படிக்கும்
காலத்தில் எனக்கொரு நண்பன் இருந்தான். பெயர் சசிகுமார். ஆறாம் வகுப்பில் அறிமுகமானவன். நான்
முட்டாள்தனமாக என்ன சொன்னாலும் செய்தாலும் என்னை விரும்பி எப்பொழுதுமே வெறுத்திடாத மனது அவனுக்கு.
அதனாலோ என்னமோ எங்கள் நட்பு நீடித்திருந்தது.
உலகம் என்பதைப் புத்தகத்தில் நான் தேடிக்கொண்டிருக்க, பரந்த இந்த உலகினைத் தன் அனுபவங்களால் அளந்த தன் பார்வையை அந்த வயதிலேயே மிக எளிதாக முன்வைத்துச் செல்பவன் அவன்.
பள்ளியின்
சகமாணவர்களிடத்து அவனுக்கிருக்கும் செல்வாக்கு அபரிமிதமானது. பட்டம்
விடுவதில் இருந்து, பம்பரம் சுற்றுவதுவரை அவனை அவனது சம வயதினர் யாரும் நெருங்க முடியாது. காட்டா
பெல்ட் என்னும் கவணில் கல்வைத்துக் குறிபார்த்து அடிக்கும் போட்டி நம் விளையாட்டில் சேர்க்கப்பட்டிருக்குமானால் முதல் பரிசிற்கு அவனது பெயர்தான் வருமெனக் கண்ணை மூடிக்கொண்டு பந்தயம் கட்டுவேன்.
அவன்
ஜியோமிதிப் பெட்டியில் ஒரு மாய உலகம் இருக்கும். மீன் பிடிக்கத் தேவையான விதவிதமான
தூண்டில் முள் , தக்கை, மாஞ்சா நூல் செய்யத் தேவையான மயில்துத்தம், சிறுகத்தி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருட்கள்.
சில நேரம் அவன் கொண்டுவரும் பொருளின் பெயரும் பயன்பாடும் அவனுக்கு மட்டுமே தெரியும்.
ஒருநாள்
மைக்குப்பியில் சின்னஞ்சிறு ஓடைமீன்கள் சிலவற்றை அடைத்து வந்திருந்தான். பாட இடைவேளைகளில்
எல்லாம் அவனைச் சுற்றிச் சிறு கூட்டம் கூடி நிற்க அதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தான்.
எங்கே
இதெல்லாம் கிடைக்கும் எப்படி இதையெல்லாம் பிடிக்கிறான் என்பதற்கான நுணுக்கங்களை அவன் யாரிடத்தும் சொல்வதில்லை. நான் கேட்டால் சொல்வானோ மாட்டானோ.,, நான் அதை அறிய விரும்பியதும் இல்லை.
ஒரு நாள்
வகுப்பில் அவன் கால்சாராய்ப் பையில் துருத்திக்கொண்டிருந்த ஒன்றைத் தொட்டுப்பார்க்கச்
சொன்னான். கைக்குட்டையை மடித்து வைத்திருக்கிறானோ என நினைத்து, ‘கைக்குட்டையா சசி?’
என்றேன். மெதுவாகப் பைக்குள் கையைவிட்டு எடுத்துக் காட்டினான் அது உயிருடன் இருந்த ஒரு சிறு குருவி..!
இறக்கைகளைக்
காலோடு சேர்த்து லாவகமாகப் பிடித்திருந்தான்.
‘நான்
தொடலாமா சசி?’ என்றேன்.
‘இந்தா
பிடி‘ என என்முன் நீட்டினான்.
எனக்குப்
பயமாய் இருந்தது.
‘இல்லை
இல்லை வேண்டாம்’ என்றவாறே சட்டெனக் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டேன்.
அவன்
மீண்டும் தன் கால்சாராய்க்குள் சுருட்டப்பட்ட காகிதத்தை வைப்பதுபோல் அதனை ஒளித்து வைத்தான்.
‘இதை
எப்படிப் பிடித்தாய் சசி?’ என்றேன்.
அதற்குள்
அவனைச் சுற்றி, ‘ டேய்…எங்களுக்கும் காமிடா ’ என்றபடி ஒரு கூட்டம் கூடிவிட்டது.
‘அதெல்லாம்
ரகசியம் நீ விடுமுறையில் வீட்டிற்குவா சொல்கிறேன்’ என்றபடியே தன் காட்சிப் பொருளை அனைவரின் பார்வைக்கும் கடைபரப்பினான் சசி.
நான்
வகுப்பறைக்குத் திரும்பினேன். எனக்கு
ஆர்வம் தாங்க முடியவில்லை. எப்படி
இதனை உயிரோடு பிடித்திருப்பான்? கவணில்
அடித்திருந்தால் இது செத்தே போயிருக்கும். காயமாவது
பட்டிருக்கும். ஆனால் இது உயிரோடு எந்தக்காயமும் இன்றி இருக்கிறது.
எவ்வளவு
யோசித்தும் என்னால் விடைகாண முடியவில்லை.
அவன்
வீட்டிற்கு அந்த வாரச் சனிக்கிழமை வருவதாகவும் என்னை ஏமாற்றக் கூடாது எனக்கு நீ அதை
எப்படிப் பிடித்தாய் என்று சொல்ல வேண்டுமெனவும் அவனிடம் சொல்லிவிட்டு அந்தநாளுக்குக் காத்திருந்தேன்.
என்னை
அழைத்துப் போக மிதிவண்டியில் அன்று காலையே வந்துவிட்டான் சசி. என்னைப்
பின்னால் வைத்துக் கொண்டு புயல்வேகப் பயணம். அவனது
மிதிவண்டி சாகசங்களில் நான் பலியாகிவிடுவேனோ என்று அஞ்சுமளவிற்கு வேகம்.
கைகள்
இரண்டையும் விட்டுவிட்டுப் பின்னால் திரும்பி என்னுடன் பேசியபடியே மிதிவண்டியை அதே
வேகத்தில் முன்செலுத்திக் கொண்டிருந்தால் பிறகு நான் என்ன நினைக்க..?
அவன்
வீட்டிற்குப் பின்னால் இருந்த தோப்பினை அடைந்தபோதுதான் எனக்கு உயிர் மீண்டது.
நிறைய
பறவைகள் அங்கிருந்த மரங்களில் இருந்தன. எப்படி
பிடிக்கப் போகிறான்….. இதில் எந்தப் பறவை இவன் கையில் இன்று சிக்கப் போகிறது என்றே
என் எண்ணம் இருந்தது.
நேராகச்
சென்று அங்கிருந்த குடிசையின் வாசலில் இருந்த ஒரு பெரிய கூடையை எடுத்துக் கொண்டான். சற்று
வெளிச்சம் விழும்பகுதியில் அதைக் கவிழ்த்தினான். அதனுள்
கொஞ்சம் தானியங்களைத் தூவினான்.
பின்னர்
, சிற்று நீளமான குச்சியொன்றை அக்கூடையின் வட்ட விளிம்பில் முட்டுக் கொடுத்து கவிழ்ந்த
கூடையைச் சற்று உயர்த்தினான். அந்தக் குச்சியின் நடுவே ஒரு நூலைக்கட்டி அதன் மறுமுனையை நாங்கள் நின்ற மரத்தடிவரையில் நீட்டி வைத்தான்.
என்னைப்
பார்த்துப் புன்னகைத்தபடி ‘வேட்டை தொடங்கிவிட்டது’ என்றான்.
எனக்குக்
கொஞ்சம்கொஞ்சமாய்ப் புரியத் தொடங்கியது.
‘இனிமேல்
இடத்தைவிட்டு அசையாமல் எதுவும் பேசாமல் இருக்க
வேண்டும்’ என்றான். ‘ஜெயராமன் சாரின் வகுப்பறையில் இருப்பதுபோலவா?’ என்றேன் மெதுவாக.
அதை அவன் ரசிக்க வில்லை.
நாங்கள் இருந்த இடத்தில் இருந்து நீண்ட நூலின் ஒரு
முனை அவனது கையிலும் மறுமுனை கூடையைச் சற்று
உயர்த்தித்தாங்கிக் கொண்டிருந்த குச்சியிலும் கட்டப்பட்டிருந்தது.
நேரம் போய்க்கொண்டே இருந்தது.
கிளைகளில்
இருந்த பறவைகள் எவையும் இதைக் கண்டுகொண்டதாகக் காணோம்.
நான்
சசியின் கையைக் கிள்ளிக்கொண்டே இருந்தேன்.
அவன்
கூடையைப் பார்த்தவாறே என் கையை உதறித்தள்ளி
வாயில் விரல் வைத்து பேசாமல் இருக்கும்படிச் செய்கை செய்து கொண்டே இருந்தான்.
இன்னும்
காத்திருக்க முடியாது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நேரம் ஒரு சிட்டுக்குருவி
கிளையைவிட்டுக் கீழிறங்கி அங்கும் இங்கும் தலையைத் திருப்பியபடி கூடைக்குச் சற்றுத்
தொலைவில் வந்தமர்ந்தது. அதன் தலைதிருப்பலில்
எங்களையும் பார்த்தது போலத்தான் இருந்தது. இவ்வளவு தூரத்தில் இருந்து இவர்கள் நம்மைப் பிடிக்க எழுந்தாலே பறந்து போய்விட முடியும்
என்பது அப்போது அதன் கணிப்பாக இருந்திருக்கலாம்.
நான்
சசியின் முகத்தைப் பார்த்தேன். வேட்டைக்கான இரையைக் கூர்ந்து நோக்கும் புலியின் பார்வையை
அவன் அப்போது பெற்றிருந்ததாகத் தோன்றியது. அவன் கண்களின் கூர்மை நான் அதுவரை
காணாதது. நானும் என் முகத்தை அவனைப் போல வைத்துக் கொள்ள முயற்சித்தேன். முடியவில்லை
என்பது எனக்கே தெரிந்தது.
குருவி
அங்குமிங்கும் பார்த்துக் கத்திக்கொண்டிருந்ததே தவிர கூடையை நெருங்கவில்லை. கொஞ்சம்
நேரம் கழித்தது இன்னொரு குருவி கீழிறங்கியது. அதன் துணையாக இருக்க வேண்டும்.
முதல்
குருவி தாவியபடியே, தரையில் கொத்தத்தொடங்கியது.
என் இதயத்
துடிப்பு என்னால் கேட்க முடிந்தது.
அவனுக்கும் கேட்குமா என்று நினைத்தேன்.
முதற்குருவி
மெல்ல மெல்ல கூடையை நெருங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதனைச் தொடர்ந்து இரண்டாவது
குருவியும் கொத்திக்கொண்டே கூடையை நெருங்கின்று.
சசி தயாரானான்.
நெகிழந்திருந்த
நூலை மெல்ல இழுத்து விறைப்பாக்கினான்.
ஒரு குருவி
கூடையின் நிமிர்த்தப்பட்ட குச்சியால் ஏற்பட்ட இடைவெளியூடே கொட்டப்பட்டிருந்த இரைக்கண்ணிக்குள்
நுழைந்துவிட்டிருந்தது.
இந்தக்
கணம் கயிறு இழுபட்டுக் கூடை கவிழப்போகிறது எனச் சசியைக் கவனித்தேன்
ஆனால்
அவனிடம் எந்தச் சலனமும் இல்லை.
ஒருவேளை
அடுத்த குருவியும் உள்ளே வரட்டும் என்று காத்துக்
கொண்டிருக்கிறானோ..?
நான் என் முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்களை மட்டுமே
திருப்பி சசியைப் பார்த்தேன்.
அவன்
உலகம் கவிழ்க்கப்பட்ட கூடைக்குள் இருகுருவிகளோடு இருந்தது தெரிந்தது. குச்சியில் கட்டப்பட்டிருக்கும் நூல், அவனது சிறு விரல் அசைவிற்கெனக் காத்திருந்தது.
இழக்கப்போகும் சுதந்திரத்தை அறியாமல் இன்னொரு குருவியும் மெல்ல கூடைக்குள் நுழைந்தது.
என் பதற்றம்
கூடிற்று.
( வேட்டை
தொடரும் )
பட உதவி- நன்றி http://assets.inhabitat.com/
அடுத்து என்ன நடந்தது என மிக ஆவலாக உள்ளது சகோ..
ReplyDeleteவாருங்கள் சகோ.
Deleteதங்களது முதல் பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சியும் வருகைக்கு நன்றியும்.
தொடர்கிறேன்.
இப்படியும் குருவி வேட்டையா.? சொல்லிச் செல்லும் விதம் நன்றாக இருக்கிறது.ஒரு மாற்றத்துக்கு சங்ககாலத் தமிழ் இல்லை.ஹையா...!
ReplyDeleteதங்களை ஏமாற்றுவதற்கு வருந்துகிறேன்,
Deleteஇத்தொடர் இன்னும் முடியவில்லை ஐயா.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வேட்டையாளருடன் இருந்த அனுபவத்தை உணர்ந்தேன் நானும்.
ReplyDeleteமூச்சை இழுத்துப்பிடித்து கூடைக்குள் சிக்கும் பறவையின் நிலையில் இப்போது மாறிவிட்டேன். இந்த முறை தங்கள் நண்பருக்கு பறவை சிக்காமல் இருந்திருக்க வேண்டும் என்று ஏனோ மனம் நினைக்கிறது.
பறவைகளை அதன் போக்கில் விட்டு ரசிக்க வேண்டும் என்கிற எண்ணமே ஒவ்வொரு நிமிடமும் இருந்தது.
ஆசிரியரே திகில் கதையும் தாங்கள் எழுதலாம் போல.....பாருங்களேன் தொடரும் என்று முடித்தவுடன் அடுத்த பகிர்வு வரை எனக்கு அதே படபடப்பு நீடிக்கும் போல.
வாருங்கள் கவிஞரே..!
Deleteஉங்களின் மனம் நினைப்பதுபோல நடந்தால் நல்லதே..!
திகில் கதை..!!!!
இப்படியே உசுப்பேற்றி என்னை ஒரு வழியாக்காமல் விடமாட்டீர்கள் போல :)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க :)
பதற்றம் எங்களுக்கும்...
ReplyDelete:)
Deleteநன்றி ஐயா.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவேட்டையாடு விளையாடு விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையைப் போடு நீ வெற்றியென்னும் கடலிலாடு
நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே தீமை வந்ததில்லை
தெரிந்தால் துன்பமில்லை
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு ...
குச்சியில் கட்டப்பட்டிருக்கும் நூல், அவனது சிறு விரல் அசைவிற்கெனக் காத்திருந்தது.
என் பதற்றமும் கூடிற்று.
நன்றி.
த.ம. 4
ஐயா வணக்கம்.
Deleteவேட்டையாடி விளையாடியதோ விருப்பம் போல உறவாடியதோ இல்லையே.. நீங்கள் அறியாததா? ;)
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
குருவி சிக்குமா :)
ReplyDeleteஇது மாதிரி வேட்டைகளில் என் தம்பிக்கு ஆர்வம் இருந்தது ,எனக்கு ஏனோ அது பிடிக்காது !
சிக்கினால் என்ன செய்வதாக உத்தேசம் பகவானே?
Delete“““““““““““““““இது மாதிரி வேட்டைகளில் என் தம்பிக்கு ஆர்வம் இருந்தது ,எனக்கு ஏனோ அது பிடிக்காது !““““““““““““““
“ அண்ணனுக்கு ஒட்டாது தம்பிக்கு ஒட்டும் என்பதற்கு இப்படி ஒரு பொருள் இருப்பது இன்றுதான் தெரிந்தது . :)
நன்றி பகவானே.
குருவி வேட்டை
ReplyDeleteஒவ்வொரு வார்த்தையிலும்
விறு விறுப்பை
பதட்டத்தைக் கூட்டிக் கொண்டே செல்கிறீர்கள் நண்பரே
நன்றி
தம +1
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தையாரே!
Deleteவணக்கம் அய்யா,
ReplyDeleteஎந்தத் துறையையும் தாங்கள் விடுவதாக இல்லை,
நான் முட்டாள்தனமாக என்ன சொன்னாலும் செய்தாலும் என்னை விரும்பி எப்பொழுதுமே வெறுத்திடாத மனது அவனுக்கு.
ஆம் உண்மையான அன்பு என்ன சொன்னாலும் பெரிதுபடுத்தாது,
குருவி வேட்டை அருமையாக போகுது, ஆனால் மனம் ஏனோ கனத்து கிடக்குது, தங்கள் நண்பருக்கு குருவி கிடைக்காமல் போகனும்,,,,,,,
நான் என் முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்களை மட்டுமே திருப்பி சசியைப் பார்த்தேன்.
நல்ல நடை, தங்கள் வேட்டை எனும் நாவல் அருமையாக செல்கிறது.
வாழ்த்துக்கள்.
நன்றி.
வணக்கம் பேராசியரே!
Deleteஇணையத்தைப் பொருத்தவரை என் துறை உங்கள் துறைதான்.
தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்.
அய்யா வணக்கம்,
Deleteதாங்கள் இங்கும் பாடல் சொல்வீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை என் நினைப்பு தவறாகக் கூட இருக்கலாம், காத்திருக்கிறேன்.
நன்றி.
அய்யா வணக்கம்,
Deleteதாங்கள் இங்கும் பாடல் சொல்வீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை என் நினைப்பு தவறாகக் கூட இருக்கலாம், காத்திருக்கிறேன்.
நன்றி.
ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் ரசிப்பதோடு மட்டுமல்லாமல். நாமும் ரசிக்கும் படியாக இத்தனை அழகாக எழுத யாருக்கு வரும். என்ன சொல்லி பாராட்டுவது இன்னும் எத்தனை வித்தை ஐயா தெரியும் உங்களுக்கு. சொல்ல வார்த்தையே இல்லாமல் மயங்கி விடுகிறது மனம். உங்கள் வலையே தஞ்சம் என்று ஆகிவிடுகிறேது இப்போ எல்லாம். மேலும் என்ன அடுத்து வரும் என்று ஆவல் பிறக்கிறது. நன்றி நன்றி ! மேலும் தொடர வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteதங்களுடைய பாராட்டிற்கு உரியதாக இந்தப் பதிவில் அப்படி என்ன சொன்னேன் எனத் தெரியவில்லை. இது ஒரு அனுபவம் அவ்வளவே!
Deleteஉங்களைப் போன்றவர்களின் அன்பிற்கும் ஆர்வத்திற்கும் நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
நன்றி அம்மா.
எனக்கு குருவியைப் பிடிப்பதில் உடன்பாடில்லை எனினும். என்னவொரு எழுத்து நடை என்று வியக்கிறேன்
ReplyDeleteதங்களது வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் நன்றி திரு தமிழானவன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
சிறப்பாகசொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு. ரூபன்.
Deleteபதற்றத்தை தொற்றிக்கொள்ள வைத்துவிட்டீர்கள்! இப்படி சில நண்பர்களோடு எனக்கும் பழக்கம் உண்டு.
ReplyDeleteஆம் அது ஒரு இனிமையான இனிக்காண முடியாத கனவுதான்.
Deleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
நீங்கள் வேட்டையாடக் கிளம்பி எங்களையும் பதற்றத்தில் ஈடுபடுத்திவிட்டீர்களே.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.
Deleteஎனக்கு ஏமாற்றம் இல்லை மகிழ்ச்சியே, பின்னூட்டத்தில் தெரியவில்லையா.?
ReplyDeleteவணக்கம்.
Delete“““““ஒரு மாற்றத்துக்கு சங்ககாலத் தமிழ் இல்லை.“““““
என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தது கருதிச் சொல்லப்பட்டது அது ஐயா.
அதனால்தான் பதிவு இன்னும் முடியவில்லை என்று சொன்னேன்.
பிற்பாதியும் படித்தால் நான் கூறியது விளங்கும்.
தொடர்கின்றமைக்கு நன்றி.
வணக்கம் ஐயா!
ReplyDeleteவேட்டை ஆடுவீர்கள் என எனக்கும் தெரியும்..:)
அற்புதமாய் இருக்கிறது உங்கள் நடை..:))
தொடருங்கள்! வாழ்த்துக்கள் ஐயா!
நான் வேட்டை ஆடியதில்லை சகோ.
Deleteதங்களின் பாராட்டிற்கும் வாழ்த்தினுக்கும் நன்றி.
ReplyDeleteஎனக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. காத்திருக்கிறேன். நடந்ததை அறிய!
வருகைக்கும் கருத்திற்கும் தொடர்கின்றமைக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteபெரியவர்கள் திட்டினாலும் சிறுவயதில் இது போல் குருவிக்குஞ்சுகளைப் பிடிப்பதில் அலாதி இன்பம் சிலருக்கு. பறவையியலாளர் சலீம் அலி கூடச் சிறுவயதில் சிட்டுக்குருவிகளைச் சுட்டுக்கொன்றிருக்கிறாராம். எப்போதோ நடந்து முடிந்த சம்பவம் என்றாலும் கண்ணெதிரே யாரோ குருவிக்குஞ்சைப் பிடிப்பது போல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது உங்கள் நடை. தொடரை வாசிக்க ஆவலாயிருக்கிறேன்.
ReplyDeleteவணக்கம் சகோ.
Deleteஆம் சலீம் அலி குறித்துப் படித்திருக்கிறேன். அவர் குடும்பமே வேட்டையாடுதலைப் பொழுதுபோக்காகக் கொண்ட குடும்பம்.
சிறு வயதில் எனக்குப் பறவைகளை வளர்க்கும் ஆசை இருந்தது.
பின்பு அது எவ்வளவு அபத்தமான சிந்தனை என்று தெரிந்தது.
தங்களின் வருகைக்கும் தொடர்கின்றமைக்கும் நன்றிகள்.
உங்களுடன் நாங்களும் சேர்ந்து குருவி பிடிக்கும் ஆர்வத்தில் உங்களைப் போலவே சசி என்ன செய்தார் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றோம்.
ReplyDeleteசிறு வயதில் தும்பி, வண்ணத்துப் பூச்சி, வெட்டுக்கிளி இவைகளைப் பிடித்து விளையாடியது உண்டு. தீப்பெட்டிக்குள் வெட்டுக் கிளி வைத்து வளர்த்தது உண்டு. தும்பி, வண்ணத்துப் பூச்சி எல்லாம் உடனே பறக்க விட்டுவிடுவோம்.
அழகான விவரணம்..உங்கள் மொழியில்......
நல்லவேளை இந்தப் பதிவின் தொடர்ச்சியில் வர இருக்கும் திருப்பத்தை உங்கள் அனுபவமாகச் சொல்லிவிடப் போகிறீர்களோ என்று ஒருகணம் நினைத்துப்பதறிவிட்டேன். :)
Deleteசிறு வயது அனுபவங்கள் பின்பு வாசிப்பின் மூலம் மீட்டெடுக்கப்பட்டதைப் பகிர்ந்தேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
அடுத்து என்ன நடந்தது என்பதை அறியும் ஆவலுடன் நானும் உங்களுடன் நூல் பிடித்து நிற்கிறேன் ஐயா...
ReplyDeleteநன்றி ஐயா.
Delete
ReplyDeleteவணக்கம்!
குருவியின் வேட்டையைக் கூறிய வண்ணம்
அருவியின் போக்கில் அளித்தீர்! - பெருகிவரும்
ஊக்கமுடன் செல்கின்றேன் உம்மின் தொடர்காணப்
பாக்களுடன் நன்றி பகர்ந்து!
ஐயா வணக்கம்.
Deleteபகர்ந்து வரும்அன்பு பாடிமலர்க் காடு
முகர்ந்து வருதும்பி நானாய்ச் - சிகரத்தைப்
பார்த்துவிழி வேர்த்திருக்கு மாத்திரத்தி லும்கவிதை
ஆர்த்தெடுக்கு மென்னையுமே அங்கு!
நன்றி ஐயா.
ஆற்றல் மிகுந்த எழுத்தாளர் ஒருவரின் தேர்ந்த கதைசொல்லும் நுட்பம் தங்களிடம் இருக்கிறது ஐயா. சிறுவர்கள் இருவர் சிட்டுக்குருவி பிடிக்கும் கதையை இவ்......வளவு படபடப்பாக வேறு யாராலும் எழுத முடியுமா எனத் தெரியவில்லை. இனியும் தாங்கள் இப்படி வலைப்பூவில் மட்டும் எழுதிக் கொண்டிருக்காமல் சிற்றிதழ்கள், வார இதழ்கள் எனத் தங்கள் எல்லையைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுபடுத்திக் கொள்ள வேண்டுகிறேன்!
ReplyDeleteகூடைக்குள் செல்லும் குருவிகளை விரட்டிவிட கையும் மனமும் படபடக்கின்றன. உங்கள் அனுபவத்தில் அன்று கண்ட பதற்றம் இன்றைய எழுத்தில் ஊடுருவி.. வாசிக்கும் எம்மையும் தொற்றிக்கொண்டுவிட்டது. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பதைப்புடன்...
ReplyDelete