Pages

Sunday, 26 July 2015

ஒரு பாடலும் சில நினைவுகளும்.


நாம் இரசித்த மிகச்சில பாடல்கள் இறந்தகாலத்தின் அந்தப் பாடலை அனுபவித்த  சுகமான தருணங்களைச் சட்டென மீட்டெடுக்க வல்லவை.
இரை வைக்கப்பட்ட தூண்டிலாய் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தேனும் வீசப்படும் அவை நம்மைச் சிக்கெனப்பிடித்து இறப்பின் கரைகளில் வீசியெறியும்.

மீண்டும் கரையிடிந்து நடப்புக்குளத்தினுள் விழும்வரை ஒரு மாய உலகின் கட்டுப்பாட்டில் நம்மை வைத்திருக்கக் கூடியவை.

அப்படி மனம் பதிந்து போன ஒரு பாடல் ஒன்றை நினைவுகூருந் தருணம் எனக்கு அண்மையில் வாய்த்தது. அப்பாடலின் வரிகள் தெரியாமல் அந்தப் பாடலில் வரும் ஓரிடத்தின் கருத்தினை மட்டும் சொல்லி அப்பாடலைத் தான் நெடுநாட்களாகத் தேடிக்கொண்டிருப்பதாகத் திரு. தளிர் சுரேஷ் அவர்கள் பேராசிரியர் மகேசுவரி பாலச்சந்திரன் அவர்களின் பின்னூட்டத்தில் http://balaamagi.blogspot.com/2015/07/blog-post.html குறிப்பிட்டிருந்தார்.

ஆஹா….நாம் முட்டிமோதி நம் மண்டையை உடைத்த இந்தப் பாடலைத்தானே இவர் கேட்கிறார்…! இவருக்கும் பிடித்த பாடலா இது என்று எண்ணியபோது  உற்சாகம் என்னைத் தொற்றிக்கொண்டது. இதுபோன்ற விஷயத்தில் ஒத்த ரசனை உள்ளவர்களைச் சந்திக்கும் போது தோன்றும் பேரானந்தத்தை வார்த்தைகளால் வடித்துவிட முடியாது.

யாரும் எனக்கு முன்பு எங்கே விடையைச் சொல்லிவிடப் போகிறார்களோ என்ற வேகத்தில், ‘எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!!’ என்று கைதூக்கி, என்னை நோக்கியான கேள்வி  இல்லையென்றபோதும், தெரிந்த விடையொன்றை அடுத்தவர் சொல்லிவிடும் முன், நான் முதலில் சொல்லும்  சிறுபிள்ளையின் அவசரம் பள்ளிப் பருவத்தின்பின், எனக்கிப்போதுதான் வாய்த்தது. ‘இந்தப் பாடல்தானே?’ என அந்தப்பாடலைக் குறிப்பிட்டு மதிப்பிற்குரிய பாலமகி அவர்களின் தளத்தில் கேட்டதோடல்லாமல், நண்பர். தளிர் . சுரேஷ் அவர்களின் தளத்திலும் அது பற்றித் தெரியப்படுத்தியிருந்தேன்.

ஆம். அதே பாடல்தான் என்று சொன்ன அவர் அது குறித்து பதிவொன்றை இடுவதாய்ச் சொல்லி இருந்தார். அப்பதிவினை நேற்றே காண நேர்ந்தது. ( காண..இங்கே சொடுக்குக )

மனம் சற்றுத் துள்ளியது. பாடல் என்னைப் பிடித்து நான் அதைப் படித்து இருண்மையின் ஒளி விலக விலக அதன் நயங்களைக் கண்டு வசமிழந்த அந்த அற்புதக் கணங்களின்  மாயவெளியில் அது மீண்டும் என்னை வீசி எறிந்தது.

முக்கியமாய் இது திரைப்படப்பாடல் இல்லை என்பதை இந்தத் தருணத்தில் சொல்லி விடுகிறேன். ஒருவேளை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழப்பாடல் ஒன்றின் அடுக்குகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நுட்பங்களை நீங்கள் அறிய விரும்பினால் மட்டும் இனித்தொடரலாம்.

அந்தப் பாடலின் பொருள்.

அதை இரு பெருமக்கள் விளக்கியவிதம்.

அதையும் புரிந்துகொள்ள முடியாமல் மண்டையை உடைத்துக்கொண்டது..
பொருள் புலப்படப் புலப்பட, அட….இப்படியெல்லாம் கூட ஒரு பாடலுக்குப் பொருள் சொல்ல முடியுமா என்று என் வியப்பின் விழி விரிந்த தருணங்கள் மீண்டும் மீண்டும் கண்முன் வந்து கொண்டிருந்தன.

வார்த்தைகளின் நிழலில் இருந்து, மிகப்பெரிய தருக்களை மீட்டெடுத்து மீட்டெடுத்துப் பாடல் என்கிற பெயரில் பெருவனமொன்றை உருவாக்கிக் காட்டி இருந்தார்கள் இப்பாடலில் இவ்விருவருமே.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியிருந்த நச்சினார்க்கினியரும் பேராசிரியரும் தான் அந்த இருவர்.

தமிழோடு என் மோதல் தொடங்கவும் அது காதலாய் மலரவும் காரணமானவர் இந்த நச்சினார்க்கினியர்தான்.

சித்திரக்கதைகள் நாவல்கள் என எல்லோரையும் போலத் தொடங்கிய வாசிப்பு, பண்டைய இலக்கியத்திற்கு மாறியபோது நான் எழுதும் பேசும் ஒரு மொழியின் வடிவத்தை என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை என்கிற பேரதிர்ச்சியை என்னால் சற்றும் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை. இயலாமையின் கோபம், பஞ்சுப் பொதியொன்றின் உள்கழலும் நெருப்பைப் போல் என்னை எரித்து என்னுள் கனன்று கொண்டிருந்தது.

அதன் பெருவேகம், பழம்பாடல்களைப் படிக்கும் ஒவ்வொருமுறையும் அலுத்தும் களைத்தும்போய் மூச்சுமுட்டி நான் மேலெழும் போதெல்லாம் பேராவேசம் கொண்டு என் தலையை மீண்டும் அதே இலக்கியங்களுள் அமிழ்த்தும். இப்படி நான் படித்த உணர்ந்த பாடல்கள் வெகுசிலவே என்றாலும் அவற்றோடு நான் போராடிய போராட்டம் மிகக் கடுமையானது.

சங்க இலக்கியத்தைப் படிக்க ஆரம்பிக்கிற ஒருவர், நிச்சயமாய்த் தமிழின்மேலுள்ள கொஞ்ச நஞ்ச ஆசையையும் விட்டிருப்பார் என்றே தோன்றும் அப்பொழுதெல்லாம். அலுப்பும், களைப்பும், சலிப்பும் மேலிடத்தான் செய்யும் ஒவ்வொருமுறையும். இப்படி இதைப் படிக்க வேண்டுமா? எனக்கு அப்படித்தான் இருந்தது.

அது   போதிய முயற்சி செய்யாமல்,  மந்திரத்தால் நம் கைகளில் மாங்காயை விழவைத்துவிடலாம், என நினைப்பதைப் போல, வாசித்த உடனே புரிந்து எளிதாகக் கடந்து விடலாம் என்னும் என் பேதைமையில் கட்டமைக்கப்பட்ட வெறுங்கனவு என்பது பின்பு தெரிந்தது.

எளிமையில்  இருந்து கடினத்திற்கு என்ற கற்றல் முறையின் படி முதலில் சங்க இலக்கியங்களுக்கு , புரியும்படி எளிய முறையில் வரிக்குவரி, வார்த்தைகளுக்குப் பொருள் சொல்லிய இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியர்களையே படிக்கத் தொடங்கினேன். தொடர்ந்த வாசிப்பில் அவர்கள் உரைகளின் இரண்டு முக்கியமான தன்மைகளை  வழியே உணர முடிந்தது.

அவற்றைப் படிப்பது என்பது பெரும்பாலும், கவிதை ஒன்றின் மோசமான மொழிபெயர்ப்பைப் படிக்கும் அனுபவமாகவே இருந்தது.

இன்னொன்று  ஒவ்வொரு வார்த்தைக்குமான மேற்கோளுடன் பக்கம் பக்கமாய் உரை கூறிப் பாடற்பொருளில் இருந்து மிக விலகிச்செல்வது உரை எழுதுபவர்களின் புலமையைக் காட்டுவதாகத் தெரிந்தது.

நிச்சயமாய் அவர்களின் புலமையின் மீதோ அளப்பரிய படிப்பின்மீதோ தமிழ்க்காதலின் மீதோ எனக்குத் துளியளவும் ஐயமில்லை.

ஆனால் இவ்வுரைகளைக் காணும்போதெல்லாம், கவிதை இறந்துபோன பழைய இலக்கியமொன்றின் நினைவுச் சின்னங்களாய் மட்டுமே இவை எனக்குக் காட்சியளித்தன.

என் மதிப்பிற்குரிய பேராசிரியர். மதிவாணன் ஐயா தான் பழைய இலக்கிய உரைகளின்பால் என் கவனம் திரும்பக் காரணமானவர்.

நச்சினார்க்கினியரையும் பேராசிரியரையும் பரிமேலழகரையும் நான் படிக்கத் தொடங்கியது  அவரது பரிந்துரையினால்தான்.

படிக்கத் தொடங்கினேனே தவிர, அவர்கள் சொல்லாடலைப் புரிந்து கொள்வதென்பது பாடலைவிடக் கடினமாக இருந்தது என்பதே உண்மை. திருடனுக்குப் பயந்து கொலைகாரனிடம் மாட்டிக் கொண்டதுபோல...!

அவர்கள் மேல் பிழையில்லை. என் அறிவு அவ்வளவுதான்.

இதையேன் படிக்க இவ்வளவு தடுமாற வேண்டி இருக்கிறது?

பாடல் புரிவில்லை சரி.

பொருள் என்று ஏதோ எழுதியிருக்கிறார்கள். அதுவும் புரியவில்லை. ஆனால் ஏதோ சொல்வருகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.

உறக்கமில்லாமல் நீளும் என் இரவுகளுக்கான தூக்க மருந்தாக நிறைய நாட்களில், நச்சினார்க்கினியர் மாறிப்போனார். இரு பக்கங்களைப் புரட்டினாலே அனஸ்தீஷியாவில் மயக்கமடையாதவன் கூட ஆழ்ந்த மயக்க நிலைக்கே போய்விடுவான். அப்படி ஒரு கடுநடை. இத்தனைக்கும் அவர் கவிஞரோ படைப்பாளியோ இல்லை. பாடலுக்கு  உரைசொன்னவர் மாத்திரம்தான்.

அடுத்தடுத்த வாசிப்புகளில்,  கொஞ்சம் கொஞ்சமாக இந்த இருண்மை தொலைய ஆரம்பித்திருந்தது. அதற்குப் பின் உறக்கம் வரவழைத்தவனின் நடையில் மனம் மயங்கித் தூக்கம் கெட ஆரம்பித்தது. தொந்தரவற்ற இரவுகளில் சில சொல்லாடல்களுக்கு நச்சினார்க்கினியர் நூறு நூறு ஆண்டுகள் கடத்தித் தந்திருக்கும் தமிழ்ப்புலமை மரபின் பேரொளியின் முன்  பிரம்மை பிடித்து நெடுநேரம் நின்றிருப்பேன்.

ஒரு வார்த்தைக்கே இப்படியென்றால், நச்சினார்க்கினியன் ஒரு பாடல்முழுவதும் தன் அறிவின் மணம் கமழச்செய்த பாடல்களில், திரு. தளிர்.சுரேஷ் அவர்கள் தேடிய இந்தப்பாடல் மிக மதிப்பு மிக்கது.

பாடலையும் அதற்குச் சொல்லப்பட்டுவரும் வழக்கமான பொருளையும் முதலில் சொல்லிவிடுகிறேன். 

பின் இந்தப் பாடலின் மேலும் இரண்டு வாசிப்பு நிலைகள்.

ஒன்று, நச்சினார்க்கினியர் மற்றும் பேராசிரியர் இவர்களின் உரையை நான் புரிந்து கொண்டதை ஒட்டியது.

இன்னொன்று, அவ்வுரைகளின் வாயிலாக நாம் இன்னும் கடக்க வேண்டியது.

பாடல் இதுதான்,


'முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே." ( 4. அகநானூறு. )

பாடலின் பொருளை இருவரிகளில் சொல்லுவதானால், இப்படிச் சொல்லிவிடலாம்.

தோழி சொல்கிறாள்,

வருந்தாதே! சம்பாதிப்பதற்காக உன்னை விட்டுச் சென்ற உன் கணவன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறான்.“

இதற்கு இவ்வளவு நீட்டி முழக்கிப் புரியாத மொழியில் சொன்னால் என்ன தான் செய்வது? :)

சரி என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் பார்த்துவிடுவோமே..!

வாசிப்பு – 1.

பொதுவாக முதலில் இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியர்களால் இதன் பொருள் எப்படிச் சொல்லப்படுகிறது என்று பார்ப்போம்.

தோழி தலைவனின் வருகையைக் குறித்து இப்படிச் சொல்கிறாள்.

'முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ - முல்லை அரும்புகிறது. தேற்றா , கொன்றை ஆகிய மரங்களின் மலர்கள் விரியத் தொடங்கி இருக்கின்றன.

இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவல் அடைய இரலை தெறிப்ப -இரும்பை முறுக்கிவிட்டதைப் போலத் தோன்றும் இரலை என்னும் ஒருவகை மான்கள் கற்கள் நிறைந்த பள்ளங்களிலே துள்ளிக் குதிக்கின்றன.

கருவி வானம் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் -
காடுகளில் நீரில்லாத வருத்தம் நீங்க மேகம் தன் துளிகளைச் சிந்திக் கார்ப்பருவத்தைத் தோற்றுவிக்கிறது.

குறும்பொறை நாடன் கறங்கிசை விழவின் உறந்தைக் குணாதுநெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே - சிறுமலையைச்  சார்ந்தவனான தலைவன், எப்பொழுதும் விழாக்கள் நடப்பதால் ஆரவாரம் நிரம்பிய உறையூருக்குக் கிழக்கே காணப்படும், பெரிய மலையில் பூக்கும், காந்தள் பூவின் இதழ் விரிவதால் உண்டாகும் மணம், அதனை ஒத்த உன்னுடைய அழகினை நினைத்தபடியே,

குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் - வளைந்து  தலையாட்டிக்கொண்டிருக்கும் கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர்களைக் கொண்ட குதிரைகளுக்குப் பூட்டப்பட்டுள்ள கடிவாளத்தை நெகிழவிட்டபடி,

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும் - பூக்கள் நிறைந்துள்ள சோலையில் தன் பெடையுடன் தேனருந்தும் வண்டு அஞ்சி ஓடாமல் இருக்கத் தன் தேரிலுள்ள மணியின் நாவினைக் கட்டி ஓசை எழுப்பாமல் தன் தேரினை ஓட்டியபடி வந்துகொண்டிருக்கிறான்.
.
வாசிப்பு – 2

( நச்சினார்க்கினியர் , பேராசிரியர் சொல்லும் உரை )

'முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ- முல்லை மலர் தோன்றும்போது கூரிய நுனிகளை உடையது ( வைந்நுனை) என்று கூறுவதால், அவை இப்போதுதான் தோன்றியிருக்கிறது. சிறிது நேரத்தில் இதன் கூர்மை மாறிச் சட்டென அவிழ்ந்து மலராகிவிடும். மலரும் வரை மென்மையாய்த் தோன்றாமல், வன்மையாய்க் கூர்மையை உடையதாக,  கூம்பி இருப்பது போலத்தான் தோன்றும். ஆனால் மலரும் தருணம் வரும்போது சட்டென மலர்ந்துவிடும்.

முல்லைக் கொடியில் கூர்மையான மொட்டுகள் தோன்றி இருக்கின்றன என்றால், தேற்றா (இல்லம்) கொன்றை போன்ற மரங்களின் பூக்கள் தம் மொட்டுகளை விரித்து மலரத்தொடங்கி இருக்கின்றன. ஏனெனில் முல்லைக் கொடியைப் போல அவை சட்டென மலர்வதில்லை. அவற்றின் பூக்கள் மெல்ல மலர்ந்து நீடித்திருக்கக் கூடியன.

இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பில் - இரும்பினை முறுக்கிவிட்டாற் போன்ற மானின் கொம்புகள் என்பது இங்கே அதன் வடிவத்திற்கு மட்டுமே உவமையாகச் சொல்லப்படவில்லை. இரும்பை முறுக்க அதனைப் பழுக்கக் காய்ச்ச வேண்டும். அப்படிக் காய்ச்சி முறுக்கி அதனை நீரில் தோய்த்து எடுத்த பின்பும் இரும்பின் சூடு நெடுநேரம் அதில் மிச்சம் இருப்பதைப் போல, கோடைகாலம் மாறி மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. நிலம் நீரால் நனைந்தாலும்  கோடையின் வெப்பம் இன்னமும் நிலத்தில் மிச்சம் இருக்கிறது. கோடையின் வெம்மை மிச்சம் இருக்கிறது என்பதனால் மழைக்காலம் இப்பொழுதுதான் தொடங்கி இருக்கிறது என்பதற்கான குறிப்பையும் இந்த உவமை உள்ளடக்கி இருக்கிறது.

பரலவல் அடைய இரலை தெறிப்ப - இரலை என்னும் ஒருவகை மான்கள் சிறுகுழிகளில் இருக்கின்ற குறைந்த அளவு நீரைப் பருக முடியாமல் வருந்தி, பரலைக் கற்கள் கிடக்கின்ற பள்ளத்தை அடைந்து அங்கு சேர்ந்துள்ள நீரை அருந்தித் துள்ளிக்குதிக்கின்றன.

கருவி வானம் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் -
 நீரின்றிக் காய்ந்த நிலத்தில் வாழும் உயிர்களின்  துன்பம் நீங்கும்படி, திரண்ட மேகம், தான் விரைந்து செல்லும் பயணத்தின் இடையே, காற்று இடைப்படுதலால் சிறு துளிகளைச் சிதற்றி மழைக்காலம் வந்துவிட்டது என்பதனை உணர்த்துகிறது.

மேகங்கள் தம் பயணத்தின் இடையே சிறுசிறு துளிகளைச் சிந்திச் செல்கின்றன என்பதால் அவை இங்கே தங்கிப் பொழியும் அளவிற்குப் பெருமழை இன்னும் ஆரம்பிக்கவில்லை, கார்காலம் இப்பொழுதுதான் தொடங்கி இருக்கிறது என்பதற்கான குறிப்பு இதில் இருக்கிறது.

 ( உன் கணவன் கார்காலமாகியும் வரவில்லை. சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் இருந்துவிட்டானோ என்று எண்ணிவிடாதே!
கார்காலம் இப்பொழுதுதான் தொடங்கி இருக்கின்றது என்பதைக் குறிப்பிடத்தான் கார்காலத்தின் தொடக்கத்தில் நிகழும் இத்தனை செய்திகளையும் தோழி சொல்கிறாள். )

குறும்பொறை நாடன் கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது - சிறிய மலைநாட்டைச் சேர்ந்த தலைவன் விழாக்களால் எப்பொழுதும் ஆரவாரம் மிகுந்து உறையூரின் கிழக்கே

 நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே – நீண்ட பெரிய குன்றுகளில் பூக்கும் இறைவனுக்கு உகந்த மலரான காந்தள் போல இருக்கும் உன் கைகள், நாட்களானதால், காந்தள் மலர் காய்ந்து உதிர்வதைப்போல உன் தோள்மெலிதலால், நீ அணிந்திருக்கும் வளையல்கள் நெகிழந்து வீழ்கின்றன. அம்மலர்போல உன்னிடமிருந்து கமழும் நறுமணத்தை  நினைந்து அவன் பிரிவால் நீ இழந்த  உன் நலத்தை எண்ணியபடியே,

( மாணலம் – தலைவன் பொருள் தேடிப் பிரிந்தபோது அவள் உடன்பட்டாலும், அவளுடைய நலம் அதற்கு உடன்படாமல் மெலிந்ததால் அது மாணலம் எனப்பட்டது –நச்.)

குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி

( குரங்கு – வளைந்த; உளை – மயிர்; பொலிதல் – அழகாய்த் தோன்றல்;
கொய் – கொய்யப்படுகின்ற; சுவல் – பிடரி )

கத்தரிக்கப்படாதிருந்தால் பெருகியும், கத்தரிக்கப்படுவதால் தொடர்ந்து அவ்வாறே தன்நிலைகெடாமல் இருக்கும்படிப் பராமரிக்கப்படுவதுமான பிடரி மயிர்களைக் கொண்ட குதிரையில்,

( இங்கு, தலைவிமீது உள்ள அன்பினால் தன்னுடைய உணர்வுகள் மிகுந்தால் சென்ற இடத்தில்  பொருளீட்டாமல் திரும்ப வேண்டியிருக்கும். அதே நேரம், மனைவியின் மீதுள்ள அன்பை முற்றிலும் அழிக்கவும் முடியாது. எனவே மிகாமலும் குறையாமலும் அவள் மேல் கொண்ட அன்பைக் காக்கும் மனவலிமை பெற்றவன் தலைவன். அவனது மன வலிமையைத்தான் இங்கு மயிர் அளவாகக் கத்தரிக்கப்படும் குதிரையாகத் தோழி காட்டுகிறாள். – நச். பேரா. )

நரம்பார்த் தன்ன வாங்குவள் பரிய – இறுகக் கட்டப்பட்ட கடிவாளம், அதன் கழுத்து அசையும்போதெல்லாம் ஏற்படுத்தும் ஒலி,  யாழின் நரம்பின் குற்றத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது அறியப்படும் நான்கு குற்றங்களுள் ஒன்றான ஆர்ப்பு என்னும் ஓசையினைப் போலத் தோன்றும். ( வண்டு நம் காதருகே பறக்கும்போது ஏற்படும் ஓசையைப் போன்றது இது )

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும்
சோலையில் வசிக்கும் பறவையினமாகிய வண்டும், தேனுண்ணும் பூச்சியும், தாதுண்ணும் சுரும்பும் ஒலியெழுப்பும் மலர்கள் பூத்தகாடு.

அங்குள்ள பூக்களில் உள்ள தேனை உண்டும், தாது நுகர்ந்தும், தம் இணையுடன் கலந்து இன்புற்றிருக்கின்றன இந்தப் பறவைகள்.

உண்பதற்குத் தேவையான உணவை உண்டு பின் தன் இணையுடன் சேரும் இந்தப் பறவைகளைப் போலத்தான், வாழ்வதற்குத் தேவையான பொருளினை ஈட்டி இல்லறம் நடத்தி இன்புறுவதற்காகத் தலைவன் கண்ணெட்டும் தொலைவில் வந்து கொண்டிருக்கிறான்.

தான் வரும்வழியில் தன் தேரில் மணி ஒலிக்குமானால் துணையுடன் இன்புறும் அப்பறவைகள் உண்ணாமல் பறக்கும் என்றும், இணையாமல் பிரியும் என்றும் அஞ்சியே அந்த மணியின் உள்ளிருக்கும் ஒலிசெய்யும் நாவினை, ஓசை எழுப்பாமல்  கட்டியபடி வருகிறான்.

அவனது மாண்பு அத்தகையது.

(‘பேதுறல் அஞ்சி‘ என வருகிறதே இங்கு அஞ்சுதல் தலைவனுக்குரிய குணமோ என்றால் இங்கு வரும் அச்சம் உயிர்கள் மேல் உள்ள கருணையால் வருவது.-நச்)

மணி ஒலி கேட்டால் துணையுடன் இருக்கும் வண்டு அஞ்சும் என்று மணியின் நாவினை இயங்காமல் கட்டியதாலும், தலைவியிடம் வாக்களித்தற்கு ஏற்ப சொன்னபடி சொன்ன காலத்தில் வந்துகொண்டிருப்பதாலும்  அவன் செய்த வினை மாண்புடைய வினையாயிற்று.-நச்.

அவ்வாறு வரும் தலைவனை நான் கண்டேன் அவன் வந்து கொண்டிருக்கிறான் என்கிறாள் தோழி.

சிறு உயிர்களுக்குக்கூட இடையூறு செய்யும் மனம் இல்லாதவன் தன் உயிரென நினைக்கும் உன்னை வருந்தவிடுவானா? என்பது தோழி வண்டுகளை வைத்துச் சொல்வதன் பொருள்.

தலைவன் வந்தால் தேர்மணி ஓசை கேட்குமே என்று தலைவி நினைப்பாள் என்பதற்காகவே, மணி நாவினைக் கட்டியதால்அவ்வோசை கேட்காது என்பதைக் கூறுகிறாள் தோழி.

என்றாலும், புரவியின் கடிவாளங்கள் உரசும்போது ஏற்படும் ஒலி கூடவா கேட்காது எனத் தலைவி எண்ணக்கூடும் என்பதற்காகவே அது வண்டுகளின் ரீங்கார ஓசைபோல் இருப்பதால், இங்குள்ள வண்டுகள் ஏற்படுத்தும் ஓசையோடு ஓசையாய்க் கலந்து உன் செவிகள் அதனைப் பிரித்தறிய முடியாமற்போகும் என்று கூறுகிறாள்.

தொல்காப்பியச் செய்யுளியலில் நோக்கு என்னும் உறுப்பை விளக்க பேராசிரியராலும் நச்சினார்க்கினியராலும் இந்தப் பாடல் மேற்கோள் காட்டப்பட்டு அளிக்கப்பட்ட உரையின் பொருள் தான் இரண்டாம் வாசிப்பில் நான் தொகுத்திருப்பது. ( தொல். செய்யுளியல் -409 )

 இருபுலவர்பெருமக்களின் உரை இதோ அவர்களின் நடையில்!

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் எப்படி இருந்தது என்பதை வாசித்துத்தான் பாருங்களேன.

பேராசிரியர் உரை.

இனிஅடிநிலை காறும்என்றதனாற் செய்யுள் முழுவதும் எவ்வகை யுறுப்புங் கூட்டி நோக்கி யுணருமாறுங் கூறுதும்; முல்லை யென்பது முதலாகக் கானம் என்பதீறாக நாற்சொல் லியலான் யாப்பு வழிப்பட்டதாயினும் பருவங் காட்டி வற்புறுக்கும் தோழி பருவந் தொடங்கிய துணையே காண் என்று வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணர வைத்தான்; ‘உவக்காண் தோன்றுங் குறும்பொறை நாடன்என்னுந் துணையும் தலைமகனது காதன்மிகுதி கூறி வற்புறுத்தினாளென்பது நோக்கி யுணர வைத்தான்; ஒழிந்த அடி நிலைகாறும் பிரிந்த காலம் அணித்தெனக் கூறி வற்புறுத்தினா ளென்பது நோக்கி யுணர வைத்தான் எனப்படும்; என்னை?

முல்லை யென்னதுவைந்நுனைஎன்றதனான் அவை அரும்பியது அணித்தென்பது பெறப்பட்டது; சின்னாள் கழியின் வைந்நுனை யாகாது மெல்லென்னு மாகலின். இல்லமும் கொன்றையும் மெல்லென்ற பிணி யவிழ்ந்தன வென்றான், முல்லைக்கொடி கரிந்த துணை அவை முதல் கெடாது, முல்லை யரும்பிய காலத்து மலர்ந்தமையின். இரலை மருப்பினை இரும்பு திரித்தன்ன மருப்பு என்றதூஉம், நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்பம் தணிந்தில; இரும்பு முறுக்கி விட்ட வழி வெப்பம் மாறா (விட்ட) வாறு போல வெம்பா நின்றன இன்னும் என்றவாறு. ‘பரலவ லடைய இரலை தெறிப்பஎனவே, பரல்படு குழி தோறும் தெளிந்து நின்ற நீர்க்க விருந்தின வாகலாற் பலகாலும் நீர் பருகியும் அப் பரலவலினது அடைகரை விடாது துள்ளகின்றனவென அதுவும் பருவந் தொடங்கினமை வறியவாறாயிற்று. ‘கருவி வானங் கதழுறை சிதறிஎன்பதூஉம் பலவுறுப்புங் குறைபடாது தொக்கு நின்றன மேகம் தமது வீக்கத்திடைக் காற்றெறியபபடுதலின் விரைந்து துளி சிதறின வென் றவற்றையும் புதுமை கூறினான். எனவே இவை யெல்லாம் பருவந் தொடங்கி யணித்தென்றமையின், வற்புறுத்தற்கு இலேசாயிற்று. ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவிஎன்பது, கொய்யாத உளை பல்கியும் கொய்த உளை பலகாலும் கொய்ய வேண்டு தலுமுடைய குதிரை யென்றவாறு; எனவே தனது மனப்புகழ்ச்சி கூறியவாறு.

அத்துணை மிகுதியுடைய குதிரை பூட்டின வாரொலி விலக்காது மணியொலி விலக்கி வாராநின்றான், அங்ஙனம் மாட்சிமைப் பட்ட மாண் தேர னாதலான் என்றவாறு. அதற்கென்னை காரண மெனின், ‘துணையொடு வதியும் தாதுண் பறவைஎனவே, பிரிவஞ்சி யென்றவாறு. மணிநா வொலி கேட்பின் வண்டு வெருவு மாகலின் அது கேளாமை மணி நாவினை யியங்காமை யாப்பித்த மாண் வினைத் தேரனாகி வாரா நின்றானென இவையெல்லாம் தலைமகள் வன்புறைக் கேதுவாயின. ‘கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தள்தெய்வமலை யாகலான்; அதனுள் அமன்ற காந்தளைத் தெய்வப் பூ வெனக் கூறி, அவை போதவிழ்ந்தாற் போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமணம் கமழ்ந்த நின் கைத்தொடிகள் அவை அரியவாகிப் பிரிந்த காலத்துப் போன்று வடிவொத்து மணங்குறைபட்ட துணையேயால் அவர் பிரிந்து செய்த தன்மையின் என இதுவும் வன்புறைக்கே உறுப்பாயிற்று. இவ்வாறே பலவும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகியசொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா வடிநிலை காறும்என அடங்கக் கூறி நோக்குதற்கும் காரணம் நோக்கென்றான் என்பது.“

இனி நச்சினார்க்கினியர் கூறுவது,

( செய்யுளியலுக்கான இவரது உரை  இணையத்தில் இல்லை.)

வைந்நுனை யென்றதனா லலருந்துணையு மெல்லென்னாது வன்மையவாய்க் கூரியதாய் நிற்றலி னரும்பியணித்தென்பது கூறிற்று. இல்லமுங்  கொன்றையும் பிணியவிழ்ந்தன வென்றது அவையு மரமாதலிற் கடிதிற்கரியவாகலிற் கடிதிற்கரிந்த முல்லைக்கு முன்னே மெல்லிய பிணியவிழ்ந்தமை கூறிற்று.

காய்ந்தவிரும்பு முறுக்கிவிட்ட வழியும் வெப்பமாறாதவாறு போல நீர் தோய்ந்தும் வெப்பமின்னுந்தணிந்தில வென்பது தோன்ற இரும்புதிரித்தன்ன மருப்பென்றார். இரலை குழிதொறுந் தெளிந்துநின்ற நீர்க்கு வருந்தினவாதலின் பல்கால் நீர்பருகுதற்குப் பரலயை உடைய பள்ளத்தைச் சேர நின்றது என்றதாம்.

இத்துணையும் பருவம் தொடங்கிய துணையே வற்புறுத்திக் கூறிற்று.

புலம்பு முழுவது நீங்கிற்றென்னா தொருபுடை தோன்றப் புறக்கொடுத்ததென்றமையின் அதுவும் பருவம் தொடங்கிய துணையே கூறிற்று. தொகுதியை உடைய மேகம் காற்றின் விசையான் விரைந்த கொடுந்துளியைச் சிதறிற்றெனவே புதுமை கூறிற்று. இத்துணையும் பருவந்தொடங்கி அணித்தென்றலின் வற்புறுத்தற்கிலேசானமை நோக்கிற்று.

கொய்யாத உளை பெருகுதலும் கொய்த உளை பல்காற் கொய்யப் பெருக வேண்டுதலும் கூறவே குதிரை மனச்செருக்குக் கூறிற்றாம்.

அதன் கழுத்துவளையும் படி விசிததவாரொலி நரம்பிற் கோதிய நால்வகைக் குற்றத்தினு மார்ப்பன்னுங் குற்றமெய்திய நரம்போசைபோல விசைப்பவென்க.

பூத்த பொங்க ரென்பதனாற் பசிப்பிணி தீர நுகரும் பொருளை யது குறைவறக் கொடுப்ப உண்டு மகிழ்ந்து பின்புதாம் நுகரா நின்று வதியுமெனவே, யாமுமில்லறந் நிகழ்த்துதற்கு நுகர்தற்குமேற்ற பொருள்களைக் குறைவறப்பெற்றுப் பின்னின்பம் நுகர்தல்  வேண்டுமென்பது கூறினாளாம்.

பொங்கரில் பசிதீர்ந்து துணையொடு வதியும் பறவையுந் தாதை யுண்கிற பறவையும் கலக்கமுறுதற் கஞ்சி,  மணியொலியை வீக்கிய தேரனென்றதனால், காதலுமருளுமுடைமையின் அவற்றின் பிரிவிற்கும் பசிக்குமிரங்கினானெக் கூறவேயவையற்கு நின்கண்ணும் பெருகுமென்றாளாம்.

வதியும் பறவை வண்டுந்தேனுமென்பதுந் தாதுண் பறவை சுரும்பென்பதும், “ எங்குமோடி யிடருஞ் சுரும்புகாள் வண்டுகாள் மகிழ்தேனினங்காள் “ ( சிந்.குண. 42) எனப்பின்னுள்ளோர் கூறியவாற்றானுமுணர்க.

இதனாற் சேணிடை வரவை உணர்த்தும் மணியொலியை வாரொலி கேட்கு மணிமைக்கண்ணுங் கேளாயினையெனவு மவ்வாரொலி தாதுண்பறவை யொலிக்கணடங்குதலின் கேட்கின்றிலையெனவுங் கூறினாளாயிற்று. வாரொலி நரம்போசை போறலின் பெருவரவாயிற்று. மாண்வினைத்தேரனென்றான், அவன் கருத்திற்கேற்ப வினைமுடித்தமை தோன்ற; எனவே வன்புறைக் கேதுவாயின தெய்வந் தங்கு மலையாதலிற் றெய்வ மணநாறுங் காந்தளினுடைய போதவிழா நின்றமலர்போல அவர் புணர்ந்த காலத்துப் புதுமண நாறும்மரிவை யெனவே, யவர்பிரிந்து சேய்த்தகன்றென வன்புறைக்கேதுவாயிற்று. ஆய்தொடி யென்றது தோண்மெலிந்துழி அயலார்க்குப் புறமறைத்தல் வேண்டிச் செருகுந் தன்மையின்றி யணிந்த நிலையே கிடக்குந் தொடி யென்றவாறாம்.
இதுவும் பிரிந்து தேய்த்தென்றவாறதாம்.

ஈண்டு மாணலம் என்றது அவன் பிரிவுணர்த்தியகாலத்துப் பிரிவிற்குடம்பட்டாள் போன்றுடம்பாடாது நின்ற நலத்தை.:
அது மெய்ப்பாடாம்.

இங்ஙணம் கோடல் நோக்கென்றுணர்க.“

இதுவரை நாம் பார்த்தது உரையாசிரியர்கள் சொன்னதன் பொருள்தான். ஆனால் நச்சினார்க்கினியரின் உரையில் சில தவறுகள் இருப்பதாகத் தோன்றுகிறது. அவை ஆய்வுக்குரியன. அது சுவடி பெயர்த்து எழுதும்போது நேர்ந்திருக்கலாம். அல்லது என் கருத்தில் பிழை  இருக்கலாம்.

நோக்கு என்றால் என்ன?

சங்கப் பாடலைப் பொருளுடன் படித்து மீள வாசித்தலின்போது ( மூன்றாவது வாசிப்பு) இப்பாடலை எப்படி விளக்கலாம்?

இதில் வேறு சுவைகள் என்னென்ன இருக்கின்றன?

பேராசிரியர், நச்சினார்க்கினியரின் உரையில்  மேலும் விளக்கம் அளிக்க வேண்டிய இடங்கள் எவை?  நச்சினார்க்கினியர் உரையில் உள்ள சற்று இடறலான அந்தப் பகுதி எது?

அடுத்த பதிவு நிச்சயமாய் இதன் தொடர்ச்சிதான்.

தொடர்வோம்.

நன்றி.

வலைப்பதிவர்கள்,

மதிப்பிற்குரிய. திரு. தளிர். சுரேஷ்.

பேராசிரியர். மகேசுவரி பாலச்சந்திரன்.

பட உதவி - நன்றி. http://2.bp.blogspot.com/

60 comments:

  1. //படிக்கத் தொடங்கினேனே தவிர, அவர்கள் சொல்லாடலைப் புரிந்து கொள்வதென்பது பாடலைவிடக் கடினமாக இருந்தது என்பதே உண்மை. //
    //அவர்கள் மேல் பிழையில்லை. என் அறிவு அவ்வளவுதான்.//

    உண்மைதான் பாடலைவிட அவர்களின் உரை புரிந்துகொள்ள கடினமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் உங்களது விளக்கத்தால் பாடலின் பொருள் அறிந்து இரசித்தேன்!

    கடற்கரை ஓரத்தில் அமர்ந்து மற்றவர்கள் நீந்துவதைப் பார்த்து இரசிப்பது போல்,
    உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் தமிழ்க் கடலில் மூழ்கி முத்து எடுப்பதை. என்னைப் போன்றோர் உங்கள் பதிவுகள் மூலம் படித்து இரசித்துக் கொண்டிருக்கிறோம்.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள்.

      உங்கள் வருகையும் முதற்பின்னூட்டமும் காண மகிழ்ச்சி.

      உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனக்கும் நீச்சல் தெரியாது.

      நீந்துவதைப் பார்த்தது ரசிப்பவன்தான் நானும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  2. என் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்த பாடலுக்கு இத்தனை அருமையான விளக்கத்தைச் சொல்லி அசத்திவிட்டீர்கள். தமிழாசிரியர், சொன்ன உரையோடு, என்னிடம் இருந்த அந்த பாடல்- அதற்கான தற்கால உரையை வாசித்து கொஞ்சம் எளிமையாக்க நான் முயற்சித்தேன். // குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் // இந்த வரிகளுக்கு பொருள் சொல்ல உண்மையில் எனக்கு புரியவில்லை! தற்கால உரையும் அவ்வளவு சிறப்பாக இல்லை! எனவே அப்படியே விட்டிருப்பேன். உங்களின் விளக்கம் இந்த பாடலை மிகவும் சுவை கூட்டுகின்றது. சங்க இலக்கியங்களில் எனக்கு ஆர்வம் அதிகம் இருப்பினும் இப்படி பொருள் விளங்காமையால் கொஞ்சம் தள்ளி நிற்பதுண்டு. அதையும் மீறி இப்படிப்பட்ட பாடல்கள் நம்மை இலக்கியத்துக்குள் இழுக்கின்றன என்னும் போது அக்கால இலக்கிய சுவையின் வலிமை நன்கு புலப்படுகின்றது. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!

      அதெப்படி என் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல் என்று சொல்லலாம்?

      நம் மனதில் என்று சொல்லுங்கள்.

      இந்தப் பாடல் நயங்களில் ஒன்று

      நீங்கள் காட்டியது.

      “ நரம்பார்ப்ப பன்ன வாங்குவள் பரிய“ என்னும் இந்தப் பாடலின் வரியைத் தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில், மொழிமாற்றுப் பொருள் கோளுக்கு மேற்கோளாகக் காட்டும் நச்சினார்க்கினியர்,

      இதனை,

      “புரவியினது வாங்குவள் நரம்பு ஆர்ப்பு அன்ன பரிய “

      புரவியினது கடிவாளம் ( வாங்குவள்) யாழினின் நரம்பினை ஆர்த்தலின் போது ஏற்படும் ஒலிபோல இசைத்து அது வண்டுகள் செய்யும் ஒலியை ஒக்கும் என்கிறார்.

      இன்னும் இப்பதிவில் சொல்லப்படாத உரையாசிரியர் கருத்தும், சற்றுச் சிக்கலுள்ள இடங்களும், உரைப்பொருளில் இருந்து விரியும் பொருளும் அடுத்த பதிவில்.

      இவற்றை முதலில் உங்கள் பின்னூட்டத்தில் பதியக் கருதினேன்.

      மிக நீண்டதால் இங்குப் பதிவிட்டுப்போனேன்.

      தங்களின் வருகையும் பார்வையும் காண இந்தப் பதிவிற்கென நான் பட்ட சிரமங்கள் காணாமல் போய்விட்டன.

      தங்களின் பாராட்டு உவப்பு.

      நன்றி.

      Delete
  3. இந்தப் பாடல் முதலில் தளிர் சுரேஷ் அவர்களின் தளத்தில் வாசித்தோம் அவர் உங்களிடம் இருந்து பெற்றதாகவும் சொல்லி இருந்தார். அப்பொதே தோன்றிவிட்டது தாங்களும் நீங்கள் அறிந்துகொண்டதப் பகிர்வீர்கள் என்று.

    இரு உரையாசிரியர்கள் கொடுத்துள்ளதாக,நச்சினார்க்கினியரின் உரையும் சேர்த்து நீங்கள் கொடுத்திருந்ததை வாசித்தால் புரியவில்லை என்பதே உண்மை. ஆனால் நீங்கள் முதலில் கொடுத்திருக்கும் வாசிப்பு 1 நன்றாகவே புரிந்தாலும், வாசிப்பு 2 இன்னும் மிக அழகாக இருப்பது போல் தோன்றியது மட்டுமல்லாமல் நன்றாகவே புரிந்தது.

    தலைவனின் மாண்பு பற்றிச் சொல்லிவரும் வரிகள் உவமை மிக அருமை! பாடல் எங்களுக்கும் மிகவும் பிடித்துப் போனது....

    நல்ல பல விளக்கங்கள், தாங்கள் அறிந்ததையும் இங்கு பகிர்வதற்கு மிக்க நன்றி சகோதரரே. தொடர்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      உரையாசிரியர்களின் உரைக்கு என்னால் முடிந்தவரை நியாயம் செய்திருக்கிறேன்.

      ஏதேனும் இருண்மைகள் இருந்தால் எனக்குப் புரிந்ததைச் சொல்லக் காத்திருக்கிறேன்.

      மூன்றாம் வாசிப்பு ஒன்று இருக்கிறது.

      அது என் வாசிப்பு.

      தாங்கள் என் பதிவினைத் தொடர்கின்றமைக்கும் கருத்திடுகின்றமைக்கும் ஊக்குவிக்கின்றமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. மலைகளுக்கு இடையே பழுத்த பலா போன்ற காமம் என்றொரு பொருள் வரும்குறுந்தொகை பாடல் என்று நினைக்கிறேன். கபிலரின் பாடல் என்ற நினைவு இருக்கிறது சிறுகோட்டு பெரும்பழம் பொருந்தியாங்கு என்று தொடரும் வரிகள்! இதற்கான உங்களின் அருமையான விளக்கம் கிடைக்குமா? காத்திருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.

      சில பதிவுகள் கழித்து நிச்சயம் பகிர்வோம் நண்பரே!

      இணையத்து இது போன்ற பாடல்களைப் பலரும் சுவைபட விளக்கி உள்ளமையைக் காண்கிறேன்.

      கூடுமானவரை,பழைய உரையன்றி புதிய விளக்கங்கள் எடுத்துக்காட்டப்பெறா பாடல்கள் இருக்கும்போதோ, ஏதேனும் கூடுதலாகச் சொல்லச் செய்திகள் இருக்கும்போதோ மாறுபட்ட கோணத்தில் கருத்தளிக்க வேண்டியிருக்கும் போதோ,
      அதையே பதியக் கருதுகிறேன்.

      இல்லாவிடின், கூறியது கூறலாயோ, நகலெடுத்து எழுதப்படுவதாயோ கருதப்படும் என்று நினைக்கிறேன்.

      நிச்சயம்,

      “வேரல் வேலி வேர்கோட் பலவினை“ பார்ப்போம்.


      வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி.

      Delete
  5. பாடலின் பொருள் விளக்கம் அறிந்தேன்... ரசித்தேன்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஐயா.

      Delete
  6. சிறந்த இலக்கிய ஆய்வு முயற்சி
    இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    ‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
    https://ial2.wordpress.com/2015/07/25/70/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி திரு யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம்.

      ற்று என்பது ற்ட்ட என்பது போல உச்சரிக்கப்படவேண்டும் எனக்கருதுகிறேன்.


      மலையாளத்தில் இதனோடு ஒத்த உச்சரிப்பு உண்டு.

      நீங்கள் கொடுத்த சுட்டி சுற்றிக்கொண்டே இருக்கிறது.

      நன்றி.

      Delete
  7. வணக்கம் ஐயா!

    பிரமித்துப் போனேன் பதிவைப் பார்த்து.
    ஆழ்ந்து அமர்ந்து ஆறுதலாக வாசித்து உள்வாங்க வேண்டிய பதிவு!
    இப்போதைக்கு நேரம் அரிதாக இருப்பதால்
    வரவினைப் பதிவிட்டுச் செல்கிறேன்!
    மீண்டும் வருவேன்! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      உங்கள் வருகையே மகிழ்ச்சிதானே..!!

      மெதுவாக நேரமிருக்க வாருங்கள்.

      நன்றி.

      Delete
    2. என்னவெனச் சொல்வேன்? பாடல் பொருள் புரிந்தபின் அற்புதமாக இருக்கிறது!
      இதற்கான உங்கள் தேடல் முயற்சியைப் பாராட்டியே ஆகவேண்டும்.
      பழத்தை உரித்துத் தந்துடன் மட்டுமல்லாது ஊட்டியும் விடுகின்றீர்கள் ஐயா!..
      இயன்றவரை புரிந்துகொண்டேன்.

      மிக மிக அருமையான பதிவும் பகிர்வும்!
      தேடல் ஆரம்பிக்கக் காரணமானவர்களுக்கும் உங்களுக்கும்
      உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்!

      Delete
    3. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  8. ".............இன்னொன்று ஒவ்வொரு வார்த்தைக்குமான மேற்கோளுடன் பக்கம் பக்கமாய் உரை கூறிப் பாடற்பொருளில் இருந்து மிக விலகிச்செல்வது உரை எழுதுபவர்களின் புலமையைக் காட்டுவதாகத் தெரிந்தது............." புலமைக் காட்டுவதுஎன்பது ஒரு புறமிருந்தாலும் பொருளை விளங்கவைப்பதற்காக பெருமுயற்சி எடுத்திருக்கலாம் அல்லவா? தங்களது சொற்றொடர் எதிர்மறைப் பொருளைத் தருவதைப்போலுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      சில உரை அரசர்களின் உரையில் சொல்லுக்கான தேடல் அதிகம் இருக்கிறது என்பதையும், கவிப்பொருண்மையில் இருந்து இத்தேடல் வாசகனை விலக்கி வைக்கிறது என்பதையும் சுட்டவே இவ்வாறு குறிப்பிட்டேன்.

      இதன் தொடர்ச்சியில் ஓரளவிற்கு இதனை விளக்க முடியும் என்று நம்புகிறேன்.

      தங்கள் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் வெளிப்படையான கருத்துகளுக்கும் நன்றி.

      Delete
  9. பாடலுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்திருப்பதால் அனுபவித்து ரசிக்க முடிந்தது. பாடலை விட உரையாசிரியர்களின் நடை கடினமாகத் தான் இருக்கிறது.
    நான் படித்துப் புரிந்துகொண்டதிலிருந்து, நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்-
    முல்லை அரும்பு வைத்தல், அதற்கு முன்பே கொன்றை மலரத்துவங்குதல், ஒன்றிரண்டு மழைத்தூறல் எனக் கார்காலம் துவங்குவதற்குரிய அறிகுறிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தோழி எடுத்துச்சொல்வதும் தலைவனுடைய அன்பு, கருணை முதலான மாண்புகளை விரித்துச் சொல்லி, அவன் சொன்னசொல் தவறாமல் வந்து விடுவான் என தலைவிக்குப் புரியவைப்பதும் தான் நோக்கு என்பது என் கருத்து. சரியா என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்.
    ‘நரம்பார்த் தன்ன வாங்குவள் பரிய,’ என்பதற்குப் பேராசிரியர் விளக்கம் ஏதும் சொல்லவில்லை.
    கொய்யாத உளை பெருகுதலும் கொய்த உளை பல்காற் கொய்யப் பெருக வேண்டுதலும் கூறவே குதிரை மனச்செருக்குக் கூறிற்றாம். என்பது நச்சினார்க்கினியர் இடறிய பகுதி என நினைக்கிறேன்.
    குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
    என்பதில் வெட்ட வேண்டிய சமயத்தில் பிடரி மயிர்களைக் கத்தரித்து அளவாகவும், அழகாகவும் குதிரையை வைத்திருப்பவன், ஏனோ தானோ என்றில்லாமல் எதிலும் ஓர் ஒழுங்கைக் கடைபிடிப்பவன். எனவே சொன்ன சொல் தவறாமல் கார் காலத்தில் திரும்பி வந்து விடுவான் என்று தோழி குறிப்பால் உணர்த்துகிறாளோ?
    நயமிக்க பாடலை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      இவ்வளவு ஆழமாகப் படித்துப் பின்னூட்டம் இடுவதற்கு முதலில் நன்றிகள்.

      என் விளக்கம் இது என்றாலும் எனது வாசிப்பு அடுத்துத்தான் வர இருக்கின்றது.

      நோக்கு பற்றி அதில் விளக்குகிறேன்.

      நரம்பார்த்தன்ன வாங்குவள் பரிய என்பதை உவமை கூறாது “குதிரை பூட்டின வாரொலி“ என மட்டும் இதனைக் குறிப்பிட்டுப் போகிறார்.

      நச்சினார்க்கினியர் இடறிய பகுதியாக நான் நினைப்பது இப்பகுதி அன்று. ( என் கருத்துத் தவறாகவும் இருக்கலாம். )

      அடுத்தடுத்த பதிவுகளில் அதைக் குறிப்பிடக் கருதுகிறேன்.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. பாடல் ஒன்று ,மூவரின் விளக்கத்தையும் விரும்பி படித்தேன் !

    ReplyDelete
    Replies
    1. நான்காமவனின் விளக்கமும் இருக்கிறது பகவானே!

      அதைப் படித்தபின் அந்த நாலு பேருக்கு நன்றி என்று விடாதீர்கள் வழக்கம் போல :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  11. பாதி தான் வாசிக்க முடிந்தது பிரமிக்க வைக்கின்றது உங்கள் பதிவுகள் என்றாலும். இதை வாசிக்க என் வாழ்நாளை வீணாக்கி விட்டேனோ என்று வருத்தப் படும் அளவுக்கு விருப்பம் இருக்கிறது இவற்றை எல்லாம் வாசித்து அறிய பொறுமையாக பல தடவை வாசித்து விளங்கிக் கொண்டால் இன்னும் இனிக்கும். மீண்டும் வருகிறேன். நன்றி நன்றி ! எம்மை எங்கெல்லாமோ அழைத்துச் செல்கிறீர்கள். உங்கள் விருப்பம் போல். நாமும் இசைந்து உங்கள் பின்னால் ....ஹா ஹா ..வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. பிரமிப்பதாயின் நீங்கள் பாடலை எழுதியவனையும் உரை எழுதியவனையும் அல்லவா பிரமிக்க வேண்டும்!!!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மா.

      Delete
  12. மீண்டும் வருகிறேன் நிறுத்தி நிதானமாக வாசித்த பின்னர்.

    ReplyDelete
  13. அன்புள்ள அய்யா,

    ஒரு பாடலும் சில நினைவுகளும்.... அகநானூறு பாடலை ( நச்சினார்க்கினியர் செய்யுளியலுக்கான இவரது உரை இணையத்தில் இல்லை என்றால் என்ன தாங்கள் எதுக்கு இருக்கு இருக்கிறீர்கள்) பேராசிரியர் சொல்லும் உரையின் மூலமும் தாங்கள் உரையும் நீண்டு உரைத்தது இபொழுதான் எங்களுக்கு உறைத்தது.

    ‘பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
    தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
    மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
    உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்......’

    அழகோ அழகு...! பாடல் அமுதோ அமுது...!
    நன்றி
    த.ம.+


    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. வணக்கம்
    ஐயா
    பாடலின் வரிகளுக்கு ஒவ்வொரு ஆசிரியரும் கூறியகருத்துக்கள் விளங்கி கொள்வது கடினமான விடயம் ஒரு தடவைக்கு பல தடவை படிக்கும் போதுதான் கருத்தை அறிய முடிகிறது. வாசிப்பு ஒன்றில் சொல்லியதை விட வாசிப்பு இரண்டில் விளக்கம் விரிவாக இருந்தாலும் விளங்கிகொள்வது இலகு ஐயா. தொடருங்கள் பகிர்வுக்கு நன்றி த.ம11

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு. ரூபன்.

      Delete
  16. பாடலை மட்டும் ப்டித்து புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் முழுமை பெறவில்லை. தங்கள் விளக்கம் படித்து அறிந்தது மீண்டும் படித்தேன். அதன் அருமை புரிந்தது. நல்ல ஆசிரியர்களால்தான் பாடலுக்கு மதிப்பக் கூட்ட முடியும் நன்றி
    சுரேஷுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  17. சங்க இலக்கியத்தில் ஆர்வம் இருந்தும் படித்துப் புரிந்துகொள்ள இயலாமல் வருந்துவோர்க்கு நீங்கள் மகத்தான உதவி புரிகிறீர்கள் , பாராட்டுகிறேன் , வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
  18. சங்க இலக்கியத்தில் ஆர்வம் இருந்தும் படித்துப் புரிந்துகொள்ள இயலாமல் வருந்துவோர்க்கு நீங்கள் மகத்தான உதவி புரிகிறீர்கள் , பாராட்டுகிறேன் , வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
  19. சங்க இலக்கியத்தில் ஆர்வம் இருந்தும் படித்துப் புரிந்துகொள்ள இயலாமல் வருந்துவோர்க்கு நீங்கள் மகத்தான உதவி புரிகிறீர்கள் , பாராட்டுகிறேன் , வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போன்றோரின் வருகையும் கருத்தும் நான் மிகக் கவனமாக இருக்க உதவுவன.

      தாங்கள் தொடர்வதற்கு மிக்க நன்றி.

      Delete
  20. திரைப்படப்படலே..என்நாவினில் வர மறுக்கும்போது சங்க இலக்கியத்துப்பாடல் அவ்வளவு எளிதில் வந்துவிடுமா??? அய்யா...

    ReplyDelete
    Replies
    1. அது வராவிட்டால்தான் என்ன..?

      கவலையை விடுங்கள் வலிப்போக்கரே!

      Delete
  21. நிதானமாய் வாசிக்க வேண்டிய பதிவு. இலக்கியத் தேன் சொட்டும் பதிவும் கூட. உங்கள் இலக்கிய ஆர்வம் வியக்க வைக்கிறது. எவ்வளவு ஆர்வமாய்ப் பொருள் கண்டறிந்திருக்கிறீர்கள்! பாராட்டுவது என்பது வெறும் சொற்களாகவே போய் விடும். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  22. ஒரு உண்மையச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இசையின் ராகமோ நயமோ புரியாமல் ரசிப்பது போல் பாவனை செய்து தலை ஆட்டுபவர்களைப் போல் என்னால் இருக்க முடியவில்லை. ஓரிரு குறை படித்தும் புரிந்தது என்னவோ பூஜ்யம்தான் பதிவில் பாடல் என்று வந்தபோது ஊமைக்கனவுகளில் பாடலா என்று ஒரு கணம் வியந்தேன். ஆனால் இதுவும் சங்ககாலப் பாடல்தான் என்று அறிந்தபோது பொங்கிவரும்பாலில் நீர் விட்டது போல் ஆயிற்று.

    ReplyDelete
    Replies
    1. அப்படித் தலையாட்ட வேண்டியதில்லை ஐயா.

      உங்களின் புரியாமை இருப்பின் அதைப் பற்றிச் சொல்லவும்தானே இந்தப் பின்னூட்டம்.

      இன்னும் முயற்சி செய்கிறேன்.

      அடுத்த பதிவு இப்பாடலுக்கான எனது புரிதலாய்த்தான் இருக்கும்.

      எனவே தலைப்பைப் பார்த்துப் பால் பொங்கிவிட வேண்டாம் . ;)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எப்போதும்போல நன்றிகள்.

      Delete
  23. மாத்திரை முதலா அடிநிலை காறும்
    நோக்கதற் காரணம் நோக்(கு) எனப் படுமே என்று செய்யுளுக்கு இன்றியமையாத 26 உறுப்புகளுள் 'நோக்கு' என்பதும் ஒன்றாகும் என்று படித்த நினைவு.
    26 உறுப்புகள் பற்றியும் தாங்கள் தான் விளக்க வேண்டும்.

    உண்மையில் ஒரு முறை அல்ல எத்தனை முறை படித்தாலும் எனக்கு இந்த மாதிரி செய்யுள்களை படித்தவுடன் பொருள் விளங்குமா என்றால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்.

      என் நிலைமையும் இப்படித்தான் இருந்தது.

      தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரிதான் என் முயற்சி.

      ஆகவே தலை சுக்கு நூறாக உடையவில்லை.

      தங்களின் வருகைக்கும் இலக்கண வாசிப்பிற்கும் மிக்க நன்றி.

      Delete
  24. உங்கள் விளக்கங்கள் எனக்கு வழிகாட்டிய விளக்குகள்..இல்லையென்றால் முட்டி மோதிக்கொண்டு நிற்க வேண்டியதுதான்.இன்னும் பல எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் எதிர்பார்ப்பிற்கு மிக்க நன்றி ஐயா.

      Delete
  25. வணக்கம் !

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பினுக்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  26. \\\\\சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் எப்படி இருந்தது என்பதை வாசித்துத்தான் பாருங்களேன./////
    தங்கள் பாணியில் இதற்கு முன் உள்ளவை சுவாரஸ்யமாகவும் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியதாகவும்,பிரமிப்பாகவும் இருந்தது. வர்ணனையும் உவமானங்கள் எல்லாம் பதிந்தன நெஞ்சில் ஆழமாக.
    \\\\\ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பில் - இரும்பினை முறுக்கிவிட்டாற் போன்ற மானின் கொம்புகள் என்பது இங்கே அதன் வடிவத்திற்கு மட்டுமே உவமையாகச் சொல்லப்படவில்லை. இரும்பை முறுக்க அதனைப் பழுக்கக் காய்ச்ச வேண்டும். அப்படிக் காய்ச்சி முறுக்கி அதனை நீரில் தோய்த்து எடுத்த பின்பும் இரும்பின் சூடு நெடுநேரம் அதில் மிச்சம் இருப்பதைப் போல, கோடைகாலம் மாறி மழைக்காலம் தொடங்கி இருக்கிறது. நிலம் நீரால் நனைந்தாலும் கோடையின் வெப்பம் இன்னமும் நிலத்தில் மிச்சம் இருக்கிறது. கோடையின் வெம்மை மிச்சம் இருக்கிறது என்பதனால் மழைக்காலம் இப்பொழுதுதான் தொடங்கி இருக்கிறது என்பதற்கான குறிப்பையும் இந்த உவமை உள்ளடக்கி இருக்கிறது./////
    இப்படி ஒவ்வொன்றையும் ரசித்தேன். நானே இவற்றை ரசித்தேன் என்றால். நீங்கள் தூக்கத்தையும் தொலைத்து வாசித்தது விந்தை இல்லை தான்.

    பின்னுள்ளவை அதாவது உரையாசிரியர்கள் தந்தவை அப்படா ......சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போலவே இருந்தது. ஹா ஹா ... என்ன சிரிப்பு சத்தம் கேட்கிறது. முன் உள்ளதை புரிந்து கொண்டேன் அல்லவா அப்புறம் என்ன சிரிப்பு ....ஐயடா மக்கு என்று எல்லாம் திட்டக் கூடாது ok வா ஹா ஹா .........

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மா!

      உங்களைப் போய் மக்கு என்பேனா?

      பின் எ‘மக்கு உங்களின் சிரிப்பினைக் கேட்க முடியாதே,,,!!!!!


      நன்றி.

      Delete
  27. வணக்கம் என் ஆசானே,
    வாசிப்பு என்பது தங்களின் சுவாசமாகிப்போனது என்பது புரிகிறது,,,,,,,,,

    தாங்கள் எல்லா சங்க இலக்கியங்களையும் இப்படி எளிமைப்படுத்தி தரலாம்,,,,,,,,

    பிறகு வருகிறேன்,

    ஆங் இங்கு என்ன நம் பெயர் என்று,,,,,

    நன்றி ஆசானே,,,,, இந்த பாடல் தான் எழுத நினைத்தேன் அதற்குள், அதுவும் தங்களால் தான் , தாங்கள் எங்கே முந்திக்கொள்வீர்களோ என்று அந்தபாடல் எழுதினேன்,
    எனக்கு மிகவும் பிடித்த பாடல், படிக்கும் போது

    நரம்பார்த் தன்ன வாங்குவள் பரிய ,,,,,,,,,,,,,,,, இதற்கு மட்டும் தான் பொருள் சொல்லவார்கள்,
    தங்களின் தேடல் அருமை, நாங்கள் கற்க தாங்கள் ,,,,,,,,,,
    நன்றி அய்யா,

    ReplyDelete
    Replies
    1. அட............

      நீங்கள் எழுத நினைத்ததை எல்லாம் நான் எழுதிப்போகிறேனோ...!!!

      நீங்கள் எழுதப் போகும் பதிவுகள் பற்றிய ஒரு பட்டியலைத் தந்தால் நான் அதை எழுதாமல் தவிர்த்தல் எளிதாய் இருக்கும். :))

      தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
    2. வணக்கம் என் ஆசானே,
      ஆனால் தங்கள் அளவுக்கு ம்ம்,,,,,,,,
      முடியாது என்று இல்லை,,,,,முயற்சிக்கிறேன்,
      நன்றி.

      Delete
  28. தொடர்கிறேன் சகோ....மீண்டும் மீண்டும் படித்து பார்க்க வேண்டும்
    17

    ReplyDelete
  29. வணக்கம் அண்ணா.
    புரியாமல் ஓடிப் போகாமல் அதனை புரிந்துக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் எடுத்த முயற்சிக்குத் தலை வணங்குகிறேன். வாசிப்பு ஒன்று இரண்டு என்று தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி விளக்குவதில் நீங்கள் வல்லவர் அண்ணா.
    நிறைய அறிந்துகொண்டேன், நன்றி.
    உங்கள் பதிவுகளில் இருந்து கற்றுக்கொள்ளவும் ரசித்து இன்புறவும் அதிக நேரம் இங்கேயே இருக்க வேண்டும் அண்ணா. அதனால் அதிக நேரம் இருக்கும்பொழுது பார்க்கவேண்டும் என்றே என் வருகை தாமதமாகிறது :) மன்னிக்கவும். அடுத்தப் பதிவுகளையும் பார்க்கிறேன்.
    த.ம.18

    ReplyDelete

  30. வணக்கம்!

    பாடல் படைத்த நினைவுகளை நான்படித்துத்
    தேடல் தொடரும் தினம்

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete