நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்திற்கென
ஆட்களைத் திரட்டிப் பயிற்சி அளித்து, ஜப்பானியப் படைத்தலைவனை அணுகி, அவர்களது படையோடு
இணைந்து ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய மண்ணை விட்டு அகற்ற உதவிகோருகிறார்.
ஜப்பானியப் படைத்தலைவன் குதிரையில் அமர்ந்தவாறே
தன் படையின் அருகே இருக்கும் இந்திய தேசிய ராணுவத்தைப் பார்வை இடுகிறான். பின் தனது
படையை அணிவகுத்து நடக்கச் சொல்கிறான். ஜப்பானியப் படை மிடுக்குடன் நடக்கிறது.
படைத்தலைவன், தன்னுடைய கைத்துப்பாக்கியை
எடுத்து அணிவகுத்துச் செல்கின்ற தன் படை வீரர்களைக் குறிபார்க்கிறான். நடக்கின்ற ஜப்பானியப்
படைவீரர்களுக்குத் தங்களை நோக்கி நீட்டப்பட்ட துப்பாக்கியின் குழல் தெரிகிறது.
அணிவகுப்பின் நடையில் எந்த ஒரு சலனமும் இல்லை.
ஜப்பானியப் படை அதே வேகத்தில் நடந்துகொண்டு
இருக்கிறது.
இந்தியப்படை வீரர்கள் இந்தக் காட்சியைப்
பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
“என்ன செய்யப்போகிறான் இந்த முட்டாள்?” கைத்துப்பாக்கியால் தன் படையினரையே குறிபார்க்கிறானே?! சும்மா மிரட்டுவதற்காய் இருக்கும்!”
என்ற எண்ணம்தான் இந்தியப் படைவீரர்களின்
மனத்தில் ஓடுகிறது.
அடுத்த நொடி, ‘டப்’ என்று துப்பாக்கி வெடிக்கும் ஒலி.
அணி வகுப்பில் நடந்து கொண்டிருந்த ஒரு ஜப்பானிய வீரன் தலை சிதறக் கீழே சாய்கிறான்.
படை அணிவகுப்பு இயந்திர மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ என்று எண்ணத்தக்க வகையில் எதுவுமே நடக்காததுபோல முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஜப்பானியப் படைத்தலைவன் சுபாஷ் சந்திரபோஸிடம்
“ம்ம்.. இப்போது உங்கள் படையின் அணிவகுப்பை நடக்கக் கட்டளை இடுங்கள்” என்கிறான்.
இந்திய அணிவகுப்பு மிகுந்த பயத்துடனும் பதட்டத்துடனும்
தொடங்குகிறது.
நேராகப் பார்த்துச் செல்லவேண்டிய வீரர்களின்
கண்கள், ஜப்பானியப் படைத்தலைவனின் துப்பாக்கியையே திரும்பிப் பார்த்தவாறு செல்கின்றன.
அவன் மீண்டும், தன் துப்பாக்கியைத் துடைத்தவாறே
முன்பு செய்ததைப்போலவே அணிவகுத்து வரும் இந்திய
தேசிய இராணுவ வீரர்களை நோக்கிக் குறிபார்க்க ஆரம்பிக்கிறான்.
இப்போது, அணிவகுப்பில் உள்ள ஒவ்வொருவனும்
தனக்கு முன்னுள்ளவனைத் தள்ளியபடி துப்பாக்கியின் இலக்கில் இருந்து தன்னைத் தற்காத்துக்
கொள்ள ஓடுகிறான்.
அணிவகுப்பு அலங்கோலமாகிவிடுகிறது.
ஜப்பானியப் படைத்தலைவன் சிரித்தவாறே நேதாஜியிடம்,
“இவர்களுடன் என் படைவீரர்களை அனுப்பினால், என் வீரர்களை எதிரிகளின் குறிக்கு இலக்காகும்படி தள்ளிவிட்டு இவர்கள் தப்பித்துக் கொள்வார்களே! இதுதானா இந்தியர்களின் வீரம்?” என்றானாம்.
எனது நான்காம் வகுப்பில் வயலட் டீச்சர் சொன்ன
கதையிது. எதை விளக்க இந்தக் கதையைச் சொன்னார் என்று தெரியவில்லை. பாடம் மறந்து கதை நினைவில் தங்கிவிட்டது.
புனைவாகவே இருந்தாலும் ‘உயிரை ஒரு பொருட்டாக
எண்ணாத வீரமே போர்க்களத்திற்குத் தேவை!’ என்ற கருத்தை இக்கதையிலிருந்து தெரிந்து கொண்டேன்.
போர்க்களத்தில் உயிர் துறத்தலைப் பெருமையாக
எண்ணிய ஒரு சமுதாயத்தில் இருந்துதான் நாம் வந்திருக்கிறோம்.
“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே”
“ ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
என்றெல்லாம் சொல்லப்படும் இடத்தில் சான்றோன்
என்பதற்கு நாம் இன்று கொள்ளும் ‘அறிவாளி’ என்கிற பொருளைவிட ‘வீரன்’ என்ற பொருளே பொருத்தம்
உடையது. சங்கத் தமிழில் ‘சான்றோன்’ என்னும் சொல் வீரன் என்ற பொருண்மையிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்த இடங்களில்,
வீரன் ஆக்குவது தந்தையின் கடன்.
வீரன் என்னும்போது பெரிதும் மகிழ்வாள்தாய்.
என்று பொருள் காணும் போது போர் வாழ்க்கையை
இயல்பாக்கிக் கொண்ட பண்டைய தமிழ்ச் சமூகச் சூழல் இன்னும் துலக்கமுறுகிறது என நினைக்கிறேன்.
போரில் வீர மரணம் அடைதல் என்பது ஒருபுறம்
இருக்கப் போருக்குச் செல்லும் முன்னோ அல்லது போர் வெற்றிக்குப் படையலாகவோ தம்முடலைத்
தாமே பலியிடுதல் பண்டைத் தமிழ் மரபில் இருந்திருக்கிறது. ( இன்னொருபுறம் குற்றம்
செய்து மரண தண்டனை அடைந்தவனும் தான் விரும்பிய
தெய்வத்திற்குத் தன்னைப் பலியிட்டுக் கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது )
பொது நலனுக்கெனத் தன்னைத்தானே பலிகொடுத்தவன்
குடும்பத்திற்கு அரசோ ஊர் மக்களோ நிலங்களைத் தானமாகக் கொடுப்பது வழக்கம். கல்வெட்டுகள்
இதனை ஆவணப்படுத்தி இருக்கின்றன.
பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மனின் மகனான
கம்பவர்மனின் இருபதாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டொன்று தென்னிந்திய கல்வெட்டுத்
தொகுதியின் பன்னிரண்டாம் தொகுதியில் உள்ளது. ( பக் .50 )
நெல்லூர் மாவட்டம் குண்டூர் தாலுக்கா சுப்ரமணிய
திருக்கோயில் முன்புறக் கற்பலகையில் இக்கல்வெட்டுக் காணப்படுகிறது. அதில் தலைமுடியைக்
கொத்தாகப் பிடித்தபடி தன்தலையைத் தானே வெட்டிக் கொண்ட பட்டைபொத்தன் என்பவனின் சிற்பம்
ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது.
அவன் தன் தலையை தானே அறுத்து உடனே மரணத்தைத்
தழுவிவிடவில்லை.
தன்னுடைய உடலின் பகுதிகளை ஒவ்வொன்றாக ஒன்பது
துண்டுகளாக வெட்டி பின்னர் இறுதியாகத் தன் தலையைத் தானே கொய்து மரணத்தைத் தழுவி இருக்கிறான்.
இப்படித் தன் உடலை ஒன்பது கூறுகளாகப் பலியிடுதலுக்கு ‘நவகண்டம்’ என்றுபெயர்.
அப்படி, ஒக்கொண்டநாகன் ஒக்கதிதென் பட்டைபொத்தன்,
தன்னை நவகண்டம் செய்து, இறுதியாய்த் தன் தலையறுத்து வைத்தது குறித்த கல்வெட்டு இதோ,
ஸ்ரீ கம்பபருமர்க்கு யாண்டு இருபதாவது பட்டைபொத்
தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்கதிதென் பட்டைபொத்தன்
மெ
(தவம்) புரிந்தென்று பிடாரிக்கு நவகண்டம்
குடுத்து
(குன்றகத்) தலையறுத்துப் பிடலிகை மெல் வைத்தானுக்கு
தி
ருவாமூர் ஊரார் முன்வைத்த பரிசாவது எமுர்
பறைகொட்டிக் கல்(மெ)
(டு செய்தாராவிக்கு)க் குடு(ப்)பா ரானார்
பொத்தனங் கிழவர்களும் தொ
(ப்ப)ட்டி நிலம் குடு(த்)தார்கள் இது அன்றென்றார்
கங்கையிடைக் குமரிஇ
டை எழுநூற்றுக் காதமும் செய்தான் செய்த பாவத்துப்
படுவார்
அன்றென்றார் அன்றாள் கொவுக்கு காற்ப்பொன்
றண்டப்படுவார்.
(SOUTH INDIAN INSCRIPTIONS VOLUME XII,
P 50 )
ஊர் மக்கள் அவன் குடும்பத்தார்க்கு நிலம்
அளித்து அதைக் காக்க வேண்டும் என்கிற கட்டளையைக் கல்வெட்டாக்கி இருக்கிறார்கள்.
இந்தத் தானத்தை மறுப்பவர்கள் கங்கை முதல் கன்னியாகுமரி வரை உள்ள
இடங்களில் இருப்பவர்கள் செய்த பாவத்தை ஏற்பார்கள். காற்பொன் தண்டமும் அவர்களுக்கு விதிக்கப்படும்
என்று சொல்கிறது இக்கல்வெட்டு.
ஜப்பானில் சாமுராய் இனத்தைச் சார்ந்த வீரர்கள்
சில சூழல்களில் தம் வயிற்றை வாளால் அறுத்து மடிவது பெருவீரம் என்று கொண்டாடப்படுகிறது.
என் ஆசிரியை சொன்னது ஒரு வேளை உண்மையாய்
இருந்தால், அந்த ஜப்பானியப் படைத்தலைவனிடம், பட்டைப்பொத்தனைப் போன்ற மனத் திண்மை கொண்டோர்
வாழ்ந்த இனம் இன்னும் இருக்கிறது என்று சொல்லவேண்டும் எனத் தோன்றியது.
( கல்வெட்டில் சில எழுத்துப் பிழைகள் இருக்கின்றன.
உள்ளது உள்ளபடியே இங்குத் தரப்பட்டிருக்கிறது )
சிற்பம் - மேற்குறித்த கல்வெட்டில் உள்ளதன்று. மாதிரியே.
சிற்பம் - மேற்குறித்த கல்வெட்டில் உள்ளதன்று. மாதிரியே.
பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
யப்பா...! நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது ஐயா... இப்படியுமா...?
ReplyDeleteகாலையில் ஒரு கட்டுரையை படித்தேன்... நேரம் கிடைப்பின் வாசிக்கவும்...
இணைப்பு : https://mahalukshmiv.wordpress.com/2015/10/30/தற்கொலை-செய்வது-அவ்வளவு/
வணக்கம் ஐயா.
Deleteதங்களின் வருகையும் முதல் பின்னூட்டமும் காண மகிழ்ச்சி.
நீங்கள் சுட்டிய கட்டுரையைப் படித்தேன்.
ஆனால் அதற்கு மாறாகத்தானே இப்பதிவு அமைந்திருக்கிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வணக்கம் ஐயா,
ReplyDeleteசங்க இலக்கிய வீரயுகப் பாடல்கள் குறித்து சிலமாறுபட்ட கருத்துக்கள் படித்தேன்.
ஆனால் வீரம் நிறைந்த மரபு நமது,,,
அருமையான பகிர்வு, அவ்வீரனின் மரணம் மெய்சிலிர்க்கச் செய்கிறது.
மனத்திண்மைத் தானே உடன்கட்டை ஏறியதிலும்,,,
வாழ்த்துக்கள், தொடருங்கள்,நன்றி.
வணக்கம் பேராசிரியரே!
Deleteமுனைவர் துளசி ராமசாமி ஐயாவின்“ சங்கப்பாடல்கள் நாட்டார் பாடல்கள் “ என்னும் நூல்பற்றிக் குறிப்பிடுகிறீர்களா எனத் தெரியவில்லை.
ஜார்ஜ் ஹார்ட் “The Poems of Ancient Tamil” இல் இது குறித்து விவாதிக்கிறார். பாருங்கள்.
இன்று நவகண்டமும் உடன்கட்டையும் குற்றங்களே!
நம்மால் முற்றிலும் ஏற்கமுடியாததே!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்கின்றமைக்கும் நன்றி.
ஒரு புறம் நம் மக்களின் வீரம், மறுபுறம் பண்பாடு. நாம் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்று அக்காலம் முதல் இக்காலம் வரை உணர்த்திவருகிறோம் என்பதற்கு இவை போன்ற சான்றுகள் உதவுகின்றன. கல்வெட்டுக்குறிப்புடன் தரப்பட்ட மேற்கோள் பதிவிற்கு மெருகூட்டியது. நன்றி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.
Deleteவீரரின் மரணம் மெய்சிலிர்க்க வைக்கிறது
ReplyDeleteதம +1
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகல்வெட்டில் வெட்டப்பட்ட ஒக்கொண்டநாகன் ஒக்கதிதென் பட்டைபொத்தன், தன்னை நவகண்டம் செய்து, இறுதியாய்த் தன் தலையறுத்து வைத்தது குறித்த வரலாற்று உண்மைகளை ஜப்பானியப் படை வீரர்களை எடுத்துக்காட்டி எடுத்துரைத்தது நம்மவரின் புறம் பற்றி அறிய வைத்தீர்கள்.
த.ம.6
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் நன்றி ஐயா.
Deleteநேதாஜியின் படைவீரர்களின் வீரத்தை அறிந்தேன். நன்றி!!
ReplyDeleteபுதிய பார்வை.:)
Deleteநன்றி வலிப்போக்கரே!
ஐயா..
ReplyDeleteபோர்வீரன் என்றால் எப்படிப் பட்டவனாய் இருந்தான் - இருக்கவேண்டும் என்று தங்களின் பதிவு சொல்லிற்று.
நெஞ்சை உலுக்கும் பட்டைப்பொத்தனின் தீரம்!
அறிந்திராத வரலாறு. பகிர்விற்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
//போர்க்களத்தில் உயிர் துறத்தலைப் பெருமையாக எண்ணிய ஒரு சமுதாயத்தில் இருந்துதான் நாம் வந்திருக்கிறோம்.//
மேலும்..
//பட்டைப்பொத்தனைப் போன்ற மனத் திண்மை கொண்டோர் வாழ்ந்த இனம் இன்னும் இருக்கிறது//
இந்த இடங்கள் என்னை என் தாய் நாட்டிற்குக் கொண்டு சென்றுவிட்டதையா!
நவம்பர் - கார்த்திகை பிறக்கின்றதென்றாலே மின்சாரம் மேனியெங்கும் பாய்ந்ததுபோல
எங்கள் ஈழத்தேச உணர்வும் அங்கு கார்த்திகை மைந்தர்களாக நினைவு கூரும் நிகழ்வுகளும் எம்மை அங்கேயே நிலைநிறுத்திவிடும்.
இன்றைய பதிவில் நீங்கள் கூறிய நான் சுட்டிய இடங்கள்
எங்கள் மண்மீட்பில் இருந்த மறவர்களுக்கும் பொருந்தும்!
ஈழத்தமிழச்சி என்பதில் அத்தனை பெருமை கொள்கிறேன் நானும்,!
வணக்கம் சகோ.
Deleteஇந்தப் பதிவினூடாக ஈழத்தமிழர்களை நினைத்தேன். சங்க இலக்கியங்கள் பேசும் வீரச்சரித்திரம் பொய்யென்றும் புனைவென்றும் எண்ணியோர்க்கு, இல்லை அது உண்மை என்று சொல்லத்தக்க வரலாற்று ஆதாரமாக விளங்கியோர்.
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தோர்!
வணங்குகிறேன்.
.நன்றி.
வீரம் என்றால் என்ன? ஒரு வீரனின் மனம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை விவரமாக சொன்ன பதிவு. பழந்தமிழரின் பெருமையை பறைசாற்றியதற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteத ம 9 - ஒவ்வொரு துண்டுக்கும் ஒவ்வொரு ஒட்டு.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
DeleteWhat a great expression.As a retired military officer it gives me inspiration to read further.Sir,you must read all my writings.I am terribly sorry that I could not express my feeling in tamil.I would request Karanthai Jayakumar who has got all most all my writtings to communicate with you on my behalf."Sethup pirakkum kushanthaiyai vettip pudhaikkum veera maravarkulam nam.
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteதங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேன். நீங்கள் கூறும் வரிகளில் கணைக்கால் இரும்பொறையின்,
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்“
என்னும் வரிகளின் உயிர் ஒலி கேட்கிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நேதாஜி படை பற்றிய கதையை நம்ப முடியவில்லை. இப்போதுதான் கேட்கிறேன். நவகண்ட தானம் பயங்கரம்.
ReplyDeleteஅதை நம்ப வேண்டியதில்லை.
Deleteஆனால் நவ கண்டத்தை நம்பித்தான் ஆக வேண்டும்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீ.
வணக்கம் சகொ....கதையாக இருந்தாலும் வீரம் உண்மையானது,... பாலகுமாரனின் உடையார் கதையைப்படித்த போது போருக்குச்செல்லும் மன்னனின் முன் ஆற்றின் நடுவில் தனது குடுமியை மூங்கிலின் நுனியில் கட்டிக்கொண்டு மண்டியிட்டு வாளால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தன்னையே பலி கொடுக்கும் காட்சி மனதில் வடுவாக மாறாது நின்று விட்டது,.உங்களது பதிவு அதை நினைவூட்டி விட்டது...தகுதியில்லா தலைமைக்காக தன்னைத்தானே தீயிட்டுக்கொள்ளும் தொண்டனின் வீரத்தை என்னவென்று சொல்வது..
ReplyDeleteஆம் நானும் படித்திருக்கிறேன் கவிஞரே!
Deleteபாலகுமாரன் இதைப்போன்ற கல்வெட்டுச் செய்திகளைப் பின்புலமாகக் கொண்டுதான் இதைச் சித்தரித்திருக்க வேண்டும்.
தொண்டனின் துணிச்சல் அறியாமைதான்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தமிழரின் வீரம் குறித்துத் தமிழ் பாடங்களில் பள்ளியில் பயின்றிருந்தாலும் இப்போது தாங்கள் இங்கு சொல்லியிருப்பது இன்னும் பல அறிய முடிகின்றது. அதுவும் கல்வெட்டுச் சான்றுகளுடன் தாங்கள் தருவது, வாசிப்பவர்களுக்குத் தகுந்த தகவல்கள் தர வேண்டும் என்ற தங்களின் தேடலையும், உழைப்பையும் பறைசாற்றுகின்றது சகோதரரே.
ReplyDeleteமிக்க நன்றி
வணக்கம் சகோ.
Deleteஉங்கள் பதிவுக்கான தேடலில் இது கிடைக்கக் குறித்துவைத்திருந்ததைப் பகிர்ந்தேன்.
உங்களின் வருகையும் அன்பும் என்றும் நன்றிக்குரியது.
சகோ குண்டூர் செல்லும் திட்டம் உள்ளது. சென்ற மாதம் சென்றிருக்க வேண்டிய ஒன்று ஆனால் முடியவில்லை இந்த மாதமும் முடியவில்லை. பெரும்பாலும் அடுத்த மாதம் நிறைவேறும். அங்கு நிறைய வரலாற்றுச் சான்றுகள் இருப்பதாக அறிந்தேன். அதையும் பார்க்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது பார்ப்போம்...
ReplyDeleteசான்றோன் - உங்கள் விளக்கம் அருமை சகோ. உங்கள் விளக்கத்தைப் பார்த்ததும் எழுந்த எண்ணம் இது. அன்றைய காலகட்டத்தில் போர்கள் அதிகம். விழுப்புண்கள் அதிகம். ஏன் இன்றைய காலகட்டத்திலும் கூட போர் என்பது இருந்தாலும், மறைமுகமாகப் பனிப்போர் இருந்தாலும், வீரம் என்பது அதிகமாகப் பேசப்படுவதில்லை. அது போர் என்பதைவிட வன்முறை என்று ஆகிவிட்டதால்.
மக்கள் கத்தி, துப்பாக்கி என்று எடுத்துப் போரிடவில்லை என்றாலும் (வன்முறை அல்ல இங்கு சொல்லப்படுவது) பலரும் தங்கள் வாழ்க்கையில் தினமும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். வாழ்க்கையுடனான போர். தனிப்பட்ட முறையிலும், சமூகத்திற்காகவும். நேர்மையான போர். தங்கள் மானத்தையும், சுயமரியாதையையும் நிலை நிறுத்திக் கொள்ளப் போரிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதில்தான் எத்தனை விழுப்புண்கள். எத்தனை சறுக்கல்கள், இறத்தல்கள்?! இன்றைய இந்த உலகிற்கு, காலகட்டத்திற்கு இது ஏற்புடையதாக இருந்தால் இவர்களையும் சான்றோன் எனும் பட்டியலில் சேர்க்கலாமோ ? சகோ ஏனோ எனக்கு இப்படி ஒரு எண்ணம், இதை வாசித்ததும் எழுந்தது. இன்றைய காலகட்டத்திற்கு ஒப்பிட்டுப் பாத்ததால். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
இதுவரை சிந்தித்துப் பார்த்திராத கோணத்தில் நல்லதோர் விளக்கத்துடனான, சிந்திக்க வைத்த ஒரு பதிவு சகோ
மிக்க நன்றி.
கீதா
வணக்கம்.
Deleteஆம் அந்தச் சொல்லை அதற்கான காலகட்டத்தோடு ஒட்டித்தான் பொருள் காண வேண்டியிருக்கிறது.
எதனால் ஒருவர் பிறருக்குச் சான்றாகிறாரோ அதைக் கொண்டு சான்றோர் எனல் தகும்.
ஒரு காலத்தில் வீரன் சான்றானான். அவனைச் சான்றோன் என்றனர்.
பின், கல்வி கேள்விகளில் சிறந்தவன் சான்றோனானான்.
இப்போது..?
உங்கள் பயணம் இனிதாகட்டும்.
நன்றி.
எனக்கு இது வரை தெரிந்ததெல்லாம் உப்பு கண்டம்தான் ,நவ கண்டம் ...ரொம்ப கொடுமை:)
ReplyDeleteஅப்போ உப்பைக் குறைத்துவிடுங்கள் பகவானே:)
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வீட்டிற்கு ஒருவர் போருக்கு தயாராவார்கள் என்று படித்திருக்கிறேன். இன்றைய காலத்தில் அப்படி எத்தனை பேர் வருவார்கள் ...?
ReplyDeleteபடிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது.
படைக்குப் பிந்து என்பதும் தமிழில்தான் பழமொழியாக உள்ளது. ( வலிந்து அம்பு என்றெல்லாம் பொருள் சொன்னாலும் உண்மை உண்மைதானே!)
Deleteஅது தான் உங்கள் கேள்விக்கான பதில்.
நன்றி.
ஐயா வணக்கம் எனக்கு நீங்கள்கல்வெட்டு நிகழ்வுகளைப் பதிவிடுகிறீர்களா இல்லை சிலாகிக்கிறீர்களா என்பது விளங்கவில்லை. சான்றோன் எனும் இடத்தில் வீரன் என்று பொருள் படுத்திக் கொள்வது எனக்கு உடன்பாடாய் இல்லை. சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல, நவகண்டம் என்பதைப் படிக்கும் போது எத்தகைய அறிவற்ற மூட நம்பிக்கையான செயல் என்றே எனக்குத் தோன்றியது இதுதான் தமிழ் மரபு என்றால் நான் வெட்கப்படுகிறேன் போரில் வீரம் என்பது உயிர் துறத்தல் என்று கொள்வதும் சரி இல்லை. ஜப்பானிய வீரர்கள் எந்த சலனமும் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்குப் பின்னும் முன் சென்றார்கள் என்றால் அது வீரமல்ல . ஒரு கட்டுக்குள் அடங்கி நடக்கும் குணமேபோர் வீரர்கள் மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு நட்சக்க வேண்டும் என்பது விதி அதுவே இறக்கத் துணிவது என்று பொருள் கொள்வது சரியல்ல. பின்னூட்டங்கள் பலவும் எழுதுவதைப் போற்றியே வருவது நம் வலைத்தள வழக்கம் எல்லாத் தமிழ் மரபும் போற்றற்குரியது என்பதும் சரியல்ல. பதிவில் குறிப்பிடப் படும் தன்னையே ஒன்பது துண்டங்களாக்கிப் பின் கழுத்தை அறுப்பது என்பது சாத்தியமா என்பதையும் சிந்திக்க வேண்டும் மாறுபட்ட கருத்துக்கும் இடமிருக்கும் என்று நம்புகிறேன்
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteநலந்தானே?
“““நீங்கள்கல்வெட்டு நிகழ்வுகளைப் பதிவிடுகிறீர்களா இல்லை சிலாகிக்கிறீர்களா என்பது விளங்கவில்லை“““
இப்பதிவில் இரண்டையுமே செய்திருக்கிறேன். என்னால் இயலாத செயலொன்றை இம்மண்ணில் எனக்குமுன் வாழ்ந்தோன் செய்தான் என்னும்போது எனக்குப் பிரமிப்பு ஏற்பட்டது என்பதை நான் மறுக்கவில்லை.
“““““சான்றோன் எனும் இடத்தில் வீரன் என்று பொருள் படுத்திக் கொள்வது எனக்கு உடன்பாடாய் இல்லை. சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல““““““
என்பதில் நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப் பொருள்படுத்துவது சரியல்ல என்ற உங்களின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்.
“[co="red"]ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே[/co].“
என்ற பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலுக்குப் பழைய உரை இல்லை. இப்போது சொல்லப்பட்டு, படிக்கப்பட்டுவரும் உரைகள் சுவடிகளில் இருந்து அச்சுவடிவம் பெற்றபின் வாழ்ந்த தமிழறிஞர்களால் உரைக்கப்பட்டதுதான். சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழை அவர்கள் புரிந்து கொள்வதும் பொருளுரைப்பதும் மிகக்கடினமே. ஆனாலும் அதனை அவர்கள் தங்களால் இயன்றவரையில் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சங்க இலக்கியம் குருபரம்பரையில் பயிற்சியிலும் தொடர்ந்திருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அது பெரும்பாலானோரின் பயிற்சியில் இருந்தே மறக்கடிக்கப்பட்டிருந்தது என்பது உ.வே.சா.வின் என் சரித்திரத்தால் தெரியவருகிறது. இதுபோன்ற சூழல்களில் இன்று பயன்பாட்டில் இருக்கும் ஒருசொல் சங்க இலக்கியத்தில் காணப்படும்போது, இன்றுநாம் வழங்கும் பொருளை அப்படியே எடுத்து அன்றைய இலக்கியத்திற்குப் பொருத்திப் பார்க்கும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. இது இயல்பானதே! ஆனால் சரியானதன்று.
இந்தப்பாடலுக்குத் திணை துறை குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பழமையானவை. ஓலைச்சுவடியிலேயே இருந்தவை.
இப்பாடலின் திணை வாகை. இது போர்க்களத்தின் வெற்றி பற்றிப் பேசக்கூடியது.
மூதின் முல்லை என்பது, மறக்குடி மகள் ஒருத்தி, தன் குடியின் பெருமையை அது சார்ந்த வீரத்தைப் பேசுவது.
சங்கப்பாடல்களின் திணை துறைகள் என்பன சங்கப்பாடல்களைப் பார்ப்பதற்குரிய சாளரங்கள் என்பதைப் பயின்றோர் அறிவர். அவ்வாறு நோக்குங்கால் இப்பாடலின் திணையும் துறையும் போர் வெற்றியும் குடிப்பெருமிதமும் கூறுவனவாகக் கொண்டுதான் இப்பாடலை அணுக வேண்டும். ஒரு வீரப்பெண்மகள் தன் குடிப்பெருமையை, தன் இல்லத்தில், தான் வாழும் சமூகத்தில் இருப்பவர்களின் ஒவ்வொருவரின் கடமையை கூறுவதன் வாயிலாகச் சொல்வதாகவே இந்தப்பாடல் அமைகிறது.
‘மகனைப்பெறுதல் எனது கடமை. அவனை வீரனாக்குதல் தந்தையின் கடமை. அவன் போர் செய்வதற்கு வேண்டிய தளவாடங்களை அமைத்துத்தருதல் கொல்லனின் கடமை. அவனது வீரத்தையும், ஆயுதங்களையும் நல்லவழியில் பயன்படுத்திக் கொள்ளுதல் அரசனின் கடமை. ( இங்கு நன்னடை என்பதற்குத் தண்ணடை என்கிற பாடவேறுபாடும் உண்டு. அதுவே இந்தப் பாடலுக்கு மிகப்பொருத்தமாக அமையும். வெற்றி ஈட்டும் வீரனுக்குக் குளிர்ந்த நீர் வளமிக்க வயல்களை அளித்துப் புரத்தல் வேந்தனின் கடன் என்பதாக அதற்குப் பொருள் அமையும். ) வாள்சுழற்றிச் சென்று பகையழித்து, யானையும் கொன்று திரும்புதல் என் மகனின் கடமை ஆகும்’ என்று அந்தத் தாய் சொல்கிறாள்.
இங்கு களிறெறிந்து பெயர்தலும் ஆயுதமேந்திப் பொருதலும் வீரர்க்குரியனவா அல்லது அறிவாளிக்குரியனவா?
கல்விக்கூடம் பற்றியோ ஆசிரியர் பற்றியோ இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளதா?
போரும் வீரமும் வெற்றியும் சொல்லப்படும் பாடலில் வரும் சான்றோன் என்பதற்கு வீரன் என்பதாய்ப் பொருள் கொள்வது பொருத்தம் உடையது என நான் கூறியதற்கான பின்னூட்டத்தில், ““““சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல“““““““““ என்று நீங்கள் குறிப்பிட்டதற்கான சான்றுகள் ஏதுமிருப்பின் தர வேண்டுகிறேன்.
..........................................................................................தொடர்கிறேன்.......................
இனிச் ‘சான்றோன்’ என்பதற்கு நான் எனது விருப்பத்தின்படி ‘வீரன்’ எனப் பொருள் சொல்லவில்லை இதே பொருளிலேயே சங்க இலக்கியத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது என்பதற்கான சில சான்றுகள் வருமாறு,
Delete“[co="red"]எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலத்து
நோன்புரித் தடக்கை சான்றோர் மெய்ம்மறை[/co]”
என்னும் பதிற்றுப் பத்தின் இரண்டாம் பத்தில் சான்றோர் என்பதற்குப் போர்வீரர் எனப் பொருள் உரைக்கிறார் அதன் பழைய உரையாசிரியர்.
இதன் ஏழாம் பத்தில்
“[co="red"] எஃகொடு ஊணங்கடுப்ப மெய்சிதைந்து
சாந்தொழில் மறைந்த சான்றோர் பெருமகன்[/co]“
என்னும் இடத்தில், தன் உடம்பில் பட்ட புண்களைச் சாந்தினைப் பூசி மறைத்த வீரனின் மகனிவன் என்று பொருளுரைக்கப்படுகிறது.
பழந்தமிழில் சான்றோன் என்பவன் வீரன் எனப்பட்டான் என்பதற்கு இன்னும் சான்று காட்டமுடியும். சான்றோன் என்ற சொல்லே மற்றவர்க்குச் சான்றாய் வாழ்ந்தவன் என்ற பொருளில் இருந்து தோன்றியதாய் இருக்க வேண்டும். சங்க காலம் என்று சொல்லப்படுகின்ற வீர ஊழியின் போது பிறருக்குச் சான்றாய் வாழ்ந்திருப்பவன், கற்றவன் என்பததைக் காட்டிலும், களத்துப் பட்டவன் என்றலே பொருத்தமாக அமையும்.
அடுத்து,
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனகேட்ட தாய்“
என்ற குறள்,
இங்குப் புலவர்களால் பயில வழங்கும் பரிமேலழகர் உரையில் சான்றோன் என்பதற்குக் ‘கல்வி கேள்விகளால் நிறைந்த அறிவுடையவன்’ என்றே பொருள்கூறப்படுகிறது.
ஓர் இலக்கியத்தை அதன் உரையைப் பார்க்கும்போது அது எழுந்த காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்னும் கருத்து இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏறக்குறைய பரிமேலழகரின் காலம் வீரயுக காலத்திற்கு மிகப்பிற்பட்டகாலம். வீரம் மதிக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து கல்வி கேள்வி அடைதலே பெருமை எனப்பட்ட காலம், அதிலும் இன்னார்க்கு இன்னது என்ற வருணாசிர தர்மமும், பெண்ணடிமைத்தனமும் காலூன்றி வலுவடைந்த காலம்.
இக்குறள் இடம் பெற்ற அதிகாரம் “மக்கட்பேறு“ என்று பரிமேலழகருக்கு முன் வாழ்ந்த உரையாசிரியர்களால் எடுத்தாளப்பட்ட தலைப்பைப் பரிமேலகழர் , “புதல்வரைப் பெறுதல்“ என்று மாற்றுவதில் இருந்தே அவர் வாழ்ந்த காலத்தில் ஊடுருவிய வைதிகக் கலப்பை நாம் அவதானிக்கலாம். மக்கள் என்றால் என்ன புதல்வர் என்றால் என்ன சொல்வேறுபாடுதானே என்றால், புதல்வன் என்ற வடசொல்லுக்குள் இருக்கும், “பிள்ளை இல்லாதவர்கள் விழக் கூடிய ‘புத்’ என்னும் நரகில் இருந்து பெற்றோரைக் காப்பதால் புதல்வன் ஆகிறான்“ என்கிற புராண அடிப்படையில் அமைந்த சொல்விளக்கத்தை மக்கள் என்னும் தமிழ்ச்சொல் தருவதில்லை. எனவேதான் அது மாற்றப்பட்டுள்ளது.
இங்குக் கேட்ட தாய் என்பதற்கும், ( தன் மகன் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவாளி என்பதைப் ) பெண் இயல்பால் தானாக அறியாமையால் ‘கேட்ட தாய்’ என்று வள்ளுவர் கூறினார் என்று பரிமேலழகர் கூறுவதும் அவர் காலத்திய பெண்ணடிமைத்தனம் நிறைந்த சமூகத்தின் புலமைக்கூச்சலே!
..........................................................................................தொடர்கிறேன்.......................
இவ்வதிகாரத்தில் உள்ள எட்டுப் பாடல்களும் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பொதுவானவை. இந்தக் குறள் உட்படக் கடைசி இரு குறள்கள் ஆண் மகனுக்கு மட்டுமே சொல்லட்டப்பட்டவை.
Deleteதன் மகன் அறிவாளி என்று பிறர் கூறித்தான் ஒருதாய் கேட்க வேண்டும் என்பதில்லை. அதைப் அறியும் வாய்ப்பு அவளுக்கு நேரடியாகவே பலதருணங்களில் வாய்க்கும்.
ஆனால், தன் மகன் வீரன் என்று பார்த்தறியும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டுவதில்லை.
ஏனென்றால் போர் நடைபெறும்போது பெண்கள் அங்கு அனுமதிக்கப்பட்டதில்லை என்பது பண்டைப்போர் ஒழுங்கு.
எனவே அவன் போர்க்களத்தில் ஆற்றிய பெருந்திறத்தைப் பிறர் கூறக் கேட்க மட்டுமே அவளால் முடியும்.
‘தன் மகனை ஈன்ற பொழுதைவிட எப்போது பெரிதுவப்பாள்?’ என்பதற்குப் பூங்கண் உத்திரையர் பாடிய.
“[co="red"] மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே [/co]“ (277)
மற்றும்,
காக்கைப்பாடினி நச்செள்ளையின் மிகப் பிரபலமான,
“[co="red"] நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
'மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே![/co] ”(278)
என்னும் இரண்டு புறநானூற்றுப் பாடல்களையும் சான்றுகாட்டுகிறேன். இவ்விரு இடங்களிலும் தாய், தன் மகன் அறிவாளி என்பதைக் கேட்டன்று; வீரன் என்றே ஈன்ற பொழுதில் பெரிதும் மகிழ்கிறாள்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் இடமாக நானறிந்தவரை மகன் வீரமரணம் அடைந்தான் எனக் கேட்பதுதான் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கால ஆய்வில், புறநானூறு திருக்குறளுக்கு முற்பட்டது என்பது தெளிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னோர் மொழி பொருளை பொன்னே போல் போற்றுவது என்பது நூல் யாக்கும் தமிழ் உத்திகளில் ஒன்று. எனவே புறநானூறில் சொல்லப்படும் பொருள் கொண்டு திருக்குறளை அணுகுதல் என்வரை சரியெனப்பட்டது,
எனவே மீண்டும்,
“சான்றோன் என்றால் அறிவாளி என்பதே சரி நம் விருப்பத்துக்கும் இடத்துக்கும் ஏதுவாகப்பொருள் படுத்துவது சரி அல்ல“ என்ற உங்களின் கருத்தின் பிற்பாதியை ஏற்று முற்பாதியை ஏற்க இயலாமல் இருக்கிறேன் . இவ்விடங்களில் தாங்கள் சான்றோன் என்பதற்கு அறிவாளி என்பதே சரியான பொருள் என்று சொல்வதற்கான சான்றுகள் இருப்பின் அறியத்தருக. அறிந்திட ஆவலாய் இருக்கிறேன்.
..........................................................................................தொடர்கிறேன்.......................
அடுத்து,
Delete“““““நவகண்டம் என்பதைப் படிக்கும் போது எத்தகைய அறிவற்ற மூட நம்பிக்கையான செயல் என்றே எனக்குத் தோன்றியது. இதுதான் தமிழ் மரபு என்றால் நான் வெட்கப்படுகிறேன் “““““““
ஆம். கடந்த காலத்தின் பல நிகழ்வுகளை நாம் இன்றை அறிவின் அனுபவத்தின் பண்பாட்டின் கண்கொண்டு பார்த்து ஏற்கவும் நிராகரிக்கவும் உரிமை பெற்றவர்களாய் இருக்கிறோம். இன்றைய சூழலில் தன்னை ஒருவன் நவகண்டம் செய்வது குறித்து நினைத்துப்பார்க்கவும் இயலாது.
ஆனால் இதுபோன்ற தலைப்பலிகளில் குறிப்பாக நவகண்டம் என்பதில் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னைச் சித்ரவதை செய்து கொண்டு, கொடூரமாய்க் கழுத்தறுத்துக் கொள்பவனது மனத்திண்மையைப் படித்தறிந்த போது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவன் தன்னைக் கொலை செய்வது, தீராத நோயினால் அல்ல! தோல்வியால் அல்ல! பிற வாழ்வியல் நெருக்கடிகளால் அல்ல. தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்காக! அவன் நம்பிக்கை சரியானதா மூடநம்பிக்கையா, முட்டாள்தனமா, அதனால் என்ன பயன் என்பதல்ல இங்கு பிராதனம். ஒரு இனத்திற்காக உயிர் ஒரு பொருட்டன்று என்று கொடுக்கத்துணியும் அந்த வீரம் என்னை மண்டியிடச் செய்கிறது. போர்ச்சூழல் நிறைந்த சூழலில் உயிர் எமக்கு வெல்லமன்று எனப் பேச்சளவில் மட்டும் நில்லாமல் செயல்படும் ஒவ்வொருவரது வீரமும் அந்தச் சமுதாயத்தில் போற்றப்பட வேண்டும் என நினைக்கிறேன் நான். எனவே வெட்கப்படவில்லை.
“யாருக்கு என்ன நடந்தாலும் சரி எனக்கும் என் வயிற்றுக்கும் கிடைத்தால் போதும்“ எனப் பெரிதும் மாறிப்போன தமிழ்மரபை நினைந்தே எனக்கு வெட்கமும் வேதனையும் ஏற்படுகிறது.
““ஜப்பானிய வீரர்கள் எந்த சலனமும் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்குப் பின்னும் முன் சென்றார்கள் என்றால் அது வீரமல்ல . ஒரு கட்டுக்குள் அடங்கி நடக்கும் குணமேபோர் வீரர்கள் மேலதிகாரிக்குக் கட்டுப்பட்டு நட்சக்க வேண்டும் என்பது விதி அதுவே இறக்கத் துணிவது என்று பொருள் கொள்வது சரியல்ல.“““““
இது புனைவாக இருக்கக் கூடும் என்று பதிவிலேயே சொல்லி இருக்கிறேன். வீரம் என்பது இறக்கத் துணிவதென்பதைவிட இறப்பைப் பொருட்படுத்தாதது என்று சொல்வது சரியாய் இருக்கும்.
““எல்லாத் தமிழ் மரபும் போற்றற்குரியது என்பதும் சரியல்ல.““““
அப்படிச் சொல்லித்திரிபவருள் நான் ஒருவனாய் இல்லை ஐயா.
““பதிவில் குறிப்பிடப் படும் தன்னையே ஒன்பது துண்டங்களாக்கிப் பின் கழுத்தை அறுப்பது என்பது சாத்தியமா என்பதையும் சிந்திக்க வேண்டும்““““
இந்த நவகண்டம் கொடுத்தல் தலைப்பலி இடுதல் குறித்த கல்வெட்டுகளும் சிற்பங்களும் தமிழகத்தின் வேறு சில இடங்களிலும் காணப்படுகின்றன.
வரலாற்றியலாளர்கள் கல்வெட்டுகளை இலக்கியங்களைக் காட்டிலும் நம்பத்தகுந்த மூலகங்களாகக் கொள்கின்றனர். நடக்காத ஒன்றை நடந்ததாய்ச் சொல்லி வெற்றுப் புனைவொன்றிற்கு நிவந்தங்கள் அளிப்பதாய்ச் சொன்னால் அக்காலத்தில் வாழ்ந்த அவ்வூர் மக்கள் இதனை ஏற்றிருப்பார்களா? சிந்திக்க வேண்டுகிறேன்.
“மாறுபட்ட கருத்துக்கும் இடமிருக்கும் என்று நம்புகிறேன் “
நிச்சயமாய் ஐயா. கருத்துகள் இங்கு மட்டுறுத்தப்படுவதில்லையே!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
இப்படியும் வீர மறவர்கள் வாழ்ந்திருப்பது அதிசயக்க வைக்கிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஐயா நான் உங்களைச் சற்றே சீண்டி விட்டேன் போலும் . நான் என் கருத்தாகத்தான் கூறினேனே தவிர சான்றெல்லாம் காட்டி நிலைப்படுத்தவில்லை/.வரலாற்றியலாளர்கள் கல்வெட்டுகளை இலக்கியங்களைக் காட்டிலும் நம்பத்தகுந்த மூலகங்களாகக் கொள்கின்றனர். நடக்காத ஒன்றை நடந்ததாய்ச் சொல்லி வெற்றுப் புனைவொன்றிற்கு நிவந்தங்கள் அளிப்பதாய்ச் சொன்னால் அக்காலத்தில் வாழ்ந்த அவ்வூர் மக்கள் இதனை ஏற்றிருப்பார்களா? சிந்திக்க வேண்டுகிறேன்./ கேள்வி அதல்ல இதுதான் தமிழ்மரபா என்றுதான் கேட்கிறேன் மேலும் சில நிகழ்வுகளை மிகைப் படுத்திக் கூறல் என்பதும் இருந்திருக்கலாம்பல சான்றுகள் காட்டி மறுமொழி எழுதியதற்கு நன்றி ஐயா.
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteசீண்டலென்று ஒன்றுமில்லை. தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்று நவகண்டம் இடுவோன் சிலைகள் காணப்படுகின்றன. இலக்கியத்திலும் இதற்குச் சான்றுகள் உண்டு.
எனவே பண்டைத் தமிழகத்தில் இவ்வழக்கம் இருந்திருக்கிறது.
எனவே இதனைத் தமிழ் மரபு என்று சொல்வேன்.
தலையை வெட்டுதலுக்குப் பதிலாய்த் தலையை மழித்து முடியைக் காணிக்கையாகக் கொடுத்தல் என்பதே கூட இம்மரபின் மென்மையான நீட்சியாய் இருக்கலாம்.
மானிடவியலாளர்கள் இது குறித்துச் சொல்வதைப் பார்க்க வேண்டும்.
தங்களின் மறுவருகைக்கு நன்றி.
wonderfull discussion.
ReplyDeleteதங்களின் தொடர்ச்சிக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஉங்கள் ஆழ்ந்த புலமை கண்டு ஆச்சர்யம் ஏற்படுகிறது. வாதத்தில் உங்களை வெல்வது கடினம்.
ReplyDeleteபுதுக்கோட்டையில் தங்களை சந்திக்க முடியாததில் ஏமாற்றம் அடைந்தேன்.
ஐயா வணக்கம்.
Deleteவலைத்தளத்தில் இயங்கும் பேராளுமைகளை நோக்க என் புலமை பெரிதில்ல.
வெற்றி தோல்வி என்பதைவிடத் தவறான ஒரு கருத்தை நான் சொல்லிவிடக் கூடாது , அப்படிச் சொல்லி இருப்பின் அது திருத்தப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
இதற்கு முன் அப்படித் திருத்தியும் இருக்கிறேன். இனியும் திருத்துவேன்.
இங்கு நான் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களை மட்டுமே முன்வைத்துப்போனேன் அவ்வளவே!
தங்களைச் சந்திக்காததில் எனக்கும் வருத்தம் உண்டு.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteஐயா
படிக்க படிக்க படிக்கத்தான் சொல்கிறது... மிக அற்புதமாக வரலாற்றை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. த.ம12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.
Delete
ReplyDeleteசான்றோன் என்ற சொல்லுக்கு,பண்பு நிறைந்தவன், மிக உயர்ந்த குணங்களுள்ள நல்லவன், நல்லபிள்ளை, வீரன், கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்தோன், கல்வி கேள்வியின் மிகுந்தவன், அறிவினாற் பெரியன், அறிவுடையான், பெரியோன், அறிவில் நிறைந்தோன் என பொருள் கொள்ளலாம் என படித்திருக்கிறேன். எனவே சான்றோன் என்பதற்கான பொருளை இடத்திற்கு தக்கபடி கொள்ளவேண்டும். எனவே இந்த இடத்தில் வீரன் என்றே பொருள் கொள்ளவேண்டும். திரு G.M.B ஐயா அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில் ஒரு புதிய பதிவையே படித்தது போல் இருந்தது. விளக்கங்கள் அருமை. வாழ்த்துக்கள்!
ஐயா வணக்கம்.
Deleteநான் விவாதங்களில் இருந்து விலக, அதைத் தவிர்க்கவே விரும்புகிறேன். இதோ எனது பதிவில் நான் இருப்பதாய்க் கருதும் நடுநிலைமை என் பின்னூட்டத்தில் காணாமல் போயிருக்கிறது. இது விவாதம் ஏற்படுத்திய தன்முனைப்பே!
இல்லை எனில் சான்றோன் என்றால் வீரன் என்ற பொருள்தான் சங்க இலக்கியத்தில் இருக்கிறது என்பதுபோல பின்னூட்டத்தில் பதிலிட்டிருக்க மாட்டேன். கற்றவன், அறிவாளி என்கிற பொருளிலும் சங்க இலக்கியத்திலேயே இச்சொல்லுக்குப் பொருள் உண்டு.
பதிவில்,
“சங்கத் தமிழில் ‘சான்றோன்’ என்னும் சொல் வீரன் என்ற பொருண்மையிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.“
என்று சொல்லிய நானே விவாதத்தில் சான்றோன் என்னும் சொல்லுக்கு வீரன் என்ற பொருளன்றி வேறு பொருள் இல்லை என்பதுபோலச் சொல்லி இருப்பது விவாதம் ஏற்படுத்திய பலவீனமே!
பலபொருள் இருக்கும் சொல்லின் பொருளை இடத்திற்குத் தக்கபடி பொருள்காண வேண்டும் என்கிற தங்களின் கருத்து முற்றிலும் உண்மை.
எனது நீண்ட பின்னூட்டங்களின் செறிவை உங்களின் இந்த ஒற்றை வரி தந்துவிட்டது.
அதற்கு நன்றி.
தாங்களைப் போன்றோர் அளிக்கும் ஊக்கத்திற்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதற்காய் மீண்டும் நன்றி.
அப்பாடி.... உடலை ஒன்பது பகுதிகளாக வெட்டிக் கொள்வதா..... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறதே.....
ReplyDeleteஇப்படியும் சில வீரர்கள் இருந்திருக்கிறார்கள் என நினைக்கும்போது அவர்கள் வீரத்தினை நினைத்து பெருமைப் படுவதா அல்லது அவர்கள் குடும்பத்தினரை நினைத்து பரிதாபப்படுவதா என்று புரியவில்லை....
நீங்கள் சொல்வது உண்மைதான்.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
வணக்கம். என்ன தான் நான் கணினி மாணவி என்றாலும் வரலாறு எனக்குப் பிடித்த பாடம் இல்லை. வாழ்க்கை. நன்றி அருமையாக, மனதில் நிற்கும் படி சொல்லி இருக்கிறீர்கள். எங்களுக்கும் புரிகிறது நன்றி. என் தளம் பார்க்க வாருங்கள்( நான் சிறியவள் என்ற அர்த்தத்தில் சொன்னேன்....http://sakthiinnisai.blogspot.in/2015/11/blog-post.html
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஅஞ்சா மறவரின் ஆண்மைத் திறங்கண்டேன்
நெஞ்சம் வணங்கும் நினைந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
ஐயா வணக்கம்.
Deleteநினைந்து தொடர்ந்து நெருப்புக் குறட்பா
வனைந்த கரத்திற்கென் வாழ்த்து
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் என் நன்றிகள்
வணக்கம் பாவலரே !
ReplyDeleteபுறநானூற்று வீரத்தின் புதல்வர்களாய் வாழ்ந்த கரும்புலிகளையும் ஏனைய மாவீரர்களையும் நினைக்க வைத்த பதிவு இது ...ஒருமுறை தேசியத் தலைவரிடம் அவரைச் சந்திக்க வந்த அவரின் விசுவாசி கேட்டார் போராளிகளுக்கு சயனைட் குப்பிகள் கொடுத்திருக்கிறீர்கள் அவர்கள் அதைக் கடித்து இறக்க விரும்புவார்களா என்று ! புன்னகையைப் பதிலாக்கிய தலைவர் ஒரு போராளியை அழைத்து சயனைட்டினை உட்கொள் என்று சொன்னார் மறுகணம் ஏன் எதற்கு என்ற கேள்விகள் இல்லாமல் அந்தப் போராளி சயனைட் அருந்தினான் கேள்வி கேட்டவர் மௌனமாகி விழிபிதுங்கி நின்றார் !
( சில நிகழ்வுகளை நினைவூட்டியமைக்கு நன்றி பாவலரே )
சிறந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வணக்கம் பாவலரே!
Deleteநீங்கள் சொல்வது உண்மைதான்.
ஆனால் தம் படைவீரரின் மனத்துணிவை, இறப்பைப் பொருட்டாகக் கருதாமையை மெய்ப்பிக்க ஒரு உயிரை பலிகொடுத்திருப்பார் தலைவர் என்பது ??????
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி பாவலரே!
வணக்கம் பாவலரே ! இலக்கியங்களைக் காலத்தின் கண்ணாடி என்று சொல்வார்கள் அந்தவகையில் சான்றோன் என்பதற்குத் தாங்கள் அளித்த விளக்கம் மிகப் பொருத்தம் ஆனதே ! ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவன் தவறு செய்த சந்தர்ப்பம் சூழ்நிலைகளைக் கவனத்தில் கொள்ளாது காலங்கடந்து தற்போதைய சூழ்நிலைக்கும் சமூகத்தின் ஒப்பாரிக்கும் ஏற்ப தண்டனை வழங்குவது போலாகின்றது ...பரிமேலழகரின் விளக்கவுரை அதனையே தூக்கிவைத்து ஆடும் நம் அறிவாளிகள் பார்வையில் மூடநம்பிக்கை என்னும் முலாம் நன்றாகவே பூசப்பட்டுள்ளது !
ReplyDeleteதங்கள் பதிவில் பெறாத தெளிவினை கருத்தினில் கண்டேன் நன்றி
வாழ்க வளமுடன்
வணக்கம்.
Deleteபரிமேலகர் உரையை ரசிப்பதற்குமான இடங்கள் திருக்குறளில் நிறைய இருக்கின்றன பாவலரே!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதுதானே அறிவு?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி