Pages

Wednesday, 12 August 2015

உயிர் ஓலம்




ஒடித்துக் கண்சிறை உருக்கிக் கொண்டெனை
     ஒறுத்துக் கொன்றிடா துடைக்க ஐம்புலன்
இடித்து நெஞ்சிடம் இறுக்கி என்கரை
     இறைக்கும் உன்முகம் இனிக்க என்‘உலை
வெடித்துச் செந்தழல் விருப்பக் கங்குகள்
     வெறுத்துப் போவதாய் நடித்துப் பின்னிதைப்                      
படித்துப் புன்னகை பிறக்கும் உன்னிதழ்
     பிடித்துக் கொண்டெனைப் படுத்திக் கொல்லுதே!

தடுக்கக் கேடயம்! தகர்க்கச் சிற்றுயிர்!
     தவிக்கக் காரிருள்! தனிக்கும் வெண்பிறை!
அடுக்கக் காரணம்! அமிழப் பாழ்கடல்!
     அடக்கச் சொற்புதிர்! அரிக்கச்  சீழ்புவி!
நடக்கத் தீர்ந்திடா நெடுமுற் பாதைகள்!
     நலிந்த என்நதி நடுங்கத் தூறிடும்
உடுக்க ளாகவே உலுக்கு கின்றதே
     உதிரும் பாவிலென் உயிரின் ஓலமே!

பட உதவி - நன்றி https://kaufmantoldmesettheworldonfire.files.wordpress.com/



42 comments:

  1. அன்புள்ள அய்யா,

    உயிரின் ஓலம் ஒலிக்கக் கேட்டோம்...
    உலவும் புயலாய் அடிக்கப் பார்த்தோம்...
    ‘உன்னிதழ் பிடித்துக் கொண்டெனைப் படுத்திக் கொல்லுதே!’
    உதிர்த்த பாவில் உள்ளம் வெள்ளமெனப் அலைபாயுதே!

    நன்றி.
    த.ம.1.


    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      மீண்டும் இரவில் கண்விழிக்க ஆரம்பித்து விட்டீர்களோ...?

      தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  2. வணக்கம் ஐயா!

    வித்தகம் கண்டு விறைத்துநான் நிற்கின்றேன்!
    சித்தம் கரைத்திட்ட தீ!

    எதுவும் சொல்ல முடியவில்லை ஐயா!
    ஓலம் என் உள்ளம் துளைத்தது!

    குறைந்தது 4 அல்லது 5 தடவை படித்துக் கருத்தினை
    உள்வாங்கிக் கொண்டேன்.

    மனதிற்குள் புகுந்து கொண்டது கவிதை!
    வாழ்த்துக்கள் ஐயா!

    த ம +

    ReplyDelete
    Replies
    1. நான்கு அல்லது ஐந்து முறை படிக்க வேண்டி இருக்கிறதா..:(

      ஆம். இருண்மையாகத்தான் இருக்கிறது போலச் சகோ.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  3. உயிரின் ஓலம்
    அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  4. Replies
    1. உங்களையுமா...?.. ;)
      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  5. வணக்கம் அய்யா,
    தங்கள் கவி வரிகள் பற்றி என்னச் சொல்வது என்றே தெரியல,
    நமக்கு தெரியாததைப் பற்றி என்ன சொல்வது,,,,,
    எப்படி இருக்கிறது என்று சொல்ல அதைப்பற்றிய கொஞ்சமாவது ஞானம் வேண்டும்,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இப்படிச் சொன்னால் இனிமேல் இதுபோல் எழுதுவதை விடப் பேசாமல் இருக்கலாம் பேராசிரியரே.

      இதற்கு அஞ் ஞானம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்:)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. உயிரின் ஓலம் ஒலிக்க மட்டும் தெரியும் கவிஞருக்கு
      காதுகள் செவிடானது ஆச்சிரியம்..
      ஒலம் கேட்கலையோ,,

      Delete
    4. மகேசுவரி அவர்களின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன் மிகுந்த ஏக்கத்துடன்...

      Delete
  6. அட இது என்ன விளையாட்டு.........?

    பரிமேலழகரை யல்லவா அழைக்கவேண்டும் உரை எழுத. அம்மாடி சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போலல்லவா பார்க்க வேண்டியுள்ளது. ஹா ஹா...... இருந்தாலும், நான் புரிந்து கொண்டதை எழுதிப் போகிறேன். சரியா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.


    உம்மை ஒடித்து கண்களால் சிறைப் படுத்தி உள்ளே வைத்து இருக்கும்.
    உம்மைக் கடுமையாய் தண்டிக்கும். ஆனால் கொல்லாது.
    ஐம்புலனையும் இடித்தெறிந்து நெஞ்சினைக் கைப்பற்றி இறுக்கும்.
    உம் கரையெங்கும் அம்முகம் இறைந்து கிடக்கும்.

    உம் உலை வெடித்துச் சிதறும் உமது விருப்பத்தின் தீப்பொறிகளை விரும்பியும் வெறுத்துப் போவதாய் நடிக்கும் அவள்,
    பிறகு இதனைப் படித்துப் புன்னகைக்கும் அவள் புன்னகை உம்மைப் பிடித்துப் பாடாய்ப் படுத்திக் கொள்கிறது....ம்ம்...?


    நீங்கள் நெருங்காமல் தடுக்கும் கேடயம் அவளிடத்தில்!
    அவள் நினைவில் தகர்ந்து போகும்படியான சிற்றுயிர் உங்களிடம்..!
    அவளில்லாமல் தவிக்கும் காரிருள் உங்கள் மனதில்!
    இருளை நீக்கும் வெண்பிறை அவளிடத்தில்.
    உம்மை விலக்க ஆயிரம் காரணங்கள் அவளிடத்தில்...
    நீங்கள் மூழ்கி உங்களை மறைந்து கொள்ள பாழ்கடல் உங்களிடத்தில்...
    உம்மை அடக்கும் புதிர்நிறைந்த சொற்கள் அவளிடத்தில்....
    நினைவினை அறியாமல் அரிக்கின்ற சீழ்பிடித்தபூமி உங்களிடத்தில்..
    உம் பாதைகள் முடிவடையா நீண்ட முற்பாதைகள்.
    உம் நதி நலிவுற்ற நதி.
    அது நடுங்குமாறு அவளது நினைவாகிய உடுக்கள் ( விண்மீன்கள்தானே? ) பெய்கின்றன.
    அவை உலுக்க எழும் இந்தப் பாடலில் உமது உயிரின் ஓலம் கேட்கிறது.

    இந்தப் பாடல். இது தானே?
    இப்படித்தான் நான் புரிந்து கொண்டேன் இருந்தாலும் அப்பப்பா இன்னம் வெவ்வேறு கருத்தும் தோன்றுகிறது.

    எல்லாம் சரி...... அது யாருப்பா என் பிள்ளையை ஓலமிட வைக்கிறது. ஹா ஹா ........

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்மா,
      உடு - அம்பு என்றும் ஒரு பொருள் உண்டு,,,,,,,,,,,
      நன்றிம்மா,,,,,,,,,,,

      Delete
    2. வணக்கம் அம்மா.

      உங்களின் இந்த உரைநடை நான் எழுதிய பாட்டை வென்றுவிட்டது.
      ஏறக்குறைய பாடலின் பொருள் இதுதான்.
      இன்னும் சில குறிப்புகள் இருக்கின்றன இதற்குள்.
      நல்லவேளை பொருள் எழுதும் அபாயத்தில் இருந்து உங்கள் பிள்ளையைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்.
      உடுக்கள் என்றால் விண்மீன்கள்தான்.

      தங்களின் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.

      புரிதல் அறிய வியப்பு.

      நன்றி.

      Delete
  7. ஐயா! கவிதையை பலமுறை படித்தேன். உண்மையை சொல்வதில் வெட்கமில்லை. என் சிற்றறிவுக்கு ஓரளவுதான் புரிந்தது. காரணம் ஒரு சில சொற்கள் இதுவரை நான் கேட்டிராதவை. இருப்பினும் இரசித்தேன்.
    ஒரு ஐயம். தனிக்கும் வெண்பிறையா? இல்லை தணிக்கும் வெண்பிறையா?
    விளக்கவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      நீங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? இந்தக் காலத்தில் இதுபோல் புரியாத தமிழில் எழுதிக்கொண்டிருக்க நானல்லவா வெட்கப்பட வேண்டும்?
      இது ஒரு வடிவ சாத்தியத்திற்கான முயற்சி.
      காதலை அதில் புகுத்துவது எனக்கு எளிதாய் இருந்தது.
      அதனால் அவ்வாறு செய்தேன்.

      ““““““““தனிக்கும் வெண்பிறையா? இல்லை தணிக்கும் வெண்பிறையா?“““““““

      என்னும் உங்களின் ஐயத்திற்குப் பதில், தனிக்கும் வெண்பிறைதான். அதாவது தனியே இருக்கும் வெண்பிறை.

      தவித்திருக்கும் இருளை நோக்கி முகம்திருப்பி ஒளி சிந்தாமல் தனித்திருக்கும் வெண்பிறை என்ற கருத்தில் அமைத்தேன்.

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  8. பட்டினத்தார் பாடல் போலுள்ளதே?

    ReplyDelete
  9. உயிர் ஓலம் கேட்டிங்கே ஓடோடி வந்தேனா...
    இதென்ன கள்ளுண்ட மயக்கமும் தெளிந்திடுமாம்.
    இப்புலவர் காதலுண்ட மயக்கத்தில் அல்லவா வடிவத்தை கண்டிருக்கிறார் ...
    ஆதலால் இன்றும் வியப்புடனே விழிபிதுங்கி நிற்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவிஞரே..!

      யாப்பின் அனைத்து சாத்தியங்களையும் ஒரு கை பார்த்துவிடும் தங்களைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்லவே..!
      பின் வியத்தலும் விழிபிதுங்கலும் ஏன்?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி .

      Delete
  10. நயமிகு ஓசை! நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஐயா.

      Delete
  11. வார்த்தை ஜாலம் சிறப்பு! பாடலின் விளக்கத்தை இனியா அவர்களின் விளக்கத்தை படித்துதான் புரிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
  12. வார்த்தை ஜாலம் சிறப்பு! பாடலின் விளக்கத்தை இனியா அவர்களின் விளக்கத்தை படித்துதான் புரிந்து கொண்டேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே!

      வார்த்தை ஓலமல்லவா? ஜாலமில்லையே..?!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

      Delete
  13. நானும் நாலைந்துமுறை வாசித்த பிறகு கொஞ்சம் புரிந்த்து. இனியாவின் உரை படித்தவுடன் மீதியும் புரிந்தது. நடக்கத் தீர்ந்திடா நெடுமுற் பாதைகள் நல்ல சொற்றொடர்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      நாலைந்து முறை வாசித்தீர்களா.? :(

      இது போல் புரியாமல் எழுதுவதை விடப் பேசாமல் இருக்கலாம்.

      இருப்பினும் உங்களின் வருகைக்கும் ஒற்றைச் சொற்றொடர் தேர்விற்கும் பாராட்டிற்கும் தொடர்கின்றமைக்கும் நன்றிகள்.

      Delete
  14. என்னைப் போன்றவர்களுக்கு இது கிரேக்கமும் லத்தீனும்தான்.ஆனால் சந்தம் மயக்குகிறது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய்ப் புரியும்படி எழுதுவேன் ஐயா.

      வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  15. ஐயா, வணக்கம்.
    அடக்கச் செய்யினும் அடங்கா அன்பினுள்
    அரித்துச் சென்றிடும் அலைகள்! ஒருயிர்க்
    கடக்காக் கூட்டினுள் விடமாய்ப் புக்கிடும்!
    கடக்கும் பேரிடர் கனவின் கண்களில்!
    மிடுக்கக் கண்டிடும் நடையால் ஏங்கிடும்
    மனதில் ஆற்றிடும் மருந்து வேறெது?!
    நடக்கும் இச்செயல் அனைத்தும் நாடகம்!
    நினைவில் நின்றிடும் உயிரின் ஓலமே!

    சென்னைப் பித்தன் ஐயா அவர்களின் கூற்று எனக்கும் பொருந்தும். வான் கோழியின் முயற்சி.
    ஈடில்லா தங்கள் கற்பனையை எழுதும் போது நன்கு உணர்ந்தேன். வியந்தேன். சுவைத்தேன்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      நலம்தானே?

      நெடுநாளாயிற்றுத் தங்களைக் கண்டு.

      அடிக்கடி உங்களை நினைத்தேன் என்றால் நம்புவீர்களா?

      ஏன் உங்கள் வலைத்தளத்தில் எதுவும் எழுதுவதில்லை.

      உங்களின் முயற்சி அபாரம்.

      வான்கோழி மயில் என்ற ஒப்புமை எல்லாம் இங்கு அர்த்தமற்றது.

      உங்களின் படைப்பு மிக நன்றாக உள்ளது.

      வாழ்த்துகளும் நன்றியும்.

      Delete
  16. படிக்கும் சந்தம் பாறைகளூடே தாவிச் செல்லும் பயண உணர்வு. ரசித்தேன். பொருளை பின்னூட்டங்களில் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஸ்ரீ..!

      ““பாறைகளூடே தாவிச் செல்லும் பயண உணர்வு.““

      கவிதை எழுதுவீர்கள் தானே? :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  17. அருமையா இருக்கு சகோ. என்னன்னா கூடவே உரையும் கொடுத்துருக்கலாமோ?!!!! ஏதோ கொஞ்சம் புரிகின்றது. வேதனை என்பது....

    கோனார் உரை எல்லாம் படிப்பதில்லை..ஹஹஹஹ் எனவே நீங்கள் உரை எழுதி விடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      ஹ ஹ ஹா

      வேதனை ஏதும் இல்லை.

      இது ஒரு வடிவ சாத்தியத்திற்கான முயற்சி.

      பொருளடைவு பாராமுகம் பற்றியதானதால் வேதனை தொனித்திருக்கக் கூடும்.

      கோனார் உரை யெல்லாம் தேடிப் படிக்க வேண்டிய அளவு, என் பதிவுகள் பொருளாழம் உடையனவோ, பயன்பாடுடையனவோ அல்ல.

      வாசிப்பில் புரிந்தால் நலம்.

      இல்லையேல் சிறு குழந்தையின் கிறுக்கல் என ஒதுக்கிப் போகலாம். :)

      வருகைக்கும் தொடர்கின்றமைக்கும் நன்றிகள்.

      Delete
  18. அப்பப்பப்பா! என்ன இது! என்ன ஐயா இது!! கவிதையா?! இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா?!! 'அமிழப் பாழ்கடல்!' 'அரிக்கச் சீழ்புவி!' என்னே சொல்லாளுமை ஐயா உங்களுக்கு!!!

    ReplyDelete

  19. உயிருற்ற ஓலத்தை ஓதினீர்! சின்ன
    குயிலுற்ற இன்குரலைக் கொண்டு!

    ReplyDelete