Pages

Saturday, 28 November 2015

உன் பணம் பணம் என் பணம்.


ஊரிலேயே பெரிய பணக்காரன் அவன். பொன்னும் முத்தும் வைர வைடூரியங்களும் கொட்டிக் கிடக்கின்ற கருவூலம் அவன் வீட்டில் இருந்தது. ஆனால், சேர்த்த செல்வத்தைக் கொண்டு சுகமாக வாழ்வோம் என்ற எண்ணமோ, அது தேவைப்படுவோர்க்குக் கொடுத்து உதவுவோம் என்ற எண்ணமோ அவனிடம் ஒரு சிறிதும் இல்லை. தன் சேமிப்பைப் பார்த்து, ‘இவ்வளவு செல்வமும் என்னுடையது என்னுடையது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதில் அலாதி மகிழ்ச்சி அவனுக்கு.

ஒரு நாள் அவன் வீட்டுத் திண்ணையில் பரதேசி ஒருவன் வந்து அமர்கிறான். வெளியில் வந்து பார்த்து விரட்ட முயற்சிக்கும் அந்தப் பணக்காரனைப் பார்த்து, “என்னையா விரட்டுகிறாய்…..? இந்த வீட்டின் கருவூலத்தில் இருப்பதெல்லாம் என்னுடையது” என்கிறான்.

பணக்காரனுக்கோ மயக்கம் வராத குறைதான்.

“ என்ன…. என்ன..?  நான் பாடுபட்டுச் சேர்த்துவைத்திருக்கும் பணமெல்லாம் உன்னுடையதா?“ என்கிறான் திடுக்கிடலுடன்.

“ஆமாம். அது என் பணம்தான்!” என்கிறான் அந்தப் பரதேசி.

மிகுந்த கோபத்துடன் அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய்ப் பஞ்சாயத்தின்முன் நிறுத்துகிறான் அந்தப் பணக்காரன்.

பஞ்சாயத்தார்  அந்தப் பரதேசியிடம் கேட்கின்றனர்.

“ அவர் வீட்டில் இருக்கின்ற பணத்தை எப்படி உன்னுடையது என்கிறாய்?“

பரதேசி புன்முறுவலுடன் சொல்கிறான்.

“ அவர் வீட்டில் குவிந்திருக்கும் செல்வத்தை அவர் அனுபவிப்பதில்லை. இல்லாத பிறர்க்குக் கொடுத்தும் உதவுவதில்லை. அதை, ‘என்னுடையது என்னுடையது’ என்று சொல்வதில் மட்டும் இன்பம் காண்கிறார்.

அதைப்போலவே, நானும் அவருடைய செல்வத்தை அனுபவிக்கப்போவதில்லை. அதை எடுத்துப் பிறருக்கும் கொடுக்கப்போவதில்லை. அவர் சொல்வதுபோல நானும் அதை ‘என்னுடையது’ என்று சொல்லித் திரிவதில் இவருக்கோ இவர் சேர்த்து வைத்திருக்கும் பொருளுக்கோ என்ன நட்டம்?”

நாலடியார் பாடல் ஒன்று சுவைபட இக்கருத்தை இப்படி விளக்குகிறது.

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
யானும் அதனை அது ”                         ( 276, நாலடியார்)

எனது எனது என்று பொருளைச் சேர்த்துவைத்து அதன் பயனை அறியாத கருமியின் செல்வத்தை, நானும் ‘என்னுடையது என்னுடையது’ என்று சொல்லிக்கொண்டிருப்பேன்.

அவனுடையது என்றால், தன் செல்வத்தைக் கொண்டு அவன் பிறருக்கு உதவி இருக்கவேண்டும். இவன் உதவவில்லை.

சரி….அவனாவது அனுபவிக்க வேண்டும். அவனும் அனுபவிக்கவில்லை.

நானும் ஒருபோதும், அவன் செல்வத்தை எடுத்துப் பிறருக்கு உதவி செய்யப்போவதில்லை.

அதை அனுபவிக்கப்போவதுமில்லை.

அதனால், அவன் சொல்வதுபோலவே அதனை ‘என்னுடையது’ என்று நானும் சொல்வதில் என்ன தவறு?

கேள்வி நியாயம் தானே?

பட உதவி - நன்றி ; https://encrypted-tbn0.gstatic.com/images

43 comments:

  1. உங்களிடம் என் பணம் ஏதாவது இருக்கிறதா. ?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா!

      உங்களுக்குத் தெரியாமலா?

      அது நம்பணம் என்று நீங்கள் நம்பனும். :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  2. நாலடியார் பாடலுக்கு ஏற்ற பொருத்தமான கதை. அதனாற்றான் உலகநாதர் “தனம் தேடி உண்ணாமற் புதைக்க வேண்டாம்” (உலகநீதி) என்று சொன்னார் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      ஆம் ஈயாமை குறித்து நிறைய பாடல்கள் தமிழில் உண்டு.

      இந்தப் பாடலின் பொருளை ஒரு கதையின் பின்புலத்தில் இருந்து யோசித்ததால் பகிர்ந்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  3. எத்தனை பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக புரிய வைக்கிறது இந்த பாடல். பாடலும் அதற்கு தாங்கள் சொன்ன கதையும் அற்புதம்.
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      கதை நம் கைச்சரக்கு என்றாலும் கதைக்கான பொருண்மை பாடலில் இருப்பதாக நினைத்தேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. என்னுடையது... என்னுடையது... அருமை...
    நல்லதொரு கருத்தைச் சொல்லும் பாடல்
    அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பரிவையாரே!

      Delete
  5. Replies
    1. தங்களின் வருகைக்கும் என் பதிவுகளைத் தொடர்வதற்கும் கருத்திடுவதற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. வணக்கம்!

    உன்பணம் என்பணம் ஓதும் கருத்துணர்ந்தால்
    பொன்மனம் மேவும் பொலிந்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      பொலிந்து பதிலிறுத்துப் போகின்ற வெண்பாக்கள்
      நலிந்தகடல் நாடும் நதி

      தங்களின் வருகைக்கும் வெண்பாப்பின்னூட்டத்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.

      Delete
  7. சரி தான்... சரியே தான்...

    இதற்கு ஏற்ற குறளைச் சொன்னால், என் பதிவில் கணிக்க சொன்ன அதிகாரம் தெரிந்து விடும்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வலைச்சித்தரே!

      பதிவின் பின்னூட்டத்தில்தான் கணித்துவிட்டார்களே..!!


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  8. வணக்கம் ஐயா,

    அப்ப என்னுடையது என்று சொல்வதில் தவறில்லை,,,

    தாங்கள் சொன்ன விளக்கம் அருமை , நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே..!!

      ஆம் அப்படிப்பட்ட செல்வத்தை நம்முடையது என்று சொல்வதால் எந்தக் குறைவும் வந்துவிடப் போவதில்லைதான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  9. அன்புள்ள அய்யா,

    ‘உன் பணம் பணம் என் பணம்’ நாலடியார் பாடல் மூலம் நாய் பெற்ற தெங்கம் பழம் போலான பணம் பற்றிப் பாங்காய் கூறினீர்கள்.


    ‘சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
    சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
    பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
    பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு?’

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      ஆம் நாய் பெற்ற தெங்கம் பழம் என்பது ஈயாதான் செல்வத்திற்குப் பழமொழி காட்டும் உவமை.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் திரைப்படப்பாடல் மேற்கோளுக்கும் நன்றி.

      Delete


  10. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
    கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
    ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
    பாவிகாள் அந்தப் பணம்

    என்று ஒளவைப்பாட்டி நல்வழி’யில் சொன்ன பாடல் நினைவுக்கு வருகிறது தங்களின் பதிவைப் படித்தபின். இந்த உலகை விட்டு போகும்போது எதையும் எடுத்து செல்லமுடியாது எனத் தெரிந்தும் இன்னும் பலர் பணத்தை தானும் அனுபவிக்காமல் பிறரையும் அனுபவிக்க விடாமல் இருப்பதை அருமையாய் விளக்கும் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      இது பற்றிய பாடல்கள் தமிழில் நிறைய உள்ளன.

      அதிலும் நிலையாமையை உணர்த்தும் சித்தர் பாடல்கள் பேரதிகம்.

      தங்களின் வருகைக்கும் பொருத்தமான பாடலொன்றை மேற்கோளாய்க் காட்டியதற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. இருந்தாலும் பரதேசிக்கு இவ்வளவு ஆசைக் கூடாது :)

    ReplyDelete
    Replies
    1. இருந்தா ஆசை இருந்திருக்காதோ என்னமோ? :)

      Delete
  12. அண்ணா!!

    உங்க பணம் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா நீங்க பயன்படுத்தி, பிறருக்கு இப்படி தானம் செய்த பின் உங்க வாசிப்பு இப்போ எங்க வாசிப்பாக இருக்கு!!!! என்ன ஒரு முரண்!!!

    ReplyDelete
    Replies
    1. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது என்பது வாசிப்பிற்குப் பொருந்தும்.
      பணத்திற்குப் பொருந்தாது அல்லவா?

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  13. நியாயமான கேள்வி....

    நல்லதொரு பாடலை இங்கே வாசிக்கத் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. நாய் பெற்ற தங்கம் பழம்!

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் 'தெங்கம்' பழம்!

      Delete
    2. வணக்கம்.

      ஈயாதான் செல்வத்திற்குச் சொல்லப்பட்ட மிகப் பொருத்தமான பழமொழி ஸ்ரீ.

      பழமொழி நானூறில் இருக்கிறது.

      வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
      முழங்கு முரசுடைச் செல்வம், - தழங்கருவி
      வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
      நாய்பெற்ற தெங்கம் பழம்.

      பதிவிற்கு மிகப் பொருத்தமான பாடலொன்றின் பழமொழியொன்றை இங்குப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      Delete
  15. வணக்கம் பாவலரே !

    பரதேசிக்கு இருந்த அறிவு அந்தப் பரதேசிக்கு இல்லாமல் போச்சே
    நம்ம பணம் அங்கில்லை தப்பித்தோம் மிக அருமையான கதை
    நாலடியார் பாடலடுன் தொடர வாழ்த்துக்கள் !

    தம +1

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பாவலரே!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  16. நல்ல சூடு அந்தப் பணக்காரனுக்கு! ஆனால், அப்படியொரு பாடலுக்கு இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து வந்த ஒரு பாடலைத் தாங்கள் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்களே... அருமை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      பதிவிற்கென எழுதி முடித்ததும் சட்டெனத் தோன்றுவதைத்தான் தலைப்பாக இடுகிறேன்.
      அதற்காகப் பெரிதாய் ஆலோசிப்பதில்லை.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  17. நான் சிலநாட்களாக உங்கள் பதிவை படிக்க வரவில்லை! காரணம் உங்கள் மீது ஏற்பட்ட வருத்தம்! நடக்கவே சக்தியற்ற நிலையில் புது க்கோட்டை வந்தேன் (குறிப்பாகஉங்களைக் காண !ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது) நியாயமா! என்ன காரணமோ தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      மன்னிக்க வேண்டும்.

      வரும் ஜனவரி முதல் ஒருமாதப் பயிற்சிக்குச் சென்னை வரும் திட்டம் உள்ளது.
      நிச்சயமாய்த் தங்களைச் சென்னையில் சந்திக்கிறேன்.

      தங்களை மனம் வருந்தச் செய்தமைக்காய் மீண்டும் தங்களின் மன்னிப்பை வேண்டுகிறேன்.

      பொறுத்தாற்றுங்கள்.

      நன்றி.

      Delete
  18. பொருத்தமான பாடல் அடிகளைத் தந்து பதிவின் தாக்கத்தை மேம்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  19. வெறுமனே பாடலுக்கான பொருளை கூறி இருந்தால் அதன் சுவையை இப்படி உணர்ந்திருக்க முடியாது. பொருத்தமான கதையை உருவாக்கி அதன் மூலம் சொன்னது அருமை. வழக்கம் போல ஈர்க்கும் தலைப்பு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் ஊக்கமூட்டுதலுக்கும் வாக்கிற்கும் என்றென்றும் நன்றிகள்.

      Delete
  20. இனி அது உங்க கதை மட்டுமல்ல!..நம் கதை!..நாலடியார் பாட்டை இதைவிட எப்படி விளக்க முடியும்..?!

    ReplyDelete
  21. தாமதமாகிவிட்டது சகோ...

    முதலில் தலைப்பு அருமை சகோ...

    அந்தத் தலைப்பிற்கு ஏற்ற ஒரு கதை சொல்லி, பாடல் தந்து விளக்கம் அருமை சகோ....அருமை..எப்படி எல்லாம் தேடிக் கண்டுபிடித்துச் சொல்லித் தருகின்றீர்கள்!!!

    இந்தப் பதிவை வாசித்ததும் ஏனோ கூட்டாஞ்சோறு செந்தில் சகோ பதிந்திருந்த திருப்பதி சாமிதான் நினைவுக்கு வந்தார்...சரிதானே சகோ எங்கள் நினைவுக்கு வந்தது?!!!

    ReplyDelete
  22. திருப்பதி சாமியா பணக்காரர்? அவர் சொல்லுவார் இவை நான் சேர்த்த பணம்...

    அதெப்படி? இதெல்லாம் இந்த மக்கள் கொண்டு கொட்டும் பணம் அல்லவா நீங்கள் வட்டியாவது அவர்களுக்குக் கொடுப்பீர்கள் என்று ....அப்படித்தானே உங்கள் கதை சொல்லுகின்றது சாமி....எங்களிடம் பெற்று உங்கள் கடனின் வட்டியைக் கொடுப்பது நியாயமா...அப்படி என்றால் எங்களுக்கும் வட்டி தரவேண்டும் அல்லவா...இப்படி நினைத்துத்தான் கொண்டு கொட்டுகின்றனர்...ஆம் ! இதில் வட்டி டபுள் வட்டியாகத் தருவார் என்ற நம்பிக்கையுடன்....ஹும்

    ReplyDelete
  23. தானும் அனுபவிக்காது பிறர்க்கும் உதவாத பணம் பிறரால் கொள்ளை அடிக்கப் பட்டு விடுமாமே. அப்படி இருக்க அந்தப் பணத்தை யாரும் தன்னுடையது எனலாம் தானே. அதனால் யாருக்கும் நஷ்டம் இல்லையே.ஹா ஹா ஹா .. ம்..ம் நல்லது நல்லது. அருமையான பதிவும் பாடலும். நன்றி ! தாமதத்திற்கு மன்னிக்கணும்.

    ReplyDelete