Pages

Sunday, 12 July 2015

புதிருக்கு விடை கண்ட கதை.


காளிதாசனைப் பற்றிய கதை எல்லாருக்கும் நினைவிருக்கும். காளிதாசன் எனக் காளியின் தாசனாய் மாறுவதற்கு முன்னால் ஒன்றும் அறியாதவனாய், இளவரசியை மணமுடிக்கப் போய்,  அவள் மௌனமாய்க் கேட்கும் கேள்விகளுக்கு, மனம் போன போக்கில், 1, 2, என விரல்களைக் காட்டிப் பதிலளிக்க, அது தனது கேள்விகளுக்கான தத்துவார்த்தமான பதில் என்று இளவரசி அவனை மணம் முடித்துக் கொள்வாள்.

 என்னுடைய வாழ்வில் இதுபோன்ற தத்துப்பித்துத் தனங்களால் குருட்டாம் போக்கில் நிறைய கேள்விகளுக்குச் சரியான விடை அளித்திருக்கிறேன். நல்லவேளையாக இப்போது எந்த இளவரசிகளும் இதுபோன்ற போட்டிகளை நடத்தாததால் அவர்கள் தப்பித்தார்கள். காளிதாசன் காலத்தில் நான் இல்லாததால் அவன் தப்பித்தான்.

ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆரம்பகாலத்தில் சனிக்கிழமை தோறும் பல பள்ளிகளில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட மையத்திற்கு ஆசிரியர்களை வரவழைத்துப் பணிமேம்பாட்டுப் பயிற்சிகள் அரசால் வழங்கப்பட்டன.
கற்பித்தல் மேம்பாடு என்பது, வடையும் தேனீரும் சாப்பிட்டுவிட்டு, ஊர்கதை பேசிக் கலைவதுதான். என்னைப் போல் ஆர்வக் கோளாறு உள்ள ஆசாமிகள் வடை சாப்பிடத் தரப்படும் செய்தித்தாள் துண்டில் என்ன இருக்கிறது என்று படித்து அதில் ஏதேனும் பயனுள்ள ஒரு தகவலை அறிந்து கொண்டால் அதுவே அன்றைய நாளின் பெரிய விஷயம்.

இதுவல்லாமல், பள்ளி வேலைநாட்களிலேயே சில பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.

ஆசிரியர்களை மாணவர்களாய் அமரவைத்து, உங்களிடம் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் இதுபோல எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அந்த ஒருநாளாவது ஆசிரியர்கள் அனுபவக் கல்வியின் மூலம் அறிய வைப்பதற்காக அரசு மறைமுகமாகச் செய்யும் ஏற்பாடு இதுவோ என பலமுறை எனக்குச் சந்தேகம் வந்திருக்கிறது.

நான் பள்ளியில் படிக்கும்போதும் சரி, ஆசிரியனானபோதும் சரி . ஒரு நல்ல மாணவன் இல்லை. ஆசிரியப் பயற்றுநர்கள் பொதுவாக என்னைத் தொல்லை செய்வது இல்லை. நான் அவர்களையும்…! ( சுய புராணம் அதிகமாகப் போகிறதோ..? அட அதை இன்னம் ஆரம்பிக்கவே இல்லைங்க…!!! )

இவ்வகுப்புகளில்  நான் தர்ம சங்கடமாக நினைக்கும் தருணம் ஒன்றிருந்தது. அது எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் இருக்க சில நேரம் நான் வகுப்பெடுக்க வேண்டி இருக்கும் தருணம்.

( பள்ளிப்பருவத்தில் எல்லாம் நான் அவர்களைக் கேள்விமேல் கேள்வி கேட்டுப் படுத்திய பாட்டினால், ‘ நீ என் நிலையில் இருந்து பாருடா ‘ என்று  அவர்கள் விட்ட சாபமோ என்னமோ நான் ஆசிரியனானது :) அதைவிடப் பெரிய சாபம் என்னவென்றால் என்னுடைய மாணவர்கள் கேள்வியே கேட்காதது. ( அப்படிச் சொல்லிக்குடுக்கிறேனாக்கும் என்று நினைத்துவிடாதீர்கள்!!! 35 என்பது எங்கள் வாழ்வில் வழிபாட்டுக்குரிய எண்ணாக மாறிவிட்டது. அது ‘போதும் என்கிற பொன் செய்யும் மருந்துடன்’ இருக்கும் மாணவர்கள்தான் பெரும்பாலோர் . )

இதுபோன்ற பயிற்சி வகுப்பிற்கு,  என்னுடைய ஆசிரியை ஒருவரும் வருவார். நான் படிக்கும் போது என்னைப் பார்த்தாலே அவருக்குக் கோபம் வரும்.

கால்மிதித்த பாம்பின் சீற்றம் நான் ஏதெனும் கேட்க எழும்போது அவர் கண்களில் தெரியும். 

ஒரு கட்டத்தில் அவரைப் பார்த்தாலே என்னுள் மெல்லிய நடுக்கம் பரவும்.  ஒரு முறை தவறான விடை ஒன்றை முந்திக் கொண்டு சொல்லிவிட்டேன் என்பதற்காக எல்லா மாணவர்களையும் ஒரே நேரத்தில் என் தலையில்  கொட்டச் சொன்னார். உலகம் இருண்டு போனது ஒருகணம். கண்களில் நீர்த்தாரை. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதை அவர் நடத்தையில் இருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். 

அரக்கில் சிக்கிக்கொண்ட பூச்சியினைப் போல என் சிறகுகள் சிக்கப் பறக்க முடியாமல் பிடித்திறுக்கி வைத்திருந்த வருடம் அது. நான் ஆசிரியனாக ஆன பின்னர் முதல்முறையாக இதுபோன்ற பயிற்சி வகுப்பில் அவரைச் சந்தித்தபோது, “ என்ன வாத்தியாராயிட்டியா? கடைசியிலே உருப்படியா வேற வேலைக்குப் போக முடியல….!” என்றார். அப்பொழுதும் அவருக்கு என் மேலான வன்மம் மாறியிருக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

இதுபோன்ற பயிற்சி வகுப்பில் அதன்பின், அவர் அமர்ந்திருக்க நான் வகுப்பெடுக்கும் சூழல் சிலமுறை வாய்த்தது. நான் வகுப்பெடுக்கிறேன் என்றாலே வகுப்பை நடத்தவிடாமல் சத்தமிட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார். மற்றவர்களையும் இழுத்து வைத்துக் கொண்டு கவனிக்க விடாமல்  செய்வார். சில நேரம் நான் சொல்லும் ஏதேனும் ஒரு வார்த்தையைத் திருமபச் சத்தமாய்ச் சொல்லிக் கிண்டல் செய்து கொண்டிருப்பார். அங்குள்ள பெரும்பாலானோர்க்கு  நான் மிக இளையவன். அன்றியும் என் ஆசிரியர் என்பதால் ‘கொள்வோர் கொள்க ’ என நான் என் வேலையில் கவனமாய் இருந்துவிடுவேன். ஒரு கட்டத்தில் மற்றவர்கள் செவிசாய்க்காமல் வகுப்பைக் கவனிக்கிறார்கள், நானும் இதைப் பொருட்படுத்துவதில்லை எனத் தெரிந்த பின்பு, செருப்பைச் சத்தமெழுப்பத் தேய்த்தபடி வகுப்பறையை விட்டு வெளியே செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அன்றும் அது போன்ற ஒரு பயிற்சிப் பட்டறைக்கு வந்திருந்தார்.

பயிற்சியின் இறுதியில் குழுச்செயல்பாடு ஒன்று இருந்தது.

வந்திருந்த ஆசிரியர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவர் செல்ல வேண்டும்.

மேடைமேல் பல்வேறு பொருள்களின் பெயர் எழுதப்பட்ட அட்டைகளைக் கொண்ட கட்டு ஒன்று இருக்கும். ஒவ்வொரு அட்டையிலும் ஏதாவது ஒன்றின் பெயர் இருக்கும். செல்பவர் அதிலிருந்து ஒன்றை எடுத்து யாரும் அறியாமல் பார்த்துவிட்டு அங்கிருக்கும் பயிற்றுநரிடம் கொடுத்துவிட்டு மேடையின் முன் வந்து நிற்க வேண்டும்.

எதிர்க்குழுவில் உள்ளோர் அவரிடம் கேள்விகளைக் கேட்கலாம்.

அதற்கு முன் நிற்பவர் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று மட்டுமே பதில் கூற வேண்டும்.

உதாரணமாக,  மேடைக்குச் சென்றவர் ‘கரும்பலகை’ என்று எழுதப்பட்ட அட்டையை எடுத்திருந்தார் என்றால் அவர் எதிரணியில் இருப்போர் ‘ இந்த அறையில் இருக்கும் பொருளா ? என்றால் ‘ஆம்’  என்றும், ‘கடிகாரமா?’ என்று கேட்டால் இல்லை என்றும் சொல்ல வேண்டும்.

இப்படியே கேள்விகளால் தவறான விடைக்கான சாத்தியங்களைச் சுருக்கிக் கொண்டே வந்து கடைசியில், ‘கரும்பலகையா‘ என்று கேட்கப்படும்போது முன்னிற்பவர் ‘ஆம்’ என்று அதை ஆமோதிக்க அச்செயல்பாடு முடியும்.

குறைந்த கேள்விகளைக் கேட்டுப் பதில் சொன்ன அணி வென்றதாகக் கருதப்படும்.
.
இந்தப் போட்டிக்கான குழு பிரிக்கப்பட்டபோது நான் குறிப்பிட்ட எனது ஆசிரியை எதிர்க்குழுவில் இருந்தார்.

முதலில் எங்கள் அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

எங்கள் அணியில் இருந்து ஒருவர் சென்று ஒரு அட்டையை எடுத்துப் பார்த்துவிட்டுப் பயிற்றுநரிடம் கொடுத்துவிட்டு மேடைக்கு நடுவில் வந்து நின்றார். எதிரணியினர் கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர்.

இருபது கேள்விகளுக்கு மேல் கேட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.

என் ஆசிரியை இருந்த அணியில் ஒருவர் ‘திமிங்கலமா’ எனக்கேட்க, மேடையில் இருந்தவர் ‘ஆம்’ என்றதும் போட்டி முடிந்தது.

அந்தக் கணத்தில், ஆசிரியர்கள் குழந்தைகளாக மாறி அடைந்த பூரிப்பையும் துள்ளலையும் அந்தக் குழுவிடத்தும் குறிப்பாக என் ஆசிரியை இடத்தும் பார்த்தேன்.

அது ஒரு அற்புதத் தருணம்.

இவ்வளவு அழகானதா இவர் முகம்? !!!

நான் அவரிடம் பயின்ற ஓராண்டிலோ அதன் பின்னரோ இவ்வளவு அழகிய தோற்றப் பொலிவை அவரிடம் கண்டதில்லை.

பயிற்சி தன் இலக்கினை அடையத் தொடங்கி இருந்தது.

அடுத்து அவர்கள் அணியிலிருந்து ஒருவர் செல்ல வேண்டும்.

யார் செல்வது என்று அங்குச் சிறு சலசலப்பு.

நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என் ஆசிரியை எழுந்தார்.

மேடைக்குச் செல்லும்முன் எங்கள் குழுவின் பக்கம் திரும்பினார்.

துழாவிய அந்தக் கண்களில் நான் பட்ட நொடியில், அவரது அழகிய முகம் உருமாறத் தொடங்கியிருந்தது.

விறுவிறுவென, மேடைக்குச் சென்று,  கட்டிலிருந்து ஒரு அட்டையை உருவினார். அதை அங்கிருந்த பயிற்றுநரிடம் கொடுக்காமல் அவரே கையில் மடித்து வைத்துக் கொண்டார்.

மேடைக்கு முன் வந்து நின்றார்.

“சரி ….இனி நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம்“ என எங்களைப் பார்த்துச் சொன்னார்  பயிற்றுநர்.

நான் தொடங்கினேன்.

“உயிருள்ள பொருளா?“

இல்லை.

“ ஆகாயவிமானமா? “

ஒரு கணம் அவர் ஆம் என்றும் சொல்லவில்லை. இல்லை என்றும் சொல்லவில்லை.

அவர் முகம் இருண்டிருந்தது.

பயிலரங்கில் நிசப்தம்.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை.

நான் அடுத்த கேள்விக்கான தயாரெடுப்பில் இருந்தேன்.

அவர் கையில் இருந்த அந்த அட்டையைக் கசக்கி எறிந்தார்.

“ ஆம் ” என்று அவர் உதடு மெல்ல அசைந்தது.

என் அணியினர் கூச்சலிடத் தொடங்கியிருந்தனர்.

அவரது முகம் மேலும் கறுத்திருந்தது.

தலையைத் தாழ்த்தியபடி மேடையை விட்டுக் கீழே இறங்கினார்.

நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

என்னால் நம்ப முடியவில்லை.

‘ என்ன போட்டி முடிந்ததா? நான் சொன்னது சரியா..?!!! ’

அது ஞான திருஷ்டியோ, தீர்க்கதரிசனமோ பேரறிவோ சம்பந்தப்பட்டதில்லை என்று எனக்குத் தெரியும்.

உயிரற்ற பல்லாயிரக்கணக்கான விடைகளின் சாத்தியத்திற்கான  நிகழ்தகவில் அதுவும் ஒன்று.

என் முதல் வாய்ப்பில் அது வந்து விழுந்திருக்கிறது.

இதுபோன்று குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாகத்தான்  பல நேரங்களில் என் ஊகம் பலித்திருக்கிறது.

வெகுசில தருணங்களில் தவறி விழுந்து அடிபட்டும் இருக்கிறது.
அதுபற்றியெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா..?

சில நேரங்களில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்குச் சிந்தித்து விடை சொல்ல வேண்டி இருந்திருக்கிறது.

அப்படி ஒரு தருணம் சமீபத்தில் விடுகதை தெரியும் அது என்ன விடுகவி? என்னும் பதிவில் வாய்த்தது.

அப்பதிவின் பின்னூட்டத்தில் கவிஞர். பாரதிதாசன் ஐயா அவர்கள்,

விடை தெரிந்தால் சொல்லுங்கள் என்று இந்த வெண்பாவை அளித்திருந்தார்.

வாயுண்டு, பேச வழியில்லை! உண்கின்ற
காயுண்டு, காட்ட புளிப்பில்லை! - தாயீந்த
கன்னல் கனியுண்டு, வெண்பா பெறுவதில்லை!
மின்னும் கொடியே விளம்பு?

வாய் இருக்கிறது பேச முடியாது. உண்ணும் காய் உண்டு. ஆனால் அந்தக்காயின் புளிப்புச் சுவையைக் காட்ட முடியாது. தாய் தந்த இனிப்பான கனி உண்டு. அது வெண்பா பெறுவதில்லை. அது என்ன?

இதுதான் கேள்வி.

இந்த வெண்பாவை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

யாராயிருந்தாலும் மோனை பற்றிப் பெரிதும் கவலை கொள்ளாத சுவை மிகுந்த வெண்பா இது.

மண்டையைச் சிறிது கசக்கத்தான் வேண்டியிருந்தது.

விடை இன்னதென்று புலப்பட்ட தருணம்  மகிழ்ச்சிதான். ஆனால் அது சரியாய் இருக்க வேண்டுமே.

விடை என்று நான் அறிந்ததை  இன்னொரு வெண்பாவாக,

பிஞ்சுவாய் பேசாது! போய்ப்பறிப்பா ரில்லாமல்
மிஞ்சுங்காய் எல்லாம் முதிர்ந்தினிக்க - எஞ்சும்
புளிப்பில்லை! வெண்பா புகலில்லை! கொண்டு
களிப்புண்டேன், தேமாங் கனி! ”

என்று கவிஞரின் பின்னூட்டத்திற்கான மறுமொழியில் இட்டுச் ‘சரிதானா?’ என்று கேட்டிருந்தேன்.

விடை சரிதான் என்று பதில் வந்தது கவிஞரிடமிருந்து.

துள்ளல்தான். மாணவப் பருவத்தின் உற்சாகச் சிறகடிப்பு மீண்டும்.

சரி இனி இப்புதிருக்கு நான் விடைகண்ட கதை.

கவிஞர் தந்த வெண்பாவின் முதல் சொல்லில் உள்ள,

வாய் என்பதற்குப் பலபொருள்கள் உண்டு.

அதில் ஒரு பொருள் ”பிஞ்சு” என்பது.

கேள்வி அமைந்த வெண்பாவில் ‘காய் கனி’ என்றெல்லாம் வருகிறது எனவே வாய் என்பதற்குப் பிஞ்சு என்பதன் பொருள் பொருத்தமுடையது எனத் தோன்றியது.

பிஞ்சினால் பேச முடியாது.

எனவே,

வாயுண்டு பேச வழியில்லை என்பதன் பொருள்,

‘பிஞ்சுண்டு . அதனால் பேச முடியாது’ என்பது. மற்ற சாத்தியங்களையும் ஆராய்ந்து விடை இதுவாக இருக்கும் என்று ஊகித்தபிறகு,

நான் என்னுடைய விடையில் வாய் என்பதன் பொருள் பிஞ்சு என்பதையும் அதனால் பேச முடியாது என்பதையும்,

பிஞ்சு வாய் பேசாது ’ என்றெழுதி இருந்தேன்.

அடுத்து அவரது வெண்பாவில் உள்ள,

உண்கின்ற காயுண்டு. காட்டப் புளிப்பில்லை.“ என்பதன் பொருள்,

‘அதன் காயை உண்ணலாம். ஆனால் காயை உண்டு அதன் புளிப்புச் சுவையைக் காட்ட இப்போது காய் இல்லை. அது கனிந்துவிட்டது.’ என்பது.

 எனவே அது மாங்காய் அல்ல மாங்கனி என்ற முடிவுக்கு வந்தேன்.

இதையே என் விடையில்,

‘பறித்துண்பார் எவரும் இல்லாமையாய் அக்காய்கள் எல்லாம் இப்போது கனிந்து இனிப்புச்சுவையை உடையனவாக மாறிவிட்டன. அதனால் அவற்றில் இப்பொது காட்டுவதற்குக்  காய்க்குரிய புளிப்புச் சுவை இல்லை .‘ என்ற பொருள்படும்படி,

போய்ப்பறிப்பார் இல்லாமல் மிஞ்சும்காய் எல்லாம் முதிர்ந்து இனிக்க காட்ட புளிப்பில்லை ” என்று  என்று குறிப்பிட்டிருந்தேன்.

“தாயீந்த கன்னல் கனியுண்டு.“ என்பதன் பொருள்

‘மரம்தந்த இனிய பழங்களுண்டு.‘ என்பது.

எனவே அப்பழங்கள் இனிப்புச் சுவையை உடையவை என்னும் பொருள் கிடைத்தது.

வெண்பா பெறுவதில்லை என்பது,

வெண்பா கனிச்சீர்கள் எதனையும் பெறுவதில்லை. அதில் வருவன காய்ச்சீர்களே.

அவற்றுள்  இனிக்கக் கூடிய சுவையை உடைய கனி என்னும் பொருளில் வெண்பாவில் வராத சீர் எனப்படுவது  ‘தே மாங்கனி.‘ என்னும் சீர்.

எனவே,

‘பிஞ்சுள்ளதும், ( வாயுண்டு, பேச வழியில்லை )

காய் உள்ளதும், ( காயுண்டு )

கனிந்தால் தன் புளிப்புச்சுவையை மாற்றிக் கொள்வதும்( காட்டப் புளிப்பில்லை)

வெண்பாவில் வராததுமாய் அமைவது ( வெண்பா புகுவதில்லை )

எது என்பதற்கான விடையை அறிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தேன். அது தேமாங்கனி,’

 என்னும் பொருள்பட,

“ பிஞ்சுவாய் பேசாது! போய்ப்பறிப்பா ரில்லாமல்
மிஞ்சுங்காய் எல்லாம் முதிர்ந்தினிக்க - எஞ்சும்
புளிப்பில்லை! வெண்பா புகலில்லை! கொண்டு
களிப்புண்டேன், தேமாங் கனி! ”

என்று எழுதியிருந்தேன்.

புதிருக்கான விடை சரியென்று அறிந்த அத்தருணத்தில் குழந்தைமையின் புன்னகையும் மலர்ச்சியும் கொண்ட அந்த ஆசிரியையின் முகம்போலத்தான் என் முகமும் இருந்திருக்க வேண்டும் என்று ஒருகணம் தோன்றியது.

பட உதவி - நன்றி  https://encrypted-tbn3.gstatic.com/images



36 comments:

  1. எப்பேர்ப்பட்ட அனுபவ பாடங்கள்,

    கற்றலின் கனி இனிக்கவே செய்தது.

    நிச்சயம் உங்கள் மாணவர்கள் திறன் பல பெற்றவர்களாகத்தான இருப்பார்கள்.

    உங்கள் துள்ளலில் நானும் சேர்ந்து துள்ளிக் குதிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே.

      அனுபவங்களால் நான் அறிந்த பாடம் குறைவுதான் .

      இவை போன்ற மிகச்சில நிகழ்வுகள் என்னால் மறக்க முடியாதன.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete
  2. அந்த ஆசிரியரிடம் படித்தும் நீங்கள் இவ்வளவு திறமையாளராக இருந்தால் இன்னும் நல்ல எண்ணம் கொண்ட ஆசிரியரிடம் படித்தால் நீங்கள் எங்கேயோ போயி இருப்பீர்கள் நல்ல வேளை அவரிடம் படித்ததினால்தான் நீங்கள் இப்படி ஒரு பதிவு எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!

      இது போன்ற ஆசிரியர்கள் ஒரு சிலர்தான் மற்றவர்கள் அனைவருமே நல்லாசிரியர்கள் என்பது நானுற்ற பேறு.

      தங்களின் தொடர்வருகை ஆச்சரியமும் மகிழச்சியும் அளிக்கிறது.

      நன்றி.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    ‘புதிருக்கு விடை கண்ட கதை’

    காளிதாசன் கண்ணதாசன் க(வி)தை நீ
    நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
    காளிதாசன் கண்ணதாசன் க(வி)தை நீ

    ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஹோய்
    ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய
    தாமரை மடலே தளிருடலே அலை தழுவ
    பூநகை புரிய இதழ் விரிய மது ஒழுக
    இனிமைதான்…இனிமைதான் பொழிந்ததே வழிந்ததே.......

    -படிக்கையில் பழைய நினைவுகள் மலர்ந்ததே...!

    புதுகையில் திரு.மதுவின் பொண்ணு என்னிடம் ஏதோ ஒன்று மனதுக்குள் நினைக்கச் சொல்லி அதை விரல்களில் எண்ணிக்கொள்ளச் சொல்லி அந்த விடுகதையை அல்லது மேஜிக் மிகச் சரியாகச் சொல்லிய பொழுது அசந்து போய்விட்டேன். அப்புறம்தான் தெரிந்தது தாங்கள் சொல்லியது போல குருட்டாம் போக்கில் கேள்விகளுக்குச் சரியான விடை அளிக்கும் வல்லமை...எப்படி என்றே தெரியவில்லை... ஆனால் சரியாக இருக்கிறது. அது ஒரு வகையான திறமைதானே!

    ‘பள்ளி வேலைநாட்களிலேயே சில பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன’- நல்ல வேளை எனக்கு அந்த வாய்ப்பு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

    ‘ஆசிரியர்களை மாணவர்களாய் அமரவைத்து, உங்களிடம் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் இதுபோல எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை அந்த ஒருநாளாவது ஆசிரியர்கள் அனுபவக் கல்வியின் மூலம் அறிய வைப்பதற்காக அரசு மறைமுகமாகச் செய்யும் ஏற்பாடு‘
    -உண்மையைச் சொன்னீர்கள்.

    தங்கள் ஆசிரியையின் வன்மம் இன்னும் மனதைவிட்டு மாறாமல் வடுவாகப் பதிந்தது கண்டேன்.... ஆமாம் எல்லா மாணவர்களும் ஆசிரியர் தண்டிப்பதை எளிதில் மறக்காமல் மனதில் வைத்திருப்பார்கள்.

    கவிஞர். பாரதிதாசன் ஐயா அவர்கள், வெண்பாவில் கேட்ட விடுகவிக்கு வெண்பாவிலே விடை ‘தேமாங் கனி!’ தந்து அசத்தியது கண்டு வியந்து போனேன்.

    நன்றி.
    த.ம.1.



    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களால் தட்டச்சுச் செய்ய இயலாத நிலையிலும் இவ்வளவு நீண்ட பின்னூட்டம் தங்களின் அன்பைக் காட்டுகிறது.

      தற்போதுள்ள நிலையில், நீங்கள் பதிவினைப் பார்த்ததாகச் சொன்னாலே எனக்கு மகிழ்ச்சிதான்.

      உங்களின் வருகைக்கும் கருத்துள்ள பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
  4. வணக்கம்
    ஐயா

    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி த.ம 4

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இதற்கு நீண்ட பின்னூட்டம் இடவேண்டும். மாலை வருகிறேன்:)

    ReplyDelete

  6. //என்ன வாத்தியாராயிட்டியா? கடைசியிலே உருப்படியா வேற வேலைக்குப் போக முடியல….!”//

    ஒரு ஆசிரியரே, ஆசிரியர் பணி உருப்படியானதில்லை என நினைத்திருக்கிறார் என்றால் அவருக்கு அந்த பணியில் எந்த அளவுக்கு ஈடுபாடு இருந்திruக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

    தாங்கள் கவிஞர் பாரதிதாசன் ஐயா அவர்கள் தொடுத்த கேள்விக்கு விடை அளித்ததை படித்தபோது எல்லோராலும் இது போன்று விடை கண்டு வெண்பா பாடமுடியாது என்றே தோன்றியது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      எனது பன்னிரண்டாம் அளவில் நான் பேசப்படும அளவிற்கு மதிப்பெண்கள் எடுத்திருந்தேன்.

      இன்று மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பார்க்க அது மிகக்குறைவு தான்.

      ஆசிரியராவது என் கனவாக இருந்தது.

      மற்ற வாய்ப்புகளை புறந்தள்ளினேன்.

      என் வீட்டிலும் இது குறித்த வருத்தம் இருந்தது.

      தன் பணியின் மேல் அவருக்குப் பிடிப்பில்லை என்பதை நான் பள்ளி நாட்களிலேயே தெரிந்து கொண்டுவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete
  7. ஆசானே! உங்கள் அனுபவம் எப்பேற்பட்ட அனுபவம் என்று எண்ண வைத்தது. ஆசிரியருக்கு இப்படிப்பட்ட வன்மமா ஒரு மாணவனிடம்?! என்ற வியப்பைத் தந்தது. ஆசிரியருக்கு மாணவர் என்பவர்கள் தனக்குக் கீழ், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, நாம் ஆசிரியர் நமக்குத்தான் எல்லாம் தெரியும், நமக்குத் தெரியாதைதை மாணவர் கேட்டுவிட்டால், அங்கு நம் ஆசிரியப் பட்டம் தாழ்ந்துவிடுகிறது. நம்மை பிற மாணவர்கள் தாழ்வாக நினைப்பார்கள், இவர் எல்லாம் ஒரு ஆசிரியரா என்றும், ஆசிரியருக்கு ஒண்ணுமே தெரியவில்லை என்று நினைப்பார்கள், என்ற ஒர் அற்ப அகந்தையின் வெளிப்பாடு. இப்படிப்பட்ட ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர்களாக இருக்கவே முடியாது.

    ஆசானே தங்களது அன்றைய நிலைமையை, நானும் ஓர் ஆசிரியன் என்ற முறையில் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. மாணவர்களிடமிருந்தும் நாம் நிறைய கற்க முடியும் என்ற அகந்தை அற்ற மனதுடன் ஆசிரியர் பயிற்றுவிப்பார் என்றால், மாணவர்கள் கேட்கும் கேள்விகளை மெச்சி விடை பகிர்ந்து ஒரு நல்ல விவாத வகுப்பாகவோ, கருத்தரங்கமாகவோ வகுப்புகள் மாறினால் அங்கு நல்லதோர் அறிவு வளரும் தளமாகச் செயல்ப்படும். அதுதான் கல்விக் கூடம். கல்விச் சாலை...மாணவரும் ஆசிரியர்களும் சேர்ந்து இடுவதுதான் கல்விச்சாலை அந்தப் பாதையில் பயணித்தால் அது நல்லதொரு பயிலரங்கத்தை நிறுவும் அல்லவா...ம்ம் ஏனோ அது இங்கு நடப்பதில்லை. ஆசிரியர்கள் தயாராக இருந்தாலும் மாணவர்கள் நீங்கள் சொல்லுவது போல் 35 லேயே போதும் என்று நிற்பதும், மாணவர்கள் நன்றாக இருந்தால் அவர்களுக்கு அமையும் ஆசிரியர்கள் நீங்கள் சொல்லி இருக்கும் ஆசிர்யரைப் போன்றும் அமைந்து விடுவது நமது துரதிர்ஷ்டம்தான்....நமது கல்விமுறையும் அப்படி ஆகிப் போனது.....

    ஆசானே இன்றுதான் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின் பின்னூட்டத்தைப் பார்த்தோம்...அதை வாசித்ததும், நீங்கள் இந்தப் பதிவில் முதலில் சொல்லி இருப்பது போல் குருட்டாம் போக்கில் விடை சரியாவது போல், " உண்கின்ற காயுண்டு, காட்ட புளிப்பில்லை!" என்ற வரிகளை வாசித்ததும், எங்கள் மனதிலும் மாங்கனி என்று தோன்ற அதுவாகத்தான் இருக்குமோ என்று தோன்றியது...ஹஹஹஹஹ இறுதியில் நீங்கள் மிக அழகாக விளக்கத்துடன் விடை பகர....எங்களுக்கும் குருட்டாம் போக்கில் கண்டு பிடித்தாலும், ஒரு இனிய மகிழ்வு...அந்த ஆசிரியப் பயிற்சியில் ஆசிரியர்கள் அடைந்த மகிழ்வு போல...ஹஹஹஹ்ஹஹ...ஆனால் இந்தக் குருட்டாம் போக்கில் கிடைக்கும் விடைகள் மகிழ்வு தந்தாலும், நமது மூளையைக் கசக்கி, தேடல்களில் ஆதாரங்களுடன் விடை கிடைக்கும் போது அந்த மகிழ்விற்கு ஈடு இணை எதுவும் இல்லைதானே ஆசானே?

    நல்ல அனுபவப் பாடம் ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கற்றுத் தந்த பாடம்......

    (கீதா: இருவரின் கருத்தும் இங்கே...இனி எனது கருத்து என்று சொல்லுவதற்கில்லை...என் மகனின் அனுபவம்....)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசானே.

      அவ்வாசிரியை தாழ்வு மனப்பாங்கினால் பீடிக்கப்பட்டவர் என்பதைப் பின்பு உணர்ந்து கொள்ள முடிந்தது.

      என்னிடம் என்றல்ல , அவரிடம் படித்த சில மாணவர்கள் மேற்படிக்க நான் பணியாற்றும் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள்.

      அவர்களிடம் எந்தப் பள்ளியில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்று விசாரித்து, அவர்களைப் பற்றிக் கேட்கும் போது , அங்கும் அறிதலில் ஆர்வமுள்ள மாணவர்களிடம் அப்படித்தான் அவர் நடந்து கொண்டிருந்தார்.

      இது போல ஒரு சிலரைத் தாண்டித்தான் மாணவர்கள் வரவேண்டிருக்கிறது.

      இது போன்றவர் ஒருசிலர் தான் என்பதில் கொஞ்சம் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.

      தங்களின் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete
  8. ஒரு விடுகவி பின்னூட்டத்திற்கு, ஒரு உண்மை நிகழ்வை சொன்ன விதம் ரொம்பவே சுவாரஸ்யம்... அதை விட விடையை ஒவ்வொன்றாக விளக்கிய விதம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  9. கீதா: ஆசானே! ஏற்கனவே எனது மகனின் அனுபவத்தை எங்கள் தளத்தில் பதிவாகப் போட்டு அதற்கு நீங்கள் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்திருந்த போதே தெரிந்திருந்தது தங்கள் அனுபவமும், மகனின் அனுபவமும் கிட்டத்தட்ட ஒரே போல என்று.

    என் மகனுக்குக் கற்றல் குறைபாடு என்று சொல்லப்பட்டாலும்,(அவனுக்கு எழுதுவது என்றால் மிகவும் கடினம் அதனாலேயே அவன் படிப்பதற்குத் தயங்குவான். அதுவும் மீண்டும் மீண்டும் படித்ததையே படித்து எழுதுவது, மதிப்பெண் அடிப்படையில் எழுத வேண்டும் என்பது அவனுக்குக் கடினமாக இருந்தது...) நான் அவனிடம் கண்டது குறைபாடாக இல்லை. அவனது தேடல்களுக்குப் பள்ளிகளில் விடை கிடைக்கவில்லை என்பதே. அவனது கேள்விகளுக்கு விடை அளிக்கப்படாமல் அவமானப்படுத்தப்பட்டான்...இத்தனைக்கும் அவனது பள்ளிகள் தனியார் பள்ளிகள் . பல ஊர்களுக்குச் சென்றதால் அங்கு எந்தப் பள்ளி இவனைச் சேர்த்துக் கொண்டதோ அந்த பள்ளிதான். எனவே வீட்டில் அவனுக்கானத் தேடல்களுக்கு விடை கிடைப்பதற்கும், கேள்விகளுக்கு விடை கிடைக்கவும் நடைபாதையில் வாங்கியும், நூலகத்திலும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம். வாசிப்பதிலும் மிகவும் தாமதம் தான்....வாசிக்கும் போது அவனது மனம் கேள்விகள் கேட்கத் தொடங்கிவிடுமே.. ....எனவே பள்ளிக் கல்விமுடியும் வரை கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆசிரியர்கள் இவனைப் பற்றிக் குறிப்பு அனுப்பி எங்களை அழைப்பார்கள். ஒரு முறை சென்றால் பல முறை நாங்கள் சென்றதில்லை...!!!! நாங்கள் அவர்களிடம் அவன் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. அவனது தேவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று சொல்லிவிட்டோம். அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் நாங்கள் கொஞ்சம் வாக்குவாதம் நடத்த வேண்டி இருந்தது என்பதும் வேறு விஷயம். ஆனால் இறுதி பொதுத் தேர்வில நல்ல மதிப்பெண்கள் பெற்றான் நடைமுறைக்குத் தேவையான, மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலும்...எங்களைப் ப்பொறுத்தவரை 87% என்பது பெரிய மதிப்பெண்.

    அவனது குறைபாடுகள் அவன் பக்குவம் அடைய அடைய மாறிக் கொண்டு வந்தது. இப்பொது நன்றாகவே உள்ளான். தங்களைப் போல நன்றாகப் பயிற்றுவிப்பான். ஆழ்ந்த வாசிப்பு அவனது பாடங்களில். அதனால் தான் உங்கள் பதிவுகள் எங்களைக் கவர்வது. அந்த ஆழ்ந்த வாசிப்பும் சொல்லிக் கொடுக்கும் முறையும்.

    அவன் மேலை நாட்டில் முன்பு ஒரு வருடமும், சமீபத்தில் கால்நடை மருத்துவத்தில் அறுவைசிகிச்சையில் மேற்கொண்டு பயிற்சி பெற 6 மாதமும் மேலை நாட்டிற்கு சென்று வரும் போது அங்கு பள்ளியிலும் சரி, கல்லூரியிலும் சரி ஆசிரியர்கள் கேள்வி கேட்கும் மாணவர்களைத் தட்டிக் கொடுத்து, விடை பகிர்கின்றனர். சமீபத்தில் சென்றிருந்த போது வகுப்பில் நல்ல விவாதங்கள் இவனுக்கும் ஆசிரியருக்கும் ஏற்படுமாம். இவன் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் பொறுமையாகப் பதில் அளிப்பார்களாம். பாராட்டவும் செய்வார்களாம். சில கேள்விகள் அவர்களுக்குச் சவாலாக அமையுமாம். ஆனால் அதை எந்தவித அகந்தையும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு மறு நாள் விடை பகர்வார்களாம், இவன் சொல்லும் கருத்துகளையும் சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்களாம். அங்கு ஒரு நட்புடன் தான் வகுப்பறையே இருக்குமாம். அதே சமயம் ஒழுங்கும் காக்கப்படுமாம். இதை எல்லாம் அவனைப் பற்றியது அவன் கூட என்னிடம் சொன்னதில்லை. அவனது வகுப்பு நண்பர்கள், மேலைநாட்டினர் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். (அவர்கள் வகுப்பிலேயே இவன் தான் மிக மிகச் சிறியவன்....நண்பர்கள், நண்பிகள் எல்லோறுமே பெரியவர்கள், சிலர் குடும்பத்தினர், அவர்கள் வயது 30 லிருந்து 48 வரை ,....) என்றாலும் எந்தவித ஈகோவும் இல்லாமல் எல்லோரும் நல்ல நண்பர்களாகப் பழகினார்கள்.

    இது போன்ற ஒரு சூழல் நம் நாட்டில் வந்தால், எந்தக் குழந்தை மேலை நாட்டிற்குச்செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள் ஆசானே. அதுவும் இப்போதைய தலைமுறையினர் தங்கள் சுயமரியாதையை இழந்து வாழவும், அதை விட்டுக் கொடுக்கவும் தயாராக இல்லை.

    உங்கள் பதிவுகள் எல்லாமே எனக்கு மேலே சொன்ன அந்தக் கல்விச் சூழல்...பயிற்றுவிக்கும் முறை...

    இப்போது இங்கு ஒரு நல்ல கால்நடை மருத்துவரின் கீழ் வேலை செய்கிறான். அவரும் மிக நல்லவர் அகந்தை இல்லாதவர்...விவாதிப்பவர், னிறைய வாசித்து, கற்றுக் கொண்டு இருப்பவர்...என்பதால் நன்றாகவே செல்லுகின்றது. இவனது கற்றல் தேடலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது....நடைமுறை முரண்களோடு..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      உங்களின் மகன் பற்றிய இடுகையை ஆசானின் தளத்தில் வாசித்திருக்கிறேன்.

      என் உயர்கல்வியிலும் இது போன்ற ஒரு சில அனுபவங்கள் உண்டு.

      எல்லாத் துறையிலும் அத்துறைக்கு முற்றிலும் தகுதியற்று இவர் போல் ஒரு சிலர் இருப்பர்.

      விதிவிலக்குகள் விதி ஆவதில்லை.

      உங்கள் மகனை விரட்டிய ஆசிரியர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

      உண்மையில், இது போன்ற தோல்விகளுக்கு முன்தான் அவர்கள் வெட்கமும் வேதனையும அடைய வேண்டும்.

      தங்களின் மகனின் கதை வருத்தமும் சந்தோஷமும் ஒருங்கே வரவழைத்தது.

      பதிவினோடு ஒட்டிய ஒரு அனுபவத்தை இங்குப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

      Delete
  10. காளிதாசன் காலத்தில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் இல்ல அடடா அநியாயமா மிஸ் பண்ணிட்டீங்களே viju ம்..ம்.
    நான் வாயடைத்து இருக்கிறேன் எதை எடுத்து எழுதுவது என்று தெரியாமல் ஏனெனில் உங்கள் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு விடயத்தை எனக்கு உணர்த்தின. நான் மகிழ்ந்து நெகிழ்ந்து கரைந்து ம் போனேன். ஒவ்வொரு இடங்களிலும். தங்கள் எழுத்து ஆற்றலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. வடை சுற்றித் தரப்படும் செய்தித் தாளையும் விட்டு வைக்காமல் படிக்கும் ஆர்வம் என்னைக் கவர்ந்தது.
    எவ்வளவு வன்மம் நிறைந்த ஆசிரியர் தான் குட்டியிருந்தாலும் பரவாய் இல்லை வகுப்பு முழுவதையும் குட்டச்சொல்வது அவர் வக்கிரத்தை துல்லியமாக காட்டுகிறது. இருந்தாலும் இவர்களைப் போன்றோரால் நீங்கள் ஒரு நல்லாசிரியராக உருவாக ஒரு காரணமாகவும் இருக்கலாம். தாரை தாரையாக கண்ணீர் விடுமளவுக்கு செய்தது மிகுந்த வேதனையைத் தந்தது.
    நீங்கள் குருட்டு வாக்கில் பதிலளித்து இருக்கலாம் அது சரியாக இருக்கலாம் ஆனால் இந்த வெண்பாப் புதிருக்கு விபரமாகவே பதிலளித்து இருக்கிறீர்க்கள்.அதற்கு தாங்கள் அளித்த விளக்கங்கள் கண்டு மலைத்தேன். அப்பா யார் இப்படி அளிப்பா புதிரை கண்டு பிடிப்பதே கஷ்டம் அதில வெண்பாவில் பதில் யார் எழுதுவா? ம்..ம் ஒவ்வொன்றையும் மிகவும் நின்று நிதானித்து வாசித்து ரசித்தேன். பதிவுக்கு நன்றி !மேலும் தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. அது சரி அம்மா,

      காளிதாசன் இப்போது இருந்தார் ஆர் எஸ் எஸ் சில் அங்கத்தினராகி இருப்பார : )

      “““““வடை சுற்றித் தரப்படும் செய்தித் தாளையும் விட்டு வைக்காமல் படிக்கும் ஆர்வம் என்னைக் கவர்ந்தது.““““““

      அது கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று எங்கள் பக்கத்தில் சொல்வார்கள். அதற்கான முயற்சி.
      சீச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் என்று ஆக முடியாதது வருத்தம். ;)

      ( நகைச்சுவைக்காகச் சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் )

      எல்லாம் கடந்து போயிற்றே ... வேதனை ஒன்றும் வேண்டாம்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete
  11. வணக்கம் ஆசானே,
    தங்கள் நினைவுகளுடன் கூடிய விடுகவி விளக்கம் அருமை,
    நன்றி.

    ReplyDelete
  12. ஒரு வினா வெண்பாவுக்கும்
    அதற்கு விடையான வெணபாவுக்கும் இடையே இவ்வளவு தெளிவுரை தேவையா ஆசிரியரே ?
    நீங்க இவ்வளவு நீளமா எழுதுவதை பொறுமையா படித்துவிட்டு அதுவும் அலுவலகத்தில் இருந்தபடி நேரம் எடுத்து எங்களுக்காக பகிர்ந்தமைக்கு நன்றி ஆசிரியரே என்று எழுதினா... அதற்கும் கிண்டல் செய்றிங்க. அதனால நானும் இனிம இப்படித்தான் பின்னூட்டமிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      ''''''''அதற்கு விடையான வெணபாவுக்கும் இடையே இவ்வளவு தெளிவுரை தேவையா ஆசிரியரே ?'''''''''''

      மரபில் சர்வ சாதாரணமாக எழுதும் தங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் தேவை இல்லை கவிஞரே!

      உங்களை எங்கே கிண்டல் செய்தேன் என்று நினைவில்லை.

      நான்கைந்து பதிவுகள் பின்னோடித் தேடிப்பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை.

      அப்படி ஏதும் தங்களின் மனம் வருந்தச் செய்திருந்தேன் என்றால் தயவு செய்து மன்னியுங்கள்.

      இனிமேல் கவனமாய் இருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
    2. இதென்ன மன்னிப்பு என்றெல்லாம் ஆசிரியர் தமிழ் கற்கும் என்னிடம் கூறலாமா விளையாட்டாக இட்ட பின்னூட்டம் தங்கள் மனதை இந்த அளவிற்கு வருத்தமடையச் செய்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆசிரியரே.
      மரபில் சர்வ சாதாரணமாக எழுதும் தங்களைப் போன்றவர்களுக்கு நிச்சயம் தேவை இல்லை கவிஞரே!/////
      இப்படி கிண்டல் செய்வதையே நான் குறித்து எழுதியது.இன்னும் கற்கும் நிலையில் இருக்கும் என்னை கவிஞரே என்றழைப்பதை.

      Delete
  13. ஓர் ஆசிரியர் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு உதாரணமாக அமைந்துவிட்டார் அந்த ஆசிரியை! போகட்டும் இப்படியும் சிலர் இருக்க காணத்தான் செய்கின்றோம். சிலருக்கு சிலரை நோகடிப்பது மட்டுமே குறிக்கோள். என் பள்ளிக் காலத்திலும் இப்படி சில ஆசிரியர்கள் சந்தித்து இருக்கிறேன். வெண்பா விளக்கம் மிக அருமை! இத்தனை அருமையாக தமிழ் பேசும் தமிழ் சொல்லிக்கொடுக்கும் தாங்கள் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுவது ஓர் இனிய முரணாகத் தென்படுகின்றது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திரு தளிர் சுரேஷ்.

      Delete
  14. பொதுவாக கேள்வி கேட்பவர்கள் உண்மையிலேயே தாங்கள் அறியாததைக் கேட்கும் வகையினர். ஒன்று. தனக்கு அந்த விஷயம் நன்கு தெரியும் என்று பறைசாற்றிக்கொள்ள கேள்விகேட்கும் ரகம் ஒன்று. தனக்கும் கேள்விகேட்டு எதிராளி பதில் சொல்ல விழிப்பதில் சுகம் காணும் ஒரு ரகம் என்றெல்லாம் வகைப் படுத்தலாம் ..குருட்டாம் போக்கில் சரியான பதில் சொல்லும் ரகமும் உண்டு என்று இப்போது புரிகிறது. பதிவுக்கு ஏற்றபின்னூட்டம் எழுதத் தெரியாமல் எதையோ எழுதும் ரகமும் உண்டு. (என்னைப் போல )

    ReplyDelete
    Replies
    1. ஐயா கேள்வியில் நிறைய வகைகள் இருக்கின்றன.

      அறிந்து கேட்பது,

      அறியாமல் கேட்பது,

      சந்தேகப்பட்டுக் கேட்பது

      ஏதேனும் ஒன்றைப் பெறக் கேட்பது

      ஏதேனும் ஒன்றைக் கொடுக்கக் கேட்பது,

      ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியுமா என்று கேட்பது என ஆறுவகைப் படுத்தி இருக்கின்றன தமிழிலக்கணங்கள்.

      விடையிலும் இதுபோல வகைகள் உண்டு.

      ஆசிரியர் கேட்கும் கேள்வி, விடை அறிந்து கேட்கும் கேள்வி.

      அது தனக்கு விடை தெரியும் என்று பறைசாற்றிக் கொள்ளவோ மாணவன் பதில் சொல்லாமல் விழிப்பதைப் பார்த்துச் சுகம் கொள்ளவோ அல்ல என்று நினைக்கிறேன்.

      குருட்டாம் போக்கில் பதில் சொல்வதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு.

      எதைக் கேட்டாலும் தெரியாது என்று பதில் சொல்பவனிடம்,

      அம்மாவாசையில் உனக்குக் கண் தெரியுமா என்று கேட்டு,

      சரியான விடையைப் பெற வைப்பது :)

      உங்கள் பின்னூட்டம் எப்போதும் பதிவுகளுக்கு ஏற்ற பின்னூட்டமாகவே ( நான் பார்த்தவரை இருக்கிறது )

      பதிவர்கள் அதை ஏற்கின்றனரா என்பதில் வேண்டுமானால் மாற்றுக் கருத்து இருக்கலாம் :)

      வருகைக்கும் கருத்திற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி.

      Delete
  15. வணக்கம்!

    மாங்கனி கண்டேன்! வடித்திட்ட இப்பதிவின்
    தேங்கனி உண்டேன்! செழிப்புற்றேன்! - பூங்குயில்கள்
    கூடிக் களிக்கும் குளிர்சோலை இவ்வலைக்குக்
    கோடி கொடுப்பேன் குவித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  16. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  17. காளிதாசன் போல் கலைமக்ள் தங்கள் நாக்கில் குடி கொண்டு விட்டாளோ!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. இல்லை ஐயா.

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  18. நமது c.r.c பயிற்சி வகுப்புகள் குறித்து எனக்கு இருக்கும் அதே கருத்தை அப்படியே சொல்லிவிட்டீர்கள் அண்ணா! ஏதேனும் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டும் என பணிக்கு சேர்ந்த புதிதில் ஆசையாய் பயிற்சிக்கு போய் ஏமாந்த நாட்கள் பல. பெண்கள் புடவைகள், நகைகள் பற்றி பேச, ஆண்கள் அரசியல், லோன்கள் குறித்து பேச, இருவரும் படிப்பு தொடர்பாக பேசிகொண்டிருந்தால் அநேகமாக அது அவர்களது பெற்று, வளர்க்கும் பிள்ளையை பற்றியதாய் இருக்கும். இது பெரும்பான்மை. விதி(!?)விலக்குகள் உண்டு:) அந்த ஆசிரியை உங்களால் ஈகோ டிஸ்ட்ரப் ஆகி இருப்பார் போல. இப்படியான ஆசிரியர்கள் எப்படி மனநலம் மிகுந்த மாணவர்களை உருவாக்க முடியும்? அந்த ஆசிரியை முகம் கருத்த காட்சி படம் போல கண்ணுக்குள் விரிகிறது:))) இத்தனை அழகாய் தேமாங்கணியை கண்டுபிடித்துவிட்டு, இத்தனை தன்னடக்கம் ஆகாது:))

    ReplyDelete
  19. தம்மை விட மாணவன் அதிக புத்திசாலியாக இருப்பதை ஆசிரியர்கள் சிலர் ஒத்துக்கொள்வதில்லை. மாணவனை மட்டம் தட்டுவதன் மூலம் அவனைப் பழி வாங்குவதாக நினைத்து இன்பம் காணும் ரகத்தைச் சேர்ந்தவர் உங்கள் ஆசிரியை! அவருக்குப் பதில் தெரியாத கேள்விகளை அடிக்கடி நீங்கள் கேட்டு அவர் அறியாமை வகுப்பில் வெளிப்பட்டிருந்திருக்கவேண்டும். அதனால் தான் அவருக்கு உங்கள் மேல் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி!
    ஆசிரியையாக இருந்துகொண்டு வேற உருப்படியான வேலைக்குப் போகவில்லையா என்று அவர் கேட்கிறார் என்றால் செய்யும் தொழிலில் அவருக்கிருந்த ஈடுபாடு நன்கு விளங்குகிறது!
    என் வியப்பெல்லாம் உயிரில்லாப் பொருள் என்றதுமே ஆகாய விமானம் என்று கேட்டது தான். Intuition என்று சொல்கிறார்களே, அது இது தானோ? உயிரில்லாப் பொருட்கள் ஆயிரக்கணக்கில் இருக்க, சட்டென்று விமானமா என்று கேட்கத் தோன்றியது எது? இரண்டாவது கேள்வியிலேயே அவரை மடக்கிய அந்த நொடியில் அவர் முகம் கோரமாகி வன்மம் இன்னும் பன்மடங்கு பெருகியிருந்திருக்கும். நல்லவேளை அச்சமயம் நீங்கள் அவர் மாணவரில்லை.
    உங்கள் மலரும் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சுவையான நினைவுகள்!

    ReplyDelete