பறவை வேட்டை தொடர்ச்சி..தங்களுக்கு
வரப்போகும் எந்த ஆபத்தையும் உணராமல் இரு குருவிகளும் கூடைக்குக் கீழே இறைக்கப்பட்டிருந்த
தானியப் பரப்பைக் கொத்திக் கொண்டிருந்தன. ‘இன்னும்
எதற்காக இவன் காத்திருக்கிறான்?’ மெதுவாக
அவன் கைகளில் இடித்தேன். அவன்
சிலையைப் போல அசையாமல் இருந்தான்.
‘இன்னும்
எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கான்…..‘ பொறுமை இல்லை என்னிடம். ‘நூலை இழுடா’
என்றபடி வேகமாக அவன் கையில் இடித்தேன்.
குருவிகளில் ஒன்று கொத்துவதை நிறுத்தி அசையும் திசை நோக்கிப் பார்த்தவாறே பறக்க ஆயத்தமாவதுபோலத் தெரிந்தது.
‘ச்சே’
என்றவாறே சசி நூலைச் சுண்டினான்.
கூடையின்
விளிம்பை முட்டுக் கொடுத்திருந்த குச்சி நழுவக் கூடை ‘டொப்’ என்ற சத்தத்துடன் குருவிகளின்
மேல் மூடியது.
வினாடிக்கும் குறைவான நேரம்தான். அதற்குள்
கூடையின் விளிம்பில் நின்று எங்களைப் பார்த்த குருவி சுதாரித்துக் கிடைத்த இடைவெளியில்
சட்டெனப் பறந்திருந்தது.
“ஒண்ணு
போச்சு” என்றவாறே “அப்படி என்னடா உனக்கு அவசரம்?” என்றான் சசி.
அது விளிம்பில்
இருப்பதால்தான் அவன் இவ்வளவு நேரம் காத்திருந்திருக்கிறான் என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது.
எதுவுமே
நடக்காததுபோல நான் மௌனமாய் இருந்தேன.
தப்பித்த
குருவி அருகில் இருந்த மரத்தில் அமர்ந்த படி ‘கீச் கீச்’ என்று கத்திக்கொண்டிருந்தது.
“நீ கொஞ்சம்
அவசரப்படாம இருந்தா இரண்டையும் பிடிச்சிருக்கலாம்” என்றான் சசி.
“உள்ள
இருக்கிற குருவிய எடுத்திட்டு திரும்பவும் கூடையக் கொஞ்சம் தூக்கி வைப்போம்“ என்றேன்
நான்.
“ஆமாமாம்.
அது உன்னைய மாதிரி முட்டாள் பாரு ….திரும்ப வந்து மாட்டிக்கிறதுக்கு” என்று சொல்லியபடியே
சாக்குப் பைகளை விரித்துத் தைத்திருந்த போர்வை போன்ற ஒன்றைத் தன்மேல் போர்த்திக் கொண்டு
கூடைக்கு அருகில் சென்று சிறு இடைவெளி வழியே கையை நுழைத்துச் சிக்கிய குருவியை எடுத்து வந்தான்.
மனிதக்
கைகளை ஸ்பரிசித்தறியாத உடல், வாய்களைத் திறந்து மூடி அது நடுங்கிக் கொண்டிருந்ததுபோலத்
தெரிந்தது… அதன் துணைக்குருவி கத்திக் கொண்டே இருந்தது.
பிடித்த குருவியைத் திருப்பிப்பார்த்தபடி “பொட்டைடா“
என்றான் சசி.
பிடிபட்ட
குருவியைத் தூக்கிக் கிளையில் அமர்ந்திருந்த ஆண்குருவியிடம் காட்டினான்.
இப்போது
பிடிபட்டிருந்ததும் சேர்ந்து கத்தத் தொடங்கியது.
அதன்
குரல் இயல்பாய் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.
எனக்குக்
குருவியைப் பிடிக்கும் வரை இருந்த சுவாரசியம் இப்போது குறைந்து விட்டிருந்தது.
“என்னடா
செய்யப்போறே?” என்றேன் அவனிடம்.
“ நீ
கொண்டுபோய் வளக்கிறியா இதை “ என்றான்.
எனக்கும்
ஆசைதான். ஆனால் அதைக் காட்டாமல், “ நான் வளக்க முடியுமா?“ என்றேன்.
”ஏன்
நீ வளத்தா வளராதா? இரு கூண்டுல போட்டுத்தரேன் ” என்றபடி
அவன்
வீட்டில் முட்டைகளை வைத்திருந்த பந்து போன்ற
கம்பிக் கூடைக்குள் இருந்த முட்டைகளை எல்லாம் எடுத்து வெளியே வைத்துவிட்டு அதற்குள் அந்தச்
சிட்டுக்குருவியை வைத்து மூடினான். கம்பிகளின் வழியே கூண்டின் குறுகலான உட்புறத்தில்
சிறகசைத்துக் குருவி வான் செல்ல தனக்குத் தடையாகக் கம்பிகள் இருக்கின்றன என்பதை அறியாமல் பறக்க முயன்று அதன் மேல் மோதுவதும் வீழ்வதுமாக இருந்தது தெரிந்தது.
“சரி
உன்னைய வீட்ல விட்டிடுறேன்“ என்றபடி மிதிவண்டியின் கைப்பிடியில் குருவிக் கூடையை மாட்டியபடி என்னை
வைத்து என் வீடு நோக்கி மிதிக்க ஆரம்பித்தான் சசி.
சாலையின்
இருமருங்கிலும் உள்ளவர்கள் எங்களையே பார்ப்பதுபோல எனக்குத் தோன்றியது. வீட்டுவாசலில்
என்னை இறக்கிவிட்டு “தீனி போடு… தண்ணி வை“ என்று சொல்லிச் சசி பறந்துவிட்டான்.
வீட்டில்
நுழைந்ததும் ‘அம்மை அம்மை‘ எனக் கத்திக்கொண்டே வேகமாக அடுப்படிக்கு ஓடினேன். அம்மை ‘என்னடா’ என்றபடியே என் கையிலிருந்த கூடையைப்
பார்த்தார்கள்.
“என்னடா
இது எங்க இருந்து?”
“சசி
பிடிச்சுக் குடுத்தாம்மா!”
”அவன்
எங்க?”
“அவன்
போயிட்டான்.”
“ டேய்
இது பாவம்டா
முதல்ல
தொறந்து விடு“
அம்மை சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப்பா உள்ளே நுழைந்தார்.
“அப்பா
இத நான் வளக்கிறேன்பா“
அப்பா
ஒன்றுமே பேசாமல் என் கையில் இருந்த கூண்டை வாங்கி மெல்ல வாசலுக்குச் சென்றார். கூடையின்
மேல் மூடியைத் திறந்து குருவியைப் பறக்கவிட்டார்.
சசியின்
வெற்றிச் சிறைபிடிப்புக்கு ஒற்றைநொடியில் சுதந்திரம்.
‘அவனது
ஒட்டு மொத்த உழைப்பையும் இப்படி வீணடித்துவிட்டாரே அப்பா.’ நினைக்க நினைக்க என்னால்
அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“ஏம்பா
பறக்கவிட்டீங்க. நான் நல்லபடியா தீனிபோட்டு பத்திரமா வளர்த்திருப்பேனில்ல. வேண்டாமின்னா
அவன்கிட்டயாவது திரும்பக் கொடுத்திருப்பேனில்ல” என்று கேட்டேன் விம்மலினூடே!
அப்பா
சொன்னார், அது உன்னோடயோ அவனோடயோ விளையாட்டுப் பொருளில்லை. ஓர் உயிர். அது எங்கே இருக்க
வேண்டும் எப்படி வாழ வேண்டும் எதை சாப்பிட வேண்டுமென்று எல்லாம் தீர்மானிக்க நீங்க
யார். அவன் வரட்டும் நான் பேசிக்கிறேன்.“ அதற்கு மேல் அவர் ஒன்றும் பேசவில்லை.
அன்று
அப்பாவின்மேல் எனக்குக் கடுங்கோபம் இருந்தது. ஞாயிறு விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கிய போது, என்ன சொல்வானோ என்று நினைத்துச் சசியிடம் தயங்கித் தயங்கி
இந்த விஷயத்தைச் சொன்னேன்.
“அதைவிடுறா..
.இதைப் பார்” என்று அவன் கால்சாராய்க்குள் கையை நுழைத்தான். ஒருவேளை தப்பியோடிய அந்த அந்த ஆண்குருவியைப் பிடித்திருப்பானோ என்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க
அவன் கையில் இரட்டைக்கிளி தீப்பட்டி ஒன்று இருந்தது.
“டேய்
என்னடா இந்தப் பழக்கம் எப்ப இருந்து..?“ என்று நான் கேட்கத் தொடங்கியதும் “உஷ்…யாருகிட்டயும்
சொல்லிடாதே…“என்றபடி அந்தத் தீப்பட்டியின் உள்பெட்டியைக் கொஞ்சமாய்த் தள்ளினான், அதில்
பச்சை மஞ்சள் என ஒளி வீசி ஒரு பொன்வண்டு…!
“டேய்……..இதை
எங்கிருந்து எப்படிடா………“ எனக் கேட்கத் தொடங்கிய என் கேள்வியை அப்படியே விழுங்கி என் வகுப்பறைக்குச்
செல்லத் தொடங்கினேன். அவனைச் சுற்றி மாணவர் கூட்டம் ‘எங்க காமி எனக்கும் காமிடா’ என்றபடி
கூடத்தொடங்கி இருப்பது தெரிந்தது.
வகுப்பறையில்
யாருமில்லை. இருக்கையில் அமர்ந்து தலையுயர்த்தியபோது, சன்னலில் ஒற்றைக் குருவி வந்து
அமர்ந்து மேலும் கீழும் தலையை ஆட்டி என்னைப் பார்த்துக் காற்றைக் கொறித்தபடிக் கீச்சிடத் தொடங்கியது.
மாய நூலொன்றில்
கட்டப்பட்ட மந்திரக்கோல் இழுபட, வானம் ஒரு கூடையைப் போன்று கவிழ்ந்து குருவியும் நானும்
அதன் உள் சிக்கிக் கொண்டது போன்ற பிரமை ஒரு கணம் எனக்குள் தோன்றி மறைந்தது. சசி தனது ஆராதகர்கள் புடைசூழ வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான்.
***********************
நம் இலக்கியங்கள்
இது போன்ற பறவைகளைப் பிடித்தலின் பல நுட்பங்களைப்
பதிவு செய்து வைத்திருக்கின்றன.
கவணால்
எறிதல், வலைவிரித்தல், சிறு குழல் கொண்டு மண்
உருண்டைகளை ஊதுதல் ( குழலில் நஞ்சுள்ள ஊசியைக் கொண்டு ஊதுதல் போன்று ) என்றெல்லாம்
பறவைகளைப் பிடிக்கப் பல முறைகள் கையாளப்பட்டிருக்கின்றன என்பதை அவை சொல்கின்றன.
அவற்றை
இங்கு விவரித்தல் என் நோக்கமில்லை.
ஆரம்ப
கால மனிதன் விலங்குகளையும் பறவையையும் வேட்டை என்ற நிலைமாறித் தன் கட்டளைகளுக்குப்
பணிந்து வேலைசெய்யவும், தனக்குரிய செல்வங்களுள் ஒன்றாகவும் மாற்ற விரும்பினான்.
பசு,
ஆடு, நாய், பூனை, யானை போன்ற சில விலங்குகளும், புறா, கோழி போன்ற பறவைகளும் அவனுக்குப்
பழகின. ஆனால்
அவனது முயற்சி எத்தனையோ விலங்குகளையும், பறவைகளையும் தனக்குப் பழக்க முயன்று தோற்றிருக்கும். அப்படி வீட்டுப் பறவையாகப் பழக்க முயன்று தோற்ற ஒரு பறவையைப் பற்றிய குறிப்பு நம் இலக்கியத்தில் இருக்கிறது.
குருவிகளைப்
போலவே காடைகளைப் பிடித்து நம் முன்னோர் வளர்க்க முயன்றிருக்கிறார்கள் என்பதையும்
நம் இலக்கியங்கள் காட்டுகின்றன.
காடை
வயல்வெளியிலும் புதரிலும் கூடுகளைக் கட்டி வசிக்கக் கூடியது.
ஏறக்குறைய
அதனுடைய தோற்றமும் இயல்பும் சிறு கோழியுடையதைப் போன்றதுதான். மனிதன்
அவற்றைத் தன்வயப்படுத்த முயன்றிருக்கிறான்.
ஆனால்
அவன் முயற்சி கைகூடவில்லை.
சிறு
குஞ்சாகவே கூட்டிலிருந்து காடையைப் பிடித்து அதற்கு வேண்டுவனவெல்லாம் கொடுத்து வளர்த்தினாலும்
அதைச் சுதந்திரமாக விட்டால் அது தனது மரபார்ந்த இடமாகிய வயலுக்கும் புதருக்குமே சென்றுவிடுமே
தவிர மீண்டும் தன்னை வளர்த்தவனைத் தேடி வருவதில்லை.
“கூட்டில்
வைத்து வளர்த்தாலும் காடை காட்டில் ஓடிவிடும்“
“கலக்கம்பு
தின்றாலும் காடை காட்டிலே“
என்றெல்லாம்
நம்மிடையே இது குறித்துப் பழமொழிகள் நிலவி வந்திருக்கின்றன.
இந்தப்
பழமொழி நம் இலக்கியத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘காட்டில் வாழ வேண்டிய விலங்குகளை ஒத்த மனிதரை நாட்டில் வைத்துக்
கொண்டு நலம் பல செய்தாலும் அவர்கள் தம் இயல்பில் மாறுபடமாட்டார்கள் எப்படி என்றால்
நம்மிடமே வைத்து வேண்டுவனவெல்லாம் கொடுத்து வளர்த்தாலும் காடையின் மனது வயலில்தான்
( செய் ) இருக்குமேயொழிய மனிதனிடத்தில் இருக்காது என்பதைப் போல’ என்று
இந்தக் காடையின் இயல்பைத் தீய மனிதருக்குப் பொருத்திக்காட்டி
காடுறை வாழ்க்கைக் கருவினை மாக்களை
நாடுறைய நல்கினும் நன்கொழுகார் - நாடொறும்
கையுள தாகி விடினும் குறும்பூழ்க்குச்
செய்யுள தாகு மனம்.
என்ற
பாடலில் விளக்குகிறது பழமொழி நானூறு.
பறவைகளை
அதனுடைய குரலைப்போலவே குரலை எழுப்பி அதைக்கேட்டு வரும் அப்பறவை இனங்களைப் பிடிக்கும்
வேடர்களைப் பற்றித் திருக்குறள் சொல்கிறது.
( ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் அறிய அக்குறளைப் பின்னூட்டத்தில் தாருங்கள்.)
இந்தப்
பதிவினை நான் எழுதக் காரணமான பாடல் இவை எவையுமல்ல.
அது அடுத்து வருவது.......
**********************
வேடன்
ஒருவன் குஞ்சிலிருந்தே பிடித்துவந்து வளர்த்துவரும் காடை அது.
அதற்கு
வேண்டியன வேண்டியவாறு செய்து தன் குழந்தையைப் போலவே அதன் மீது பேரன்பு கொண்டிருக்கிறான். அதற்காகவே
அழகான கம்பிகள் கட்டிய கூடொன்று. அக்காடையும் அவன் மீது அன்பு கொண்டிருக்கிறது. அவனை
அடையாளம் காண்கிறது. தன் குரலால்
அவனை வரவேற்கிறது. வேடனுக்கு
நம்பிக்கை வருகிறது. இக்காடை
இனி நம்மை விட்டுப் போகாது. இதைப்
பறக்க விட்டுப் பார்ப்போம் என்று நினைத்தவனாய்க் கூட்டினைத்
திறக்கிறான். காடை
வெளியே வருகிறது. சிறகடித்து மேல் எழும்புகிறது. வேடனின்
கண்முன்னே காணாமல் போய்விட்டது.
போன காடை இன்று
வரும் நாளைவரும் என்ற நம்பிக்கையில் வேடன்
வெறுங் கூட்டினைக் காத்துக் கொண்டிருக்கிறான்.
*****************
அவள்
அவனை விரும்புகிறாள்.
அவளது காதல் அவள் தாய்க்குத் தெரிந்து விட்டது.
அவள்தாய்
அவளை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாள்.
அவள்
சொல்கிறாள்,
‘குலைகள்
சூழ்ந்த தென்னை மரங்கள் நிறைந்த மதுரையின் தலைவனாகிய பாண்டியனைச் சேர விரும்பிய எனது
நெஞ்சம் என்றோ என்னை விட்டுவிட்டு அவனிடம் சென்றுவிட்டது.
இதை அறியாத என் அன்னையோ
காடை பறந்து செல்ல வெறுங்கூட்டினைக் காத்துக் கொண்டிருக்கும் வேடனைப் போல, உயிர்ப்பறவை
அவனைச் சேர்ந்துவிட எஞ்சி உள்ள என் உடலாகிய
வெறுங்கூட்டைக் காவல் செய்து கொண்டிருக்கிறாள்.’
கோட்டெங்கு சூழ்கூடற் கோமானைக் கூடவென்
வேட்டாங்கு சென்றவென் நெஞ்சறியாள்
– கூட்டே
குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல்
அன்னை
வெறுங்கூடு காவல்கொண் டாள்
( கோள்
தெங்கு – குலைகளை உடைய தென்னை. கூடற்கோமான் – பாண்டியன். வேட்டு ஆங்கு சென்ற – விரும்பி
அங்கு சென்ற. கூட்டே – கூண்டில், குறும்பூழ் – காடை, பறப்பித்த – பறக்கவிட்ட. வேட்டுவன்-
வேடன். வெறுங்கூடு – பறவை இல்லாத கூண்டு / மனம் இல்லா உடல் )
என இக்கருத்தைச்
சொல்கிறது இம் முத்தொள்ளாயிரப் பாடல்.
அவளை
எந்தச் சிறையில் பூட்டிவைத்தாலும் அவளது மனம் அவனுக்குத்தான்!
‘குறும்பூழ்க்குச்
செய்யுளதாகும் மனம்’ என்ற பழமொழி எவ்வளவு உண்மை?!
தொடர்வோம்.
பட உதவி - நன்றி https://upload.wikimedia.org/
அட அடுத்த பதிவு வந்து விட்டதே இருங்கள் வாசித்து விட்டு மீண்டும் வருகிறேன்.
ReplyDelete:)
Delete\\\\உள்ள இருக்கிற குருவிய எடுத்திட்டு திரும்பவும் கூடையக் கொஞ்சம் தூக்கி வைப்போம்“ என்றேன் நான்.
ReplyDelete“ஆமாமாம். அது உன்னைய மாதிரி முட்டாள் பாரு ….திரும்ப வந்து மாட்டிக்கிறதுக்கு” இந்த ///இடத்தில் சிரிக்காமல் இருக்க முடியல ....
\\\ஏம்பா பறக்கவிட்டீங்க. நான் நல்லபடியா தீனிபோட்டு பத்திரமா வளர்த்திருப்பேனில்ல. வேண்டாமின்னா அவன்கிட்டயாவது திரும்பக் கொடுத்திருப்பேனில்ல” என்று கேட்டேன் விம்மலினூடே!/// எவ்வளவு யதார்த்தமா சின்னப் பிள்ளைக்கே உரிய பாணியில்..... பாவமா இருக்கு ம்..ம்..ம் இன்னும் அந்த வலி நெஞ்சில் சூழந்திருக்கில்ல.....ஆமா அந்தப் பறவையை வளர்க்கும் ஆசை போய் விட்டதா? இல்லையென்றால் என்ன ஒன்றை பிடித்து வளர்ப்பது தானே அங்கு பிடிப்பதா கஷ்டம்.இல்லதானே ஹா ஹா ...
ஆனாலும் எவ்வளவு நல்ல சிந்தனை உள்ள அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிள்ளை என்பதே எவ்வளவு பெருமையான விடயம் .ம்..ம்
வேடனின் மனதையும் அவள் காதல் மனதையும் இணைத்து அழகான நடையில் தந்த விளக்கங்கள் அத்தனையும் ரசிக்கும் படியாக உள்ளது அருமை அருமை ! தொடர வாழ்த்துக்கள் ...!
வணக்கம் அம்மா.
Deleteபறவை வளர்க்கும் ஆசை எல்லாம் என்றோ போயிற்று.
அது எனது அந்தப் பருவத்தின் அதிக பட்ச விருப்பம்.
சில அறிவுரைகள் கேட்கப்படும் போது விரும்பப்படுவதில்லை.
அது போன்றதுதான் இதுவும். அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று பிரித்தறியும் அறிவு வரும்போது புரியும்.
எனக்குப் புரிந்தது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
முத்தொள்ளாயிரப் பாடலுடன் முடித்தது அருமை... ரசித்தேன்...
ReplyDeleteநன்றி ஐயா.
Delete
ReplyDeleteவணக்கம்!
வேட்டையில் சென்றஎனை வெல்லுதமிழ் ஆள்கின்ற
கோட்டையுள் மெல்லக் குடிவைத்தீர்! - காட்டின்கண்
காடைபோல் கன்னல் கவிமனம் உம்தமிழ்
ஓடைமேல் நீந்தும் உவந்து!
ஐயா வணக்கம்.
Deleteநீந்தும் உவந்துருகி நல்ல நிலம்படர்ந்(து)
ஏந்தும் வளம்பெருக்கி எல்லார்க்கும் - மாந்த
உடல்கொண்டு துள்ள உருவத்தில் உள்ளக்
கடல்கொண்ட ஆறாகி நீர்.
நன்றி ஐயா.
ReplyDeleteபறவை வேட்டையென்று ஆரம்பித்தாலும் முடிவில் இலக்கிய வேட்டையில் முடித்துவிட்டீர்கள். இரசித்தேன்.
பறவைகளின் குரலைப்போலவே எழுப்பி பறவை இனங்களைப் பிடிக்கும் வேடர்களைப் பற்றிய திருக்குறள் தெரியவில்லை. இருப்பினும் பறவைகளை கண்ணி வைத்து பிடிக்கும் குறள் இதோ.
“தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.” குறள் 274
தங்களின் கேள்விக்கான பதில் தரும் குறளை அறிய தொடர்கிறேன்.
ஐயா வணக்கம்.
Deleteவாழ்த்துகள்.
சரியான பாடலைத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.
ஆனால் பரிமேலழகர், மற்றும் அவரைப் பின்பற்றிய மற்றவர்களின் உரைகளைப் பார்த்தால் இக்குறளுக்கு நீங்கள் சொன்ன பொருளைத்தான் காண முடியும்.
சிமிழ்த்தல் என்பது நாம் பழைய இலக்கியங்களாகக் கொள்கின்ற, பத்துப்பாட்டு எட்டுத்தொகை மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ( இதில்தான் திருக்குறளும் வருகிறது) ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வரும் சொல்.
பரிமேலழகரும் பிற உரையாசிரியர்களும் இதற்குப் பிணித்தல் என்கிற பொருளைக் காண்கிறார்கள்.
தமிழ் லெக்ஸிகனும் இதற்குக் கட்டுதல், பிணித்தல் என்கிற பொருளையே காட்டுகிறது.
ஆனால் திருக்குறளின் பழைய உரைக்காரர்களில் ஒருவராகிய காளிங்கர், இந்தக் குறளை இப்படி விளக்குகிறார்.
“ஒருவன் தவத்தில் மறைந்து நின்று அல்லனவற்றைச் செய்தொழுகுதல் எத்தன்மைத்தோ எனின், வேட்டுவனானவன் புதலினுள் மறைந்து நின்று, பெடை, சேவல் என்னும் புள்விரும்பி வாய்மேல் விரலால் எற்றிப் பயில விளித்த அத்தன்மைத்து என்றவாறு.
புதல் என்றது சிறு செடி.
சிமிழ்த்தல் என்பது அவன் வாய்மேல் விரலெற்றி அது பயில விளித்தல் “
என்று பொருள் கூறுகிறார்.
இங்குப் புள் எனக் கூறப்படும் பறவை கவுதாரி.
இன்றைய பறவையியலாளர்கள் இப்பறவை துணையின் குரல் கேட்டு அதனை நாடி வரும் இயல்பை உடையது என்கிறார்கள்.
அன்றியும்,
மேருமந்திரபுராணம் என்னும் நூல்,
“சிறகமை பறவை பேர்ப்பான்
உடம்பெலாம் செடியின் மூடிப்
பறவையைச் சிமிழ்ப்பின் வாங்கும்
பாவியைப் போல நீயும் ”
என்னும் அடிகளால் இச்செய்தியைச் சொல்கிறது.
விரலால் உதடுகளைச் சுருக்கிச் சீழ்க்கை ( விசில் ) அடித்தல் போலக் குறிப்பிட்ட பறவையின் ஒலியை குறிப்பிட்ட சில முறைகளில் வாயில் கை கொண்டு எழுப்புவது சிமிழ்த்தல் என்று வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத் திருக்குறளின் பழைய உரையாசிரியர்களின் ஒருவராகிய காளிங்கரின் உரை உறுதிப்படுத்துகிறது.
பண்டை இலக்கியத்தில், குறளில் மட்டுமே காணக்கிடைத்த இந்தச் சொல் மிக முக்கியமான நாம் இழந்துவிட்ட தமிழ்ச்சொல்லாக எனக்குப் பட்டது.
தங்களின் வருகைக்கும் சரியான குறளை இனம் கண்டு சொன்னதற்கும் நன்றி.
சிமிழ்த்தல் என்பதற்கான சரியான பொருளை தந்தமைக்கு நன்றி. திருக்குறளுக்கான காளிங்கராயரின் உரை சமீபத்தில் நூலாக வந்திருக்கிறதா என்பதை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Deleteதங்களது ஒவ்வொரு பதிவை படிக்கும்போது நான் தமிழில் ‘கற்றது’ மிக மிக குறைவு என்றே உணர்கிறேன்.
தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... (waiting for tamilmanam.net) காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்... வாசகர்களுக்கு பதிவை வாசிக்க, கருத்துரை இட உதவும்...
ReplyDeleteவழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html
இப்போது வேலை செய்கிறது ஐயா...
Delete+1
நன்றி...
தங்களது பதிவினைக் குறித்துக் கொண்டேன்.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஐயா.
ஓர் உயிர். அது எங்கே இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் எதை சாப்பிட வேண்டுமென்று எல்லாம் தீர்மானிக்க நீங்க யார்?
ReplyDeleteமிகச்சரியான விளக்கத்தை தந்திருக்கிறார் தங்கள் தகப்பனார். சுதந்திரமான பறவையின் மகிழ்வு என்னையும் பற்றிக்கொண்டது.
ஆனால் இதென்ன அந்த வேடனிம் மனநிலையை மறுபடி எங்களுக்கு கடத்திவிட்டீர்கள்.
ஆஹா இதோ இருக்கிறதே இலக்கியச் சுவை அழகான அற்புதமான முத்தொள்ளாயிரப்பாடலுடன் பறவை வேட்டை முடிந்ததில் மிக்க மகிழ்வே.
என்னவொரு சொற்றொடர் ஆஹா!
"அவளை எந்தச் சிறையில் பூட்டிவைத்தாலும் அவளது மனம் அவனுக்குத்தான்!"
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
இந்தக் குறளா?
தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
வணக்கம் கவிஞரே.
Deleteதங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்.
நான் குறித்த பாடலைத் திரு நடனசபாபதி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அதைக் காண வேண்டுகிறேன்
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
வணக்கம் ஐயா!
ReplyDeleteவேட்டையாடிக் கூட்டில் அடைத்த பறவையின் மனமும் செயலும்
முத்தொள்ளாயிரப் பாட்டுடைத்தலைவியின் மனம் ஒப்பீடு மிக அருமை!
தங்கள் எழுத்து நடை அபாரம் ஐயா!
தொடர்கிறேன்!.. வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் வாக்கிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.
Delete#என் உடலாகிய வெறுங்கூட்டைக் காவல் செய்து கொண்டிருக்கிறாள்.’#
ReplyDeleteஉடல் வெறும் கூடு ,உயிர் உன்னோடு என்ற சினிமா பாடல் வரிகளின் மூலம் இதுதான் போலிருக்கு :)
வாருங்கள் பகவானே..!
Deleteஇந்தத் திரைப்படப்பாடலை நான் கேட்டதில்லையே...!
எதைத்தான் கேட்டிருக்கிறேன் :(
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.
அது உன்னோடயோ அவனோடயோ விளையாட்டுப் பொருளில்லை. ஓர் உயிர். அது எங்கே இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் எதை சாப்பிட வேண்டுமென்று எல்லாம் தீர்மானிக்க நீங்க யார்.//
ReplyDeleteஉங்கள் தந்தை சொல்லிய வார்த்தைகள் இதை வாசிக்கும் போது மனதிற்கு வந்தது...வாசித்து வரும் போது உங்கள் தந்தை சொல்லியதை வாசித்ததும்...அட! என்றும் அந்தப் பறவை சுந்தந்திரப் பறவையானதே என்றும் தோன்றியது...
கீதா: பழமொழிநானூறு பாடல் புத்தகம் வாசித்து, பதிவு எழுத சில பாடல்களும் குறித்து வைத்துள்ளோம்...
சென்ற பதிவை வாசித்த போதே நீங்கள் இலக்கியத்துடன் தொடர்பு படுத்திச் செல்வீர்கள் என்று தோன்றிய எங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை...மிக்க நன்றி அருமையான பதிவு...தொடர்கின்றோம்..
உங்கள் தோசைக்கு, சாம்பார் தயார் செய்து வைத்து அது கொஞ்சம் பழையதாகி பின்னர் மீண்டும் தயாராகின்றது...நீங்கள் சொல்லும் அளவு சுவையாக இருக்காமல் போகலாம்....ஹஹஹஹ்
வாருங்கள் சகோ..
Deleteசில அறிவுரைகள் காலம் கடந்து விளங்கும். அது போலத் தான் இந்த அறிவுரையும் பின்னர் விளங்கிற்று.
தங்களின் பழமொழி நானூறு பாடல் விளக்கம் படிக்கக் காத்திருக்கிறேன்.
சாம்பார் மீண்டும் ஆறிவிடும் முன்னே பரிமாறுங்கள்.
நன்றி.
என்னடா இலக்கிய பாடல் இல்லாமல் ஓர் பதிவா என்று நினைத்தேன்! முத்தொள்ளாயிர பாடலை முத்தாய்ப்பாக தந்து நிறைவு செய்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! பறவை வேட்டையை விட உங்களின் இலக்கிய வேட்டை சிறக்கிறது! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteவாருங்கள் நண்பரே!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.
அருமையான ஒரு கதையைச் சொல்லி அதன் முடிவில் தொடர்புடைய பழந்தமிழ் இலக்கியம் ஒன்றையும் அறிமுகப்படுத்தும் தங்களுடைய இந்தப் பாங்கு சிறுவர்களும் தங்கள் பதிவுகளைப் படிக்கத் தூண்டும் என நம்புகிறேன், இணையத்தில் தேடித் தமிழ் படிக்கும் அளவுக்குப் படிக்கும் பழக்கமுடைய சிறுவர்கள் இன்றும் தமிழினத்தில் இருந்தால். தங்கள் நண்பன் சசியைப் போலவே எப்பொழுதும் ஏதாவது ஒரு புதுமையை அறிமுகப்படுத்தும் என் சிறு வயதுத் தோழர்களான ராஜேஷ், பிரேம் ஆகியோர் இதைப் படிக்கும்பொழுது என் நினைவலைகளில் நீந்தி வருகிறார்கள். நன்றி ஐயா!
ReplyDeleteவணக்கம்.
Deleteவாருங்கள் ஐயா.
சிறுவர்கள் இணையத்திற்கு வருகிறார்கள்.
ஆனால் வாசிப்பதெற்கெல்லாம் இல்லை.
நல்ல புத்தகங்களை வாசித்தாலே போதும். ஆனால் இன்றைய சிறார்களிடம் அது மிகக் குறைந்துவிட்டது.
உங்கள் நண்பர்களின் நினைவுகளை இந்தப் பதிவு தூண்டியதென்றால் எனக்கு மகிழ்ச்சியே.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நான் பள்ளியில் படிக்கும்போது
ReplyDeleteஇதுபோன்று யாரும் சொல்லித் தரவில்லையே நண்பரே
கோணாரே கதி என்றல்லவா கிடந்தோம்
நன்றிநண்பரே
தம +1
இன்றும் அப்படித்தான் இருக்கிறார்கள் நண்பரே!
Deleteஎன்ன செய்வது.?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றிகள்.
சிறுவயதில் எனக்குக் கூட பறவை வளர்க்கும் ஆசை இருந்தது. பலருக்கும் இருக்கும். கூண்டு பறவைகளுக்குச் சிறை என்பது புரியாத வயது. உங்கள் தந்தையின் செயலைப் படித்தவுடன் எனக்கு ஓர் ஆங்கிலச் சிறுகதை நினைவுக்கு வந்தது. பெயர் நினைவில்லை. தவறு செய்யாமல் சிறைத்தண்டனை அனுபவிப்பான் ஒருவன். தண்டனை முடிந்து வெளிவரும் நாள் கடைக்குச் சென்று அங்குக் கூண்டிலிருக்கும் எல்லாப் பறவைகளையும் காசு கொடுத்து வாங்கிக் கூண்டைத் திறந்து பறக்கவிட்டுவிடுவான். தவறு செய்யாமல் சிறைத்தண்டனை அனுபவித்த வலியும் வேதனையும் அவனின் செய்கையிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். முத்தொள்ளாயிரம் பாடல் கருத்து அருமை. சிமிழ்த்தல் அழகான சொல். ஒப்புப் போலி ஒலியெழுப்புதல் (Mimicry) என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லும் மூன்று சொற்களுக்குப் பதில் எவ்வளவு அழகான ஒரே ஒரு தமிழ்ச்சொல்? உங்கள் அனுபவத்தையும் பாடலையும் இணைத்த பதிவு வாசிக்க சுவாரசியமாயிருந்தது. நன்றி. தொடருங்கள்.
ReplyDeleteவாருங்கள் சகோ.
Deleteஇந்தப் பதிவின் தொடக்கத்திலேயே உங்களை நினைத்துக் கொண்டேன்.
நீங்கள் சொல்லும் மிமிக்ரி என்பதைக் குறிக்க அநுகரணம் என்ற சொல்லை யாப்பருங்கல விருத்தியில் படித்திருக்கிறேன்.
ஆனால் அது வட சொல்.
சிமிழ்த்தல் என்பது பறவைகளைப் போல ஒலியெழுப்பும் முறையைக் காட்டக் கூடிய தனித்தமிழ்ச் சொல்.
ஆகவேதான் இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் குறிப்பிட்டேன்.
உங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நல்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteசிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கேது சொந்த வீடு?
உலகம் முழுதும் பறந்து பறந்து
ஊர்வலம் வந்து விளையாடு
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு?… கட்டுப்பாடு…..
-என்று தங்களின் தந்தை சிட்டுக்குருவியைப் பறக்கவிட்டதும்...(தந்தையாக... பறவையின் சுதந்திரம் பற்றி அவரும்... எல்லோரும் அவ்வாறு இருப்பார்கள் என்று சொல்ல முடியாததுதான் என்றாலும் கூட)
அன்று அப்பாவின்மேல் எனக்குக் கடுங்கோபம் இருந்தது. (மகனாகத் தாங்களும்) எண்ணியது இயல்பான ஒன்று.
அடுத்து...ஒரு பொன்வண்டு…! பள்ளிப்பருவத்தில் இந்த விளையாட்டுக்களையெல்லாம் மாணவர்களின் உள்ளத்தை உள்ளபடி அழகாக படம்பிடித்து காட்டினீர்கள்.
பழமொழி நானூற்றில்
“கூட்டில் வைத்து வளர்த்தாலும் காடை காட்டில் ஓடிவிடும்“...
மற்றும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் மூலம்
என் அன்னையோ காடை பறந்து செல்ல வெறுங்கூட்டினைக் காத்துக் கொண்டிருக்கும் வேடனைப் போல, உயிர்ப்பறவை அவனைச் சேர்ந்துவிட எஞ்சி உள்ள என் உடலாகிய வெறுங்கூட்டைக் காவல் செய்து கொண்டிருக்கிறாள்.’
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா..
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா..
அவளை எந்தச் சிறையில் பூட்டிவைத்தாலும் அவளது மனம் அவனுக்குத்தான்!
நன்றி.
த.ம.11
ஐயா வணக்கம்.
Deleteஇவ்வளவு திரைப்படப் பாடல்களை எப்படி நினைவில் வைத்துக் கொள்கிறீர்களோ என்று வியக்கிறேன்.
தங்கள் அன்பினுக்கும் கருத்தினுக்கும் வாக்கினுக்கும் நன்றிகள்.
வணக்கம் சகோ !
ReplyDeleteதங்கத்தை அன்பளிப்பாய்த் தந்திடத்தான் ஆசையுண்டு
வங்ககடல் தாண்டி வருவதார்? !எங்கும்
துலங்கட்டும் உன்பாடல்!தூயதமிழ் வாழ்த்த
உலகத்தில் ஒங்கப் புகழ்!
எழுதுங்கள் எழுதுங்கள் கண்ணை மூடித் திறப்பதற்குள்
எல்லா வகையான வெண்பாவினையும் பொழியும்
வானத்துக்குப் பரிசு கொடுப்பதற்கு யாரால் முடியும் ?.:)
(அம்பாளடியாள் என்னும் மீன் மெல்ல நழுவிச் சென்று விட்டது :) )
தங்கத்தை அன்பளிப்பாய்த் தந்திடத்தான் ஆசையுண்டு
ReplyDeleteவங்ககடல் தாண்டி வருவதார்? !எங்கும்
துலங்கட்டும் உன்பாடல்!தூயதமிழ் வாழ்த்தும்
உலகத்தில் ஒங்கப் புகழ்!
வணக்கம் கவிஞரே!
Deleteவங்கக் கடலோடி நானல்லேன் என்றாலும்
தங்கள் அவாகாணத் தங்கத்தை - பொங்குதமிழ்
பாட்டில் இழைத்திழைத்துப் பாடித் தரக்கொள்வேன்
ஏட்டிலிருந் தேநான் எடுத்து.
நன்றி.
வணக்கம் அய்யா,
ReplyDeleteஇப்பவெல்லாம் தங்கள் பதிவுகளை அமைதியாக படித்துச் செல்லத்தான் முடிகிறது.
சீழ்க்கை - இச்சொல்லை எங்கேயோ படித்துள்ளேன். எங்கே என்று சரியாக நினைவில் இல்லை.
பாடல் விளக்கம் அருமையாக இருக்கு.
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
இது தாங்கள் கேட்ட குறள் அல்ல, பாடலுக்கு என்று கொன்னேன்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
வணக்கம்,
Deleteசொன்னேன். என்று படிக்கவும்
நன்றி.
வணக்கம் பேராசிரியரே..!
Delete'''''''''இப்பவெல்லாம் தங்கள் பதிவுகளை அமைதியாக படித்துச் செல்லத்தான் முடிகிறது.'''''''
ஏன் அப்படி ?
நீங்கள் எப்பொழுதும் போல விவாதக் கருத்துகளை முன்வைப்பதில் என்ன தடை?
நீங்கள் எப்பொழுதும் போலத் தொடரலாம்.
“““““““““சீழ்க்கை - இச்சொல்லை எங்கேயோ படித்துள்ளேன். எங்கே என்று சரியாக நினைவில் இல்லை. “““““““““
இந்தச் சொல் இன்றும் பயன்பாட்டில் உள்ள சொல்தான். சீட்டி அடித்தல் என்பார்கள் சில பகுதிகளில்.
பழந்தமிழகத்தில் இச்செய்கை வீளை என அறியப்பட்டது.
மெய்ப்பாட்டியலில் பேராசிரியர், சாதி இயல்பு பற்றி விளக்குமிடத்து, ஆட்டிடையர்கள் செய்கையாக இந்த சீழ்க்கை அடித்து ஆடுகளுக்கு உணர்த்தும் முறை வீளை எனக் குறிப்பிடுவார்.
-பார்ப்பாராயின் குந்திமிதித்துக் குறுநடை
கொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தோடும் அடுத்த
மார்போடும் நடந்து சேறலும், இடையராயின் கோல்கையும் கொடுமடி
உடையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றுதலும் என்று
இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க’
என்பதவர் உரை.
நீங்கள் கொன்னாலும் பரவாயில்லை:)
நீங்கள் காட்டிய குறள் அறிஞர் பெருமக்களால் அதிகம் விவாதிக்கப்பட்டதும், அருமையானதும், ஒவ்வொருவரும் ஒவ்வொர் பொருள் சொல்லக் கூடியதுமான குறள்.
உங்கள் பார்வையைத் தனித்த பதிவாக இடலாம்.
கடைசியாக,
““““““““சொன்னேன். என்று படிக்கவும்““““““““
நீங்கள் ‘கொன்னாலும்’ பரவாயில்லை. :)
வரவிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
\\\\\\சீழ்க்கை//////- நம்மூரில் விசில் என்றும் சீக்காய் என்றும் அழைக்கப் படுகிறது.
Deleteகுருவி பிடித்த கதை முதலில் பதைப்பைத் தந்தாலும் அப்பாவின் நல்ல மனத்தால் அன்றே விடுதலையாகி மனம் குளிரவைத்தது. பறவைகளைக் கூட்டில் அடைத்து வளர்க்கும் செயலை ஒருபோதும் மனம் விரும்பியதே இல்லை. பழக்கப்படுத்த முடியா பறவைகள் வரிசையில் காடை ஒரு நல்ல உதாரணம். அதையும் கவனித்து புலவர்கள் பாட்டியற்றியிருக்கிறார்களே... அனுபவப்பகிர்வோடு அழகான தமிழ்ப்பாக்களையும் இங்கு அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteஒரு கிளியொன்று காகத்தால் துரத்தப்பட்டு அடிபட்டு எங்கள் வீட்டுக் கொல்லையில் விழுந்துகிடந்தது. அம்மா அதை எடுத்து மஞ்சள் பற்று போட்டு பத்திரப்படுத்தினார். வெங்காயக்கூடை காலி செய்யப்பட்டு அதில் குடியமர்த்தப்பட்டது. காயமாறியதும் கூண்டைத் திறந்து பறக்கவிட்ட பிறகும், பறந்துபோகாமல் வீட்டையே சுற்றி சுற்றி வந்தது. ஒரு வருடம் எங்களோடு இருந்துவிட்டு ஒருநாள் பறந்துபோனது. உங்கள் பதிவு பார்த்து அந்த நினைவு வந்துபோனது.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
தாங்கள் குறிப்பிட்ட குறள் இதுதானா?
வாருங்கள் சகோ.
Deleteசிறு வயதில் பறவைகளுடனான அனுபவம் பெரும்பாலானோர்க்கு இருக்குமென்றே கருதுகிறேன்.
தங்கள் பால்யத்தின் நினைவுகளை இந்தப் பதிவின்வழி மீட்டெடுத்தமை குறித்து அறிய மகிழ்ச்சி.
நான் குறிப்பிட்ட குறள் இதேதான். திரு நடனசபாபதி அவர்களின் பின்னூட்டத்தில் இது குறித்த விளக்கத்தை அளித்திருக்கிறேன்..
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.
தங்களது பதிவுகளின் மூலமாக தமிழ் இலக்கியத்தின்மீதான ஈர்ப்பு அதிகமாகிக் கொண்டு வருவதை உணர்கிறேன். உணர்ந்து, அனுபவித்து எழுதுகின்றீர்கள். தங்களது எழுத்துக்குக் கிடைத்த வெற்றி நாங்கள் வாசகர்கள் ஆனதே.
ReplyDeleteஉண்மைதான் ஐயா.
Deleteநான் எழுதுவதையும் படிக்கிறார்கள் என்னும் போதும் மகிழ்வும் கூடுதல் கவனமும் கொஞ்சம் பயமும் இருப்பது உண்மை.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ஓர் அனுபவப் பகிர்வு போலத் தொடங்கி ஓர் இலக்கியப் பகிர்வாக முடித்தவித்ம் அருமை ஐயா!
ReplyDeleteவாழ்த்துகள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅருமையான பதிவு ; அனுபவத்தையும் இலக்கியத்தையும் இணைத்துச் சுவையூற விளக்கிய விதம் மிக நன்று . சமணர்களின் அறமொன்று : பறவை வணிகரிடம் சிறைப்பட்டுள்ள குருவிகளை விலை தந்து வாங்கிப் பறக்கவிடுதல் .
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteதங்கள் வருகைக்கும் பாரட்டிற்கும் என் நன்றிகள்.
நீங்கள் குறிப்பிடும் சமணர் அறம் பற்றி அறிந்ததில்லை.
அறிவூட்டியமைக்கு மிக்க நன்றி.
வணக்கம் அய்யா,
ReplyDeleteஅன்று வலைச்சரத்தில் தங்கள் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது,,
வாழ்த்துக்கள்.
நன்றி.
தகவலுக்கு மிக்க நன்றி பேராசிரியரே.
Deleteசென்று கருத்திட்டேன்.
நன்றி.