இலக்குவன் கொடு கிழித்ததாக காட்சி இல்லை).
    சிலம்பை இரண்டே வரிகளில் கவிஞர் வாலி "புகாரில் பிறந்தவன்
    புகாரில் இறந்தான்!. என்று சுருக்கமாகச் சொல்வார்.
    இன்னும்..."பரத்தை ஒருத்தி பத்தினி ஆனாள் !
    பத்தினி ஒருத்தி பகவதி ஆனாள்!..என்றும் சொல்லுவார்கள்.....தங்களின் சிறப்பான பதிவுக்கு நன்றி அய்யா!.

    ReplyDelete
  26. ஐயா, தங்களின் பதிவு இன்னும் என் நினைவுகளில் எண்ண அலைகளை ஏற்படுத்தியிருகிறது.
    கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் சிலம்பை,
    "பால்நகையாள்;வெண்முத்துப்
    பல்நகையாள்;கண்ணகிதன்
    கால்நகையால் வாய்நகைபோய்க்
    கழுத்துநகை இழந்த கதை!"..என்று பாடியிருப்பது அனைவரும் அறிந்ததே!
    இராமாயணத்தையும் சிலம்பையும் சுருக்கமாக,
    .."ஆடவனின் காலணி
    அரசு புரிந்தகதை!
    பெண்மகளின் காலணி
    பேரரசைக் கவிழ்த்த கதை!..என்று ஒரே பந்தில் இரண்டு ரன் அடிப்பார்...நன்றி ஐயா!

    ReplyDelete