என் பால்யத்தின்
சிறுபிள்ளைத்தனமான வாசிப்பில் எல்லாவற்றையும் நிறைய அறிந்ததாக எண்ணி, ஏதோ ஒரு பெரிய
ஒளிவட்டம் என் தலைக்குப் பின்னே இருப்பதான செருக்கில் ஒரு கிணற்றுத் தவளையில் வெற்றுத்
தலைக்கனத்தோடு அலைந்து கொண்டிருந்த காலம் அது.
பெரிய
ஞானத்தைத் தேடும் பாவனையில், “கவிஞன் நானோர் காலக்கணிதம்” என்னும் கண்ணதாசனின் கவிதைகளைப்
படித்தபோது உண்டான தாக்கத்தில் ‘போலச் செய்தலாய்’
அந்த யாப்பின் நூல்பிடித்து எழுதப்பட்டது இது.
மரபில்
பழகுகின்றவர்கள் எல்லோருக்குமே இந்தப் போலச்செய்தலின் தாக்கம் இருந்திருக்கும். இருக்கவும்
வேண்டும். அதுவே மரபில் கவிதையெழுதக் கற்றலின் அரிச்சுவடி.
நான்
என்னைப் பற்றி எழுதிய இந்தப் பாட்டு அன்றைய ஆண்டுமலரிலும் வெளிவந்தது.
இன்று
இதை நீங்கள் வாசிக்கும் போது, நிறைய முரண்கள்
தென்படலாம். அபத்தமாய்த் தோன்றலாம்.
அன்று
நான் வாசித்த நூல்கள் எவை எவை என்று இது கொண்டு சிறு அட்டவணையைத் தயாரிக்கலாம்.
பழைய
எழுத்துகளைப் பார்க்கச் சிலிர்ப்பும், சிரிப்பும் ஒருங்கே வரும் அரிதான தருணம் இதைப்
படிக்கையிலும் எனக்கு வாய்த்தது.
இதில்
ஆங்காங்கே நான் தென்படினும் அந்த நான் இன்றைய நானில்லை.
இதைப்
பதிகின்றதன் காரணம், நெடுங்காலம் பூட்டப்பட்டிருக்கும் பெட்டியைத் திறக்கின்ற போது
வீசுவதைப்போல என் பள்ளிப்பருவத்தின் வாசனை இதில் ஒட்டிக்கொண்டிருப்பதுதான். அது எனக்கு
மிகவும் பிடித்த வாசனை.
நான்.
எனக்குள்
நானோர் எந்திரப் பாவை!
எனை‘நான்’ இயக்க இயங்குதல் என்கடன்!
கற்பனை
எனில்சேர் அற்புதக் கனவு!
காண்பதில்
மெய்ம்மை காணுதல் என்பணி!
உண்டலும்
உறங்கலும் அல்லதென் உலகு.!
உலகம்
நான்பயில் உயர்கலைக் கூடம்!
இல்லென
ஏங்கேன்! இருப்பதில் மகிழ்வேன்!
சொல்லே
என்சுகம்! சோகம் பகிரேன்!
காலம்
பொறிக்கும் கைகள்என் கைகள்!
காற்றாய்க்
குழலெழும் கீதமென் கீதம்!
ஏச்சின்
உளிபட் டானதென் சிற்பம்!
பேச்சுகள்
குறைத்துப் போதலென் வாழ்வு!
எல்லாம்
விரும்புதல் எனதுயிர் வேட்டல்!
எதிர்பார்ப்
பில்லா தேற்றமென் ஏணி!
வாதிட்
டெனைநான் வளர்த்திட விரும்பேன்!
வேதனை
செய்யினும் வெறுத்திட ஒண்ணேன்!
என்வழித்
தனிமையில் எண்ணமென் தோழன்.
என்வலிக்
கண்ணீர் என்கடல் பொழியும்!
காலம்
எனக்குக் கானல் வழித்தடம்!
கரடுகள்
பிளந்து கீழ்செலும் என்வேர்!
எழுத்தெனும்
தெய்வம் இருக்குமென் புத்தகம்
எல்லாம்
என்னுடை வேத மந்திரம்.!
அன்புநான்
உறங்கும் அன்னையின் திருமடி!
நண்பர்கள்
எனக்கிந் நானிலக் கடவுளர்!
இன்பம்
இன்பம் இன்னலும் இன்பம்
எங்கும்
எதிலும் எல்லாம் இன்பம்!
கவலைகள்
என்கீழ்க் கால்மிதி யடிகள்!
கசடுகள் நீங்கக் கற்பதென் நோக்கம்!
இளமையில்
முதுமை கொண்டதென் அறிவு!
வறட்சியில்
வளமை காண்பதென் ஞானம்!.
நல்லதை
மறுத்தலால் அல்லதும் ஏலேன்!
நரைத்து மூத்ததால் நலிந்ததென் சிந்தை!
கவிதை
அறியேன்! கவித்துவம் அறியேன்!
புவிகடல்
தழுவிப் போய்வரும் அலைநான்!
வாழ்வூர்க்
கடக்குமோர் வழிநடைப் பயணி
ஆழந்திங்
குலகினி அடைந்திட மாட்டேன்!
போவதும்
வருவதும் புலன்மயங் கிக்கரு
ஆவதும்
வாழ்வெனில் அஃதெனக் கெதற்கு?
எதுவுமே
இனியெனக் கொருபொருட் டல்ல!
என்னை
அறியவே எஞ்சுமென் வாழ்க்கை!
மண்டும்
மானிடம் மலரெனில் புழுநான்.!
மரணத்
தீயெனில் மரம்நான்! நீர்நான்!
அண்டம்
கடந்தும் அலையுமென் பறவை!
ஆசைத்
துளையால் ஆடுமென் ஓடம்!
கதவுகள்
அடைத்துக் காத்தலென் வீடு!
கல்லறை
ஆயினென்? தொல்லைகள் இல்லை!
மானிடக்
காட்டில் நானுமோர் மிருகம்!
ஊனிடைப்
பட்ட உறுமலே என்மொழி!
கதிரவன்
எழட்டும்! காட்சிகள் தரட்டும்!
கண்ணடைத்
துலகைக் காரிருள் என்பேன்!
அடிப்போர்
அடிக்க! அணைப்போர் அணைக்க!
கொள்வோர்
கொள்க! கொல்வோர் கொல்க!
எங்கும்
விரியும் என்னுயிர்க் காற்று!‘
எதிலும்
கலக்கும் என்புனல் வெள்ளம்!
கதிரிடைக்
கலப்பேன் கைச்சிறு விளக்காய்!
கழிவொடும்
இருப்பேன் காண்கநான் பூமி!
இடியொடு
ஒளிதந் திருள்மதி என்வான்!
எங்கும்
எதிலும் எல்லாம் நான்நான்!
முடவன்
செவிடன் முழுமையில் சிதடன்!
முடியா
தான முற்றுப் புள்ளி.
………………………………………………………………………………………………………..
………………………………………………………………………………………………………….
இவ்வள
வல்ல எவ்வள வெழுதினும்
இறுதியாய்
எஞ்சும் அவ்வினா “ நான் யார்?“
அந்நாளைய
மெய்ஞானத் (?) தேடல்!!!! :)
பட உதவி - நன்றி. https://encrypted-tbn0.gstatic.com/images
த ம இணைப்புடன் தம 1
ReplyDeleteமகரிஷி...கூறியது போல் உங்கள் இளவயதிலேயே நான் யார் என்ற ஆத்ம விசாரம் வியப்புக்குறியது... வாழ்க வளமுடன்...சகோ
Deleteதங்கள் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி சகோ.
Deleteஇளவயதிலேயே இன்பத்
ReplyDeleteதமிழமுதம் பருகியவர் என்பது தங்களின் ஒவ்வொரு
சொல்லிலும் தெரிகிறது நண்பரே
ஆனாலும்,
///என்வழித் தனிமையில் எண்ணமென் தோழன்.///
தனிமையில் இன்றும் தொடர்ந்திடத்தான் வேண்டுமோ
தம +1
வாருங்கள் ஐயா.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
உண்டலும் உறங்கலும் அல்லதென் உலகு.!
ReplyDeleteஉலகம் நான்பயில் உயர்கலைக் கூடம்!
இளமையில் முதுமை கொண்டதென் அறிவு!
போன்ற வரிகள் இளமையிலேயே வாழ்வின் நோக்கமுணர்ந்து உங்கள் அறிவு முதிர்ச்சி பெறத் துவங்கியதை உணர்த்துகின்றன. அதை இப்போது உங்கள் எழுத்தும் உறுதிப்படுத்துகின்றது.
இன்பம் இன்பம் இன்னலும் இன்பம்
எங்கும் எதிலும் எல்லாம் இன்பம்!
என்ற வரிகள் உங்களை எல்லாவற்றிலும் இன்பம் காணும் Optimist ஆகக் காட்டுகின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக
கதிரவன் எழட்டும்! காட்சிகள் தரட்டும்!
கண்ணடைத் துலகைக் காரிருள் என்பேன்!
என்ற வரிகள் உங்களை pessimist ஆகக் காட்டுகின்றன.
புவிகடல் தழுவிப் போய்வரும் அலைநான்
என்ற வரிகள் இருமுறை இடம்பெற்றிருக்கின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக நான் யார் என்ற தேடலிலேயே சிரமமான தேடல் பள்ளிப் பருவத்திலேயே துவங்கியது அறிந்து வியப்புத்தான் மேலிடுகிறது. பாராட்டுக்கள்! த ம வாக்கு 4.
வாருங்கள் சகோ.
Deleteநானே இவ்வளவு தீவிரமாய் இந்தப் பாடலின் தன்மையை ஆராய்ந்ததில்லை. :)
தங்களின் நுட்பமான பார்வையைக் கண்டதும் சரிதானே என நினைத்தேன்.
நீங்கள் சுட்டிக்காட்டிய பிழையைச் சரிசெய்துவிட்டேன்.
ஆனாலும் சில அனுபவங்களை அறியும் முன்பாகவே எல்லாம் அறிந்ததுபோல் சொல்லும் பாவனை இருப்பதாகப் பின்பான வாசிப்பில் தெரிந்தது. அது ஒரு போலித்தனம்.
பெரியஞானக் கோவை என்னும் பாடலை வாசித்துக்கொண்டிருந்த தருணம் அது.
அதனால் பெரிய ஞானியாய் என்னை எண்ணிய அத்தருணத்தை நினைக்க இப்பொழுதும் எனக்குச் சிரிப்புதான்.
நம் அறியாமைகளைக் கண்டறியுந்தோறும் நாம் அறிவு பெறுகிறோம்.
எனவே அன்று முட்டாளாய் இருந்தேன் என்று சொல்வது கூடக் கொஞ்சம் பெருமிதம்தான்.
இது கூட நாளை அபத்தமாகத் தோன்றலாம்.
தங்களின் வருகையும் கருத்தும் இன்னும் என்னைச் சரிப்படுத்தும்.
தொடருங்கள்.
நன்றி.
புல்லரிகிறது பால்யத்திலேயே பயன் பெறும் எண்ணம் மிளிர்ந்தது பாக்கியமே.
ReplyDeleteஎதை எடுப்பது எதை தவிர்ப்பது எல்லாமே பாவமும் முத்தும் பொன்னுமாக வல்லவா கொட்டிக் கிடக்கிறது .
காற்றாய்க் குழலெழும் கீதமென் கீதம்!
ஏச்சின் உளிபட் டானதென் சிற்பம்!
பேச்சுகள் குறைத்துப் போதலென் வாழ்வு!
எல்லாம் விரும்புதல் எனதுயிர் வேட்டல்!
எதிர்பார்ப் பில்லா தேற்றமென் ஏணி!
வாதிட் டெனைநான் வளர்த்திட விரும்பேன்!
வேதனை செய்யினும் வெறுத்திட ஒண்ணேன்!
எல்லாம் உயர்ந்த எண்ணங்கள் ஆனால் என்ன அன்று இருந்த ஒளி வட்டம் இப்போ இல்லை அப்படித் தானே. இருந்தாலும் குற்றம் இல்லை.
அன்புநான் உறங்கும் அன்னையின் திருமடி!
நண்பர்கள் எனக்கிந் நானிலக் கடவுளர்!
இன்பம் இன்பம் இன்னலும் இன்பம்
எங்கும் எதிலும் எல்லாம் இன்பம்!
கவலைகள் என்கீழ்க் கால்மிதி யடிகள்!
புவிகடல் தழுவிப் போய்வரும் அலைநான்!
இளமையில் முதுமை கொண்டதென் அறிவு!
வறட்சியில் வளமை காண்பதென் ஞானம்!.
இந்தச் சரக்குக்கு போதை அதிகம் தான் போல மயக்கம் அதிகமாகவே வருகிறது இப்போ எனக்கு .
தட்டச்சும் போது ஏற்பட்ட தவறுக்கு மன்னிக்கவும். பவளம் முத்து என்று வாசிக்கவும்.
Deleteஎன்ன அம்மா சென்ற பதிவில் முடித்த கதையை இன்னும் தொடர்கிறீர்களே....!
Deleteசரி நானும் தொடர்கிறேன்.
ஒரு குருவும் சீடனும் வெளியூர் செனறு விட்டுத் தங்கள் இருப்பிடத்தை அடையவதற்காகக் காட்டுவழியில் நடந்துகொண்டிருந்தார்கள். பெண்களைக் கண்களால் காண்பதும் பாவம் என்பது அந்தக் குருவின் முதல் உபதேசமாக இருந்தது.
செல்லும்வழியில் ஆறு குறுக்கிட்டது.
ஆற்றில் நடந்து அடுத்த கரையை அடைய முயற்சி செய்தபோது, அவர்களுக்கு முன்னே ஆற்றைக் கடக்க முயற்சி செய்த பெண் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டாள்.
சீடன் சற்றும் தயங்காது, தண்ணீரில் சென்று அந்தப் பெண்ணைக் காப்பாற்றி ஆற்றின் மறுகரையில் இறக்கி மேலேறினான்.
குருவிற்கு மனமெல்லாம் சீடன் மீது வெறுப்பும் கோபமும் மாறி மாறி வந்தன.
ஒரு பெண்ணைப் பார்ப்பதே தவறு. இவன் குரு உபதேசத்தை மீறி, அவளைத் தொட்டுத தூக்கி இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே இருந்தார்.
அடுத்தநாள் அவர்கள் குருகுலத்தை அடைந்தார்கள்.
குருவால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை.
அவர் மிகவும் கோபமாக,
“ என்ன இருந்தாலும் அந்தப் பெண்ணை நீ தொட்டுத் தூக்கியது தவறு“ என்றார்.
சீடன் மௌமாக, அவளை நேற்றே ஆற்றின் மறுகரையில் இறக்கி வைத்துவிட்டேனே.
நீங்கள்தானே அவளை ஒரு நாள் முழுதும் தூக்கிச்சுமந்து குருகுலம் வரை கொண்டுவந்திருக்கிறீர்கள்! “ என்றான்.
ஹ ஹ ஹா
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
மனம் மகிழும் வாசனை.... உணர்ந்தேன்... ரசித்தேன்...
ReplyDelete//கவிதை அறியேன்! கவித்துவம் அறியேன்!// இவ்வரி பொய் என்றே தோன்ற மற்ற வரிகள் அனைத்தும் மிகவே ரசித்தேன்
ReplyDelete// காண்பதில் மெய்ம்மை காணுதல் என்பணி!
உண்டலும் உறங்கலும் அல்லதென் உலகு.!
உலகம் நான்பயில் உயர்கலைக் கூடம்!
இல்லென ஏங்கேன்! இருப்பதில் மகிழ்வேன்!
சொல்லே என்சுகம்! சோகம் பகிரேன்!// சொல்லே உங்கள் பலம்! :)
// இன்பம் இன்பம் இன்னலும் இன்பம்
எங்கும் எதிலும் எல்லாம் இன்பம்!// துன்பமும் இன்பம் என்றால் எல்லாம் இன்பமே! அருமை அண்ணா..
//எதுவுமே இனியெனக் கொருபொருட் டல்ல!// விரக்தி அல்லவே?
பள்ளியிலேயே இப்படி கவிதையில் விளையாடி இருக்கிறீர்களே!!
எங்கும் எதிலும் உங்கள் தமிழும் கவிதையும், அருமை அருமை அண்ணா..
த.ம.+1
நன்றி சகோ.
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteசூனியத்தில் நம்பயணம் சொன்னீர் அழகாக!
ஞானி உமைக்கண்டேன் நன்கு!
அந்தப் பராயத்திலேயே எத்தனை வித்தகம்!
பிரமிக்க வைக்கின்றீர்கள்!..
மிக மிக அருமை ஐயா! வாழ்த்துக்கள்!
எனைக் காண முடியாதே?
Deleteஎப்படிக் கண்டீர்கள் !!!! :)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
உணர்ந்து ரசித்தேன் ஐயா...
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteஇளம் வயதின் இலக்கியப் பார்வை அருமை
ReplyDeleteநன்றி திரு, நாகேந்திர பாரதி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteபேச்சுகள் குறைத்துப் போதலென் வாழ்வு!
அடிப்போர் அடிக்க! அணைப்போர் அணைக்க!
கொள்வோர் கொள்க! கொல்வோர் கொல்க!
எங்கும் விரியும் என்னுயிர்க் காற்று!‘
எதிலும் கலக்கும் என்புனல் வெள்ளம்!
கதிரிடைக் கலப்பேன் கைச்சிறு விளக்காய்!
இளம் வயதில் எத்தனை பாடல்? அருமை... அருமை...!
நான் யார்? நான் யார்? நீ யார்?
நாலும் தெரிந்தவர் யார்- யார்?
தாய் யார்? மகன் யார்? தெரியார்;
தந்தை என்பார் அவர் யார்- யார்?
உறவார்? பகை யார்?
உண்மையை உணரார்;
உனக்கே நீ யாரோ?
வருவார்; இருப்பார்;
போவார்; நிலையாய்
வாழ்வார் யார் யாரோ?
-புலவர் புலமைபித்தனின் பாடல் நினைவிற்கு வந்தது.
நன்றி
த.ம.11
எல்லாவற்றிற்கும் திரையிசைப் பாடல்களைக் கையில் வைத்திருக்கிறீர்களே நம்ம டி.டியைப் போல.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
சுவாரஸ்யமான பால்ய வாசனை.
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
Deleteஉங்கள் தேடல் அன்றே தொடங்கிவிட்டதென்று அறிய முடிகின்றது. ஆம் மெய்ஞானம், அறிவுத் தேடல்....”நான் யார்” அப்படித் தேடியதால் தான் இந்த வரிகள் வந்தனவோ....
ReplyDelete//உண்டலும் உறங்கலும் அல்லதென் உலகு.!
உலகம் நான்பயில் உயர்கலைக் கூடம்!
இல்லென ஏங்கேன்! இருப்பதில் மகிழ்வேன்!
சொல்லே என்சுகம்! சோகம் பகிரேன்!
எதிர்பார்ப் பில்லா தேற்றமென் ஏணி!
வாதிட் டெனைநான் வளர்த்திட விரும்பேன்!
வேதனை செய்யினும் வெறுத்திட ஒண்ணேன்
எல்லாம் விரும்புதல் எனதுயிர் வேட்டல்!//
அருமை....அப்பொழுதே நல்ல வாழ்வியல் தத்துவங்கள் மனதில் பதிந்திருக்கின்றதே சகோ.
//ஏச்சின் உளிபட் டானதென் சிற்பம்!
பேச்சுகள் குறைத்துப் போதலென் வாழ்வு!
என்வழித் தனிமையில் எண்ணமென் தோழன்.//
புரிகின்றது உங்களின் மென்மையான மனம்...தனிமை விரும்பியாகியது போல்...ம்ம்??
//இன்பம் இன்பம் இன்னலும் இன்பம்
எங்கும் எதிலும் எல்லாம் இன்பம்!
கவலைகள் என்கீழ்க் கால்மிதி யடிகள்!// ரசித்த வரிகள் அதுதானே அந்த வயது...
//கசடுகள் நீங்கக் கற்பதென் நோக்கம்!//
இப்போதும் இது எதிரொலிக்கின்றதே உங்கள் எழுத்துகளில்!
//கண்ணடைத் துலகைக் காரிருள் என்பேன்!
அடிப்போர் அடிக்க! அணைப்போர் அணைக்க!
கொள்வோர் கொள்க! கொல்வோர் கொல்க!//
அட! போட வைத்தது...
//எங்கும் விரியும் என்னுயிர்க் காற்று!‘
எதிலும் கலக்கும் என்புனல் வெள்ளம்!
கதிரிடைக் கலப்பேன் கைச்சிறு விளக்காய்!
கழிவொடும் இருப்பேன் காண்கநான் பூமி!
இடியொடு ஒளிதந் திருள்மதி என்வான்!//
ஆஹா!
//கவிதை அறியேன்! கவித்துவம் அறியேன்!// இவ்வளவு அழகாய் எழுதிய உங்களுக்கு அவசியமில்லை என்றே தோன்றுகின்றது!!
நான் யார்?! நாங்கள் தெரிந்து கொண்எஓமே நீங்கள் யார் என்று!!!
வாருங்கள் சகோ.
Deleteசில குணங்கள் இன்றிருக்கலாம்.
அன்று பெரும்பாலும் இன்மைகளையே எழுதியதாக நினைக்கிறேன்.
தங்களின் கருத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
பழைய பாடலிலும் இன்றைய நீங்கள் தெரிகிறீர்கள். பழைய பாட்டையில் போனால் தேடல் முடிவுறாது. தேடிக்கொண்டே இருக்க வேண்டும் புது மாதிரி சிந்தியுங்கள்.
ReplyDeleteநிச்சயம் சிந்திக்கிறேன் ஐயா.
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ரமணரைப் போல நான் என சிந்திக்க ஆரம்பித்தேன், கட்டுரை அவ்வாறு அமையுமென்று. ஆனால் பல நிலைகளில் விவாதித்த விதம் தங்களின் ஆழமானஅறிவையும் ஆர்வத்தையும் காட்டுகிறது. நன்றி.
ReplyDeleteஅசலுக்கும் நகலுக்கும் கூடுமானவரை வேறுபாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.
Deleteஆனால் உருவாக்கியவனை ஏமாற்ற முடியாது.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.
உண்டலும் உறங்கலும் அல்லதென் உலகு.!
ReplyDeleteஉலகம் நான்பயில் உயர்கலைக் கூடம்!
இப்படித்தொடங்கிய பால்யப்பயணம்
காலம் எனக்குக் கானல் வழித்தடம்!
கரடுகள் பிளந்து கீழ்செலும் என்வேர்! இப்படியாக அறிவுத்தேடலில் வேரூன்றி காட்யளிக்கிறது.
என்றுமே என் பார்வையில் பிரமிக்க வைக்கும் ஆசிரியராக.
நல்லவேளை,
Deleteஇதற்கேதும் பாடலை மேற்கோள் காட்டவில்லை. :)
தங்கள் வாசிப்பு வியக்க வைக்கிறது.
தொடர்கின்றமைக்கு நன்றிகள்.
பால்ய நிணைவு... நன்றாக இருக்கிறது..
ReplyDeleteபால்ய நிணைவு... நன்றாக இருக்கிறது..
ReplyDeleteநன்றி வலிப்போக்கரே.
Delete// எனக்குள் நானோர் எந்திரப் பாவை!
ReplyDeleteஎனை‘நான்’ இயக்க இயங்குதல் என்கடன்! //
அருமை அருமை. நமக்கு நாமே சூத்ரதாரி என்பதனை ஒரு சூத்திரமாகவே சொன்னீர்கள்.
தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅந்த காலத்திலேயே நீங்க அப்படியா ,நம்பவே முடியலே :)
ReplyDeleteஇப்ப அப்படி இல்லை பகவானே :)
Deleteநன்றி
வணக்கம் என் ஆசானே,
ReplyDeleteஎன்ன சொல்வதென்னு தெரியவில்லை,,,
அப்பவேவா???
அத்துனை வரிகளும் அருமை,
தங்கள் சகோ, சொன்னது போல் தாங்கள் ஞானப்பால் உண்டவர் தானோ,,,,,,,,,,
வாழ்த்துக்கள்,
நன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பேராசிரியரே!
Deleteஞானப்பால் என்பதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா என்ன?
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறதே :)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.:)
வேதனை செய்யினும் வெறுத்திட ஒண்ணேன்!
Deleteஅப்படியா? கவிஞரே,,
பழைய எழுத்துக்களை புரட்டி பார்த்துமகிழ்வதில் ஓர் தனிச்சுகம் உண்டு! இன்றும் எனக்கோர் அப்படி ஓர் வாய்ப்பு கிடைத்தது. உங்களின் கவிதையும் தேடலும் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஆத்தாடி !!!! அத்தனை சின்ன வயதில் இம்புட்டு சிந்தனையா!!!!
ReplyDeleteநீங்கள் சொன்னது போல காலக்கணித்தத்தின் சாயல் தெரிந்தாலும் இது கிரேட் ஒ கிரேட்!!!
அது சரி உங்க அண்ணனை விட்டுக் கொடுக்க முடியுமா:)
Deleteநன்றி.
வணக்கம்
ReplyDeleteஐயா.
படித்து மகிழ்ந்தேன் ஐயா... பகிர்வுக்கு நன்றி த.ம20
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
நன்றி திரு ரூபன்.
Deleteஎனக்கும் கண்ணதாசனின் கவிதை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.கண்ணதாசனின் காலக் கணிதம் நான் +2 படிக்கும்போது பாடமாக இருந்தது அந்த ஓசையை அடிப்படையாக வைத்தே கொடியில் மலர்ந்த மல்லிகை ஒன்று, அருகில் இருந்த அரளியைப்பார்த்து என்ற கவிதையையும் நானும் நானும் என்ற கவிதையையும் எழுதி இருந்தேன் . உங்கள் கவிதையைப் போல அது தரம் வாய்ந்தது அல்ல எனினும் தாக்கத்தின் விளைவால் விளைந்தது. உங்கள் கவிதைகளைப் பார்க்கும்போது நான் கவிதை எழுதலாமா கூடாதா என்ற ஐயம் வந்து விட்டது.
ReplyDeleteதங்கள் தமிழ்ப் புலமை உண்மையில் வியக்க வைக்கிறது. மிக சிறந்த படைப்புகளை தர உங்களால் இயலும் வாழ்த்த்துகள்
நான் எப்போது எவ் வலைப் பக்கம் சென்றாலும் அவலைப் பதிவிற்கு தம வாக்கு உண்டு. அதனால் எப்போதும் குறிப்பிடவதில்லை
வணக்கம் ஐயா.
Deleteதங்களைப் போன்றவர்களின் நட்பும் படைப்பும் பேணவும் காணவும் இவ்வலைத்தளம் வாய்ப்பளிப்பதை எண்ணி நெஞ்சம் நெகிழ்கிறேன்.
தங்களின் கவிதைகளைப் படித்தேன்.
என்னைத் தமிழ் வாசகன் என்றல் ஓரளவு பொருந்தும்.
புலமை எல்லாம் ஒன்றுமில்லை. அதற்குப் பெரிய அளவிலான முயற்சிகள் தேவைப்படும். அது என்னிடத்தில் இல்லை.
கிடைத்ததைப் படித்துக் கடக்கிறேன் அவ்வளவுதான்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நான் யார் என நீங்கள் கேட்டாலும்,நாங்கள் உங்களை உணர்ந்து விட்டோம்!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி புலவர் ஐயா.
Deleteஒரு மனிதனை செழுமைபடுத்தும் காலம் எதுவெனில் பால்ய பருவம் இந்த காலத்தில் கொள்ளும் சிந்தனை வேட்கைதான் அவனை வழிநடத்தும் அந்தவேட்கை உங்களிடம் இளமையிலேயே குடி கொண்டமை பாராட்டுதலுக்கு உரியது ...........
ReplyDeleteதங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சகோ.
Delete
ReplyDeleteவணக்கம்!
நான்யார் கவிதை! நறுந்தமிழ்ச் சீர்மணக்கும்
தேன்சேர் கவிதை தெளி!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்