மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?
அவனது நிர்பந்தம் தாங்காமல் வேறு வழியின்றி வாய் ‘போய் வா’ என்று சொன்னபோதும் அவள் மனம் அதனைத் தாங்குவதாய் இல்லை.
கார்காலத்தை நோக்கிக் கவிழ்க்கப்பட்ட மணல் கடிகாரம் ஒன்றில் ஒரு புறமிருந்து வனப்புதிர்க்கிறது அவள் காத்திருப்பு.
நாட்கள் நீள நீள தான் காணும் ஒவ்வொன்றினூடேயும் கார்காலத்தைத் தேடித் தோற்கின்றன அவள் கண்கள்.
பிரிவு அவளுக்குக் கற்பித்த பாடம் ஒன்றே ஒன்றுதான்.
பொன்னோ பொருளோ வேண்டாம்.
இருப்பது கொண்டு சிறப்புடன் வாழ்ந்துவிடலாம்.
அவன் நல்லபடியாய் வீடு திரும்பினால் அதுவே போதும்.
அவனது அண்மையைவிட வேறெதுவும் இந்த உலகில் தனக்குப் பெரிதில்லை.
அடுத்து வந்த நாட்களில் எல்லாம் அவனின்றி எரியும் பகலினை ஊதி அணைத்து இரவாக்கிப் போகும் அவள் பெருமூச்சு. தன்னை உருக்கும் கழங்குகள் விசிறத் தோன்றும் பெருநெருப்பொன்றால் இரவினைப் பகலாக்கிப் பார்க்கும் அவள் கண்கள்.
அவளது எதிர்பார்ப்பின் முடிவுகளுக்கான அறிகுறிகளோடு இந்தப் பாடலுக்குள் நாம் நுழைய
வேண்டும்.
பாடல் அதேதான்.
“'முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட்
போதவிழ் அலரின் நாறும்
ஆய்தொடி அரிவைநின் மாணலம் படர்ந்தே."
இனி இப்பாடலுக்கான எனது வாசிப்பு.
கார்காலம் வருவதற்கான முன்னறிவிப்பைக் காடுகள் காட்டுகின்றன.
தேற்றா , கொன்றை ஆகிய மரங்களின் பூக்கள் மலரத் தொடங்கிவிட்டன.
ஆனால் முல்லை……?
கார்காலம் முகம் பார்க்க அது முகிழ்த்தாக வேண்டும்.
தேற்றா
கொன்றை ஆகிய மரங்களில் மொட்டுகள் விரிந்த போதே
முல்லையின் ஒவ்வொரு பகுதியிலும் அரும்புகளைத் தேடத்தொடங்குகிறாள் அவள்.
ஒவ்வொருநாள் காலையும் செடிபார்த்துத்தான் விடிகிறது அவள் பொழுது.
தன் முற்றத்தின் முல்லை ஏதேனும் மொட்டுவைத்திருக்கிறதா?
அன்றைய சூரியன் அவளுக்கென உதித்திருந்தான்.
அவள் பார்த்துச் சோர்ந்த அந்தச் செடியில் மலரின் வருகையை முன்னறிவிக்கும் முள்போன்ற நுனி தோன்றியிருக்கிறது.
ஈட்டியின் கூர் முனைபோல மிகக்கூர்மையாய் இருக்கிறது அதன் நுனி. வைந்நுனி.
அவளது காலமுலர்த்திய நதியில் புதுவெள்ளப்பெருக்கு.
கார் காலம்
தொடங்கிவிட்டது.
அவன் வரப்போகிறான்.
நேற்றுவரை வெண்மையாய் அலைந்த மேகங்கள் அவளது மனதின் கருமையை ஒட்டுமொத்தமாய் உறிஞ்சிக் கொண்டதுபோல் வான் திரண்டு கருநிறங்கொண்டு வேகமாக ஓடுகின்றன.
அவற்றிற்கு
அப்போழுதுதான் அவளின் வேதனை தெரிந்ததோ என்னமோ.
அவள் பொதிந்து வைத்திருந்த கண்ணீரின் ஓரிரு துளிகளை அவள்மேல்
சிந்திச் செல்கின்றன தம் ஓட்டத்தினிடையே!
செல்லும் வழிகளில் கைவிரித்து மழைப்பூக்களைச் சிறுகத் தூவிப் பூமியைக் கழுவிக் கார்காலம் மெல்லிய தூறலின் வழியே காடுகளை உச்சிமுகர்கிறது.
முறுக்கப்படுவதற்காய்ச் சூடாக்கப்பட்டுப் பின் குளிர வைக்கப்படும் முறுகிய இரும்பில் மிச்சம் இருக்கும் வெப்பத்தைப் போலச் சூடு முற்றிலும் நீங்காமல் அப்பொழுதே பெய்யத் தொடங்கியிருந்த மழையால்
சற்றே குளிர்ந்திருக்கிறது நிலம்.
முறுக்கப்பட்ட இரும்பினைத் தலைக்குச்சூடியது போன்ற கொம்பினை உடைய
இரலை மான்கள் சிறு சிறு குழிகளில் நீர் தேடி வருந்திப் பின்னர் பரலைக்கற்கள் நிரம்பிய பள்ளத்தில் திரண்ட நீரைக் கண்டடைந்து
குடித்த மகிழ்ச்சியில் துள்ளுகின்றன.
கார்காலம் தொடங்கியாயிற்று.
இனி அவன் எந்த நிலையில் திரும்பிவரப் போகிறான்?
பெரிதாகப் பொருள் சம்பாதிக்காவிட்டாலும் பரவாயில்லை.
அவன் சொன்னபடி வந்து சேர்ந்தாலே போதும்.
வழியில் ஓருருவம் ஓடி வருகிறது.
அது………?
அவள் தோழி!!!!
மூச்சிரைக்க வருகிறாள் அவள்.
“ குதிரை குதிரை “ என்கிறாள் பெருமூச்சினிடையே!
“ வளைந்த பிடரி மயிர்களை உடைய அழகான
குதிரை“
தலைவி சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.
.
இவளுக்கு இன்று என்னாயிற்று? திடீரென இவ்வளவு வேகமாக வந்து குதிரை குதிரை என்கிறாளே? நம் காட்டில் குதிரை எல்லாம் வருவதாவது? அது வசதியானவர்களின் வாகனமாயிற்றே?!
குதிரை வருவதற்கான எந்த அறிகுறியும் அங்குக் காணோம்.
தோழி குதிரையைப் பற்றி மேலும் சொல்லத் தொடங்குகிறாள்.
“அந்தக் குதிரையின் தலை அசையும் போதெல்லாம் அதன் கடிவாளம் உராய்ந்து உண்டாக்கும் ஒலி நரம்பினை மீட்டுவதுபோலக் கேட்கிறது.“
அவளுக்கு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.
“எனக்கு வண்டுகளின் ரீங்காரம்தானே கேட்கிறது.” என்கிறாள் தலைவி.
“ ஆம்! ஆம்! இதோ இந்த வண்டுகளின் ரீங்காரம்போலத்தான் இருக்கிறது அந்தக் குதிரை கழுத்தை அசைக்கும் போதெல்லாம் அதன் கடிவாளத்தில் இருந்து கிளம்பும் ஒலியும்.. அந்தக் குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேர்……“
தொடர்கிறாள் தோழி..!
‘குதிரையே நம் போன்றவர்களுக்கு அரிது. அதுவும் குதிரைகள் பூட்டப்பட்ட தேர் என்றால்..
எந்த ராஜகுமாரனின் வாகனமாவது வழிதவறி இந்தப் பக்கம் வருகிறதா?
சரி. தேர் என்றால் அதில் கட்டப்பட்ட மணி ஒலியாவது கேட்க வேண்டுமே..!
நமக்கு ஒன்றும் கேட்கவில்லையே’ என்ற எண்ணம் தலைவியின் மனதில் எழுகிறது.
அதைப் புரிந்து கொண்டவள்போல் தோழி சொல்கிறாள்,
“ வரும் வழியில் தேரின்
மணி ஓசை கேட்டுப் பூக்களில் தன் துணையோடு தேனருந்தும் வண்டுகள் மிரண்டு விடக்கூடாதென்று தேரில் கட்டப்பட்ட மணி ஒலிக்காமல் இருக்க அதன் நாவினைக் கட்டியபடி தேரில் வருகிறான் , அந்தத் தேரோட்டியின் மனதில்தான் எவ்வளவு கருணை? “
பேச்சு, குதிரையை விட்டு, தேரை விட்டுத் திசைமாறி தேரோட்டியின் மீது சென்ற உடனேயே தலைவியின் பார்வை மீண்டும்
தன் கணவனின் வருகையைப் பற்றி எண்ணத் தொடங்குகிறது.
கேட்கும் சுவாரசியமற்று, ‘யார் எங்கு எப்படி வந்தால்தான் எனக்கென்ன ’என்பதுபோல் இருக்கிறது அவள் முகம்.
தலைவியின் முகக் குறிப்பு உணர்ந்தும் உணராதவள் போலத் தோழி சொல்லத் தொடங்குகிறாள்.
“ வருபவன் யாரென்று தெரியுமா? குறும்பொறை நாடன். எப்பொழுதும் விழாக்களின் ஆரவாரம் நிறைந்திருக்கின்ற
உறையூரின் கிழக்கில் நீண்டுயர்ந்து இருக்கிறதே அனைவரும் காணத்தக்கக் குன்று. அந்த மலை போல ஊரார் எல்லாம் வியந்து பார்க்கும் படி இருக்கிறது அவன் தோற்றம்.
அங்கு அனைவரும் வணங்கும் இறைவனுக்குச் சூட்டப்படும் காந்தள் மலர் பூத்திருக்கிறதல்லவா? , அதைப் போன்று அனைவரும் மதிக்கும்படி இருக்கிறது குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வரும் அவனது வருகை.“
இப்போதும்
தலைவியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
ஒரு செவிட்டூமையைப் போல மௌனமாய், அவள் பார்வை தன் கணவன் வரும் வழியை இன்னும் உன்னிப்பாய் வெறித்தபடி இருக்கிறது.
“தேரில் வருபவன், தோள்மெலிந்து
வளை கழன்று நலமிழந்த உன்னைக் காணப் பொருள் சேர்த்து வரும்
உன் கணவன்தானடி!“ என்று சற்றும் ஆர்வமற்றுக் கேட்டுக்கொண்டிருந்த அவள் முன் தன் இறுதி ஆயுதத்தை வீசுகிறாள் தோழி.
கணவன் வருகிறான். நல்ல உடல்நலத்தோடு வருகிறான். குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் வருகிறான். பிற உயிர்கள் மேல் கருணையும் அன்பும் கொண்டவனாய் வருகிறான். பொருளீட்டி வருகிறான். பிறர் கண்டு மதிக்கும் படியும், வியக்கும் படியும் வருகிறான். தன்னை மறவாமல் தன் நலன் காக்க வருகிறான். வாக்குத் தவறாமல் வருகிறான். இத்தனைநாள் காத்திருப்பை முடித்து வைக்க வந்துகொண்டிருக்கிறான் என்ற எண்ணங்கள் அடுக்கடுக்காக வந்துமோதும் அந்தப் பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கும்?
இப்போது அவள் முற்றத்தில் அரும்பிய
முல்லையின் கூர்மொட்டு மலர்ந்திருக்கிறது.
*********
குதிரை , தேர் என்பன அன்று வசதிபடைத்தவர்களுக்கான வாகனம்.
இன்று
வறுமையால் பொருள்தேடச் சென்று, சில நாள் கழித்து ஆடம்பரமான காரில் ஒருவன் வீடு திரும்பினால் அவனை
ஊர் வியந்து பார்ப்பதைப் போல, அன்று அவனது வருகை அங்குள்ளோரால் வியந்து பார்க்கப்பட்டிருக்கும்.
பணம் சேர்ந்துள்ளதே தவிர, அவன் மனம் மாறவில்லை என்பதை சிற்றுயிர்கள்பால் அவன் கொண்டுள்ள அன்பு காட்டுகிறது.
உயரமான மலை எல்லாரோலும் பார்க்கப்படுவதுபோல அவன் யாவராலும் பார்க்கப்படுகிறான்.
இறைவனுக்குச் சூடப்படும் காந்தள் என்னும் மலர் மதிக்கப்படுவதுபோல அவன் மதிக்கவும் படுகிறான்.
நிறையவே பொருளீட்டும் வாய்ப்பு அவன் சென்ற இடத்தில் இருந்தும் அதை விட்டுவிட்டு மாண்புடன் அவன் தேரேறி வருவது, தன் மனைவியின் நலம் மற்றெல்லாவற்றையும்விட அவனுக்கு முக்கியம் என்பதால்தான்.
பாடலில் வரும், உவக்காண் என்னும் சொல், அவன் தேர், காணும் அண்மையிலும் இல்லை. கண்காணாத் தொலைவிலும் இல்லை. இன்னும் சற்றுநேரத்தில் இங்கே வந்துவிடும் தொலைவில் வருகிறது என்னும் குறிப்பில் அமைந்தது.
அவன் என்பதைத் தொலைவில் இருப்பவனைக் குறிக்கவும், இவன் என்பதை அருகில் இருப்பவனைக் குறிக்கவும் பயன்படுத்துவதுபோல்
உவன் என்பதைத் தொலைவிலும் இல்லாமல் அருகிலும் இல்லாமல் இருப்பவனைக் குறிக்கப் பண்டைத் தமிழர் பயன்படுத்தி இருக்கின்றனர்.
உவக்காண் என்பதும் அது போன்ற வழக்கே ஆகும்.
ஒருவேளை
மனைவியைத் திடீரென்று சந்தித்து அவளை ஓர் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம் என்பதுகூட அந்தக்
கணவனின் திட்டமாக இருந்திருக்கலாம். தேரின் மணியை அதற்காகக் கூட அவன் ஒலி எழுப்பாமல் அப்படிக் கட்டியபடி வந்திருக்கலாம். யார்
கண்டது? அப்படி இருந்தால் அவன் திட்டத்தை முற்றிலும் நாசமாக்கிய அந்தத் தோழியின் செயல் ;)
*******
இந்தப்பாடலின் சிலசொற்களும் அதற்கான இன்றைய தமிழும்.
முல்லை – முல்லை மலர்
வைந்நுனை – கூரிய நுனி
இல்லம் – தேற்றா என்னும் மரம்
கொன்றை – கொன்றை மரம்
மென்பிணி அவிழ – மென்மையான மொட்டுகள் அவிழ
இரும்பு திரித்தன்ன – இரும்பினை முறுக்கி விட்டாற் போல
மா இரு மருப்பின் – ( இரு மா ) – கரிய பெரிய கொம்பு
பரல் அவல் – பரல் கற்கள் நிறைந்த பள்ளம்
தெறிப்ப – துள்ள
மலரந்த ஞாலம் – பரந்த உலகம்
புலம்பு புறக் கொடுப்ப – துன்பத்தை மாற்றுமாறு
கருவி வானம் – ( மழைத்துளிகளைக் கொண்டு ) திரண்ட வானம்.
கதழ் உறை சிதறி – விரைந்து
(செல்லும் வழியில்) துளிகளைச் சிதறி
கார் செய்தன்று – மழைகாலம் தொடங்கியதை அறிவித்தது.
கவின் பெறு கானம் – காடு தன் இழந்த பொழிவைப் பெறத் தொடங்கிற்று.
குரங்கு – வளைந்த
உளை – மயிர்
பொலிந்த – தோன்றும்
கொய் – கொய்யப்பட்ட ( கத்தரிக்கப்பட்ட )
சுவல் – பிடரி
பூத்த பொங்கர் – மலர்கள் நிறைந்த சோலை
துணையொடு வதிந்த – தன் துணையோடு வசிக்கும்
தாதுண் பறவை – தேனை உண்ணும் வண்டுகள்
பேதுறல் அஞ்சி – வருந்தி ( ஓடுமே ) என்று அஞ்சியவனாய்
மணி நா ஆர்த்த – தேரின் மணியிலுள்ள
ஒலிக்கும் நாவினைக் கட்டிய
தேரன் – தேரினை உடையவன்
கறங்கிசை – ஆரவாரம் மிக்க
விழவின் – விழாவின்
உறந்தை – உறையூர்
குணாது – கிழக்கில்
அமன்ற – நெருங்கிய
போது அவிழ் அலர் – மொட்டு அவிழ்ந்து விரிகின்ற
******
முல்லைத் திணை என்பது திருமணமான தலைவி, குடும்ப நலனிற்காகப் பிரிந்த தலைவன் வரவினை எதிர்பார்த்துக் காத்திருத்தல். அதனுடைய பின்புலம், காலம், எல்லாம் இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளன.
எனவே முல்லைத் திணையை விளக்கும் முக்கியமான பாடலாக இப்பாடல் தொல்காப்பிய உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்படுகிறது.
தொல்காப்பியம் செய்யுளுக்கு அவசியம் என்று சொல்லும் உறுப்புகள் 34.
அவற்றுள் ஒன்றுதான் நோக்கு என்று சொல்லப்படுவது,
ஒரு கவிதையின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வரியும் கவிதையின் மையத்தை நோக்கி நகர்வதற்கு அவசியமானதாய், சொற்களையோ தொடர்களையோ வெறும் இடநிரப்பிகளாய்த் தேவையற்று நிற்காததாய் அமைத்தலும், வாசிப்பவனின் ஒவ்வொரு வாசிப்பிலும் ( நோக்கிலும் ) விரிந்த பொருட்புலப்பாட்டிற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கவிதையின் பரப்பை
விரிவு செய்வதாய் அமைவதும் இந்த நோக்கு என்ற உறுப்பின் குணங்களாகும்.
அதற்கு எடுத்துக்காட்டாகவே பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்
இந்தப் பாடலை எடுத்துக் காட்டுகின்றனர்.
இந்தப்பாடலை இப்படியும் நோக்கலாம் எனக் கருதுகிறேன்.
பூவற்ற செடியாய் இருந்து கூர்நுனியாய் அரும்பிய முல்லை கார்காலம் கண்ட தலைவியின் மனம். அது இன்னமும் கூர்மையாய் விரிந்து மலராமைக்குக் காரணம் தலைவன் இன்னும் வராமை.
மலர்ந்த மற்றைய தேற்றா கொன்றையின் பூக்கள் இதுபோன்ற காத்திருத்தலற்ற மற்றவர் மனங்கள். கார்காலம் தோன்றியதுமே அவை மலர்கின்றன.
ஆனால் கார்காலம் வந்தாலும் அவன் வந்தால் மட்டுமே அவள் மலர்தல் சாத்தியமாகும். எனவே முல்லைக்கும் பிற பூக்களுக்கும் இடையேயான ஒப்பீட்டை அவள் மனதிற்கும் பிறர் மனத்திற்கும்
உள்ள ஒப்பீடாகக் கொள்ளலாம்.
இரும்பு திரித்த என்பதைச் சூடான நிலம் குளிர்ச்சி அடைந்தாலும் அதில் வெம்மை தங்கி நிற்கிறது அது கார்காலம் தொடங்குவதைக் காட்டுகிறது என்று உரையாசிரியர்கள் சொல்வதைப் போலவே,
எதிர்பார்த்துக் காத்திருந்தத கார்காலம் வந்ததால் அவள் குளிர்ந்தாள் எனினும், தலைவன் வராததால் அவள் மனதில்வெம்மை மிச்சமிருக்கிறது என்று பொருள் விரிக்க முடியும்.
மான்கள் சிறுகுழிகளை விட்டுப் பரலைக்கற்கள் மிகுந்த பள்ளத்தில் நீர் தேடிச் சென்று குடித்து மகிழ்கின்றன என்பதை,
தான் வாழுமிடத்தில் குறைந்த வருவாயே உள்ளதால் வேற்றிடம் தேடிக் கடினங்களை நோக்கிப் பயணித்துப் பொருளீட்டச் சென்ற தலைவனது செயலாகக் காணலாம்.
பிற வரிகளையும் இதைப் போல நோக்கலாம்.
சென்ற இடுகையில் இப்பாடலின் பொருளை இரண்டே வரிகளில் இப்படிச் சொல்லலாம் என்று சொன்னதை மீண்டும் நினைவு கூர்கிறேன்
.
“வருந்தாதே! சம்பாதிப்பதற்காக உன்னை விட்டுச் சென்ற உன் கணவன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறான்.“
இது உரைநடை.
நாம் இதுவரை பார்த்தது கவிதை.
உரைநடைக்கும் கவிதைக்குமான வேறுபாடு இதுதான்.
ஒரு தகவலைச் சொல்லுவதற்கும், சொற்களின் சாவிகளைக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத மனதின் நுட்பமான ரகசிய அறைகளைத் திறப்பதற்குமான வேறுபாடு அது.
சங்க இலக்கியத்தைப் பொருத்தவரை, வீண் வர்ணனைகளையோ
இடநிரப்பிகளாய் நிற்கும் சொற்களையோ நீங்கள் பெரும்பாலும் காண முடியாது.
பதிவு நீண்டதால் இப்பாடல் பற்றிய நச்சினார்க்கினியரின் மிச்சமிருக்கும் ஆய்வு, அவர் கருத்தில் எனக்குத் தோன்றிய ஐயம் பற்றி வரும் பதிவில்.
ஒரு பாடலும் சில நினைவுகளும் என்ற முந்தைய பதிவின் தொடர்ச்சி.
பட உதவி - நன்றி. http://www.selliyal.com/wp-content/uploads/2014/04/muillai.jpg
தம 1
ReplyDeleteவாசித்தேன்...மீண்டும் வருவேன் சகோ....
வாருங்கள் சகோ.
Deleteஉங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
நானும் வாசித்தேன் மீண்டும் வாசிக்கணும். திரும்ப வருகிறேன். இந்தநடை இலகுவாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.
ReplyDeleteதங்களின் பாட்டிற்கு நன்றி அம்மா.
Deleteநோக்கு பற்றித் தெரிந்து கொண்டேன். பாடலின் கருத்தை எழுத்தோவியமாகத் தீட்டியது சிறப்பு. தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பொருள் கூறுமளவுக்குப் பாடல் அப்படியே மனதில் பதிந்து விட்டது. வேறுபட்ட கோணத்தில் விரித்தது கண்டு வியந்தேன், அட இப்படியொரு கோணமிருக்கிறதா என்று. நோக்கு என்பதற்குச் சரியான காட்டு தான் இது. நச்சினார்க்கினியர் உரை பற்றிய விபரங்களைத் தொடருங்கள். த ம வாக்கு 4.
ReplyDeleteவணக்கம் சகோ.
Delete““““தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பொருள் கூறுமளவுக்குப் பாடல் அப்படியே மனதில் பதிந்து விட்டது“““““““
எந்த விதமான நிர்பந்தத்திற்கும் உள்ளாக்காமல் ஒரு மாணவனின் மனம் பதித்துப் போதல். ஒரு நல்ல கற்பித்தல் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பது எனது தனிப்பட்ட கொள்கை.
நானே அதைச் செய்தேன் என்று நீங்கள் கூறும்போது இரட்டிப்பு மகிழ்ச்சி.
நீங்கள் சாம் அண்ணாவின் ஊர் என்று தெரிந்ததும் இன்னும் கூடுதலாயிற்று.
தொடர்கிறேன்.
தொடருங்கள்
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி.
அன்புள்ள அய்யா,
ReplyDelete‘பாடலும் சில அர்த்தங்களும்’ பொருள்வயிற் பிரிகின்ற கணவனின் வரவுக்காகக் கண்கள் பூத்திருக்க வழிமேல் விழிவைத்துப் பார்த்திருக்கும் தலைவிக்கு தோழி கூறுவதாக அமைந்த அருமையான பாடலுக்கு நீண்ட விளக்கம் கண்டு அசந்து போனேன்.
பெண் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே .. முல்லை
ஆண்: வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
அல்லி விழி தாவக் கண்டேன் என்மேலே .. முல்லை
பெண்: வெண்ணிலவைப் பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் ப்ரேமையினாலே
ஆண்: மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே
பெண்: விந்தை மிகு மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் ஆசையினாலே
ஆண்: சிந்தை நிலை மாறியதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
இருவரும் : முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
சாதரண பாடல்தான் நமக்கு ஞாபகம் வருகின்றது.
நன்றி.
த.ம. 5
வணக்கம் ஐயா.
Deleteதற்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு திரையிசைப் பாடலை நினைவு கூர்கிறீர்கள்.
ஒருவேளை இன்றைக்கு யாராவது சங்கப்பாடல்களுக்கு உரையெழுதினால் இவற்றை மேற்கோளாகக் காட்டத்தான் வேண்டி இருக்கும் போல:)
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
வணக்கம் ஐயா!
ReplyDeleteசொல்லுதற்கு வார்த்தை இல்லை..!
இன்னும் அத்தனை இனிமையாக அதன் இனிமையை, அழகை
இழையிழையாகப் பிரித்துக் காட்டிவிட்டீர்கள்!..
உண்மையில் சொக்கிப்போனேன்! மிகச் சிறப்பு ஐயா!
மனதிற் பதிந்து கொண்டது!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!
வாருங்கள் சகோ.
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
உங்களது இலக்கிப் பதிவுகளைப் படிக்கும்போது நாம் ஏன் தமிழ் இலக்கியம் படிக்காமல் இருந்துவிட்டோம் என்ற ஆதங்கம் எழுகிறது. தற்போது தேவாரம் படித்து வருகிறேன். நாவுக்கரசரின் ஆறாம் திருமுறை நிறைவு செய்யும் நிலையில் உள்ளேன். தேவாரம் நிறைவுற்ற பின் சங்க இலக்கியங்களைப் படிக்க ஆரம்பிப்பேன். இது உறுதி. உங்களது தொடர் பதிவு என்னை அந்த அளவு ஈர்த்துவிட்டது.
ReplyDeleteதங்களைப் போன்றவர்களின் பார்வையில் சங்க இலக்கியங்கள் வாசிக்கப்படுது என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
உரைநடைக்கும் கவிதைக்குமான வேறுபாட்டை விளக்கிய விதத்தை ரசித்தேன்... மேலும் ரசிக்க ஆவலுடன்...
ReplyDeleteதொடர்கின்றமைக்கு மகிழ்வு.
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது நண்பரே
ReplyDeleteஇலக்கியத்தை இதுபோன்றும் விளக்க முடியுமோ
என்ன செய்வது நாங்கள் படிக்கின்ற காலத்தில்
கோணாரே கதி என்று கிடந்துவிட்டோம்
நன்றி
தம +1
எங்கள் பள்ளியில் தமிழைய்யா கோனாருடன் போனாரைக் கண்டால் பின்னப் பிரம்பெடுத்து விடுவார்.
Deleteஆதலால் இரு வருடங்கள் ஏதோ தப்பித்தோம்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
நல்ல இலக்கிய இன்பம். நேற்றும் படித்தேன். இன்றும் படித்தேன். உங்களது இலக்கியக் கட்டுரைகள் அனைத்தும் நூலாக வெளிவந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteத.ம.12
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteதங்களைப் போன்றோர் வாசிப்பதே போதுமே!
நன்றி
சகோதரரே! மிக மிக எளிதாகப் புரிந்தது! அதுவும் எளிமையாக அழகாக இப்படிச் சொல்லித் தந்தால் இனிக்காமல் இருக்குமா?! நோக்கு என்ற சொல் வித்தியாசமாக வருகின்றதோ என்று, நோக்கு அதன் அர்த்தம் இங்கு என்ன என்று அறிய நோக்கி, நோக்கு என்பதன் அர்த்தத்தையும் புரிந்து கொண்டோம்...
ReplyDeleteமலையாளத்தில் நோக்கு என்ற தமிழ் சொல் நாம் தமிழில் எந்த அர்த்தத்தில் எழுதுவதற்கு உபயோகப்படுத்துகின்றோமோ அதே அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்படுகின்றது...(உங்களுக்குத் தெரியாதது அல்ல)
வாருங்கள் சகோ.
Deleteசெந்தமிழிலும் நோக்கு உண்டு அதே பொருண்மையில்.
ஆனால் இங்கு இலக்கணத்தில் கொள்வது கவிதைக்கான ஆழங்களைச் சுட்டப் பயன்படுகிறது.
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.
அவன் ,இவன் ,உவன் என்பதன் அன்றைய அர்த்தம் புரிந்தது !
ReplyDeleteஇன்று வீட்டிலே ஒருவன் இருக்க இக்கால மனைவிமார்கள் வேண்டுவதோ இன்னொரு அவன் (ovan) !
இன்னொருவன் என்று இதைப் புணர்ச்சிவிதிப்படிச் சேர்த்தால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு..............பகவானே!
Deleteவேண்டாம் இந்த விபரீத விளையாட்டு!:)
நன்றி
என்ன சொல்ல என் பள்ளிக் காலத்தை நினைவு படுத்தியது இப் பதிவு. நான் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது இலக்கியம் படித்தேன். அங்கு மாகாபாரதம், நந்திக் கலம்பகம் போன்றவை பற்றி அழகாக சொல்லிக் கொடுப்பார் ஒவ்வொரு வார்த்தைகளை உச்சரரிக்கும் போதும் அதில் அவர் ரசனை தெரியும். அப்படி லயிக்கும் படி விளக்குவார்.பின்னர் புத்தகம் எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இராது அப்படியே மனதில் ஒட்டிக் கொள்ளும். அதை நான் மெய்மறந்து கேட்டுக் கொண்டு இருப்பேன். இன்று மீண்டும் அதை நான் அனுபவித்தேன். வெகு சிறப்பாக அனைத்தையும் அக்கக்காக புரிய வைத்துள்ளீர்கள்.ஆச்சரியத்துடன் அத்தனையும் அணு அணுவாக ரசித்தேன் மிக்க நன்றி ! என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. தங்களின் ஆற்றலைக் கண்டு வியக்கின்றேன்.
ReplyDelete" உவன் " என்னும் சொல் இன்னும் புழக்கத்தில் தான் உள்ளது ஈழத்தில். நீங்கள் சொல்வது போல் கண்ணுக் கெட்டிய ஆனால் தூரத்தில் இருப்பவரை உவன் அல்லது உவள் என்று சொல்வார்கள். யார் என்று கேட்குமிடத்து. அந்தா உதில நிற்கிறானே உவன் தான் என்பார்கள். பதிவிற்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!
வாருங்கள் அம்மா.
Deleteஉவன் என்கிற சொல் ஈழத்தமிழில் பயன்படுத்தப்படுவது நான் அறியாதது.
அறிவூட்டியமைக்கு நன்றி.
அது இப்பொருளிலேயே ஆளப்படுகின்றமை அறிந்து மகிழ்ச்சி.
பதிவுகளைத் தொடர்கின்றமைக்கும் கருத்திடுகின்றமைக்கும் மிக்க நன்றியுண்டு.
1. மாத்திரை, 2. எழுத்து, 3. அசை, 4. சீர், 5. அடி, 6. யாப்பு, 7. மரபு, 8. தூக்கு, 9. தொடை, 10. நோக்கு, 11. பா, 12. அளவியல், 13. திணை, 14. கைகோள், 15. கண்டோர், 16. கேட்போர், 17. இடம், 18. காலம், 19, பயன், 20. மெய்ப்பாடு, 21. எச்சம், 22. முன்னம், 23. பொருள், 24. துறை, 25. மாட்டு, 26. வண்ணம்,27. அம்மை, 28. அழகு, 29. தொன்மை, 30. தோல், 31. விருந்து, 32. இயைபு, 33. புலன், 34. இழை.
ReplyDeleteஆத்தி செய்யுள் உறுப்புகள் பெயர்களை மட்டும் தெரிந்து என்ன செய்ய தனித்தனியே ஒவ்வொன்றின் பொருளும் வேண்டுமே....
நோக்கு என்பதை விளக்க பேராசியர் எடுத்துக்காட்டிய பாடலை தாங்கள் நோக்கிய விதத்தையும் கண்டு மெய்மறந்து போனேன்.
ஐயோ,
Deleteகவிஞரே இவ்வளவு உறுப்புகள் எல்லாம் நான் அறியேன்.
நான் அறிந்தது ஒன்றிரண்டுதான்.
நீங்கள்தான் இவற்றைப்பற்றி விளக்க வேண்டும்.
தங்களின் பாராட்டிற்கு நன்றி.
மிக அருமையானதொரு விளக்கம்! எளிமைத் தமிழை உங்களிடம்தான் கற்கவேண்டும். உவன் என்ற சுட்டுப்பெயர் அறிவேன். நம் தமிழகத்தில் அது இப்போது பயன்படுத்தாவிட்டாலும் இலங்கைத்தமிழில் பயனில் உள்ளது. நோக்கு குறித்தும் அறிந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteஆம் தற்போதே அறிந்தேன்.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
வணக்கம் என் ஆசானே,
ReplyDeleteகொஞ்ச நஞ்ச தைரியமும் போனது,,,,,,,,,,
தங்கள் பார்வையில் பாடல் வரிகளின் பொருள் மிக அருமை,
மாணவர்களுக்கு இந்நடையில் சொல்ல முயற்சிக்கிறேன்,
இரும்பின் வெப்பமும் மிச்சம் இருக்கு, பூமியின் வெப்பமும் மிச்ச இருக்கு,,,,,,,,,
தாங்கள் என்னிடம் கேட்ட கேள்விக்கு தாங்களே பதில் அளித்தமைக்கு நன்றி,
வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பேராசிரியரே!
Delete** ஒவ்வொருநாள் காலையும் செடிபார்த்துத்தான் விடிகிறது அவள் பொழுது.
ReplyDeleteதன் முற்றத்தின் முல்லை ஏதேனும் மொட்டுவைத்திருக்கிறதா?** கிட்டத்தட்ட பாதி பதிவை இப்படி எடுத்துக்காட்ட வேண்டிய அளவு என்ன ஒரு கவிதை நடை. மெஸ்மரசிங்!!!!! அந்த முல்லை நிலமும்! தலைவியும், தோழியும் கண் முன்னே நிற்கிறார்கள்!! வொன்டர்!!! வொன்டர்!! அண்ணா ! செம!
நன்றி சகோ.
Deleteதாதுண் பறவை - தேனுண்ணும் வண்டுகள் - இது பற்றிக் கேட்க மறந்துவிட்டேன். சங்க காலத்தில் பறவை என்பது இக்காலம் போல் பறவையைக் குறிக்காமல், வண்டைக் குறித்திருக்கிறது. பின் பறவையின் பொருள் மாறியது எப்போது?
ReplyDeleteபறவை என்பது வண்டுகளையும் குறித்திருக்கிறது.
Deleteபறவையையும் குறித்தது.
இது பற்றி உரையாசிரியர்கள் விளக்குகிறார்கள்.
தங்கள் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி சகோ.
அகத்துறையை சேர்ந்த பாக்கள் உண்மையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விரைந்து ஓட்டும் பசைபோன்ற ... இந்த உணர்வு தமிழரின் தொன்மை பண்பாடு களம் கடந்தும் நிற்கும் சிறந்த ஆக்கங்கள் ...
ReplyDeleteதங்களது வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஅன்று கல்லூரியில் பாடமாக படித்தபோது காணாத இனிமையை இன்றி கண்டேன்!
ReplyDeleteமிகச் சிறப்பானதொரு பகிர்வு..
ReplyDeleteஅழகான விளக்கம்.
ReplyDeleteஉரை நடைக்கும் கவிதைக்கும் உள்ள வேறுபாட்டை சொன்னீர்கள். இதைப் படிக்கும்போது சட்ட அறிஞர்கள் ஒரே வரியில் சொல்வதை சொற்சிலம்பம் ஆடி சொல்வது நினைவுக்கு வருகிறது.
தங்களின் தயவால் இலக்கிய சுவையை ருசித்துக்கொண்டிருக்கிறேன்.
பி.கு. இரண்டு நாட்கள் ஊரில் இல்லாததால் இன்று தான் பதிவைப் படிக்க முடிந்தது
ReplyDeleteவணக்கம்!
வல்ல முறையில் வடித்த பதிவுணர்த்தும்
நல்ல நடையின் நலம்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
பாடலுடன் விளக்கவுரை தந்ததால் புரிந்து கொண்டேன் நண்பரே... அந்தக்காலத்து இலக்கிய காதல் என்று.................
ReplyDelete